423 views
அத்தியாயம் 9
விஷயத்தைக் கேள்வியுற்ற மகேஸ்வரனும், சகுந்தலாவும் கூட,
“அவனுக்குப் பயந்துக்கிட்டு இருக்க சொல்றியா பிரித்வி? இன்னும் எவ்வளவு எதிரிகள் தான் இருக்காங்க?” என்று காட்டமாக கேட்டனர்.
“அப்பா, அம்மா! இதெல்லாம் கொஞ்ச நாளைக்குத் தான் . அதுக்கப்புறம் நான் அவனை ஒரு வழி பண்ணிடறேன். உங்களை விட பல மடங்கு கோபமும், ஆத்திரமும் எனக்குள்ளே இருக்கு.அதை வெளிப்படுத்த இது நேரமில்லை” என்று அவர்களைச் சமாதானம் செய்தான் பிரித்வி.
அதிரூபாவோ, “சரி சரி, இதனால் நீங்க அப்செட் ஆகாதீங்க” என்று ஆறுதல் சொன்னாள்.
அடிபட்டப் புலியாகத் திரியும் தன்வந்த் அடுத்து செய்யப் போவது என்ன? என்பது புதிராகவே இருந்தது பிரித்விக்கு.
எப்போதும் விழிப்பாகவே இருந்தான்.
இவன் இப்படி விழிப்பாக இருக்க, தன்வந்த்தோ, வெளியே எடுத்த ஆட்களை வேலையில் ஈடுபடுத்தாமல், புதிய ஆட்களை பிரித்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் பயன்படுத்திக் கொள்ளத் தயார் செய்தான்.
நாட்கள் சில முன்னேறியதே தவிர, தன்வந்த் எந்த ஒரு தாக்குதலையும் ஏற்படுத்தி விடவில்லை.
குழப்பத்தில் ஆழ்ந்து விட்டான் பிரித்வி.
இனி அவனால் தொல்லை இராதோ? என்ற எண்ணம் கூட தோன்றி விட்டது.
தன்வந்த்தைக் கண்காணிக்க ஆட்களை நியமித்து விட்டு, தொழிலைப் பார்க்க ஆரம்பித்தான்.
அதிரூபாவோ, தனது அலுவலகத்தில் எந்தவித தொந்தரவுமின்றி வேலை பார்க்கத் தொடங்கி விட்டாள்.
ஆனால் அவ்வப்போது தோன்றும் தங்கள் கசப்பான கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் கணவனை விட்டு தூரம் சென்று விடலாமா? என்பது போல அதிரூபாவிற்கு எண்ணம் தோன்றும்.
இதனால் மன உளைச்சல் அடைந்தவள் ஒரு முடிவுடன் பிரித்வியிடம் சென்றாள்.
“ஏங்க!” என்று அழைக்கவும்,
“சொல்லு அதி” அவனும் அவளுக்குப் பதிலளித்தான்.
“இன்னும் உங்களுக்கு நம்ம காலேஜ் லைஃப்ல நடந்தது ஞாபகம் இருக்கா?”
திடுமென இப்படி கேட்கவும், தன் மனதிலிருந்ததை மறைக்காமல் உரைக்க நினைத்தான் பிரித்வி.
“இல்லையே! நான் எப்பவோ அதை மறந்துட்டேன். அப்பறம் எதுக்கு கல்யாணத்தன்னைக்கு உங்கிட்ட பேசினேன் என்று கேட்கப் போற தான?” என்று அவள் முகத்தைப் பார்த்தான்.
அவன் கேட்டது உண்மை என்பது போல் தான் அவளது பாவனைகளும் இருந்தது.
“ஆமாம்.கல்யாணம் நடந்தப்போ நான் பேசினதும் உண்மை தான், இப்போ எல்லாத்தையும் மறக்கனும், உன் கூட சேர்ந்து நல்ல லைஃப் லீட் பண்ணனும்னு ஆசைப்பட்றேன்”
உருகிய கணவனைப் புரியாமல் பார்த்தாள் பேதை.
“எப்படி இந்த முடிவை எடுத்தீங்க? உங்களுக்கு எல்லாம் மறக்கிற அளவுக்கு ஈஸியாக போச்சா?”
வெடித்துச் சிதறினாள் பெண்ணவள்.
அவளது மனநிலை புரிந்த கணவனோ, நிதானமாகப் பேச முடிவெடுத்தான்.
“ஈஸியாக எல்லாம் இல்லை. நானுமே கஷ்டப்பட்டு தான் மறந்தேன். உண்மையைச் சொல்லப் போனால் இன்னும் முழுதாக மறக்கல அதி”
அவளுக்காக வேண்டுமென்றே அவ்வாறு கூறினான் பிரித்வி.
“ஓஹோ! ஏன் அப்படி கஷ்டப்பட்டு அதை மறக்கனும்? அப்படியே விட வேண்டியது தான?”
ஆங்காரத்தின் உச்சத்தில் இருந்த அதிரூபாவிற்கு, தான் பேசிக் கொண்டு இருக்கும் விஷயத்தை நினைத்துக் கிஞ்சித்தும் கவலை இல்லாமல் போனது.
“என்னால் விட முடியல அதி. உன் ஹஸ்பண்ட் ஆக வாழ விரும்புறேன். கடந்த காலத்தை மனதில் இருந்து அழிக்க நினைக்கிறேன். இது தப்பா?”
குரல் உயர்த்தா விட்டாலும், பதில்களை உடனுக்குடன் மொழிந்தான்.
“எங்க , எப்போ இருந்து வந்துச்சு இந்த ஞானோதயம்?”
விடாப்பிடியாக சண்டை பிடித்தாள்.
“அது வர்றதுக்கு நான் என்னக் கிளாஸ் போகனுமா என்ன? எனக்கே மனசில் தோணுச்சு.” என்று உரைத்தான்.
அதிரூபா, ” இப்போ உங்களுக்குத் தோணுச்சே, அது அப்பறம் கொஞ்ச நாள்ல தப்போ என்று தோணுமே அப்ப என்ன செய்வீங்க?” என்று கிடுக்குப்பிடியாக பிடித்துக் கேட்டாள்.
“அப்பவும் என்னோட விருப்பம் மாறாது அதி” என்று உச்சஸ்தாயியில் கூறினான் பிரித்வி.
“அப்போ காலேஜ் படிக்கும் போது மட்டும் ஏன் மாறுச்சு பிரித்வி?”
அடக்கி வைக்கப்பட்ட அழுகையை தடை போடாமல், வெடித்து அழுதாள் அதிரூபா.
அவளது கண்ணீரைக் கண்ட பிரித்வி, சமாதானம் செய்யும் விதத்தில்,
“எல்லாமே நல்லா தான போய்ட்டு இருக்கு அதி. நீ கூட எனக்கு இப்போ எல்லாம் உதவியாக, உறுதுணையாக இருக்க. இந்த நேரத்தில் ஏன் திடீர்னு இப்படி பேசுற, நடந்துக்கிற?” என்று கேட்டான்.
அவளது மாற்றத்திற்கான காரணம் இன்னதென்று சத்தியமாக பிரித்விக்குப் புரியவில்லை.
“நான் எப்பவும் ஒரே மாதிரி இருக்கனும்னு நினைக்கிறேன் பிரித்வி” என்று கூச்சலிட்டாள் அதிரூபா.
“அதுக்கு நான் என்னப் பண்ணனும் அதைச் சொல்லுப் பண்றேன்?”
கைகளை குறுக்கே கட்டிக் கொண்டு அவளைப் பார்த்துக் கேட்டான் பிரித்வி.
“உங்களை மாதிரியே எனக்கும் நம்மளோட கடந்த காலம் மறந்துப் போகனும். அப்படி ஆகும் வரைக்கும் என்னால் நிலையாக இருக்க முடியாது.என்னோட மனசு நல்லா மாறியதும், உங்களை முழுசா ஏத்துக்கிற அளவுக்குப் பக்குவம் வந்ததும் சொல்றேன்”
என்று திட்டவட்டமாக கூறியவளிடம் எதுவுமே சொல்லாமல் கீழே சென்று விட்டான் பிரித்வி.
இவளுக்கோ, “என்ன எதுவும் சொல்லாமப் போறார்?” என்று வேறு மனதிற்குள் காந்தியது.
தன்வந்த்தால் தலைகீழாக மாறிப் போன குடும்பச் சூழ்நிலை ஒரு காரணம் என்றால், கடந்த கால நினைவுகள் எங்குச் சென்றாலும் அதிரூபாவைத் துரத்தி வருவது இன்னொரு காரணம்.
தத்தமது வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் குடும்பத்திற்கு எந்நேரமும் ஆபத்து ஏற்படுமோ? என்ற நிலையில் மற்ற குடும்ப உறுப்பினர்கள் சற்று கலக்கத்துடன் இருப்பதை அறிந்து கொண்ட பிரித்வி தன் கலக்கத்தை அவர்களுக்குத் தெரியாத வண்ணம் நடமாடிக் கொண்டு இருந்தான்.
இந்த நேரத்தில் அதிரூபாவிற்கு வேண்டாத சிந்தனைகள் ஆட்டி வைக்கப்பட்டு இருப்பது போல தோன்றியது.
அதைத் தான் ஆதங்கம் மற்றும் கோபத்தின் வெளிப்பாடாக கணவனிடம் கொட்டித் தீர்த்து விட்டாள் அதிரூபா.
கீழே வந்த பிரித்வியோ, சோகமே உருவாக இருந்த தங்கையைப் பார்த்தான்.
‘இவளுக்கு என்ன ஆச்சு?’ என்று அவளிடம் போய்,
“ஏன் லயா ஒரு மாதிரி இருக்க?” என்று விசாரித்தான்.
லயா, “அண்ணா! நாம எப்போதாவது இப்படி ஒரு சந்தர்ப்பச் சூழ்நிலையில் மாட்டி இருக்கோமா? எனக்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கு. படிப்பில் கூட மனசு போக மாட்டேங்குது. எப்படியாவது இதைச் சரி பண்ணுங்க” என்று தன் அண்ணனிடம் புலம்பித் தவித்தாள்.
அப்போது தான் பிரித்வி ஒன்றை உணர்ந்தான்.
வீட்டிலிருப்பவர்கள் தனக்காக அவர்களது மனப்புழுக்கத்தை வெளிப்படுத்தாமல் இருந்திருக்கின்றனர். இதற்குப் பிறகு அவர்களாலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
மிகப் பிரபலமான தொழிலதிபராக இருந்தாலும், அழகான குடும்பமாக இருந்தவர்களைக் கூண்டுக்குள் அடைத்து வைக்கும் அளவிற்குத் தன்னை மாற்றிய தன்வந்த்தை இனியும் சும்மா விடப் போவதில்லை என்று முடிவெடுத்தான் பிரித்வி.
அமைதியாக இருந்து இனி பயனில்லை. தனக்கும் ஆள் பலம் உள்ளது, பணம் தேவையை விட இருக்கிறது.
இதற்கு மேல் என்ன? உடனே அவனைத் தீர்த்துக் கட்ட தரமான திட்டம் போட்டு விட்டான்.
அதேபோல், அத்திட்டத்தை நிறைவேற்றி விட்டே அதிரூபாவிடம் பேச வேண்டும். அவளுக்கும் தேவையான நேரம் அளிக்க வேண்டும் என்று நினைத்தான் பிரித்வி.
தன் பிரத்தியேக அடையாள் ஒருவனைத் தனியே ரகசியமாகப் பார்க்கச் சென்றான்.
“வாங்க சார்!” என்று இன்முகம் கொண்டு வரவேற்றான் அந்த அடியாள்.
“ம்ம்.. ஹாய் பாரத்” என்று கூறிய பிரித்வி சாவகாசமாக அமர்ந்தான்.
“பார்த்து ரொம்ப நாளாச்சு சார். என்ன வேலை?” என்று விஷயத்திற்கு வந்தான் பாரத்.
“என்னோட தொழில் எதிரி என்று ஒருத்தன் சுத்திட்டு இருந்தான். நானும் குடும்பத்தைச் சீண்டாம இருக்கான் என்று சும்மா விட்டு வச்சேன். ஆனால் இப்போ அவன் என் குடும்பத்தைச் சீண்ட ஆரம்பிச்சுட்டான். பாதுகாப்பு வைக்குற அளவுக்கு எனக்குத் தொல்லைக் கொடுக்கிறான். அவனைத் தான் தீர்த்துக் கட்டனும்”என்று பிரித்வியுமே வந்த விஷயத்தைத் தாமதம் செய்யாமல் கூறி முடித்தான்.
“விவரத்தைக் கொடுங்கள் சார். சீக்கிரம் முடிச்சுடுவோம்” என்று சாதாரணமாக கூறியவனிடம்,
“வாட்சப்ல அனுப்பி இருக்கேன். ஆனால் முதல்ல என்கிட்ட உயிரோட அவனைக் கொண்டு வா. அப்பறம் போட்டுத் தள்ளலாம்”
“ஓகே சார். ஆளை எப்போ கொண்டு வரனும்?” என்று கேட்டான் பாரத்.
“உடனே வேலையை ஆரம்பி பாரத். நான் இனிமேல் தாமதிக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன்.அடுத்து உன்னை நான் பார்க்க வரும் போது அவன் இங்கே இருக்கனும்” என்று கண்களில் கனல் கக்க கூறினான் பிரித்வி.
“சார் கோபம் வேண்டாம். நான் கண்டிப்பாக அவனைப் பிடிச்சிடறேன். உங்கள் கையால் போட்டுத் தள்ளுங்க” என்று சமாதானப்படுத்தினான்.
“அதுக்காகத் தான் உன்னை வேலையைச் சீக்கிரம் முடிக்கச் சொல்றேன்.பணம் எவ்ளோ வேணும்?”
என்று வினவினான் பிரித்வி.
“உங்ககிட்ட பணமா?” என்று கேட்டான் பாரத்.
பணம் பெறாமல் வேலையைச் செய்து தரும் அளவிற்குப் பிரித்வியின் மீது நம்பிக்கையும், மரியாதையும் வைத்திருந்தான் பாரத்.
“ஆமாம்.கண்டிப்பாக பணம் தருவேன்.உன்னோட டிமாண்ட்?” என்று மீண்டும் கேட்டான்.
“வேலையை முடிச்சுட்டு பணத்தை வாங்கிக்கிறேன் சார்” என்று கூறினான்.
“சரி. நான் அடுத்த தடவை வர்றேன். இப்பே கிளம்பறேன்” என்று அங்கிருந்து வெளியேறினான் பிரித்வி.
முதலாளி சென்றதும், பாரத்திடம்
“அண்ணே! பிரித்வி சார் இவ்ளோ கோபப்பட்டு நாம பார்த்ததே இல்லையே? இந்த மனுஷனையே டென்ஷன் ஆக்கின ஆள் யாரு என்று பார்ப்போம். உங்க வாட்ஸப்பில் வந்திருக்கிற ஃபோட்டாவை காட்டுங்கள்” என்று அவனது வேலையாள் கூறவும்,
பாரத்தும், தனது செல்பேசி புலனத்தில் வந்திருந்த தகவல்களைப் பார்வையிட்டான்.
“பேர் தன்வந்த்” என்றதும்,
“இந்த ஆளா? அண்ணே! இவனும் பெரிய பணக்காரன் தான். அதுவும் இல்லாமல் சரியான முரடன். ஆள் பலம் அதிகம் தான்” என்று தனக்குத் தெரிந்த தகவல்களை அவன் கூறினான்.
“என்ன இருந்தால் என்னடா? பிரித்வி சார் ரொம்ப வருஷம் கழிச்சு நம்ம கிட்ட ஒரு வேலையைக் குடுத்து இருக்கார். கண்டிப்பாக முடிச்சுக் குடுக்கனும். இவனைப் பத்தி நல்லா சல்லடை போட்டு சலிச்சு எடுத்துட்டு வாங்க” என்று தன் ஆட்கள் அனைவருக்கும் அப்புகைப்படத்தையும், விவரங்களையும் அனுப்பி வைத்தான் பாரத்.
அதற்குள் தன்வந்த் மறுபடியும் தன் ஆட்டத்தை ஆரம்பித்திருந்தான். அதிலிருந்து தப்புவதற்குள் நொந்து நூலாகி விட்டான் பிரித்வி.
இதில் பாதிப்படைந்தது அவன் மட்டும் தான், ஆனால் அவனது குடும்பமோ அதீத அதிர்ச்சியின் பிடியில் இருந்தது.
அதிரூபாவோ மனதளவில் ஒடிந்து போய் விட்டாள்.
– தொடரும்…
அப்படி பிரித்விக்கு என்ன நடந்தது என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.