Loading

“காஞ்சனா என் அத்தை” என்ற துருவின் வாசகத்தில், அஜயும், அர்ஜுனும் உச்சகட்ட அதிர்ச்சியில் இருக்க, அந்த நேரத்தில் அவர்களின் மொத்த குடும்பமும், பதட்டத்துடன் அங்கு வந்தடைந்தது.

லட்சுமி “உதிக்கு என்னடா ஆச்சு?” என்று அர்ஜுனிடம் அழுகுரலில் கேட்க, அர்ஜுன், “அம்மா அவளுக்கு ஒண்ணும் இல்லை. நல்லாத்தான் இருக்கா. நீங்க போய்ப் பாருங்க” என்று உள்ளே அனுப்பினான்.

கருணாகரன், “யாரு இதைப் பண்ணுனது அஜய்? அவள் கூட இருக்காமல் நீ எங்க போன?” என்று அஜயிடம் எகிறினார். அஜய், துருவை முறைக்க, அப்பொழுது அவனுக்கு வந்த போன் காலில் அதிர்ந்து போனான்.

அவர்களின் டயர்(tyre) தொழிற்சாலையில் டயர் தயாரிக்கிற இயந்திரங்களை இயங்க வைக்கும், சர்வர்(server) அறை மட்டும் வெடித்து சிதறி விட்டது என்றும், இதனால், அனைத்து இயந்திரத்தின் இயக்கமும் தடை பட்டு விட்டதாகவும், வேலையாட்கள் யாருக்கும் எந்தப் பாதிப்பு இல்லை எனவும் இருந்தும் அனைவரும் மிகுந்த பயத்தில் இருப்பதாகவும் தகவல் வந்தது.

இதனைக் கேட்டு அதிர்ந்தவன், துருவை மீண்டும் முறைத்து விட்டு, கருணாகரனிடம் விஷயத்தைச் சொல்ல, அவரும் வெகுவாய் அதிர்ந்து விட்டார்.

இந்நிலையில், உத்ராவும் கண்விழிக்க, அஜய் முகமே சரி இல்லை என்று உணர்ந்தவள், அவனிடம் என்னவென்று வினவ, அவனும் நடந்ததை சொல்லி விட்டான்.

இதில் துருவ் தான் அவன் சொன்ன எதற்கும் அதிர்ச்சியாகாமல் அசையாமல் நின்றான். உத்ரா துருவையே உற்றுப் பார்த்து விட்டு, உடனே அங்கிருந்து கிளம்ப எத்தனித்தாள்.

குடும்பத்தினர் ஓய்வு எடுக்கச் சொன்னதையும் காதில் வாங்காமல், தொழிற்சாலைக்குச் சென்றாள். உத்ரா, அர்ஜுன், அஜய், விதுன் நால்வரும் அங்குச் செல்ல, காவலர்களும் அங்கு வந்து விசாரித்துக் கொண்டிருந்தனர்.

இதனை யார் செய்திருப்பார்கள்? எனத் தீவிரமாய் உத்ரா சிந்தித்துக் கொண்டிருக்க, மேலும் இந்நேரம் தான் இங்கு தான் ‘ரௌண்ட்ஸ்’ வந்திருக்க வேண்டும். ஆனால் துருவ் தன்னை வெளியில் அழைத்துச் சென்றதால், தன்னால் இங்கு வரமுடியவில்லை. அவன் ஏன் என்னை வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்? நான் இங்கு வந்திருந்தால் இந்தச் சம்பவத்தை நிச்சயம் தடுத்திருப்பேன்? என்னைத் தாக்க வந்தவர்கள் யார்? அதிலிருந்து என்னை ஏன் அவன் காப்பற்ற வேண்டும்? என்று யோசித்து யோசித்து குழம்பி தலைவலியே வந்தது அவளுக்கு.

மேலும், அஜய் அவன் காஞ்சனாவின் ஒன்று விட்ட அண்ணன் மகன் தான் என்றதில், பின் துருவிடமே சென்றவள்,

“யார் நீ? இங்க என்ன நடக்குது?” என்று தீப்பொறி பறக்கக் கேட்டாள்.

அவன் பெரிதாய் அலட்டாமல், “உன் அத்தை பையன்!” என்றான் அவளை மேலும் கீழும் பார்த்துக் கொண்டே.

பின், “பதில் தெரிஞ்சுக்கிட்டு வந்து கேள்வி கேளு உத்ரா” என்று மீண்டும் அவன் பல்லவியையே பாட,

அதில் கடுப்பானவள், “தெரிஞ்சுக்குறேன் துருவ். அந்த காஞ்சனாவும், ரிஷியும் உன்னை என்ன காரணத்துக்காக அனுப்புனாங்கன்னு கூடிய சீக்கிரம் தெரிஞ்சிக்கிறேன். பட் ஒன் திங்… நீ என்ன நினைச்சு இங்க வந்தியோ அது நிச்சயம் நடக்காது” என்றாள் சீற்றத்துடன்.

அவன் மெலிதாய் சிரித்து விட்டு, “ஏன் நடக்காம? எல்லாமே நான் நினைச்ச மாதிரி தான் ஹனி நடக்குது” என்றவன் அவள் அடிபட்ட கையைத் தடவி, “இதைத் தவிர” என்றான்.

அவன் கண்ணில் என்ன இருந்தது என்று புரியாமல், அவன் கையைத் தட்டி விட்டு வெளியில் வந்தாள். தான், பத்திரிக்கையில் அவனைப் பற்றி தவறாகச் சொன்னதால் என்னை இப்படி பழிவாங்கி விட்டான் என்று அவனைக் கோபத்துடன் நினைத்துக் கொண்டிருக்க, அந்த நேரத்தில், இன்ஸ்பெக்டரிடமிருந்து போன் வந்தது.

அவளின் தொழிற்சாலையின் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் ஒருவன் சிக்கி இருப்பதாகவும், அவரின் கணிப்புப் படி அவன் தான் இதனைச் செய்திருக்க வேண்டும் எனச் சொன்னதும், உடனடியாய் அவனைப் பிடிக்க ஏற்பாடு செய்யச் சொன்னாள்.

அடுத்த ஒரு மணி நேரத்தில், அவனைப் பிடித்து, அந்த இன்ஸ்பெக்டர் அவள் முன் நிறுத்தி இருந்தார். அவனை, அடித்து உதைத்து கேட்டதில், அவன் தான் டைம் பாம் வைத்ததாக, ஒத்துக்கொண்டான்.

பின், யார் இதை செய்யச் சொன்னது என்ற கேள்விக்கு அவன் சொன்ன பதிலில் அனைவரும் அதிர்ந்து விட்டனர். அவன் சொன்ன பெயர் துருவேந்திரன் தான். அவன் தான் அவனுக்குப் பணம் கொடுத்து ‘பாம்’ வைக்க சொன்னதாகச் சொன்னான்.

அஜயும், அர்ஜுனும் கோபத்துடன் “அவனை சும்மா விடக் கூடாது உதி. அவன் மனசுல என்ன தான் நினைச்சுகிட்டு இருக்கான்?” என்று கத்த, இன்ஸ்பெக்டர் “அவன் மேல கேஸ் போடலாம் உத்ரா” என்று சொன்னதில், உத்ரா, “வேண்டாம்” என்றாள் உறுதியாக.

அஜய் “ஏன் உத்ரா வேண்டாம்னு சொல்ற?” என்று புரியாமல் கேட்க,

“இதுல எனக்கு ஏதோ ஒரு விஷயம் உறுத்திக்கிட்டே இருக்கு. அதுக்கும் மேல, அவன் மேல கேஸ் போட்டாலும் அதை அவன் ஈஸியா ஒண்ணும் இல்லாமல் ஆக்கிடுவான்” என்று யோசித்து சொல்லிக்கொண்டிருக்க அப்பொழுது இன்ஸ்பெக்டருக்கு வந்த போன் காலில், அவர் “அப்படியா? அந்த பென்ட்ரைவ்ல இருந்த டேட்டாவை ரெகவர் பண்ணியாச்சா?” என்று சுருங்கிய புருவத்துடன் கேட்டு விட்டு, பின் “சரி நான் வரேன்” என்று போனை வைத்தார்.

உத்ரா “என்னாச்சு சார்?” என வினவியதில்,

அவர்,” உங்க சர்வர் ரூம்ல இருந்து ஒரு பென்ட்ரைவ் மட்டும் எரியாமல் இருந்துருக்கு உத்ரா…” என்றதும்,

அஜய், “வாட் நான்சென்ஸ்? அங்க கம்ப்யூட்டர்ல இருக்குற சர்வர் மூலமா தான் மெஷின் ஓடிக்கிட்டு இருந்துருச்சு. இதுல அங்க பென்ட்ரைவ்க்கு வேலையே இல்லை” என்று அதிர, உத்ராவும் குழப்பமாக, “அந்த பென்ட்ரைவ்ல என்ன இருந்ததுன்னு பார்க்கலாம்” என்று சொல்லி அங்கு விரைந்தனர்.

அங்கு அவர்கள் கேட்ட விஷயம் உத்ராவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும், பெரும் குழப்பத்தையும் கொடுத்தது.

பொதுவாக ஒரு மெஷின் இயங்குவதற்கு, அதனுடைய கபாஸிட்டி(capacity) 150 நியூட்டன் தான் இருக்கும். ஏற்கனவே, உத்ராவின் தொழிற்சாலையில், அதனை 100 நியூட்டன் அளவில் இயங்க வைத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் பென்ட்ரைவில், கிட்டத்தட்ட 1500 நியூட்டன் அளவுக்கு இயங்குமாறு கட்டளைகள் கொடுத்து, கம்ப்யூட்டரில் மாட்டப்பட்டு இருக்கிறது. அதாவது, அந்த அளவில், இயந்திரங்கள் அனைத்தும் வேகமாக இயங்கினால், சுற்று வட்டாரத்தில், இருக்கும் அனைத்துமே வெடித்து சிதறி விடும். அந்தத் தொழிற்சாலையும், அதற்கு அருகில் இருக்கும் இடமும், மேலும் அங்கிருந்த 550 தொழிலாளர்களும், தரைமட்டமாகி இருப்பர்.

அந்த வேகத்தில், இயந்திரம் இயங்கும் முன்பே, சர்வர் அறை வெடிக்க வைக்கப் பட்டிருக்கிறது. அதனால், இயந்திரங்கள் தங்களின் இயக்கத்தை நிறுத்திப் பேராபத்தில் இருந்து தப்பபட்டிருக்கிறீர்கள். என்று போலீஸ்
சொன்னதில், ஆண்கள் மூவரும் “மை காட்!” எனத் தலையில் கை வைத்தனர்.

உத்ராவிற்கு தான் இதனை எப்படி எடுத்துக் கொள்வது என்றே புரியவில்லை. இதை எப்படி கவனியாமல் விட்டோம் என்று தன்னையே நொந்தவள், ‘இந்த அறையை துருவ் மட்டும் வெடிக்க வைக்காமல் இருந்திருந்தால், தன் தொழில் வாழ்க்கைக்கே பெரும் இழப்பும், மேலும், அவன் மட்டும், தன்னை வெளியில் அழைத்துச் செல்லாமல் இருந்திருந்தால், இந்நேரம் இங்குத் தானும் வெடித்து சிதறி இருப்போம் என்றும் யோசித்தவள், மற்றவர்களிடமும் இதனைச் சொல்லி, குழம்பினாள்.

அர்ஜுன்,” தெரிஞ்சோ தெரியாமலோ அவன் பெரிய ஹெல்ப் தான் பண்ணி இருக்கான்” என்க, விதுவும் அதனை ஆமோதித்தான்.

ஆனால் அஜயால் மட்டும் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் உத்ராவிற்கு தீங்காய் நினைத்துச் செய்யப்போக, அது நன்மையாய் முடிந்திருக்கிறது என்று வாதிட்டான்.

மேலும், “அவன் இனிமே ஒரு நிமிஷம் கூட இங்கு இருக்கக் கூடாது. இதுனால நம்ம கன்ஸ்ட்ரக்ஷ்ன் கம்பெனிய இழுத்து மூடுனாலும் பரவாயில்லை” என்று வேகமாக, அலுவலகத்திற்கு சென்றான்.

“டேய் டேய்” என்று அவனைத் தடுத்துக் கொண்டே, அர்ஜுனும், விதுவும் அவன் பின்னே செல்ல, உத்ரா நெற்றியில் கை வைத்து அங்கேயே அமர்ந்து விட்டாள்.

வெறியாய் துருவின் அறைக்குள் நுழைந்த அஜய், அவன் சட்டையைப் பிடித்தான்.

அர்ஜுனும், விதுவும் அவனைத் தடுக்க, மீரா தான் இவர்களை மிரண்டு பார்த்துக் கொண்டிருந்தாள்.

அஜய், “உனக்கு என்னடா வேணும்? ஏண்டா உதிக்கிட்ட தேவையில்லாம பிரச்சனை பண்ற?” எனக் கேட்டு விட்டு, “உன்னை அந்த காஞ்சனாவும் ரிஷியும் எதுக்குடா இங்க அனுப்பி இருக்காங்க… ஹான்?” என்றான் ரௌத்திரத்துடன்.

அவனை அமைதியாய் பார்த்த துருவ், “மரியாதையா பேசு!” என்று பல்லைக்கடித்துக் கொண்டு கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு கூற,

“உனக்கென்னடா மரியாதை? சொந்த தங்கச்சின்னு கூட நினைக்காம அவளைக் கூட்டி குடுக்க கூட அந்த ரிஷி தயங்க மாட்டான். நீயும் அவன் சொன்னதை கேட்டுத் தான இங்க வந்துருக்க. நீ அவளைப் பார்க்குற பார்வையே சரி இல்லையே. அவளை உன் வலையில விழ வைக்கலாம்னு தான வந்துருக்க. அவளை எப்படி ஏமாத்தி, அவளை நாசமாக்குறதுன்னு அந்த ரிஷி பிளான் போட்டுக் குடுத்தானா? உனக்கும் உத்ராவுக்கும் என்னடா சம்பந்தம்? ஏன் நீ தேவை இல்…” என்று தன் போக்கில் அவன் பேச,

துருவ் அவனின் கண்ணாடி டேபிளை இரு கைகளாலும் ஓங்கி குத்தி “ஆமா அவளை ஏமாத்த தான் நான் வந்தேன்…” என்றான் கர்ஜிக்கும் குரலில்.

அவன் குத்தியதில் அந்த டேபிள் உடைந்து கண்ணாடி தூள் தூளானது. அவன் பேச்சில் மீராவும், அவன் கோபத்தில் மற்றவர்களும், அதிர்ந்து அவனைப் பார்த்தனர்.

துருவ் அவனின் நிலையிலேயே இல்லை. அஜயின் சட்டையைப் பிடித்து, “என்ன கேட்ட? உத்ராவுக்கு எனக்கும் என்ன சம்பந்தமா?” என்றவன், வெறி கொண்ட வேங்கையாய் அங்கும் இங்கும் அலைந்து, பல்லைக் கடித்து கொண்டு,

மீண்டும் அவன் சட்டையைப் பற்றி “அவள் என் உயிருடா. உதி என் பொண்டாட்டி. ஷி ஐஸ் மை எவெரிதிங்” என உச்சகட்ட வெறியில் கத்தியவன் அங்கிருக்கும் பூச்சாடியையும் தூக்கி எறிந்தான். அதில் அனைவரும் சிலையாகி நின்றனர்.

உறைதல் தொடரும்!
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
16
+1
72
+1
5
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்