356 views

 அத்தியாயம் 9

 

கோவர்த்தனன் அன்றைய அலுவல் முடிந்து வந்ததும் , தாய் சுமதியின் கால்மாட்டில் அமர்ந்தான்.

” வந்தவுடனே என்னப்பா இப்படியே உக்காந்துட்ட ? போய் மத்த வேலையைப் பாக்கலயா ? என்னையும் டீ போட விடாமல் கால்மாட்ல உக்காந்து இருக்க ? என்ன ஆச்சு கோவர்த்தனா ? ” அக்கறையாய் மகனிடம் வினவினார் .

தாயின் முகத்தைப் பார்த்து மெலிதான புன்னகையுடன் ,

 

” கொஞ்ச நேரம் இப்படி உக்காந்துக்கிறேன் ம்மா. அப்றம் நாம ரெண்டு பேரும் சேர்ந்து டீ போடுவோம் மா ” என்று கூறினான்.

வெகு நாட்களுக்குப் பிறகான மகன் இவ்வாறு தன்னிடம் மனம் விட்டு , பேசியதைக் கண்டு அவரது முகமும் , மனதும் தொய்வின்றி தெளிந்திருந்தது.

பத்து நிமிட ஓய்விற்குப் பிறகு , எழுந்த கோவர்த்தனன் ,

 

” ரெடியா ம்மா ? டீத் தூளை வச்சு தூள் கிளப்பிடலாம் ! ” அவரை இனி எதையும் நினைத்துக் கலங்கி , கண்ணீர் உகுக்க விடக்கூடாது என்று நினைத்த இவனது மூளைக்குள் உதித்த யோசனை தான் இது ! 

” வரேன் பா  ! ” சந்தோஷச் சாரல்களில் நனைந்த உள்ளமதை இன்னும் ஆனந்தக் களிப்பில் , முக்குளிக்க வைக்க மகனுடன் சமையலறை சென்றார் சுமதி.

” ஃப்ரிட்ஜ் – ல இருந்துப் பாலை எடுத்தாச்சு. அப்பறம் அதை ஒரு பாத்திரத்துல ஊத்தினப்றம் அது சூடாகுற கேப் – ல டீத்தூளும் , சீனியும் போட்டு , கொதிக்க வைக்கனும் ” 

இவன் பாட்டிற்கு டீ போடுவதை , அழகாக விளக்கிக் கூறிக் கொண்டிருக்க , அதைப் பொறுமையாக கேட்டுக் கொண்டே அவன் சேர்க்கும் சர்க்கரை மற்றும் டீத்தூளின் அளவையும் சரிபார்த்துக் கொண்டிருந்தார்.

” ஓகே தானம்மா ? ” 

 

ஒவ்வொரு முறையும் , 

அளவு சரி தானா ? என்று அம்மாவிடம் கேட்டுக் கேட்டு செய்வதில் அவனுக்கு அலாதி மகிழ்ச்சி போலும்.

இவரது விழிகளும் பளிச்சென்று ப்ரகாசிக்க , அவனுக்கு ஒவ்வொன்றாக சொல்லி , பாலும் , தேயிலைத் தூளும் , சீனியும் கலந்து ,கொதித்து முடிந்து அருமையான பானமாகத் தயாரானது.

அதை தளும்பாமல் , அலுங்காமல் அரையடி தம்ளரில் நிரப்பி தாயின் கரத்தில் திணித்தான் மகன்.

அதை வாங்கியவுடனேயே குடிக்காமல் , இரு நிமிடங்கள் பார்த்துக் கொண்டு இருந்தார் மௌனமாக.

வீட்டில் ஆண்கள் சமையல் வேலை செய்யக் கூடாது என்றெல்லாம் எப்போதுமே பேசியது இல்லை  கணவனும் , மகனும்.

தன் கணவன் தென்னவன் உயிரோடிருந்த காலங்களில் சமையலறையில் மனைவிக்கு சமமாக வேலை செய்து கொண்டிருப்பார்.

அதைப் பார்த்து கண்கள் விரிய ,

 

” என்னப்பா நீங்க சமையல் வேலைப் பாத்துட்டு இருக்கிங்க ? ” 

 

என்று கேட்பான்.

பதிலை எதிர்பார்த்து தன்னைப் பார்க்கும் மகனிடம் ,

 

” ஆமா கோவர்த்தனா ! சமையல் வேலை பெண்களுக்குன்னு மட்டும் தான்னு சட்டம் இல்லையே ! அவங்களுக்கு கூடமாட ஒத்தாசையா வேலை செய்றதுலயும் நமக்கு மனநிறைவாகவும் இருக்கும். ஹெல்ப்ன்னுப் பாக்காம , வீட்டு வேலைகளை ஷேர் செய்தாலே அவங்க தனியா கஷ்டப்பட தேவையும் இல்லை ” 

அவனுக்குப் புரியும் விதத்தில் இதைப் படிப்பித்தார் எனலாம் , அதற்குப் பிறகு தந்தை வேலை விஷயமாக வெளியூர் செல்லும் நாட்களில் தாய்க்கு உதவியாக சமையலறையில் ஆஜராகி இருப்பான் தனயன்.

இவை என்றும் அழியாத , அழிக்க விருப்பம் கொள்ளாத , நினைவுகளாய் உள்ளப் பெட்டகத்தில் , உறங்கிக் கொண்டு இருந்தாலும் அவ்வப்போது சுமதியின் நினைவுக்கு வந்து போக , பேச்சற்று நின்றார்.

” ம்மா ! டீயைக் குடிங்க. ஆறினா டேஸ்ட் நல்லா இருக்காது ” 

சிந்தை கலைந்து சூடாக , மகனின் கை மணத்தில் தனக்கேத் தனக்கென்றுத் தயாரான அப்பானத்தைப் பருகினார் சுமதி.

அதைப் பருகிக் கொண்டிருந்தவரை சமையல் மேடையில் ஏறியமர்ந்து கொண்டு , 

 

அன்புக் கனிவுடன் பார்த்தான்.

இரண்டு , மூன்று மடக்குகள் தொண்டைக்குள் இறங்கியதும் , அதன் சுவையோ ! கோவர்த்தனனது தயாரிப்பாலோ ! அவருக்குள் ஒரு இனம் புரியா இதமான புத்துணர்வுப் பிரவாகம் ! 

” ம்ம் ! சூப்பர் டேஸ்ட் ! கோவர்த்தனா நீ குக் பண்ணி ரொம்ப நாளானாலும் , இப்போ இந்த டீ போட்டுக் குடுத்து அதை காம்பன்ஸேட் பண்ணிட்ட. அவ்ளோ சூப்பரா இருக்கு ” 

அவரது பாராட்டைப் புன்னகைத்து ஏற்றுக் கொண்ட கோவர்த்தனன் ,

 

” உங்களுக்கு உங்க மகன் எப்பவும் பெருசு தான். அதுக்காக சாதாரணமான டேஸ்ட்ல இருக்கிற டீ – யை நான் போட்டேன்ங்கறதுக்காக இவ்ளோ புகழக் கூடாது ” சிரிப்புடன் கூறினான்.

” அதுவும் ஒரு வகையில் உண்மை தான ! ” 

 

கேட்டு விட்டு , சொட்டு விடாமல் ரசித்துக் குடித்து முடித்தார் தேநீரை.

” குக்கிங் மா ?” என்று தொடங்கியதும் ,

 

” அதை இன்னைக்கு நான் பாத்துக்கிறேன். இன்னொரு நாள் நீ குக் பண்ணு ” 

 

என்று அடுக்களையில் இருந்து இருவரும் ஹாலுக்கு வந்தனர். 

கோவர்த்தனனுக்கு நம்பிக்கை சிறு துளி பெருவெள்ளமாக மாற வெகு நாட்கள் ஆகாது என்று தோன்றி விட்டது.

அன்னையவரை முடிந்தளவு கண்ணும் , கருத்துமாய் பார்த்துக் கொள்ள இவ்வாறான விஷயங்களைத் தொடர்ந்து செய்து , அவரைக் குளிர்விக்கச் செய்ய முடிவெடுத்தான்.

இதைப் போன்றே வந்த நாட்களில் எல்லாம் முயற்சிக்கவும் செய்து வெற்றியும் கண்டான் கோவர்த்தனன்.

🏵️🏵️🏵️🏵️🏵️

பார்த்தவுடன் காதலுணர்வு தனக்குள் வந்து விட்டதா ? இல்லையே ! இளந்தளிர் கண்ணால் கண்டு , மையல் கொண்டு , அவனிடம் காதல் பார்வை பார்த்து வைத்து இவையெல்லாம் தான் செய்ததும் இல்லை , செய்ய நினைக்கவும் இல்லை.

அவ்வாறிருக்க , இந்த கோவர்த்தனன் எவ்வாறு இக்குறுகிய கால சந்திப்பில் , தன் ஆழ் மனதுள் நுழைந்தான் என்றெல்லாம் கேள்விகள் கேட்டது இளந்தளிரின் இளம் மனது.

” அப்படி எதுவுமே நமக்கு நடக்கலயே ? அப்படியிருக்கப்போ அவனப் பத்தி யோசிச்சுட்டே இருக்கோமே ! ஒருவேளை சுபா ஞாபகப்படுத்தியதால இருக்குமோ ? ” 

 

தன் அலுவலக இருக்கையில் அமர்ந்து , இந்த யோசனைகளை எல்லாம் அடுத்தடுத்து அலசி ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

” இளந்தளிர் !!!! ” 

 

மிதுனா அவளை உரக்க அழைத்து ,

 

” ஆங்… மிது ! ” 

 

எதிலிருந்தோ தெளிந்தாற் போல் , சட்டென பதிலளித்தாள்.

” நான் கூப்பிட்டுட்டே இருக்கேன். நீ அப்படியே சிலையாக ஆக அசையாம இருக்குற ? ” 

 

இளந்தளிரை அத்தனை தடவை அழைத்துப் பார்த்ததால் சிறு கோப உணர்வு தெரிந்தது அவளது முகத்தில்.

” சாரிமா. இனி இப்படி ஆகாது. சொல்லு ! என்ன விஷயம் ? ” மன்னிப்புக் கேட்டு மிதுனாவை மலை இறங்கச் செய்தாள்.

” இந்த லெட்டர் பாரு. இதை கரெக்ஷன்ஸ் பார்த்து , சில இடத்துல சேஞ்சஸ் பண்ணனும். அதோட ஒரு காபி ( copy ) யும் சிஸ்டம்ல ஸ்டோர் செய்து வச்சிடு. எனக்கும் ஒரு காபி மெயில் செய்துடு. ரிலாக்ஸ்ஸாக செய் ” என்று சற்று முன்னர் அவளிருந்த நிலையை மனதில் வைத்து இறுதி வாக்கியத்தைக் கூறினாள் மிதுனா.

” ஷ்யூர் . முடிச்சுட்டு உனக்கு மெயில் பண்றேன் ” பரபரவென்று தனக்கு இடப்பட்ட பணியைச் செய்ய ஆரம்பித்தாள் இளந்தளிர்.

கணிணியை இயக்கிக் கொண்டு இருந்த தளிரின் தளிர் விரல்கள் திடிரென்று ஒரு இடத்தில் அப்படியே நின்று விட்டது.

மறுபடியுமா ! ஆம் கோவர்த்தனனைப் பற்றிய எண்ணங்கள் தான் அவளை உலுக்கி எடுத்துக் கொண்டு இருந்தது.

கைகள் இயங்குவது தன்னிச்சையாக நின்று விட , மிதுனாவின் பார்வைக்கும் இது தப்பவில்லை.

” என்னடி திடிர் திடிர்னு ஸ்டன் (stun) ஆகுற ? ” 

இந்த கேள்வியைக் கேட்காமல் இருக்க முடியவில்லை மிதுனாவால். அந்த அளவிற்கு அன்று சொதப்பிக் கொண்டு இருந்தாள் தளிர்.

” அகைன் சாரி டி. என்னால உன்னோட வேலையும் பாதிக்குது ” 

சுணக்கம் பிரதிபலித்திருந்த முகத்தை அவள்பால் காண்பித்து , தன் தவற்றை ஒப்புக் கொண்டாள்.

” எனக்குப் பிரச்சினை இல்லை. நீ தான் எதனாலயோ அதிகமா பாதிக்கப்பட்ருக்க. சுபா ஹெல்த் ஓகே தான ? ” 

தங்கையின் நலனை நினைத்துத் தான் இவள் இவ்வாறு கலக்கத்துடன் உள்ளாளோ ? என்ற அனுமானத்தில் கேட்டாள்.

” அவ நல்லா இருக்கா மிது. ஹெல்த்ல இம்ப்ரூவ்மெண்ட் தெரியுது ” 

 

மறுப்பாய் பேசினாள்.

” அப்றம் என்னடி ? ” 

 

குழப்பமாய்க் கேட்டாள் தோழியிடம்.

அவள் கேட்டதும் சொல்லத் துடித்த வாயையும் , மனதையும் அடக்கிக் கொண்டவள் ,

 

” தெரில மிது ” என்று கூறிவிட்டாள்.

” தெளிவா குழம்பி இருக்க ! இப்போதைக்கு ஒன்னும் பண்ணாம அமைதியா உக்காரு. இந்த வேலையை நான் முடிச்சுக்கிறேன் ” 

இவள் மறுக்க , மிதுனாவே அவளுக்குமான வேலையை முடித்தாள்.

” தாங்க்ஸ் டி ” 

 

மனப்பூர்வமாக நன்றி சொன்னாள் இளந்தளிர்.

” இட்ஸ் ஓகே. நீ பழைய சுறுசுறுப்புக்கு வா. அதை மட்டும் விட்றாத ” என்று கூறியவள் , அலுவலகம் முடிந்ததும் கிளம்பி விட்டாள்.

இளந்தளிரும் தனது ஸ்கூட்டியில் , அன்றைய நாளின் பாதிப்புகள் மெல்ல தலை தூக்கினாலும் , வண்டியை கவனமாய் , இயக்கி வீட்டுக்கும் போகும் வழியில் , அவளை அன்று முழுவதும் தன் நினைவுகளால் அலைக்கழித்த கோவர்த்தனன் நிஜமாய் கண்முன்னே எதிரில் வந்து கொண்டு இருந்தான்.

” சுபா !!!!! ” 

 

வெளிப்படையாக தங்கையை திட்டத் தொடங்கி விட ,

கோவர்த்தனனுக்குப் பின்னால் அமர்ந்து கொண்டு இருந்த ஹரீஷ் ,

 

” டேய் நண்பா ! ஆப்போஸிட்ல தளிர் வர்றாங்கப் பாருடா ! ” 

வண்டியின் பின்னே அமர்ந்து முன்னால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்த ஹரீஷ் இவளை அடையாளம் கண்டு கொண்டு , கோவர்த்தனனையும் அவள்புறம் பார்வையைத் திசை திருப்பச் செய்தான்.

இளந்தளிரைப் பார்க்க நேரிட்டவனுக்கும் ,சட்டென்று வண்டியை நிறுத்தத்தான் தோன்றியது. அதற்குள் இவனைப் பார்த்து விட்டு , அமைதியாய்க் கடந்து விட்டாள் அவள்.

” ஏன்டா !  கொளுத்திப் போட்டதை அணைக்கனும்னு பேசி வச்சு இருந்தோம். நம்மளைப் பாத்தும் கூட நிக்காம போய்ட்டாங்களே ! எனக்குத் தெரியாம தனியா மீட் பண்ணி ஏடாகூடமாக பேசிட்டியா ?” 

 

சந்தேகமாய்க் கேட்டான் ஹரீஷ்.

” இல்லடா. இவங்க இப்படி பேசாம அவாய்ட் பண்ணிட்டுப் போறது எதனாலன்னுத் தெரில ! ” 

கோவர்த்தனனையும்  இவளது செயல் பாதித்தது. தன்னைப் பார்த்ததும் முகம் திருப்பிக் கொண்டு போகுமளவிற்கு தான் 

 

செய்ததென்ன ? 

” அவங்க செகண்ட் மீட்டிங்ல நடந்ததை நினைச்சுக் கோவிச்சுக்கிட்டாங்களோ ? ” 

ஹரீஷிற்கு இப்படித் தான் தோன்றியது.

” இல்லடா. அவளோட முகத்தை அன்னைக்கு கவனிச்சேன். அப்படி எதுவும் ஃபீல் பண்ணா மாதிரி இல்லை ” 

இரண்டு தடவை சந்திப்பில் இவளை இவ்வாறு மாற்றியதற்கு என்ன காரணம் ? 

” தென் . இவங்க பண்ணதுக்கு ரீசன் ? ” 

” நத்திங் , உக்காரு போகலாம் ” 

” சரி நண்பா ” என்று பைக்கில் ஏறினான் ஹரீஷ்.

இப்படியே இதை விட்டு விட நினைத்தாலும் கோவர்த்தனனின் மனதில் ஓராயிரம் கேள்விகள் !!!! 

– தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *