Loading

அத்தியாயம் 82

வெளியாள்கள் அறியாது உதித்தை அலுவலகத்திற்கு அனுப்ப ஏற்பாடு செய்தான் யுக்தா சாகித்யன்.

அந்த இருவரின் படங்களை உதித்தின் சொற்படி உருவமாக்கிக் கொண்டிருக்க, இங்கு நந்தேஷை சமன்படுத்திக் கொண்டிருந்தான் மைத்ரேயன்.

ஷைலேந்தரியும் தன்னை விரும்பி இருப்பது வெட்ட வெளிச்சமாகி சிறு நிம்மதியைக் கொடுத்திருந்தாலும், தன்னைப் போல திருமணத்திற்குப் பிறகாவது அவள் வெளிக்காட்டி இருக்கலாம் என்ற வருத்தம் அவனை துன்புறுத்தியது.

அதனை மனதினுள் புதைத்துக் கொண்டு நந்தேஷிடம், “டேய் ஓவரா பண்ணாத. நம்மளை ஒரு பொண்ணு பாலோ பண்றதே அதிசயம். அதுவும் குறிஞ்சி உன்னை லவ் பண்ணிருக்கா. எப்பவும் நம்ம விரும்புற பொண்ணை விட, நம்மளை விரும்புற பொண்ணைக் கல்யாணம் பண்ணுனா வாழ்க்கை பிரைட்டா இருக்கும் மச்சி…” என்று தோளைத் தட்டி வழக்கமான ஆறுதலை உரைக்க, நந்தேஷ் முறைத்து வைத்தான்.

“இன்னும் எத்தனை காலத்துக்கு தான்டா இதே டயலாக் விடுவீங்க?” எனும்போதே ஷைலேந்தரி அவசரமாக அங்கு ஓடி வந்தாள்.

நந்தேஷின் செயல் குறிஞ்சியை ஆழமாய் பாதித்திருக்க, அவள் அலுவலகத்திற்கு கிளம்பி இருந்தாள்.

தனது குட்டு வெளிப்பட்டதில் செய்வதறியாமல் திணறிய ஷைலேந்தரி, மடிக்கணினியைப் பார்வையிட்டு அதிர்ந்தாள்.

ஒரு ஐடி மட்டும் விஸ்வயுகாவின் சர்ச் ஹிஸ்டரியை கண்காணித்து ஹேக் செய்திருக்கிறது என்று!

அதில் தான் அவசரமாக இவர்களிடம் வந்து நின்றது.

அவளது கூற்றில் திகைத்த இருவரில் மைத்ரேயன் அவசரமாக மடிக்கணினியை ஆராய, “ஷிட்! இந்த ஐடி பைவ் இயர்ஸ்க்கு முன்னாடி இருந்தே விஸ்வூவை பாலோ பண்ணிருக்கு கைஸ்…” என்றான்.

“பட் வை? தட்ஸ் தி பிக் குவெஸ்ட்டின்!” ஷைலேந்தரி கேள்வியெழுப்ப இருவரிடமும் பதில் இல்லை.

“வொய்? யார் பண்ண சொல்லி நீங்க ரெண்டு பேரும் விஸ்வூவை பாலோ பண்ணுனீங்க?” கோகுலுக்கும் பானுப்பிரியாவிற்கும் எதிரில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த யுக்தா சாகித்யன் கேள்விக்கணைகளை எழுப்ப, இருவரின் முகத்திலும் வியர்வை அரும்புகள் துளிர்த்தது.

“யா… யாரும் சொல்லல சார்…” பானுப்பிரியா திக்கித் திணறி கூற,

“அப்போ நீங்களா பாலோ பண்ணி, அவளை கொலை செய்ய முயற்சி பண்ணிருக்கீங்க. ரைட்?” துப்பாக்கி முனையை ஊதியபடி யுக்தா கேட்க, இருவரும் அவசரமாக மறுத்தனர்.

“இல்ல சார். கொலை செய்யலாம் நினைக்கல” என இருவரும் வார்த்தைகளை மென்று விழுங்கினர்.

பெருமூச்சை வெளியிட்ட யுக்தா, “ஸ்கை பிஸ்ட்ரோ பார்ல நீ சர்வரா இருந்துருக்க அப்படித்தான” எனக் கோகுலைப் பார்த்து தெனாவெட்டாக வினவ அவனிடம் மெல்லிய அதிர்வு.

“சே எஸ் ஆர் நோ?” துப்பாக்கியைப் திருப்பிப் பிடித்து மேஜை மீது வைத்திருந்த அவனது நடு விரலில் நச்செனத் தட்டினான்.

வலியில் அலறிய கோகுலைக் கண்டு பானுப்பிரியா பயத்தில் வெளிப்படையாகவே நடுங்கி விட்டாள்.

அவனுக்கு முன் அவளே பதில் அளித்தாள்.

“ஆமா ஆமா கோகுல் பாண்டிச்சேரி பார்ல தான் வேலை பார்த்தான். எம். ஏ. கருடன் தான் அந்த பார் ஓனர். அவரு நிறைய இல்லீகல் ஆக்டிவிடீஸ் செய்வாரு. அது சம்பந்தமா இவனுக்கும் வேலை கொடுப்பாரு” என்றாள் வேகமாக.

“என்ன வேலைன்னு நான் தனியா கேட்கணுமா?” மீண்டும் கோகுலின் கரத்தைப் பதம் பார்க்க எத்தனிக்க, கோகுல் கெஞ்சினான்.

“சார்… அவங்க கொலை பண்ண போற ஆளுங்களை பாலோ பண்ணி அவங்களோட டெய்லி ரொட்டின வாட்ச் பண்ண சொல்லுவாரு. அவங்களை பத்தின தகவலை நான் கருடன் சாருக்கு குடுத்தேன் அவ்ளோ தான். அதுக்கு மேல எனக்கு வேற எதுவும் தெரியாது சார்…” என அச்சத்தில் மிரண்டான்.

“சோ பார்க்கு அடிக்கடி வர்ற சுரேஷ், தீனா கேங் பத்தி உனக்கு தெரியும்!” கண்ணைச் சுருக்கி யுக்தா வினவ, “தெரியும் சார்” எனத் தலையாட்டினான்.

‘மேல சொல்லு’ என்பது போல யுக்தா ஒற்றைப்புருவம் உயர்த்த, “நாலு பேரும் தனி தனியா பார்க்கு வருவாங்க. ஆனா, பார்க்கு வந்ததும் ப்ரெண்ட்ஸ் மாதிரி பேசிப்பாங்க. அங்க தான் அவங்க நாலு பேருமே க்ளோஸ் ஆனதா பேசிப்பாங்க. எனக்கு நிறைய டிப்ஸ் குடுப்பாங்க. அதுக்கு மேல பெர்சனலா எனக்கு அவங்களைத் தெரியாது சார்…” என்றான் அழுகுரலில்.

“அங்க வேலை பார்த்துட்டு லைப்ரரில எப்படி வேலைக்குச் சேர்ந்த?”

“நான் பார்ல வேலை பார்க்குறது இவளுக்குப் பிடிக்கல. நாங்க ஒரே காலேஜ்ல தான் படிச்சோம். அப்போ இருந்தே லவ் பண்ணுனோம். எனக்கு சரியான வேலை கிடைக்கல. அதனால எனக்குத் தெரிஞ்சவங்க மூலமா பார்ல வேலை பார்த்தேன். அங்க விட அதிக சம்பளம் வேற எங்கயும் கிடைக்கல. இவள் வீட்ல அவங்க அம்மா இவளுக்கு தீவிரமா மாப்பிள்ளை பார்த்துட்டு இருந்தாங்க. அவங்க முன்னாடி போய் பொண்ணு கேட்க எனக்கு சரியான வேலை வேணும்னு தோணுச்சு. அப்போதான் எனக்கு பாரீன் வாய்ப்பு வந்துச்சு. கருடன் சார் சொன்ன பொண்ணை பாலோ பண்ணிட்டு அவர் என்கிட்ட பேசுன 5 லட்சத்தை வச்சு பாரீன்ல வேலைக்கு சேர ஏற்பாடு பண்ணிட்டு இருந்தேன்…” என்று நிறுத்தினான்.

இப்போது பானுப்பிரியாவே தொடர்ந்தாள்.

“இவன் செய்றது எனக்கு பிடிக்கலைனாலும், என் அம்மா என்னை வேற யாருக்காவது மேரேஜ் பண்ணி வச்சுருவாங்கன்னு பயந்துட்டேன். அப்போ தான் ஒரு பொண்ணை பாலோ பண்றது மட்டும் தான் என்னோட கடைசி வேலை. இனி இந்த மாதிரி வேலைல கண்டிப்பா இறங்க மாட்டேன்னு சொன்னான். நானும் ஒத்துக்கிட்டேன். இவன் வெளிநாடு போய்ட்டா, அம்மாவை பாரீன் மாப்பிள்ளைன்னு கன்வின்ஸ் பண்ணிடலாம்னு நினைச்சேன். ஆனா ஒரு மாசமா அந்தப் பொண்ணை பாலோ பண்ணி எல்லா டீடெய்ல்ஸ்ஸும் கொடுத்தும் கூட கருடன் சார் இவனுக்கு பேசுவதை விட பாதி அமவுண்ட் தான் குடுத்தாரு. அதை வச்சு வெளிநாட்டுக்கு போறது ரொம்ப சிரமம்னு அவர்கிட்ட எவ்ளோவோ இவன் ஆர்கியூ செஞ்சும் அவரு பேசுன காசை கொடுக்கவே இல்லை.

என் வீட்லயும் அப்போ நிலைமை சரி இல்ல. அதனால மாப்பிள்ளை பார்க்குற முடிவை விட்டுட்டாங்க. என் அண்ணா வெளிநாட்டுக்குப் போனா தான் எங்களால சர்வைவ் பண்ண முடியும்ன்ற மாதிரி ஒரு சூழ்நிலை. அதனால அவன் பார்த்துட்டு இருந்த லைப்ரரியன் வேலையை இவனுக்கு வாங்கித் தர சொன்னேன். என் அண்ணாவுக்கும் என் லவ் பத்தி அப்போ தெரியும். ஆனா, அவன் இப்போ மேரேஜ் பண்ணி வைக்க முடியாது. இன்னும் ரெண்டு மூணு வருஷம் டைம் எடுத்துக்கோங்க. அப்பவும் லவ் இருந்தா பாக்கலாம்னு சொன்னான்” என்று மூக்கை உறிஞ்சினாள்.

“ம்ம்ஹும்… பட் இப்போ நீ கல்யாணம் பண்ணிக்கப் போறது இவனை இல்லை தான?” என அர்த்தப்பார்வையை வீசினான் யுக்தா.

அதில் தலையை தாழ்த்தியவள், “இல்ல… எங்களுக்குள்ள நிறைய மிஸ் அண்டர்ஸ்டாங்டிங் சோ பிரேக் அப் பண்ணிட்டோம்” என்றதில் கோகுல் காதலை இழந்த தேவதாஸ் போல பரிதாபமாக அமர்ந்திருந்தான்.

“க்கும்” என சலித்துக்கொண்ட யுக்தா இருக்கையை விட்டு எழுந்து, “இப்ப ரெண்டு பேரும் போங்க. ஆனா என் கண் பார்வைல தான் இருப்பீங்கன்னு மறந்துட கூடாது. காட் இட்?” என்றதும் இருவரும் பலமாகத் தலையசைத்தனர்.

விஸ்வயுகா மைத்ரேயன் அழைத்ததில் பப்பிற்காக போட்ட வேஷத்தைக் களைந்து விட்டு, சிந்தடிக் சுடிதாருக்கு மாறி இருந்தாள்.

“என் டிவைஸ எவன்டா ஹேக் பண்ணுனது?” என்ற எரிச்சலுடன் மைத்ரேயனிடம் கேட்க,

“சரியா சம்பவம் நடந்து கொஞ்ச நாள் தான் ஹேக் பண்ணிருக்கான். அதுக்கு அப்பறம் ஹேக்கிங் நடந்த மாதிரி தெரியல விஸ்வூ. ஆனா ஏன்னு புரியல. ஐபி அட்ரஸ் எடுத்து இருக்கேன்” என அதனை உடனடியாக யுக்தாவிற்கு அனுப்பினான்.

அங்கு உதித்தின் மூலம் வரைந்த இரு ஆடவர்களின் பென்சில் ஸ்கெட்ச்சைப் பார்வையிட்டான். அந்த உருவத்தை கம்பியூட்டரில் ஏற்றி, அவர்களது நிஜ ஐடியை கண்டறிய வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்க, “பாஸ்ட்” என அருணின் முதுகில் தட்டிக்கொடுத்து விட்டு விஸ்வயுகாவின் அலுவலகத்திற்குச் சென்றான்.

“மைத்ரா… ஐபி அட்ரஸ் வச்சு ஆளை பிடிக்க முடியுமா?” எனக் கேட்ட படி உள்ளே வர,

ஷைலேந்தரி, “கஷ்டம் அத்தான். எவெரி செகண்ட்ஸ் அவன் லொகேஷன் சேஞ்ச் ஆகிட்டே இருக்குற மாதிரி செட் பண்ணிருக்கான். அதுவும் இதெல்லாம் நாலு வருஷத்துக்கு முன்னாடி நடந்தது. அவன் யூஸ் பண்ணுன ஐபி அட்ரஸ் எல்லாம் இப்போ ஒர்க்லேயே இல்ல.” என்றதும், மைத்ரேயன், “மே பி மறுபடியும் அவன் அதே டிவைஸ ஆன் பண்ணி, சேம் ஐடி யூஸ் பண்ணுனா லொகேஷனை பைண்ட் அவுட் பண்ண சான்ஸ் இருக்கு” என்றான்.

“ம்ம்” என்றபடி அலைபேசியை ஒளிர விட்டு அதில் ஸ்கெட்ச் செய்த புகைப்படத்தை விஸ்வயுகாவிடம் காட்டினான்.

“இவங்களை பாத்துருக்கியா ஏஞ்சல்?”

அவனை நிமிர்ந்து பாராமல் புகைப்படத்தை மட்டும் பார்த்தவள், மறுப்பாகத் தலையசைக்க, “ப்ச்…” என எரிச்சலை வெளிப்படையாகக் காட்டினான்.

மற்றவர்களும் தெரியாது என தலையசைக்க நந்தேஷ் மட்டும், “இதுல ஒருத்தனை நான் எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு. ஸ்கெட்ச்னால ஸ்ட்ரைக் ஆகலையான்னு தெரியல. ஒரிஜினல் பிக்சர் இருக்கா…?” எனக் கேட்டான்.

“உனக்கு பகல்லயே பசுமாடு தெரியாது” ஷைலேந்தரி வாரியதில், “மூடு” என்றான் முறைப்பாக.

நந்தேஷின் விழிகள் இத்தனை கலவரத்தில் குறிஞ்சியைத் தேடியது. சென்று விட்டாளெனப் புரிந்தாலும் நெஞ்சில் சிறு குறுகுறுப்பு.

அந்நேரம் அவளிடம் இருந்து யுக்தாவிற்கு அழைப்பு வந்தது.

“சொல்லு குறிஞ்சி” எனப் பேசியபடி யுக்தா வெளியில் செல்ல, நந்தேஷின் கவனமெங்கும் அவளிடம் நிரம்பியது.

நெஞ்சை அழுத்திக்கொண்டிருக்கும் விஷயத்தை அவளிடம் எப்படி பகிர்வது என்னவென்று பகிர்வதென்று அவனுக்குப் புரியவில்லை. அவனது இந்த மௌனத்திற்கான காரணம் அவனுக்கே புரியாத போது அவளிடம் மட்டும் எப்படி புரிய வைப்பான்?

யுக்தா, “நம்ம தேடுற ரெண்டு பேர்ல ஒருத்தன் பேர் லோகேஷ். அவன் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு கார் ஆக்சிடெண்ட்ல செத்துட்டான்.
இன்னொருத்தன் எக்ஸ் மினிஸ்டர் பையன் பரத். அவன் அப்பவே ஜெர்மனில செட்டில் ஆகிட்டான். இன்னும் ஒரு வாரத்துல இந்தியா வர்றான். ஆனா சென்னைக்கு இல்ல டெல்லிக்கு. அங்கவும் ரெண்டு நாள் தான் இருப்பானாம். தென் அகைன் ஜெர்மனிக்கு போயிடுவான்” என்றதும், “அவனை லாக் பண்ணனும் குறிஞ்சி. இப்போதைக்கு இந்த டாபிக்கை யார்கிட்டயும் ஷேர் பண்ணாத. முக்கியமா ஏஞ்சல்கிட்ட” என்றான் அழுத்தமாக.

“ஏன் யுக்தா?”

“அவள் கொலை பண்றேன்னு இறங்குறது ஒரு காரணம். அவன் மேல எனக்கும் கொலைவெறி இருக்கு. ஆனா அதை விட பெரிய காரணம். இவங்களை பப்பெட்டா யூஸ் பண்ணி இன்னொருத்தன் தான் இந்தக் கொலையெல்லாம் செஞ்சுட்டு இருக்கான். பரத் மூலமா தான் உண்மையா கொலை செஞ்சவனையும் கண்டுபிடிக்கணும், இதெல்லாம் நடக்க காரணமா இருந்த ஆளையும் கண்டுபிடிக்கணும்” எனத் தீவிரமானான்.

அத்தியாயம் 83

சேட் பாக்ஸ் மூலமாக யுக்தா மணப்பெண் அனுராவிற்கு சில உத்தரவுகளை வழங்கினான்.

அதில் முக்கியமான ஒன்றே பதற்றப்படாமல் சாதாரணமாக இருக்க வேண்டும் என்பது தான். உடையிலிருந்து அணிகலன்கள், மேக் அப் ஆர்ட்டிஸ்ட் வரை எதையுமே புதிதாய் உடுத்தக்கூடாது பயன்படுத்தக்கூடாது என்ற நிபந்தனையை விதித்திருந்தான்.

உணவு கூட வீட்டில் செய்து தான் உண்ணவேண்டும் என்றும், புதிதாய் வெளியில் இருந்து வரும் எதையும் உண்ண கூடாது, எவ்வித பொருட்களையும் பயன்படுத்தக் கூடாது என்று திட்டவட்டமாக உரைக்க, அவளுக்கோ திருமணத்திற்கு அழகாக தயாராகவில்லை என்றாலும் உயிருடன் இருக்க வேண்டுமென்ற பயத்தில் அவன் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டாள்.

மறுநாள் திருமணம் இருந்திட, யுக்தா பரபரப்பாக இருந்தான்.

அனைத்தும் சரியாக நடக்கவேண்டும் என்ற பதைபதைப்பு அவனுக்கு. இந்தக் கொலையை நடக்க விடக்கூடாது என்ற பிடிவாதம் அவனுள் அதிகமாக நிறைந்திருந்தது.

நேரடியாக யுக்தாவே இறங்கினால் கொலைகாரன் அலர்ட் ஆகி விடுவானென்ற எண்ணத்தில் அனுராவை சரியாக வழிநடத்தினான்.

“உன் உயிர் முழுக்க முழுக்க இப்போ உன் கையிலமா. நீ எந்த அளவு புத்திசாலித்தனமா நடந்துக்குறியோ அந்த அளவுக்கு உன் உயிர் தப்பிக்கும். அவன் டார்கெட்டை மாத்திட கூடாதுன்னு தான் என்னால உனக்கு நேரடியாக ஹெல்ப் பண்ண முடியல” என அவளுக்கும் புரிய வைத்தான்.

அனைத்தையும் புரிந்து கொண்டவள், வெகு வெகு கவனமாகவே இருந்தாள்.

திருமணத்திற்காக தைக்க கொடுத்த பிளவுஸ், புடவை, ஆடைகள், பெர்பியூம், கிரீம் என எதையும் அவள் தொட்டுக்கூட பார்க்கவில்லை.

வீட்டினரை சரி செய்வது தான் பெரும்பாடாக இருந்தது. அவர்களிடம் உண்மையை கூறினால் பயந்து விடுவார்கள் என முயன்ற மட்டும் மறைத்து விட்டாள்.

அன்று இரவு யாருமே வீட்டிற்குச் செல்லவில்லை அலுவலகத்திலேயே இருந்து விட்டனர். இருந்த பதற்றத்தில் யாரும் யாரிடமும் அவ்வளவு இயல்பாக பேசிக்கொள்ளவில்லை. மூன்று ஜோடிகளிடமும் இயல்நிலை இல்லை என்பதும் ஒரு காரணம்.

மறுநாள் திருமணத்திற்கு ஆயத்தமாகினர். அவ்வப்பொழுதும் யுக்தா அனுராவிடம் “மயக்கம் வருதா, எதுவும் டிஸ்கம்ஃபோர்ட் இருக்கா?” எனக் கேட்டுக்கொண்டே இருந்தான்.

“இல்ல சார்” என்றவளுக்கு பயத்திலேயே அத்தனையும் வந்து விட்டது பாவம். மற்ற மேட்ரிமோனி மூலமாக நடைபெறும் திருமணத்திலும் பலத்த பாதுகாப்புகள் இருந்தது.

மைத்ரேயனுக்கோ இறுதி நேரத்தில் சந்தேகம் வந்து தொலைத்தது. விஸ்வூ, “இந்த யுக்தா இவ்ளோ ஸ்ட்ராங்கா அடுத்த விக்டிம் இவள் தான்னு சொல்லி எல்லாம் பண்ணிட்டு இருக்கானே. ஒருவேளை இவள் இல்லாம இருந்து வேற யாரும் செத்துப்போய்ட்டா என்ன ஆகும்?” என்ற பீதியைக் கிளப்ப,

நந்தேஷ், “உன் திருவாயை த்ரீ ரோஸஸ் தேய்ச்சு கழுவுடா” என்றான் நொந்து.

விஸ்வயுகாவோ, “யுக்தாவோட கெஸ் மிஸ் ஆகாது” என உடனடியாக கூறிட இரு ஆடவர்களுக்கு ஒருவரை ஒருவர் நமுட்டு சிரிப்புடன் பார்த்துக் கொண்டனர்.

ஷைலேந்தரி தான், கணவனும் தமக்கையும் தன்னை தவிர்ப்பதில் சற்றே மனமொடிந்து போயிருந்தாள்.

ஆகினும் அவர்களை வம்புக்கு இழுக்க, “ஆமா ஆமா என் அத்தான் சொன்னா சரியா தான் இருக்கும்” என்று தானாக வாயை விட்டு இருவரின் முறைப்பையும் வாங்கிக் கொண்டாள்.

ஆனால், அன்று எந்த கொலையும் நடைபெறவில்லை. அவளது திருமணமும் நன்முறையில் நடந்து முடிந்ததில் ஆறு பேருக்கும் பரம திருப்தி. அப்பெண்ணிற்கும் அப்போது தான் உயிரே வந்தது. இதில், “பரவாயில்ல இயற்கை அழகோட தாலி கட்டிக்கிறது ரொம்ப பெரிய விஷயம். இல்லன்னா இப்ப இருக்குற பொண்ணுங்க ஒரு டப்பா மேக் அப்பை முகத்துல அப்பிக்கிறாங்க. யூ லுக் சோ எலெகான்ட்” என மாப்பிள்ளைக்காரன் அவளை புகழ்ந்து தள்ள, அவளுக்கு குளுகுளுவென இருந்தது.

“ம்ம்க்கும் நானே சாவு பயத்துல இருக்கேன் இவன் வேற” என மனதினுள் எண்ணியபடி அசடு வழிந்து வெட்கம் கொண்டாள்.

“ஆஆ… ஆஆ… டொம் டொம்” என சத்தம் அந்த சிறிய குடோன் முழுதும் எதிரொலித்தது. தனது திட்டம் முதல் தடவை நிறைவேறாமல் போன வெறியுடன் அந்த ஆடவன் வெறிப்பிடித்தவன் போல அங்கும் இங்குமாக அலைந்து சுவரில் தனது கையைக் குத்தி கத்தினான்.

தனது டார்கெட் தவறிப்போனதில் அவனுக்கு சினம் சீறிப்பாய்ந்தது. எப்படியும் அவள் இன்று இறந்திருக்க வேண்டும்? ஏன் இறக்கவில்லை என்ற கேள்வியே அவனை பைத்தியம் பிடிக்க வைத்தது.

இங்கு, புதுப்பெண்ணிற்காக ஏற்பாடு செய்திருந்த உடைகள், க்ரீம், பெர்பியூம் என அனைத்துமே சோதனைக்குட்படுத்தப்பட்டது. அதில் நிச்சயம் ஏதோ ஒரு பொருளில் விஷம் கலந்திருக்க வேண்டுமென்ற உறுதி யுக்தாவிடம் இருந்தது.

அனுரா, “சார்… எதுல விஷம் இருந்ததுன்னு பைண்ட் அவுட் பண்ணியாச்சா. தேங்க்ஸ் சார் நீங்க மட்டும் என்னை கைட் பண்ணாம நந்தேஷ் சார விட்ருந்தா அவனே எனக்கு சோலைக்காட்டு பொம்மையைக் காட்டியே பயமுறுத்தி கொன்னுருப்பாரு” என்றதும், யுக்தா நந்தேஷிடம் அந்தக் குறுஞ்செய்தியைக் காட்டி உதட்டை மடித்து சிரித்தான்.

“ச்சே இந்த காலத்துல நல்லது செஞ்சாலே பழி தான் வருது” என ஏகத்துக்கும் சலித்துக் கொண்டவனை முறைத்த விஸ்வயுகா, “நீ நல்லது செய்யலடா நாயே. அந்தப் பொண்ணை உயிரோட சவமாக்கி இருப்ப” என்று கிண்டல் செய்தாள்.

முந்தைய நாளில் இருந்தே அப்பெண்ணிடம் சேட் செய்து கொண்டிருந்த யுக்தாவைக் கடுகடுப்புடன் ஏறிட்டாள் விஸ்வயுகா.

ஆகினும் வேலை விஷயமாகப் பேசுவதால் தன்னை அடக்கிக்கொண்டாள். இப்போதோ தேவையின்றி கடலை போட்டதில், மைத்ரேயனை அழைத்து ஏதோ கிசுகிசுக்க, அவனும் சிறு நக்கல் புன்னகையுடன் மடிக்கணினி முன் அமர்ந்தான்.

சில நிமிடங்களில் யுக்தா உபயோகப்படுத்திக்கொண்டிருந்த சேட் பாக்ஸ் வசதி அழிந்து விட, ஒரு கணம் புருவம் சுருக்கியவன் பின் நிமிர்ந்து மைத்ரேயனை முறைத்தான்.

“ஐயோ, உன் பொண்டாட்டி தான்ப்பா உங்க கனெக்ஷனை கட் பண்ண சொன்னா!” என்றதும் யுக்தா அவள் மீது பார்வையைப் பதிக்க, விஸ்வயுகா வேறு புறம் திரும்பிக் கொண்டாள்.

அப்பெண்ணின் பொருட்களை சோதனை செய்ததில் அவள் ஸ்பெஷலாக ஆர்டர் செய்திருந்த லிப் பாமில் எத்திலீன் ** என்ற மெல்ல கொல்லும் விஷம் கலந்திருப்பது தெரிய வந்தது.

உடனடியாக சோதனைக் கூடத்திற்கு கிளம்ப எத்தனித்த யுக்தாவுடன் அனைவருமே கிளம்பினர்.

“இந்த வகையான விஷத்தைப் பத்தி நான் படிச்சு இருக்கேன் யுக்தா. இதை எப்படி வேணாலும் உடம்புல கலக்க வைக்கலாம். ஜஸ்ட் ஸ்கின் அலர்ஜி மூலமாவே இந்த மாதிரி பாய்சன் உடம்புக்குள்ள போய் கொஞ்ச கொஞ்சமா நம்மளோட பாடி பார்ட்ஸை அட்டாக் பண்ணும். இதுல சோகம் என்னன்னா, இதுனால நமக்குள்ள பிரச்சனை வருதுன்றதே நமக்கு தெரியாது. முதல் ரெண்டு நாள் சின்ன சின்ன டிஸ்கம்போர்ட் இருக்கும். அவளோ தான். ஆனா மூணாவது நாள் ஹெவியா அட்டாக் பண்ணும். அப்படி சட்டுன்னு அட்டாக் ஆச்சுன்னா அதுக்கு மாத்து மருந்தே கிடையாதுன்னு தான் படிச்சு இருக்கேன். முதல் ரெண்டு நாள் கூட நம்ம கெஸ் பண்ணி டெஸ்ட் எடுத்துப் பார்க்கலாம். ஆனா மூணாவது நாள் பிளட்டோட டிசால்வ் ஆகிடும். சோ இறந்தப்பறம் கூட இதுனால தான் இறந்து இருக்காங்கன்னு நம்ம எவிடன்ஸ் கலெக்ட் பண்ணவே முடியாது” என அவள் பேசியதை எல்லாம் உள்வாங்கிக்கொண்டான்.

“இந்த மாதிரி பாய்சன் எங்க கிடைக்குது?” யுக்தா கூர்மையாக வினவ,

“இதெல்லாம் நார்மல் மெடிக்கல்ல விக்க மாட்டாங்க யுகி. பெரிய பெரிய பார்மா கம்பெனில இல்லீகளா ப்ரொடியூஸ் பண்ணுவாங்க. இப்ப நாங்க யூஸ் பண்ணுன பொலோனியம் பாய்சன், பிரான்ஸ்ல ஒரு குறிப்பிட்ட பார்மா பேக்டரில வெறும் மில்லி கணக்குல எடுப்பாங்க. அதாவது, அவங்க செய்ற மருந்துல, சேர கூடாத கெமிக்கலை சேர்த்து அதை ஒரு சிரப்பா மாத்தி தான் பாய்சன், பூச்சி மருந்து இந்த மாதிரியான உடம்புக்கு தீங்கு விளைவிக்கிற மருந்துகளை தயாரிக்கிறாங்க. அதே போல நாங்க யூஸ் பண்ணுன டைப் ஆப் மருந்தை அங்க தயாரிக்கிறாங்க. வெறும் மில்லி கணக்குக்கே பல கோடி குடுக்கணும். வெறும் ஒரு சொட்டு கலந்தா கூட யாரையும் காப்பாத்த முடியாது. அதே போல இந்த மருந்தை எந்த கண்ட்ரி ப்ரொடியூஸ் பண்றாங்கன்னு கண்டுபிடிக்கணும். அப்போ தான், இதை யார் வாங்கி இருப்பான்னு தெரியும். ஆனா அப்படியே கண்டுபிடிச்சாலும் கம்பெனி மூலமா எந்த சீக்ரெட்டும் வெளில வராது. அதான் பிரச்சினை” என்றாள் பெருமூச்சுடன்.

“ம்ம்ம்” ஸ்டியரிங்கில் விரலைத் தாளம் போட்டபடி சோதனைக் கூடத்திற்குச் சென்றவன், அங்கும் வேண்டிய தகவலை கேட்டுக்கொண்டான்.

மீண்டும் காருக்கு வந்தவனை குறிஞ்சி, “என்னடா ஏதாவது க்ளூ?” எனக் கேட்க,

“யுகா சொன்ன மாதிரி பார்மா கம்பெனில தகவல் கிடைக்கிறது சிரமம். பட், இப்ப நான் தெரிஞ்சுக்கிட்ட ஒன்னு என்னனா, ஒவ்வொரு பார்மாவுக்கும் மருந்துக்கான பேஸை கெமிக்கலை மிக்ஸ் அப் பண்ணி தர்றது ஒவ்வொரு விதமான சைன்டிஸ்ட். அதுல ஒரு சில ஸ்லோ பாய்சன் பத்தி ரிசர்ச் செஞ்சுட்டு இருந்தது யார் தெரியுமா?” என நிறுத்த ஷைலேந்தரி, “யாரு அத்தான்?” என்றாள்.

“சைண்டிஸ்ட் பாஜி. யுகா சொன்ன புக்கை எழுதுன பாஜி. அவர் தான் ரிசர்ச் பண்ணிட்டு இருந்துருக்காரு. ஆனா பாதி பண்ணிட்டு இருக்கும்போதே ஹெல்த் இஸ்யூல இறந்துட்டாரு. ஆனா அவர் பாதில நிறுத்தின ரிசர்ச் பத்தின மொத்த தகவலையும் புக்கா பப்ளிஸ் பண்ணுனது யாருன்னு தான் தெரியல” என யோசனையுடன் நிறுத்தினான்.

“ஆக மொத்தம் இப்ப வரை எல்லாமே இழுத்துக்க பறிச்சுக்க தான் இருக்குல்ல” நந்தேஷ் புலம்பிட,

யுக்தாவிற்கு அலைபேசியில் அழைப்பு வந்ததில் யோசனையுடன் அழைப்பை ஏற்று பேசியவனை ம்ம் மட்டும் கொட்டி விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

“என்ன ஆச்சு?” விஸ்வயுகா கேட்டதும் “நத்திங்” எனத் தலையசைத்தவன், “மேக்சிமம் நீங்க நாலு பேரும் ஒண்ணாவே இருக்க பாருங்க. ஒண்ணு என் வீட்ல இருங்க. இல்லனா மைத்ராவையும் ஷைலுவையும் உன் வீட்டுக்கு கூட்டிட்டுப் போய்டு” என்றதும், ஷைலேந்தரி, “நான் அங்க போகல” என்றாள் வேகமாக.

“இப்போதைக்கு ஈகோவை விட உயிர் முக்கியம். அப்போ நாலு பேரும் என் வீட்ல இருங்க” எனக் கண்டிப்பாக கூறி விட்டு, “குறிஞ்சி! நாளைக்கு மார்னிங் நமக்கு டெல்லிக்கு பிளைட். கெட் ரெடி பார் தட்” என உத்தரவிட்டான்.

அவன் பேச்சில் இருந்த அவசரமும் பதற்றமும் அவளுக்குப் புரிந்தது. அதில் மறுபேச்சு பேசாமல் தலையாட்டினாள்.

“எதுக்கு திடீர்னு டெல்லிக்கு இன்னும் இங்க கேஸ் முடியவே இல்லையே” எனக் கேட்ட விஸ்வயுகாவின் புறம் திரும்பாமல், “அங்க இருக்குற கேஸ்ல ஒரு ஒர்க்” எனப் பொய்யுரைத்தான்.

“ஓ!” என்றவளுக்கு அவன் தன்னை விட்டுச் செல்வதில் இதயம் துடித்தது.

அத்தியாயம் 84

குறிஞ்சியை அவளது வீட்டில் விட்டு விட்டு தனது வீட்டிற்கு மற்றவர்களையும் அழைத்து வந்த யுக்தா, பெட்டியில் சில உடைகளை அவசரமாக எடுத்து வைத்துக்கொண்டிருந்தான்.

அவன் முகத்தில் எப்போதும் விட ஒரு வித தவிப்பு குடிகொண்டிருந்தது.

அலைபேசியை உபயோகப்படுத்தியபடி, அன்று நிகழ்ந்த இதழ் முத்தத்தின் நினைவில் சிவந்து சிதைந்தவள், அவனை ஓரக்கண்ணில் பார்த்துக்கொண்டு, “எப்போ ரிட்டர்ன்?” என வினவினாள்.

“வந்துடுவேன் டூ ஆர் த்ரீ டேஸ்…”

“ம்ம்…” என்றவளுக்குப் பேச வேறு எதுவும் தோன்றாததால், “அந்தப்பொண்ணை கொல்ல முடியலைன்ற கோபத்துல அந்த சீரியல் கில்லர் என்னை டார்கெட் பண்ணிட்டா என்ன செய்வ?” எனக் கேட்டதும், ஒரு கணம் துணியை அடுக்கி வைப்பதை நிறுத்தியவன், “பிளான் மட்டும் தான் செய்ய முடியும் அவனால, என்ன மீறி ஒரு தூசி கூட உன்னை தொட முடியாது.” என்றான் அழுத்தமாக.

“ஓ உன்னை மீறி தூசி தொட்டுட்டா?” இரு புருவத்தையும் அவள் உயர்த்தினாள் நக்கலாக.

“அப்போ நான் உயிரோட இல்லைன்னு அர்த்தம்” சட்டென யுக்தா அளித்த பதிலில் அவள் முகம் கூம்பிப்போனது.

யுக்தாவின் தீவிர காதல் எங்கு சென்று முடியுமோ என்ற பயத்தையே கிளறி விட்டது விஸ்வயுகாவிற்கு.

நந்தேஷ் அடுக்களையில் காபி தயாரித்துக் கொண்டிருக்க, ஷைலேந்தரி ஷோ கேஸ் முன்னால் நின்று வேடிக்கை பார்ப்பது போல பாவனை செய்ய, சோபாவில் அமர்ந்திருந்த மைத்ரேயன் அவளையே அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

எவ்வளவு நேரம் தான் அவனிடம் இருந்து தப்பிப்பது போல பாவனை செய்வது ஒரு கட்டத்தில் அவளும் அவன் விழிகளை சந்திக்க நேர, அந்தச் சந்திப்பில் காயமான இரு விழிகளும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டது.

“ஏன்? விஸ்வூவுக்காக உன் காதலை மறைச்சுக்கிட்ட… ஓகே. ஐ அக்செப்ட். ஆனா அப்பறமும் ஏன் மறைச்ச? அன்னைக்கு உன் விருப்பத்தோட தான எல்லாம் நடந்துச்சு. அன்னைக்கு எல்லார் முன்னாடியும் உன்னை ஹர்ட் பண்ணிட்ட மாதிரி ஏன் அழுத?” மெல்லிய சீற்றத்துடன் வெளிவந்தது அவன் குரல்.

அவளோ சில நொடிகள் அமைதிக்குப் பிறகு, “ஆமா உன்னை லவ் பண்ணுனேன். எனக்கும் உன்னை சின்ன வயசுல இருந்து பிடிக்கும். எப்போ காதலா மாறுச்சுன்னு எனக்குத் தெரியல. ஆனா உனக்கு என்னை விட விஸ்வூவை தான் ரொம்ப பிடிக்கும்னும் எனக்கு தெரியும்.

அவளுக்கு நடந்த அசம்பாவிதத்துக்கு அப்பறம், காதலை சொல்ற அளவு நமக்குள்ள நல்ல சூழ்நிலை வரல. அதுக்கு முன்னாடியும் நீ விரும்பி இருக்கியா இல்லையானு எனக்கு தெரியல. பட் விஸ்வூ கூட மேரேஜ் பிக்ஸ் ஆனதும் நீ உடனே ஒத்துக்கிட்டன்னு பெரிம்மா சொன்னாங்க. ரொம்ப வலிச்சுது தான். ஒருவேளை உனக்கு என்மேல காதல் இருந்திருந்தா நீ என்கிட்ட சொல்லிருப்ப தான.

விஸ்வூவுக்கும் உன் கூட லைஃப் செட்டில் ஆகுறது தான் சரின்னு தோணுச்சு. அதனால என் காதலை மறைச்சுக்கிட்டேன். என் அம்மாவும் என்னை மேரேஜ் பண்ணிக்க சொல்லி நச்சரிச்சாங்க. எனக்கும் என்னையை நானே ஏமாத்திக்க ஒரு முகமூடி தேவைப்பட்டுச்சு. அதான் உங்க கல்யாணம் நடக்குறதுக்கு முன்னாடி, நானே மேட்ரிமோனில ஒரு ப்ரொபைல் பார்த்தேன். அவனை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு உன்கிட்டயே சொன்னேன். அப்பவும் என் மேல உனக்கு பீலிங்ஸ் இருந்திருந்தா நீ கொஞ்சமாவது பீல் பண்ணிருப்பன்னு நினைச்சு இன்னும் ஹர்ட் ஆனதுதான் மிச்சம். கடைசியா கல்யாணத்து அப்போ, விஸ்வூ அந்த இடத்துல இல்லாததுனால தான் நீ எனக்கு தாலி கட்டுனன்னு இன்னும் அதிகமா ஹர்ட் ஆனேன். அப்பறம் உன் காதலைப் பத்தி சொன்னதும் எனக்கு எப்படி ரியாக்ட் பண்றதுன்னு தெரியல. இவ்ளோ வருஷமா சொல்லல. கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் சொல்றன்னு சின்னக் கோபம். உன்னை டீஸ் பண்ணத்தான், உன்னை லவ் பண்ணலைன்னு சொன்னேன். ஆனா, உன்னை நானும் லவ் பண்ணேன்… மேரேஜும் பிடிச்சுப் பண்ணேன்னு சொல்லாமலேயே நமக்குள்ள எல்லாம் நடந்ததும் என்னால சட்டுனு ஏத்துக்க முடியல. முழுக்க உன்னை ப்ளேம் பண்றதுக்காக அன்னைக்கு அழுகல. எனக்கு ஏன் எமோஷனல் ஆச்சுன்னு புரியல. என் மனசை தெரிஞ்சுக்காம என்கிட்ட உரிமையை எடுத்துக்கிட்டு தாலி கட்டுனதுக்காக நடந்த டீபால்ட் பிஸிக்கல் ரிலேஷன்ஷிப் மாதிரி தான் நமக்குள்ளயும் நடந்துருச்சுன்றது தான் என்னை ரொம்ப டௌன் ஆக்கிடுச்சு.”

அவனை நிமிர்ந்து பாராமல் மனதில் இருக்கும் அனைத்தையும் கொட்டி விட்டாள். எத்தனை நாளைக்கு இவர்களது பாராமுகத்தை தாங்க இயலும்?

“டீபால்ட் ரிலேஷன்ஷிப் மாதிரி தான் நான் உன்னை ட்ரீட் பண்ணுனேனா?” ஒற்றைக் கேள்வியில் தனது மொத்த கோபத்தையும் காண்பித்தவனை எதிர்கொள்ள இயலாமல் தவித்தாள்.

“அதில்ல மைதா…” என அவள் பேசும் முன், “உன் பீலிங்ஸ் கரெக்ட் தான். இவ்ளோ வருஷமா ஏன்டா காதலை சொல்லலைன்னு என் சட்டையைப் பிடிச்சு கேட்டிருக்கலாம். என்னை டீஸ் பண்ண நினைச்சதும் ஓகே தான். நமக்குள்ள விளையாடுறதுலாம் நமக்கு புதுசு இல்ல.

ஆனா… உன்கிட்ட உரிமை எடுத்துக்க உன் மனசு மொத்தத்தையும் தெரிஞ்சுக்கணும்னு எனக்கு அந்த நேரத்துல தேவைப்படாம போய்டுச்சு. மனசுல காதல் இல்லாம தான், என் ஒவ்வொரு டச்சையும் நீ அக்செப்ட் பண்ணிக்கிட்டியா? சகிச்சுட்டு இருக்குறதுக்கும், பிடிச்சு இருக்குறதுக்கு வித்தியாசம் எனக்கு தெரியாதாடி? கல்யாணத்துக்கு முன்னாடி நீ காதலிச்சியான்னு எனக்கு தெரியாது. கல்யாணத்துக்கு அப்பறம் உனக்கு என் மேல எல்லா உரிமையும் அன்பும் ஆட்டோமெட்டிக்கா வந்துருச்சுன்னு எனக்கு தெரியும். அதை உணர்ந்ததுனால தான், உங்கிட்ட உரிமை எடுத்துக்கிட்டேன். சின்னதா உன் முகத்துல ஒரு சுளிப்பை பார்த்திருந்தா கூட கண்டிப்பா விலகி இருப்பேன். ஐ டோன்ட் வாண்ட் தட் டீபால்ட் பிஸிக்கல் ரிலேஷன்ஷிப்” என முகம் இறுக, வார்த்தைகளைக் கடித்து துப்பினான்.

முணுக்கென கண்ணில் நீர் கோர்த்தது ஷைலேந்தரிக்கு. தான் அதிகப்படியாக ரியாக்ட் செய்து விட்டது புரிய, “சாரி மைதா” என்றாள் உதட்டைப் பிதுக்கி. அதனைக் காதில் வாங்காதவனாக அவளை முறைத்து விட்டு வெளியில் சென்று விட்டான்.

அன்று அனைவருமே அங்கு தங்கி விட்டனர். சிவகாமி நந்தேஷை அழைத்துக் கேட்டதற்கும் வேலை இருப்பதால் அலுவலகத்திலேயே இருந்து விட்டதாக உரைத்திட, “நல்லா பொய் சொல்லக் கத்துக்கிட்ட” என்றார் அவர்.

“ஆமா, உங்களை மாதிரி எல்லாம் பெர்பெக்ட்டா நடிக்க முடியுமா? பாண்டிச்சேரி வரை ஆளை பிடிச்சுருக்கீங்களே சித்தியைத் தூக்க…” எனக் கோபத்தில் கத்தினான்.

அதில் திகைத்தவர், “அந்த அனாதைப் பயலோட சேர்ந்து எதுலயாவது நல்லா சிக்கப் போறீங்க. அப்போ என்னைத் தேடி தான் நீங்க வரணும்” என சாபமிட்டார்.

“சிக்கி சின்னாபின்னமானாலும் உங்ககிட்ட யாரும் வரமாட்டோம்” என எரிச்சலுடன் அழைப்பைத் துண்டித்து விட்டதில் சிவகாமி பொறுமை இழந்தார்.

மோகனுக்கும் தங்களது பிள்ளைகள் தங்களை மீறி செல்வதில் கோபமே. “எப்படியும் நம்மகிட்ட தான் வரணும் சிவகாமி. நீ அமைதியா இரு” என்றதும், “வரவைக்கணும். நான் வரவைக்கிறேன்” என்றார் தீர்க்கமாக.

“அம்மாவை ஏன்டா தூண்டி விடுற…” பால்கனியில் நின்று கொண்டிருந்த தமையனின் அருகில் சென்று நின்றாள் விஸ்வயுகா.

“அவங்களால தான் இவ்ளோவும். அவங்க செஞ்ச பாவம் நம்மளை அதுவும் உன்னை அளவுக்கு அதிகமா தண்டிச்சுடுச்சு விஸ்வூ. எனக்கும் தண்டனை கிடைக்கும் தான? கிடைக்கணும். அவங்களுக்குப் பிறந்த பாவத்துக்கு கிடைச்சு தான ஆகணும். இதுல என்ன உனக்கு மட்டும் கிடைச்சுட்டு எனக்கு கிடைக்காம போற ஓரவஞ்சனை” என்றவனின் விழியோரம் நீர் துளிர்த்தது.

“பைத்தியம் மாதிரி பேசாதடா. அப்படி பார்த்தா அஸ்வினி சித்தி என்ன பாவம் பண்ணுனாங்க. அவங்களுக்கு ஏன் இவ்ளோ பெரிய தண்டனை. நம்ம குடும்பத்துல வந்து சேர்ந்ததுக்காகவா? இதெல்லாம் ஒரு முடிவுக்கு வந்தா போதும். மறுபடியும் மறுபடியும் இழப்பை தாங்க முடியாது நந்து…” என்ற விஸ்வயுகாவை தோளோடு அணைத்துக் கொண்டான்.

“உன்னாலயும் தாங்க முடியாத மாதிரி தான யுக்தாவாலையும். அவனுக்கும் ஏன் உன் இழப்பை குடுக்குற விஸ்வூ?” எனக் கேட்டதும், “குறிஞ்சியும் தான் உன்னை விரும்புனா, நீ மட்டும் அவள ஹர்ட் பண்ணலையா?” என எதிர்கேள்வி கேட்க, “நான் என்ன கேட்குறேன் நீ என்ன பேசுற?” எனும்போதே அவர்களுக்குப் பின்னால் யுக்தா குரலை கனைக்கும் சத்தம் கேட்டது.

“ஷைலுவும் யுகாவும் ரூம்ல தூங்கட்டும்… நீ வா” என்று தன்னவளைப் பார்த்தபடியே கூற, நந்தேஷ் இருவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு ஹாலுக்குக் சென்றான்.

அங்கு ஷைலேந்தரி மட்டும் கண்ணில் நீர் தளும்ப நிற்க, அவளைக் கண்டு அதிர்ந்தவன், “நீ ஏன்டி கண்ணைக் கசக்கிட்டு இருக்க?” எனக் கேட்டதில், “யாருக்கும் நான் முக்கியம் இல்லைல. போ!” என்றாள் பாவமாக.

“ஹே லூசு. இதுங்க ரெண்டு பேரையும் பத்தி உனக்கு தெரியும்ல. இந்தக் கோபம் எல்லாம் எவ்ளோ நேரத்துக்கு தாங்கும். நீ நேரடியா பேசு. எல்லாம் சரியாகிடும்.” என்று தங்கையை ஆறுதல்படுத்தினான்.

தன் முன் கையைக் கட்டிக்கொண்டு நின்றவனைக் கண்டுகொள்ளாமல் விஸ்வயுகா அறைக்குள் செல்ல, அவள் கையைப் பிடித்து இழுத்தவன், நெஞ்சோடு மோத வைத்தான்.

“டேய்” திடீரென நேர்ந்த தாக்குதலில் அவள் திகைத்து முறைக்க, “என்னை மிஸ் பண்ணுவியா ஏஞ்சல்?” எனக் கேட்டான் பெருவிரலால் அவள் கையை வருடியபடி.

“உன்னை மிஸ் பண்றதுக்கு தான் ட்ரை பண்றேன். அப்பறம் ஏன் நான் உன்னை மிஸ் பண்ண போறேன்…” அசட்டையாகக் கூறினாலும் அவன் கிளம்பிய பிறகு இரு நாட்களென்றாலும் எப்படி இருக்கப்போகிறோம் என்ற நினைவே அவளை அச்சுறுத்தியது.

இப்போதெல்லாம் அருகிலேயே இருந்து அவளை பழக்கி விட்டது அவன் தானே. இரவும் பகலும் அவனது வாசமே அவளை வசப்படுத்தி வைத்திருக்கிறது.

முகத்தில் உணர்வுகளைக் காட்டாது அவள் உள்ளுக்குள் புழுங்கிக்கொண்டிருக்க, பெண்ணின் சங்கு கழுத்தில் முத்தமிட்டவன், சுடிதாருக்குள் ஒளித்து வைத்திருந்த மெல்லிய தங்கச் செயினை வருடி எடுத்து விட்டான்.

அவன் கையைப் பிடித்தவள், “என்ன செய்ற?” என முறைக்க, நெஞ்சோடு ஒட்டி இருந்த இதய வடிவ டாலருக்கு அப்படியே முத்தம் கொடுத்தான்.

மேனி சூடாக தவித்துப் போனாள் விஸ்வயுகா. “யுகி…” பல்லைக்கடித்து அவனைத் தள்ளி விட்டதில், “அறுந்து போன செயினை ஏன் கயிறுல கட்டி மாட்டி இருக்க. நான் சரி பண்ணி தரேன். இல்லன்னா வேற வாங்கிக்கலாம்” என அவள் நெற்றியோடு நெற்றியை முட்டினான்.

அவனிடம் இருந்து திரும்பியவள், “நீ சொன்ன கட்டுக்கதையை எல்லாம் நான் ஒன்னும் நம்பல. என்னை பொறுத்தவரை இது சித்தி எனக்கு வாங்கிக் குடுத்தது அவ்ளோதான். அவங்க ஞாபகமா நான் போட்டுருக்கேன்…” என்று தெனாவெட்டாக மனதை மறைத்துக்கொண்டாள்.

அத்தியாயம் 85

மென்னகை புரிந்த யுக்தா, “ஓஹோ நான் சொன்னது எல்லாம் கட்டுக்கதையாக்கும்… வேற யார் சொன்னா நம்புவ ஏஞ்சல்” என அவள் கூந்தலை வாசம் பிடித்து இடையைப் பிடித்து இழுத்தான்.

“விட்டுத் தொலைடா” எனத் துள்ளி விலகியவளுக்கு ஒவ்வொரு தொடுகையும் அவனுடன் இணையவே சொல்லி துடித்தது.

“சொல்லுடி வேற யார் சொன்னா நம்புவ? அஸ்வினி அம்மாவே வந்து சொல்லணுமோ?” எனப் புருவமொன்றை மேலேற்றி கேட்க,

“ஆமா, அவங்க வந்து சொல்லட்டும்” என அவளும் நக்கலாகப் பதில் அளிக்க, பால்கனித் திண்டில் சாய்ந்து மீண்டும் புருவம் உயர்த்தினான்.

‘பார்வையைப் பாரு’ என வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டு அவள் திரும்பி நடக்க எத்தனித்து பின் சடாரென நின்று விட்டாள்.

அவனோ இன்னும் நிலையை மாற்றாமல் அவளை அதே அழுத்தத்துடன் பார்த்திருக்க, “இப்… இப்ப என்ன சொன்ன?” கேட்கும்போதே கண்கள் குளம் கட்டியது.

“நீ கேட்டதுக்கு பதில் சொன்னேன்” அசராமல் அவளை மடக்கினான்.

அவனது சட்டையைப் பிடித்தவள், “இப்போ நீ என்ன சொன்ன?” என அழுத்திக் கேட்டதில், யுக்தா அமைதியையே பதிலாகத் தந்தான்.

“யுகி விளையாடாதடா… என் மூளை என்னன்னவோ கற்பனை பண்ணுது.” சொல்லும்போதே குரல் நடுங்கியது.

அவன் அப்போதும் முகம் இறுக அமைதியுடன் நிற்க, “வாயைத் திறந்து ஏதாவது சொல்லு யுகி. என்னை சோதிக்காதடா!” எனத் தேம்ப, “டெல்லிக்கு வர்றியாடி?” என்றான் நிதானமாக.

“நீ இன்னும் நான் கேட்டதுக்கு பதில் சொல்லலைடா” இதயம் துடிதுடிக்க அவள் கேட்டதும்,

“டெல்லிக்கு வர்றியான்னு கேட்டேன். சில கேள்விக்கு பதில் சொல்றது கஷ்டம்” என்றவன் அவளது கன்னத்தை பிடித்துக்கொள்ள, “ஏன்டா என்னை கொல்ற…” எனத் தளர்ந்து அவன் மீதே சாய்ந்து விட்டாள்.

அவளை இறுக்கி அணைத்துக் கொண்டவன், “என் பாரத்தை தான் நீ தாங்க மாட்டேன்னு சொல்லிட்டியே…” என்று அவளது காதோரம் கிசுகிசுக்க, அவன் நெஞ்சிலே படபடவென அடித்தாள்.

“சித்… சித்தி…” கடினப்பட்டு வார்த்தைகளைக் கோர்த்தவளுக்கு கேள்வி கேட்க கூட பயமாக இருந்தது.

கண்ணீர் வேறு கண்ணை மறைக்க, இவர்களது அடிபிடி சண்டையைக் கேட்டு மற்ற மூவரும் அங்கு வந்து விட்டனர்.

“என்ன ஆச்சு மறுபடியும் உங்களுக்கு?” மைத்ரேயன் கேட்டதில், “இவனை வாயை திறந்து சித்தி பத்தி சொல்ல சொல்லுடா. அவங்க உயிரோட இருக்காங்க…” எனக் கேவியபடி விஸ்வயுகா கூறியதில் மூவருமே அதிர்ந்தான்.

“என்னடி உளறிட்டு இருக்க?” ஷைலேந்தரி அதட்டியதும், “நீ கேளுடி உன் அத்தான்கிட்ட. அந்த சைக்கோ நான் கேட்டா சொல்ல மாட்டேங்குறான்” என்று தரையில் சரிந்து அமர, அப்போதும் அவன் அசையவே இல்லை.

“அத்தான் என்ன இது? சித்தி இறந்துட்டாங்கன்னு தான அவங்க பாடியை கொண்டு வந்தாங்க” ஷைலேந்தரிக்கு நெஞ்சமே அதிவேகத்தில் துடித்தது.

“அது அம்மாவோட பாடின்னு கண்ணால பார்த்தீங்களா?” யுக்தா அதே நிதானத்துடன் கேள்வி எழுப்ப, நந்தேஷ் அதிர்வில் தலையில் கையை வைத்தான்.

“அவங்க பேஸ் முழுக்க டேமேஜ் ஆகி இருக்கு. சோ மத்த அடையாளம் வச்சு தான் அது சித்தின்னு கன்பார்ம் பண்ணுனோம். அந்த நேரத்துல நாங்க எல்லாருமே விஸ்வூவைப் பத்தின கவலைல இருந்ததுனால அதை ரொம்ப அலசி ஆராயல.” என்றான் வேதனையுடன்.

மைத்ரேயனோ, “எனக்குப் புரியல. ஆண்ட்டி உண்மையாவே உயிரோட இருக்காங்களா?” என்றவனுக்கும் இன்னும் நம்ப இயலவில்லை.

“அதை நேர்ல வந்து நீங்களே பார்த்துக்கோங்க! இப்போ தூங்கலாம்” எனப் பட்டும் படாமல் கூறி விட்டு விஸ்வயுகாவின் அருகில் அமர்ந்து அவள் தலையில் கையை வைத்தான்.

அதனை வெடுக்கென தள்ளி விட்டவள், “கெட் லாஸ்ட்” என்று உச்சஸ்தாதியில் கத்த, “நேர்ல வந்து பார்த்துக்கோயேன் உன் சித்திய…” வாயைத் திறந்து நல்வார்த்தை கூறியதில் கண்ணில் இருந்து நீர் சரசரவென வழிந்தது அவளுக்கு.

மற்ற மூவருமோ நடப்பதை உணரவே மறுத்தனர். விடியும் வரை பிரம்மை பிடித்தது போலவே இருந்தனர் நால்வரும்.

குறிஞ்சி நேராக விமான நிலையத்திற்கு வந்து விட்டாள். வந்தவள் மற்றவர்களை பார்த்து அதிர்ந்து, “என்ன எல்லாரும் எங்களை சென்ட் ஆப் பண்ண ஏர்போர்ட் வரைக்கும் வந்துருக்கீங்களா?” என வியப்பாகக் கேட்டதில் நந்தேஷ் நிமிர்ந்து முறைத்தான்.

“உனக்கும் தெரியும் தான சித்தி உயிரோட இருக்குறது” என்றவனின் கேள்வியில் திருதிருவென விழித்தவள், அருகில் நின்றிருந்த விஸ்வயுகாவின் பார்வையில் பொசுங்கிப் போனாள்.

அனைவரும் டெல்லிக்கு சென்றிறங்கியதும், “பர்ஸ்ட் என் வீட்டுக்குப் போயிட்டு ரெப்ரெஷ் ஆகலாம்” என்ற யுக்தாவை தீப்பார்வை பார்த்தாள் விஸ்வயுகா.

“சித்தி உன் வீட்லயா இருக்காங்க?” என்ற கேள்விக்கு இல்லை என மறுப்பாக தலையசைக்க, “அப்போ அவங்க இருக்குற இடத்துக்கு கூட்டிட்டுப் போ” என்றாள் உத்தரவாக.

பெருமூச்சுடன் அவர்களை விமான நிலையத்திலிருந்தே அவன் அழைத்துச் சென்ற இடம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.

அந்த இடத்தைக் கண்டதுமே நால்வருக்கும் நெஞ்சை அடைத்தது.

“யுகி…” எனப் பேச வந்தவளின் உதட்டை ஒரு விரலால் அடைத்தவன், “எதுவும் கேட்காத. எதுவா இருந்தாலும் நேர்ல பார்த்து தெரிஞ்சுக்கோ” என்றவனின் விழிகள் உணர்வுகளை இழந்திருந்தது.

அதில் மற்றவர்களும் வாயை மூடிவிட, அவர்களை உள்ளே அழைத்துச் சென்றான்.

சில பல ப்ரொசீஜர்களுக்கு பிறகு அவர்களை உள்ளே விட, பால்கனி தோட்டத்துடன் கூடிய பிரீமியம் அறை ஒன்றிற்கு அழைத்துச் சென்றான்.

வெளிச்சமும் காற்றோட்டமும் உள்ள அறையில் அஸ்வினி நாற்காலியில் அமர்ந்து தோட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தார்.

ஐந்து வருடங்களில் அவரது உருவத்தில் ஏகப்பட்ட மாறுதல்.

முடியெல்லாம் நரைத்து, ஒட்ட வெட்டப்பட்டு, முகத்தில் சுருக்கம் தோன்றி ஆளே மாறி இருந்தார்.

அவரைக் கண்ட விஸ்வயுகா கால்கள் தள்ளாட அறை வாயிலிலேயே நின்று விட, கண்ணில் நீர் முட்டி மோதியது.

நந்தேஷ் பொங்கிய வேதனையுடன் “சித்தி” என அவர் அருகில் செல்ல, ஷைலேந்தரி உடைந்து அமர்ந்தாள்.

இங்கு வரும் வரையிலும் கூட இவர் உண்மையில் உயிருடன் இருப்பார் என்ற நம்பிக்கையே இல்லை. விஸ்வயுகாவை டெல்லிக்கு வரவைக்க யுக்தா செய்யும் நாடகமென்றே எண்ணிக்கொண்டிருந்தாள்.

மைத்ரேயனுக்கு கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல தான் இருந்தது. இவனென்ன இறந்து விட்டாரென எண்ணியவரை மீண்டும் கொணர்ந்து மேஜிக் காட்டிக்கொண்டிருக்கிறான் என்றே எண்ணி அதிசயித்துப் போனான்.

ஆனால் அஸ்வினி யாரையும் பார்க்கவில்லை. அவர் பார்வை தோட்டத்திலேயே நிலைத்து இருந்தது.

சித்தி நந்தேஷின் குரல் கூட அவரை அசைக்கவில்லை.

“சித்தி என்னை பாருங்க” அவர் கையைப் பிடித்தும் அவரிடம் எந்த அசைவும் இல்லை. அதில் அவனுக்கு கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

“நந்து…” என அவனை கண்ணிலேயே சமன்படுத்திய யுக்தா, “ம்மா” என அழைக்க அப்போது மட்டும் தான் அவர் பார்வை யுக்தாவிடம் நிலைத்தது.

அவன் கன்னத்தை மெல்லப் பிடித்து கொண்டவர், பின் மீண்டும் தோட்டத்தை வெறிக்க அவரின் நிலையை ஏற்க இயலாமல் ஷைலேந்தரி அவர் மடியில் சாய்ந்து அழுதாள்.

விஸ்வயுகாவிற்கு அங்கு நிற்கவே மூச்சு முட்டியது. வேக வேகமாக வெளியில் சென்று மருத்துவமனை வாசலுக்குச் சென்று விட்டாள். அங்கு போடப்பட்டிருந்த மர பெஞ்சில் அமர்ந்து விட்டவளுக்கு தலையே சுற்றியது.

என்ன கேள்வி கேட்பது? யுக்தா கூறும் பதிலுக்கு என்ன மாதிரியான எதிர்வினைகளை தருவது என்றே அவளுக்குப் புரியவில்லை.

விஸ்வயுகா அங்கு இல்லை என்பதை உணர்ந்து யுக்தாவும் வெளியில் வந்தான்.

“ஏஞ்சல்…” என்றவனின் மென் அழைப்பில் கரைந்து போனவள், “என்னடா இது… ஏன்டா இப்படி…” மேலும் கேட்க திராணியற்று கதறினாள்.

அவளை நெஞ்சில் சாய்த்து இறுக்கிக்கொண்டவனுக்கும் விழிகளில் நீர் நிறைந்திருந்தது.

“ட்ராமாட்டிக் ப்ரெய்ன் இஞ்சூரி. தலையில ஏற்பட்ட பலத்த காயத்துல அவங்க சாகுற நிலைமைக்கு போய்ட்டாங்க” என்றவன் அன்று நிகழ்ந்ததை எடுத்துரைத்தான்.

அன்று வெண்டிலேட்டர் உதவியால் மூச்சு விட்டுக்கொண்டிருந்தவரின் முன் அமர்ந்து அழுது தீர்த்த யுக்தாவிற்கும் அவர் பிழைப்பாரென்ற நம்பிக்கையெல்லாம் இல்லை. ஆனால் அவனது குரல் அவரை உயிரை மீட்டு எடுத்ததோ என்னவோ இதயம் சீராக தொடங்கியது.

இறந்தே விட்டார் என்றே விஷயம் கசிந்து இருக்க, அவர் ஆபத்து எல்லையைத் தாண்டி விட்டது பெரும் மகிழ்ச்சி கொடுத்தாலும் யுக்தாவை சற்று சிந்திக்க வைத்தது.

அவர் உடல்நிலை சரியாகும் முன்னே அவரைக் கொலை செய்ய வீட்டிலேயே எதிரி இருப்பதை உணர்ந்தவனுக்கு, அவரை மீண்டும் அந்த வீட்டினரிடம் ஒப்படைப்பதில் விருப்பமில்லை. சௌந்தராக இருப்பினும், அந்நிலையில் அவனுக்கு யாரையும் நம்பத் தோன்றவில்லை.

குறிஞ்சியிடம் கலந்தாலோசித்து, தங்களுக்கு பழக்கமான மருத்துவரை வைத்து வெகு கடினப்பட்டே அவருக்கு பதில் முகம் சிதைந்த வேறொரு டெட் பாடியை மாற்றி வைத்தான்.

அஸ்வினிக்கு மூளையில் பாதிப்பு என்பதால் அவரை டெல்லிக்கு அழைத்துச் சென்று விட்டான். அனைத்தும் சுமூகமாக நடைபெறவில்லை என்பது அவனது வதங்கிய வதனத்திலேயே புரிந்தது. அதன்பிறகு அவருடன் சேர்ந்து அவனும் போராட வேண்டிய நிர்பந்தம்.

மூளையில் ஏற்பட்ட பாதிப்பில் அனைத்தும் மறந்து போனவருக்கு அவனையே யாரென்று தெரியவில்லை. விழித்து இருப்பார். பொம்மை போல இருப்பார். உணவு கொடுத்தால் உண்ணுவார், மருந்து மாத்திரைகளுடன் அவரும் ஒரு ஆளாக இயந்திரத்தன்மையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இழப்பை விட பெரும் வேதனை இது என்பது அவளுக்கும் புரிந்தது.

சில நாட்களுக்கு முன்னதாக தான், அவருக்கு கொடுக்கப்படும் சிகிச்சை பலனடைந்து இப்போதைக்கு யுக்தாவை மட்டும் அடையாளம் காண செய்தது. அவனைப் பார்த்து மட்டும் ரியாக்ட் செய்வார். ஆனாலும், அவருக்கு பழைய நினைவுகளும் உணர்வுகளும் மீண்டும் திரும்பி விடும் என கடந்த நாட்களாகத் தான் மருத்துவரும் உறுதி கூறுகிறார்.

அவர் பழைய வாழ்க்கையைச் சேர்ந்தவர்களை அவருடன் பேச விட்டு உறவாட விட்டாள் சீக்கிரமே அவர் மீள வாய்ப்பு கிட்டும் என்ற மருத்துவரின் கூற்றை அவனால் ஏற்க இயலவில்லை.

இன்னும் சம்பந்தப்பட்ட ஆள்களைக் கண்டறிந்து தண்டனை வழங்காதபோது, இவர்களிடம் உண்மையைக் கூறி அவரது உயிருக்கு ஆபத்து விளைவிக்க அவன் தயாராக இல்லை. விஸ்வயுகாவின் மீதிருந்த கோபமும் ஒரு காரணம்.

“என்னைத் தப்பா நினைச்சு, என்கிட்ட உண்மையை சொன்னா என்னால சித்திக்கு ஆபத்து வரும்னு என்கிட்டயும் மறைச்சுட்ட அப்படி தான?” கோபமில்லை என்றாலும் ஆதங்கத்துடன் கேட்டாள்.

“வேற என்னடி செய்ய சொல்ற? உடனே உங்கிட்ட வந்து பேசுற அளவுக்கோ கோபத்தை காட்டுற அளவுக்கோ எனக்கு அப்போ நிலைமை இல்லை. அம்மாவைப் பார்ப்பேனா என் வேலையைத் தக்க வச்சுப்பேனா, என் காதலைக் காப்பாத்துவேனா ஒன்னும் புரியல. இங்க… இங்க அவ்ளோ வலிடி. வலியை கொட்ட யாரும் இல்லாம… முடியலடி!” என தனது மொத்த இதய பாரத்தையும் அவள் தோள் மீது முகத்தை அழுத்திக் கொட்டினான்.

அத்தியாயம் 86

ஐந்து வருடங்களாகப் பழி வாங்க வராமல் என்ன செய்து கொண்டிருந்தாய்? ஒருமுறை விஸ்வயுகா எழுப்பிய கேள்விக்கு விடை இப்போது புரிந்தது.

மருத்துவமனை வாசத்திலேயே வருடங்களைக் கடத்தி இருக்கிறான். இன்னும் அவர் மீண்டு வருவாரென்ற நம்பிக்கையுடனே அனைத்தையும் தொடர்ந்து கொண்டிருக்கிறான்.

இவன் மட்டுமில்லை என்றால் அஸ்வினி என்றோ இறந்திருப்பார். அது மட்டும் நிச்சயம்.

எதற்காக இதெல்லாம்? இவனை மாதம் ஒரு முறை பார்க்க வரும் மாற்றான் தாய்க்காகவா இவ்வளவும்… இத்தனை பழியும், இத்தனை வலிகளும்.

இவனை நன்முறையில் சந்திக்க இந்த விதி ஏன் விடவில்லை. தனக்கு மிக அருகில், தன்னுள்ளேயே புதைந்து இருக்கிறான்… ஆனால் மனதளவில் அவனைத் தூர நிறுத்த வைத்துவிட்ட இந்த சூழ்நிலைக்கு என்ன தான் பாவம் இழைத்து விட்டேன்!

விதியிடம் மன்றாடி காலத்தை மாற்றும் சக்தி யாருக்கும் இல்லை. கடந்து வரும் திறன் மட்டுமே நம்மிடம்.

இங்கு குறிஞ்சி அஸ்வினியின் நிலை பற்றி மற்றவர்களிடம் கூற, நெஞ்சம் கனத்தது.

“எப்போ சரி ஆகுமாம்?” ஷைலேந்தரி வேதனையுடன் கேட்க, “இப்போ பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் தான் கிடைக்குதுன்னு டாக்டர் சொல்றாங்க ஷைலு. சரி ஆகிடும்னு நம்பலாம்” என்றாள் பெருமூச்சுடன்.

“நிறைய செலவு ஆகியிருக்கும்ல என்ன செஞ்ச?” எப்படி அனைத்தையும் நிர்வகித்தான் என்ற பெருங்கவலை விஸ்வயுகாவை ஆட்கொண்டது.

அப்போது தானே வேலைக்குச் செல்லத் தொடங்கி இருந்தான். தனியாக, பின்புலம் எதுவும் இன்றி, தேற்ற ஆளுமின்றி… அஸ்வினியின் நிலையைத் தாண்டி, இவன் எப்படி கடந்து வந்தானென்ற ஆதங்கமே அவளை அதிகமாக ஆட்கொண்டது.

அஸ்வினியைப் பற்றித் தான் துருவுவாள் என எண்ணியவனுக்கு தன்னைப் பற்றி கேட்டதும் சற்றே வியப்பு தான்.

“குறிஞ்சியும் ஹெல்ப் பண்ணுனா. அப்போ அப்போ அவள் மட்டும் வந்து பார்க்கலைன்னா, சாப்பிட்டேனா தூங்குனேனான்னு கூட எனக்கே தெரியாது. எனக்காக டெல்லிக்கும் சென்னைக்குமா அலைஞ்சா. டெல்லிக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு வர்றேன்னு கூட சொன்னா. ஆனா அவ பேமிலியை அவள் தான் பார்த்துக்கணும். வேற ஆளும் இல்லை. அதனால முழுசா நானே மேனேஜ் பண்ணிக்கிட்டேன். கொஞ்ச நாள்ல பழகிடுச்சு. எனக்கும் ப்ரமோஷன் அது இதுன்னு வரவும் மேனேஜ் ஆகிடுச்சு.”

அவள் தோளில் சாய்ந்தபடியே இருந்தவன், “லைஃப்ல நான் இவ்ளோ தனிமையை உணர்ந்ததே இல்லைடி… இந்த அஞ்சு வருஷமா தனிமை என்னை கொன்னுடுச்சு. சுனாமில என் அம்மா இறந்தப்பறம் அஸ்வினி அம்மா எனக்குத் துணையா இருந்தாங்க. அவங்களும் இல்லைன்னு ஆனதும் ரொம்ப… ரொம்ப… ப்ச்! விடு” சொல்லக்கூட மனம் வரவில்லை. அத்தனை அழுத்தமாக இருந்தது.

“சித்திக்கு சரி ஆகிடும் யுகி…” அவன் தலைமீது அவளும் சாய்ந்து கொண்டாள்.

“சரி ஆகணும்டி. இப்போதைக்கு என்னை மட்டும் தான் தெரியுது.”

“இதுவே நல்ல முன்னேற்றம் தான. சித்தப்பாவுக்கு கூட இன்னும் தெரியாதா?”

“ம்ம்ஹும்” அவன் இடவலமாகத் தலையாட்டி கன்னத்தை அவளது தோள்பட்டையில் தேய்த்தான்.

“சொல்லிடலாம்டா. பாவம் மனுஷன் ரொம்ப நொடிஞ்சு போய்ட்டாரு” என்றவளை நிமிர்ந்து பார்த்தவன், “அக்கியூஸ்ட்டை பிடிச்சுட்டு சொல்லலாம்னு நினைச்சேன்” என்றான்.

“ஒருவேளை சித்தப்பாவைப் பார்த்ததும் அவங்க உடல்நிலைல மாற்றம் வரலாம்ல? இவ்ளோ வருஷமா மருந்து மாத்திரைல அவங்களை ஓரளவு தேத்தியாச்சு. அவங்களுக்கு பழைய உணர்வுகள் வரணும்ன்னா, உணர்வுப்பூர்வமாவும் ட்ரீட்மெண்ட் குடுக்கணும் தான?” எனத் தெளிவாய் பேசியவளை, ரசித்தே தொலைத்தது அவனது விழிகள்.

தனக்குள் பொதிந்திருக்கும் வேதனையை தனக்குள்ளேயே முடக்கிக்கொண்டு தன்னைப் பற்றியும் அஸ்வினியைப் பற்றியும் சிந்திக்கும் பெண்ணின் அழகியலில் மீண்டுமொரு முறை மீளாக்காதல் கொண்டான் ஆடவன்.

அஸ்வினியின் இருப்பை ஏற்று அவரது நிலையை கிரகித்துக் கொள்ளவே அன்றைய நாள் கழிந்தது.

“ஹாஸ்பிடல்ல இத்தனை பேர் இருக்க அலவுட் கிடையாது. என் பிளாட்டுக்குப் போகலாம்” என்று அனைவரையும் அழைத்துக்கொண்டு தனது குவார்ட்டர்ஸிற்கு சென்றான் யுக்தா சாகித்யன்.

இரு படுக்கையறை கொண்ட அளவான வீடு. சென்னையில் உள்ள அபார்ட்மெண்டைக் காட்டிலும் சற்று பெரியது தான்.

பெண்கள் ஒரு அறையிலும் ஆண்கள் ஒரு அறையிலும் இருந்து கொண்டனர்.

“யப்பா ராசா இன்னும் ஏதாவது டிவிஸ்ட் வச்சிருந்தா சொல்லிடு” நந்தேஷ் யுக்தாவைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட, “ம்ம்க்கும் இதுக்கு மேல பாடி தாங்காது” என்றான் மைத்ரேயனும்.

“வேற ஏதாவது இருந்தா யோசிச்சு சொல்றேன்” நமுட்டு நகை புரிந்த யுக்தாவை முறைத்தனர்.

பின் மைத்ரேயனே “எப்ப தான் வில்லனைக் கண்டுபிடிப்போம் யுக்தா. எனக்கு பயமாவே இருக்கு. அனுராவோட லிப் பாம்ல பாய்சனைத் தடவின மாதிரி அந்த முகம் தெரியாத பரதேசி எதுவும் செஞ்சுடுவானோன்னு…” என்றதில்,

“எனக்கும் உறுத்துது. ஆனா, கவனமா இருக்கலாம். மோஸ்ட்லி அவுட்சைட் திங்ஸ அவாய்ட் பண்ணலாம். ஸ்லோ பாய்சன் கிடைக்கக்கூடிய அத்தனை இடத்தையும் லாக் பண்ணி விசாரிக்க சொல்லிருக்கேன். அண்ட் சைன்டிஸ்ட் பாஜி இறக்குறதுக்கு முன்னாடி என்ன என்ன ரிசர்ச் பண்ணிருக்காரு, அவர் கூட ஹெல்ப்பா இருந்த ஆள் யாரு எல்லாத்தையும் விசாரிக்க சொல்லிருக்கேன். கண்டிப்பா ஒரு பிரேக் த்ரூ கிடைக்கும். பாக்கலாம்” என்றான்.

நந்தேஷோ, “அது கிடைக்கட்டும். ஏன்டா நீயாவது குறிஞ்சி என்னை பாலோ பண்ணுனதை சொல்லிருக்கலாம்ல. நான் ஏதோ சீரியல் கில்லர் தான் பாலோ பண்ணுனதா நினைச்சு இடைப்பட்ட நாளுல பீதி ஆகிட்டேன் தெரியுமா?” என்றான் பரிதாபமாக.

“ஒரு பொண்ணு உன் பின்னாடி சுத்துறது கூட தெரியல. நீ எல்லாம் வந்துட்ட லவ் பண்ண” என்று யுக்தா அசிங்கமாகப் பேச வர, “நிறுத்து. உன் பிரெண்டு எப்படி எல்லாம் என்னை பாலோ பண்ணுனான்னு சொல்றேன் கேளு” என்றதும் மைத்ரேயன், “டேய் அப்போ உனக்கும் பாலோ பண்ணுனது தெரியுமா: என்றான் வியப்பாக.

“அடேய் இல்லைடா. இப்போ தெரிஞ்சுக்கிட்ட விஷயத்தை வச்சு அப்போ நடந்ததை லிங்க் பண்ணி பார்த்தேன். ரொம்ப கேவலமா இருக்கு” என்றவன், மேலும் தொடர்ந்தான்.

“ஒரு தடவை நான் பைவ் ஸ்டார் ஹோட்டல்ல சாப்பிட போனேன். அங்க முன்னாடியே டேபிள் புக் பண்ணி வச்சுருந்தேன். காலேஜ் ப்ரெண்ட்ஸ் கூட மீட் அப்ன்றனால சீக்கிரமே போய்ட்டேன். அங்க போனா நான் புக் பண்ணி வச்சிருந்த டேபிள்ல ஒரு லாவெண்டர் பூ பொக்கே இருந்துச்சு” என்றான்.

யுக்தாவோ, “பாத்துக்கடா… என் ப்ரெண்டு எவ்ளோ ரொமான்டிக்கா ப்ரொபோஸ் பண்ண ட்ரை பண்ணி இருக்கான்னு…” என சிலாகிக்க,

“நிறுத்து மச்சான். வெளில இருந்து பாக்குற உங்களுக்கு தான் அது ரொமான்ட்டிக். எனக்கு எவனோ பொக்கேல பாம் வச்சு என் டேபிள்ல வச்சு இருக்கான்னு பீதியாகி அதை சர்வரை வச்சே எடுக்க வச்சுட்டு, பயத்தோடவே உட்காந்துருந்தது எனக்கு தான் தெரியும்” என்றதில் இருவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

“அப்பறமும், ஒரு தடவை சினிமாவுக்குப் போயிருந்தேன். அதுவும் தனியா. அப்போ கரெக்ட்டா என் பக்கத்துல அதே லாவெண்டர் கலர் பொக்கே. எவனோ என்னை பாலோ பண்றான்னு பாதி படத்தோட ஓடி வந்தவன் வீட்டுக்கு வந்துட்ட தான் ஓட்டத்தை நிறுத்தினேன்” எனப் பரிதாபமாகக் கூறியதில் மீண்டும் வெடித்து சிரித்தனர்.

யுக்தா, “அடப்பாவி… யார் பொக்கே குடுக்க ட்ரை பண்ணாங்கன்னு கூட நீ பார்க்கலயா?” எனச் சிரிப்பினூடே கேட்க, “இல்லையே… அப்போ வேற நான் போனது ராட்சசன் படத்துக்கு. அதுல வேற சைக்கோ கில்லரைப் பார்த்து மிரண்டு போயிருந்தேன். இதுல இது வேறன்னு தான் தோணுச்சு. லவ்வ எல்லாம் யாரும் நேர்ல சொல்லவே மாட்டீங்களாடா” என்று தலையில் அடித்துக் கொண்டான்.

“சொல்லிருந்தா மட்டும் அப்படியே புருஞ்சு கிழிச்சுருக்கும் உனக்கு. அய்யயோ ஏதோ சிபிஐ ஆபிசர் அரெஸ்ட் பண்ண வந்துருக்காங்கன்னு திரும்பிப் பார்க்காம ஓடிருப்ப பரதேசி…” என யுக்தா கேலி செய்திட, மைத்ரேயன் ஹை ஃபை கொடுத்துக்கொண்டான்.


“சாரிக்கா. இன்னும் என் மேல கோபமா?” குறிஞ்சி குளியலறையில் இருக்க, விஸ்வயுகாவின் நாடியைப் பிடித்து ஷைலேந்தரி கெஞ்சினாள்.

அவள் கையைத் தட்டி விட்டவள், “எனக்காக உன் காதலை விட்டுக்கொடுத்தது தப்பு தான?” காட்டத்துடன் விஸ்வயுகா கேட்டதில் “தப்பு தான். சாரி…” என்றாள் உர்ரென.

பின் அவளே, “நீ மட்டும் அத்தானுக்காக தான உன் காதல விட்டுத்தர்ற?” எனக் குற்றப்பார்வை வீசினாள்.

விஸ்வயுகா சட்டென அமைதியாகி விட, “உன் காதலை விட்டுத்தர நினைக்கிறதுலயும் அன்பு இருக்கு. என் காதலை நான் விட்டுக்கொடுக்க நினைச்சதுலயும் அன்பு இருக்கு. நீ செய்றது சரின்னா, நான் செஞ்சதும் சரி தான். நீ செய்றது தப்புன்னா, நான் செஞ்சதும் தப்பு தான்…” ஜீன்ஸ் படத்தில் வரும் ராதிகாவின் மாடுலேஷனில் தமக்கையைப் போட்டு வாங்கினாள்.

‘ஏதோ சடனா நடந்த கிளுகிளுப்பு ரொமான்ஸ்ல நான் லைட்டா பயந்துட்டேன். அதுக்காக பச்சை மண்ணை ஆளாளுக்கு திட்டுறாங்க…’ என்ற கடுப்பில் இப்போது தன்னை மீட்டுக்கொண்டாள்.

“பேச்சை மாத்தாத!” விஸ்வயுகா அதட்ட, “நான் சொல்லட்டா அத்தான்கிட்ட நீயும் அவரை விரும்புனன்னு?” கண்ணைச் சுருக்கி ஷைலேந்தரி கேட்டதும் விஸ்வயுகா திகைத்தாள்.

“சொல்ல மாட்டேன்னு எனக்கு நீ ப்ராமிஸ் பண்ணிருக்க…”

“மீறி சொன்னா? பாவம் அந்த மனுசனைப் போட்டு பாடா படுத்துற.”

“சொல்லாத அவ்ளோதான்” திட்டவட்டமாக விஸ்வயுகா கூற, “ஏன்டி இப்படி செய்ற?” என்றாள் சலிப்பாக.

“சொல்ல மாட்ட தான…” கெஞ்சல் தொனியில் கேட்டவளுக்கு ஏனோ அழுகையே வந்தது.

“அச்சோ விஸ்வூ! சரிடி சொல்லல. ப்ளீஸ் நீ ப்ரீயா விடு…” என்று கண்ணைத் துடைத்து விட்டாள். மனதினுள் நேரம் பார்த்து யுக்தாவிடம் பேசி விட வேண்டும் என்ற எண்ணமும் வந்து போனது.

குறிஞ்சி குளியலறையை விட்டு வரும் அரவம் கேட்க, முகத்தை நன்றாக துடைத்த விஸ்வயுகா இயல்பாக அமர்ந்தாள்.

“என்ன அக்காவும் தங்கச்சியும் ராசியாகிட்டீங்க போல…” எனக் கெக்களிப்புடன் அருகில் வர, இருவரும் அவள் மீது ஒன்றாக தலையணையை எறிந்தனர்.

“துரோகி, எங்களை வேவு பார்த்ததும் இல்லாம, என் லவ்வ நானே சொல்றதுக்கு முன்னாடி என் ஆள்கிட்ட போட்டுக் குடுத்துட்டியேடி” என மூச்சிரைத்தாள் ஷைலேந்தரி.

“நீ சொல்றதுக்குள்ள வயசாகிப்போயிடும். இருக்குற பிரச்சனைல நீங்க வேற லவ்வா லவ்வு இல்லையான்னு எப்ப பாரு பொலம்பிக்கிட்டு…” என்று நக்கலாக சிரித்ததில், “அங்க மட்டும் என்ன வாழுதாம்” என வாரினாள் விஸ்வயுகா.

“நான் தண்ணி குடிச்சுட்டு வரேன்…” என்று வேகமாக நழுவி அடுக்களைக்குள் புகுந்து கொண்ட குறிஞ்சி அங்கு நந்தேஷ் நிற்பதைக் கண்டு முகம் மாறி திரும்ப எத்தனித்தாள்.

அவளைக் கண்டதும் “குறிஞ்சி” என அழைத்து நிறுத்தினான் நந்தேஷ்.

எப்போது கிண்டலாக வரும் “அழகி” என்ற அழைப்பு நின்று போனது கூட அவளை வெகுவாய் வருத்தியது. காதலை மறைக்கப் பழகிவிட்டவள் இதையும் சேர்த்தே மறைத்துக் கொண்டாள்.

அத்தியாயம் 87

குறிஞ்சி நின்று விட்டதும் அவனுக்கும் வார்த்தைகள் தொண்டையிலேயே நின்று போனது.

“என்னன்னு சொல்லுங்க…” விழிகளைத் தரையில் தாழ்த்தியபடி அவள் கேட்க,

“அது… ஹான் காபி வேணுமா?” எனச் சம்பந்தமின்றி கேட்க, வேண்டாமென தலையசைத்தவள், “நான் ரூம்க்கு போகட்டா” என்றாள்.

அதற்கு பதில் கூறாமல் நேரத்தைக் கடத்தியவன், “நிஜமாவே நீ என்னை விரும்புனியா?” எனக் கேட்டான் தடுமாற்றமாக.

வெடுக்கென விழி நிமிர்த்தி அவனைப் பார்த்த பாவையின் விழி வீச்சின் சூடே காதலை உணர்த்தியது தான். ஆனால்?

என்னவென்று அவளுக்குப் புரிய வைப்பதென்று தெரியாமல் மருகினான்.

“குறிஞ்சி… வந்து ரோஜா” எனக் கூற வரும் முன் அவனைத் தடுத்தவள், “எனக்குத் தெரியும் நந்து. உங்களால ரோஜாவை மறக்க முடியாது அதுதான. எனக்குப் புரியும். அப்போ ஏதோ ஜஸ்ட் டைம் பாஸ்க்காக இதெல்லாம் பண்ணிட்டு இருந்தேன். அப்பறம் தான் தெரிஞ்சுது எவ்ளோ சில்லியா பிஹேவ் பண்ணிருக்கோம்னு” என்று மடமடவென பேசி விட்டு அறைக்கு சென்று விட்டவளின் திசையையே வெகுநேரமாக வெறித்திருந்தான் நந்தேஷ்.

விஸ்வயுகாவின் அழுத்தத்தில் சௌந்தரை டெல்லிக்கு வரச் சொல்லிப் பணித்தான் யுக்தா சாகித்யன்.

அஸ்வினியின் இறப்பிற்குப் பிறகு அவனாக போன் செய்வது இதுவே முதன்முறை.

என்னவாகினும் தனது மகனாக இத்தனை வருடங்கள் அலைபேசி வாயிலாகவே தன்னை தந்தையாக உணர வைத்தவன். இப்போது தன்னை வரக்கூறியதும் அவருக்குள் சிறு ஊற்றாய் மகிழ்ச்சி.

அன்று மாலையே டெல்லிக்குக் கிளம்பினார். அவனோ விமான நிலையத்திலிருந்து நேராக மருத்துவமனைக்கு வரக்கூறியதில் பதறினார்.

“என்ன ஆச்சு யுகி நீ ஓகே தான?” என்ற நிஜப் பதற்றம் அவனையும் உருக்கியது.

“எனக்கு ஒன்னும் இல்லப்பா. நீங்க வாங்க” என்று அழைப்பைத் துண்டித்தவனுக்கு அஸ்வினியின் இருப்பு இனி வெட்ட வெளிச்சமாகி விடுமென்று புரிந்தது. எப்படியும் சிவகாமியும் மோப்பம் பிடித்து இருப்பார்.

கொலைகாரர்கள் சுதாரிக்கும் முன்னே துரிதமாக அனைத்தையும் நிகழ்த்த வேண்டும். அவனைப் பொறுத்தமட்டில் ஆங்காங்கே சில கணிப்புகள் இருந்தது. அந்த கணிப்புகள் நோக்கி தான் இரு வழக்கையும் ஒன்றாக நகர்த்திக் கொண்டிருக்கிறான். இரண்டுமே ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தது என்று மட்டும் அவனுக்குப் புரிந்தது.

மனதில் எழுந்த சந்தேகங்களை மனதோடு வைத்துக் கொண்டவன், யாரிடமும் பகிரவில்லை.

சௌந்தரும் மருத்துவமனைக்கு வந்து விட, வந்தவருக்கு பேரதிர்ச்சியும் பேரின்பமும் ஒன்றாய் கிடைத்தது போல இருந்தது அஸ்வினி உயிருடன் மீண்டது.

சில கணங்கள் அவருக்கு கண்ணை இருட்டி விட்டது. “ப்பா…” யுக்தா அவரைப் பிடித்துக் கொள்ள, அவனிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு கைகள் நடுங்க மனையாளின் அருகில் சென்றான்.

அவரோ எங்கோ வெறித்தபடி கட்டிலில் அமர்ந்திருக்க, “அஸ்வினிம்மா” என அழைக்க முற்பட்டதில் காற்றே வந்தது.

அப்போதும் அவர் திரும்பாமல் போனதில் குலுங்கி அழுதார். “சித்தப்பா” என விஸ்வயுகா அவர் முதுகை தடவிக் கொடுக்க, “ஐயோ இவளை இப்படி பார்க்க தான் நான் விரும்புனேனா… என்னால இன்னும் என்ன என்ன கஷ்டத்தை அனுபவிக்க போறாளோ…” எனக் கதறினார்.

ஷைலேந்தரி, “நீங்க தான சித்தப்பா இந்த நேரத்துல தைரியமா இருக்கணும். இறந்துட்டாங்கன்னு நினைச்சவங்க உயிரோட இருக்குறதே பெருசு தான. சரி ஆகிடுவாங்க சித்தப்பா” என்றாள் கண்கலங்க.

“அவள் குடும்பத்தை எல்லாம் விட்டுட்டு எனக்காக வந்தா… அவளை நான் நல்லா கூட வச்சுக்கல. பிசினஸ் லாஸ் ஆகுது லாஸ் ஆகுதுன்னு காரணம் புரியாமல் அது பின்னாடியே போய்ட்டேனோன்னு இவள் இல்லாத எத்தனை நாள் தூங்காம செத்துட்டு இருந்தேன்… இப்போ உயிரோட இருந்தும் என்னை விட்டு இவளை பிரிச்சு வச்ச விதியை நான் என்னன்னு சொல்ல…” எனத் தேம்பி சத்தமிட்டு அழுதார்.

“விதி பிரிக்கல அங்கிள். உன் வளர்ப்புப் புள்ள தான் பிரிச்சு வச்சுருக்கு” என்று யுக்தாவை சீண்டினான் மைத்ரேயன்.

விஸ்வயுகாவோ, “குடும்பமா? சித்திக்கு குடும்பமே இல்லைன்னு தான சொன்னாங்க…” எனச் சந்தேகமாகக் கேட்க, அவர் மேலும் குலுங்கினார்.

“சித்தப்பா பதில் சொல்லுங்க முதல்ல” அவள் அதட்டியதில், “நான் என் காதல்ல ரொம்ப சுயநலமா இருந்துட்டேன் யுகாம்மா. இவள் காலேஜ் படிச்சுட்டு இருக்கும் போது பார்ட் டைமா தான் நம்ம பத்திரிகைல சேர்ந்தா. அழகா எழுதுவா. இவள் எழுத்துக்கு நான் அடிமையாகிட்டேன். அவளுக்கும் சேர்ந்து தான். ஆனா, பயம் அதிகம். என்னைப் பார்த்தே முதல்ல எல்லாம் பயப்புடுவா. விலகி விலகி போவா. அப்போ வெறும் 18 வயசு தான் இவளுக்கு. இவளோட பயம் எனக்கு இன்னும் பிடிச்சுப் போச்சு. காதலிச்சேன். எதை பத்தியும் கவலை இல்லாம இவளைக் காதலிச்சு கல்யாணம் பண்ணியே ஆகணும்னு நினைச்சேன். போக போக இவளுக்கும் என்மேல பிடித்தம் இருந்துச்சு. அதைக் காதலா மாத்த நிறைய குட்டிக்கரணம் அடிச்சேன்” சொல்லும்போதே பழைய நினைவுகளில் அவரது இதழ்கள் விரிந்தது.

“ஒரு கட்டத்துல அவளும் என்னைக் காதலிக்க ஆரம்பிச்சா. அந்தக் காதலை கல்யாணத்துல முடிக்க என் வீட்ல பேசிப்பார்த்தும் எதுவும் நடக்கல. என் அம்மா, அப்பா அடுத்தடுத்து இறந்து போகவும், என் வீட்ல அதை வச்சு என்னை ப்ரெய்ன் வாஷ் செஞ்சு வேற கல்யாணம் செஞ்சு வைக்க பார்த்தாங்க. நான் ஒத்துக்கல. அஸ்வினிய கல்யாணம் பண்ணிட்டு வந்தது வீட்ல யாருக்குமே பிடிக்கலன்னு எனக்குப் புரிஞ்சுது. அவளை அந்த வீட்ல வாழ விட்றதுக்காக நான் மட்டும் இல்ல அவளும் நிறைய சாக்ரிபைஸ் பண்ணுனா. என் அண்ணி மேல அவளுக்கு எப்பவும் பயம் தான்.

அவங்க, இவள் சம்பந்தப்பட்ட குடும்பத்து ஆளுங்க யாரும் இவளைத் தேடி வரக்கூடாதுன்னு சொன்னதுல பயத்துல எனக்கு யாரும் இல்லன்னு சொல்லிட்டா. அவங்களுக்கு பயந்து இவள் குடும்பத்து ஆளுங்க யாருன்னு என்கிட்ட கூட சொல்லல இவ… எனக்கு தெரிஞ்சுது அவள் சுயத்தை இழந்துட்டு தான் என்கூட வாழுறான்னு… ஆனா ஏதாவது பிரச்சினை ஆகி அண்ணி கோபப்பட்டு இவளை பிரிச்சுடுவாங்களோன்ற பயத்துல நிறைய விஷயத்தைக் கண்டும் காணாம இருந்துருக்கேன்.

அதுல ஒன்னு, அண்ணியால எங்க குழந்தை அபார்ட் ஆனதும் தான்” எனக் குமுறியதும் விஸ்வயுகாவும் நந்தேஷும் உறைந்து விட்டனர்.

“என்ன சொல்றீங்க?” மைத்ரேயன் திகைத்திட,

“ஆமா, நான் ஊருக்குப் போன நேரமா பார்த்து என்கிட்ட கூட சொல்லாம குழந்தையை அபார்ட் பண்ண வச்சாங்க. அது உடனே இல்லைனாலும் கொஞ்ச நாள்ல மெடிக்கல் ரிப்போர்ட் பார்த்து எனக்குத் தெரிஞ்சுடுச்சு. அப்பவே ஆம்பளையா அவளை அந்த வீட்ல இருந்து கூட்டிட்டு வந்துருக்கணும். ஆனா முடியல. ஒன்னு, அண்ணி மேல இருந்து கண்மூடித்தனமான பாசம். அத்தனை வருஷமா என் குடும்பத்தை பாத்துட்டு வர்றவங்களுக்கு குழந்தை இல்லைன்ற வருத்தம் சில நேரம் அவங்க முகத்துல தெரியும். அந்த பொறாமைல ஏதோ ஒரு எமோஷனலாகி அப்படி ஒரு காரியத்தை செஞ்சுட்டாங்கன்னு தோணுச்சு. இன்னொன்னு எனக்கும் அப்போ இருந்தே ஒரு சின்ன பயம் வர ஆரம்பிச்சுது. யோசிக்காம பச்சை மண்ணை கொல்ல துணிச்சவங்க நான் எதிர்த்து பேசுனா அஸ்வினியை எதுவும் செஞ்சுடுவாங்களோன்னு… அவள் இல்லாத ஒரு வாழ்க்கை… என்னால யோசிக்க முடியல. அதுலயும் சுயநலம் தான். எனக்குப் புரிஞ்சுது. அதுக்கு அப்பறம் என் வீட்ல இருக்குறவங்க செய்ற நிறைய இல்லீகல் விஷயம் எனக்குத் தெரிஞ்சாலும் நான் கண்டும் காணாத மாதிரி இருந்தேன். 10 ஸ்டார் ஹோட்டல் கட்டுறேன்னு அண்ணி செஞ்ச கரப்ஷன், அது மூலமா யுக்தா அவன் குடும்பத்தையே இழந்தது எல்லாமே எனக்கும் தெரியும். அவள் எனக்குத் தெரியாத மாதிரி காட்டிக்கிட்டா. நானும் அவளோட சந்தோஷத்துல குறுக்க வரப்பிடிக்காம ஒரு அம்மாவா யுக்தாவைப் பார்த்துக்க நினைச்சதை அக்செப்ட் பண்ணிக்கிட்டேன்.

நிறைய வருத்தம் இருக்கும். அவள் வலுக்கட்டாயமா யுக்தாவை என்னை நேர்ல பார்க்க விடலைனு. அவள் இவ்ளோ தைரியமா அண்ணிக்கு தெரியாம இதை செய்றதே பெருசுன்னு மனசை தேத்திக்குவேன். அவளுக்காகன்னு அது இருந்துட்டுப் போகட்டுமேன்னு… ஆனா என் அஸ்வினி… என்னை விட்டு ஒரேடியா போனதை என்னால ஜீரணிக்கவே முடியல. இப்போ என் கண்ணு முன்னாடி இருக்கா… இப்ப கூட என் கூட வாழ்ந்து மறுபடியும் சாக்ரிபைஸ் பண்ண போறாளோன்னு தான் எனக்கு பயமாவே இருக்கு” என்றவர் உடல் குலுங்க அஸ்வினியின் மடியில் படுத்தே அழுது கரைந்தார்.

என்ன தான் அவர் அழுதாலும் விஸ்வயுகாவிற்கு கோபமே வந்தது.

“அப்படி என்ன சித்தப்பா பயம்? சுயத்தை இழக்க வைக்கிறதுக்கு பேர் காதல்ன்னா, உங்களோடது காதலே இல்லை. காதலிச்சா எல்லாத்தையும் எதிர்த்து நிக்கணும். குழந்தையை அபார்ட் பண்ணுனப்பவே எல்லாரையும் தூக்கி போட்டுட்டு நீங்க வந்துருக்கணும். என்ன செஞ்சுருப்பாங்க கொன்னுருப்பாங்களா? கொல்லட்டுமே. உயிரோட இருந்து தினம் தினம் எத்தனை நாளு செத்துப்போன பிள்ளைக்காக நொறுங்கிருப்பாங்க. இதுல ரெண்டு பேரும் சேர்ந்து ஒரேடியா செத்துருக்கலாம்ல. ஒரு நாள் வாழ்ந்தாலும் என் புருஷன் எனக்காக நின்னாருன்ற நிறைவோட செத்துருப்பாங்க சித்தப்பா.”

“ப்ச் யுகா” யுக்தா அதட்ட, “நீ சும்மா இருடா. பயம் பயம் பயம்னு ரெண்டு பேரும் காதலை கொன்னுட்டு வாழ்ந்துட்டு இருந்துருக்காங்க. இந்த கிரகத்துக்கு இன்னும் காதல்னு பேர் வேற…” என்று பொருமினாள்.

நந்தேஷும், “விடு விஸ்வூ, அவங்களுக்கும் பெருசா சப்போர்ட் இல்லைல அந்த நேரத்துல” என்றதில்,

“டேய் அப்போ சரிடா. நம்மளை கூட நம்ப வேணாம், இதோ இவனை இவ்ளோ பெருசா வளர்த்து விட்டாங்களே. இவன் வளர்ந்த பின்னாடி கூட இவனை நம்பி போயிருக்கலாம்ல. என் அம்மா, ஆட்டுக்குட்டின்னு யார் நெருங்கி இருக்க முடியும் இவங்களை… அப்போலாம் விட்டுட்டு இப்போ வந்துட்டாங்க பிளாஷ் பேக் சொல்ல…” என நெற்றிக்கண்ணைத் திறந்தவளை மீண்டும் மீண்டும் ரசித்துத் தீண்டியது யுக்தாவின் விழிகள்.

சௌந்தரும் குமுறி அழுது கொண்டிருக்க, எங்கோ வெறித்துக்கொண்டிருந்த அஸ்வினியின் கரங்கள் மெல்ல கணவனின் கேசத்தைக் கோதியது. அதனைக் கவனியாமல் ஷைலேந்தரியும், “இந்த இலட்சணத்துக்கு நீங்க சித்தியை லவ் பண்ணுனதுக்கு கம்முன்னு இருந்திருந்தா இவங்க வேற யாரையும் கல்யாணம் பண்ணிட்டு நிம்மதியவாவது இருந்துருப்பாங்க…” என பொரிந்ததில், “ஷைலு” என்ற அஸ்வினியின் நலுங்கிய குரல் அதட்டலுடன் கேட்டது.

அவர் குரலிலும் தனது கேசத்தை கோதிய விரல்களையும் வியப்புடன் பார்த்த சௌந்தர் கண்ணில் தங்கிய நீருடன் அஸ்வினியை நிமிர்ந்து பார்க்க, அவர் கணவரைத் தான் பார்த்திருந்தார்.

ஆழமான விழிகள், இப்போது பாதி திறந்து பாதி மூடிய நிலையில் ஒரு நிலையில்லாமல் அங்கும் இங்கும் அலைந்தது. மூளை கொடுக்கும் கட்டளையை ஏற்க இயலாமல் தடுமாறி சில கணங்களில் மயங்கியே விட்டார்.

அத்தியாயம் 88

மயக்கத்தில் இருந்த அஸ்வினியை சோதித்த மருத்துவர்கள், “இது நல்ல சைன் தான் யுக்தா. அவங்க கண்ணு முழிச்சதும் உங்க யாரையும் அடையாளம் தெரியுதான்னு பாக்கலாம். ஹோப் பார் தி பெஸ்ட்!” என்று அவனைத் தட்டிக்கொடுத்துப் போனவர், “உங்களோட இத்தனை வருஷ நம்பிக்கை வீண்போகாது மேன்” என்றார்.

சின்ன சிரிப்பை உதிர்த்தவன், “தேங்க் யூ டாக்டர்” என்று விட்டு அஸ்வினியைப் பார்க்க, விஸ்வயுகாவிற்கு அவர் மீண்டு வந்து விடுவார் என்ற நம்பிக்கை அதிகமாகவே இருந்தது.

சௌந்தரின் மீதிருந்த கோபம் ஏனோ அடங்கவே மறுத்தது அவளுக்கு. அவர் என்ன சமாதானம் சொன்னாலும் மனம் ஏற்க முரண்டு பிடித்தது.

அறையின் பின்பக்க தோட்டத்திற்குச் சென்று நின்றவள், மலர்ந்திருந்த பூக்களை பார்வையிட்டாள்.

இன்னும் அஸ்வினி கண் விழிக்காது போனதில், யுக்தா தன்னவளைத் தேடி வர, “ஏஞ்சல்” என்றழைத்தான்.

“அந்த ஆளுக்கு சப்போர்ட்டா எதுவும் பேச வைக்காத. டென்சன் ஆகிடுவேன்” பேசும் முன்னே தடுத்து விட்டாள்.

“விடுடி.”

“என்னத்த விடு” என எரிச்சலடைந்தவள், “உனக்கு இதெல்லாம் முன்னாடியே தெரியுமா? நீ ஷாக் ஆகவே இல்ல” என சந்தேகமாகக் கேட்க,
ஆமோதிப்பாகத் தலையாட்டினாள்.

“இவரை புடிச்சு நாலு அடி அடிச்சுருக்க வேண்டியது தான… எனக்கு வர்ற கோபத்துக்கு” எனப் பல்லைக்கடித்தவளுக்கு முகம் சிவந்து போனது.

“அஸ்வினிம்மா சொல்லி அவங்க பாய்ண்ட் ஆப் வியூல தெரியும். இவருக்கு இதெல்லாம் தெரியாதுன்னு தான் அம்மா நினைச்சாங்க. தெரிஞ்சும் அமைதியா இருந்துருப்பாருன்னு நான் எதிர்பார்க்கலடி”

“அப்பறம் ஏன்டா அன்பே சிவம்னு அமைதியா இருக்க?”

“ஏற்கனவே அவர் நிறைய தண்டனையை அனுபவிச்சுட்டாரு மனசளவுல. இப்பவும் தான அனுபவிக்கிறாரு. ஏற்கனவே செத்தவரை திரும்ப திரும்ப சாகடிக்க முடியாதுலடி” என்றான் சலிப்பாக.

“அட போடா… உன் அப்பான்னதும் அமைதியா போற. இதே நான்னா பழி வாங்க வரேன், பனியாரம் சாப்பிட வரேன்னு டயலாக் விட்டுருப்ப” என முறுக்கினாள்.

பக்கென சிரித்து விட்டவன், பின் இலக்கின்றி தோட்டத்து மலர்களைப் பார்வையிட, அவனையே சில நொடிகள் ஆராய்ந்தாள்.

“சித்திக்கு பயம் ஜாஸ்தி. அம்மா டென் ஸ்டார் ஹோட்டல் கட்ட தான் கரப்ஷன் ஸ்டார்ட் பண்ணுனாங்களான்னு கேட்டா இல்லைன்னு தான் சொல்லுவேன். அதுக்கு முன்னாடியே நிறைய பண்ணிருக்காங்க. சித்தியோட குழந்தையை அபார்ட் பண்ண வச்சு, அவங்க பெர்சனல் லைஃப்ல நிறைய இழக்க வச்சுருக்காங்க. அதுவும் சரி தான். அப்போ எல்லாம் வராத தைரியம், உங்களை குடிசையில் இருந்து வெளியேத்துனதும் எப்படி வந்துச்சு? அதுக்கு எதிரா மட்டும் ஏன் சித்தி கம்பளைண்ட் பண்ணுனாங்க. சுனாமில செத்துப்போன பல பேர் இருக்கும்போது உன்னைத் தேடி மட்டும் ஏன் வந்தாங்க?” விழிகளைக் கூர்மையாக்கி கேள்விகளைத் தொடுத்தாள்.

“அதை நீ அவங்ககிட்டயே கேளேன்…” வெகு அமைதியாய் பதில் அளித்தவன், அங்கிருந்து நகரப் போக, “சோ இதுக்கும் உனக்கு பதில் தெரியும் அப்படி தான யுகி?” ஆற்றாமை தீராமல் கேட்டாள்.

கலங்கிய கண்களைச் சிமிட்டிக்கொண்டு அவளைப் பாராமல் சமாளித்தவனின் கன்னம் பற்றி தன் கண்களைப் பார்க்க வைத்தாள்.

சென்னையில் இருந்த வரை அவனிடம் குடிகொண்டிருந்த திமிர், இங்கு வந்ததுமே மொத்தமாகக் கரைவதை அவளும் உணர்ந்தாள்.

அஸ்வினியின் அன்பிற்காக ஏங்கித் தவிக்கும் சிறுவனாய், அவரிடமே தனது மொத்த கம்பீரத்தையும் இழந்து நிற்கிறான்.

“யுகி… சீக்கிரம் வா ஆண்ட்டி கண்ணு முழிச்சுட்டாங்க” குறிஞ்சியின் சத்தத்தில் இருவரும் அவசரமாக அறைக்குள் நுழைந்தனர்.

கண் விழித்து ஒரு கணம் அங்கும் இங்கும் பார்வையைச் சுழல வைத்த அஸ்வினிக்கு, முதலில் தான் எங்கிருக்கிறோம் என்றே தெரியவில்லை.

உடனடியாக மருத்துவரும் வந்து விட, அவர் அஸ்வினியின் கண்களை சோதித்து விட்டு, “என்னைத் தெரியுதா மிஸஸ் அஸ்வினி” எனக் கேட்டார்.

மெல்லத் தலையாட்டி அவரது கேள்விக்கு எதிர்வினைக் கொடுத்ததில் இத்தனை வருடங்களாய் உள்ளடக்கிய அழுத்தம் கண்ணீராய் உருப்பெற்று கண்களில் மேலெழும்பி நின்றது யுக்தாவிற்கு.

அஸ்வினியின் மீது கண்ணாக இருந்தாலும் ஆடவனின் நிலை புரிந்து அவனது கையை இறுக்கிப் பற்றிக்கொண்டாள் விஸ்வயுகா.

சௌந்தரின் நெஞ்சம் ஏங்கித் துடித்தது. தனது மனைவிக்குத் தன்னை அடையாளம் தெரிந்து விடுமா அல்லது தன்னை தெரியாதென்று தண்டனை தந்து விடுவாளா என்ற அச்சம் அவரை துன்புறுத்தியது.

ஒரு கணம் அஸ்வினியின் கருவிழிகள் அறையை முழுதும் பார்வையிட்டுப் பின் தனது காதலான கணவனின் முன் வந்து நின்றது.

மெல்லப் புன்னகைக்க முயன்றவருக்கு, உடலில் உள்ள அத்தனை செல்களும் கொடூரமாக வலிப்பது போலொரு பிரம்மை.

“என்… னங்க” வெகு கடினப்பட்டு வார்த்தைகளை உச்சரித்து கணவனை அழைக்க, சௌந்தர் அறையே அதிரும் அளவு கத்தி அழுதார்.

அவரை கட்டிக்கொண்டவர், “அஸ்வினி… என்னை மன்னிச்சுடுமா…” என்று அழுது தீர்க்க, எதற்கு அழுகிறார் என்றே புரியாத அஸ்வினி நடுங்கி பலவீனமான கரங்களை அவர் முதுகைச் சுற்றி படர விட்டு, “என் ன ஆ ச் சு வே ணா மே” மெதுவாய் குரலை உயர்த்த, மற்றவர்கள் தானாக அவர்களுக்குத் தனிமை கொடுத்து வெளியேறினர்.

இப்போதைக்கு அவரது காதல் கணவரைத் தவிர அஸ்வினிக்கு யாரிடமும் கவனம் போகவில்லை. காதலின் அழகே அது தானே!

அறையை விட்டு வெளியில் வந்ததும் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தாள் விஸ்வயுகா.

“நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லல” யுக்தாவை முறைத்தபடி அவள் கேட்க,

“என்ன பதில் சொல்லணும்?” அமைதியாய் அவளை ஏறிட்டான்.

“எல்லாத்துக்கும் பயந்து சாகுறவங்களுக்கு உன் விஷயத்துல மட்டும் எப்படி தைரியம் வந்துச்சு?”

“அதை நீ அவங்ககிட்டயே கேளேன்…” சரியாக கணித்து விட்டாளென்ற கர்வம் அவனை நிறைத்தது.

“ப்ச்! யுகி, நீ சொல்லப் போறியா இல்லையா?” விழி இடுங்க அவள் கேட்டதும் ஒரு நொடி அமைதி காத்தவன்,

“உன்னை என்கிட்ட இன்ட்ரோ குடுக்கும் போது, உன்னை ஏன் தங்கச்சின்ற முறைல எனக்கு இன்ட்ரோ குடுக்காமல் போனாங்க. நீ அவங்களை சித்தின்னு கூப்புடுற. நான் அம்மான்னு கூப்பிடுறேன். ஆனா, உன்மேல எனக்கு ஏன் காதல் வந்துச்சு? உரிமை வந்துச்சு?” என அர்த்தப்பார்வை வீச, ‘இந்தப் பார்வைக்கு ஒன்னும் குறைச்சலே இல்ல…’ ஆயிரமாவது தடவையாகத் தன்னை விழுங்கும் அவனது ஆழப் பார்வையைத் திட்டிக் கொண்டாள்.

மைத்ரேயனோ, “டேய் நேத்து தான நீ இதுக்கு மேல டிவிஸ்ட் இல்லன்னு சொன்ன…” எனப் பதற, “நான் சொன்னா நீ நம்பிடுவியா?” என்றான் உதட்டை மடித்து.

நந்தேஷும் ஷைலேந்தரியும் சப்டைட்டில் கூட புரியாத பாவனையில் விழித்தபடி நின்றிருந்தனர்.

குறிஞ்சிக்கு அனைத்தும் தெரியுமாதலால் ஒவ்வொரு உண்மைக்குப் பிறகுமான இந்த அப்பாவி ஜீவன்களின் நிலையை எண்ணிப் பரிதாபமே பட்டுக்கொண்டாள்.

விஸ்வயுகா யுக்தாவை அழுத்தமாகப் பார்த்திருக்க, “ஒருவகைல அஸ்வினிம்மாவோட அண்ணன் பையன் நான்…” நிதானமாக தங்களுக்கிடையே உள்ள உறவை வெளிச்சம் போட்டுக் காட்ட, மற்றவர்கள் அதிர்ந்தனர் விஸ்வயுகா தவிர.

அவளுக்கும் சௌந்தர் அவரது குடும்பத்தைப் பற்றி பேசியதும் மின்னலென மூளையில் மின்னியது.

“ஒருவகைலன்னா?” புருவம் நெறித்து விஸ்வயுகா கேட்க,

“என் அப்பாவோட சித்தி பொண்ணு அவங்க. ஒன்னு விட்ட தங்கச்சி. அப்பாவோட சித்தியை கொஞ்சம் பெரிய இடத்துல கல்யாணம் பண்ணிக் குடுத்து இருக்காங்க. அவங்க அப்பவே ஸ்லம் ஏரியா விட்டுப் போய்ட்டாங்க. ஆனா அஸ்வினிம்மாவுக்கும் என் அப்பாவுக்கும் நல்ல பழக்கம். நான் பிறக்குறதுக்கு முன்னாடி வரை கூட பேச்சு வார்த்தைல தான் இருந்துருக்காங்க. அப்பறம் அம்மா சௌந்தர் அப்பாவைக் கல்யாணம் பண்ணுனதும், அவங்க வீட்டு உறவை மொத்தமா முறிச்சுக்கிட்டு இருந்துருக்காங்க.

அஸ்வினிம்மா வீட்டை விட்டு வந்த கொஞ்ச நாள்லேயே அவங்களோட அம்மா, அப்பா ஒரு ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாங்க. கொஞ்ச நாள்ல மீன் பிடிக்கப் போன என் அப்பாவும் இறந்துட்டாரு. அதுக்கு அப்பறம் அஸ்வினிம்மாவை பார்க்குற வாய்ப்போ, இல்லை அவங்களை பத்தி தெரிஞ்சுக்குற வாய்ப்போ எனக்கும் அம்மாவுக்கும் கிடைக்கல. ஆனா அம்மா எங்களைப் பத்தி தெரிஞ்சு தான் எங்களைத் தேடி வந்துருக்காங்க. அவங்க எங்களுக்கு சிவகாமியோட திட்டத்தை புரிய வைக்கிறதுக்குள்ள சுனாமி வந்து மொத்தமா அழிச்சுட்டுப் போய்டுச்சு. நான் அவங்களுக்கு பிடிச்ச அண்ணனோட பையன்றனால தான், எதையும் யோசிக்காம, என்கிட்ட உறவுமுறையையும் சொல்லாம, லீகலாவும் தத்து எடுக்காம வளர்த்துருக்காங்க. நான் வேலைக்கு சேர்ந்த கொஞ்ச மாசத்துலயே இதைக் கண்டுபிடிச்சுட்டேன். அவங்ககிட்ட கேட்க நினைச்சப்பவும், முதல்ல அவங்களை ஒரு சேப் ஸோன்க்கு கொண்டு வந்துட்டுதான் இத ரிவீல் பண்ணனும்னு அமைதியா இருந்தேன். அதுக்குள்ள என்னன்னவோ ஆகிடுச்சு…” எனக் கூறி முடிக்க, விஸ்வயுகாவின் விழிகள் சாஸர் போல விரிந்தது.

உறவு முறையில் அவன் தனக்கு திருமணம் செய்யும் முறை என்பதால் அவனைக் கண்டதுமே தனக்குள் பட்டாம்பூச்சி படையெடுத்து வந்ததோ?

“அப்போ உண்மையாவே நீ எனக்கு மச்சான் தானா மச்சான்…” என நந்தேஷ் குதூகலிக்க,

மைத்ரேயனோ மனையாளை பயத்துடன் பார்த்தான். ‘இவள் சும்மாவே அத்தான் பொத்தான்னு ஜொள்ளு விடுவா. இதுல சொந்த அத்தை பையன்னு தெரிஞ்சா இவள் ஆட்டம் தாங்க முடியாதே’

“ஐயோ அத்தான்…” என போலி வெட்கத்துடன் முகத்தை மூடிக் கொண்டவள், “பார்த்தீங்களா… உண்மை தெரியிறதுக்கு முன்னாடியே உங்களை என் அத்தானா தத்து எடுத்து இருக்கேன். என்னோட அட்வான்ஸ் சைட்டு பத்தி உங்க ஒபினியன் என்ன?” என காலரில்லாத டாப்ஸை தூக்கி விட்டுக்கொள்ள, அவளது அலப்பறையில் சிரிப்பை அடக்கிய யுக்தா, “நீ ஒரு முற்றும் உணர்ந்த முனிவர் மச்சினிச்சி” என அவனும் வாரியதில் அவள் முகத்தில் பெருமை வழிந்தது.

“ஆமா ஆமா… கட்டுன புருஷனை மட்டும் தான் உணர மாட்டாங்க…” நக்கலாக கூறிய மைத்ரேயனை பாவமாக பார்த்தாள் ஷைலேந்தரி.

இவர்களின் மச்சினிச்சி அத்தான் அழைப்பில் கடுப்பான விஸ்வயுகா, “போதும் போதும் வாங்க உள்ள போகலாம்…” எனக் கடுகடுப்புடன் கூற, ஷைலேந்தரியும் யுக்தாவும் நமுட்டு நகை புரிந்தனர்.

இன்னும் அஸ்வினியும் சௌந்தரும் ஒருவரின் ஒருவர் அணைப்பிலேயே கரைய, “ஹலோ கொஞ்சம் சுத்தி இருக்குறவங்களையும் பாக்குறீங்களா?” என இருவரையும் பிரித்து விட்டாள் விஸ்வயுகா.

அவளைக் கண்டு கண் கலங்கிய அஸ்வினி “ஏஞ்சல்” என ஈனக்குரலில் அழைக்க, அத்தனை நிறமும் இழுத்து பிடித்து வைத்திருந்த கண்ணீர் கன்னம் வழியே வழிந்தது அவளுக்கு.

எத்தனை வருடங்களாக இழந்த அழைப்பு இது. “சித்தி…” என அவரைக் கட்டிக்கொண்டவளை ஆறுதலாக அணைத்துக் கொண்டார்.

“நந்து…” நந்தேஷின் கன்னத்தை வருடியவரைக் கண்டு காய்ந்திருந்த ஆடவனின் விழிகளும் நனைந்தது.

பின் ஷைலேந்தரியையும் மைத்ரேயனையும் ஆரத் தழுவிக்கொண்டவர், ஷைலேந்தரியின் கழுத்தில் மினுமினுத்த புது தாலியைக் கண்டு குழம்பினார்.

மைத்ரேயன் அசடு வழிந்து, “எங்க ரெண்டு பேருக்கும் மேரேஜ் ஆகிடுச்சு ஆண்ட்டி” என்றிட, “அந்த துயர சம்பவத்தைப் பார்க்க தான் நீங்க இல்லாம போயிட்டீங்க” என ஷைலேந்தரி வாரியதில் மைத்ரேயன் முறைத்து வைத்தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
26
+1
180
+1
7
+1
4

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்