Loading

மறுவீட்டிற்காக அவசரமாக அதியூருக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் சத்யரூபா. எப்பொழுதும் ஐந்து மணிக்கே விழிப்பு தட்டிவிடும். இன்றோ, எழும்போதே மணி 7 ஐ தாண்டி இருந்தது.

“நல்ல நேரத்திலேயே ஊருக்கு போகணும்ன்னு சொன்னாங்களே அத்தை…” எனப் பதறியபடி கிளம்பியவளுக்கு, இந்திரஜித்தை எழுப்புவது தான் பெரிய சவாலாக இருந்தது.

“இந்தர் எந்திரிங்க. லேட் ஆகுது. கிளம்பனும்.” என சத்தம் போட்டு எழுப்ப, அவனோ தலையணையால் காதைப் பொத்திக் கொண்டு உறக்கத்தைத் தொடர்ந்தான்.

“இந்தர்…” என பல்லைக்கடித்தவள், “யோவ்… எந்திரியா.” என்றாள் பொறுமை இழந்து.

கண்ணைக் கசக்கியபடி எழுந்து அமர்ந்தவன், “ஏன்டி காலங்காத்தால உன் சவுண்டு சிஸ்டத்தை ஆன் பண்ணி விடுற.” என முறைக்க,

“நல்ல நேரம் முடியிறதுக்குள்ள ஊருக்கு போகணும்ன்னு அத்தை சொன்னாங்க. நீங்க என்னன்னா, இப்படி தூங்கிட்டு இருக்கீங்க.” எனக் கடுப்படிக்க,

“போற வழியில பஸ் பிரேக் டவுன் ஆகி நின்னுட்டா, மறுவீட்டுக்கு போக லேட் ஆகுமே. அப்போ, பாதில திரும்பி இங்க வந்துடுவியா? எங்க அம்மா தான், எதையாவது உளறுறாங்கன்னா, இவளும் வந்துட்டா ஆமா சாமி போட.” எனக் கடுகடுத்தான்.

“கிளம்பும்போதே ஏன் அபசகுனமா பேசுறீங்க? மணி இப்பவே எட்டுக்கு மேல ஆகிடுச்சு. நான் வெள்ளனயே கிளம்பி வரேன்னு அம்மாகிட்ட சொல்லி இருந்தேன்.” எகிறியபடி ஆரம்பித்தவள், முணுமுணுப்புடன் முடித்தாள்.

“இது பாய்ண்ட். அத்தைக்காக கிளம்புறேன்.” என்றவன், பத்து நிமிடத்திலேயே கிளம்பி வந்தான்.

வந்தவனோ, புருவ மத்தியில் முடிச்சுடன் ஏதோ யோசித்துக் கொண்டிருந்த சத்யரூபாவைப் பார்த்து, “கிளம்பலாமா ரூப்ஸ்?” எனக் கேட்க,

அரை மனதுடன் தலையாட்டினாள்.

“என்னாச்சு. இவ்ளோ நேரம் தைய்ய தக்கான்னு குதிச்ச. இப்போ வாய்க்கு பிளாஸ்டர் போட்டுட்ட” எனக் கேலியுடன் வினவியதில்,

“ஒண்ணும் இல்ல. கிளம்பலாம்.” என அவனைப் பாராமல் கூறியவள், விருட்டென வெளியில் சென்று விட்டாள்.

அவன் குளிக்க செல்கையில் தாமரை தான் அழைத்திருந்தார்.

“நாங்க வர்றதுக்கு சாயந்தரம் ஆகிடும் போல மா. எங்களுக்காக எதுவும் செஞ்சுட்டு இருக்காதீங்க. எந்த வேலையா இருந்தாலும் நான் வந்து பாத்துக்குறேன்.” என்று சத்யா தாயிடம் கூற,

அவரோ, “சரி சத்யா. பார்த்து வாங்க. ஆனந்திகிட்ட மறுவீட்டுக்கு அனுப்ப சொல்லி கேட்டேன். எல்லாம் முறையாவா நடந்துச்சு. ரிசப்ஷன் வைக்கிற வரை, எந்த முறையும் பண்ண வேணாம்ன்னு சொல்லிட்டா சத்யா. எனக்கு என்னமோ மனசே சரி இல்ல.

எழில் வேற, அவளை இங்க விட்டுட்டு தஞ்சாவூர் போய்டுச்சாம்.” எனக் கவலையுடன் கூறினார்.

சத்யாவிற்கும் சுருக்கென தான் இருந்தது. தன் மீதுள்ள கோபத்தில், அவளைத் திருமணமும் செய்து ஒதுக்கியும் வைத்துள்ளானோ? என ஐயம் கொண்டவளுக்கு, எழிலழகன் மீது ஆத்திரமாக வந்தது.

வைஷாலி மீதும் கோபம் கடலளவு இருந்தாலும், ஆனந்தியின் பேச்சுக்கள் கண்டிப்பாய் அவளைக் காயப்படுத்தும் என்றெண்ணி, வருந்தவும் செய்தது.

பின் அவளே, “எழில் மாமாவுக்கு போன் பண்ணி, கூப்பிட்டு பாருங்க மா.” என்றவள்,

“அக்காவுக்கு போட வேண்டிய நகையையும், அவளுக்குன்னு வாங்கி வச்சுருந்த சீர் ஜாமானையும் குடுத்து விட்டுறலாம். எப்படியும் அத்தைக்கு அதுல எல்லாம் மனசு நிறையாது. இந்த தடவை விளைச்சல்ல வர்ற பணத்துல இன்னும் கொஞ்சம் நகை வாங்கி குடுத்துடலாம். இல்லன்னா, அவளால அங்க ஒரு மாசம் கூட ஓட்ட முடியாது. எப்படியும் அவளை வேலைக்கும் அனுப்ப மாட்டாங்க. அவளும் மண்டையை ஆட்டிருப்பா.” என்றவளுக்கு ஆயாசமாக இருந்தது.

அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையையும், நல்ல குடும்பத்தையும் கொடுக்க வேண்டும் என்று தானே, கடந்த வருடங்களாய், அலைந்து திரிந்து மாப்பிள்ளை பார்த்தாள். இறுதியில் கண் முன்னாடியே அவள் வருந்துவதை பார்க்க வைக்கிறாளே… என எண்ணும் போதே கண்ணைக் கரித்தது.

அதனை அடக்கிக்கொள்ளும் போதே, தாமரை, “என்ன பேசுற சத்யா? அப்போ உனக்கு எதை போடுறது. உனக்குன்னு இனிமே தான் நகை சேர்க்கணும்ன்னு இருந்தோம். இருந்த பணமும் கல்யாண செலவுக்கே போய்டுச்சு.” என்றவருக்கு செய்முறையை சரியாக செய்ய வேண்டுமே என்ற பதற்றம் இருந்தது.

“திடுதிப்புன்னு கல்யாணம் பண்ணி வச்சா, இப்படி தான் அனுபவிக்கணும்மா. இந்தர் தான் பிடிவாதமா இருந்தாருன்னா, நீங்களும் எதையும் யோசிக்காம அவனுக்கு ஒத்து ஊத்துனீங்கள்ல. இதை எல்லாம் அப்போ யோசிக்க மாட்டீங்களா?” எனக் கண்டித்தவள்,

“நான் அத்தைகிட்ட டைம் கேட்குறேன். திடீர்ன்னு எதுவும் பண்ண முடியாதுல.” என்றவளிடம் பேசி விட்டு, போனை வைத்த தாமரை, சில நிமிடங்களில் மீண்டும் அழைத்தார்.

“சத்யா, எழில் இன்னைக்கு ஊருக்கு வந்துட்டு வைஷுவையும் மறுவீட்டுக்கு கூட்டிட்டு வரேன்னு சொல்லுச்சு. முதல்ல இன்னைக்கு தான் வேலைக்கு வந்தேன்னு தயங்குச்சு. நீ வர்றன்னு சொன்னதும், உடனே சரின்னு சொல்லிடுச்சு.” என குரலில் மகிழ்ச்சி பொங்க கூறிட, சத்யாவிற்கு சங்கடமாக இருந்தது.

மேலும் தாமரை, “அது மட்டும் இல்ல சத்யா. நகை, பணம்ன்னு எதுவும் வேணாம்ன்னு சொல்லுச்சு எழிலு.” என்றிட,

“ம்மா. மாமா அப்படி தான் சொல்லும். அதுக்காக நம்ம செய்ய வேண்டியதை செய்யாம இருந்தா நல்லா இருக்காது. அவளுக்கு செய்ய வேண்டியதை செஞ்சுடுங்க” என்று முடிவாய் கூறி விட்டு போனை வைத்தவளுக்கு, எழில் வருகிறான் என்றதும், ஊருக்கு செல்லும் உற்சாகம் முற்றிலுமாக வடிந்து விட்டது.

பின், பானுரேகாவின் முன் சென்று நின்றவள், நிலவரத்தைக் கூற, அவரோ கண்ணை சுருக்கி முறைத்தார்.

“கொஞ்சம் டைம் குடுங்க அத்தை.” எனக் கேட்டவளை, அவர் உஷ்ணமாய் பார்த்து வைக்க, அந்நேரம் இந்திரஜித்தும் அங்கு வந்து விட்டான்.

“என்னம்மா, என் பொண்டாட்டியை காலைலயே சூடா லுக்கு விட்டுட்டு இருக்கீங்க.” என்றவன், அவர் ஏதோ கோபத்தில் இருப்பது தெரிந்ததும்,

“விடுங்க மா, ஏதோ சின்னஞ்சிறுசுங்க, காலைல லேட்டா வந்துட்டோம் அதுக்காக காபி குடுக்காம இன்னைக்கு சதி பண்ணிடாதீங்க.” என்றான் நக்கலாக.

தாமதமாக வந்ததற்காக தான் அன்னை கோபமாக இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தவனிடம்,

“ஒழுங்கு மரியாதையா உன் பொண்டாட்டியை கூட்டிட்டு கிளம்பிடு. காலைலயே டென்சன் பண்ணிக்கிட்டு. எனக்கு கார்மெண்ட்ஸ்ல வேலை இருக்கு. உன் அண்ணன் எல்லாத்தையும் அப்படியே போட்டுட்டு போய்ட்டான். அந்த பரந்த மனசுக்காரரை வந்து வேலையவாவது பார்க்க சொல்லு.” என்று குத்தியவர், கிளம்பும் போதும் சத்யாவை அனலாக பார்த்து விட்டே சென்றார்.

நேரம் செல்வதை உணர்ந்து, அவளை அழைத்துக்கொண்டு பேருந்து நிலையம் சென்றவன், அவளுடன் பயணத்தைத் தொடர்ந்தான்.

பானுரேகா காரில் செல்ல சொன்னதில், அவன் தான் மறுத்து விட்டான். அவனுக்கு லாங் கார் டிரைவிங் எல்லாம் செட் ஆகாது. பயணம் என்றாலே, ஆசுவாசமாக இயற்கையை ரசித்தபடி செல்ல வேண்டும். ஓட்டுனரை அழைத்துச் செல்லும் படிக் கூறியும், அவன் காதில் வாங்கவில்லை.

பேருந்து கிளம்பியதும் தான், “ஏய் ரூப்ஸ். என் அம்மாவை நான் கூட இவ்ளோ கோபப்படுத்தி பார்த்தது இல்ல. என்ன சொன்ன அவங்ககிட்ட? உன் மேல கொலை காண்டுல இருந்தாங்க…” புருவம் சுருக்கி இந்திரஜித் கேட்டதில், அவள் தயக்கத்துடன் விரல்களை பின்னிக் கொண்டாள்.

பின், அவரிடம் கேட்டதை கணவனிடமும் கேட்க, தற்போது அனல் பறக்கும் பார்வை அவனிடம் இருந்து வந்தது.

அவளோ, அவனை நிமிர்ந்து பாராமல், “அத்தை நான் டைம் கேட்டதுல கோச்சுக்கிட்டாங்களோ. எப்பவும், நான் ஏதாவது மறுத்து பேசுனா, உன் இஷ்டம்ன்னாது சொல்லுவாங்க. இப்போ எதுவுமே சொல்லல.” என்றவளுக்கு, அவர் எதனால் கோபப்பட்டார் என்றே புரியவில்லை.

இந்திரஜித் தான், “லாங் டிராவல் ஆச்சே. கொஞ்சம் நல்ல மைண்ட் செட்ல போகலாம்ன்னு உன்னை கூட்டிட்டு வந்தேன்ல என்னை சொல்லணும். இப்போ யாரு உங்கிட்ட இதெல்லாம் கேட்டா. எனக்கு ஒண்ணும் கையும் காலும் முடம் இல்ல சத்யா. நல்லாவே வேலை செய்யும்.  உங்கிட்ட வரதட்சணை வாங்கி தான், பொழைக்கணும்ன்னு எனக்கு அவசியம் இல்ல. நான் உன்னை கல்யாணம் தான் பண்ணிருக்கேன். உங்கிட்ட நகையும் பணமும் வாங்கி, என்னை வித்துக்கல.” அடிக்குரலில் அழுத்தமாய் கர்ஜித்தவனைத் திகிலாய் பார்த்தாள் சத்யரூபா.

“இது முறை தான… அதான்… நாளைக்கு யாராச்சு ஏதாச்சு பேசுனா…” ஏனோ அவனது கோப முகம் கண்டு அவளுக்கு வார்த்தையே வரவில்லை.

திக்கி திணறி, இதனைக் கூறியவளிடம், “அப்படி யாராவது ஏதாவது பேசுனா, என்கிட்ட கூட்டிட்டு வா. நான் உட்காந்து எல்லாருக்கும் விளக்கம் குடுத்துட்டு இருக்கேன்.” என எரிச்சலுற்றவன், “நம்ம வாழ்க்கையை மத்தவங்களுக்காக வாழ முடியாது சத்யா.” என்றான் கோபம் தணியாமல்.

“அதில்ல இந்தர்… அத்தையும் மாமாவும் ஒத்துக்கணும்ல…” அவள் தயங்கியதில், “அவங்களுக்கும் கை கால் நல்லா தான் இருக்கு.” என்றான் சீறலாக.

‘ப்ச்… காலைல இருந்து அபசகுனமாவே பேசுறீங்க இந்தர். உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லைன்னாலும், சும்மா கட்டிக்குடுத்தா, அம்மா மேல தான் தப்பு வரும். அதான்…” என மேலும் பேசியதில், அவன் விருட்டென எழுந்து, நான்கு இருக்கைகளுக்கு பின்னால் காலியாக இருந்த ஒரு இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான்.

“இந்தர் இங்க வாங்க…’ சுற்றி முற்றி இருந்த பயணிகளை பார்த்து விட்டு, அவள் மெல்லமாய் அழைக்க, அவனோ கையைக் கட்டிக்கொண்டு ஜன்னல் வழியே முகத்தை திருப்பினான். மறந்தும் அவள் இருக்கும் திசையை பார்க்கவில்லை.

அவன் அருகில் சென்று அமரலாம் என்றால், அதற்குள் வேறொருவர் அங்கு வந்து அமர்ந்ததில், அவளுக்கும் செய்வதறியாத நிலை.

தவிப்புடன் அவனை திரும்பிப் பார்ப்பதும், விரல்களை கடிப்பதுமாக இருந்தவளின் அருகிலும் வேறொரு பெண்மணி வந்து அமர எத்தனிக்க,

அப்போதும் “இந்தர்…” என அழைத்துப் பார்த்தாள். அவன் திரும்பி முறைத்ததோடு மீண்டும் ஜன்னலில் விழிகளை பரப்பிட, அவள் தன்னை நொந்து, அப்பெண்மணிக்கு இடம் கொடுத்தாள்.

ஒரே பேருந்தில் தனி தனியாக பயணம் செய்தாலும், அவனது பார்வை அவ்வப்பொழுது அவள் இருக்கையை தழுவிக் கொண்டது. மதிய உணவிற்காக பேருந்து நின்ற போது தான், அவளையும் மீறி கண்ணயர்ந்து விட்டாள்.

யாரோ தோளை தொட்டதை உணர்ந்ததும் தான், படக்கென விழித்தவள், அருகில் இந்திரஜித் அமர்ந்திருப்பதைக் கண்டாள்.

“வா. சாப்ட்டு வரலாம். இதுக்கு அப்பறம் பஸ் நிக்காது.” என அழைக்க, இவன் எப்ப பக்கத்துல வந்தான் என்ற குழப்பத்துடனே அவனுடன் சென்றாள்.

“நீங்க உள்ள போங்க. நான் பாத்ரூம் போயிட்டு வரேன்.” என்றதும், அவனும் ஹோட்டலின் உள்ளே சென்றான்.

அவள் அடிக்கடி சென்னைக்கு பயணம் செய்வதால், பேருந்தும் நிறுத்தும் இடமெல்லாம் தெரியும் தான். ஆனால், அவன் தான், அடுத்த முறை காரில் தான் வரவேண்டும் எனக் குறித்துக் கொண்டான்.

கழிவறையும் சுத்தமாக இராமல், உணவு அருந்தும் இடமும் ஏனோ தானோவென்று தான் இருந்தது.

கண்ணெதிரே, பானுரேகா ‘இதுக்கு தான் சொன்னேன். கார்ல போ ன்னு’ என்று முறைப்பது போல இருக்க, மெதுவாய் புன்னகைத்துக் கொண்டவன், ‘ஈஈ… சாரி மம்மி.’ என்று மானசீகமாக தாயிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கும் போதே, சத்யரூபாவும் வந்து விட்டாள்.

“என்ன சாப்புடுற ரூப்ஸ். இங்க என்ன நல்லா இருக்கும்ன்னு தெரியல…” என மெனு கார்டை பார்வையிட, அவளோ அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவனது முகத்தில் கோபத்தின் சாயல் துளி கூட இல்லை.

“இங்க தயிர் சாதத்தை தவிர வேற எதுவுமே நல்லா இருக்காது இந்தர்.” சத்யரூபா கூறியதும், அவனும் அதையே ஆர்டர் செய்தான்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, “நீங்க எப்போ என் பக்கத்துல வந்து உட்காந்தீங்க?” எனக் கேட்க,

“நீ தூங்கி வழியவும், உன் பக்கத்துல இருந்தவங்களை மாறி உட்கார சொல்லிட்டு, அப்பவே வந்துட்டேன்.” என்றான்.

“ஓ… நீங்க கோபமா இருந்தீங்க…” என்றவளுக்கு, தனியாக விட்டு சென்றதில் சிறு கோபம் எட்டிப்பார்த்தது.

“என் கோபம் எல்லாம் கொஞ்ச நேரத்துக்கு தான் ரூப்ஸ். அதுக்கு அப்பறம் சுட்டுப்போட்டாலும், திரும்ப வராது… சில நேரம் எதுனால கோபப்பட்டேன்றதையே மறந்துடுவேன்.” என உதட்டைப் பிதுக்கிட,

“ஏன் அம்னீசியாவா?” சத்யரூபா வாரினாள்.

அதற்கு மென்புன்னகை சிந்தியவன், “மனுஷங்களுக்கு நெகட்டிவ்வான விஷயத்துல அப்போ அப்போ அம்னீசியா வர்றது நல்லது ரூப்ஸ். மனசுல குப்பை சேராம இருக்கும்.” என்றவனை நிதானமாக ஏறிட்டாள்.

எதையும் தீவிரமாக எடுத்துக்கொள்ளும் பழக்கம் அவனுக்கு சுத்தமாக கிடையாது என்று இந்த சில நாட்களுக்குள்ளேயே அறிந்து கொண்டாள். ஆனால், அவனிடம் இருந்து வெளிவரும் அபரிமிதமான பக்குவம் அவளை வியக்க வைத்தது.

இருந்தும், பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவளுக்கு, ‘அப்படி அம்னீசியா வந்தா தான் நல்லா இருக்குமே! தேவையானதை ஞாபகம் வச்சுட்டு தேவையில்லாத குப்பையை மத்தவங்களும் மறந்துடுவாங்க… நானும் மறந்துடுவேன்.’ என்ற எண்ணம் தோன்றி, எழிலழகனை நினைவுபடுத்தியது.

மிகவும் அன்பானவன். சிறு வயதில் இருந்தே, தந்தைக்கு நிகராக பாசம் காட்டியவன். அவளுக்கொன்றென்றால், துடித்துக்கொண்டு வருவான்.

பள்ளி படிக்கும் காலம் வரை, அவளை பத்திரமாக பள்ளியில் விடுவதும் அழைத்து வருவதுமே அவனது வாடிக்கை. அப்போது தான், வங்கி தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தான்.

அவனை ஊக்குவித்து, படிக்க வைத்த பெருமை சத்யரூபாவையே சாரும். அதே போல, பன்னிரெண்டாம் வகுப்பில் அவளை நல்ல மதிப்பெண்கள் எடுக்க வைத்ததும் அவன் தான்.

காதல் என்னும் பேய் உறவுக்குள் புகுந்து, அனைத்தையும் சின்னா பின்னம் ஆக்கிவிட்டதில், நெஞ்சில் ஒரு வேதனை சுளீரென தைத்தது.

“இன்னும் எவ்ளோ நேரம் தயிர் சாதத்தையே வெறிச்சு பார்த்துட்டு இருக்க போற ரூப்ஸ்.” என்ற இந்திரஜித்தின் குரலில் தான் நிகழ்விற்கு வந்தவள், அவனை நிமிர்ந்து பாராமல், உண்டு விட்டு பேருந்தில் ஏறினாள்.

ஆனால், அவள் பார்க்காத நேரமெல்லாம், அவளை அவன் விழிகள் வண்டாய் சுற்றி வந்தது. கடந்த காலத்தினுள்ளேயே புதைந்து போன சத்யரூபாவிற்கு மன்னவனின் அலைபாய்தல் புரியும் நாளும் என்றோ!

அலைபாயும்…
மேகா!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
23
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்