Loading

சஹஸ்ராவின் மடியை மஞ்சமாக்கிய தீரன், அந்த இதம் தந்த கதகதப்பில் உறக்கத்தை தழுவ, சிறிது நேரத்தில் மெல்ல அவனை தலையணையில் படுக்க வைத்தாள்.

கணவனின் முகத்தினையே ஆழ்ந்து பார்த்தவளுக்கு, இவன் எப்போதும் தன்னிடமே தஞ்சமடைந்தால்… வாழ்க்கை எப்படி இருக்கும்? என நினைக்கும் போதே தித்தித்தது.

அந்நினைவுடனே பால்கனிக்கு சென்றவள், தூரத்தில் அமாவாசை நிலவில் கருப்புப் பூசிய கடலை வெறித்தாள். பேராசை தான் படுகிறோமோ? இறுதி வரை தன்னிடம் கணவனாக நடந்து கொள்ள மாட்டேன் என்று உறுதியாக கூறினானே. பழையவை அனைத்தும் நினைவு வந்து, மீண்டும் தன்னிடம் இருந்து விலகி விட்டால்… முதலிலாவது அவனிடம் எவ்வித எதிர்பார்ப்பும், உயிரை உருக்கும் நேசமும் இல்லை. ஆனால் இப்பொழுது?

காய்ந்த சருகாய் மாறி இருந்த வாழ்க்கைக்கு வசந்தகாலம் போல வந்தவனின் இந்நிலை நிரந்தரமில்லையே. அவனது அன்பும் கூட நிலை இல்லையே! உண்மை உணர்ந்தும், அவனிடமே அடிமையாகும் மனதை எப்படி எதிர்கொள்வது? என எண்ணும் போதே வலித்தது.

‘ப்ச்… இவ்ளோ கஷ்டத்துக்கு நமக்கே எல்லாம் மறந்துருக்கலாம் போல. அவனையும் சேர்த்து!’ என்று எரிச்சலடைந்தவளுக்குள் காதல் உணர்வு ஆட்டிப் படைத்தது.

மறுநாள், எப்போதும் போல சவிதாவை பள்ளிக்கு அனுப்பி விட்டு, அறைக்கு வந்தவள், மாத்திரையின் விளைவில் தீரன் இன்னும் உறங்குவதைக் கண்டு குளிக்க சென்றாள்.

மீண்டும் வெளியில் வந்தவளின் முகமே பதற்றத்தை தாங்கி இருந்தது.

அப்போது தான் கண் விழித்து எழுந்து அமர்ந்திருந்த தீரனுக்கு தலைவலி கொய்ய, தீவிர சிந்தனையில் புதைந்திருந்தான்.

அவனைக் கவனியாது, அறை முழுக்க தேடுதல் வேட்டையில் திளைத்திருந்த சஹஸ்ரா, மெத்தையிலும் தேடலை தொடர்ந்தாள்.

அதில் தான் நினைவுக்கு வந்தவன், “என்ன தேடுற?” எனக் கேட்க, கண்களால் கட்டில் முழுவதும் துழாவியபடி, “தாலி செயினை காணோம்” என்றாள்.

“இங்கதான் எங்கயாவது கழட்டி வச்சு இருப்ப. பொறுமையா தேடு சஹி.” என்றவனும், அவன் பங்கிற்கு அறையில் தேட,

“தாலி செயினை யாராவது கழட்டி வைப்பாங்களா? நான் தான் கழட்டவே இல்லையே…” என்னும் போது தான் அந்நினைவே வந்தது அவளுக்கு.

“ஐயோ… நேத்து ஒருத்தன் உங்களை அட்டாக் பண்ண வந்தான்ல. அப்போ நான் அவனை தள்ளி விட போகும் போது, தவறுதலான தாலி செயின் அவன் வச்சிருந்த கட்டைல மாட்டிருச்சு. அனேகமா ஹாஸ்பிடல் பார்க்கிங்ல தான் விழுந்து இருக்கும் தீரா. நான் போய் பார்த்துட்டு வரட்டா.” என்றவளை முறைத்தான்.

“நேத்து தொலைஞ்சு போனதை இன்னைக்கு தேடுறேன்னு சொல்ற. இந்நேரம் அது அங்கேயே இருக்குமா சஹி? விடு வேற வாங்கிக்கலாம்.” அவன் அதட்டலாகக் கூற,

“வேற வாங்குறதா? அதென்ன சாதாரண செயினா?” என முகத்தை சுருக்கி அமர்ந்து விட்டாள்.

“தொலைஞ்சு போனதுக்கு ஏன் இவ்ளோ சீரியஸ் ஆகுற சஹி? தாலிக்கு சொந்தமான ஆள் உன் முன்னாடி தான இருக்கேன். நானும் தொலைஞ்சா வேணும்ன்னா ஃபீல் பண்ணலாம்.” அவனும் புரியாமல் கேலி புரிந்தான்.

அதற்குள் அவள் கண்கள் நீரை தாங்கி இருக்க, “நானே வெள்ளிக்கிழமை அதுவுமா தாலி செயினை காணாமேன்னு பதறி இருக்கேன். இதுல நீங்க வேற வாய்க்கு வந்ததை பேசாதீங்க. ஏற்கனவே, இப்ப தான் உங்களுக்கு ஆக்சிடன்ட் ஆகி சரி ஆகிட்டு இருக்கு, இப்ப, தேவை இல்லாம இப்படி ஒரு சங்கடம் வேற.” என அவனிடம் பொரிந்து தள்ளியவளுக்கு அழுகையே வந்தது.

“ஹே! ரிலாக்ஸ் சஹி. இது சாதாரண விஷயம். இதுக்கு ஏன் இவ்ளோ எமோஷனல் ஆகுற?” அவள் கையை பற்றிக்கொண்டு சமாதானம் செய்தவன், “நம்ம வேற வாங்கிக்கலாம்” என்றான் மென்மையாக.

“தாலி காணாம போறது உங்களுக்கு சாதாரண விஷயமா தீரா. என்னால அப்படி எடுக்க முடியாது. நான் போய் ஹாஸ்பிடல்ல பார்த்துட்டு வரேன்.” என்றவள் சொன்னதோடு நில்லாமல் கிளம்பியும் இருந்தாள்.

“சரிடி நானும் வரேன். சேர்ந்தே தேடலாம்.” எனக் கூறியதில், “வேணாம் வேணாம். நீங்க ரெஸ்ட் எடுங்க நான் போயிட்டு வரேன்.” என மறுத்தவள், மேலும் பேசாமல் விரைந்திருக்க, அவனும் நெற்றியை தேய்த்துக் கொண்டு வீடு முழுக்க தேடிப் பார்த்தான்.

‘இந்த பொண்ணு, நம்மளை கண்டுக்க மாட்டேங்குறா. ஒரு தாலிக்கு இவ்ளோ டென்ஷன் பண்றாளே…’ என முணுமுணுத்தவனுக்கு, சிரிப்பே வந்தது.

சிறிது நேரத்தில் சுவற்றில் அடித்த பந்தாக கண்கள் சிவந்து வீட்டிற்கு வந்தவளைக் கண்டவனுக்கு பாவமாக தான் இருந்தது.

“கிடைக்கலையாடி?” தீரன் கேட்டதும், “ம்ம்ஹும்” என்று உதட்டைப் பிதுக்கினாள்.

“எனக்கு பயமா இருக்கு. இதுனால உங்களுக்கு மறுபடியும் ஏதாவது ஆபத்து வருமோன்னு…” எனக் கூறும் போதே குரல் உடைந்திட, அவளை ஒரு மாதிரியாக பார்த்து வைத்தான் தீரன்.

“ஏன்டி, படிச்சவ தான நீ. இன்னுமா இதெல்லாம் நீ நம்பிட்டு இருக்க? இதுல பிசினஸ் வேற பண்றாளாம். சின்ன சின்ன விஷயத்துக்குலாம் செண்டிமெண்ட் பார்த்தா, தொழிலும் பண்ண முடியாது, வாழ்க்கையையும் வாழ முடியாது சஹி…” என கண்டித்தான்.

“உங்களுக்கு செண்டிமெண்ட் இல்லைன்னா விடுங்க. எனக்கு நிறைய இருக்கு. ஏன், படிச்சிருந்தா தாலி செண்டிமெண்ட் இருக்க கூடாதா. இல்ல புருஷனுக்கு எதுவும் ஆகுமோன்னு பயப்பட கூடாதா?” என்றவள், அவன் மேலும் பேசும் முன், கையெடுத்து கும்பிட்டாள்.

“ப்ளீஸ் தீரா. தயவு செஞ்சு கொஞ்ச நேரம் என்னை தனியா விடுங்க…” எனத் தேம்பலுடன் கூறியவள், கீழிருக்கும் ஒரு அறையில் புகுந்து கொள்ள, அவனுக்கும் அவளைப் பார்க்க பாவமாக தான் இருந்தது. ஆனால் அவனும் என்ன தான் செய்வான்?

சில நிமிட யோசனைக்குப் பிறகு, சஹஸ்ராவின் அருகில் சென்றான்.

அவளோ, தலையைப் பிடித்துக் கொண்டு சோகத்தில் மூழ்கி இருக்க, ‘புருஷனுக்கு அடிபட்டப்ப கூட இவள் இவ்ளோ சோக கீதம் வாசிச்சுருக்க மாட்டா போல.’ என நக்கலடித்தாலும், “சஹி” என்றழைத்தான் கனிவாக.

சஹஸ்ரா அவனை நிமிர்ந்து பாராமல் உர்ரென இருக்க, அவள் கன்னம் பற்றி நிமிர்த்தியவன், “சாரி பிரின்சஸ். உன் ஃபீலிங்ஸ நான் மதிக்கிறேன். ஓகே வா. இப்ப கிளம்பு!” என்றதில், ‘எங்க?’ எனப் பார்த்தாள்.

அவள் பார்வைக்கு பதில் கூறாமல், அவளை அழைத்துக்கொண்டு அவனே காரை ஓட்ட எத்தனிக்க, “வேணாம் தீரா. ட்ரைவர் ஓட்டட்டும்” என்று பதறியதில், “நம்ம ரெண்டு பேரு மட்டும் தான் போக போறோம். வேணும்ன்னா நீ காரை ஓட்டு.” என்றான்.

அவளுக்கு நன்றாகவே டிரைவிங் தெரியும் என்றாலும், இருக்கும் குழப்பத்தில், எங்காவது போய் முட்டி விடுவோமோ என தேவையற்று பயந்தவள், “அய்யயோ வேணா வேணாம்” என, முன் சீட்டில் அமர்ந்து கொள்ள, அவள் எண்ணம் புரிந்து சிரித்துக் கொண்டான்.

இருவரும் தனியாக பயணம் செய்வது இதுவே முதன் முறை. ஆனால், அதனை ரசிக்க இயலாமல் சஹஸ்ராவின் மனம் பரிதவிப்பில் இருக்க, அவனோ உல்லாசகமாக பாட்டு பாடியபடி வந்தான்.

வா வா அன்பே

அன்பே காதல் நெஞ்சே

நெஞ்சே

உன் வண்ணம்

உன் எண்ணம்

எல்லாமே என் சொந்தம்

இதயம் முழுதும் எனது வசம்

வா வா அன்பே

அன்பே காதல் நெஞ்சே

நெஞ்சே

ரசித்தபடி பாடிக்கொண்டு வந்தவனை, திரும்பி காட்டமாக பார்த்து வைத்தாள் சஹஸ்ரா. அழகாக தான் பாடினான். ஆனாலும் பாடும் நேரமல்லவோ தவறு!

அவள் முறைத்ததில் தன்னிச்சையாக பாடுவதை நிறுத்தியவன், மெல்ல சிரித்து வைக்க, அதற்கும் அவள் முறைப்பையே தந்தாள்.

“ஓகே… ஃபைன்!” என ஒரு கையால் தன் வாயில் விரல் வைத்துக் கொண்டவன், அமைதியின் சிகரமாக வர, இப்போது புன்முறுவல் அவள் இதழ்களில் பூத்தது.

இதற்கு சிறிது நேரம் முன்பு, நகைக்கடை வாசலில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் நிக்கோலஸ். எல்லாம் தீரன் அனுப்பிய குறுஞ்செய்தியினால் தான்.

“திடீர்ன்னு தாலி வாங்க சொன்னா? நான் எப்படி வாங்குவேன்.” எனத் தலையை சொரிந்து கொண்டவனின், அருகில் வந்த தேவிகா, “எதுக்கு நிக்கி என்னை இங்க வர சொன்னீங்க?” எனக் கேட்க,

“அர்ஜண்டா தாலி வாங்கணும் தேவ்.” என்றவனைக் கண்டு விழித்தாள்.

“இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கு. சடனா எல்லாம் பிளான் ஆகிடுச்சு போல. கோவில்ல எல்லாம் ரெடி பண்ணிட்டேன். இன்னும் தாலி மட்டும் தான் பாக்கி. ஆனா, பாரு… எனக்கு தான் என்ன வாங்கணும்ன்னே தெரியல. அதான் உன்ன வரச்சொன்னேன்.” எனப் பிய்த்து பிய்த்து பேசியதில் முதலில் குழம்பியவள், அதன் பிறகே, அவனுக்கு தான் அவசர திருமணம் என்றெண்ணி திகைத்தாள்.

பெரியதாக இல்லை என்றாலும், சிறியதொரு ஏமாற்றம் பரவினாலும், அதனை அடக்கி, “நிக்கி சொல்லவே இல்ல. இப்படியா கல்யாணத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி சொல்றது?” என வியப்பை ஏந்தி கேட்க,

“எனக்கே இப்ப தான் தெரியும். ஏன் உனக்கு சஹா சொல்லலையா?” என்றவன், கடைக்குள் நுழைந்தான்.

‘சஹாவுக்கு தெரியுமா என்ன?’ எனக் குழம்பியவள், அவனுடன் சென்று தாலியைத் தேர்ந்தெடுக்க, அவனோ ஒவ்வொன்றையும் போட்டோ எடுத்து தீரனுக்கு அனுப்பினான்.

அது தீரன் என்று தெரியாத தேவிகா, ‘இதுக்கு அவன் ஃபியான்ஸியவே கூட்டிட்டு வந்துருக்க வேண்டியது தான…” என எரிச்சல் மிக நின்றிருக்க, அவனுக்கு தீரனிடம் இருந்து வாய்ஸ் மெஸேஜ் வந்தது.

அதனைத் தள்ளி சென்று ஆன் செய்தவனால், காது கொடுத்து கேட்க இயலவில்லை.

வழக்கத்தில் இருக்கும் அத்தனை கெட்ட வார்த்தைகளையும் உபயோகித்து இருந்தவன், “எதையோ ஒன்னை வாங்கிட்டு வாடா வெண்ணை…” என அனுப்பி இருக்க, ஏதோ அவனது காதலி அவனுக்கு முத்தம் கொடுப்பது போல முகத்தை மட்டும் மாற்றாமல் பெருமையாக வைத்திருந்தான்.

இதில் தேவிகாவைப் பார்த்து அசட்டு சிரிப்பு வேறு. அவளுக்கோ, ‘சே! முரட்டு சிங்கிள இப்படி லவ் பண்ணி கடுப்பேத்துறானுங்களே’ என்றிருந்தது.

ஒரு வழியாக தாலி செயினை தேர்ந்தெடுத்து, வெளியில் வந்த தேவிகா, “சரி நான் கிளம்புறேன்” என்றாள் கடுப்பாக.

“ஏய்… நீ எங்க போற? நீயும் கண்டிப்பா வரணும்” என அழைப்பு விடுக்க, “என்னமோ கல்யாணத்துக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடி முறையா பத்திரிக்கை வச்சு அழைச்ச மாதிரி கூப்பிடுறான் பாரு…” என கடுகடுத்தாலும் எதுவும் பேசாமல் அவனுடன் சென்றாள்.

தீரனின் கார் நேராக ஒரு கோவிலில் நிறுத்தப்பட, சஹஸ்ரா விழி விரித்து, “எனக்கே கோவிலுக்கு போகணும் போல இருந்துச்சு தீரா. தேங்க்ஸ் நீங்களே கூட்டிட்டு வந்துட்டீங்க…” என்றவள், அவன் பதிலை எதிர்பாராமல் இறங்கி உள்ளே போக, தலையை ஆட்டி சிரித்துக் கொண்டவனும் அவளுடன் இணைந்தான்.

கடவுளின் சன்னிதானம் முன்பு, மனம் உருக கண்ணை மூடி வேண்டுதலில் திளைத்தவளை, அவன் பார்வை வதம் செய்ய, ஏதோ தோன்ற கண்ணைத் திறந்து பார்த்தவள் அருகில் தன்னையே பார்த்தபடி நின்றிருக்கும் கணவனைக் கண்டு திகைத்தாள்.

“ஷ்ஷ்… தீரா! அங்க பார்த்து சாமியை கும்புடுங்க.” என்றாள் விழிகளை உருட்டி.

அவனோ எதையும் கண்டுகொள்ளாது, அவளை ரசிக்கும் வேலையை செவ்வனே செய்ய, போலியாய் கோபம் கொண்டவள், அவன் கரத்தை குவித்து, திரும்பி நிற்க வைத்தாள்.

சிறிதாய் சலித்தவன், முகத்தை மட்டும் திருப்ப, “ஒழுங்கா திரும்புங்க” என மிரட்டியவள், அவன் கன்னம் பற்றி திருப்பினாள். கூடவே குறுநகை ஒன்று தோன்ற, அதனை அடக்கிக்கொண்டு மீண்டும் வேண்டுதலுக்கு சென்றவளின் காதோரம் தீரனின் குரல் கிசுகிசுத்தது.

“அப்படியே என்ன வேண்டிக்கணும்ன்னு சொல்லிடு சஹி. எனக்கு தெரிஞ்சு இதான் என்னோட ஃபர்ஸ்ட் கோவில் விசிட்…” என்ற வாசகத்தில் கண் விழித்தவள், அவன் மிகவும் நெருக்கத்தில் இருப்பதை உணர்ந்து, இரண்டடி பின்னால் தள்ளினாள்.

“நம்ம கோவில்ல இருக்கோம் தீரா.” பதற்றத்துடன் கடிந்து கொண்டவள், “இதுவரை நீங்க கோவிலுக்கே வந்தது இல்லையா? பர்த்டேக்கு கூட…” எனக் கேட்டாள் ஆச்சர்யமாக.

“அம்மா இருக்கும் போது கம்பெல் பண்ணுவாங்க. ஆனா, நான் தான் வரமாட்டேன்னு அடம் பண்ணுவேன்” என்றவனுக்கு, ஆதி கால நினைவுகள் காயத்தை கொடுத்தது.

சட்டென தன்னை மீட்டவன், “சரி சொல்லு. என்ன வேண்டிக்கணும்…” எனக் கண் சிமிட்டியவனை, ஆதூரமாக பார்த்தவள், “சீக்கிரமா எல்லாமே ஞாபகம் வரணும்ன்னு வேண்டிக்கங்க.” என்றாள் தொண்டை அடைக்க.

“ம்ம். அட்லீஸ்ட் நம்ம லவ் போஷன்ஸ்க்கு மட்டுமாவது பிட்டு குடுக்க சொல்லி கேட்குறேன் காட்கிட்ட.” என்று குறும்புடன் கூறியதில், அவளுக்கு தான் குற்ற உணர்வு அதிகரித்தது.

அந்நேரம், நிக்கோலஸும் தேவிகாவும் அங்கு வந்து விட, ஆறுதல் தேடுபவளை போல நடுங்கிய கரத்துடன் தேவிகாவை பிடித்துக் கொண்டாள்.

“தேவ் நீ இங்க என்ன பண்ற?” சஹஸ்ரா கேட்டதில், “உனக்கு நிக்கி மேரேஜ் பத்தி முன்னாடியே தெரியுமா சஹா. சார் என்கிட்ட இப்ப தான் சொன்னாரு” என்றதில், நிக்கோலஸ் விழித்தான்.

சஹஸ்ராவும், “அண்ணா உங்களுக்கு மேரேஜா என்ன? சொல்லவே இல்ல.” என்று குழம்ப, “எனக்கே யாரும் சொல்லலையே” என்றான் முகத்தை அஷ்ட கோணலாக்கி.

தீரன் பொறுமையின்றி, “வாங்கிட்டு வந்துட்டியா?” எனக் கேட்க, “எஸ் பாஸ்.” என்றவன், தாலியை எடுத்து பயபக்தியுடன் கொடுத்தான்.

சஹஸ்ராவோ, “ஆனா, நீங்க கிறிஷ்டியன் தான அண்ணா? கோவில்ல மேரேஜ்… பொண்ணு ஹிந்துவா?” எனக் கேட்டு வைக்க, அப்போது தான் அதுவே உறைக்க, “இருக்கும் இருக்கும் லவ் மேரேஜ் போல” என சலித்துக் கொண்டாள் தேவிகா.

“இந்தாம்மா… நான் எப்ப எனக்கு கல்யாணம்ன்னு சொன்னேன் உன்கிட்ட” என்று நிக்கோலஸ் எகிற,

“நீங்க தான திடீர்ன்னு முடிவு ஆகிடுச்சு அது இதுன்னு சொன்னீங்க” என்றாள் முறைத்து.

“ஓ! ஸ்டாப் திஸ்.” தீரன் இருவரையும் நிறுத்தி விட்டு, சஹஸ்ராவின் கழுத்தில் பொன் மாங்கல்யத்தை அணிவிக்க, ஒரு கணம் பேச்சிழந்து போனாள்.

தேவிகாவோ, “இவங்க என்ன மாசம் மாசம் கல்யாணம் பண்ணுறாங்க” என்று வாய் விட்டே கேட்டு விட, தீரன் திரும்பி முறைத்ததில் ‘கப்சிப்’ என ஆகி விட்டாள்.

அவனையே கண்ணிமைக்கத் தோன்றாமல் சஹஸ்ரா பார்த்திருக்க, அவனும் அவள் விழிகளுக்குள் தன்னை புதைத்தான். அதில், நீ என்னுடையவள் என்ற உரிமை அப்பட்டமாக தெறிக்க, அவன் கண்கள் காட்டிய காதலில் ‘அம்னீசியா’ வந்தது என்னவோ அவளுக்குத்தான்.

அவளின் விழி மொழியில், இதழோரம் புன்னகை பூத்தவன், “இப்போ நான் சேஃப் தான சஹி? எனக்கு ஒன்னும் ஆகாதே.” என பயந்தது போல கேட்டான்.

அத்தனை நேரமும் காதலில் விழுந்திருந்தவள், இப்போது கோபத்துடன், “கோவில்ல நின்னு விளையாடாதீங்க” என்றாள் முகத்தை சுருக்கி.

“அப்போ வீட்டுக்கு போய் விளையாடவா?” அவனும் அவளை வாரி, அவளது முறைப்பைப் பரிசாக பெற்று விட்டு, குங்குமத்தையும் அவளின் நெற்றி வகுட்டில் இட, அவள் விழிகள் கலங்கியது.

கண்ணை மூடி, ஆத்மார்த்தமாக அந்த தீண்டலையும், அந்நிமிடத்தையும் மனதில் உள்வாங்கிக் கொண்டவளின் தோற்றம் கண்டு, அவனுக்கும் என்னவோ போல் ஆகி விட, “லவ் யூ பிரின்சஸ்!” என்றபடி பிறை நெற்றியில் மென் முத்தம் அளித்தான்.

தேவிகா தான் திருதிருவென விழித்தபடி, “இவள் என்னமோ இப்ப தான் இவரை ஃபர்ஸ்ட் டைம் கல்யாணம் பண்ணிக்கற மாதிரி ஏன் இவ்ளோ பில்ட் – அப் குடுக்குறா நிக்கி?” என யோசிக்கும் பாவனையுடன் கேட்க, அவளுக்கு ஒப்பந்த திருமணம் பற்றி தெரியாததால், அதனை மறைத்தவன், அவளின் தாலி செயின் தொலைந்து போனதைக் கூறி, அதனால் உணர்ச்சி மிகுதியில் இருப்பாள் போலும் என சமாளித்தான்.

“அச்சோ அப்படியா? பாவம் ரொம்ப பயந்துட்டா போல. இதை முன்னாடியே சொல்லிருக்கலாம்ல. நான் உங்க கல்யாணம்ன்னு நினைச்சேன்” என்றவளுக்கு, இப்போது தான் நிம்மதி பெருமூச்சு விட முடிந்தது.

அவளை சுவாரஸ்யமாக பார்த்தவன், “ஏன், எனக்கு கல்யாணம்ன்னா நீ நிம்மதியா ஃபீல் ஆகுற?” எனக் கேட்டு வைக்க, அவ்வளவு அப்பட்டமாகவா தெரிகிறது என அதிர்ந்தவள், பதில் கூறத் தெரியாமல் நின்றாள்.

பின், “அது… அது… ஹான்! என்ன இருந்தாலும் நீங்களும் நானும் சிங்கிள். ஒரு சிங்கிளுக்கு கல்யாணம் ஆனா, இன்னொரு சிங்கிளுக்கு வரக் கூடிய லைட்டான பொறாம தான்…” என சமாளித்து விட்டு, “நான் போய் பிரகாரத்தை சுத்துறேன்.” என்ற படி தப்பித்து ஓடி விட்டாள்.

அவள் சமாளிப்பில் அவனுக்குள்ளும் வேதியியல் மாற்றம் நிகழ, சின்னதாய் முறுவலித்தான்.

தீரனும் சஹஸ்ராவும் தங்களின் காதல் உலகில் சஞ்சரிக்க, மீண்டும் இருவரும் வீட்டை நோக்கி சென்றனர்.

இப்பொழுது சஹஸ்ரா அவனை ஓரக்கண்ணில் ரசித்தபடி வர, அவன் பார்க்கும் போது பார்வையை திருப்பிக் கொண்டாள்.

“திருட்டுத் தனமா சைட் அடிக்கணும்ன்னு அவசியம் இல்ல சஹி. அதுக்கும் ஞாபகம் வரணுமா என்ன?” நக்கல் நகையுடன் கேட்க, அவள் கண்ணை மூடித் திறந்து, அசடு வழிந்தாள், தன்னை கண்டுகொண்டானே என்ற கூச்சத்தில்.

இன்னும் அவன் கேலியாய் புன்னகைத்திருப்பதை உணர்ந்து, “அது… நீங்க நல்லா பாடுனீங்க. அத சொல்ல தான் பார்த்தேன்.” என உதட்டைக் கடித்தவளைக் கண்டு இன்னும் பெரிதாக இதழ் விரித்தான்.

இருவருக்குள்ளும் மௌன போராட்டம் நிகழ, மனம் முழுதும் பொங்கும் ஆர்ப்பரிப்புடன், அவனைக் காண இயலாமல் அடுக்களைக்குள் புகுந்து கொண்டாள்.

அவனுக்காக பாலை காய்ச்சியவள், கப்பை எடுக்கப் போகும் போது, அவளது கழுத்தில் வெப்ப மூச்சு பரவியது.

அது தன்னவன் தான் என்று புரிந்ததில், நகரத் தோன்றாமல் உறைத்திருக்க, சிவந்திருந்த செவி மடலுக்கு முத்தமிட்டவன், மெல்லிய குரலில் விட்ட பாடலைத் தொடங்கினான் ரசனையுடன்.

நீலம் கொண்ட கண்ணும்

நேசம் கொண்ட நெஞ்சும்
காலம்தோறும்

என்னை சேரும் கண்மணி

பூவை இங்கு சூடும்

பூவும் பொட்டும் யாவும்

மன்னன் எந்தன் பேரை

கூறும் பொன்மணி

காலை மாலை

ராத்திரி காதல் கொண்ட

பூங்கொடி ஆணை போடலாம்

அதில் நீயும் ஆடலாம்

விட்டால், காதுகளுக்குள் இதழ்களை மூழ்கி இருப்பான். அவளோ முற்றிலும் மெய்மறந்திருக்க, அவளை அவன் புறம் திருப்பியவன், இறுக்கி அணைத்து, அவள் கழுத்தில் முகம் புதைத்து மீண்டும் தொடர்ந்தான் உருகலுடன்.

நீ வாழத்தானே

வாழ்கின்றேன் நானே

நீ இன்றி ஏது

பூ வைத்த மானே

இதயம் முழுதும்

எனது வசம்

வா வா

அன்பே அன்பே

காதல் நெஞ்சே

நெஞ்சே

அந்நேசத்திற்கு அடிமையானவள் போல, கரங்களை அவன் முதுகிற்கு பின்னால் பரவ விட்டாள் பாவை.

 

யாரோ இவள்(ன்)மே

கா!

ஹாய் டியர் ஃப்ரெண்ட்ஸ்… நாளைக்கு ஒரு பெர்சனல் கமிட்மென்ட் சோ அடுத்த பதிவு வெள்ளிக்கிழமை வரும். ஸ்டோரி எப்படி இருக்குன்னு சொல்லுங்க drs. And thank you soooo much for all of your comments and stickers 💜💜💜💜🤩

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
32
+1
115
+1
5
+1
4

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment