1,744 views

சண்டையோடு சமாதானங்கள் நாட்களை கடத்திக் கொண்டிருக்க, பெரும் சண்டை உருவானது வீட்டில். சிவானியின் பெற்றோர்கள் வந்திருந்தார்கள் வீட்டிற்கு. அவர்களிடம் ஆதிலட்சுமி சாதாரணமாக மருமகள் அதிகம் செலவு செய்வதாக கூற, அவர்களும் மகளை கண்டித்தார்கள்.

பெற்றோர்கள் போகும் வரை பொறுமை காத்தவள், “எங்க அப்பா அம்மா கிட்ட என்னை பத்தி தப்பா கோள்மூட்டி விடுறீங்களா. இதுக்கு மேல உங்களுக்கு மரியாதை கிடையாது என் விஷயத்துல தலையிட்டீங்கன்னா. என் புருஷன் சம்பாத்தியத்துல நான் என்ன வேணா பண்ணுவேன். நீங்களா கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறீங்க கேள்வி கேட்க? தரணி கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறான். நல்லா தண்டமா தின்னுட்டு வீட்ல உக்கார்ந்துட்டு இருக்க கொழுப்புல‌ பேசுறீங்க.” என இன்னும் தரை குறைவாக பேச ஆரம்பித்தாள்.

எப்பொழுதும் அமைதியாக இருக்கும் தயாளனே இந்த முறை மருமகளை சத்தம் போட, கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டாள். வீட்டிற்கு வந்தவன் மனைவியை தேட, பொறுமையாக விஷயத்தை சொன்னார்கள் பெற்றோர்கள்.

“என்னப்பா நீங்க அவ போறான்னா அப்படியே விடுவீங்களா? எனக்கு ஒரு போன் பண்ணி சொல்லி இருக்கலாம்ல. தேவை இல்லாம இப்போ ஒரு பிரச்சினை தேவையா? அவ என்னவோ பண்ணிட்டு போறா விடுங்களேன்.” என பெற்றோர்களை புரிந்து கொள்ளாமல் சத்தமிட்டவன் மனைவிக்கு அழைத்தான்.

முதல் முறை எடுக்காதவள் அடுத்த முறை எடுத்து அவளுக்கு சாதகமான பேச்சுக்களை மட்டும் கணவனின் செவியில் போட்டாள். கைப்பேசி வழியாகவே சமாதானப்படுத்தியவன் அவள் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டான். அடுத்த இருபது நிமிடத்தில் நண்பன் சூர்யா வீட்டு முன்பு நின்றான்.

உடல் சோர்வில் படுத்துக் கொண்டிருந்தாள் சிவானி. மனைவியை அந்த நிலையில் பார்த்தவன், “சிவா! என்னடா ஆச்சு?” பதட்டத்தோடு விசாரித்தான்.

“காலையில வந்தாடா இன்ன வரைக்கும் எதுவும் சாப்பிடல. அப்புறம் எப்படி தெம்பா இருக்க முடியும். நீயாது உன் பொண்டாட்டிய சாப்பிட வை.” கையில் உணவை கொடுத்தான்.

ஊட்டும் அவன் கைகளை தட்டி விட்டவள், “வேணா தரணி விடு. தனியா இருக்கும் போது நல்லா பாசமா பேசுற. உன் அப்பா அம்மா முன்னாடி வாய திறக்க மாட்டேங்குற. அவங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை.

என்னோட அப்பா என்னை எப்படி திட்டினாருன்னு  தெரியுமா. ஏற்கனவே அவங்க கிட்ட சொல்லாம உன்ன கல்யாணம் பண்ணதுல விருப்பம் இல்லாம தான் எனக்காக அமைதியா இருக்காங்க. இதுல உங்க அம்மா மாமியார் கெத்த காட்டுறன்னு இன்னும் உன்ன பிடிக்காத மாதிரி பண்ணிட்டாங்க. உன்னோட சொந்த செலவுக்கு கூட கணக்கு பார்க்குற இந்த குடும்பத்துக்கா வரணும்னு ஆசைப்பட்டன்னு கேட்குறாரு. அவருக்கு என்ன பதில் சொல்லட்டும்?” பேச்சுக்களோடு அழுகையையும் சேர்த்தாள்.

“சாரி சிவா! இனிமே இந்த மாதிரி நடக்காம பார்த்துக்கிறேன். வரும்போது அவங்க ரெண்டு பேரையும் சத்தம் போட்டுட்டு தான் வந்தேன். இனிமே உன் விஷயத்துல தலையிட மாட்டாங்க.”

“எனக்கு நம்பிக்கை இல்லை உன் மேல. நான் அப்படியே எங்கயாது கண் காணாத இடத்துக்கு கிளம்புறேன். நீ என்னை மறந்துட்டு உங்க அம்மா சொல்ற பொண்ணு கல்யாணம் பண்ணிக்கோ.”

“அப்படிலாம் பேசாத சிவா.  என்னை நம்பி வந்த உன்ன பார்த்துக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கு. இனிமே அந்த வீட்ல உனக்கு ஒரு சின்ன கஷ்டம் கூட வராத மாதிரி நான் பார்த்துக்கிறேன்.” என்று பல சமாதானங்களை செய்து அழைத்துச் சென்றான் வீட்டிற்கு.

மகனின் புரிந்து கொள்ளா பேச்சில் பெற்றோர்கள் இருவரும் அவனிடம் பேசுவதை தவிர்த்தார்கள். நல்ல சாதகமான சூழ்நிலையாக அமைந்தது அவளுக்கு. தான் ஆசைப்பட்டது போல் வாழ துவங்கினாள். பெற்றோர்கள் பேசவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் மாமியார் மருமகள் சண்டை வராமல் இருப்பதில் நிம்மதி கொண்டான்.

***

அவனுக்கு மிகவும் விருப்பமான ஈட்டி எறிதலில் குழுவில் இருந்து அழைப்பு வந்திருந்தது. எடுத்தவன் இன்பமாக அதிர்ந்தான் பள்ளி குழு ஒன்றிற்கு  பயிற்சி கொடுக்க வேண்டும் என்பதில். சிறிது காலம் விட்டிருந்த ஆசை துளிர்விட்டது அவனுக்குள். இன்பமான செய்தியை முதலில் பெற்றோர்களிடம் பகிர நினைத்தவன்  வீட்டிற்கு வந்தான்.

ஷிவானி அழுதுக்கொண்டு பெட்டிகளை பிடித்தவாறு நின்று கொண்டிருந்தாள். அந்த நிலையை பார்த்தவன் இன்பத்தை மறந்து ஏன் என்று விசாரிக்க,

“இதுக்கு மேல என்னால இந்த வீட்ல இருக்க முடியாது தரணி. உன்ன நம்பி வந்ததுக்கு என்னை ரொம்ப நல்லா வாழ வச்சுட்ட. இனி என் மூஞ்சிலயே முழிக்காத.” என்றவள் கிளம்பத் தயாரானாள்.

மனைவியை நிறுத்தியவன் காரணத்தை கேட்க, அவளோ கத்திக் கொண்டிருந்தாள் விடாமல். காரணம் தெரியாமல் முடிந்தவரை அவளை அடக்கியவன் முடியாமல் போக,

“என்னன்னு சொன்னா தான எனக்கு தெரியும்? உன் இஷ்டத்துக்கு  போறன்னு சொன்னா என்ன அர்த்தம். இவ்ளோ கேட்டும் மதிக்காம போறன்னா போடி.”  கோபம் கொண்டு தள்ளிவிட்டான்.

“தள்ளிவிடு தரணி…இன்னும் நல்லா வேகமா தள்ளிவிடு அப்போ தான் வயித்துல இருக்க உன் குழந்தை சாகும்.” என்ற சிவானியின் வார்த்தையில் சிலையாகி விட்டான்.

அறையில் இருந்த தம்பதிகளுக்கும் இந்த செய்தி புதிது என்பதால் வேகமாக வெளியில் வந்தார்கள். அவளோ அவர்களை பார்த்த பின், “எல்லா தப்பும் பண்ண உங்க அப்பா அம்மா நல்லவங்க. உன்னை காதலிச்சிட்டு உனக்காக இங்க கஷ்டப்பட்டு இருக்க நான் கெட்டவ. இனிமே என்னையும் என் பிள்ளையையும் தேடி வராத. நாங்க செத்தா கூட எங்க பிணத்தை நீ வாங்க கூடாது.” என கத்தி ஆர்ப்பாட்டம் செய்தாள்.

“என்னமா பேச்சு இதெல்லாம்? இப்ப என்ன நடந்து போச்சு இந்த மாதிரி பேசுற. உன்னை எதுவும் கேட்க கூடாதா நாங்க.”

மாமனாரின் வார்த்தையில் விழுந்தவள் வேகமாக எழுந்து நின்று, “கேட்கக் கூடாது. என் புருஷன தவிர என்னை கேள்வி கேட்கிற உரிமை உங்க யாருக்கும் கிடையாது. இந்த வீட்டுக்கு வந்த நாள்ல இருந்து நீங்க என்னை ரொம்ப சித்திரவதை பண்றீங்க. வயித்துப் பிள்ளையோட சொல்றேன் நீங்க ரெண்டு பேரும் நல்லாவே இருக்க மாட்டீங்க. என்னையும் என் பிள்ளையையும் அழுக வச்சதுக்கு நாசமா போயிடுவீங்க.” என சாபம் விட்டாள்.

“போதும் நிறுத்து! பண்ற எல்லா வேலையும் பண்ணிட்டு எங்களுக்கு சாபம் கொடுக்குறியா நீ. யாரைக் கேட்டு என் குடும்பத்து நகைய அடகு வச்ச. உன் புருஷன் சம்பாத்தியத்தை நீ என்ன வேணா செலவு பண்ணிக்கோ அதை இனி நாங்க கேட்க மாட்டோம். ஆனா இந்த வீட்டு சொத்த நீ யூஸ் பண்றதுக்கு என்கிட்ட பர்மிஷன் கேட்கணும்.”

குழந்தை விஷயத்தை கேட்டவன் மனம் அப்படியே மனைவியின் புறம் சாய்ந்து விட்டது. இதில் புதிதாக அன்னையின் பேச்சை கேட்டவன் என்ன நடந்தது என்று முதலில் விசாரித்தான். ஆதிலட்சுமி சொல்ல வருவதற்குள்,

“நான் சொல்றேன் தரணி. என் அப்பாவுக்கு ரொம்ப உடம்பு முடியாம போயிடுச்சு. ஹாஸ்பிடல் செலவுக்கு காசு பத்தலன்னு சொன்னாங்க. உன்கிட்ட கேட்கலாம்னா நீ நேத்து வேலைய விட்டு வரவே ரொம்ப லேட் பண்ணிட்ட. எனக்குன்னு இருக்குற சொந்தம் என்னோட அப்பா, அம்மா மட்டும் தான்.

என்ன பண்றதுன்னு தெரியாம வீட்ல இருந்த நகைய  அடகு வைச்சு ஹாஸ்பிடல் செலவுக்கு கொடுத்தேன். அதை எப்படியோ தெரிஞ்சுக்கிட்டு ரொம்ப அசிங்கமா பேசிட்டாங்க தரணி. குழந்தை இருக்குங்குற விஷயத்தை சந்தோஷமா சொல்ல வந்த என்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டாங்க.” பேசிக்கொண்டே கணவனை நெருங்கியவள் நெஞ்சில் சாய்ந்து கொண்டு அழுதாள்.

“பொய் சொன்னாலும் கொஞ்சமாது நம்புற மாதிரி சொல்லு. நீ ஒரு நகைய மட்டும் இல்ல அந்த பீரோல இருந்த நிறைய நகைய அடகு வைச்சிருக்க.” என்ற மாமியாரின் பேச்சை முடிக்க விடாமல்,

“என் குழந்தை மேல சத்தியமா இல்ல தரணி.” என கதறி அழுதாள்.

“அப்போ பீரோல இருந்த நகை எங்க போச்சு?.”

“பாரு தரணி நீ இருக்கும் போதே என்னை எப்படி சந்தேகமா கேள்வி கேக்குறாங்கன்னு.” என்றவள் தன் வயிற்றில் அடித்துக் கொண்டு,

“நல்ல நேரத்துல என் வயித்துல வந்திருக்க. நீ சாகு அப்போ தான் இங்க இருக்க எல்லாருக்கும் நிம்மதி.” என்று அடிப்பதை தொடர்ந்து கொண்டிருக்க, பதறி விட்டான் தரணீஸ்வரன்.

வேகமாக கைகளை தன்னோடு எடுத்துக் கொண்டவன், “அறிவு இருக்கா சிவா உனக்கு? வயித்துல குழந்தை இருக்கும் போது இப்படி அடிக்கிற. ஒன்னு கிடைக்க ஒன்னு ஆகிப்போச்சுன்னா என்ன பண்ணுவ.” என்று சத்தமிட்டான்.

“அப்படி ஆகணும்னு தான என் மேல இப்படி ஒரு பழிய போடுறாங்க. நானும் என் குழந்தையும் உன்னோட வாழக்கூடாதுன்னு நினைக்கிறாங்க தரணி. அவங்க ஆசைப்பட்டதே நடக்கட்டும். நான் இங்க இருந்து போறேன்.” என அவனை விட்டு நகர்ந்தாள்.

தரணி பேச வருவதற்குள், “சும்மா குழந்தைய வைச்சு நடிச்சிட்டு இருக்காத. உன் பேர்ல நகை அடகு வைச்சதுக்கான எல்லா ஆதாரமும் என்கிட்ட இருக்கு.” என்றிட,

“என்னம்மா உங்களுக்கு பிரச்சனை எப்ப பாரு அவளை ஏதாச்சும் சொல்லிட்டே இருப்பீங்களா. அவ தான் குழந்தை மேல சத்தியம் பண்ணி சொல்றாளே ஒரு தடவை தான் வச்சன்னு. திரும்பத் திரும்ப சந்தேகப்படுற மாதிரியே பேசுறீங்க. நீங்க பேசுறதை கேட்கும் போது எனக்கே எரிச்சலா இருக்கு. அவளால எப்படி பொறுத்துக்க முடியும். அன்னைக்கே சொல்லிட்டேன் இனிமே அவளை எந்த கேள்வியும் கேட்காதீங்கன்னு. அதையும் மீறி இந்த மாதிரி நடந்துக்குறது நல்லா இல்ல ம்மா.” கோபம் கொண்டு வார்த்தையை விட்டான் அன்னை மனதை நோகடிக்க.

மகனின் பேச்சில் உள்ளம் கலங்கியவர் எதுவும் பேசாமல் இருக்க, “அம்மா கிட்ட பேசுறோம்னு ஞாபகம் வச்சிட்டு பேசு தரணி. நாங்க ஒன்னும் சும்மா உன் பொண்டாட்டிய கேள்வி கேட்கல. எதர்ச்சையா நகை எடுக்க கடைக்கு போகும் போது தான் உன் பொண்டாட்டி அடிக்கடி நகைய அடமானம் வைக்கிற விஷயம் தெரிய வந்துச்சு. அதுலயும் நிறைய நகைய மொத்தமா வித்து காசாக்கி இருக்கா. பிரச்சனை வேணாம்னு முதல்ல அமைதியா தான் விசாரிச்சோம். உன் பொண்டாட்டி தான் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணிட்டா.” என்றார் தயாளன்.

“இவங்க சொல்ற எதையும் நம்பாத தரணி. எங்க அப்பாவோட உயிர காப்பாத்தணும்னு தான் குற்ற உணர்ச்சியோட இந்த மாதிரி ஒரு காரியத்தை பண்ணேன். எனக்கு கொஞ்ச நாள் டைம் கொடு ஏதாச்சும் பண்ணி அந்த நகைய திருப்பிக் கொடுக்கிறேன். அதுவரைக்கும் இவங்களை எனக்கு திருடி பட்டம் கட்டாம இருக்க சொல்லு.” என்று அழும் மனைவியின் சத்தத்தில் முழுவதும் எதிராக நின்றான் பெற்றோர்களுக்கு.

அவளுக்கு ஆதரவாக மாறிப்போனான். தன் மனைவி தவறு செய்யவில்லை என்று சாதித்தான். பெற்ற பிள்ளையின் வார்த்தையில் சோர்ந்து இருந்த ஆதிலட்சுமி, “நீ சொல்ற மாதிரியே வச்சுப்போம். ஆனா அவளுக்கு என் ரூம்ல இருக்க பீரோ சாவி எப்படி கிடைச்சது?” என்ற கேள்வியை முன் வைக்க, நடுங்கி போனாள் சிவானி.

 

கோபத்தில் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தவனுக்கு அப்போதுதான் அந்த கேள்வியும் மரமண்டையில் உதிக்க, “இவங்களோட பீரோ சாவி எங்க இருக்குனு கூட எனக்கு தெரியாது. ஹால்ல அந்த நகை இருந்துச்சு. ஆபத்துக்கு யோசிக்காம எடுத்துட்டேன். மத்தபடி தப்பானவ இல்ல தரணி நான். நீயாது உன் பொண்டாட்டிய நம்பு.” அடுத்த நாடகத்தை அரங்கேற்றினாள்.

“ஒரு பொய்ய மறைக்க எத்தனை பொய் சொல்ற. உன்ன மாதிரி ஒரு பொண்ண நான் பார்த்ததே இல்லை. இதுக்காக தான் உன்னை கல்யாணம் பண்ண வேணாம்னு இவன அவ்ளோ சத்தம் போட்டேன். அதையும் மீறி அவன் தலையில அவனே மண்ண அள்ளி போட்டுக்கிட்டான்.”

“நான் எத்தனை தடவை உன்கிட்ட சொல்லி இருக்கேன் உங்க அம்மாக்கு நான் மருமகளா வந்தது பிடிக்கலைன்னு. இப்ப பாரு உன் முன்னாடியே எவ்ளோ தர குறைவா பேசுறாங்கன்னு. இதுக்கு தான் சொல்றேன் நான் வீட்டை விட்டு போறன்னு.” தேம்பி அழுதவாறு தன் உடமைகளை கையில் எடுத்தாள்.

மனைவி அங்கிருந்து நகர்வதை பார்த்தவன் தன்னால் முடிந்த வரை தடுத்தான். அவளோ போய் தான் தீருவேன் என்று அடம் பிடிக்க, மனைவிடம் காட்ட முடியாத கோபத்தை மொத்தமாக திருப்பினான் பெற்றோர்களிடம்.

“இதுக்கு மேல என் பொண்டாட்டிய எதுவும் பேசாதீங்க. அவ சொல்ற வார்த்தைய நான் நம்புறேன். அந்த நகைக்கான காசு எவ்ளோன்னு சொல்லுங்க உங்க மூஞ்சில விட்டு அடிக்கிறேன். இன்னொரு தடவை என் மனைவி அழுறதை பார்த்தா இந்த வீட்டை விட்டு கண்டிப்பா போயிடுவேன்.” என்றவன் வர மறுத்தவளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றான் தன் அறைக்கு.

ஆதிலட்சுமி அழுக கூட தெம்பு இல்லாமல் மகனின் முதுகை வெறிக்க, தயாளனுக்கு உணர்வுகள் செத்துப் போனது பிள்ளையின் பேச்சில். அன்று நடந்த சண்டைக்கு பின் மகன் மருமகள் இருவரிடமும் பேசுவதை தவிர்த்தவர்கள்.

அடுத்த வாரம் வர இருக்கும்  முக்கியமான விழா ஒன்றுக்கு நகை எடுக்க சென்றிருந்தார்கள்.
வழக்கமாக அவர்கள் நகை எடுக்கும் கடை அது. வந்தவர்களை உபசரித்த கடை முதலாளி அவர்களுக்கு தேவையானதை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்க, நகைகளை உருக்குவதற்காக ஒரு நபர் வந்திருந்தார். கடை முதலாளி உருக்கும் நகைகளை எடுத்துக்காட்ட, தன் குடும்ப நகையை பார்த்து அதிர்ந்தார் ஆதிலட்சுமி. நெஞ்சம் பதைப்பதைக்க அதை கையில் வாங்கியவர், “சார் இது எப்படி இங்க?” என்று விசாரிக்க,

“ஒரு பொண்ணு அடிக்கடி கடைக்கு வரும் மேடம். இந்த மாதிரி எதையாது ஒரு நகைய அடகு வைக்கும் இல்லன்னா மொத்தமா வித்துட்டு போயிடும்.” என்றார்.

தம்பதிகள் இருவரும் அடகு வைத்ததற்கான ரசீதை கேட்க, பத்துக்கும் மேற்பட்ட ரசிதுகள் சிவானி பெயரில் இருந்தது. பல நகைகளை விற்றும் இருந்தாள். அவர் முன்பு எதையும் காட்டிக் கொள்ள முடியாதவர்கள் அத்தனை நகைகளையும் மீட்டுக் கொண்டு வீட்டிற்கு வந்தனர்.

அவளை அழைத்து பொறுமையாக விசாரிக்க, தைய தக்கா என்று குதிக்க ஆரம்பித்தாள் எடுத்த உடனே. அதில் ஆதிலட்சுமிக்கும் கோபம் வந்துவிட மருமகளை விளாசிவிட்டார் வார்த்தைகளால். எங்கு தரணீஸ்வரன் வந்தால் இதையெல்லாம் காட்டி விடுவார்களோ என்ற பயத்தில் தான் அவன் வரும் முன்பு தயாராக இருந்தாள். ஆதாரத்தைக் காட்டி அவனை நம்ப வைப்பதற்கு முன், அவளே ஒரு நாடகத்தை உருவாக்கி விட்டாள். 

அழுது கொண்டிருப்பவளை  சமாதானப்படுத்தினான். எந்த மனிதனாக இருந்தாலும் அவன் தந்தையாகப் போகும் தருணம் அளவிட முடியாத மகிழ்ச்சி அல்லவா! அதை நிறைவேற்றிக் கொள்ள ஆசைப்பட்டான் அவள் வயிற்றில் கை வைத்து.

ஒரு வழியாக கணவன் நம்பி விட்டான் என்பதை நினைத்து சந்தோஷப்பட்டவள் வயிற்றில் கை வைத்ததும் அடுத்து இதை எப்படி சமாளிப்பது என்று நடுக்கம் கொண்டாள். வயிற்றில் கை வைத்து தடவியவன் முத்தம் வைத்து கொஞ்சினான்.

அப்பா ஆகப் போகும் மகிழ்வோடு பயிற்சி கொடுக்க வேண்டும் என்ற நற்செய்தியையும் பகிர்ந்தான். மிகுந்த மகிழ்வோடு கணவனை கட்டி அணைத்து வாழ்த்துக்களை தெரிவித்தவள், “இந்த விஷயத்தை உங்க அப்பா அம்மா கிட்ட சொல்லுங்க தரணி. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க.” என்றாள்.

மனைவி மீது இருக்கும் காதலோடு இன்று பெரும் மரியாதையே வந்து விட்டது அவனுக்கு. தன்னை சந்தேகப்பட்டு இவ்வளவு பேசியதற்கு பிறகும் அவர்களின் மகிழ்விற்காக யோசிக்கும் மனைவியை இன்னும் கொஞ்சினான். “நான் ரொம்ப லக்கி சிவா. உன்ன மாதிரி ஒரு பொண்டாட்டி கிடைக்க. இனிமே  உன்ன கஷ்டப்படுத்த விடமாட்டேன். இன்னையில இருந்து நீ ராணி மாதிரி இந்த வீட்ல இருக்கலாம். உனக்கு என்னென்ன வேணும்னு சொல்லு எல்லாத்தையும் நான் செஞ்சு தரேன். என் குழந்தையோட இனிமே நீ சிரிச்சிட்டே  இருக்கணும்.” என்றவன் சொன்னது போல் தாங்க ஆரம்பித்தான் அவளை.

மறுநாளே கேட்டது கேட்காது என்று அனைத்தையும் வாங்கி குவித்தான். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவன் முயல, “அத்தை மாமா முதல்ல சமாதானம் ஆகட்டும் அதுக்கப்புறம் டாக்டரை போய் பார்த்துக்கலாம்.” என்று தப்பித்து விட்டாள்.

அவனுக்கு இந்த ஆனந்தம் எல்லாம் அளவிட முடியாத அளவிற்கு இருந்தாலும் பெற்றோர்களை திட்டியது வருத்தத்தை கொடுத்தது. அவர்கள் முகத்தைப் பார்க்க துணிவு இல்லாமல் இருந்தான். கடைசியாக மனைவியை அழைத்துக் கொண்டு வரும்போது அன்னையின் கண்களில் தெரிந்த வருத்தத்தை இப்பொழுதும் நினைத்துப் பார்த்து வருந்தினான்.

இரண்டு நாட்கள் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை அவர்களிடம் சென்றான். இப்பொழுதெல்லாம் அதிகம் வெளியில் வருவதில்லை அவர்கள். எந்நேரமும் அறையில் இருந்து கொள்ள பழகி விட்டார்கள். கம்பெனி பொறுப்பை முழுவதுமாக மகன் எடுத்துக் கொள்ள வேலை இல்லாமல் போனது தயாளனுக்கு.

எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியாமல் அவன் தடுமாற, “எதுவா இருந்தாலும் தைரியமா சொல்லுப்பா. இனிமே எந்த பேச்சையும் தாங்கிக்கிற அளவுக்கு எங்களுக்கு பக்குவம் வந்துடுச்சு.” என்ற தந்தையின் பேச்சில் மனம் உடைந்தான்.

அவர்களின் அருகில் மண்டியிட்டவன், “உங்க மேல கோபப்பட்டது தப்பு தான். ஆனா அவளையும் என்னால விட்டுக் கொடுக்க முடியாது. ஒரு மூனு நாள் பழக்கத்துக்காக என் பின்னாடி சுத்த ஆரம்பிச்சவ எனக்காக குடும்பம் மொத்தத்தையும் விட்டுட்டு படிக்க வந்தா. நான் ஒதுங்கி போகும் போதெல்லாம் ரோசம் பார்க்காம என் பின்னாடியே வந்தா.

என்னை விட்டுக் கொடுக்க முடியாம சாக துணிஞ்சா. அதனால தான் கல்யாணம் பண்ணேன். பொண்டாட்டி அழுகுறத பார்க்க முடியல. அதுவும் குழந்தையோட இருக்குற ஒருத்திய எப்படி கஷ்டப்படுத்த முடியும் என்னால. அதனாலதான் உங்கள கஷ்டப்படுத்துற மாதிரி ஆகிடுச்சு.” எதற்காக மனைவி புறம் சாய்ந்தேன் என்பதை அவர் விவரிக்க,

“வந்த விஷயத்தை சொல்லிட்டு கிளம்பு.” என்றார் ஆதிலட்சுமி.

அன்னையின் கோபத்தை புரிந்து கொண்டவன் அதை மேலும் வளர்க்காமல், “திருச்சியில இருக்க ஸ்கூல் ஸ்டுடென்ட்ஸ்க்கு ஈட்டி எறிதல் பயிற்சி கொடுக்க போறேன். வரதுக்கு ஒரு வாரம் ஆகும். அதுவரைக்கும் நீங்களும் என் பொண்டாட்டியும் பத்திரமா இருங்க. முடிஞ்சா அவ கூட சண்டை போடாம இருங்க.” என்றதும் மகனை விரக்தியோடு பார்த்தார் ஆதிலட்சுமி.

அந்தப் பார்வை அவன் நெஞ்சை சுட்டது. தலை குனிந்து கொண்டு, “சாரி அம்மா” என வெளியேறினான்.

***

தரணீஸ்வரன் ஊருக்கு சென்று இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கும் போது மூன்று முறை சத்தம் எழுப்பியது கைபேசி. அதை எடுத்துப் பார்த்தவன் தன்னுடைய கார் அதிக வேகத்தில் கொடைக்கானல் பக்கம் சென்று கொண்டிருக்கிறது என்பதை அறிந்தான். யார் செல்கிறார்கள் என்பது தெரியாமல் தந்தைக்கு அழைக்க, அவரோ தெரியாது என்று விட்டார்.

உடனே மனைவிக்கு அழைத்தான். பதில் கொடுக்க தயாராக இல்லை அவள். கார் இப்போது எங்கு இருக்கிறது என்பதை அறிந்தவன் பதட்டத்தோடு மீண்டும் அழைத்தான். ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது அவளின் எண். பயம் கொண்டவன் வேகமாக அழைத்தான் நண்பனுக்கு. தூக்க கலக்கத்தில் எடுத்தவன் திட்டிக்கொண்டே பேச,

“சிவாக்கு போன் பண்றேன் சுவிட்ச் ஆப்னு வருது. கார் இப்ப கொடைக்கானல் பக்கம் இருக்கு. ரொம்ப வேகத்துல வேற போய்ட்டு இருக்கு. ரொம்ப பயமா இருக்கு கொஞ்சம் என்னன்னு பார்க்க முடியுமா.” பதட்டமாக அவன் உதவியை நாடினான்.

நண்பனுக்கு தைரியம் சொன்னவன் நண்பன் மனைவியை தேடிச் சென்றான். அவன் பாதி வழியில் சென்று கொண்டிருக்கும் பொழுதே, மீண்டும் அழைத்தான் தரணீஷ்வரன்.

“மச்சி! இப்போ கார் சென்னை நோக்கி வந்துட்டு இருக்குடா. நீ அப்படியே ரிவைஸ் எடுத்தனா அவளை எங்கேயாது பிடிக்கலாம்.” என்றவன் குரலில் இன்னும் பதட்டம்  அதிகம் ஆகியது.

என்ன நடக்கிறது என்று தெரியாமல் அவனும் நண்பன் சொன்னதை செய்ய, அவளை எங்கும் பிடிக்க முடியவில்லை. அதற்குள் அவன் ஜிபிஎஸ் கருவி கார் வீட்டில் இருப்பது போன்று காட்டியது. தந்தைக்கு அழைத்தவன் விபரத்தை சொல்ல,

“ஆமா கார் வெளிய தான் நிக்குது. உன் பொண்டாட்டி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் உள்ள போனா.” என்றார்.

அதற்குள் சூர்யா வீட்டிற்கு வந்து விட, பெற்றோர்கள் பேச முடியாததால் அவனை அனுப்பி வைத்தான். அவனிடம் எதையும் கூறவில்லை. அதை நண்பனுக்கு சொல்ல, அவன் அழைப்பிலிருந்து மனைவியை பேச வற்புறுத்தினான். சூர்யா தன் கைபேசியை ஸ்பீக்கரில் போட, பதட்டத்தோடு மனைவியை நலம் விசாரித்தான்.

பதில் சொல்லாமல் அழுக மட்டுமே செய்தாள் அவள். கீழே இருந்த தம்பதிகள் இருவரும் அந்த சத்தத்தில் அவனின் அறை வாசல் முன்பு நிற்க, “பேபி அபார்ட் ஆகிடுச்சு. என்னால இதை ஏத்துக்க முடியல. அதனால தான் கார எடுத்துட்டு சாகலாம்னு கொடைக்கானலுக்கு போனேன். என்னால சாக முடியல தரணி. கண்ணு முன்னாடி உன்னோட முகமும் வந்துச்சு. உன்ன விட குழந்தை முக்கியம் இல்லன்னு திரும்ப வந்துட்டேன்.” என்றவள் பேச்சை நிறுத்திவிட்டு அழுக, சத்தம் இல்லாமல் கலைந்த தன் பிள்ளையை நினைத்து வருந்தினான்.

கேட்டுக் கொண்டிருந்த மூத்தவர்களுக்கு கூட அதில் கவலை வந்துவிட்டது. நண்பனின் மனைவியை சமாதானப்படுத்தியவன் அங்கிருந்து வெளியேற, பல வருடங்கள் கழித்து வந்த வாய்ப்பை மனைவிக்காக உதறி தள்ளியவன் வீட்டை நோக்கி பயணப்பட்டான்.

அதை அறியாத ஷிவானி இரண்டாம் முறையாக தப்பித்த நிம்மதியில் நன்றாக படுத்து உறங்கினாள். அதிகாலை வந்தவன் மனைவியை கட்டிப் பிடித்துக் கொண்டு தன் துயரத்தை தீர்த்தான். அவளும் அவனோடு அழுகையில் கரைந்து, “நான் கொஞ்ச நாள் எங்க அப்பா வீட்ல இருக்கேன் தரணி. எந்த மறுப்பும் சொல்லாம என்னை அனுப்பி வை.” என்றவள் வார்த்தை வலித்தாலும் அவள் வலியை குறைப்பதற்காக சம்மதித்தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
29
+1
37
+1
3
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *