Loading

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த தஷ்வந்த், சில நொடிகள் கழித்தே நிகழ்வுணர்ந்து, ‘சே என்ன பண்ணிட்டு இருக்கேன்’ என்று தலையில் தட்டிக் கொண்டான்.

அவள் உறக்கம் கலையாமல் தலையணையில் படுக்க வைத்தவன், தொலைக்காட்சியையும் அணைத்து விட்டு, பால்கனியில் சென்று நின்றான்.

மாலை நேரக் காற்று, இதமாக முகத்தில் மோதிட, அதனை ரசிக்கும் மனநிலை தான் இல்லை. மனம் முழுதும் மூன்று வருடம் எப்போதடா முடியும் என்றிருந்தது. இங்கிருக்கவே மூச்சு முட்டினாலும், அதையும் மீறி பெண்ணவளின் புறம் சாயும் கண்களை தடுக்க முடியாமல் திணறினான்.

‘இவள்… லிவ் இன் ரிலேஷன்ஷிப்ன்னு சொல்லாம, லவ்ன்னு சொல்லிருந்தா நல்லா இருந்துருக்குமோ…’ என அவனறியாது எண்ணம் அலைக்கழிக்க, கூடவே அவளது தந்தை கையில் துப்பாக்கியுடன் எதிரில் நிற்பது போன்ற பிரம்மை தோன்றியது.

அதில் வெளிறியவன், ‘உனக்குலாம் சூடு சுரணையே இல்லைல. அவள் ஏதோ என்னை ஜெயில்ல அடைச்ச மாதிரி வச்சு இருக்கா. நீ என்னன்னா, ஹேட் வில் டர்ன் இன்டூ லவ்ன்னு உளறிட்டு இருக்க…’ என தன்னை தானே அறைந்து கொண்டான்.

மாலை சென்று இரவும் வந்து விட, அவளோ எழுந்த பாடில்லை.

‘இப்படியே தூங்குனா இவள் எப்போ வீட்டுக்கு போவா…’ என்றெண்ணி, “பத்ரா… கெட் அப். ரொம்ப டைம் ஆகிடுச்சு பாரு.” என எழுப்ப, அதில் கண்ணை கசக்கியபடி எழுந்தவள், “டைம் என்ன?” எனக் கேட்டாள்.

“எட்டாச்சு பத்ரா. சீக்கிரம் வீட்டுக்கு கிளம்பு.” என அவன் பரபரக்க, அதில் தான் சற்றே ஆசுவாசமானவள்,

“சே… எட்டு தான் ஆகுதா. நான் கூட ஏதோ ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போலன்னு நினைச்சேன். லெட் மீ ஸ்லீப் அமுல் பேபி.” என்று கொஞ்சலாய் கூறி மீண்டும் படுக்கையில் விழப் போனாள்.

சட்டென அவளைப் பிடித்தவன், “இன்னும் லேட்டா போனா, உன் அப்பா உன்னை இங்கயே தேடிட்டு வந்துடுவாரு பத்ரா. ப்ளீஸ் கிளம்பு” என்றவனுக்கு, பயம் வேறு.

“அச்சோ… பயந்து சாகாதடா. நான் இனிமே வீக் எண்ட் இங்க தான் ஸ்டே பண்ணுவேன். அப்ப தான நம்ம லிவ் இன் ரிலேஷன்ஷிப் வளரும்.” என முறுவலித்தவள், “சோ டோன்ட் டிஸ்டர்ப் மீ.” என்றாள் கொட்டாவி விட்டபடி.

பின், அவளது போனை கொடுத்து, “நைட்க்கு ஃபுட் ஆர்டர் பண்ணிடு. எனக்கு ஒரு சாண்டவிச். உனக்கும் அவனுக்கும் என்ன வேணுமோ ஆர்டர் பண்ணிக்கோங்க.” என்றவள், அரை உறக்கத்திலேயே, ஜி பே பின்னையும் கூறி விட்டு படுத்திட, அவனுக்கோ மூளை வேலை நிறுத்தம் செய்தது.

‘என்னது இங்க ஸ்டே பண்ண போறாளா?’ மினி ஹார்ட் அட்டாக்கில் நெஞ்சை பிடித்தவன், “பத்ரா எந்திரி எந்திரி…” என வேகமாக உலுக்கினான்.

அதில் அவளது மொத்த தூக்கமும் பறிபோக, “என்னடா?” என்றாள் கடுப்பாக.

“நீ இங்கலாம் ஸ்டே பண்ண வேணாம். கிளம்பு ப்ளீஸ்.” எனப் பதறிட, “டேய் நான் தூங்கி ரெண்டு நாள் ஆகுது. ஏண்டா டார்ச்சர் பண்ற. நான் இங்க இருந்தா இப்ப உனக்கு என்ன பிரச்சனை?” என்று சலித்தவள், “ஃபீலிங்ஸ் வருதா…” எனக் கேட்டாள் விஷமமாக.

“எதே… அப்படிலாம் இல்லையே…” என உடனடியாக தலையாட்டியதில், “ஃபைன். அப்போ பேசாம போய் வேற வேலை இருந்தா பாரு.” என்று விட்டு, மீண்டும் படுத்தவளுக்கு விட்ட தூக்கம் தான் வரவில்லை.

அதில் எழுந்து அவனை முறைத்து வைத்தவள், “அடுத்தவங்க தூக்கத்தை கெடுக்குறதுல உனக்கு என்னடா அவ்ளோ சந்தோசம்…” என்றிட,

“அதை நீ சொல்ற?” என்றான் முறைப்பாக.

“நான் ஒன்னும் உன்னை இப்படி தூங்கும் போது எழுப்பல. அழகா பக்கத்துல வந்து கட்டி பிடிச்சு படுத்துப்பேன்.” என கண்ணடித்ததில், அதற்கு மேல் இங்கு நிற்பது சரியில்லை என உணர்ந்தவள், விறுவிறுவென வெளியில் சென்று விட்டான்.

பின், அவளே இரவு உணவையும் வரவழைத்து தஷ்வந்த்துடன் வளவளத்தபடி உண்ண, மாதவ் நமக்கு எதுக்கு வம்பு என்று வெளியிலேயே வரவில்லை.

தஷ்வந்த் தான், ஒரு வித அவஸ்தையுடனே அமர்ந்திருந்தான். உண்டு முடித்ததும், “நீ அந்த ரூம்ல தூங்கு பத்ரா. நான் மாதவ் கூட படுத்துக்குறேன்” என வேகமாக கூறியதில், “ஓகே” என்றாள் தோளைக் குலுக்கி.

அவளது ‘ஓகே’வில் சற்று அரண்டவனின் எண்ணம் சரிதான் என்பது போல தான் அவளது பேச்சும் இருந்தது.

“ஆனா, காலைல எந்திரிச்சு பார்க்கும் போது உன் ஃப்ரெண்டு சுடுகாட்டுல இருப்பான் பரவாயில்லையா?” என சாவகாசமாக கூறியவளை, நன்றாக முறைத்தவன், கடுப்புடன் அறைக்குள் புகுந்து கொண்டு எப்போதும் போல தரையில் போர்வையை விரிக்க, அவளோ கேள்வியுடன் பார்த்தாள்.

“நான் எப்பவும் இங்க தான் படுப்பேன். வேணும்ன்னா தூக்கத்துல என் தலைல கல்லை தூக்கி போட்டு, போட்டு தள்ளிடு. அதுக்கு அப்பறம் இந்த பிரச்சனையே இருக்காது.” என எரிச்சலுடன் மொழிந்ததில் அவளுக்கு தான் ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது.

அவனையே பார்வையால் எரித்தவள், விருட்டென வெளியில் சென்று விட, அவனும் போ என அசட்டையாக படுத்துக் கொண்டான்.

நேரம் செல்ல செல்ல, அவள் மீண்டும் உள்ளே வராததில் நிலைகொள்ளாமல் ஹாலில் சென்று பார்க்க அங்கு அவளில்லை. வாயிற்கதவு திறந்திருப்பதை கண்ட பிறகே, வீட்டை விட்டு சென்றிருப்பது தெரிய, ‘ஹப்பா! அவளே கோபம் வந்து வீட்டுக்கு போய்ட்டா.’ என குதூகலித்தான்.

‘ஆனால், வீட்டுக்கு தான் போனாளா. டைம் வேற 11 ஆச்சு. கரெக்ட் ஆ போயிருப்பாளா?’ என பல்வேறு எண்ணம் தோன்றிட, அன்று இரவு டியூட்டிக்கு வந்திருந்த திருவிற்கு போன் செய்து, “பத்ரா கீழ வந்தாள். கிளம்பிட்டாளா?” என விசாரித்தான்.

அவனோ, “நான் கவனிக்கலையே சார். இருங்க பாக்குறேன்” என்றதில், அவள் காரை நிறுத்திய இடத்தைக் கவனிக்க, அதில் எஞ்சின் உறுமிக் கொண்டிருந்தது. ஆனால், நகன்ற பாடு தான் இல்லை.

“அவள் கார்ல தான் இருக்கா சார். ஆனா, கிளம்புற அறிகுறியே இல்ல.” என்றவுடன், ‘இவளை’ எனப் பல்லைக் கடித்தவன், “அவளை வீட்டுக்கு போக சொல்லு திரு. இல்லன்னா நீயே டிராப் பண்ணு” என்றான் அக்கறையாக.

“ஆத்தாடி. அவளா வந்து சொல்லாம நம்மளா போய் நின்னா, அவ்ளோ தான். கண்ணுமுன்னு தெரியாம திட்டிடுவா. சில நேரம் எதை தூக்கி எறியுவான்னே தெரியாது சார். நீங்களாச்சு அவளாச்சு” என்றவன், நல்ல பையனாக காரினுள் சென்று அடைந்து கொண்டான்.

‘எப்படியோ போறா…’ என சிறிது நேரம் வரை, நேரத்தை கடத்தியவனுக்கு அதற்கு மேல் அங்கிருக்க இயலவில்லை. ‘ஐயோ இவளால, நான் டாக்டர் ஆகுறதுக்கு முன்னாடி, மெண்டல் ஆகிடுவேன் போல’ என நொந்தபடி பார்க்கிங் சென்றான்.

திரு சொன்னது போல, எஞ்சினை ஆன் செய்து வைத்து, கொந்தளிக்கும் முகத்துடன் காரினுள் தான் அமர்ந்திருந்தாள்.

காரை திறந்து உள்ளே சென்றவன், “வீட்டுக்கு போகாம இங்க உட்காந்து என்ன பண்ற?” எனக் கேட்டதில் திரும்பி கனலை கக்கியவள், கோபத்தை அடக்கியபடி அமர்ந்திருக்க,

“பத்ரா… உன்னை தான் கேக்குறேன்” என்றான் மீண்டும்.

“கிளம்பி போறியா? உன் மேல கல்லை தூக்கி போடாத எவளாவது கிடைச்சா அவளை கூட வச்சுக்கோ. அவுட்.” என்றவளின் பேச்சில் அனல் தெறித்தது.

சில நாட்களுக்கு முன் என்றால், நிச்சயம் அக்கோபத்தில் பயந்து கருகி இருப்பான். இப்போதோ, அவளின் கோபம் சிறுபிள்ளைத்தனமாக தோன்றிட,

“அப்படி ஒருத்தி கிடைச்சா கண்டிப்பா வச்சுக்குறேன். இப்ப நீ கிளம்பு.” என்றதில், அவளின் கோபம் இன்னுமும் அதிகரித்தது.

“கிளம்ப முடியாது போடா. இறங்கி போ.” எனக் கத்திட,

“கத்தாதடி. யாராச்சு கேட்டா, நான் என்னமோ உன்னை டார்ச்சர் பண்ற மாதிரி நினைப்பாங்க. உண்மையை சொன்னா கூட ஒருத்தனும் நம்ப மாட்டான்.” என்று பரிதாப முகத்துடன் கூறிட, அவளோ மீண்டும் கத்தினாள்.

சட்டென அவளின் வாயை பொத்தியவன், “ஏண்டி கத்தி தொலையுற. மெதுவா தான் பேசேன். சரி… நான் தெரியாம பேசிட்டேன், சாரி. போதுமா. வா மேல போகலாம்.” என்றான் கடுப்புடன்.

முதன் முறை அவன் ஸ்பரிசம் உணர்ந்து, அவள் விழிகளை விரித்திட, சில நொடிகளுக்கு பிறகே, அவனும் இருக்கும் நிலை புரிந்து, பட்டென விலகினான்.

அவள் இதழின் ஈரம் இன்னுமும் உள்ளங்கையை சுடுவது போல உறுத்த, அம்மென்மையில் உள்ளம் கிறங்குவதை கட்டுப்படுத்திக் கொண்டவன், “இப்ப வர போறியா இல்லையா? வரலைன்னா விடு. நானும் விடிய விடிய இங்கயே உட்காந்துக்குறேன்.” என கையை கட்டிக் கொண்டு வீம்பு பிடித்தான்.

அனைத்தையும் ரசித்து வைத்த மஹாபத்ராவிற்கு, அவன் தீண்டியதுமே மொத்த கோபமும் காணாமல் போனது.

அதில் புன்னகைத்தவள், “நீ தான என்னை இப்படி கோபப்பட்டு இங்க வரவச்ச. அப்ப நீ தான் வீட்டுக்கு வரவைக்கணும்” என்றதில், “அதான் வான்னு சொல்றேனே” என்றான் புரியாமல்.

“வாயில கூப்பிட்டா வர முடியாது. தூக்கிட்டு போ.” என்றாள் குறும்பாக.

அவனோ திகைத்து, “விளையாடாத பத்ரா. உன்னை தூக்குற அளவுலாம் நான் ஜிம் பாடி இல்ல.” என ஜகா வாங்கிட, “ஓகே…” என்று எப்போதும் போல தோளைக் குலுக்கினாள்.

பல்லைக்கடித்தவன், “இனிமே இந்த ‘ஓகே’ வை சொல்லி தொலையாத சரியா?” என ஜன்னல் புறம் திரும்பி எச்சரிக்க, அவளும் சிரிப்பை அடக்கியபடி, வேகமாக தலையை உருட்டினாள்.

அவளைப் பாராமல் இருந்தவனோ, “உன்னை தான் சொல்றேன்…” என்று திரும்ப,

“நீ தான ஓகே சொல்ல வேணாம்ன்னு சொன்ன. அதான் தலை ஆட்டுனேன்.” என மீண்டும் தலையை ஆட்டிக் காட்ட, அவளது பாவனையில் சட்டென எரிச்சல் நீங்கி முறுவல் பூத்தது ஆடவனுக்கு.

“உன்னை வச்சுக்கிட்டு, இன்னும் மூணு வருஷம் ஓட்டணும்ன்னு என் தலைல எழுதி இருக்கு” என்று தலையில் அடித்துக் கொண்டவனின் கூற்றில் இம்முறை வெறுப்பு இல்லை.

நாக்கை துருக்கிய மஹாபத்ரா, “சரி சரி தூக்கிட்டு போ! நான் விட்ட தூக்கத்தை கன்டினியூ பண்ணனும்.” என அமர்த்தலாக கூற, “சோதனை…” என்று முணுமுணுத்தபடி, காரை விட்டு இறங்கியவன், மறுபுறம் வந்து அவளை கையில் அள்ளிக் கொண்டான்.

மின்தூக்கியின் அருகில் வந்து, “என் மூஞ்சியவே பார்க்காம, பட்டன அழுத்து” என்ற தஷ்வந்திடம், “நீயும் சைட் அடிக்க மாட்ட. நானும் அடிக்க கூடாதுன்னா எப்படி அமுல் பேபி. நான் பார்த்துகிட்டே தான் இருப்பேன்.” என்று அவனை கண்ணிமைக்காமல் பார்த்தாள்.

அவனுக்கோ, என்ன உணர்விது என்று புரியவே இல்லை. பிடித்தலுக்கும் பிடித்தலின்மைக்கும் இடையில் சிக்கி தவித்தது அவன் மனம்.

அதனை கவனமாக முகத்தில் காட்டாமல் இருக்க அரும்பாடுபட்டவனை, நொடியில் கண்டுகொண்டவள், அவன் முடியை கலைத்து விட்டு, “பிடிச்சிருக்கா பிடிக்கலையான்னு யோசிச்சு, அப்படியே விறைப்பா இருந்து என்னடா பண்ண போற. என்ஜாய் திஸ் மொமெண்ட் அமுலு.” என அவன் காதோரம் கிசுகிசுத்தாள்.

அதில் நொந்தவன், “தயவு செஞ்சு கொஞ்ச நேரம் சும்மா வா. உன்னால நான் மைண்ட் வாய்ஸ்ல கூட பேச முடியல…” என கடிந்து விட்டு, மெத்தையில் மென்மையாக அவளை இறக்கி விட்டான்.

அதோடு, தரையில் படுக்க எத்தனிக்க, அவனை முறைத்தவள், “இதெல்லாம் நான் உனக்காக வாங்குனது தஷ்வா. நீ தரையில படுக்கவா, நான் இவ்ளோ பண்ணி வச்சுருக்கேன்” என ஆதங்கமாகவே கேட்டாள்.

“நான் பண்ண சொல்லல பத்ரா. எனக்கு இதெல்லாம் யூஸ் பண்ண பிடிக்கல.” என்றவனது கூற்றில், “இதெல்லாம்ன்ற லிஸ்ட்ல நானும் வருவேனோ…?” என விழிகளை உருட்டி கேட்டாள் மஹாபத்ரா.

ஒரு நொடி திகைத்த தஷ்வந்த், ஆமென்றும் கூற இயலாமல், இல்லை என்றும் கூற இயலாமல் தடுமாறி பின், “மறுபடியும் ஒரு ஆர்கியூமென்ட் வேணாமே. நாளைக்கு சண்டே கொஞ்சம் நிம்மதியா தூங்க விடேன்.” என்றான் பாவமாக.

அவன் நேரடியாக பதில் கூறாததில், சற்றே முகம் மலர்ந்தவள், “அப்போ பெட்ல வந்து படு” என்றாள்.

அவனோ “மீண்டும் மீண்டுமா…” என இடுப்பில் கை வைத்து முறைக்க, “நான் இல்லாதப்போ நீ தரையில படுத்துக்கோ. இப்ப வா…” என்க, அவன் மறுக்கும் பாவனையுடன் நின்றான்.

“உனக்கு செல்ஃப் கான்ஃபிடன்ஸ் இருந்தா வா…” என அவனை ஆழம் பார்த்திட, மேலும் முறைத்தவன்,

“சத்தியமா இல்ல! நானும் மனுஷன் தான் பத்ரா. ஐ ஹேவ் மை ஓன் ஃபீலிங்ஸ். பஞ்சையும் நெருப்பையும் பக்கத்துல வச்சுக்குறது ரொம்ப ஆபத்து. இப்படி ஒரு பொண்ணு கூடவே சுத்திட்டு, உரசிட்டு இருந்தா, கண்டிப்பா என்னால கண்ட்ரோல் பண்ண முடியாது. ட்ரை டூ அண்டர்ஸ்டேண்ட் மீ.” என்று திட்டவட்டமாக உரைத்தான்.

அவனது பாவனைகளை ரசித்தவள், “அப்போ என் இடத்துல யார் இருந்துருந்தாலும் உனக்கு ஃபீலிங்ஸ் வந்துருக்கும்?” எனக் கேட்டதில், அவன் பதில் கூறாமல் நிற்க, அவளே மேலும், “அன்னைக்கு நான் தொட்டா அருவருப்பா இருக்குன்னு சொன்ன, அப்போ அருவருப்பா இருக்குற பொண்ணுகிட்ட ஃபீலிங்ஸ் வருமா என்ன?” என யோசிப்பது போல கேட்டாள் கேலியாக.

அவனோ “குவெஸ்ட்டின் பாஸ். குட் நைட்.” என்று பதிலளித்து விட்டு, தரையில் படுத்து போர்வையை முகத்தில் போட்டுக் கொண்டான்.

அவள் கேட்ட கேள்வி அவனுக்குள்ளும் ரீங்காரமிட்டுக் கொண்டு தான் இருந்தது. ஆனால், அது தந்த பதில் தான் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை.

கல்லூரி முடிந்து வீட்டிற்கு சென்ற மந்த்ரா, அன்றும் விழிகளில் கலவரத்தை ஏற்றிக் கொண்டாள்.

சாட்சாத் அமிஷே எப்போதும் போல அவள் வீட்டின் நடு கூடத்தில் அமர்ந்து அவள் அன்னை பத்மா கொடுத்த காபியையும் முறுக்கையும் சுவை பார்த்துக் கொண்டே, அவளது தந்தை சிவராமிடம் கதைத்துக் கொண்டிருந்தான்.

டியூஷன் பசங்களும் வந்திருக்க, அவனது தங்கை அபயாவும் அங்கிருந்தாள்.

“ஹாய் அக்கா. இன்னைக்கு லேட் ஆகிடுச்சா…? எனக்கு இந்த சம் புரியவே இல்ல. சொல்லி தரீங்களா?” எனக் கேட்க, “ஒரு ஃபைவ் மினிட்ஸ் அபி. பிரெஷ் ஆகிட்டு வரேன்.” என்று விட்டு அறைக்குள் புகுந்து கொண்டாள்.

‘இவன் என்ன ஏதோ மாமியார் வீட்டுக்கு வந்த மாதிரி சட்டமா உட்காந்துருக்கான். தங்கச்சியை டிராப் பண்ணுனோமா போனோமான்னு இல்லாம, அவள் படிச்சு முடிக்கிற வரை இங்கயே டேரா போட்டுட்டு இருக்கான். அதுவும் ஒரு மாசமா…’ என கடுப்படித்தாள்.

டேரா மட்டுமா போடுகிறான், ஸ்னேக்ஸ் உடன் சேர்த்து பார்வையாலேயே அவளையும் அல்லவோ சாப்பிடுகிறான்.

எவ்வளவு தான் அவளாலும் மனதை கட்டுப்படுத்த இயலும். அவள் தந்தைக்கு நண்பனாகவே மாறி விட்டவன், அவனே வரவில்லை என்றாலும், தனது தந்தை அவனை விடாது பிடித்து வைத்திருக்க, அதுவேறு எரிச்சல் வந்தது.

‘இன்னைக்கு ரெண்டுல ஒன்னு பாக்குறேன்…’ என முடிவெடுத்தபடி வெளியில் வந்தவள், அபயாவின் சந்தேகங்களை தீர்த்து விட்டு, கவனமாக அவனது பார்வையை தவிர்த்தாள்.

அதற்கெல்லாம் அசராமல், பேச்சை மட்டும் சிவராமிடம் கொடுத்து விட்டு, கவனத்தை அவள் மீது வைத்திருந்தான் அமிஷ்.

படித்து முடித்து கிளம்புகையில் தங்கையை வெளியில் அனுப்பியவன், “நான் சொன்னதை கரெக்ட்டா குடுத்துடுவேனாக்கும். ஃபீஸ்…!” என்று பணத்தை நீட்ட, அதையும் அவனையும் ஒரு முறை பார்த்தவள்,

“டியூஷன்க்கு ஃபீஸ் ஓகே. தினமும் இங்க வந்து ஓசில காபியும் ஸ்னேக்ஸ்ஸும் சாப்புடுறதுக்கு யாரு தருவா. இங்க என்ன வர்றவங்க போறவங்களுக்கு எல்லாம் ஃப்ரீ காபி சர்விஸ்ன்னு போர்டு போட்டுருக்கா…” என அவனை மட்டம் தட்ட, அவள் எண்ணியது போலவே அமிஷின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

பத்மா தான், “மந்த்ரா என்ன பேசுற?” என அதட்ட, அதனைக் கண்டுகொள்ளாமல் நின்றவளை அழுத்தமாக பார்த்தவன், சுண்டிய முகத்துடனே கிளம்பி விட்டான்.

நாட்கள் அதன் போக்கில் நகர, வார இறுதியில் பத்ராவும் தஷ்வந்துடன் தங்குவது இயல்பாகி விட்டது.

அவ்வீட்டில் சாப்பாட்டில் இருந்து, அனைத்தும் அவனுக்கு பிடித்தது மட்டுமே இருக்கும். அவனுக்கு மட்டன் பிடிக்காதததால், மொத்தமாக அங்கு அந்த உணவே தடை செய்யப் பட்டது.

“அவனுக்கு தான பிடிக்காது. அதுக்கு நானும் சாப்பிட கூடாதா?” என மாதவ் மூச்சிரைக்க, மஹாபத்ராவோ அசட்டையாக, “சாப்பிட கூடாது” என்று கூறி விட்டு செல்வாள்.

தஷ்வந்த்திற்கு தான் இந்த மாதிரி நேரங்களில் சங்கடமாக இருக்கும்.

“எனக்கு பிடிக்கலைன்னா, அதுக்கு அவன் என்ன பண்ணுவான். அவன் சாப்பிடட்டுமே.” என நண்பனுக்கு வக்காலத்து வாங்க, “சாப்பிட்டுக்கலாம். ஆனா ஹோட்டல்ல. இங்க இல்ல.” என்று கண்டிப்பாக கூறுவதில், அவனுக்கு தான் ஒன்றும் சொல்ல இயலாத நிலை.

மஹாபத்ராவை தஷ்வந்த் புரிந்து கொண்டானோ இல்லையோ, மாதவ் நன்றாகவே புரிந்து கொண்டான். அதிலொன்று, தஷ்வந்த் தலைகீழாக நடக்கக் கூறினாலும் அவள் செய்வாள். அவனுக்கு ஒன்று பிடிக்கும் என்று ஆகி விட்டால், எப்பாடு பட்டாவது அவன் காலடியில் அதனை சேர்த்து விடுவாள். ஆனால், தர்ம சங்கடத்தில் நெளிந்து கொண்டிருக்கும் தஷ்வந்த் தான் அதன் ஆழத்தை உணரவில்லை.

ஒருமுறை கல்லூரி முடிந்து நண்பர்கள் இருவரும் வீட்டினுள் நுழைய, தஷ்வந்த் தான் ஏதோ யோசனையிலேயே இருந்தான்.

மாதவ், “என்ன பாஸ்… ஒரே திங்கிங்?” என வினவ,

“ஒன்னும் இல்ல பாஸ். என் அக்கா மஞ்சு இருக்காள்ல. அவள் லவ் மேட்டர் தான் வீட்ல ரொம்ப காரசாரமா ஓடிட்டு இருக்கு. அப்பாவுக்கு சும்மாவே காதல்ன்னா ஆகாது. ஆனா இப்ப என்னவோ ரொம்ப பிடிவாதமா கண்மூடித்தனமா மறுக்குறாரு.

அப்படி அவன் தான் வேணும்ன்னா, வீட்டை விட்டு போய் கல்யாணம் பண்ணிக்க சொல்றாரு. அவளும் கோபத்துல பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டா…” என்று கழுத்தை தேய்த்தான்.

“அய்யயோ. அப்பறம் என்ன ஆச்சு தஷு?” மாதவ் பதற்றமாக கேட்க,

“அப்படியே போயிட்டு இருக்கு. கொஞ்ச நாள் வெய்ட் பண்ணி பார்த்தும் அப்பா ஓகே சொல்லலைன்னா, அவள் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ற ஐடியால தான் இருக்கா. எனக்கும் மாம்ஸ தெரியும். என் ஸ்கூல்ல சீனியர். ஆனா, ஜஸ்ட் ஸ்கூல்மேட் – ஆ தெரியும். பெர்சனலா மஞ்சு சொல்லி தெரியும். பட் என்ன இருந்தாலும், அவரை பத்தி முழுசா தெரிஞ்சுக்கிட்டா, கொஞ்சம் நிம்மதியா இருக்கும். இந்த விஷயத்துல அப்பாவும் சரி அவளும் சரி அவங்க அவங்க கருத்துல பிடிவாதமா இருக்காங்க. இப்படியே போனா, திரும்பி அவள் ஃபேமிலிக்குள்ளேயே வர முடியாது போல.” என வருந்தினான்.

“அப்பாவும் கொஞ்சம் விட்டு குடுக்கலாம்ல பாஸ். அட்லீஸ்ட் மாப்பிளையை பத்தி விசாரிச்சுட்டாவது முடிவெடுக்கலாம்.” என மாதவ் அபிப்ராயம் கூற,

“ப்ச்… அவரு அதுல ஒரு சின்ன மூவ் கூட பண்ண மாட்டுறாரு. மஞ்சுக்கு அதான் கோபமே. விசாரிச்சு பிடிக்கலைன்னு சொன்னா கூட பரவாயில்லன்னு ஃபீல் பண்றா.” என பெருமூச்சு விட்டவன்,

“எனக்கு மாம்ஸ் பத்தி தெரியணும் பாஸ். இவ்ளோ நாள், இதை சீரியஸா எடுத்துக்கல. ஆனா, அவள் மேரேஜ் பண்ணிக்க போறான்னு சொல்லும் போது, அப்படியே விட முடியல. எப்படி விசாரிக்கிறதுன்னு தான் தெரியல. நேர்ல போய் விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டா பெட்டரா இருக்கும். ஆனா, மஞ்சு என்னை வர வேணாம்ன்னு சொல்றா. ப்ரெண்ட்ஸ்ட்ட விசாரிக்க சொல்லலாம்ன்னா என் க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் யாரும் இப்ப ஊர்ல இல்ல” என வெகுவாய் குழம்பினான்.

மாதவ் தான், “அட நீ ஏன் பாஸ் மண்டையை குழப்பிக்கிற. நீ எள்ளுன்னா எண்ணையா நிக்கிற மாதிரி ஒரு கேர்ள் ஃப்ரெண்ட் வச்சு இருக்கியே. அவள்கிட்டே சொல்லு, உன் அக்காவை தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணியே வச்சுடுவா.” என நக்கலடிக்க, அவனை முறைத்த தஷ்வந்த், “உளறாத!” என்று விட்டு உள்ளே சென்று விட்டான்.

ஆனால் நடுநிசி வரை உறக்கம் தான் வரவில்லை வீட்டு நினைவில்.

தனக்கு தமக்கையாக இல்லாமல் நல்ல தோழியாகவே இருப்பவளின் வாழ்க்கையில் இப்படி ஒரு சிக்கல் இருக்கையில் அவனுக்கு எப்படி உறக்கம் வரும். ஹாலில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தவனை, நீர் அருந்தலாம் என வெளியில் வந்த மாதவ் பார்த்து விட, “டேய். நீ தூங்காம என்னடா ஆவியா அலைஞ்சுட்டு இருக்க?” என்றான் கிண்டலாக.

“தூக்கமே வரல மாதவ். பேசமா, லீவ் சொல்லிட்டு ஊருக்கு போகலாமான்னு பாக்குறேன். எப்படியும் அப்பா கன்வின்ஸ் ஆக மாட்டாரு. அட்லீஸ்ட் மாம்ஸ் பத்தியாவது விசாரிக்கலாம்…” என யோசனையுடன் கூற, “நீ இப்படியே யோசிச்சுக்கிட்டே இரு…” என்று கடிந்தவன், அடுத்த நொடி மஹாபத்ராவிற்கு கால் செய்திருந்தான்.

“டேய் என்னடா பண்ற. இந்த நேரத்துல அவளுக்கு ஏன்டா கால் பண்ற?” என தஷ்வந்த் தடுக்க, அதற்குள் எதிர்முனையில், அவளது குரல் உறக்க கலக்கத்தில் கேட்டது.

“ஹாய்க்கா…” என்ற மாதவின் குரலில் சட்டென விழித்தவள்,

“என்னடா இந்த நேரத்துல எதுவும் ப்ராப்ளமா?” படபடப்புடன் கேட்டதில்,

“சே சே இல்லக்கா… தஷுக்கு தான் ஒரு ஹெல்ப் வேணுமாம்.” என அவன் கூறியதை அப்படியே உரைக்க, “சே. இதுக்கா இப்ப கால் பண்ணுன அரை வேக்காடு.” என போனை வைத்து விட்டாள்.

அங்கு தஷ்வந்த் தான் வெறியாய் மாதவை முறைத்தான். “உனக்கு எதுக்குடா இந்த தேவை இல்லாத வேலை… இன்னொரு தடவை என்னை கேட்காம என்னை பத்தி அவள் கிட்ட பேசு. நானே உன்னை போட்டு தள்ள ஐடியா குடுப்பேன்” என்று கோபத்தை காட்டி விட்டு சென்றான்.

அதன் பிறகு, அந்த வாரம் முழுக்க, தஷ்வந்த்திற்கு வீட்டு நினைவே அதிகம் வதைத்தது. தான் வருவதாக கூறிய தம்பியையும் மஞ்சுளா வர வேண்டாம் எனக் கூறி விட்டாள்.

“வேணாம் தஷு. அப்பா என்மேல ரொம்ப கோபமா இருக்காரு. இப்ப நீ வந்து எனக்கு சப்போர்ட் பண்ற மாதிரி ஏதாச்சு பண்ணுனா, ரொம்ப ஃபீல் பண்ணுவாரு. நீ இதை கண்டுக்காத மாதிரியே விட்டுடு. நான் பாத்துக்குறேன்.” என்றவளுக்கு அழுகையே வந்தது.

“நான் செய்றது தப்பாடா.” என கேட்க, அவனும் என்ன சொல்வதென்று தெரியாமல் நின்றான்.

அவளே, “என்னால அவரை விட முடியாதுடா. நீயாச்சு என்னை புருஞ்சுக்குவீல…” தமக்கையின் தேம்பலில் பதறியவன்,

“லூசு மாதிரி பேசாத மஞ்சு. நீ என்ன செஞ்சாலும் நான் உனக்கு துணையா இருப்பேன். சரியா. முடிஞ்ச அளவு அப்பாவை காம்ப்ரோமைஸ் பண்ண பாரு.” என அவளை சமன்படுத்தி போனை வைத்தான்.

நான்கு நாட்களாக இதிலேயே உழன்றவன், மஹாபத்ரா அவனைக் காண வராததையும் கவனிக்கவில்லை.

அந்த வார சனிக்கிழமை நள்ளிரவில் நல்ல உறக்கத்தில் இருந்தான் தஷ்வந்த். காலிங் பெல்லின் சத்தம், உறக்கத்தை கலைக்க, புருவம் சுருக்கி எழுந்தவன், ‘யாரு இந்த நேரத்துல’ என தனக்குள் கேட்டுக் கொண்டு கதவை திறக்க, அங்கு மஹாபத்ரா தான் நின்று கொண்டிருந்தாள்.

“ஹே… இந்த நேரத்துல என்ன பண்ற?” எனக் கேட்டவன், அவள் கையில் துணிப்பை இருப்பதை கண்டு அரண்டான்.

வாரம் ஒரு முறை தங்குவதற்கே அவன் தடா போட, இவள் மொத்தமாக இங்கயே தங்கி விடுவாளோ என்ற பயம் அவனுக்கு.

அவளோ எரிந்து சிவந்திருந்த விழிகளை கசக்கியபடி, “வழி விடுடா…” என அவனை தள்ளிக்கொண்டு, அறைக்குள் புகுந்து கொள்ள,

“பத்ரா… கைல என்ன பேக்? மிட் நைட்ல எதுக்குடி வந்த?” எனப் புரியாமல் கேள்வியாக கேட்க,

“சப்பா… ஒவ்வொரு கேள்வியா கேளேன் அமுல் பேபி. என்னை ஃபோர் டேஸ் மிஸ் பண்ணுனியா?” எனக் கேட்டபடி அவனை நெருங்க, அவனோ பின்னால் நகன்று, “என்னது ஃபோர் டேசா நம்ம பார்த்துக்கவே இல்லையா… அதுவே நீ சொல்லி தான் தெரியும்” என்றான் அசட்டையாக.

அதில் புருவம் சுருக்கி முறைத்தவள், “உன்ன போய் கேட்டேன் பாரு…” என சிலுப்பிக்கொண்டு, “பட் ஐ பேட்லி மிஸ் யூ அமுலு” என எக்கி அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு நகர, அவனோ எரிச்சலை அடக்கியபடி நின்றான்.

பின் பையில் எதையோ துழாவி எடுத்தவள், சில காகிதங்களை நீட்டி,

“இந்தா… உன் அக்காவோட லவர் வசீகரன் பத்தின டீடெய்ல்ஸ். பையன் நல்லவன் தான் போல. தண்ணி கூட அடிக்காம இவன் வாழ்க்கைல என்னடா சாதிக்க போறான். டூ பேட். ஒரு மோட்டர் கம்பெனில ப்ரெஷரா ஜாயின் பண்ணிருக்கான். உன் அக்காவை விட்டுட சொல்லி, திரு கத்தையா பணத்தை நீட்டுறான். அதை கண்ணுல கூட பார்க்காம, உன் அக்கா தான் வேணும்னு ஒத்த கால்ல நிக்கிறான் பாவம். காதல் முத்திடுச்சு போல. இவனை போய் ஏண்டா உன் அப்பா வேணாம்ன்னு சொல்றாரு.

அதிலயும் அர்த்த ராத்திரில உன் அக்காகிட்ட இவன் போடுற கடலைல மெரினா கடலே எந்திரிச்சு வந்துடும் போல. அப்போ கூட ரொமான்டிக் ஆ ஏதாச்சு பேசுறானா… அதுவும் இல்ல. உப்புக்கு பெறாத அவன் வேலையை பத்தி பேசி, கல்யாணம் பண்ணி தாத்தா ஆகுறதை பத்தி கனவு காணுது அந்த லூசு. நாலு நாளா அவன் போனை ஹேக் பண்ணி, 24 ஹவர்ஸ்ஸும் அவன் போன் காலை டிராக் பண்ணதுல ஒரு சின்ன இன்டெரெஸ்ட்டிங் பாய்ண்ட் கூட கிடைக்கல. இவ்ளோ ஏன்…” என நிறுத்தியவள், ஹஸ்கி குரலில் “ஒரு பிட்டு படம் கூட இல்லடா அவன் போன்ல…” என்று சோகமாக கூறி முடித்தாள்.

“சென்னைல செம்ம ஹாட். இந்த ரெய்னி சீசன்லயும் அங்க போனா உருகிடுவோம் போல. எப்படிடா அங்க இருக்கீங்க” என தன் போக்கில் பேசிக்கொண்டே சென்றவள், மெத்தையில் தொம்மென விழுந்து, “குட் நைட் அமுலு. உம்மா.” என காற்றிலேயே முத்தத்தை பறக்க விட்டு, அடுத்த நொடி உறங்கியும் விட, அவன் தான் கண்ணை கூட அசைக்காமல், உறைந்திருந்தான்.

அவன் கேட்ட ஒரே காரணத்திற்காக, நான்கு நாட்களாக உறக்கத்தை தொலைத்து, அவளே சென்று வசீகரன் பற்றிய அனைத்து தகவலையும் கொண்டு வந்ததோடு, அவனது குணத்தையும் ஆராய்ந்து விட்டே நற்சான்றிதழ் அளித்திருக்கிறாள்.

ஆனால், இத்தனை மெனக்கெடலும் அவன் ஒருவனுக்காகவே. அவள் கண்ணசைத்தால், அவளுக்காக வேலை செய்ய அத்தனை பேர் இருந்தும், அவன் விஷயத்தில் யாரையும் நம்பாது அவளே சென்றிருக்கிறாள்.

இதெல்லாம் எதற்காக… இந்த முட்டாள் பெண், மனதில் இந்த முட்டாள்தனமான அன்பும், அதற்கு அவள் வைத்திருக்கும் பேரும் முன்னுக்கு பின் முரணாக இருந்தாலும், அந்த அன்பில் சிக்கி மூழ்கியது என்னவோ தஷ்வந்த் தான்.

காயம் தீரும்!
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
34
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்