Loading

இரவு, உறக்கத்தில் கயல் சொன்ன, “ஐ லவ் யு ஜீவா…” என்ற வாசகம், ஜீவாவின் மனதில் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

அவளிடம் காதலிக்கிறேன் என்று சொன்ன பொழுது கூட, அவள் இந்த வாசகத்தை சொன்னது கிடையாது இவன் அதை எதிர்பார்த்ததும் கிடையாது.

ஆனால், இப்பொழுது! திருமணத்திற்கு முன், அவள் அவன் மேல் காட்டிய அக்கறையும், காதலும் மறுபடியும் தனக்கு வேண்டும் என்று முரண்டு பிடிக்கும் மனதை எவ்வாறு சமாதானப்படுத்துவது என்று புரியாமல்,

மேலும், தான் அவளிடம் காட்டிய கோபத்திற்கும், துரோகத்திற்கு நியாயமாய் அவள் என்னென்னவோ செய்திருக்க வேண்டும். ஆனால் இப்பொழுதும் தன் அருகில் இருந்து, கார்த்தியை தேடுவதில் தனக்கு உறுதுணையாய் இருக்கும் அவளின் அன்பில் நெக்குருகி போனான்.

உண்மையில் இதனை அவள் அவனுக்காக செய்யவில்லை என்று உணர்ந்தாலும், அப்படி இருக்கவே அவன் மனது விரும்பியது. வெகுநேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், அவளை இழுத்து தன் நெஞ்சில் போட்டுக் கொண்டு உறங்கி விட்டான்.

மறுநாள் எழுந்த கயல் கண் விழிக்கும் முன்னேயே, ‘என்ன இது தலைகாணி மாதிரியே இல்ல கல்லு மாதிரி இருக்கு’ என்று யோசித்துக் கொண்டு,  அது சொகுசாக இருந்ததால், எழும்ப மனது வராமல், அவன் நெஞ்சில் முகம் புதைத்து, அவன் வயிற்றை கட்டிக் கொள்ள, அப்பொழுது தான், லேசாக துயில் கலைந்த ஜீவா, கயல் புறம் திரும்பி, இறுக அணைத்து கொண்டு, மீண்டும் உறக்கத்தை தொடர்ந்தான்.

சிறிது நேரத்தில் கயலுக்கு மூச்சு முட்டுவது போல் இருக்க, கண்ணை விழித்து பார்த்தவள், வெகு அருகில் ஜீவாவின் முகம் தெரியவும், பதறி விட்டாள்.

இதயம் அதி வேகமாகத் துடிக்க, எழும்ப போனவள், ஜீவாவின் இறுகிய அரவணைப்பில் எழுந்திரிக்க முடியாமல் தவித்துப் போனாள்.

கயல் லேசாக அசையும் போதே, விழித்திருந்த ஜீவா, ‘இவள் என்ன தான் செய்றான்னு பாப்போம்’ என நினைத்து, கண்ணை மூடி உறங்குவது போல் பாவனை செய்து கொண்டிருந்தான்.

இது அறியாத கயலோ, அதிகாலை மங்கிய வெளிச்சத்தில், குழந்தை போல் தூங்கும், (அவளுக்கு அப்படி தானே தோன்றியது…) அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள்.

சொல்லப் போனாள்… இப்பொழுது தான் அவன் முகத்தையே ரசித்துப் பார்க்கிறாள். திருமணத்திற்கு முன், சில நொடி கூட அவன் முகத்தை பார்க்க முடியாது, அவனின் குறும்புப் பார்வையைக் கண்டு.

திருமணத்திற்குப் பின், அவனின் வெறித்தனமான கோபத்தைக் கண்டு பயத்திலேயே அவன் முகத்தை பார்க்க முடியாது.

இப்பொழுது, அவளுக்கு அவனை எப்படி பார்ப்பது என்று புரியவில்லை. சலனமின்றி அவன் முகத்தை ஏறிட்டவள், ஒரு முடிவுடன், மெல்ல அவன் கையை எடுத்து விட்டு, எழுந்து குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

அவள் பார்த்ததை உணர்ந்தவன், “மேடம் காலைலயே என்னை சைட் அடிக்கிறாங்களா” என்று குஷியாக நினைத்து கொண்டான். பாவம் அவனுக்கு தெரியவில்லை, அவள் அவனின் காதல் பொய் என்று அறிந்ததுமே… அவன் மேல் இருந்த காதலை தூக்கி எறிந்து விட்டாள் என்று…

இப்பொழுதும், கார்த்தி உயிருடன் கிடைத்ததும், இங்கிருந்து சென்று விட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தாள். ஒருவேளை அவன் கிடைக்கவில்லை என்றால்? என்று யோசித்தவளுக்கு அதற்கு மேல் சிந்திக்கத் திராணி இல்லை.

எப்பொழுதும் போல் குளித்து விட்டு, அடுக்களைக்குள் புகுந்து வேலை செய்து கொண்டிருந்த கயலிடம் சென்றான் ஜீவா.

அவனைப் பார்த்ததும் வேலையாட்கள் வெளியில் சென்றிட, அங்கிருந்த பீன்ஸை எடுத்து “இதை கட் பண்ணி தரவா கயல்…” என்று கேட்டதும், இவன் குரலில் திடுக்கிட்டுத் திரும்பியவள் அவன் என்ன சொன்னான் என்று புரியாமல் அவனைப் பார்க்க,

அவன் குறும்பு சிரிப்புடன், “இதை கட் பண்ணி தரவான்னு கேட்டேன்” என்று மீண்டும் அழுத்தி கேட்டான்.

கயல், “வேணாம், நான் பண்ணிக்கிறேன்…” என்று அவளே செய்ய, வெங்காயத்தை எடுத்து, “இதை கட் பண்ணவா” என்று கேட்டான்.

கயல் காலையில் எடுத்த முடிவை மறந்து விட்டு, ‘என்ன ஏமாத்துனீங்கல்ல அனுபவிங்க’ என்று நினைத்து விட்டு, “சரி பண்ணுங்க” என்று தலையாட்ட, அவள் வேண்டாம் எனக் கூறுவாள் என நினைத்த ஜீவா,

‘பயபுள்ள பழிவாங்கிருச்சு…’ என்று நொந்து கொண்டு, வெங்காயத்தை உரிக்க ஆரம்பித்தான்.

கயல் அவன் கண் கலங்க வெங்காயத்தை உரிப்பதை பார்த்து, சிரிப்பை அடக்க படாத பாடு பட்டாள்.

கண்ணில் இருந்து பொலபொலவென நீர் கொட்ட, மூக்கை உறிஞ்சிக் கொண்டு, அவன் வெங்காயத்தை நறுக்க., அதற்கு மேல், அவன் கலங்கிய கண்களை பார்க்க அவளால் முடியவில்லை.

வேகமாக அவனைத் தடுத்து, “போதும், நான் பண்ணிக்கிறேன் என்று” சொல்ல, ஜீவா புரியாமல், “ஏன் கயல், இன்னும் கொஞ்சம் தான் இருக்கு நான் பண்றேன்” என்று அவனே செய்திட.. ‘இப்போ எதுக்கு இவரு இப்படிலாம் பண்ணிகிட்டு இருக்காரு…’ என்று குழம்பினாள்.

அவள் எண்ணத்தைப் புரிந்து கொண்டவன், “என்ன? எதுக்கு நான் இப்படிலாம் பண்ணிக்கிட்டு இருக்கேன்னு யோசிக்கிறியா” என்று கேட்க, அதில் விழி விரித்தவள், ஆம் என்று தலையாட்டி பின், இல்லை என்று தலையாட்ட, அதில் சிறு புன்னகை புரிந்தவன், மெல்ல அவள் அருகில் வந்து,

“ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் இப்படி ஒண்ணா கிட்சன்ல வேலை பார்த்தா, அவங்களுக்குள்ள கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட் ஆகுமாம்” என்று அவளை குறுகுறுவெனப் பார்த்து கொண்டு சொல்ல அதில் செவ்வானமாய் சிவந்து போனாள்.

உதட்டைக் கடித்து, சிவப்பை மறைக்க முயல, அதனை கண்டு கொண்ட கள்வனோ, மேலும் அவளை நெருங்கி, “அதான், கார்த்தி சொன்ன பொண்ணை கல்யாணம் பண்ணி அவளை கரெக்ட் பண்ண, உன்கிட்ட ப்ராக்டிஸ் எடுத்துக்கிட்டு இருக்கேன்” என்று கேலியாக சொல்லி அவனுக்கு அவனே ஆப்பு வைத்து கொண்டான்.

அதில் அவள் மனது தீயாக எரிய, அவனிடம் இருந்த பயத்தையும் மறந்து, அவனை முறைக்க ஆரம்பித்தாள்.

“என்ன ஸ்வீட் ஹார்ட் முறைக்கிற? சரி… அந்த பொண்ணை பத்தி விசாரிச்சியா” என்று அசட்டையாக கேட்க,

அவள் “ம்ம்… கார்த்தியை கண்டுபிடிச்சு அவன் கிட்டயே கேட்டுக்கோங்க. எவளை பத்தியும் என்னால விசாரிக்க முடியாது” என்று அவனை உறுத்து விழித்து விட்டு, கோபமாக வெளியில் சென்று விட்டாள்.

அவள் சென்றதும், கலகலவென சிரித்தவன், “ச்ச்சோ ச்சுவீட் ஸ்வீட் ஹார்ட் நீ… உன் கோபம் கூட செம்ம கிக்கா இருக்கு” என்று அவளுக்கு தன் மேல் இருக்கும் பொசசிவ்நெஸ் – ஐ நினைத்து சிரித்தவனுக்கு தன்னை நினைத்தே ஆச்சர்யமாய் இருந்தது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை, ஒரு பெண்ணின் மேல் பித்து பிடித்து அலைந்து, அவள் பின்னே ஹட்ச் டாக் மாதிரி சுத்த போகிறாய் என்று யாராவது சொல்லி இருந்தால் அவர்களை சாவடி அடித்திருப்பான்.

ஆனால் இப்பொழுதோ, அவள் எங்கு சென்றாலும் அவனின் மனமும் கால்களும் தன்னிச்சையாய், அவளின் பின்னேயே சென்றிருந்தது. இப்பொழுதும், தோட்டத்தில் ஜீவாவின் மேல் இருக்கும் கோபத்தில், இலைகளை தூள் தூளாய் பிய்த்துக் கொண்டிருந்தவளிடம் சென்று நின்றான்.

இலைகளின் நிலையைப் பார்த்தவன், ‘ஆஹா, அம்மணி கடும் கோபத்துல இருக்காங்க போல, இலைக்கே இந்த நிலைமைன்னா, என்னை நினைச்சா எனக்கே பாவமா இருக்கு’ என்று நினைத்தவன், கயல் என்று அழைக்க,

அவள் இவனை பார்க்காமல் வேறு எங்கோ பார்க்க, அதில் “கயல்” என்று சற்று காரமாக அழைத்ததில், முகத்தை உம்மென்று வைத்து கொண்டு அவனை பார்க்க,

அதில் ஜீவா, ‘ம்ம்ஹ்ம்… என் ஸ்வீட் ஹார்ட்டை நான் ரொம்ப கஷ்டப்படுத்துறேன்..’ என்று நினைத்து, அவள் கையை பிடிக்க வர அந்த நேரம் கரடியாய் அவன் செல்பேசி ஒலித்தது.

அவளை பார்த்துக் கொண்டே, போனை எடுத்து பேசியவனின் முகம் மாற “வாட்… எப்படி நடந்துச்சு? இடியட் கால் தி ஆம்புலன்ஸ். நான் உடனே வரேன்” என்று கயலிடமும் சொல்லாமல் விறுவிறுவென காரில் ஏறி சென்று விட்டான்.

கயல் தான் என்ன ஆச்சு இவருக்கு என்று ஒன்றும் புரியாமல், அவன் சென்ற திசையையே பார்த்திருந்தாள்.

தட்டுத் தடுமாறி, படுக்கையை விட்டு எழுந்திரிக்க முயற்சி செய்தான் கார்த்தி.

‘எப்படியாவது வீட்டுக்கு சென்று விட வேண்டும்… அண்ணன் என்னை காணாமல் எவ்வளவு கஷ்டப்படுவாரோ. கயலும் என்னை காணாமல் தவித்து போவாளே. இங்கிருந்து எப்படி செல்வது.’ என்று தவித்தவன், எப்படியாவது நடந்து விட வேண்டும் என்று நினைத்து, எழுந்திரிக்க முயல, அது முடியாமல், மீண்டும் படுக்கையிலேயே விழுந்தான்.

உடல் முழுதும், வலி பரவ, பல்லைக்கடித்து கொண்டு மீண்டும் எழுந்தவன் இம்முறை, அங்கிருந்த மண் பானையை தட்டி விட்டு கீழேயே விழுந்து விட்டான். அப்பொழுது தான், அவனுக்கு சாப்பாடு கொடுக்க வந்த பூவரசி, அவன் கீழே இருந்ததை கண்டு, ஓடி சென்று தூக்கினாள்.

“ஏலேய்… எதுக்குயா எந்திரிச்ச. உன்னைய எந்திரிக்ககூடாதுன்னு ஐயா சொன்னாவுகள்ல…” என்று திட்டிக்கொண்டே, அவனை கைத்தாங்கலாக தூக்கி, படுக்கையில் படுக்க வைத்தாள்.

“ஷ்ஷ்” என்று வலியில் அவன் முகம் சுருங்க, பூவரசி “யோவ்… இனிமே என்ன கேக்கமா நீ இந்த இடத்தை வுட்டு நகரவே கூடாது. ஐயா, ஒரு வாரத்துக்கு கோவில் வேலையில இருப்பாக, நான் தான் உன்னைய பார்த்துக்கிடனும்…” என்று மீண்டும் அவனைத் திட்டிக்கொண்டே மருந்து போட்டு, சாப்பாடு கொடுக்க, கார்த்தி தான், ‘ரொம்ப ஓவரா தான் போறாள்.. எனக்கு சரி ஆகட்டும் அப்பறம் பார்த்துகிறேன் உன்னை’ என்று மனதில் அவளை வறுத்துக் கொண்டிருந்தான்.

அந்த டீ எஸ்டேட்டில் ஆங்காங்கே நெருப்பு எரிந்து கொண்டிருக்க, சிலரை தீக்காயத்துடன் ஆம்புலன்சில் ஏற்றி கொண்டிருந்தனர். ஜீவா, அதனைப் பார்த்து, மேனேஜரிடம் கத்தி கொண்டிருந்தான்.

“எப்படி எப்படி தீ பிடிச்சுச்சு. இவ்ளோ தூரம் பர்ன் ஆகுறவரை பார்க்காம தூங்கி கிட்டு இருந்தீங்களா…” என்று திட்டி, அனைவரும் தீக்காயத்தில் கதறுவதை பார்த்தவன், கோபத்திலும், இயலாமையிலும் தரையை உதைத்து, முடியை பிய்த்து கொண்டிருந்தான்.

மேலாளர் அவன் கோபத்தில் நடுங்க, “சார்… யாரோ சிகரெட் பிடிச்சு, அதை அணைக்காமல் இங்க போட்ருக்காங்க. அது கொஞ்ச கொஞ்சமா தீப்பிடிச்சு இப்படி ஆகிருச்சு… நாங்க கவனிக்கிறதுக்குள்ள எல்லா இடமும் பரவிருச்சு” என்று திக்கித் திணறி நிலைமையை கூற,

ஜீவா, “இதெல்லாம் நம்புற மாதிரி இல்ல. யாராவது ஒருத்தருக்கு ஏதாவது ஆனா கூட, உன்னை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவேன்…” என்று அவரை மிரட்டி, அங்கு வந்த இன்ஸ்பெக்டரிடம், “இதை யாரோ வேணும்ன்னு பண்ணிருக்காங்க இன்ஸ்பெக்டர்…” என்று சொல்ல,

அவர், “உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா மிஸ்டர் வாசு…” எனக் கேட்டார்.

நெற்றியைத் தேய்த்து யோசித்தவன், இல்ல என்று தலையாட்டி, அவனின் தொழில் முறை எதிரிகள் சிலரின் பெயரை சொல்லி, விசாரிக்க சொன்னான்.

அந்த இன்ஸ்பெக்டர், “ஓகே… மிஸ்டர் வாசு… நான் நாளைக்கு கோவைக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகுறேன். நாளைல இருந்து புது இன்ஸ்பெக்டர் தான் வராரு. அந்த ஆளு கொஞ்சம் ஒரு மாதிரி. நான் டீடைல்ஸ் அவர்கிட்ட கொடுத்துட்டு போறேன். நீங்க பார்த்துக்கோங்க…” என்று விட்டு,

“அப்பறம், உங்க தம்பி பத்தி விசாரிக்கும் போது, எங்களுக்கு எதுவுமே கிடைக்கல. பட்… ஒரு சின்ன, ஐடியா இருக்கு” என்று சொல்ல, ஜீவா கூர்மையாய் என்ன என்று கேட்டான்.

“உங்க தம்பி விழுந்த இடத்துல இருந்து 100 மீட்டர் தள்ளி ஒரு ஆறு ஓடுது. அதை தாண்டி, ஒரு குக்கிராமம் ஒன்னு இருக்கு. அங்க கிட்ட தட்ட, 100 குடும்பங்கள் கொண்ட மலைவாசிகள் தான் வாழுறாங்க. ஒருவேளை அவங்க யாரவது கார்த்தி பாடியை பார்த்துருக்கலாம்…  இது என் கெஸ்சிங் தான். ஆனால், அவங்களும் ரொம்ப முரட்டுத்தனமான ஆளுங்க. அவங்க எல்லையைத் தாண்டி வெளி ஆளு… அதை விட, போலீஸ் ட்ரெஸ் போட்டு யாரவது வந்தாலே, அடிச்சு துரத்திடுவாங்க. அவங்க விருப்பம் இல்லாம அங்க யாரும் போக முடியாது. சரியான காட்டுமிராண்டிங்க. படிப்பறிவு இல்லாத ஜனங்க. நீங்க வேணும்னா பெர்சனல் – ஆ அங்க போய் விசாரிச்சு பாருங்க. பட் அவங்ககிட்ட கேர்ஃபுல் ஆ இருக்கனும்” என்று சொல்லி முடிக்க,

ஜீவா, “தேங்க்ஸ் இன்ஸ்பெக்டர்… இவ்ளோ டீடைல் குடுத்துக்கு. நான் பார்த்துக்கறேன். ஆல் தி பெஸ்ட் ஃபார் யுவர் நியூ ஜாப்…” என்று கை கொடுத்து அனுப்பி வைத்தவன், யோசனையில் ஆழ்ந்தான்.

பின் மருத்துவமனைக்கு சென்றவன், அங்கு காயத்துடன் இருந்த அவனின் தொழிலாளர்களைப் பார்த்து, வேதனை அடைந்தவன், அனைவர்க்கும் என்ன என்ன வேண்டுமோ அதனை உடனே செய்ய சொன்னான்.

ஆனாலும், தன்னை எவனோ குறி வைக்கப் போய், இப்படி இத்தனை பேரின் வாழ்வை சிதைத்து விட்டானே, இதற்கு நான் தானே காரணம் என்று வருந்தியவனுக்கு, அவர்கள் குடும்பத்தின் ஓலக் குரல், கண் கலங்க செய்தது. இதில் நல்ல விஷயம் உயிர் சேதம் இல்லை என்பது மட்டும் தான்.

மருத்துவமனையிலேயே சேரில் சாய்ந்து கண் மூடி அமர்ந்திருந்தவனுக்கு, கண்ணில் இருந்து நீர் வழிய, யாரோ துடைப்பது போல் உணர்ந்தவன், கண் விழித்து பார்க்க, அங்கு கயல் நின்றிருந்தாள். அப்பொழுது தான், அவனுக்கு அவளிடம் தகவல் கூட சொல்லவில்லை என்பதே உறைத்தது.

“கயல் நீ எப்படி இங்க வந்த?” என்று புரியாமல் கேட்க,

“வீட்ல வேலை பார்க்குறவங்க தான் சொன்னாங்க எஸ்டேட்ல ஃபயர் ஆக்சிடென்ட் ஆகிடுச்சுன்னு… என்னாச்சு…” என தயக்கத்துடன் கேட்க, பெருமூச்சு விட்டவன், உள்ளே சென்று பார்க்க சொன்னான்.

கயல் உள்ளே சென்று அனைவரையும், பார்க்க, தீக்காயத்தில் வெந்து கொண்டிருந்தவர்களை அதற்கு மேல் பார்க்க முடியாமல், கண்ணில் நீர் வழிய வெளியில் வந்து விட்டாள்.

ஜீவா, இன்னும் அதே நிலையில் இருப்பதைக் கண்டவள், “எப்படிங்க ஆச்சு…” என்று கேட்க,

ஜீவா தெரியல என்று தலையாட்டினான்.

“யாரோ என்னை பழிவாங்குறேன்னு நினைச்சு இப்படி பண்ணிட்டான். அவன் மட்டும் என் கைல கிடைக்கட்டும்…” என்றான் ரௌத்திரத்துடன்.

ஜீவாவை மறைந்திருந்து பார்த்திருந்த அந்த உருவமோ, ஏளன சிரிப்புடன், “என் கைல தான் நீ மாட்டப்போற வாசு… நாளைக்கு வந்து உன்னை நேர்ல சந்திக்கிறேன்.” என்று விட்டு, அங்கிருந்து சென்றது.

அன்று முழுதும் மருத்துவமனையிலேயே இருக்க, ஜீவா, கயலை வீட்டிற்கு கிளம்ப சொன்னான். ஆனால் அவளுக்கு தான் அவனை விட்டு செல்ல ஒரு மாதிரியாக இருந்தது.

ஜீவாவே “உன்னை வீட்டில விட்டுட்டு வரேன் வா” என்று அழைத்துக் கொண்டு, வீட்டிற்கு சென்றான். வாசலிலேயே கிளம்ப போனவனை தடுத்து, “சாப்பிட்டு போங்க…” என்று சொல்ல, முதலில் வேண்டாம் என்று மறுத்தவன், அவள் வாடிய முகத்தை கண்டு விட்டு, உள்ளே வந்தான்.

அவன் வரவும் வேகமாக சாப்பாடை எடுத்து வைத்தவள், அவன் சாப்பிடாமல் தட்டை அளப்பதை பார்த்து விட்டு, அவன் தட்டில்  இருந்த உணவை எடுத்து அவனுக்கு ஊட்டி விட்டாள்.

அதில் அவளையே பார்த்தவன், ஒன்றும் சொல்லாமல் வாங்கி கொள்ள, இப்படியே ஒருவரை ஒருவர் விழிகளால் வருடிக்கொண்டே, சாப்பிட்டு முடித்தனர்.

ஜீவாவுக்கு புது தெம்பு வந்தது போல் இருந்தது. கயல் அவனுடன் இருப்பது, ஏதோ ஆயிரம் யானைகள் பலத்தை தந்தது அவனுக்கு.

அவன் சிறு வயதிலிருந்து அவன் சந்தித்த நிகழ்வுகளும், துரோகங்களும் ஏராளம்… சிறு பிரச்சனைக்கும் சோர்ந்து போகிறவனுக்கு ஆறுதலளிக்க கூட யாரும் இருக்க மாட்டார்கள். வெகு நாட்கள் கழித்து அவனை அவனே தேற்றிக்கொண்டு, இன்னும் தன்னை உறுதியாக்கிக் கொள்வான்.

ஒரு கட்டத்தில் மற்றவர்கள் அளிக்கும் ஆறுதல் கூட, அவனுக்கு எரிச்சலை தான் கொடுக்கும். ஏதோ தாம் பலவீனமாய் இருப்பது போல் தோன்றும் மற்றவர்கள் ஆறுதல் சொல்லும்போது.

ஆனால், இவள் வாயால் எதுவும் சொல்லாமலேயே, அவளின் சிறு சிறு செயல்கள் கூட தன் மனக்காயத்தை ஆற்றி, தைரியத்தை கொடுக்கிறதே. எப்படி இது…? என்று தனக்குள் வியந்து விட்டு, மருத்துவமனை வந்து சேர்ந்து, அவர்களுக்கு உதவிகளை செய்தான்.

இரவு, முழுதும் கயலுக்கு தான் உறக்கம் வரவில்லை. அன்று முத்தம் கொடுப்பது போல் கனவு வரவில்லை என்பதால், பாதி தூக்கத்தில் எழுந்து விட்டாள்.

‘ஏன் இன்னைக்கு அவங்க கனவுல வரலை’ என்று சிந்தித்தவள், அவன் படுக்கும் தலையணைக் கட்டி அணைத்து படுத்து கொண்டாள். ஆனாலும் உறக்கம் வராமல், அவனை பற்றி நினைத்தவள்,

‘உங்களை நான் இப்போ லவ் பண்ணலை ஜீவா. எனக்கு இங்க இருக்கவே ஏதோ ஒட்டாத மாதிரி இருக்கு. நீங்க என்னை சீண்டும் போது கூட இப்பவும் நீங்க நடிக்கிறீங்களோன்னு தோணுது. ஆனால், நீங்க வருத்தப்பட்டா… என்னால தாங்க முடியல. நீங்க சாப்பிடமா இருந்தா, எனக்கு கஷ்டமா இருக்கு. ஏன் அப்படி?” என்று தனக்கு தானே பேசிக் கொண்டவள்,

பின் “ப்ச்… நான் எல்லார் கிட்டயும் அப்படிதான் இருப்பேன். ஏன் கார்த்தியை கூட நான் இப்படி பார்த்துப்பேனே. இது ஜஸ்ட் மனிதாபிமானம் தான். அவரும் கூட ஏதோ கல்யாணம் ஆகிடுச்சேன்னு, என்னை கூட வச்சிருக்காரு. இப்போயும் அவர் என்னை லவ் பண்ணலை… கார்த்தி சொல்ற பொண்ணை தான் கட்டிப்பாராம்” என்று நினைத்தவளுக்கு கண்ணீர் ஆறாய் ஊற்றெடுக்க,

“இப்போ மட்டும் இல்லை அவருதான் என்னை எப்போவுமே லவ் பண்ணலையே… நான் தான், அவரோட உயரம் தெரியாம முட்டாள்தனமா நடந்துக்கிட்டேன். இனிமே அவர்கிட்ட எந்த அக்கறையையும் காட்ட கூடாது. காலைல நான் எடுத்த முடிவு தான் சரி. கார்த்தி கிடைச்சதும், இங்க இருந்து போய்டணும்…” என்றவள், அவனின் தலையணையை தூக்கி எறிந்து விட்டு, வலுக்கட்டாயமாக உறங்க முயன்றாள்.

இங்கு ஜீவாவோ, புது உற்சாகத்துடன், இரவோடு இரவாக அந்த எதிரி யாரென்று கண்டுபிடிக்கும் முயற்சியில் இருந்தான். அதில் அவனுக்கு கிடைத்தது என்னமோ பூஜ்யம் தான். என்றாலும், அதில் அவன் தளரவில்லை. எப்படியும் நீ என்னிடம் வந்தே ஆகவேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

அந்த மலைக்கிராமத்தில், ஒரு வாரம் கோவில் திருவிழா இருக்க, இரவு கூட அந்த கிராமம் தீ பந்தத்தில் ஜொலி ஜொலித்தது. கார்த்திக்கு அந்த ஊரைப் பார்க்கவே சற்று பயமாக தான்  இருந்தது. அதிலும், அங்கிருக்கும் ஆட்கள் எல்லாம், சாதாரணமாய் பார்ப்பதே முறைப்பது போல் தான் இருந்தது. இதில், பூவரசியின் அப்பா மட்டுமே, சற்று சாந்தமாக பேசக்கூடியவர்.

ஆனாலும், அப்படி என்ன தான் திருவிழா நடத்துகிறார்கள் என்று பார்க்க, அவனுக்கு ஆர்வமாக இருந்ததால், கூரையை விலக்கி பார்க்க முயன்றவனுக்கு ஒன்றுமே தெரியவில்லை. “ப்ச், சே ஒண்ணுமே தெரியல,” என்று நொந்து கொண்டவன், மீண்டும் அங்கு பார்க்க, அவனின் கூரை அருகே, பூவரசி எவனுடனோ சண்டை போட்டுக் கொண்டிருந்தது தெரிந்தது.

 கார்த்தி, “இவளுக்கு சாதாரணமாவே பேச வராதா, எல்லார்கிட்டயும் திமிரா தான் பேசுவா போல.” என்று நினைத்தவன் மீண்டும் அவர்களை பார்க்க, அவளிடம் பேசிக்கொண்டிருந்தவன், அவளின் கையை பிடிக்க போக, பூவரசி அவனை எச்சரித்ததை கண்டுகொள்ளாமல், கையில் வைத்திருந்த சாராயத்தை நன்றாக குடித்து விட்டு அவளை நெருங்கியதை  கண்டான்.

பூவரசி, அவனை அடித்தும் கூட, அவன் விடாமல் அவளை கட்டி அணைக்க முயற்சி செய்ய, இதனை கண்ட கார்த்தி எதுவோ சரி இல்லை என்று உணர்ந்து, அவளை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தவனுக்கு எழுந்திருக்கவே முடியவில்லை.

இருந்தும், லேசாக அடிபட்டிருந்த அவனின் ஒரு கையை ஊண்டி எழுந்தவன், அங்கு ஒரு மரக்கட்டை இருப்பதை கண்டு தட்டு தடுமாறி அதனை எடுத்து ஊண்டி, வலியை பொறுத்து கொண்டு, கூரைக்கு அருகே செல்ல, அங்கு பூவரசியே அவனை அடித்து துவம்சம் செய்து கொண்டிருந்ததை கண்டு, ‘அடிப்பாவி… உன்னை காப்பாத்த நான் வந்தா இப்போ உன் கிட்ட இருந்து அவனை தான் காப்பாத்தணும் போல’ என்று பேந்த பேந்த முழித்து கொண்டு நின்றான்.

மறுநாள் காலையில், எப்பொழுதும் போல் வேலை செய்து கொண்டிருந்த கயல் காலிங் பெல் சத்தம் கேட்கவும், ஜீவாதான் வந்து விட்டான் என்று நினைத்து, கதவைத் திறக்க, வெளியில் ஒரு இளைஞன் காக்கி உடையில் நின்றிருந்தான்.

கயல் புரியாமல், “யாரு நீங்க” என்று கேட்க, அவன், “ஐ ஆம் அஸ்வின்… புது இன்ஸ்பெக்டர். மிஸ்டர் வாசுவை பார்க்கலாமா?” என்று கேட்க,

கயல், “அவர் வீட்ல இல்லை…” என்றதும்,” சோ வாட், நான் உங்ககிட்ட விசாரிக்கிறேன்… மே ஐ” என்று உள்ளே வர அனுமதி கேட்டவன்  அவள் சொல்லும் முன்பே உள்ளே வந்திருந்தான்.

வந்தவன் வீட்டை சுற்றி முற்றி பார்க்க, “ம்ம், வீடு நல்லா அழகா தான் இருக்கு.” என்று விட்டு, “டீ எஸ்டேட்லாம் வச்சிருக்கீங்க. வீட்டுக்கு வந்தவளுக்கு ஒரு டீ குடுக்க மாட்டிங்களா” என்று அவளை மேலும் கீழும் அளந்து கொண்டே கேட்க, கயலுக்கு தான், அவனின் பார்வையும் பேச்சும் சுத்தமாக பிடிக்கவில்லை.

அவள் உடனே ஜீவாவிற்கு போன் செய்ய போக, அவளின் போனை வெடுக்கென்று பிடுங்கியவன் கோபமாக, “நான் உங்களை விசாரிக்க வந்துருக்கேன் mrs கயல்விழி வாசு தேவன்.. நீங்க யாருக்கும் போன் பண்ண கூடாது” என்று சொல்ல, அவள் புரியாமல்

“சார் நான் ஜீவாவுக்கு தான் கால் பண்றேன்..” என்று சொல்ல, அஸ்வின், “ஹா ஹா ஹா ஜீவா…? ம்ம்… ஜீவா?” என்று என்று கலகலவென சிரிக்க, அவளுக்கு தான் வயிற்றில் புளியைக் கரைத்தது.

அப்பொழுது தான் வேலையாட்களும், வெளியில் சென்றிருக்க, என்ன செய்வதென்று புரியாமல் முழித்து கொண்டிருக்கையிலேயே, ஜீவா அங்கு வந்தான்.

அவனைக் கண்டதும், வேகமாக, அவனிடம் சென்றவள், “ஜீவா, இவரு சொல்ல சொல்ல கேட்காம உள்ள வந்து பிரச்சனை பண்றாரு…”  என்று நடுங்கிக் கொண்டே சொல்ல, “என்னாச்சு கயல் யாரு?” என்று புரியாமல் திரும்பியவன் அங்கு அஸ்வினைக் கண்டு பலமாக அதிர்ந்தான்.

அஸ்வின் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு “வெல்கம் ஹோம் மிஸ்டர் வாசு தேவன்.” என்று வரவேற்க,

ஜீவா, அமைதியாய் அழுத்தமாய், “நீ எதுக்கு இங்க வந்த…?” என்று கேட்க, அஸ்வின், அதே அழுத்தத்துடன், “உங்க எஸ்டேட்டை நீங்களே தீ வச்சு. தொழிலாளர்களை கொல்ல பார்த்ததுக்காக  உங்களை கைது பண்ண வந்துருக்கேன்…” என்றதில்  கயல் வெகுவாய் அதிர, ஜீவா, அவனையே தீர்க்கமாகப் பார்த்திருந்தான்.

நேசம் தொடரும்…
-மேகா..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
33
+1
89
+1
7
+1
5

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. Semmmma sis super ud waiting for next ud sis 💖💖💗💗💓💓