564 views

 

 

இருவரும் அதன்பின் பேசிக்கொள்ளவில்லை. இரவு நேர சாப்பாட்டை மகளுக்கு ஊட்டிக் கொண்டிருந்தான் ரகுவரன். அந்த நேரம் மகிழுக்கு சாப்பாடு கொண்டு வந்தாள் மகிழினி. 

 

மனைவியைப் பார்த்ததும் வெடுக்கென்று அவன் திரும்பிக் கொள்ள, “மானு நாளைக்கு பேரட்ன்ஸ் மீட்டிங் இருக்குன்னு டைரில எழுதி இருக்காங்க, எதுக்குடி சொல்லல.” விசாரித்தாள் மகளிடம்.

 

“மறந்துட்டேன் அம்மா” என்று மான்குட்டி தலையை சொரிய,

 

“இல்லாத கதை எல்லாம் பேசுற இதை எப்படி மறந்த. போன மாசமும் இதையே தான் சொன்ன மானு. ஸ்கூல்ல  சேட்டை பண்ண வேண்டியது அப்புறம் எங்க கிட்ட சொல்லிடுவாங்கன்னு பேரன்ட்ஸ் மீட்டிங்க மறைக்க வேண்டியது.”

 

“எதுக்கு என் மருமகள அதட்டிட்டு இருக்க?” 

 

தன் மகளுக்கு விளையாட்டு காட்ட அங்கு வந்த ஆகாஷ் மருமகள் திட்டு வாங்குவதை பார்த்து கேட்க, “எல்லாம் நீங்க கொடுக்குற செல்லம். ஒவ்வொரு மாசமும் இதையேதான் பண்றா. மிஸ் முன்னாடி போய் நின்னா அவ்ளோ அடுக்கடுக்கா குற்றச்சாட்டு வைக்கிறாங்க இவ மேல.” 

 

“என் மருமக சேட்டை பண்ற பொண்ணு இல்ல. முதல்ல அந்த மிஸ் என்ன பண்றாங்கன்னு தெளிவா விசாரி.”

 

மாமன் சொன்ன வார்த்தைக்கு புன்னகையோடு தலையசைத்த மான்குட்டி, “ஆமா மாமா, மான்குட்டி சமத்து பொண்ணு எந்த சேட்டையும் பண்ணாது. அந்த மிஸ் தான் மான்குட்டிய எப்ப பாரு திட்டிக்கிட்டே இருக்காங்க. நீங்க வேணா என் பிரண்ட் மதி கிட்ட கேட்டு பாருங்க.” என்றவள் வாயில் தோசையை திணித்தான் ரகுவரன்.

 

“நான் எதுக்குடா குட்டிமா கேக்கணும் எனக்கு தான் என் மருமகளை பத்தி தெரியுமே. என் செல்ல குட்டி சமத்து பொண்ணுன்னு.” கன்னம் கிள்ளும் மாமனுக்கு சிரிப்பை பதிலாக கொடுத்தவள்,

 

“என் மாமா மாதிரி நானும் குட் பொண்ணு.” என்று ஐஸ் வைத்தாள் மாமனுக்கு.

 

தந்தை அக்கா மகளை கொஞ்சுவதை பார்த்த மணாலி சிணுங்க, “ஏண்டி செல்லம் இங்க வாங்க அத்தை கிட்ட.” என்று மகிழ்வரனை இறக்கிவிட்டு மணாலியை தூக்கிக்கொண்டாள்.

 

தன்னை இறக்கி விட்ட கடுப்பை காட்டினான் மணாலி தொடையை கிள்ளி. வீறிட்டு அழுதது குழந்தை. மகனை அதட்டிய மகிழினி மருமகளை சமாதானம் செய்ய, அழுகையை நிறுத்துவதாக இல்லை அவள். பிள்ளையின் அழுகை சத்தத்தில் வெளியில் வந்த இனியா,

 

“எப்ப பாரு என் பொண்ண அழ வைக்கிறதே உனக்கு வேலையாடா.” மருமகனை அதட்டினாள்.

 

வழக்கம்போல் அழுகை எனும் ஆயுதத்தை கையில் எடுத்துக் கொண்ட மகிழ்வரன் அக்காவிடம் சேர்ந்து கொள்ள, “அத்தை, தம்பி தெரியாம கிள்ளிட்டான்.” தம்பிக்கு ஆதரவு கரம் நீட்டினாள் மான்குட்டி.

 

தாய் சமாதானம் செய்த பின்னும் மணாலி வலி பொறுக்காமல் அழுது கொண்டே இருக்க, பாட்டிகள் இருவரும் வந்துவிட்டார்கள். பிள்ளையை வாங்கி ஒரு வழியாக சமாதானம் படுத்தியவர்கள் பேரப்பிள்ளைகள் மூவருக்கும் ஊட்ட ஆரம்பித்தார்கள். மான்குட்டி மட்டும் தந்தையிடம் மட்டுமே சாப்பிடுவேன் என்று அடம் பிடிக்க, அனைவரும் செல்லமாக கடிந்து கொண்டார்கள் அவ்விருவரையும் பார்த்து. 

 

இவ்வளவு கலாட்டாக்கள் நடந்து கொண்டிருக்க ரகுவரன் முகம் கடுகடுவென்று தான் இருந்தது. அதை கவனித்த வீட்டின் உறுப்பினர்கள் மகிழினியை பார்க்க, அவளும் இவனை போல் தான் முகத்தை வைத்திருந்தாள்.

 

 

இருவருக்குள்ளும் சண்டை என்று முடிவு செய்தார்கள் பேச்சை மாற்றினார்கள் இனன்யாவிடம். “இந்த ஆதவ் பையன் இல்லாம வீடு ஒரு மாதிரி இருக்கு.” சாந்தி.

 

“ஆமாம்மா, அவனும் மகிழும் எப்ப பாரு ஒன்னா விளையாடிட்டு இருப்பாங்க. இப்ப அவன் இல்லாம இவன் தனியா இருக்கான்.” இனியா.

 

“எப்ப வராங்களாம்? ஏதாச்சும் சொன்னானா சதீஷ்.”

 

“இனன்யா தங்கச்சிக்கு குழந்தை பிறந்து இருக்குறதால வர இன்னும் ஒரு வாரம் ஆகும்னு சொன்னான்.” ஆகாஷ்.

 

 

“பிள்ளை கண்ணு மேலேயே இருக்குப்பா‌. பார்த்து நாலு நாள் ஆகப்போகுது.” பேரப்பிள்ளையை நினைத்து ஏக்கம் கொண்டார் லட்சுமி.

 

 

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் நேரம் மகிழ்வரன் அடித்தொண்டை கீற கத்தினான். அனைவரின் பார்வையும் அவனிடம் செல்ல, மணாலி முடியை பிடித்து சுழற்றிக் கொண்டிருந்தான் மகிழ். இனியா தன் பிள்ளையை காப்பாற்றிக் கொள்ள போராட, விடுவதாக இல்லை மருமகன். 

 

 

வயதின் மூத்தவர்கள் இருவரும் பேரனை சமாதானம் செய்து கொண்டிருக்க, மணாலியை இனியா, ஆகாஷ் இருவரும் பிடித்துக் கொண்டனர். மகிழினி தன் மகனை அதட்டிக் கொண்டிருக்க, கேட்பதாக இல்லை அவன். தம்பியின் செய்கையை கண்டு பயந்த மான்குட்டி, 

 

 

“தம்பி பாப்பா…. குட்டி பாப்பாவ அந்த மாதிரி பண்ணக்கூடாது முடியை விடு.” என்று பக்குவமாக எடுத்துச் சொல்ல, “அக்கா இவ என் கைய கடிச்சுட்டா.” கடித்த கையை அக்காவிடம் காட்டி புகார் கொடுத்தான்.

 

வந்ததும் தன்னை தாக்கிய மகிழ்வரனை நேரம் பார்த்து அனைவரும் அசந்த நேரம் கடித்துவிட்டாள் மணாலி. தன் போக்கில் விளையாடிக் கொண்டிருந்தவன் மாமன் மகளின் இரண்டு பல் ஆழமாக தாக்கியதில் வலி பொறுக்காமல் முடியை பிடித்து விட்டான். 

 

 

வீட்டில் இருக்கும் அனைவரும் ரகுவரனின் இளம் ரத்தத்தை அடக்க பெரும் பாடுபட்டுக் கொண்டிருக்க, யாருக்கும் அடங்கவில்லை வாண்டு. இவையெல்லாம் செவியில் விழுந்தாலும் ரகுவரன் கண்டும் காணாமலும் இருக்க, மான்குட்டி நடுவில் சிக்கிக்கொண்டது.

 

மகளின் தவிப்பை பார்த்தவன் கோபத்தோடு, “அவ கைய விடுடா. அம்மா மாதிரியே திமிர் தனமா இருக்காத. ஓவர் செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்கா உன்ன.” என்று முதுகில் ஐவிரல் பதிய அடி ஒன்றை வைத்தான்.

 

தந்தை அடித்ததும் மணாலியின் முடியை விட்டவன் பலமாக அழுக, மகனை தூக்கி வைத்துக் கொண்ட மகிழினி, “இப்ப எதுக்கு என் மேல இருக்க கோபத்தை இவன் கிட்ட காட்டிட்டு இருக்க. அப்படி என்ன நான் திமிர் தனமா நடந்துக்கிட்டேன். உன் காலயே சுத்தி வந்துட்டு இருந்தா நான் நல்ல பொண்டாட்டி. இது தப்பு, நல்லதுன்னு சொல்லிட்டா திமிர் பிடிச்சவளா? இன்னொரு தடவை இவனை அடிக்கிற வேல வச்சிக்காத.” முழுதாக தன் கோபத்தை காட்டி முடிப்பதற்குள்,

 

“நீ எதுக்குடி என் கால சுத்த போற… அதெல்லாம் புருஷனுக்கு அடங்கி நடக்குறவங்க பண்ற வேலை. நீதான் திமிர் எடுத்து இல்லாத வேலை எல்லாம் பண்ணிட்டு இருக்கியே உன்கிட்ட இதை நான் எதிர்பார்க்க முடியுமா.” சத்தமிட்டான் கோபத்தோடு ரகுவரன்.

 

 

“திரும்பத் திரும்ப திமிரு எடுத்து பண்றன்னு சொல்லாத ரகு. என் தைரியம் உனக்கு திமிரா தெரிஞ்சா அது உன்னோட தப்பு.”

 

“கூட கூட பேசாதன்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான்டி சொன்னேன் உன்கிட்ட.”

 

“இதைத்தான் சொல்ற உன் கால சுத்தி கிடக்கணும்னு நினைக்கிறன்னு.”

 

“நம்ம வாழ்க்கைக்கு ஒத்து வராதுன்னு ஒன்ன பண்ண வேணாம்னு சொல்றேன்… இது என் கால சுத்தறதா?”

 

“உன்கிட்ட பேசி பிரயோஜனம் இல்லை. மனுஷனா இருந்தா சொல்றதை கொஞ்சமாது புரிஞ்சிப்பான்.” என்றவள் பிள்ளையை தூக்கிக்கொண்டு நகர, படிக்கட்டில் சென்று கொண்டிருக்கும் மனைவியை வழி மறைத்தவன்,

 

“நான் மனுஷன் இல்லாம வேற யாருடி.” வம்பு இழுத்தான்.

 

“விடு ரகு, அப்புறம் பேசிக்கலாம் எல்லாரும் இருக்காங்க.”

 

“அவங்க எல்லாரையும் வச்சுக்கிட்டு நீ என்னை மனுஷனே இல்லைன்னு சொல்லுவ, நான் அமைதியா விடணுமா.”

 

 

“ப்ச்! உன் கூட சண்டை போடுற அளவுக்கு எனக்கு நேரமில்லை தள்ளு.” என்று அவனை நகர்த்தி விட்டு படியேற முயன்றாள்.

 

ஏற விடாமல் ரகுவரன் தடுத்துக் கொண்டிருக்க, இருவருக்கும் நடுவில் மகிழ்வரன் மாட்டிக்கொண்டான். தாய் தந்தை இருபுறமும் இருந்து நசுக்க, அவஸ்தை உண்டாகி லேசாக அழ ஆரம்பித்தான். மகனின் அழுகையைக் கண்டு ஆத்திரம் கொண்ட மகிழினி வேகமாக தள்ளிவிட்டாள் ரகுவரனை.

 

 

எதையும் பிடிக்காமல் நின்றிருந்தவன் மனைவியின் திடீர் தாக்குதலால் தவறி படிக்கட்டில் விழ, கால் முட்டி இடித்துக் கொண்டது சுவற்றில். லேசான முணங்களோடு அவன் படியில் அமர, அவன் வலியை கண்டுகொண்ட மகிழினி, “ரகு” என்று இடித்த இடத்தில் கை வைத்தாள்.

 

உடனே அதைத் தட்டி விட்டவன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள, “வலிக்குதா ரகு” மீண்டும் அடிபட்ட இடத்தில் கை வைத்து தடவினாள்.

 

“தொடாதடி” என்று தட்டியவன் வலியை பொறுத்துக் கொண்டு படியேற, வருத்தத்தோடு அவனுக்கு பின்னால் சென்றாள் மகிழினி. 

 

“இந்தப் பிரச்சனைக்கு தான் ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டீங்களா.” என்ற கேள்வியில் கடந்த காலத்தை சொல்லிக் கொண்டிருந்த ரகுவரன் திரும்பி முறைத்தான் காவலாளிகள் இருவரையும்.

 

“நீங்க எப்பப்பா இங்க வந்தீங்க” காவலாளிகளை பார்த்து அழகுசுந்தரம் கேட்க,

 

“இல்ல சார் உங்க கால்ல விழுறன்னு இந்த தம்பி வந்து ரொம்ப நேரம் ஆச்சு. அதான் என்ன ஏதுன்னு பார்க்க வந்தோம். வந்தா நீங்க இவர் கிட்ட அடி வாங்கிட்டு இருக்கீங்க. நடுவுல தடுக்க வந்து எங்களையும் போட்டு அடிச்சிட்டா அதனால தான் வேடிக்கை பார்க்கலாம்னு ஒதுங்கி இருந்தோம்.” என்று பல்லை காட்டினார்கள்.

 

“அப்போ இவ்ளோ நேரம் என் மருமகன் சொல்லிட்டு இருந்த கதைய ஒட்டு கேட்டுட்டு இருந்தீங்களா?” என்ற அழகுசுந்தரத்தை பார்த்து மீண்டும் பல் இளித்தவர்கள்,

 

“ஆமா சார், சார் சொல்லிட்டு இருந்த கதை ரொம்ப ஆர்வமா போயிட்டு இருந்துச்சு. முடிவு என்னன்னு தெரிஞ்சிக்கிற அளவுக்கு பொறுமை இல்லை… அதான் கேட்டுட்டோம்.” என்றிட, அவ்விருவரையும் வெறிக்கொண்டு முறைத்தான் ரகுவரன்.

 

 

ஏற்கனவே அடி வாங்கிய அழகுசுந்தரம் அவன் பார்வையில் வாயை மூடிக்கொள்ள, அடித்ததைப் பார்த்த காவலாளிகள் இருவரும் அவனைக் கண்டு இப்போது பயந்தார்கள். 

 

 

“ஒருத்தன் எவ்ளோ வருத்தத்தோட கடந்த காலத்தை சொல்லிட்டு இருக்கான் உங்க மூணு பேருக்கும் கதை கேட்கிற மாதிரி இருக்கா? ” என்று பல்லை நரநரவென்று கடித்தவன் எதுவும் பேசாமல் நகர்ந்தான்.

 

காவலாளிகள் பதமாக அழகுசுந்தரத்தை பார்க்க, “எதுக்குப்பா இப்படி பண்றீங்க.” என்ற வசனத்தோடு ரகுவரனுக்கு பின்னால் சென்றார்.

 

“மருமகனே இதுக்கெல்லாம் கோபப்படக்கூடாது. ஏதோ வயசானவங்க சின்னஞ்சிறுசுங்க கதைய கேட்குறதுல கொஞ்சம் ஆர்வம் ஆகிட்டாங்க.” என்றவர் பேச்சு நின்றது திரும்ப நின்று ரகுவரன் முறைத்ததால்.

 

 

அழகுசுந்தரத்தின் முகபாவனை பார்த்து காவலாளிகள் இருவரும் சிரிக்க, அவர்களையும் அக்னி பார்வை பார்த்தான். 

 

“சார் கோபப்படாதீங்க, இந்த பிரச்சனைக்கெல்லாம் உங்க பொண்டாட்டிய இவ்ளோ தூரம் போக விட்டது தப்பு. இப்ப கூட ஒன்னும் கெட்டுப் போகல மீதி கதைய சொல்லுங்க நாங்க மூணு பேரும் ஐடியா கொடுத்து உங்களை சேர்த்து வைக்கிறோம்.” என்றதில் தன் விதியை நொந்து கொண்டான் ரகுவரன்.

 

 

அடுக்குமாடி கட்டிடத்திற்குள் செல்ல இவர்களின் உதவி தேவைப்படுவதால் கோபத்தை காட்டாமல், “இந்த மாதிரி சண்டைக்கு எல்லாம் பிரிஞ்சு போற அளவுக்கு எங்க காதல் இல்ல. இதைவிட பெரிய சண்டைய கூட அசால்டா கடந்து வந்திருக்கோம்.” என்றான்.

 

“அப்போ மேல போயிட்டு திரும்பவும் நீங்க சண்டை போடலையா.” என்று கதை கேட்கும் மூவரையும் பார்த்து சிரித்தவன்,

 

“சண்டை போட்டோம். ஆனா, காதல் சண்டை.” என்று புன்னகைத்தான் அன்றைய நினைவை கண் முன் கொண்டு வந்து.

 

***

 

 

தன்னறைக்கு வந்த ரகுவரன் வலியை மறைத்துக் கொண்டு படுத்தான். அவனுக்கு பின்னால் வந்த அவனின் மனைவி, “தைலம் தேய்ச்சி விடுவா ரகு” என்றாள் மிக மெல்லிய குரலில்.

 

 

பதில் கொடுக்காமல் தன் போக்கில் படுத்துக் கொண்டிருந்தான். மகனை இறக்கி விட்டவள் அவன் அருகில் அமர்ந்துக் கொண்டு, “வலியோட படுத்துட்டு இருக்காத ரகு. இருக்க கோபத்தை என்கிட்ட காட்டு.” என்று அடிபட்ட இடத்தில் கை வைத்தாள்.

 

 

சுவற்றில் ஆழமாக முட்டியதால் கை வைத்ததும் உடனே வலி உண்டானது. அந்த வலி கோபமாக மாறி மனைவியிடம் தாவியது. “இந்த மாதிரி நான் வலியோட துடிக்கணும்னு தான தள்ளி விட்ட… பார்த்து சந்தோஷப்படு.” என்று.

 

“வேணும்னே உன்னை பிடிச்சு தள்ளி விடல.”

 

“தள்ளி விட்டாலும் தப்பு இல்ல. ஏன்னா நான் தான் மனுஷனே இல்லையே. எனக்கு என்ன உணர்வு இருக்க போகுது.”

 

“எல்லாத்தையும் பிடிச்சு வச்சிட்டு சண்டை போடாத ரகு.”

 

“நான் அப்படித்தான் சைக்கோ. உன்ன என் காலு கீழ வச்சிருக்கணும்னு நினைக்கிற பெரிய சைக்கோ. உனக்கு என்ன தோணுதோ அதை செய். இனிமே நான் உன் விஷயத்துல தலையிட மாட்டேன்.”

 

பெருமூச்சு விட்ட மகிழினி இரு நொடி அமைதியாக இருந்து விட்டு, தைலத்தை எடுத்து வந்தாள் தேய்த்து விட. முழு அளவு கால் சட்டை அணிந்திருந்ததால் முட்டி வரை ஏற்றி விட முயன்றாள். இடம் கொடுக்காமல் அடம் பிடித்துக் கொண்டிருந்தான் ரகுவரன். தான் சொன்னால் கேட்க மாட்டான் என்ற முடிவோடு தங்கள் இல்லத்தை விட்டு வெளியேறியவள் மகளை அழைத்துக் கொண்டு வர, கண்ட காட்சி சிரிப்பை கொடுத்தது அன்னை மகள் இருவருக்கும்.

 

எதிரிகள் இருவரும் பச்சைக்கொடி காட்டிக் கொண்டு காட்சியளித்தார்கள். தந்தைக்கு அடிபட்டதை பார்த்த மகிழ்வரன் தொடர்ந்து இருவருக்குள்ளும் நடக்கும் சில்மிஷங்களையும் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் உணர்வில் தந்தைக்கு தைலம் தேய்த்து விட வேண்டும் என்ற எண்ணம் உதிர்க்க, அன்னை அங்கிருந்து நகர்ந்ததும் முட்டி அருகில் அமர்ந்தவன் ஆடைக்கு மேல் லேசாக பிடித்து விட்டான்.

 

மனைவி, மகள் கைகளை உணர்ந்தவன் மகனின் சிறு கையை உணர்ந்து விழி திறந்தான். தந்தையை கவனிக்காத மகிழ்வரன் கால் சட்டையை தன்னால் முடிந்தவரை மேலே உயர்த்த முயற்சித்தான். தன் ரத்தத்தின் பாசத்தைக் கண்டு உள்ளுக்குள் சிரித்தவன் ஆடையை முட்டி வரை ஏற்றிக்கொண்டு எதுவும் நடக்காது போல் படுத்துக் கொண்டான். 

 

சிறுசின் கைகள் தைலத்தைத் திறக்க சிரமப்பட்டது. மூக்கை சுருக்கி கொண்டு கைகளால் திறக்க முயற்சித்தவன் முடியாமல் போக வாயை உபயோகிக்க தொடங்கினான். அவனுக்கு தைலம் அடங்கிப் போகாமல் மெத்தையில் உருள, ஓடும் தைலத்தை முறைத்துக் கொண்டிருக்கும் மகனின் செய்கையை பார்த்து பற்கள் தெரிய சிரித்தான் ரகுவரன். 

 

ஒரு வழியாக விரட்டிப் பிடித்த மகிழ்வரன் இந்த முறையும் திறக்க சிரமப்பட, எதுவும் பேசாமல் மகனிடம் கை நீட்டினான்.  தந்தையை பார்த்தவன் அவனைப் போல் எதுவும் காட்டிக் கொள்ளாமல் எங்கோ முகத்தை வைத்துக்கொண்டு தைலத்தை அவன் கையில் வைத்தான். 

 

“இவன் அலும்பு தாங்கல.” என்று தனக்குள் புலம்பி கொண்டவன் தைலத்தை திறந்து கொடுத்தான்.

 

கொடுக்கும்பொழுது திரும்பிய முகம் வாங்கும் பொழுதும் அதே நிலையில் இருந்தது. சிரித்த தந்தையின் முகம் பிள்ளையின் தோரணையில் முறைக்க, கண்டு கொள்ளாத இளையவன் தைலம் தேய்த்து விடும் வேளையில் இறங்கினான். 

 

“அம்மா, தம்பி பாப்பா அப்பா மேல எவ்ளோ பாசமா இருக்கான் பாருங்க.” கண்ட காட்சியில் மான்குட்டி தம்பியை பெருமை பேச, “ரெண்டு பேரும் நம்மளை ஏமாத்துறாங்க மான்குட்டி.” களவாணித்தனத்தை கண்டுபிடித்த பெருமையில் பேசினாள் மகிழினி.

 

மனைவியின் பேச்சு சத்தத்தில் பார்வை அவளிடம் செல்ல, முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு, “மானு உங்க அப்பாக்கு அடிபட்டுடுச்சு தைலம் தேச்சு விடு.” என்றாள்.

 

அன்னைக்கு தலையாட்டிய மான்குட்டி தம்பியிடமிருந்து தைலத்தை வாங்கிக்கொண்டு, “அப்பா உங்களுக்கு எப்படி அடிபட்டுச்சு.” என்று விசாரித்துக் கொண்டே தைலத்தை தேய்த்து விட்டாள்.

 

மகளின் பிஞ்சு கைகள் வேலை செய்வதை பொறுத்துக் கொள்ள முடியாத ரகுவரன், “தங்கம் அப்பாக்கு அப்படி ஒன்னும் அடிப்படலடா. நீங்க கஷ்டப்பட்டு தைலம் தேய்க்க வேணாம், விடுங்க.” என்று தைலத்தை வாங்கிக் கொண்டான்.

 

“மான்குட்டி உங்கள மாதிரி ரொம்ப ஸ்ட்ராங். தைலம் தேச்சா இந்த விரலுக்கு ஒன்னும் ஆகாது.” என்று ஐவிரல்களை தந்தையிடம் காட்டினாள்‌.

 

ஐவிரல் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு முத்தத்தை பரிசளித்தவன், “என் தங்கம் ரொம்ப ஸ்ட்ராங் தான். ஆனா, அப்பாக்கு நீங்க கஷ்டப்பட்டா பிடிக்காதே‌” என்று தன்னோடு சேர்த்துக் கொள்ள, “மான்குட்டிக்கு அப்பா கஷ்டப்பட்டா பிடிக்காது.” கன்னத்தில் இதழ் பதித்தாள்.

 

உடனே புன்னகைத்தவன் கன்னத்தில் கன்னக்குழி ஆழமாக உருவாக, “அப்பா கன்னக்குழி.” என்று குதித்த குட்டி பெண் மீண்டும் அங்கே முத்தம் பதித்தாள்.

 

பிள்ளையின் ஆனந்தத்தில் இருந்த அனைத்து கோபத்தையும் மறந்தவன் அவளோடு ஐக்கியமாக, “அப்பா உங்கள மாதிரி தம்பி பாப்பாக்கும் கன்னத்துல குழி இருக்கு எனக்கு ஏன் இல்லை?” அடிக்கடி கேட்கும் கேள்வியில் திடுக்கிட்டவன் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் முழித்தான்.

 

அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த மகிழினி வேகமாக, “தம்பி அப்பா மாதிரி பையன் அதனால கன்னத்துல குழி வருது. நீ அம்மா மாதிரி பொண்ணு அதனால உனக்கு குழி வராது.” என்று அந்தப் பேச்சை முடிவுக்கு கொண்டு வர முயன்றாள்.

 

“என் கூட படிக்கிற ஒரு பொண்ணுக்கு இதே மாதிரி கன்னத்துல குழி விழும் அம்மா. நான் கேட்டதுக்கு எங்க அப்பா மாதிரி எனக்கும் வருதுன்னு சொல்லுச்சு. அப்போ அப்பா மாதிரி எனக்கு ஏன் வரல.” அடுத்த கேள்வியை அவள் எதார்த்தமாக கேட்க, ரகுவரனின் முகம் மாறியது.

 

தந்தைக்கு முகம் வேர்த்துக் கொட்ட, அதை கவனித்த மகிழினி அவன் அருகில் அமர்ந்துக் கொண்டு மகள் அறியாது கைகளைப் பிடித்துக் கொண்டாள். பதட்டம் குறையாத ரகுவரன் மனைவியின் கையை துணைக்கு பிடித்துக் கொள்ள, “எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்காது மானு. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு மாதிரி முக அமைப்பு இருக்கும். நீ அம்மா மாதிரி இருக்க அதனால உனக்கு கன்னத்துல குழி இல்ல. ஒருவேளை நீ வளர வளர உனக்கு வரலாம்.” என்று புன்னகைக்க, ஒன்றும் புரியவில்லை என்றாலும் அமைதி காத்தாள் மான்விழி.

 

 

பேச்சை மாற்ற எண்ணிய தம்பதிகள் பிள்ளைகள் இருவரையும் வைத்து விளையாட ஆரம்பித்தார்கள். விளையாட்டுகளுக்கு நடுவில் கணவன் மனைவி இருவரும் உரசிக்கொள்ள, பிள்ளைகள் அறியாது முறைத்துக் கொண்டார்கள்.  மகிழ்வரன் சும்மா இல்லாமல் மெத்தையில் எகிறி குதித்து விளையாடிக் கொண்டிருக்க, எதர்ச்சியாக அடிபட்ட முட்டியில் விழுந்துவிட்டான்.

 

 

தந்தையின் முணங்கள் வார்த்தையை கேட்ட மான்விழி, “வலிக்குதா‌ அப்பா.” என்று அந்த இடத்தை ஊதி விட, மகளுக்காக அமைதி காத்தான்.

 

“சாரி அப்பா” வருத்தத்தில் முகம் சுருக்கும் மகனை மடியில் வைத்தவன், “ஒன்னும் இல்லடா” என முத்தமிட்டு சிரிக்க வைத்தான்.

 

“தைலம் தேய்ச்சி விடவா ப்பா.”

 

“என்னடா அப்பா மேல பாசம்”

 

பதில் சொல்லாமல் இளையவன் முறைக்க, “தம்பி பாப்பாக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் ப்பா.” தம்பிக்காக வாதம் வைத்தாள் சின்னவள். 

 

தந்தை அறியாத தன் உயிரா…! என்னவோ மகனிடம் அன்பை கொட்டுவதற்கு பதில் அடிதடியை நடத்தவே அதிகம் விரும்புகிறது மனம். அவனும் அதற்கு தோதாக மல்லுக்கட்டவே ஆர்வம் காட்ட, இருவருக்குள்ளும் நடக்கும் யுத்தம் இருவருக்குமே புரியும்.

 

 

 

கண் அயர்ந்து தூங்கும் வரை தந்தையின் காலை பிடித்துக் கொண்டே இருந்தாள். ரகுவரன் எவ்வளவு தடுத்தும் கேட்கவில்லை மான்குட்டி. ஒரு கட்டத்தில் தூக்கத்தில் சொக்கி விழ, “தங்கம்” என்று தன் மார்போடு சாய்த்துக் கொண்டான்.

 

“அப்பா வலி போயிடுச்சா.” முணங்கி கொண்டே ஆழ்ந்த நித்திரைக்கு செல்லும் மகளின் அன்பில் உள்ள நெகிழ்ந்தவன், “போயிடுச்சி தங்கம்” என்று இதழ் பதித்து தூங்க வைக்க ஆரம்பித்தான்.

 

மான்குட்டி தூங்க ஆரம்பித்ததும் அவளின் தம்பியும் தூக்கத்தை துணைக்கு அழைக்க, ஆண் பிள்ளையை அன்னையும் பெண் பிள்ளையை தந்தையும் தட்டிக் கொடுத்து தூங்க வைத்தார்கள். என்றும் சுவர் ஒட்டி மகிழ்வரன் அவனுக்கு பக்கத்தில் மான்குட்டி, மகள் பக்கத்தில் ரகுவரன் அவனுக்கு பக்கத்தில் மனைவி என்று தான் உறங்குவார்கள். 

 

இன்று சண்டை போட்டுக் கொண்டதால் பிள்ளைகளை நடுவில் படுக்க வைத்துக் கொண்டு உறங்க முயற்சித்தார்கள். இருவருக்கும் தூக்கம் வரவில்லை ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கிக் கொண்டதால். முதலில் கோபப்பட்டதால் இறங்கி வந்தான் ரகுவரன். 

 

தூக்கத்தில் கை போடுவது போல் மனைவி மீது கை போட, வேகமாக தட்டி விட்டாள். தலையை தூக்கி முறைத்தவன் சற்று நேரம் எதையும் செய்யாமல் அமைதியாக படுத்தான். ஒருமுறை முயற்சித்து விட்டு கண்டு கொள்ளாமல் தூங்கும் கணவனின் மீது ஆத்திரம் பிறந்தது மகிழினிக்கு. 

 

எப்படி அவனின் கவனத்தை தன் மேல் திருப்புவது என்று யோசித்தவள்  எழுந்து விளக்கை போட்டாள். ஒரு விழியை மட்டும் திறந்து பார்த்தவன் கோபத்தோடு, “இப்ப எதுக்கு கீழே படுக்க போற.” என்றிட,

 

“உனக்கு என்ன வந்துச்சு உன் வேலைய பாரு.” சிடுசிடுத்து விட்டு கீழே போர்வையை விரித்தாள்.

 

“சீன் போடாம மேலயே படு.”

 

“உன் வேலைய பாருன்னு சொல்லிட்டேன். இவ்ளோ நேரம் கண்டுக்காம இருந்துட்டு இப்ப மட்டும் எதுக்கு பேசுற.” என்றவள் படுத்துக்கொண்டாள்.

 

 

“ஓவரா பண்றடி” என்றதும் எழுந்த அமர்ந்தவள், “ஓவரா பண்றது நீயா நானாடா? எப்பவும் பசங்க ரெண்டு பேரும் உனக்கு பக்கத்துல தான படுப்பாங்க இன்னைக்கு எதுக்கு நடுவுல படுக்க வச்ச. உன்கிட்ட வந்துருவன்னு தான இந்த மாதிரி பண்ண. அதான் உனக்கு எதுக்கு கஷ்டம்னு கீழ படுத்துட்டேன். உன் கற்புக்கு ஒன்னும் ஆகாது நிம்மதியா தூங்கு.” என்று விட்டு மீண்டும் படுத்துக் கொண்டாள்.

 

 

“நீயும் தான இவ்ளோ நேரம் படுத்துட்டு இருந்தா.”

 

…..

 

“ஏய்! தரையில படுக்காத ரொம்ப குளிரா இருக்கு. குளிரெல்லாம் உனக்கு ஒத்துக்காது சொன்னா கேளு. அப்புறம் நாளைக்கு உடம்பு முடியாம படுத்துட்டா நான் தான் பார்க்கணும்.”

 

“அந்தக் கவலை எல்லாம் உனக்கு வேணாம். நீ உன் பசங்களோட நிம்மதியா தூங்கு.” என்றவள் வீம்பு பிடித்துக் கொண்டிருந்தாள் தன்னை தூக்கும் ரகுவரனிடம்.

 

“விடுடா… ரொம்ப அக்கறை இருக்கிற மாதிரி நடிக்காத. எத்தனை தடவை உனக்கு சொல்றது சண்டை வந்தாலும் எப்பயும் போல தான் படுக்கணும்னு. நீ நினைச்சா வருவ நினச்சா போவ நான் என்னை உன்னோட அடிமையா.” என்றவள் வார்த்தைக்கு எதிராக மெத்தையில் படுக்க வைத்தவன்,

 

“நான் தங்கத்தை ஃபர்ஸ்ட் அங்க தான் படுக்க வச்சேன். நீதான் உன் மகனை படுக்க வைக்காம இங்க படுக்க வச்ச. அதனால தான் என் பொண்ண திரும்பவும் இங்க இடம் மாத்தி விட்டேன். பண்றதெல்லாம் பண்ணிட்டு என் மேல பழி சொல்ற.”

 

“வேணும்னே பண்றன்னு தெரிஞ்சு தான இவ்ளோ நேரம் அமைதியா இருந்த, இப்ப என்ன?”

 

“உன் மேல அக்கரை பட்டெல்லாம் சொல்லல. உனக்கு குளிர் ஒத்துக்காது. உடம்பு முடியாம போயிடுச்சுன்னா என் பசங்க ரெண்டு பேரையும் யார் பார்க்குறது”

 

“சரி கீழ படுக்கல போ.” என்றவள் மெத்தையின் ஓரத்தில் படுத்துக்கொண்டு புலம்பினாள்.

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
20
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்