அத்தியாயம் 89
மைத்ரேயனையும் ஷைலேந்தரியையும் கண்டு விழி விரித்த அஸ்வினி, “நீ ஆசைப்பட்ட மாதிரியே கல்யாணம் நடந்துடுச்சா மைத்ரா…” என மகிழ்ந்தார்.
“பரதேசி, லவ் பண்ற பொண்ணுட்ட சொல்லுடான்னா, இந்த பயந்தாங்குளிட்ட சொல்லிருக்கான்” விஸ்வயுகா கேவலமாக திட்டியதில் ஷைலேந்தரி வாய்விட்டுச் சிரித்து இன்னும் கணவனின் கோபத்திற்கு ஆளானாள்.
“ஆண்ட்டி என்னை மறந்துட்டீங்க பார்த்தீங்களா?” குறிஞ்சி இடுப்பில் கை வைத்து முறைக்க,
“இல்லமா மறக்கல. உன்னை எப்படி மறக்க முடியும்” என அவளையும் அணைத்துக் கொண்டார்.
அறைக் கதவில் சாய்ந்து ஒரு ஓரமாக நின்றிருந்த யுக்தாவைத் தேடியது அவரது விழிகள். அனைவரையும் தாண்டி அவனைப் பார்த்து விட்டவருக்கு விழிகளில் தானாக அருவியூற்று உருவானது.
“யுகி…” கையை நீட்டி நடுங்கிய குரலில் தனது மகனாக வளர்க்கப்பட்டவனை அழைக்க, பொங்கிய கேவலை அடக்கியபடி அவரிடம் ஓடி வந்த யுக்தா, அவர் கையைப் பற்றிக்கொண்டு நெற்றியில் வைத்தான். மௌனமான விழிநீர் அவர் கையை நனைக்க, அவருக்கும் அழுகை பொங்கியது.
அவருக்கு ஏற்பட்ட தீங்கு எதுவும் இப்போதைக்கு முழுதாய் நினைவில் இல்லை. எத்தனை வருடங்கள் கடந்தோடி இருக்கிறது என்ற தெளிவும் இல்லை. ஆனால், அனைவரையும் தவிக்க விட்டு இருப்பது மட்டும் புரிந்தது.
“எல்லாரையும் ரொம்ப பதற வச்சுட்டேனோ? எவ்ளோ நாள் ஆகுது எனக்கு அடிபட்டு. எப்படி அடிபட்டுச்சு?” எனக் கேட்டதும் அனைவரிடமும் கடும் அமைதி.
விஸ்வயுகா, “ஒரு ஆக்சிடெண்ட் சித்தி. வேற ஒன்னும் இல்ல” என்று அப்போதைக்கு சமாளிக்க, அவருக்கும் எதுவும் யோசிக்கத் தோன்றவில்லை.
சில நிமிடங்களில் அவருக்கும் உடல் சோர்வானது. “நீ ரெஸ்ட் எடுமா” என்று மனையாளை படுக்கையில் படுக்க வைத்த சௌந்தர், பெருமூச்சுடன் அவரையே பார்த்திருந்தார்.
புயலடித்து ஓய்ந்தது போலொரு நிலை.
இந்நிலையில் தான், சைன்டிஸ்ட் பாஜியின் உதவியாளராக இருந்தவரைப் பற்றிய தகவல் கிட்டியது.
உடனடியாக யுக்தா பாஜியின் சோதனைக் கூடத்திற்கு விரைந்தான்.
அங்கு, பாஜியின் உதவியாளராக இருந்த சந்திரனைப் பிடித்தாகிற்று. வயது நாற்பதுக்குள் தான்.
யுக்தா தனது ஐடியைக் காட்டியதும் அவர் முகத்தில் இலேசான மிரட்சி தெரிந்தது. “சார் நான் எந்த தப்பும் பண்ணலையே. என்ன ஆச்சு?” எனப் பதறியவரிடம், நீங்க தப்பு பண்ணுனீங்கன்னு நான் சொல்லவே இல்லையே” என்றான் மிடுக்காக.
எச்சிலை விழுங்கிய சந்திரன் “சொல்லுங்க சார்” என்றதும்,
“மெலடி தட் கில்ஸ் ஸ்லோலி… இந்த புக் பத்தி சொல்லுங்களேன்” என்றான் பொதுவாக.
“இந்த புக்கா?” அவரிடம் சிறு அதிர்ச்சி.
“ம்ம் இதை யார் பப்ளிஷ் பண்ணுனது?” யுக்தா கூர்மையுடன் வினவ,
“இதை யாருமே பப்ளிஷ் பண்ணலைங்க சார். ஒரு நோட்டுல குறிப்பா எழுதி வச்சுருந்தாரு பாஜி சார். ஸ்லோ பாய்சன் பத்தின ஆராய்ச்சியை முழுசா முடிக்கிறதுக்குள்ள கொரோனா வந்து இறந்துட்டாரு…” என்றார்.
“ஆனா புக்ல முழுசா முடிச்சு இருந்துச்சே?”
“வாய்ப்பில்லை சார். எனக்குத் தெரியாம இது நடந்து இருக்காதே. நான் தான அவரோட ரிசர்ச் சம்பந்தப்பட்ட புக்ஸ்க்கு ப்ரூஃப் பார்த்து ரெண்டு மூணு மொழிகள்ல ட்ரான்ஸ்லேட் பண்ணுவேன்.” என்று உறுதியாகக் கூறினார்.
“அப்பறம் எப்படி உங்க அவேர் இல்லாம அந்த புக் சென்னைல இருக்குற அண்ணா லைப்ரரில இருந்துருக்கும்?” கண்ணைச் சுருக்கி யுக்தா கேட்டதில் சந்திரன் திடுக்கிட்டார்.
“எனக்கும் ஒன்னும் புரியல சார்” எனக் குழம்பியவர், “சார் அவரு அந்த புக்க எழுத ஸ்டார்ட் பண்ணப்ப, எனக்கும் கொரோனா வந்துருச்சு. அதனால நான் லீவ்ல போய்ட்டேன். அந்த மாதிரி நான் லீவ்ல போற நேரத்தில நம்பிக்கைக்கு உகுந்த ஆளா, கொஞ்ச நாள் பக்கத்துல வச்சுருப்பாரு. ஒருவேளை அந்த நேரத்துல எழுதி இருக்கலாம். ஆனாலும் எனக்குத் தெரியாம புக்கா வந்துருக்காது சார்” என்றார் உறுதியாக.
“யார் அந்த டைம்ல அவருக்கு ஹெல்ப்பா இருந்தது?” யுக்தாவின் புத்தி பல விதத்தில் யோசித்தது.
“சார் எனக்கு ரொம்ப சுவாசப்பிரச்சனை இருந்துச்சு. பத்து நாளா நான் இடத்தை விட்டே எந்திரிக்கல. பத்து நாள் கழிச்சு தான் சார்கிட்ட பேசுனேன். அவருக்கு அப்ப தான் கொரோனா சிம்ப்டம் இருக்குனு சொன்னாரு. கூட ஹெல்ப்புக்கு ஆள் இருக்கு. நீ உடம்பை பார்த்துக்கோன்னு சொன்னாரு. அந்த நேரத்துல வீட்டு வேலை செய்ற ஆள் கூட வரலையே சார். வாட்ச்மேன் கூட இல்லையாம். ஆனா, கூட ஒரு ஆள் எல்லாமே பாத்துக்குறதா சொன்னாரு. அதுக்கு அடுத்து ஒரு வாரத்துலயே இறந்துட்டாருன்னு தான் தகவல் வந்துச்சு” என்றார் வருத்தமாக.
“பொதுவா அவர் ஒரு புக் ரெடி பண்ண எவ்ளோ நாள் ஆகும்?”
“அவர் வேண்டிய தகவலை எல்லாம் கலெக்ட் பண்ணிட்டு பீல்டு ஒர்க் முடிச்சுட்டு அப்பறம் தான் தீசிஸ் ஸ்டார்ட் பண்ணுவாரு. அதை ஒரு புத்தகமா கன்வெர்ட் பண்ணி மேலிடத்துக்கு அனுப்புவார். சில புக்ஸை 10 நாள்ல கூட எழுதி முடிச்சு இருக்காரு சார்.” என்றதும் அனைத்தையும் கவனமாகக் கேட்டுக்கொண்டான்.
“இந்த லேப்ல சிசிடிவி கேமரா ஒர்க் ஆகுமா?” யுக்தா கேட்டதும், “ஒர்க் ஆகும் சார். ஆனா கொரோனா டைம்ல அவர் லேப்க்கே வரல. வீட்ல தான் இருந்தாரு. அங்க அவர் சிசிடிவி வச்சுக்கல சார். வாட்ச்மேன் இருக்காரு, வேலைக்கு ஆள் இருக்கு இதுக்கு மேல எதுக்கு கேமரான்னு சொல்லுவாரு. பொதுவா மனுஷங்கள டக்குனு நம்பிடுவாரு. குடும்பம்னு எதுவும் இல்ல” என்று தனது முதலாளியைப் பற்றிக் கூற, “ம்ம்” எனக் கேட்டுக்கொண்டான் யோசனையுடன்.
“அவருக்கு ஹெல்ப்பா இருக்கணும்ன்னா என்ன படிச்சு இருக்கணும் சந்திரன்?”
“அவர் எழுதுற புத்தங்களுக்கு மொழி அறிவு இருக்கணும், ஃபீல்டை பத்தி கொஞ்சமாவது தெரிஞ்சு இருக்கணும்னு நினைப்பார் சார். நான் சைன்ஸ் க்ரூப் எடுத்து படிச்சேன். அண்ட் தமிழோட சேர்ந்து நாலு மொழி தெரியும். அததான் என்னை வேலைக்கு எடுக்கும் போது தகுதியா நினைச்சு எடுத்தாரு. பதினஞ்சு வருஷமா அவருக்கு வேலை பார்த்தேன் சார். அவரோட இழப்பு எனக்கு தான் பெரிய அடி” என்று வருந்த,
சிந்தனையுடனே அங்கிருந்து கிளம்பினான்.
மீண்டும் மருத்துவமனைக்கு வந்து விட்டவனிடம் விஸ்வயுகா விசாரித்தாள்.
“கொரோனா டைம்ல தான அபர்ணா கனடால இருந்து வந்தது” என விஸ்வயுகாவிடம் கேட்க,
“ம்ம் செகண்ட் வேவ் அப்போ… என்ன ஆச்சுடா?” என்றாள்.
“அப்போ பாஜி கூட டெம்ப்ரவரி அசிஸ்டன்ட்டா இருந்தவனுக்கு அபர்ணாவை எப்படியோ தெரிஞ்சுருக்கணும். அவன் தான் ஸ்லோ பாய்சன் பத்தி உன்னைப் படிக்க வச்சிருக்கணும். க்ரைம்ல இன்வால்வ் பண்ணிருக்கணும். அண்ட் சோ, இப்போ நடக்குற பொண்ணுங்க கொலைகளுக்கும் காரணமா இருக்கணும். ஆனா மோட்டிவ். வாட் இஸ் தி க்ளியர் மோட்டிவ். அது மட்டும் கிடைக்க மாட்டேங்குதே.” என்று நெற்றியை நீவினான்.
அனைவருமே அஸ்வினியை தொந்தரவு செய்யாமல் இருக்க, தோட்டத்திற்கு வந்து விட்டனர். சௌந்தரும் மனையாளின் முகத்தைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தார்.
குறிஞ்சி தான், “எல்லா பக்கமும் ஏதோ க்ளூ கிடைக்கிற மாறி இருக்கு. ஆனா கானல் நீராவே போகுது” என நொந்தாள்.
மைத்ரேயன், “அந்த ஐபி அட்ரஸ் மட்டுமே ஆன் ஆச்சுன்னா, யாரு விஸ்வூவோட டிவைஸ ஹேக் பண்ணுனாங்கன்னு தெரிஞ்சுரும். அதுக்கான அலெர்ட் என் போனுக்கு வர்ற மாதிரி தான் வச்சுருக்கேன். ஆனா அதுக்கு உயிர் வர்ற மாதிரி தெரியல” என்றதும்,
நந்தேஷ், “மீதி இருக்குற ரெண்டு பேரை கண்டுபிடிச்சாச்சா யுக்தா” எனக் கேட்டான்.
“ஒர்க் ஆன் ப்ராசஸ்” என யுக்தா கூறும் முன்னே, விஸ்வயுகா, “பரத் ரைட்?” என ஏளனமாகக் கேட்க, யுக்தா முறைத்து வைத்தான்.
“எனக்குத் தெரியக்கூடாதுன்னு எதையும் நீ மறைக்க முடியாது…” யுக்தாவை நோக்கி தீப்பார்வை வீச, “பைத்தியக்காரி… உன் டீம் வச்சு இதை செய்யாதேன்னு படிச்சு படிச்சு சொன்னேன்ல. உங்கிட்ட ஸ்கெட்ச் பிக்சரை காட்டுனது என் தப்பு. உன் மூலமா ரியல் கில்லர் அவனைக் கண்டுபிடிச்சு கொன்னுட்டா, அப்பறம் எதையுமே கண்டுபிடிக்க முடியாது” என்று கடிந்து கொண்டான்.
“உண்மையை சொல்ற வரை அவன் உயிரோட தான் இருப்பான்” விஸ்வயுகா அழுத்திக் கூற, யுக்தா கோபத்தில் உறுத்து விழித்தான்.
அவனுக்கு மட்டும் என்ன பரத்தை கொலை செய்ய ஆசையில்லையா? அதிலும் யார் யாரையோ சுட்டு வீழ்த்தியவனுக்கு தன்னுயிரானவளின் காயத்திற்கு காரணமானவனை விட்டு வைக்க மனம் வந்திடுமா? சூழ்நிலைக்காகத் தானே இத்தனை பொறுமை காட்டுகிறான்.
அந்நேரம், சிவகாமியும் மோகனும் அஸ்வினி உயிருடன் இருப்பது தெரிந்து நேரிலேயே பார்க்க வந்து விட்டனர்.
அவர்கள் வருவார்கள் என்று யுக்தாவும் விஸ்வயுகாவும் கணித்தது தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, அப்போது தான் சோர்வாய் கண்விழித்த அஸ்வினி, சிவகாமியைக் கண்டு அதிர்ந்தார்.
சௌந்தரும் அவரை எதிர்பாராது திகைத்திட, “என்ன சௌந்தர், உன் பொண்டாட்டி உயிரோட இருக்குறது பத்தி உன் அண்ணா அண்ணிகிட்ட சொல்லணும்னு தெரியாதா? ஏன் நாங்க சந்தோஷப்பட மாட்டோமா?” என்றார் குத்தலாக.
“சந்தோஷப்படுறது தான உங்க வேலையே” யுக்தாவும் குத்தலாக மொழிந்தான்.
அவனைத் தீயாக முறைத்த சிவகாமி, “இவள் உன் அத்தைன்னு நேத்து தான் கண்டுபிடிச்சேன். தெரிஞ்சுருந்தா அப்பவே உன்னை அழிச்சுருப்பேன். பரவாயில்ல. இப்பவும் ஒன்னும் குறைஞ்சு போய்டலயே” என்றதில் அஸ்வினியின் முகம் பயத்தில் வெளிறியது.
“ம்மா குரைக்கிற நாய் கடிக்காது. நீங்க டென்சன் ஆகாதீங்க” என யுக்தா அஸ்வினியை சமன்படுத்த, “கடிக்குமா கடிக்காதான்னு உன் அம்மா கம் அத்தைக்கு நல்லாவே தெரியும்… இல்ல அஸ்வினி.” என எகத்தாளமாகக் கேட்டவர், தனது மகனையும் மகளையும் பார்த்து, “லுக்… நீங்க என்கூட கிளம்பி வர்ற வரை நானும் இங்க தான் இருப்பேன். ஒவ்வொருத்தரும் சாகுறதை வேடிக்கை பாருங்க… அப்பவும் உங்களுக்கு அறிவு வரலைன்னா நீங்களும் இவங்களோடவே சாவுங்க…” என்றவர் ஷைலேந்தரியையும் சேர்த்தே முறைத்து விட்டுப் போக, மோகனும் அவரைப் பின்தொடர்ந்தார்.
“இந்த அம்மா வேற நேரா வந்து காமெடி பண்ணிட்டு இருக்கு…” எனக் குறிஞ்சி கடியானாள்.
அந்த தோட்டத்திற்கு ஒட்டிய மற்றொரு அறை தோட்டத்தில் ஒரு வயதான கிழவர் அமர்ந்திருந்தார். அவருக்கு பழைய பாடல்கள் தான் இஷ்டமாம். அவருக்கும் மூளை நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்க, பழைய நினைவுகளை இழந்து விட்டாராம். அதை மீட்க, பழைய பாடல்களை அருமருந்தாக உபயோகித்துக் கொண்டிருந்தனர்.
இப்போது அப்படி ஒரு பாடல் தான் ஒலித்தது.
எங்கே நிம்மதி நிம்மதி என்று
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல
யாராரோ வந்தாங்க
என்னென்னவோ சொன்னாங்க
என்ன சொல்லி என்னத்த பண்ண
நிம்மதி இல்லே மனுசனுக்கு நிம்மதி இல்லே
“ஸ்ஸோ…” இளையவர்கள் ஆறு பேரும் தலையில் கை வைத்தனர்.
“நீங்கல்லாம் கிளம்பி போய்டுங்க” அஸ்வினிக்கு சிறிது சிறிதாக தனக்கு நேர்ந்த அசம்பாவிதமும் நினைவு வரத் துவங்கியது. கூடவே பயமும்.
“என்னடா இன்னும் சொல்லலயேன்னு பார்த்தேன். சொல்லியாச்சா…” நந்தேஷ் முறைக்க, அஸ்வினியின் முகம் வாடிப்போனது.
உடல்நிலை சரியில்லாதவரை கடிய மனமின்றி அவருக்கு ஓய்வு கொடுத்து மற்றவர்கள் வெளியேறினர்.
அத்தியாயம் 90
மூன்று நாட்கள் கடந்த நிலையில், பரத்தின் வரவிற்காக காத்திருக்க, குறிஞ்சி அவசரமாக யுக்தாவிடம் வந்தாள்.
“யுக்தா… அந்த பரத் திடீர்னு பிளைட் ஏறிட்டான். ஈவ்னிங் அஞ்சு மணிக்குள்ள டெல்லிக்கு ரீச் ஆகிடுவான். சம்திங் ராங்” என்றதில்,
“நினைச்சேன். ஏர்போர்ட்ல இருந்து நம்ம பிக் அப் பண்ணலைன்னா, கொலைகாரன் பிக்கப் பண்ணிடுவான். லெட்ஸ் கோ” என்றவன், சௌந்தரிடம் அஸ்வினியைப் பார்த்துக்கொள்ள சொல்லி விட்டு வெளியில் வர, மற்றவர்களும் அவன் பின்னே வந்தனர்.
“ஏன் அவன் பிளானை சேஞ்ச் பண்ணுனான்” எனக் கேட்டபடி யுக்தா காரில் ஏறி விட்டுத் திரும்பி பின்னால் அமர்ந்திருந்த விஸ்வயுகாவை முறைக்க, “ஹே சத்தியமா நான் எதுவுமே செய்யல. நானும் அவன் வரணும்னு தான் வெய்ட் பண்றேன்” என்றாள் முறைப்பாக.
“ம்ம்… நம்ம பிளான் தெரிஞ்ச யாரோ தான், நம்மளை கொலாப்ஸ் பண்றதுக்கு அவனை முன்னவே வர வச்சு இருக்கணும்” யுக்தா யோசனையுடன் கூற,
நந்தேஷ் “யார் அந்த யாரோ?” எனக் குழம்ப, ஸ்டியரிங்கில் விரலைத் தட்டியவன், “மைத்ரா… யுகாவோட டிவைஸை ஹேக் பண்ணுன அந்த ஐடி ஆன் ஆச்சா?” எனக் கேட்டான்.
“இல்லை யுக்தா. எனக்கு அலெர்ட் வந்துருக்குமே” மைத்ரேயன் கூறியதும்,
“நீ ஒன்ஸ் செக் பண்ணு” என உத்தரவிட்டான்.
ஷைலேந்தரி உடனடியாக தனது ஷோல்டர் பேகில் ரெடியாக வைத்திருந்த மடிக்கணினியை உயிர்ப்பித்தாள்.
இருவரும் ஒரு மடிக்கணியினுள் தலையைப் புதைக்க, அவள் தலை மீது இடிபடுவது தெரிந்து மைத்ரேயன் மெல்ல நகர்ந்து கொண்டான்.
ஏழு பேர் அமரும் கார் என்றாலும் அவனை ஒட்டியே அமர்ந்திருந்தாள் ஷைலேந்தரி.
‘ரொம்பத்தான்…’ என சிலுப்பிக்கொண்டவள், “ஹே மைதா… இங்க பாரேன். மார்னிங் ஃபைவ் மினிட்ஸ் மட்டும் இந்த ஐடி ஆக்டிவா இருந்துருக்கு” என்றிட, அவன் தலையில் கை வைத்தான்.
“எப்படி? அவன் ஆக்டிவானா நான் அலர்ட் பண்ற மாதிரி தான செட் பண்ணிருந்தேன்…” எனப் பயத்துடன் யுக்தாவைப் பார்க்க அவனோ மைத்ரேயனை பார்வையாலேயே வதம் செய்து கொண்டிருந்தான்.
“சகல… எவனோ நம்ம அன்னியோத்தை கட் பண்றதுக்கு இதெல்லாம் செஞ்சுட்டு இருக்கான்.”
“இந்த எவனோ எவன்டா?” நந்தேஷ் மறுபடியும் கேள்வி எழுப்ப, “மூதேவி… ஒண்ணுத்தையும் கண்டுபிடிக்காத. கேள்வி மட்டும் கேளு” என்று அவன் முதுகில் சுள்ளென அடித்தான் மைத்ரேயன்.
ஷைலேந்தரி “கைஸ், இந்த ஐபி அட்ரஸை ட்ரேஸ் கூட பண்ண முடியல” என நொந்து போக, “ஹே வெய்ட்! அந்த டைம்ல அவன் என்ன ஆக்டிவிட்டி பண்ணுனான்னு நம்ம கலெக்ட் பண்ண முடியுமா?” எனக் கேட்டாள் விஸ்வயுகா.
மைத்ரேயன், “பண்ணலாம். ஒரு நிமிஷம்” எனப் படபடவென கீ போர்டைத் தட்ட, குறிஞ்சி தான், “இவனும் டொப்பு டொப்புன்னு தட்டுறான். செத்தவங்க தான் பொழைச்சு வர்றாங்களே தவிர, செஞ்சவனைப் பிடிக்க முடியலையே…” என வெகுவாய் கலாய்த்ததில்,
“பேசுவம்மா பேசுவ. உன் வேலையையும் நாங்களே பாக்குறோம்ல” என நந்தேஷ் பொங்கினான்.
“நானும் யுக்தாவும் இல்லைன்னா நீங்க கொலையாளின்ற மாயைல வாழ்க்கை முழுக்க வாழ்ந்துட்டு இருந்துருப்பீங்க மிஸ்டர் நந்தேஷ்” என வாரியதில் வாயை மூடிக்கொண்டான். எங்க சுத்துனாலும் அங்கேயே வர்றாளே! என்ற கடுகடுப்புடன்.
மைத்ரேயன், “ஹே வெய்ட் வெய்ட்… யுக்தா அந்த பைவ் மினிட்ஸ்ல இன்டர்நேஷனல் கால் போயிருக்கு” என்றதும் விஸ்வயுகா “எக்ஸ்சாட் ஐடி கிடைச்சுதாடா?” எனக் கேட்டதில், “நீ வேற. நம்பரே கிடைச்சு இருக்கு” என அலைபேசி எண்ணைக் குறித்து கொண்டான்.
“யாருமே ஐடியை ஹேக் பண்ணக்கூடாதுன்னு நிறைய ப்ரொடெக்ஷன் பண்ணுனவன், நம்பரை ப்ரொடெக்ட் பண்ண மறந்துட்டான் போலருக்கு” எனச் சிரிக்க, அந்த நம்பரைப் பார்த்ததும் ஒரு கணம் திடுக்கிட்ட யுக்தா சாகித்யன், முகத்தில் எதையும் காட்டாமல் விமான நிலையம் வந்தடைந்தான்.
அங்கு பரத் அவசரமாக வந்து கொண்டிருந்தான். அவனது தந்தைக்கு திடீர் மாரடைப்பு என்ற தகவல் வர, உடனடியாக கிளம்பி இருந்தான்.
ஏற்கனவே சில நேரங்களில் அவருக்கு முடியாமல் போயிருக்கிறது தான். அப்போதெல்லாம் தான் வருவதை பற்றிக்கூறினால், மறுத்து விடுவார்.
அதனால் இம்முறை தகவல் கிடைத்ததும் சொல்லாமல் வந்திருந்தான். அவனைக் கையும் களவுமாக யுக்தாவின் குழுவினர் பிடித்து விட, அவனைக் கண்டதும் விஸ்வயுகாவின் முகம் சலனமற்று போனது.
ஷுமுக் பெர்பியூமை மேனியில் அப்பி இருந்தான். அந்த வாசமே அவளுக்கு குடலைப் பிரட்ட வைத்தது.
“ஏஞ்சல்…” விஸ்வயுகாவின் கையை யுக்தா பிடிக்க, அந்நிலையில் அவனது தீண்டலை ஏற்க மனம் வரவில்லை அவளுக்கு.
அந்தக் கோபத்தையும் பரத்தின் மீதே காட்டினான்.
காரில் அவனை ஏற்றியதும், “ஏய் ஹு தி ஹெல் ஆர் யூ?” என அவன் ஆங்கிலத்தில் பிதற்ற, அவன் மூக்கிலேயே நங்கென ஒரு குத்து விட்டான் யுக்தா. யுக்தாவின் ஒவ்வொரு செல்லும் அவனைத் துடிக்க துடிக்க கொல்லவே அவனை வற்புறுத்தியது.
தன்னை வெகு சிரமப்பட்டு அடக்கிக்கொண்டவன், ஐந்து வருடங்களுக்கு முன்பு கருடன் கொடுத்த வேலையைப் பற்றி கேட்க, பரத்தின் முகம் வெளிறிப்போனது.
அவனுக்கும் விஸ்வயுகாவை அடையாளம் தெரியவில்லை. உதித்தின் பெயரை எல்லாம் கூறும் யுக்தாவை மிரண்டு பார்த்தான்.
“இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்? யார் நீங்கள்லாம்?” எனக் கேட்க, அவனது அடிவயிற்றிலேயே அவனது அஸ்திவாரத்தை ஆட்டம் காணும் படியாக குத்து விட்ட யுக்தா,
“யாரு என்ன, யாரை கொலை பண்ண போறோம் யாரை ரேப் பண்ண போறோம்னு தெரியாமயே இறங்கி இருக்க. தெரிஞ்சுக்கிட்ட யாரும் இப்ப உயிரோட இல்ல. நீயும் தெரிஞ்சுக்கணுமா?” என்றான் தீ ஜுவாலையாக.
அச்சம் பரவியது பரத்திற்கு. “யா யாரும் உயிரோட இல்லையா?” எனக் கேட்டவனுக்கு இன்னும் முழு விவரம் தெரியவில்லை போலும்.
விஸ்வயுகா அவனைக் கூர்மையாய் ஏறிட்டு “என்னையும் உனக்கு ஞாபகம் இல்லை ரைட்?” எனக் கேட்க, “இல்ல யார் நீ?” எனக் கேட்டான்.
“கருடன் உனக்கு குடுத்த ப்ராஜக்ட்டே என்னை ரேப் பண்றது தான்…” என அமைதியாக கூறியவளை திகைத்துப் பார்த்தான்.
அவன் திகைக்க கூட நேரம் தராமல், கோபத்தையும் அடக்க இயலாமல் யுக்தா அவனை அடித்தே மொத்த இரத்தத்தையும் உறிஞ்ச எத்தனித்தான்.
மற்றவர்களுக்கும் தடுக்க தோன்றவில்லை. விஸ்வயுகா உணர்வற்று அமர்ந்திருக்க, குறிஞ்சி தான் தடுக்க வேண்டியதாகப் போயிற்று.
“டேய் அவன் செத்துறப் போறான் விடு”
அவள் கையை உதறியவன், ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டு தன்னை நிதானப்படுத்த முயன்றான். கையை இறுக்கி மூடிக்கொண்டவன், “இதை எல்லாம் யார் பண்ண சொன்னது?” எனக் கேட்டான் ஆத்திரத்துடன்.
பரத் மூச்சு வாங்க, “எனக்கு தெரியாது. உதித் கருடன் சார்கிட்ட இருந்து வேலை வாங்கி எனக்கு தருவாரு. அதை நாங்க செய்வோம். யார் என்னன்னு பார்த்தது இல்ல” என்றதும்,
நந்தேஷ், “ஏன்டா பெரிய இடத்துப் பசங்க தானடா நீங்க. காசுக்கு பஞ்சமா இருக்கும். ஏன்டா பிச்சைக்கார தெருப்பொறுக்கி மாதிரி அவன்கிட்ட பொறுக்க போனீங்க…” என்று அவன் பங்கிற்கு அடித்தான்.
“வேணாம்…” என சுருண்டவன், “பணத்துக்கு பஞ்சமில்லை தான். இதெல்லாம் எங்களுக்கு ஒரு த்ரில்லா இருக்கும். ட்ரக்ஸ் எடுத்துக்கிட்டா எங்களுக்கு எங்களை சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியாது. அந்த நேரத்துல தான் கருடன் குடுக்குற ப்ராஜெக்ட்டை முடிக்க போவோம். எங்களுக்கு நிறைய அமவுண்ட் குடுத்து இருக்கான். ஆனா நாங்க லாஸ்ட்டா செஞ்சது அந்த கொலையும் ரேப்பும் தான். சொன்னதை சரியா முடிக்கலைன்னு கருடன் எங்களைத் திட்டுனாரு. சொன்னதை விட கம்மி அமவுண்ட் குடுத்து எங்களை இனி இந்த பப் பக்கமே வரக்கூடாதுன்னு அனுப்பிட்டாரு. அதுக்கு அப்பறம் நாங்களும் தனி தனியா பிரிஞ்சுட்டோம்” என முடிக்கும் முன் மைத்ரேயன் கோபத்தை அடக்க இயலாமல் அவனை அடி வெளுத்தான்.
“ம்ம்…” அவனைத் தடுத்த யுக்தா, பரத்தை அழுத்தமாக நோக்கி, “சொன்னதை சரியா முடிக்கலை மீன்ஸ்?” என்றான் வினவளாக.
“அது… அது… அவர் பண்ண சொன்னது ரெண்டு ரேப். ஒரு கொலை” என்றதும் அனைவரும் திகைத்தனர்.
ஷைலேந்தரிக்கு கையெல்லாம் நடுங்கி விட்டது. தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
பரத்தோ, “எங்களுக்கு கிடைச்ச தகவல் படி, அந்த கார்ல ஒரு லேடியும் ரெண்டு காலேஜ் முடிச்ச பொண்ணுங்களும் இருக்காங்கன்னு தான் சொன்னாங்க. ஆனா, அங்க ரெண்டு பேர் தான் இருந்தாங்க. அப்படியும் நாங்க கிடைச்ச சான்சை விடக்கூடாதுன்னு சொன்ன வேலையை முடிச்சோம். ட்ரக்ஸ் எடுத்ததும் எங்களால எங்களை கண்ட்ரோல் பண்ண முடியல” என்னும் போதே அவனது ஆணுறுப்பில் முட்டியை ஏத்தினான் யுக்தா.
காரினுள்ளேயே இந்தக் கலவரம் நடக்க, வலியில் துடித்துக் கத்தியவனின் வாயில் துணியை வைத்து அடைத்தாள் குறிஞ்சி.
விஸ்வயுகா தான் அன்றைய நினைவில் மேலும் மேலும் கரைந்து போனாள். அவன் குறிப்பிடுவது ஷைலேந்தரி என்றும் அவளுக்குப் புரிந்தது.
ஷைலேந்தரியோ கண்ணில் நிறைந்திருந்த நீருடன், “அன்… அன்னைக்கு சித்தியும் இவளும் வெளில கிளம்பும் போது நானும் வரேன்னு தான் அடம்பிடிச்சேன். ஆனா ரெண்டு பேரும் ஒத்துக்கவே இல்ல. உங்களைப் பார்க்க வர்றதுக்கு கிளம்புனது எனக்கு தெரியாது. வம்படியா கார்ல ஏறி உட்காந்துட்டேன். பாதி வழி வரை என்னைக் கூட்டிட்டு தான் வந்தாங்க. விஸ்வூ தான், என்னை ஒரு ஐஸ் க்ரீம் பார்லர்ல விட்டுட்டு, முக்கியமான ஆளை பார்க்க போறேன். வர்ற வரை இங்கயே ஐஸ்க்ரீம் சாப்பிட்டுட்டு இருன்னு என்னை வலுக்கட்டாயமா விட்டுட்டுப் போய்ட்டா…” என்றதும் மைத்ரேயன் அவளது நிலை புரிந்து அவள் கையைப் பிடித்துக்கொண்டான்.
அந்நிலையிலும் ஷைலேந்தரி கூறியதை சரியாக உள்வாங்கிக்கொண்டான் யுக்தா. தனக்காக அவள் தன்னைத் தேடி வரவில்லை என்பது தானே விஸ்வயுகாவின் வாதமே. ஆனால் இவள் கூறுவதைக் கேட்டால் எதுவோ தவறாகத் தோன்றியது.
விஸ்வயுகா இவற்றை எல்லாம் கவனிக்கவில்லை. “அதான் நீ அங்க இல்லைலடி. அப்பறம் ஏன் எமோஷனல் ஆகுற. காட்ஸ் கிரேஸ். எல்லாம் என்னோட போகட்டும்…” என்றவளுக்கு தங்கை அந்த வலியை அனுபவிக்கவில்லை என்ற எண்ணமே பெரும் நிம்மதியை கொடுத்தது.
அவளோ கேவலுடன் மைத்ரேயனைப் பார்த்து, “அந்த இடத்துல நான் இல்லாம போனது நல்லதுக்குன்னு நினைக்கவா? அவளுக்கு வலிச்சா எனக்கும் தான வலிக்கும். இதுக்கு நான் அந்த வலியைவே அனுபவிச்சுட்டுப் போயிருக்கலாம்…” என்று முகத்தை மூடி அழுதிட, விஸ்வயுகாவிற்கு அவளது அன்பின் ஆழத்தில் கண்கள் குளமாகியது.
மைத்ரேயன் ஷைலேந்தரியைத் தோளோடு அணைத்து, “பைத்தியக்காரி மாதிரி பேசாத. இதுவரைக்கும் நடந்ததே போதும்!” எனக் கலங்கினான்.
நந்தேஷிற்கும் நெஞ்சமெல்லாம் அத்தனை வலி. தனது தங்கைகளை அல்லவா குறி வைத்து இருக்கிறார்கள். யாராக இருக்கும்? முதலிலாவது அஸ்வினிக்கும் விஸ்வயுகாவிற்கும் பொதுவான எதிரியைத் தேடினோம். இப்போதோ ஷைலேந்தரிக்கும் குறி வைக்கப்பட்டு இருப்பது குழப்பியது.
அதே குழப்பம் தான் யுக்தாவிற்கும். அதாவது அவர்கள் வீட்டில் இருந்து கிளம்பும் வரை தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. யாரும் பின்தொடரவில்லை. அது மட்டும் உறுதி. அப்படி பின்தொடர்ந்திருந்தால், ஷைலேந்தரி பாதி வழியில் இறங்கி இருப்பது கயவர்களுக்குத் தெரிந்திருக்கும். திட்டம் தள்ளிப்போடப்பட்டிருக்கலாம்… என்பது அவனின் அனுமானம். கூடவே, தன்னவளைப் பார்த்து தனது காதலை முதல் பார்வையிலேயே கூறி இருக்கலாம் என்ற ஆதங்கமும்.
அத்தியாயம் 91
“இந்த சம்பவத்தைப் பத்தி இன்னும் உனக்கு வேற என்ன தெரியும்?” பரத்திடம் யுக்தா வினவ,
“வேற எதுவும் தெரியாது” என்றான் அரை மயக்கத்தில்.
“அந்த டைம்ல உங்கிட்ட இருந்த செல்போன், உனக்கு வந்த கால்ஸ், நம்பர்ஸ் ஏதாவது தெரியுமா?”
“என்கிட்ட கருடன் சார் குடுத்த நோக்கியா போன் தான் இருந்துச்சு. அவரே சம்பவ நேரத்துல கைல குடுத்துட்டு அப்புறம் அவரே வாங்கி வச்சுப்பாரு. எங்க பெர்சனல் போன்ல இருந்து யாருகிட்டயும் பேசுனது இல்ல.”
“சரி, அன்னைக்கு இவங்க மூணு பேரும் வீட்டை விட்டு கிளம்பிட்டதா யார் சொன்னது?”
“கருடன் சார் தான் சொன்னாரு. அவருக்கு யார் சொன்னாங்கன்னு எனக்குத் தெரியாது.”
சில நொடிகளில் யுக்தா சிந்தனையில் ஆழ்ந்தான்.
இப்போது பரத்தே, “அவர் பப்ல சிசிடிவி கூட அதிகம் இருக்காது. அப்படியே இருந்தாலும் அந்த புட்ஏஜ் ரொம்ப சீக்ரட்டா இருக்கும். பெரிய ஆளுங்க வந்து போற இடம்ன்றதுனால அவங்க வர்ற இடத்துல சிசிடிவி இருக்காது. அங்க யார் வந்துட்டுப் போறான்ற அடையாளம் கூட தெரியாது. அப்படி இருக்கைல என்னை எப்படி கண்டுபிடிச்சீங்க?” எனக் கேட்க,
“எவ்ளோ பெரிய கொம்பனா இருந்தாலும் செத்துப்போனதுக்கு அப்பறம் எதையும் ஆபரேட் பண்ண முடியாதுல. கருடன் மெயின்டெய்ன் பண்ணிட்டு இருந்த பப், இப்போ ஏலத்துக்குப் போய்டுச்சு. அதுல இருந்து பழைய தகவலை எல்லாம் ரிட்ரைவ் பண்ணும்போது நீங்க நாலு பேருமே சிக்கிட்டீங்க. இப்போதைக்கு உயிரோட இருக்குறது நீ மட்டும் தான்… இப்போதைக்கு மட்டும்!” என அழுத்திச் சொன்னவனை உயிர் பயத்துடன் பார்த்தான் பரத்.
கருடன் இறந்த பின்பு, சரியாக பராமரிக்கப்படாததாலும், மேலும் சில காரணங்களாலும் ஸ்கை பிஸ்ட்ரோ பாரை சீல் வைத்து விட்டனர். அப்படியும் உள்ளே இருந்து எந்த ஒரு புட்ஏஜும் கிடைக்கவில்லை. எல்லாமே அழிக்கப்பட்டு இருந்தது. அழித்தவைகளை மீண்டும் மீட்டெடுப்பதில் டெக்னாலஜிக்கு நிகர் வேறேதும் இல்லையே.
ஆனாலும், பெரிய பெரிய தொழிலதிபர்கள் வந்து போவதை எல்லாம் எந்த கேமராவும் படம் பிடித்திருக்கவில்லை.
உதித்திடம் கேட்டுத் தெரிந்து கொண்டதன் பொருட்டு, சிலரின் பெயர்களைக் குறித்து வைத்திருந்தான். அவர்கள் எல்லாம் அடிக்கடி அங்கு வருகை புரிந்தவர்கள்.
அதில் சிவகாமியின் குடும்பமும் ஒன்று.
மூவரும் ஒன்றாக கிளம்பியது வரை பகிரப்பட்டு இருக்கிறது என்றால், நிச்சயம் வீட்டினரில் ஒருவர் தான் இதில் ஈடுபட்டிருக்க வேண்டும். என்ன தான் அயோக்கியவாதிகளாக இருந்தாலும் தான் பெற்ற மகவுகளை சீரழிக்க இரு பெண்களுடைய பெற்றோரும் நினைப்பதற்கு வாய்ப்பு குறைவு. அப்படியே அவர்களது எண்ணம் கெட்டதாக இருந்தாலும், அவர்களது ரெப்புட்டேஷன் பாதிக்கப்படும் செயல்களில் ஈடுபடமாட்டார்கள் என்பது உறுதி.
ஆக, மீதி இருப்பது?
ஜீரணிக்க சிரமமாக இருப்பினும் அப்படியும் இருக்குமோ என்ற பதைபதைப்பு அவனுள் எழுந்தது. விஸ்வயுகாவிற்கும் ஒரே குழப்பம். யுக்தாவின் சிந்தனை ரேகைகள் படர்ந்த முகத்தைப் பார்த்தவளுக்கோ, நிச்சயம் அப்படி இருக்காது என்ற நடுக்கம் எழுந்தது.
இருக்க கூடாது என்பது போல கண்ணை மூடித் திறந்து அவளை சமன்படுத்தினான்.
“இவனை இப்ப என்ன செய்றது?” குறிஞ்சி கேட்டதும், “நம்ம எதுவும் செய்ய வேணாம்!” யுக்தா கூரிய விழிகளில் தவழும் ஏளனத்துடன் உரைக்க, பரத்திற்கு அச்சத்தில் நா வறண்டது.
பரத்திடம் இருந்து அலைபேசி, மடிக்கணினி அனைத்தையும் பறிமுதல் செய்த யுக்தா, “ஏர்போர்ட்ல வாசல்லயே இரு. கொஞ்ச நேரத்துல ஒரு கார் வரும்” என உத்தரவிட்டு அவன் காதில் ஒரு ப்ளூட்டூத்தை மாட்டி விட்டான். முகமெங்கும் இரத்தம் வழிய, கை முஷ்டி ஒடிந்து பரிதாபமாகக் காட்சியளித்த பரத்திற்கு அவர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டுமென்ற பதற்றம் அதிகரித்தது.
“யுகி இவனை ஏன் வெளில விடுற. தப்பிச்சுட்டா கஷ்டம்” விஸ்வயுகா கூறியதும்,
“இவனால தப்பிக்க முடியாது யுகா. நம்மகிட்டு இருந்து தப்பிச்சாலும் ரியல் கில்லர்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது. நந்து இதுவரை நடந்த கொலையெல்லாம் எப்படி நடந்துச்சுன்னு அவனுக்கு ட்ரையல் சொல்லு” என்று அவனை இழுத்து விட, காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு நந்தேஷ் த்ரில்லர் கதையைக் கூறுவது போல அத்தனை கொலையையும் விவரித்து பரத்தை உயிருடன் கொன்று கொண்டிருந்தான்.
“இல்ல நான் வெளில போகல. இங்கயே இருக்கேன்” என பரத்தே காரை விட்டு இறங்காமல் பிடிவாதம் செய்தான்.
“பாத்தியா என் பேச்சைக் கேட்டே அவன் பயந்துட்டான்” நந்தேஷ் பெருமையாகக் கூறியதில், விஸ்வயுகா “ஸ்லோ பாய்சனே தேவையில்ல நீ பேசியே சாவடுச்சுடுவன்னு இப்ப தான் புரியுது…” என கேலி செய்ததில் குறிஞ்சி நமுட்டு நகை புரிந்தாள்.
பரத்தை விமான நிலைய வாசலிலேயே விட்டு விட்டு, குறிஞ்சியை பின்தொடர சொன்னவன் மற்றவர்களை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றான்.
கடந்த மூன்று நாட்களில் அஸ்வினியின் உடல்நிலை தேறி வந்தது. ஆனாலும் அவரால் நிம்மதியாக இருக்க இயலவில்லை. கண்ணை மூடினால், சிவகாமி அவர் முன் கையில் கத்தியுடன் நிற்பதே காட்சியாக, உறக்கத்தில் இருந்து பாதியில் விழித்தார்.
அருகில் யாருமே இல்லை. தாதியர் மட்டுமே அஸ்வினி எழுந்ததைப் பார்த்ததும், அவரைச் சோதிக்க அருகில் வந்தார்.
அவரது கணவரும் தன்னைப் பார்த்துக்கொள்ள சொல்லி விட்டு வெளியில் சென்றிருப்பதாக தாதியர் ஹிந்தியில் உரைக்க, அவருக்கோ யாருக்கும் எந்த அசம்பாவிதமும் நடந்திருக்க கூடாது என்ற பரிதவிப்பு எழுந்தது.
சிறிது நேரத்தில் சௌந்தரும் அங்கு வந்து விட, அவர் வந்து சேர்ந்த அடுத்த சில நிமிடங்களில் இளையவர்களும் வந்து விட்டனர்.
“எங்கப்பா போனீங்க எல்லாரும்?” அஸ்வினியின் கூற்றில், “அதான் உங்க பிலவ்ட் புருஷன் பக்கத்துல இருக்காரே. அப்பறம் என்ன?” என மைத்ரேயன் கேலியாய் கூறினான்.
“அவரும் தான் கண்ணு முழிச்சு பார்க்கும்போது பக்கத்துல இல்ல…” என்றதில் யுக்தா அவரை ஆழ்ந்து பார்க்க, சௌந்தர் திணறாமல் “ஆபிஸ்ல இருந்து கால் வந்துச்சு. பேசிட்டு இருந்தேன்” என்றார் இயல்பாக.
“ஆபிஸ்ல இருந்து வந்துச்சா? இல்ல நீங்க செட் பண்ணிருக்குற ஆள்கிட்ட இருந்து வந்துச்சா?” விஸ்வயுகா அவரை முறைத்து பார்த்தாள்.
இலேசான படபடப்பு எழ, “நான் என்ன செட் பண்ணுனேன்” எனத் தோளைக் குலுக்கியவர், “உனக்கு ஜூஸ் போட்டுத் தரவாம்மா?” என மனையாளை விசாரித்து விட்டு, ஆரஞ்சு சாறு தயாரிக்க ஆயத்தமானார்.
விஸ்வயுகா யுக்தாவிடம் கண்ணைக் காட்டி, ‘இவரை லாக் பண்ணுடா’ என்றிட, சற்றே அமைதி காக்க சொன்னான்.
அவனது சைகையில் மற்றவர்களும் உள்ளுக்குள் எழுந்த கோபத்தை அடக்கிக்கொண்டு நின்றனர். அந்நேரம் குறிஞ்சியும் அங்கு வந்து விட்டவள், யுக்தாவிடம் கண்ணசைவில் பரத்தை ஒரு இடத்தில் அடைத்து வைத்து விட்டதன் தகவலைத் தெரிவிக்க, அதற்குள் அஸ்வினி பேச தொடங்கினார்.
“ஏஞ்சல்… நீயும் நந்துவும் இங்க இருந்து கிளம்பிடுங்களேன். எதுக்கு தேவையில்லாத பிரச்சினை…” என்றதில், விஸ்வயுகா “ம்ம்க்கும் ஆல்ரெடி தேவையான பிரச்சினை நிறைய இருக்கு. இதுல தேவையானது தேவையில்லாததுன்னு எப்படி பிரிக்க” என நொடித்தாள்.
நந்தேஷோ, “இப்ப எதுக்கு எங்களை இங்க இருந்து துரத்தப் பார்க்கறீங்க?” எனக் கேட்டதில், “எனக்குப் பயமா இருக்கு நந்து” என்றார் அழுகுரலில்.
யுக்தா அவரை அழுத்தமாக ஏறிட்டு, “பயம் எதுக்குமா? உங்களையும் அப்பாவையும் அட்டாக் பண்ணுவாங்கன்னா? இல்ல உங்க சொந்தம்ன்றதுனால என்னை கொல்லுவாங்கன்னா, இல்ல ஏஞ்சலை கொல்லுவாங்கன்னா… இல்ல…” என இழுக்க, அஸ்வினிக்கு இதயம் படபடவெனத் துடித்தது.
“உங்க பிள்ளையைக் கொல்லுவாங்கன்னா?” பேண்ட் பாக்கெட்டினுள் கையை நுழைத்து அர்த்தப்பார்வையுடன் கேட்டான் யுக்தா.
அஸ்வினிக்கு பயம் நெஞ்சைக் கவ்வ, சௌந்தர் குழப்பத்துடன் “என்ன உளறுற?” என்றார்.
விஸ்வயுகாவோ ‘இவன் என்ன தோண்ட தோண்ட புதையல் எடுக்குற மாதிரி நிமிஷத்துக்கு ஒருக்கா ஒரு ஒரு சஸ்பென்ஸா சொல்லிட்டு இருக்கான்…’ எனத் தலையை சொறிந்ததில்,
அஸ்வினிக்கு லேசாக மயக்கம் வருவது போல இருந்தது. “எனக்கு டயர்டா இருக்கு” என எச்சிலை விழுங்கியவரை சௌந்தர் “நீ ரெஸ்ட் எடுமா” என்றிட, யுக்தா தடுத்தான்.
“இருங்க இருங்க… போன தடவை டைம் வரட்டும்னு எல்லாத்தையும் மனசுக்குள்ளேயே வச்சுக்கிட்டேன். நீங்க என் அத்தைன்ற உண்மையை முதற்கொண்டு… ஆனா இப்பவும் இதை நான் சொல்லாம இருக்குறதுல பிரயோஜனம் இல்ல” என்றதில் அஸ்வினியின் முகம் கலங்கிப் போனது.
மைத்ரேயன் புரியாமல், “என்ன சொல்ல வர்ற யுக்தா? அவங்களோட பையன்னா அந்த முறைல நீ தான வளர்ந்த…” எனக் கேட்க,
“வளர்த்தது என்னவோ என்னை தான். ஆனா பெத்தது?” என்றதில் அனைவரும் உறைந்து நின்றனர்.
ஷைலேந்தரி தான், “அத்தான்… சித்தியோட குழந்தையை பெரியம்மா அபார்ட் பண்ண வச்சுட்டாங்கன்னு தான சொன்னீங்க. இப்ப என்ன பெத்த பையன்னு சொல்றீங்க? ஐயோ ராமா எனக்கு ஒரே குழப்பமா இருக்கு” என்று கவுண்டமணி பாணியில் குழம்பினாள்.
“அபார்ட் பண்ணியாச்சுன்னு சொன்னது பொய்” யுக்தா தீர்க்கமாகக் கூறியதும், சௌந்தர் “என்ன விளையாடுறியா? எனக்கே தெரியாம அவளுக்கு எப்படி குழந்தை பிறந்துருக்கும்” என்றார் உறுதியாக.
“தெரியாம பார்த்துக்கிட்டாங்க… எப்படினு உங்க ஆசை மனைவியைவே கேளுங்களேன்” எனக் கோர்த்து விட, அவரோ உடலெல்லாம் வாடிப்போய் இருந்த மனையாளை அதட்டிக் கேட்கவும் இயலாமல் தவித்தார்.
விஸ்வயுகா தான், “என்ன பண்ணி தொலைச்சீங்க சித்தி. பயம் பயம்னு பெத்த பிள்ளையை எங்க போய் போட்டீங்க?” எனக் கோபமாக கேட்க, அவன் விழிகள் கலங்கியது.
“எங்கயும்லாம் போடல…” கமறிய குரலில் கூறியவர் யுக்தாவைப் பரிதாபமாகப் பார்க்க, அவனுக்கும் அவரை வதைக்க மனமில்லாததால்,
“ப்பா… அவங்க குழந்தையை அபார்ட் பண்ணவே இல்ல. அந்த நேரத்துல சிவகாமி தன்னோட ஹோட்டல் ப்ராஜக்ட்காக உங்களை கொஞ்ச மாசத்துக்கு துபாய்க்கு அனுப்பி இருந்தாங்க. ஞாபகம் இருக்கா?” என்றதும் அவர் நெற்றி மத்தியில் முடிச்சு விழுந்தது.
நந்தேஷோ, “இவருக்கும் ஹோட்டல் ப்ராஜக்ட்கும் என்ன சம்பந்தம்?” எனக் குழம்ப, சௌந்தர் நினைவு வந்தது போல கண்கள் பளிச்சிட்டார்.
“ஆமா, பேபி அபார்ட் ஆகி கொஞ்ச நாள்ல அஸ்வினி கம்ப்ளீட் பெட் ரெஸ்ட்ல இருந்தா. அந்த நேரத்துல அண்ணி தான் இவளைக் கூட இருந்து பார்த்துக்கிட்டாங்க. அட் த சேம் டைம், அவங்க பண்ண போற ப்ராஜக்ட்க்கு என்னை டீடெய்ல் கலெக்ட் பண்றதுக்காக துபாய்க்கு அனுப்புனாங்க. எங்களுக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் என்கிட்ட நார்மலா அவங்க பேசுனதே அப்போ தான். அதனால எமோஷனல் ஆகி நானும் சரின்னு சொல்லிட்டேன். அஸ்வினியும் என்னைப் போக சொல்லி வற்புறுத்துனா…” என்றபடி மனையாளைப் பார்க்க, அவரால் கணவனை ஏறிட இயலவில்லை.
“அப்போ தான உங்களுக்குத் தெரியாம கொழந்தையைப் பெத்து நோகாம உங்க அண்ணிகிட்ட குடுக்க முடியும்… இல்லம்மா” என நக்கல் தொனியில் யுக்தா கேட்க, மீண்டும் அங்கு ஒரு அதிர்ச்சி பரவியது.
“அடேய் அப்போ அப்போ ப்ரீஸ் மோட்க்குப் போய், அலையெல்லாம் பாறைல மோதாம உறைஞ்சுப் போய் நிக்கிற மாதிரியே இருக்கு. முழுசா சொல்லித் தொலை” என்று விஸ்வயுகா படபடக்க, அவளது புலம்பலில் எழுந்த புன்னகையை அடக்கிக்கொண்டான்.
“கூல்டி பொண்டாட்டி. உன் அண்ணன் இருக்கானே…” என்றதும் அவனைத் தடுத்து நிறுத்திய விஸ்வயுகா, “வேணாம் சாமி. புருஞ்சு போச்சு. இந்தப் பைத்தியம், என் அம்மாவுக்கு குழந்தை இல்லாத காரணத்துனால மிரட்டி இவங்க குழந்தையை கேட்டதுக்கு இதுவும் குடுத்துடுச்சு அப்படி தான? இஸ் தட் ட்ரூ சித்தி?” என அஸ்வினியைத் தீப்பார்வை பார்க்க, அவருக்கு யாரையும் காணவே திராணி இல்லை.
சௌந்தருக்கு தலையே வலித்தது. இத்தனை வருடங்களும் குழந்தையற்ற தம்பதியர்களென எத்தனை பேர் தூற்றியிருப்பார்கள். ஏனிப்படி தனக்கு தானே தண்டனை கொடுத்துக் கொண்டதுமில்லாமல், தனக்கும் தனது மகனாய் வளர வேண்டியவனுக்கும் தண்டனை கொடுத்து வைத்திருக்கிறாள்… எனத் திகைத்து ஆதங்கத்தில் மனம் உடைந்து போனார். இன்னும் குடும்பத்தில் கவனத்தை செலுத்தியிருக்க வேண்டுமோ என்ற குற்ற உணர்வும் அவரை ஆட்டிப்படைத்தது.
நந்தேஷ் சிலை போல நின்றிருந்தான்.
அஸ்வினியை சித்தியாக அவனுக்கு மிகவும் பிடிக்கும். சிவகாமியின் முரட்டு குணம் எப்போதும் அவனுக்குப் பிடிப்பதில்லை. ஆகினும் அவரைத் தாய் என்ற அந்தஸ்தில் தான் மனதில் நிறுத்தி இருந்தான். அவரைப் பற்றிய மற்றைய அழுக்குகள் ஒவ்வொன்றாக வெளிவர, அவரை வெறுக்கவும் தொடங்கி இருந்தான். அதற்காக தனது பிறப்பே மாறி இருக்கும் என்று அவன் நினைக்கவே இல்லை.
சிவகாமியின் மீதுள்ள பயத்தினால் தன்னையே அவருக்குத் தானம் செய்திருப்பாரென்று எள்ளளவும் நினைக்கவில்லை அவன்.
வயிறும் மனதும் தீயாகக் காய்ந்தது. ஷைலேந்தரி வாயில் கைவைத்து “அடங்கொன்னியா… இந்தப் பயந்தாங்குளிக்கு எப்படி பயம் வந்துச்சுன்னு இப்ப தான தெரியுது!” என சலித்திட, விஸ்வயுகாவிற்கு அஸ்வினியை உருட்டுக் கட்டையால் அடித்து விடலாமா என்றிருந்தது. ஆகினும் நந்தேஷ் தனது உடன்பிறந்த தமையனில்லை என்ற உண்மை உள்ளத்தை வருத்தியது உண்மையென்றாலும் எந்நிலையிலும் தங்களுக்குள் இருக்கும் உறவு மாறப்போவதில்லை என்பதிலும் உறுதியாக இருந்தாள்.
அதனாலேயே இதனை சட்டென ஏற்றுக்கொண்டு, சிவகாமிக்குப் பிறந்த பாவம் தன்னோடு போகட்டும் என்ற நிம்மதியும் எழுந்தது அவளுக்கு.
மைத்ரேயனோ, “மச்சான்!” என நந்தேஷின் தோளைத் தொட, அவனோ “எல்லாருமே என்னை ஏமாத்துறாங்க மச்சி…” என்றான் உதட்டைப் பிதுக்கி.
நியாயமாக வேதனை வரவேண்டும். ஆனால், காதலியும் கழட்டி விட்டுப் போக, தாயும் அவனைத் தண்ணி தெளித்திருக்க, மைத்ரேயனுக்கு கெக்க பெக்கவென சிரிப்பே வந்தது.
அந்நேரம் பக்கத்து அறை பெரியவருக்கு பாடல் மாற்றப்பட்டது.
பெத்து எடுத்தவதான்
என்னையும் தத்து கொடுத்துப்புட்டா
பெத்த கடனுக்குத்தான் என்னை
வித்து வட்டியை கட்டிப்புட்டா
பிள்ளையின் மனசு
பித்தாச்சு இங்க பெத்தவ
மனசு கல்லாச்சு இன்னொரு
மனசு என்னாச்சு அது
முறிஞ்சுபோன வில்லாச்சு
நந்தேஷ் கடுங்கோபத்துடன் தோட்டம் இருக்கும் திசையை முறைக்க, விஸ்வயுகாவும் மைத்ரேயனும் எத்தனை முயன்றும் முடியாமல் சிரித்து விட்டனர்.