Loading

மஹாபத்ராவின் அமைதி ஆடவனுக்கு குறுகுறுப்பை மூட்டியது. இப்படியே கோபத்தை அதிகரித்து, இங்கிருந்து ஓடிவிடு என மூளை அறிவுறுத்த, மனமோ தடுமாறி நின்றது.

ரோஜாவையும் மாதவையும் மதனுடன் அனுப்பி வைத்தவள், தஷ்வந்தை அவளே அழைத்து செல்ல, அப்போதும் அவளது முகம் கடுகடுவென தான் இருந்தது.

“நான் இன்னைக்கு ஹாஸ்டலுக்கு போகட்டா?” என்றவனின் கேள்வியில் காரை சடாரென நிறுத்தியவள், தீயாக முறைத்து வைக்க,

அவனோ, “அதான் நீ கோபப்பட்டுட்டியே. அப்ப நான் போகலாம்ல” என்றான் நியாயமாக.

“நான் கோபப்பட்டா உன்னை அனுப்புவேன்னு சொல்லல தஷ்வந்த். என்னை அடிச்சா மட்டும் தான் உனக்கு ஆஃபர். அதிலயும் சில டர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் இருக்கு.” என்றவளின் கோப விழிகள் அவனைக் கொன்றே போட்டது.

ஆணவன் தான் அதில் சற்றே மிரண்டு அமைதியாக, மஹாபத்ராவே அதட்டலுடன் தொடர்ந்தாள்.

“தோ பாரு தஷ்வந்த். நான் மறுபடியும் மறுபடியம் சொல்லிக்கிட்டே இருக்க மாட்டேன். என் கண் பார்வையை விட்டு, உன்னால அணுவளவு கூட அசைய முடியாது. என்னை தேவை இல்லாம கோபப்படுத்தி பார்க்க ஆசைப்படாத அது உனக்கு மட்டுமில்ல, உன் ஃப்ரெண்டுக்கும் நல்லது இல்ல. நீ என்ன தான் ட்ரை பண்ணுனாலும் நானா மனசு வைக்காம உன்னால மூச்சு கூட விட முடியாது. யூ ஆர் டோட்டலி மைன் நொவ். அதை முதல்ல உன் மனசுல நல்லா ஏத்திக்க. இன்னொரு தடவை நமக்குள்ள இந்த டாபிக் வந்துச்சுன்னா, அடுத்த நாள் நீ மாதவோட ஃபியூனரல் அட்டெண்ட் பண்ண வேண்டியது இருக்கும். மைண்ட் இட்.” கோபத்தின் உச்சநிலையில் இருந்தவள், அதனை காரின் மீது காட்டினாள்.

அப்படியொரு வேகத்தை ஏற்கனவே ஒரு முறை கண்டதாலோ என்னவோ, இம்முறை அதனைக் கண்டு அச்சம் எழவில்லை. அவளைக் கண்டும் தான்…!

அவனுக்கும் லேசாய் கோபம் எழுந்தது. ‘நான் என்ன மனுஷனா… இல்ல ரோபோவா?’ எனப் பல்லைக் கடித்து அடக்கியவன்,

“மெதுவா போ.” என்றான் எரிச்சலாக.

அவளோ ஏதோ யோசனையுடன் சாலையை வெறித்திருக்க, “பத்ரா உன்ன தான் சொல்றேன் மெதுவா போ.” என அவளது தோளை உலுக்கி கட்டளையாக கூறியதில், சட்டென திரும்பியவள், அடுத்த நொடி வேகத்தை குறைத்திருந்தாள்.

அதே எரிச்சலுடன், “நான் ஒன்னும் ரோபோ இல்ல பத்ரா. நீ கீ குடுத்தா பேசுறதுக்கும், நடக்குறதுக்கும்… என்னால என் தன்மானத்தை எப்பவும் விட முடியாது. உன் கால்ல வந்து விழுவேன்னு கனவுல கூட நினைக்காத.” என்றவனுக்கு, அவள் அவனை அடிமையாக நடத்துவது போலொரு எண்ணம்.

சற்றே புருவம் உயர்த்தி வியப்பாக பார்த்தவள், அடுத்த கணமே தீவிரத்துடன், “நான் உன்னை அடிமையா நடத்தணும்ன்னு நினைக்கல தஷ்வா. உனக்காக ஒவ்வொண்ணும் பார்த்து பார்த்து செஞ்சும், நான் உன்னை இப்படி கேவலமா நடத்துற மாதிரி இருக்கா? உன்னை சில விஷயத்துல ஃபோர்ஸ் பண்றதை தவிர, உன் தன்மானத்தை சீண்டிப் பார்க்க நினைச்சது இல்ல. அது என்னை நானே கேவலப்படுத்திக்கிற மாதிரி. நான் உன்மேல காட்டுறது பியூர்லி அஃபெக்ஷன். அது உனக்கு அடிமைத்தனமா தெரியுதா? உன்னை என் கால்ல விழுக சொன்னதா எனக்கு ஞாபகம் இல்ல! அப்படி ‘மீன்’ பண்ணி நான் ஏதாவது பண்ணிருந்தா ஐ ஆம் சாரி.” முகபாவம் மாறாமல் உண்மையான வருத்தத்துடன் பேசி முடித்தவளைக் கண்டு அவனுக்கு தான் வாயடைத்த நிலை.

அவன் போஸ்டிங் செல்லும் மருத்துவமனை முன் காரை நிறுத்தியவள், “பை! சீ யூ இன் தி ஈவினிங்.” என்றது கூட அவனுக்கு உறைக்கவில்லை.

ஏதோ மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போலவே தான் அன்று முழுதும் சுற்றினான். ‘இவள் என்ன ரகம்ன்னே புரியல. இவளோட இந்த அடாவடித்தனத்தை அன்புன்னு சொல்றதா, சைக்கோத்தனம்ன்னு சொல்றதா… கடவுளே! இந்த பத்ரகாளியை புருஞ்சுக்க தனியா ஒரு மூளை பார்சல் பண்ணு.’ என மானசீகமாக வேண்டிக் கொண்டான்.

கேன்டீனில் தேநீர் அருந்தியபடி, புத்தகத்தில் விழிகளைப் பதிந்திருந்தாள் மந்த்ரா.

கூடவே, ‘தஷுவும் மாதவும் எங்க போனானுங்க…’ என்ற எண்ணமும் ஓடிக் கொண்டிருக்க, அருகில் நிழலாடியதில் நண்பர்கள் தான் வந்து விட்டனர் என்றெண்ணி, “தஷு எங்க போன?” என கேட்டபடி நிமிர்ந்தவள் எதிரில் புன்னகை முகத்துடன் அமிஷ் நிற்பதைக் கண்டு முதலில் திகைத்து பின் முறைத்தாள்.

அப்படியே புத்தகத்தை மூடி வைத்து எழப் போனவளை, தடுத்து அவளருகிலேயே நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தவன், “ஏண்டி, உங்கிட்ட பேசணும்ன்னு நானும் குட்டி போட்ட பூனை மாதிரி உன் பின்னாடியே சுத்துறேன். கொஞ்சம் கூட கண்டுக்காம என்னை அலைய விடுற?” என்றான் கடுப்பாக.

அவளுக்கு தெரியாதா? அவன் கூறப் போவதை தான் அவனது விழிகள் பல தடவை உணர்த்தி விட்டதே. ஆனால், அதனைக் கேட்க தான் அவளுக்கு பிடிக்கவில்லை.

“என்கிட்ட பேச உங்களுக்கு ஒண்ணும் இல்ல சீனியர். உங்க சங்காத்தமே எனக்கு வேணாம். என்னை நிம்மதியா விடுங்களேன்.” என்றவள், கெஞ்சல் மொழிகளுடன் எழ முயல, “மந்த்ரா… ஜஸ்ட் சிட்.” என்றான் குரலை உயர்த்தி.

அக்குரலில் தன்னிச்சையாக இருக்கையில் அமர்ந்து விட்டாள். “இங்க பாருங்க. இந்த கத்துற வேலை எல்லாம் என்கிட்ட வேணாம்.” என சிலிர்த்துக் கொண்டவளின் குரல் அவன் பார்வையில் மெல்ல அடங்கியது.

“சோ, மேடம்க்கு நான் என்ன சொல்ல வரேன்னு நல்லா தெரிஞ்சுருக்கு அப்படித்தான?” என அவளை உறுத்தும் பார்வை பார்த்தபடி, அவள் மிச்சம் வைத்த தேநீரை ஒரு மிடறு விழுங்கிட, அவளுக்கு தான் கன்னக்கதுப்பில் சிவப்பு படர்ந்தது.

“அது… அது… நான் குடிச்சது.” இதழ்களை கடித்தபடி அவள் கூறியதில்,

“ஓ… அதான் என்னைக்கும் இல்லாம இன்னைக்கு டீ இவ்ளோ மோசமா இருக்கா?” என்றான் அடக்கப்பட்ட நகையுடன்.

அவளோ வெட்கம் மறைந்து வெளிப்படையாக முறைக்க, சிரிக்கத் துடித்த இதழ்களை அரும்பாடுபட்டு அடக்கியவன், “அதை விடு. நான் கேட்டதுக்கு பதில் சொல்லு. நான் என்ன சொல்ல வரேன்னு தெரியுமா?” என்றான் வீம்பாக.

திரு திருவென விழித்தவள், பின், “என்னை லவ் பண்றீங்க? அதை தான சொல்ல போறீங்க…” என்று உர்ரென்ற முகத்துடன் கேட்க,

“உனக்கு என்ன மனசுல பெரிய உலக அழகின்னு நினைப்பா. உன்னை பார்த்ததும் லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் ஆகி, உன் பின்னாடி அலைய…” வேண்டுமென்றே அவளை கோபப்படுத்தினான்.

அவளுக்கோ ஐயையோ என்றானது. ஆனாலும் கடுப்புடன், “நீங்க சொன்னாலும் சொல்லலைன்னாலும் நான் அழகி தான்…” என சிலுப்பிக் கொண்டவள், “அப்பறம் எதுக்கு, பேசணும் பேசணும்ன்னு என்னை இம்சை பண்றீங்க.” என்றாள்.

“அதுவா… எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா. டென்த் படிக்கிறா. மேத்ஸ்ல ரொம்ப வீக். லாஸ்ட் எக்ஸ்சாம்ல ஃபெயில் கூட ஆகிட்டா. நீ தான் மேத்ஸ்ல புலின்னு உன் க்ளாஸ்மேட்ஸ் சொன்னாங்க. அதான், போனா போகுதுன்னு உன்னை என் தங்கச்சிக்கு டீச் பண்ண சொல்லலாம்ன்னு கேட்க வந்தேன். அதுக்குள்ள நீ என்னமோ என்னை ரோட் சைட் ரோமியோ மாதிரி ட்ரீட் பண்ற?” என்று போலியாய் சலித்துக் கொண்டான்.

அவனது மனசாட்சியோ, ‘அடப்பாவி’ என்று அவனை காறி உமிழ அதனை ஒதுக்கி விட்டவன், அவள் முகம் பார்த்தான்.

அவளோ குழப்ப நிலையில் அமர்ந்திருந்தாள்.

உண்மையா தான் சொல்றானா? இல்ல நம்மளை சுத்தல்ல விடுறானா? என்றே தலையை உருட்டியவளுக்கோ, அவனது பேச்சில் பொய் இருப்பது போல தெரியவில்லை.

இருப்பினும், “இந்த ஊர்ல ஒரு டியூஷன் சென்டர் கூடவா இல்ல?” எனக் கேட்டவளிடம்,

“நிறைய இருக்கு. ஆனா அவள் போகணுமே. நான் சொல்லிக்கொடுக்கலாம்ன்னு பார்த்தா, சொல்லி குடுக்குற அளவுலாம் எனக்கு மேத்ஸ் வராது.” என வருந்திக் கொண்டான்.

அவன் எவ்வளவு சொல்லியும் மனம் ஏற்றுக் கொள்ள மறுக்க, “ஆனா, அதுக்கு நான் என்ன பண்றது. எனக்கு டைம் இருக்குமான்னு தெரியல…” என நழுவிக் கொள்ள எத்தனித்தாள்.

“நீ தான் காலேஜ் முடிஞ்சு வீட்டுக்கு போனதும், வீட்ல டியூஷன் எடுக்குற தான… அப்பறம் என்னடி டைம் இல்லன்னு ஓவரா சீன் போடுற?” என்றான் முறைப்பாக.

‘இதுலாம் எப்படி இவனுக்கு தெரியும்’ என விழி விரித்தவள், “அது சின்ன பசங்களுக்கு எடுக்குறேன். ஜஸ்ட் ஒன் ஆர் டூ ஹவர்ஸ். ஆனா டென்த்க்கு…?” என தயங்கியபடி பார்க்க,

“அதே ஒன் ஆர் டூ ஹவர்ஸ் சொல்லி குடுத்தா போதும். ஜஸ்ட் மேத்ஸ் மட்டும் தான?” அவனும் பிடிவாதமாக நின்றான்.

படிப்பு விஷயத்தில் அவளாலும் மறுக்க இயலவில்லை. ஆனாலும் அவனிடம் ஏதோ முரண்பட, அது புரியாமல் கையை பிசைந்தவளிடம், “ஹெலோ ரொம்ப யோசிக்காத நான் டியூஷன் ஃபீஸ்லாம் கரெக்ட்டா கொடுத்துடுவேன்.” என்றான் காலரை தூக்கி.

அதில் அவனை முறைப்பாக பார்த்தவள், “ஓ! குடுக்க மாட்டேன்னு வேற சொல்லுவீங்களா சீனியர்? நான் ஒன்னும் சோசியல் சர்விஸ் பண்ணல. சோ குடுத்து தான் ஆகணும்.” என்று அவளும் பக்கா டியூஷன் டீச்சராகவே பேசினாள்.

அவளது பதிலில் புன்னகைத்தவன், “அப்போ ஓகே… இன்னைக்கு ஈவினிங் அவளை கூட்டிட்டு வரேன்.” என்று விட்டு எழுந்து சென்றான்.

அவன் புன்னகையில் தான் அவளது மனம் நழுவி ஓட முற்பட, அதனை முடிந்த மட்டும் இழுத்து பிடித்துக் கொண்டாள்.

புன்னகை முகமாக வகுப்பறைக்கு சென்றவனை வினோதமாக பார்த்த ஆஷா, “என்னடா முகத்துல டாலடிக்குது. ப்ரொபோஸ் பண்ணிட்டியா என்ன?” என வினவ,

“சீ! சீ இல்ல…” என்றவன் நடந்ததை அப்படியே கூறினான்.

“அடப்பாவி! உன் காதலை வளர்க்க, உன் தங்கச்சி தான் கிடைச்சாளா?” என வாயைப் பொத்தி சிரித்தவளிடம்,

“உண்மையாவே அவளுக்கு மேத்ஸ் சொல்லிக்கொடுக்க தான் கூட்டிட்டு போறேன் ஆஷா. அவள் மேத்ஸ புருஞ்சுகிட்ட மாதிரி ஆச்சு, மந்து என்னை புருஞ்சுக்கிட்ட மாதிரியும் ஆச்சு… எப்படி நம்ம ஐடியா?” என சிலாகித்துக் கொள்ள, தலையில் அடித்துக் கொண்டாள் ஆஷா.

மனதில் இருந்த புழுக்கத்தை சற்றும் அவனிடம் வெளிக்காட்டவில்லை. காதல் மயக்கத்தில் இருந்தவனும் அதனை கவனிக்கவில்லை.

மறுநாள் காலையில் எழுந்த மாதவ், ரோஜா வரும் முன்பே சமையலறைக்குள் புகுந்து வெங்காயம் நறுக்கத் தொடங்கி விட்டான். பின்னே, அவள் வந்து அதிகாரம் செய்து, அவனை படுகேவலமாக திட்டும் முன், தானே இறங்கி வேலை செய்தவனுக்கு, இதுக்கு விடுதியே தேவலை என்று தோன்றியது.

“அங்கேயாவது மணி அடிச்சா சோறு தருவாங்க. இங்க…!” என வாய்விட்டே, நொந்து கொண்டவன், வெங்காயத்தால் கலங்கிய கண்களை துடைத்தபடி வேலை செய்ய, அப்போது தான் அங்கு வந்த ரோஜா அவனைப் பார்த்து சிரித்து விட்டாள்.

“உனக்கு சிரிப்பா இருக்கா?” அவன் முறைத்தபடி கேட்க,

“ஆமா, இப்படி சின்ன பையன் மாதிரி அழுதுட்டு நின்னா, சிரிக்காம என்ன செய்வாங்களாம்?” என மேலும் நகைத்தவள், “தள்ளுங்க. நான் பாத்துக்குறேன்.” என்று அவனை விலக்கினாள்.

“வேணாம் வேணாம்… அப்பறம் அந்த சொர்ணாக்காகிட்ட நான் திட்டு வாங்கணும்.” என்றவன், வேறு வேலையை கேட்டு வாங்கி செய்ய, அவளும் வேலையில் மூழ்கினாள்.

இன்றும், மஹாபத்ரா வந்து அருகில் படுத்துவிடுவாளோ என்று பயந்து, விடிகாலையிலேயே எழுந்த தஷ்வந்த், அடுக்களையில் சத்தம் கேட்டு அங்கு விரைந்தான்.

“குட் மார்னிங் கைஸ். என்னடா நீ முழு குக்காவே மாறிட்டியா?” என மாதவை வார, “எனக்கு தேவை தான்” என்று முறைத்தான்.

அதில் புன்னகைத்தவன், “ரோஜா எனக்கு ஏதாச்சு வேலை குடு. ஹெல்ப் பண்றேன்.” என்றதில், அவனுக்கு காபி கலந்து கொண்டிருந்தவள் பதறியே விட்டாள்.

“அய்யயோ அக்காக்கு தெரிஞ்சே என்னை கொன்னே போட்டுடுவாங்க. நான் போய் உங்களை வேலை வாங்குறதா ம்ம்ஹும்… நான் மாட்டேன். இந்தாங்கண்ணா காபி குடிச்சுட்டு நீங்க போய் உட்காருங்க…” என படபடவென பேசிட, அவனோ இடத்தை விட்டு அசையவே இல்லை.

“என்னால இந்த ஓசி சோறு சாப்பிட முடியாது ரோஜா. நீ இப்ப என்னை ஹெல்ப் பண்ண விட்டா, நான் சாப்பிடுவேன். இல்லன்னா அப்படியே கிளம்பி போய்டுவேன்.” என அழுத்தமாக நின்றிட, அவளுக்கோ என்ன செய்வதென்று தெரியவில்லை.

“ப்ளீஸ் அண்ணா அப்படிலாம் பண்ணிடாதீங்க. ஆனா, நான் உங்கள…” என இழுத்தவளிடம், “நான் ஒன்னும் ஸ்பெஷல் கிடையாது. மாதவ் மாதிரி தான் இங்க நானும்.” என்றவன், வீம்பாக ஒரு காயை எடுத்து நறுக்கிட தொடங்க, அவளுக்கு தான், ‘பெருமாளே… அக்கா இப்போதைக்கு இங்க வந்துட கூடாது’ என்றிருந்தது. 

பின் மூவருமாக சமையலில் மூழ்க, மாதவே பேச்சு கொடுக்கத் தொடங்கினான்.

“சொர்ணாக்கா, அதான் மஹாவோட சொந்த ஊர் ஹைதரபாத் தான. அப்பறம் எப்படி அவள் நல்லா தமிழ் பேசுறா. நீ, மதன், திரு எல்லாரும் தமிழியன்ஸ் – ஆ இருக்கீங்க?” என பேச்சு வாக்கில் கேட்க, சும்மாவே அவளுக்கு கதை பேச பிடிக்கும். இப்போதோ மொத்தத்தையும் கொட்டினாள்.

“ஹர்மேந்திரன் ஐயா மட்டும் தான் இந்த ஊரு. அக்காவோட அம்மா மணிமேகலை, தமிழ் தான். அய்யாவும் அம்மாவும் அப்பவே லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க. 

மணிம்மாவுக்கு தமிழ் தான் உயிர் மூச்சு. ஹைதராபாத்ல யாரு தமிழ்ல பேசுனாலும் உடனே நல்லா பேச ஆரம்பிச்சுடுவாங்க. திரு அண்ணாவோட அப்பாவும் மதன் அண்ணாவோட அப்பாவும் ஐயாகிட்ட தான் வேலை பார்த்துட்டு இருந்தாங்க. ஆனா, கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி ஐயாவை யாரோ தாக்க வந்ததுல நடந்த அடிதடில, ரெண்டு பேரும் இறந்துட்டாங்க.

அப்போ ரெண்டு அண்ணாவும் ரொம்ப சின்ன பசங்க. அக்காவை விட மூணு, நாலு வயசு தான் பெரியவங்க. மணிம்மா தான், அவங்களை படிக்க வைக்க முயற்சி செஞ்சு, ஐயாகிட்டயும் சொன்னாங்க. ஆனா பாருங்க, அவங்க ரெண்டு பேருக்கும் தங்கச்சி தம்பின்னு இருந்ததுனால, அவங்களோட அம்மா ஐயாகிட்டயே வேலைக்கு சேர சொல்லி, ஐயாட்டையே வேலை கத்துக்குடுக்க சொல்லிட்டாங்க.

ஆனா, மணிம்மா அதுக்கு ஒத்துக்கவே இல்ல. அவங்க மட்டும் மனசு வைச்சா போதுமா, ஐயாவும் மனசு வைக்கணுமே. பெத்தவங்களுக்கே இல்லாத அக்கறை உனக்கு எதுக்குன்னு சொல்லி, ரெண்டு பேரையும் கூடவே வச்சுக்கிட்டாரு. திரு அண்ணாவுக்கு படிப்புல ஆர்வம் இல்ல. ஆனா மதன் அண்ணா நல்லா படிப்பாங்க. என்ன செஞ்சு என்ன… ஐயாவை மீறி யாராலயும் எதுவும் செய்ய முடியல.

அந்த நேரத்துல தான், என் அம்மா அவங்க வீட்ல வேலை கேட்டு போக, தமிழ்ல பேசுனதுமே என் அம்மாவை மணிம்மாவுக்கு ரொம்ப பிடிச்சுருச்சு. எனக்கும் கூட மணிம்மாவை ரொம்ப பிடிக்கும். ப்ச் ஆனா, அவங்க இப்படி வீட்டை விட்டு ஓடி போவாங்கன்னு நாங்க கனவுல கூட நினைக்கல. அதனால அக்காவுக்கு அம்மா மேல ரொம்பவே கோபம்.

ஐயா கூட ரொம்ப தளர்ந்து போய்ட்டாங்க. எங்கேங்கேயோ தேடி பார்த்தும் இன்னும் கூட அவங்க கிடைக்கல.” என வருந்தியவள், பின்,

“என் அம்மா என்னையும் வேலைக்கு கூட்டிட்டு வர்றதை பார்த்த மஹாக்கா தான், என்னை வேலைக்கு கூட்டிட்டு வந்தா நீங்களும் வரவேணாம்ன்னு பிடிவாதம் பிடிச்சுட்டாங்க. அப்பறம் அவங்களே தான் என்னை ஸ்கூல்ல சேர்த்து விட்டாங்க.

இப்ப வரை, அக்காவை பார்த்து பேசி அரட்டை அடிக்க எப்ப வேணாலும் வீட்டுக்கு போவேன். ஆனா வீட்டு வேலைக்குன்னு வந்துட்டா அவ்ளோ தான் அக்கா என்னை திட்டியே விட்டுடுவாங்க. இப்ப தஷு அண்ணாவுக்காக தான் சும்மா இருக்காங்க.

மதன் அண்ணாவை கூட ஐயாவுக்கு தெரியாம, பிரைவேட்ல படிக்க சொல்லிட்டு தான் இருந்தாங்க. ஆனா அண்ணா தான் ஐயா மேல இருக்குற பயத்துல முடியாதுன்னு சொல்லிடுச்சு. அவங்க பிடிவாதம்லாம் அக்காகிட்ட செல்லுமா…?

‘எப்பவும் திருவும் மதனும் எனக்கு பாடி கார்டா எனக்கு கீழ தான் இருப்பாங்க’ன்னு ஐயாகிட்ட ‘கட் அண்ட் ரைட்டா’ சொல்லி, மதன் அண்ணாவை டென்த், 12த் எக்ஸ்சாம்லாம் எழுத வச்சாங்க. வரமாட்டேன்னு அடம்பிடிச்ச திரு அண்ணாவையும் தரதரன்னு இழுத்துட்டு போய் எக்ஸாம் எழுத விட்டுட்டாங்க. அதுல மதன் அண்ணா, எல்லாத்துலயும் நல்லா ஸ்கோர் பண்ணவும், இப்ப கரஸ்லேயே பி.ஏ படிக்கிறங்க. திரு அண்ணா தான் பல அட்டெம்ப்ட் எழுதி, கடைசியா இப்ப தான் பாஸ் ஆகி இருக்காங்க.   

மணிம்மா மாதிரி, மஹாக்காவுக்கும் யாராச்சு தமிழ்ல பேசுனா ரொம்ப பிடிக்கும். அதுனால கூட தஷு அண்ணாவை பிடிச்சுருச்சோ என்னவோ…”  என நீளமாக பேசி முடித்திட, மாதவ் தஷ்வந்த்தை நோக்கினான்.

தஷ்வந்தோ புருவ முடிச்சுடன் ஏதோ சிந்தனையில் மூழ்க, மாதவ் தான்,

“அப்போ சொர்ணாக்கா ஏதோ கொஞ்சம் நல்லவன்னு சொல்லு” என்றதில்,

அவனை மூக்கு விடைக்க முறைத்து வைத்தவள், பின் யோசித்து, “அப்டின்னும் சொல்ல முடியாது. கோபத்துலயும் முரட்டுத்தனத்துலயும் அக்கா அப்படியே ஐயா மாதிரி. மணிம்மா எந்த குணம்லாம் அவங்ககிட்ட வரக்கூடாதுன்னு ஆசைப்பட்டங்களோ அதெல்லாம் அதிகமாவே இருக்கு. சில நேரம் அவங்களோட பிடிவாதத்தை பார்த்தா ஏன் தான் இந்த அக்கா இப்படி இருக்கங்களோன்னு கூட தோணும். என்ன தான் அமி அண்ணாவுக்கும் ஆஷா அக்காக்கும் மஹாக்கா க்ளோஸ்ன்னாலும் அவங்களால கூட அக்காவை புரிஞ்சுக்க முடியாது. ஏன், சில நேரம் அவங்க பிடிக்கிற பிடிவாதத்துக்கு காரணம் தெரியாம மண்டையை உடைச்சுப்பாங்க. அப்பல்லாம் அவங்களை பார்க்க எனக்கு சிரிப்பா இருக்கும்…” என விளையாட்டாக சிரித்தாள்.

“ம்ம் அப்ப புரியாத புதிர்ன்னு சொல்லு” எனக் கேட்டு மாதவ், தஷ்வந்த்தை ஓரக்கண்ணில் ஏறிட,

“அப்டின்னும் சொல்லலாம். ஆனா, மத்தவங்களுக்கு எப்படியோ, நாங்க அக்கா என்ன சொன்னாலும் செய்வோம். அதுலயும் அமி அண்ணா, அக்கா சூசைட் பண்ணிக்க சொன்னா கூட யோசிக்காம செய்வாங்க.” என்றதில், தஷ்வந்த் நிகழ்விற்கு வந்தான்.

“இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல…” என நக்கலாகப் பார்க்க,

“ப்ச் இல்லண்ணா நான் காரணமா தான் சொல்றேன். ஒரு தடவை ரெண்டு பேரும் கார்ல போயிட்டு இருந்தாங்க. அப்போ, அமி அண்ணா தான் கார் ஓட்டிட்டு இருந்துருக்காங்க. திடீர்ன்னு மஹாக்கா அவங்களை வேகமா போக சொல்ல, அவங்களும் போயிருக்காங்க. அப்பறம் கொஞ்ச நேரத்துல, மரத்துல மோத சொல்லிருக்காங்க. கொஞ்சம் கூட யோசிக்காம, உடனே சொன்னதை செஞ்சுட்டாங்க.

அதுல ரெண்டு பேருக்கும் நல்லா அடி பட்டுடுச்சு. கொஞ்ச நாள் கழிச்சு தான் அமி அண்ணா அப்படி செய்ய சொன்னதுக்கு ரீசனே கேட்டுருக்காங்க. அப்பறம் தான் தெரிஞ்சுது, யாரோ மஹாக்காவை பழி வாங்க, கார் மேல லாரியை மோத வைக்கிறதுக்காக, பின்னாடி லாரில ஃபாலோ பண்ணிருக்காங்கன்னு. அதை கண்டுபிடிச்ச மஹாக்கா, எப்படியும் தப்பிக்க முடியாதுன்னு நினைச்சு, மரத்துல மோத வச்சு கூட்டம் சேர்த்துருக்காங்க. ஆனா, அப்பறம் அந்த லாரிக்காரனை பிடிச்சு பிரிச்சு மேஞ்சதுலாம் தனிக்கதை…!” என ஒவ்வொன்றையும் கோர்வையாக கதை போலவே கூறினாள்.

நாட்கள் அதன் போக்கில் நகர, அடுத்த ஒரு மாதமும் மஹாபத்ராவும் அவனை சந்திக்கவில்லை. அதுவே தஷ்வந்திற்கு பெரிய நிம்மதியை கொடுத்தது. பத்து நாட்கள் விடுமுறை முடிந்து ரோஜாவும் பள்ளிக்கு செல்ல தொடங்க அவளது தாய் தான் சமையல் வேலையை பார்த்துக் கொண்டார். ஆனால், விடுமுறை நாட்களில் சரியாக வந்து ஆஜர் ஆகி விடுபவளுக்கு, தஷ்வந்திடமும் மாதவிடமும் வம்பளக்க மிகவும் பிடித்திருந்தது.

இடையில் ஒருமுறை மந்த்ராவையும் இரு ஆடவர்களும் வம்படியாக அபார்ட்மெண்டிற்கு அழைக்க, அவளுக்கு வர பிடிக்கவில்லை என்றாலும் இருவரின் மனதையும் வருத்தப்பட வைக்க விரும்பாமல், அங்கு வந்தவள், ரோஜாவிற்கும் நல்ல தோழியாகவே மாறி விட்டாள்.

வார இறுதியில் நால்வரும் அடிக்கிற அரட்டையில் அபார்ட்மென்டிலும் சிரிப்பு சத்தமே எதிரொலிக்கும்.

சனிக்கிழமையும் அரை நாள் அவர்களுக்கு க்ளினிக்கும் தியரி பிராக்டிகல் வகுப்புகளும் ஒரு மணி வரை நடைபெறும். அதன் பிறகு, மந்த்ராவையும் வலுக்கட்டாயாக இழுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விடுவார்கள்.

மாலையில் ரோஜாவும் வந்து விட, சில நேரம் மதனையும் இணைத்துக் கொள்வான் தஷ்வந்த். அவனோ “சார்… மஹா வந்துட்டா அவளோ தான். நான் பார்க்கிங்லேயே இருக்கேன்.” என ஓடியே விடுவான். திரு வந்தாலும் அதே கதை தான். இருவரையும் இழுத்து பிடிக்க பார்த்து சலித்தே விட்டது அவர்களுக்கு.

அந்த சனிக்கிழமையும், நால்வரும் நெட்ஃபிலிக்ஸ்ஸில் சீரிஸ் பார்ப்பதற்காக, சீரிஸ் தேட தொடங்க, “தஷு… லவ் ஸ்டோரி பாக்கலாம்டா” என மந்த்ராவும், “திரில்லர் பாக்கலாம் பாஸ்…” என மாதவும், “ஸ்கூல் ஸ்டோரி ஒன்னு வந்துருக்குண்ணா அது பாக்கலாம்” என ரோஜாவும் அவனை சுற்றி குழுமி விடுவர்.

“இது மூணையும் ஒண்ணா பார்க்கணும்ன்னா நான் தான் படம் எடுக்கணும்.” என மூவரையும் போலியாக முறைத்து வைத்தவன், “ஹே மந்த்ரா. ஜுனியர் பொண்ணு சீனியர் பையனை தூக்குற மாதிரி ஒரு சீரிஸ் வந்து இருக்கு அது போடவா” என வாரினான்.

“டேய்…” என்றவள், அவன் முடியை பிடித்து ஆட்டி, “நானும் அப்பறம் கலாய்ப்பேன்…” என மிரட்டி விட்டு திரும்ப, அங்கோ வாசல் சுவற்றில் கையை கட்டிக்கொண்டு, ஒரு காலை சுவற்றில் மடக்கி, அமர்த்தலாக அவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள் மஹாபத்ரா.

அவளைக் கண்டதுமே, தஷ்வந்தின் முடி மீது இருந்த கையை வெடுக்கென எடுத்துக் கொண்ட மந்த்ரா, பேந்த பேந்த விழிக்க, மற்றவர்களும் அதே போல் தான் விழித்தனர்.

மஹா ஒரு நொடி தஷ்வந்த்தை அழுத்தமாக ஊடுருவிட்டு, அறைக்குள் செல்ல, பல நாட்கள் கழித்து பார்த்தவளைக் கண்டு அவன் இதயம் ஏனோ தடதடவென துடித்தது.

அதனை மறைத்துக் கொண்டு, தயங்கியபடி உள்ளே சென்றவன், கட்டிலில் கடுங்கோபத்தில் அமர்ந்திருந்தவளின் அருகில் சென்றான்.

அவனைக் கண்டதும், மந்த்ரா பிடித்தது போல அவளும் முடியை பிடித்து ஆட்டினாள்.

“ஆ… பத்ரா வலிக்குது.” என்றவனைக் கண்டு கொள்ளாமல், “அவள் பிடிச்சா மட்டும் இனிக்குதா உனக்கு…?” அடிக்குரலில் கடிந்தவள், இன்னும் இறுக்கமாக பற்றி, “ஏதோ பையன் படிக்கணும்ன்னு சொன்னானே டிஸ்டராக்ட் பண்ண வேண்டாமேன்னு உன்னை பார்க்காம இருந்தா, சார் வீக்எண்ட் ஆனா, கூடி கும்மி அடிக்கிறது என்ன, சீரிஸ் பாக்குறது என்ன…? ஒரே குஜாலா இருக்க என்னை விட்டுட்டு.” என்று கடியானாள்.

“ஐயோ பத்ரகாளி விட்டு தொலைடி… வலிக்குது. உன்னை நானா வந்து சீரிஸ் பார்க்க வேணாம்ன்னு சொன்னேன்.” என்றவனின் கூற்றில் அவன் கேசத்தை விட்டவள், “நான் பத்ரகாளியா” என்றாள் உதட்டை குவித்து.

“ஆ…” என தலையை தேய்த்துக் கொண்டவன், “ஆமா… நீ அப்டி தான் இருக்க. இப்ப என்ன நீ சீரிஸ் பாக்கணுமா வா சேர்ந்து பாப்போம்.” என சரணடைந்தான் அவளின் பார்வையில்.

அதில் அவனருகில் நெருங்கியவள், அவனது சட்டை பட்டனை திருகியபடி, “நீயும் நானும் மட்டும் தான் பாக்கணும்.” என்று ஹஸ்கி குரலில் பேச, அவனுக்கோ உள்ளுக்குள் அபாய மணி அடித்தது.

“ரெண்டு பேரும் பார்த்தா போர் அடிக்கும் பத்ரா. எல்லார் கூடவும்…” என ஆரம்பித்தவன், அவள் சட்டையை பற்றி அவளிதழ் அருகில் இழுத்ததுமே, “நம்ம ரெண்டு பேர் மட்டும் பாப்போம்…” என்று வேகமாக விலகி ஜகா வாங்கினான்.

அதில் உள்ளுக்குள் பூத்த புன்னகையை அடக்கிக்கொண்டவள், “நான் போய் ஃபிரெஷ் ஆகிட்டு வரேன். நீயே ஒரு நல்ல சீரிஸ் செலக்ட் பண்ணி வை.” என்று அவனது தலையை கலைத்து விட்டு, குளியலறைக்குள் புகுந்து கொள்ள, அவனுக்கோ அவன் இருக்கும் அறையில் ஒரு பெண் இருப்பதே ஏதோ மாதிரி இருந்தது.

மஹாபத்ரா வந்ததுமே, மந்த்ராவும் ரோஜாவும் கிளம்பி இருக்க, மாதவும் வெளியில் சென்று விட்டான்.

‘அடப்பாவிங்களா… என்ன தனியா இவள்கிட்ட கோர்த்து விட்டுட்டு எல்லாம் எஸ்கிப் ஆகிடுச்சுங்க’ என நொந்து கொண்டவன், வேறு வழியற்று ஜாம்பி கொரியன் சீரிஸ் ஒன்றை தேர்ந்தெடுத்து ஹாலில் இருக்கும் தொலைக்காட்சியில் போட்டு விட, அவளோ “ரூம்ல போய் பாக்கலாம்” என்றதில் விழித்தான்.

அறையில் என்றால், மெத்தையில் அமர்ந்து தான் பார்க்க இயலும். இங்கென்றால் சோபாவில் ஆளுக்கொரு மூலையில் அமர்ந்து கொள்ளலாம் என கணக்கிட்டவனின் கணக்குகள் அனைத்தும் தவறி விட, அவள் சொல்வதை தான் செய்ய வேண்டியதாக போயிற்று.

ஏற்கனவே, அவர்கள் தயார் செய்து வைத்த பாப்கார்னையும் மெத்தையில் அவனுக்கு அருகில் வைத்தவன், ஒரு ஓரத்தில் அமர்ந்து கொள்ள, அவளும் அவனுக்கு அருகில் அமர்ந்து கொண்டாள்.

பாப்கார்னை எடுத்து முன்னே நகர்த்தி வைத்தவள், அவன் கைக்குள் அவள் கையை இணைத்துக் கொள்ள, முதலில் நெளிந்தவன் பின் சீரிஸில் மூழ்கினான்.

அவளோ, அவனிடம் அவ்வப்பொழுது பேசியபடி தலையை அவன் மீது சாய்த்துக் கொள்ள, ஒரு நொடி திகைத்தவன், ‘இவளை என்ன தான் பண்றதோ’ என திட்டியபடி அமைதியாகி விட்டான்.

ஆனால், வெகு நேரமாக அவள் அசையாமல் இருக்க, அவனுக்கு தோள்பட்டை வலி வந்ததில், “பத்ரா… தள்ளி உட்காரு” என்றபடி, அவளை நிமிர்த்த, அவளோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

அவன் எழுப்பியதில் சிணுங்கியவள், “டிஸ்டர்ப் பண்ணாத அமுலு. செம்ம டயர்ட்.” என்றபடி அவன் மடியையே மஞ்சமாக்கி உறங்கி போனதில், முதலில் தடுமாறினான்.

பிறகு, அவள் உறக்கத்திலேயே முகத்தை சுளித்ததில், தன்னிச்சையாக அவளது புருவத்தை நீவி விட்டவன், அவள் உறங்கும் பொருட்டு, தலையை கோதி கொடுத்தான். ஆடவனின் விழிகள் ஏனோ பாவையின் முகத்திலேயே நிலைத்திருந்தது… சில குழப்பத்துடனும், குட்டி ரசனையுடனும்.

காயம் தீரும்
மேகா!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
35
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்