1,357 views

செல்வகுமார் தன் மகனோடு வெளியூர் சென்று இன்றோடு மூன்று நாட்கள் ஆகிவிட்டது. இந்நாட்களில் அன்பினி ஒரு திட்டம் தீட்டி வைத்திருக்க, அவை யாவும் நாசமாகி போனது அக்னி மூன்று நாள் அலுவலகம் வராததால்.

சுபமுகூர்த்த தினம் என்பதால் பெண் பார்க்க அழைத்துச் சென்றிருந்தார் தன் மகனை பரமேஸ்வரி. பெண்ணிற்கு அக்னியை பிடித்து போக, தன் குடும்பத்திற்கு பிடித்த பெண் என்பதால் சம்மதம் தெரிவித்தான். இரு குடும்பங்களும் திருமண பேச்சு வார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்க அன்றைய தினம் கழிந்தது. அடுத்த பத்து நாளில் திருமணம் முடிவாக,   வேலைகள் இருப்பதால் தொடர்ந்து இரண்டு நாட்கள் சேர்த்து லீவு எடுத்து விட்டான்.

அன்பினிசித்திரையிடம்  திட்டு வாங்காத ஒரு ஆள் பாக்கி இல்லை அலுவலகத்தில். எதற்கு திட்டுகிறோம் என்பது கூட தெரியாமல் தன் கோபம் முழுவதையும் காற்றை போல் பறக்க விட்டிருந்தாள். வேலை பார்க்கும் அனைவருக்கும் அவள் ஒரு அரக்கி போல் காட்சியளித்தாள்.

நாளையாது அவன் வருவானா என்ற தேடுதலில் நகத்தைக் கடித்துக் கொண்டிருந்த அன்பினியை பார்த்த நந்தினி, “நானும் பார்த்துட்டு இருக்கேன் ரொம்ப நேரமா தனக்குத்தானே பேசிட்டு இருக்க என்ன ஆச்சு உனக்கு.” என்று கேட்பதை கூட உணராமல் அக்னிசந்திரன் நினைப்பில் உலாவிக்  கொண்டிருந்தாள்.

“உன்ன தாண்டி கேக்குற” என்றவர் மகளைத் தொட்டு உசுப்ப, அதில் நினைவு வந்தவள், “என்ன ம்மா உனக்கு இப்ப. சும்மா நைய் நைய்ன்னு பேசிட்டு இருக்க. வேலைய பாரு போ.” நெருப்பில் பட்ட தண்ணீர் போல் காய்ந்தாள் அவரை.

அதன்பின் எதுவும் கேட்கவில்லை நந்தினி. ஒரு முடிவெடுத்தவளாக அக்னி எண்ணிற்கு அழைத்தாள். முழித்திருந்தவன் இவள் எண்ணை பார்த்து எடுக்கவில்லை. உடனே,

“முக்கியமான விஷயம் ஃபோன எடு.” என்று குறுஞ்செய்தி அனுப்பினாள்.

அதையும் பார்த்தானே தவிர எடுக்கவில்லை. அவன் பார்த்து விட்டான் என்பதை அறிந்து மனம் பரபரக்க, மீண்டும் அழைப்பு விடுத்தாள். இதேபோல் ஐந்தாறு முறை தொடர்ந்து செய்து கொண்டிருக்க அவனிடமிருந்து பதில் இல்லை.

“இப்ப எடுக்கல வீட்டுக்கு வருவேன்.” என்ற குறுஞ்செய்தியை பார்த்தவன் பதில் அனுப்பினான் “உன்னால முடிஞ்சா வா” என்று.

“வந்துட்டா என்ன பண்ணுவ” என்று இவள் பதில் அனுப்ப, “எங்க அம்மா உன்ன விளக்குமாத்தால அடிக்கிறதை ரசிச்சு பார்ப்பேன்.” என்று அனுப்பினான். 

“அப்படியா அப்போ நான் வெளிய நிற்கிறேன் கதவை திற.” என்றதும் வேகமாக அறையின் விளக்கை போட்டவன் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான்.

நள்ளிரவு நேரம் என்பதால் அவன் வீடு மட்டுமல்ல தெருவே இருட்டில் மூழ்கி இருந்தது. லைட் வெளிச்சத்தை வைத்து அக்னியின் அறையை கண்டு கொண்டவள் இந்த முறை குறுஞ்செய்திக்கு பதிலாக அழைப்பு விடுத்தாள்.

எடுத்தவன், “யாரைக் கேட்டு என் வீட்டுக்கு வந்த? இது என்ன உன்னோட ஆபீஸா. ஒழுங்கா கிளம்பி போயிடு.” என்றிட,

“கீழ இறங்கி வா.” உத்தரவிட்டாள்.

“என்னை கோபப்படுத்தி பார்க்காத நடுரோடுன்னு கூட பார்க்க மாட்டேன் கால உடைச்சிடுவேன்.” என அவள் வந்த கோபத்தை காட்டிக் கொண்டிருக்க,

“நீ வரியா இல்ல நான் உள்ள வரட்டுமா.” என்றாள் ஜன்னலில் இருக்கும் அவனைப் பார்த்துக் கொண்டு.

“என்னால வர முடியாது உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ.” என்றவன் அழைப்பை துண்டித்து விட்டு அறையின் விளக்கையும் நிறுத்தினான். காரில் சாய்ந்து கொண்டு அறையின் நடவடிக்கைகளை கவனித்தவள்,

“இப்ப வருவ பாரு.” பொறுமையாக கீழே இருக்கும் கல் ஒன்றை எடுத்தாள். குறி பார்த்து வேகமாக வீச, அதுவோ சரியாக அக்னிசந்திரனின் ஜன்னல் கண்ணாடியை உடைத்துக் கொண்டு விழுந்தது. இருட்டில் யோசனையோடு படித்துக் கொண்டிருந்தவன் திடுக்கிட்டு பார்த்தான்.

லைட் போட்டவன் தன் அறையில் இருக்கும் பொருளை பார்த்து பற்களை கடித்தான். ஜன்னலைத்  திறந்தவன் அவளை முறைக்க, கீழே வருமாறு சைகை செய்தாள்.

வீட்டின் கதவை திறக்கும் வரை பூனை போல் வந்தவன் வெளியில் வந்ததும் சிங்கமாக நெருங்கினான். அவன் வந்ததும் பெண்ணவளின் உணர்வுகள் வேகமாக பொங்கியது. அவன் நெருங்குவதற்கு முன் இவள் நெருங்கி செல்ல, “அப்படியே ஒன்னு வச்சேன்னா செவுல் பிஞ்சிடும்.” என்று கையை ஓங்க, நடந்தவள் அப்படியே நின்று விட்டாள்.

“என்னடி நினைச்சிட்டு இருக்க உன் இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கிற பொம்மைன்னா! பொண்ணுன்னு பார்க்குறேன் இல்லனா கால உடைச்சி என் வீட்டு கேட்ல கட்டி போட்டு இருப்பேன். உன்னோட திமிர்த்தனம் எல்லாத்தையும் உன்னோட வச்சுக்க என்கிட்ட காட்டணும்னு நினைக்காத. பதிலுக்கு என் திமிர்த்தனத்தை காட்ட வேண்டியதா  இருக்கும்.” நிசப்தமான இரவில் அவன் வார்த்தை காதிற்குள் ஆங்காரமாக ஒலித்தது.

அவர்கள் நிற்கும் எதிர்ப்புறத்தில் தெருவிளக்கு உயர்ந்து நின்றிருக்க, அதன் வெளிச்சம் அக்னியின் முகத்தை அழகாக்கியது. கலைந்து இருந்த கேசம் அவன் கை நீட்டிப் பேசும் தோரணைக்கு ஏற்றவாறு அசைந்தது. இருட்டிலும் கண்கள் வெள்ளைப் பூக்களாக பளிச்சிட, அதில் சிகப்பு நிற ரத்த நாளங்கள் நீர் போல் சூழ்ந்திருந்தது. சாதாரண இரவு உடையில் கூட தேவலோக ராஜனாக தெரிந்தான்.

திட்டிக் கொண்டிருக்கிறவனை ரசித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அவள் மனம் தாமதமாக உணர்த்த, ‘இவன போய் ரசிக்கிற என்ன டேஸ்ட் டி உனக்கு அன்பினி.’ என்று தன் மனதோடு பேசியவள் முகத்தை திருப்பி தரையைப் பார்த்தாள்.

இரவின் வெளிச்சத்தில் அவன் நிழல் அழகாக அவள் பக்கத்தில் நெருங்கி நிற்க, கண்ணெடுக்காமல் அந்த நிழலோடு ஊடுருவினாள். இருவருக்கும் நடுவில் சிறு இடைவெளி இருப்பதை நிழல் உணர்த்த அவனை ஒரு பார்வை பார்த்தவள் நகர்ந்து நின்று நிழலை ஒட்ட வைத்தாள்.

“ஏய்! காது கேக்கல உனக்கு கிளம்புனு சொல்லிட்டு இருக்க ரோட்ல நின்னு டான்ஸ் ஆடிட்டு இருக்க. ” கத்திக் கொண்டிருப்பதை காதில் வாங்காமல் நகர்ந்து நின்ற அன்பினியை இன்னும் திட்டினான்.

அதில் அவள் பின் மண்டையில் அறிவு கேவலமாக அடித்து உரைக்க, தெளிந்து அன்பினி சித்தரையாக நிமிர்ந்து பார்த்தாள். பார்வையால் பஸ்பம் ஆகிவிடும் வரம் பெற்று இருப்பான் போல கண்களை கூசச் செய்தது அவன் கோபம். ஒருமனம் அது அதை ரசிக்க சொல்லி வற்புறுத்த இன்னொரு மனம் இழுத்துப் பிடித்தது. “இப்ப எதுக்கு கத்திட்டு இருக்க முக்கியமான விஷயம் அதனால தான் உன்னை பார்க்க வந்தேன்.” என்றாள்.

“இந்த நேரத்துல பேசுற அளவுக்கு அப்படி என்ன விஷயம்?”

“நாளைக்கு ஆறு மணிக்கு கான்ஃபரன்ஸ் மீட்டிங் இருக்கு. அதை இன்ஃபார்ம் பண்ணலாம்னு போன் பண்ணா எடுக்க மாட்ற.  மீட்டிங் அட்டென்ட் பண்ணாம விட்டா அப்பா என்னை தான் திட்டுவாரு. நீ நல்லவன் மாதிரி என்னை மாட்டி விட்டுட்டு ஓடிடுவ. பொறுப்பில்லாம இருந்துட்டு என்னை சத்தம் போடுற. என்ன! ரோட்ல வந்து நின்னதால உன்ன மாதிரி சீப்புன்னு நினைச்சிட்டியா.” என்றவள் பார்வை அவன் கண்களை பார்க்க தடுமாறியது.

“என்ன வேலை மேல புதுசா அக்கறை. உன்ன விட எனக்கு நிறைய அக்கறை இருக்கு. நாளைக்கு காலையில உனக்கு முன்னாடி ஆபீஸ்ல இருப்பேன் கிளம்பு.” என்றவன் கிளம்ப முற்பட,

“உன்னை எப்படி நம்புறது இப்பவே கிளம்பு ஆபீஸ் போகலாம்.” எதற்கு பேசுகிறோம் என்று தெரியாமல் அவள் பேசிக் கொண்டிருக்க, திரும்பி ஒரு பார்வை பார்த்தான் அக்னிசந்திரன்.

“அப்படி பார்த்தா என்ன அர்த்தம்! இப்பவே மணி ஒன்னு ஆகப்போகுது. இதுக்கு மேல தூங்கி எந்திரிச்சு கிளம்பி வரது நடக்கிற காரியமா .” என்றவளுக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லாமல் சென்று விட்டான்.

அவன் சென்ற பின்னும் அங்கிருந்து நகராமல் காருக்குள் அமர்ந்திருந்தாள் அன்பினி சித்திரை. ஒரு மணியும் கடந்து நான்கு மணியும் வந்துவிட்டது. பாடல் கேட்டுக் கொண்டிருந்தவள் இதமாக கண் மூட, தூக்கம் ஆட்கொண்டது.

ஆறு மணிக்கு மீட்டிங் என்பதால் நான்கு மணிக்கு அலாரம் வைத்து தூங்கியவனை சரியாக எழுப்பியது அலாரம். எழ சிரமப்படும் கண்களை ஒருவாறு சமாதானம் சொல்லி எழ வைத்தான். விடியற்காலைப் பொழுது ஏற்கனவே அறையில் வெளிச்சம் வீசத் துவங்கி இருக்க… இன்னும் பிரகாசமாக்கினான் லைட் போட்டு.  விழித்தவனின் பார்வையில் கல் எறிந்த ஜன்னல் தரிசனம் கொடுத்தது பாவமாக.

சாந்தப்பட்டிருந்த மனது மீண்டும் கொதிக்க ஆரம்பித்தது அன்பினி நினைப்பில். அவன் மனதில் இடம் பிடிக்கக் கூடாது இடத்தில் அன்பினி இருந்தாள். சிடுசிடுப்போடு குளிக்க சென்றவன் தொடர்ச்சியாக ஜன்னல் வழியாகத் தெரியும் ரோட்டை பார்த்தான். கார் அங்கேயே நிற்பதை பார்த்தவன் குழப்பத்தோடு கீழ் இறங்கினான்.

கார் கதவைத் தட்டியவன் அவள் பெயரை சொல்லி அழைக்க, உள்ளிருந்து பதில் வரவில்லை. அக்கம் பக்கம் பார்த்தவன் கார் கதவை மெதுவாக திறக்க, அதில் சாய்ந்து படுத்திருந்தவள் விழுந்தால் நின்றிருந்தவனின் கைகளில். சாதாரணமாக திறந்தவன் தூங்கிக் கொண்டிருக்கும் அன்பினி விழுவதை பார்த்து தாங்கிக் கொள்ள, அந்த அசைவில் லேசாக கண் திறந்தாள்.

இதமான காலை சூரியனுக்கு பதில் நடு உச்சி அனல் வீசியது அக்னிசந்திரனின் முகம். தூக்கத்தில் இருந்து தெளியாதவள் லேசாக சிரிக்க, வேகமாக அவள் கன்னத்தில் அடித்தான். அலறி எழுந்தவள் விழிகள் வலியில் கலங்கியது.

“பொண்ணு மாதிரி ஒரு விஷயம் கூட பண்ண மாட்டியா. இது என்ன உன்னோட வீடா டி கிறுக்கி. என்னை மாதிரி எவன் வந்து திறந்து இருந்தாலும் விழுந்திருப்ப இப்படித்தான்.” என்றவன் மீது கடுங்கோபம் வந்தது அன்பினிக்கு.

“அடிமை இன்னொரு தடவை என்னை அடிச்ச உண்மையாவே இந்த கை உனக்கு சொந்தமா இருக்காது.” என்றவளை அவன் அடிக்க கை ஓங்க, தடுத்து பிடித்தாள் அன்பினிசித்திரை.

தன் கைகளை விடுவித்துக் கொண்டவன் கிளம்புமாறு கட்டளையிட, “நீ சொல்றதை கேட்கணும்னு அவசியம் எனக்கு இல்லை. தூக்கத்தோட ட்ரைவ் பண்ணா மொத்தமா மேல போய் சேர்ந்துடுவேன். உன் வேலைய பாரு போ.” என்றவள் கார் கதவை சாற்றிக்கொண்டு தூங்க ஆரம்பித்தாள்.

சிறிது நேரத்தில் கார் கதவு திறக்கும் ஓசை கேட்க, அன்பினி முகத்தில் புன்முறுவல். இதமான தூக்கத்தில் அவள் இருக்க, கடுப்போடு கார் ஓட்டிக் கொண்டிருந்தான் அக்னிசந்திரன்.

“அடிமை பொண்ண உனக்கு பிடிச்சிருக்கா.” கண்மூடிக் கொண்டு அவனிடம் கேள்வி எழுப்ப, முறைத்தான்.

விழி திறக்காமல் அவன் என்ன செய்கிறான் என்பதை நன்கு உணர்ந்தவள், “முறைக்காம சொல்லு பொண்ண உனக்கு பிடிச்சிருக்கா.” என்றாள்.

“உன்ன மாதிரி இல்லாம ரொம்ப நல்ல பொண்ணா இருக்கா. அப்புறம் பிடிக்காம போகுமா.” என்றதும் ஒரு வழியை மட்டும் திறந்து அவனைப் பார்த்தவள்,

“ம்ம்ம்! அந்த பொண்ணுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.” என்று உடனே விழி மூடிக்கொண்டாள்.

“உன்னை கட்டிக்க ஒருத்தன் வருவான் பாரு அவனுக்கு பீச்சுல சிலையே வைக்கலாம் அவ்ளோ அனுதாபங்கள் கிடைக்கும்.” விடாமல் அவனும் பேச,

“பேசாம நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம அடிமை.” என பதில் வந்ததும் சடன் பிரேக் அடித்து காரை நிறுத்தினான்.

பிரேக் அடித்த வேகத்தில் படுத்து கொண்டிருந்த அன்பினிசித்திரை டேஷ் போர்டில் இடித்து கொண்டாள். முகத்தில் கை வைத்து தேய்த்தவள், “கொலைகார பாவி தூங்கிட்டு இருந்த பொண்ண கூட்டிட்டு வந்து கொல்ல பார்க்குறியா.” என்று அவனைப் பார்க்க, முகம் குங்குமம் பூசியது போல் சிவந்திருந்தது.

எதுவும் பேசாத அன்பினி அமைதியாக கண் மூடிக்கொள்ள, வெகு நேரம் கழித்து காரை இயக்கினான். முதலில் கார் அதிரோடு நகர நேரம் செல்ல செல்ல சாதாரணமாக ஊர்ந்தது. கோபம் தணிந்து விட்டது என்பதை கண்டு கொண்டவள், “நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரல.” என்றாள்.

“உலகத்திலேயே முதல் தடவையா ஒரு வார்த்தையைக் கேட்டு அருவருப்பா ஃபீல் பண்றேன்னா அது நீ கேட்ட கேள்வியா தான் இருக்கும். உன்ன மாதிரி ஒருத்தி கூட எந்த தன்மானம் உள்ள ஆம்பளையும் வாழ மாட்டான். வாழும்போதே நரகம் அதும் ரத்த காட்டேரி கூட. உனக்கெல்லாம் எதுக்கு கல்யாணம். ஊர் ஊரா சுத்துற வேலைய பாரு.” என்றவன் அமைதியாக காரை இயக்கிக் கொண்டிருக்க அன்பினி எதுவும் பேசாமல் கண்மூடி இருந்தாள்.

பத்து நிமிடங்கள் கடந்து அவள் வீட்டு வாசல் முன்பு காரை நிறுத்தியவன் எதுவும் பேசாமல் காரை விட்டு இறங்கினான். திரும்பிப் பார்க்காமல் அவன் நடக்க, முன் பக்க கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தாள் செல்பவனை. ரோஷம் குறையாத வீம்போடு எதுவரை நடப்பான் என்பதை யோசித்தவள் ஓட்டுனர் செயலியை திறந்தாள். அவன் வீட்டு முகவரிக்கு ஒரு ஆட்டோ புக் செய்ய, அந்த நேரத்தில் ஒருவர் உடனே எடுத்து விட்டார்.

அழைப்பு விடுத்து தான் இருக்கும் இடத்திற்கு வர வைத்தவள், “அண்ணா இதே ரோட்ல ரெட் கலர் டி-ஷர்ட் போட்டுட்டு ஒரு பையன் நடந்து போவான். அவன் கிட்ட சவாரி வேணுமான்னு  கேளுங்க.” என்றவள் அக்னியின் வீட்டு முகவரியை கூறி, “வரமாட்டேன்னு சொல்லுவான் சமாளிச்சு ஆட்டோல ஏத்திக்கோங்க. நான் புக் பண்ணி இருக்க அட்ரஸ்ல அவனை டிராப் பண்ணிட்டா உங்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் தரேன்.” என்றதும் ஏதாவது வம்பாக இருக்கும் என்று முதலில் அவர் மறுத்தார்.

இன்னும் அதிக பணம் தருவதாக கூறி சமாளித்தவள் அனுப்பி வைத்தாள். ஓட்டுனருக்கு வேலை வைக்காமல் ஆட்டோவை மறித்தவன் தன் முகவரி சொல்லி ஏறிக்கொண்டான். ஃபோனில் லொகேஷனை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தாள் அன்பினிசித்திரை.

புக் செய்த இடத்தில் ஆட்டோ நின்றது தெரிந்ததும் காத்திருந்தாள் அவர் அழைப்புக்கு. டிரைவர் அக்னிசந்திரன் இறங்கிய அடுத்த நோடி அவளுக்கு அழைக்க, அவரின் பண செயலிக்கு சொல்லிய பணத்தை அனுப்பி வைத்தாள்.

‌***

என்ன நடந்திருந்தாலும் கடமையில் கண்ணாக  சரியான நேரத்திற்கு வந்து விட்டான் அக்னிசந்திரன். அதே கடமையில் கண்ணாக இருக்க வந்ததாக காட்டிக் கொண்டாள் அன்பினிசித்திரை. இருவரும் திரைக்கு முன்னால் அமர்ந்திருக்க, மீட்டிங் தொடங்கப்பட்டது. அன்பினிக்கு இது முதல் அனுபவம் என்பதால் அவள் தடுமாறி நிற்கும்போதெல்லாம் துணை நின்றான் அக்னி.

தன்னுடைய முறை வரும்போது அட்சரம் பதித்து விட்டான் பேச்சுக்களால். எதிர்ப்புறத்தில் இருந்தவர்கள்  கேட்பதற்கு முன்னால் கம்பீரமான பேச்சில் வசியம் செய்தான் அக்னி. அவர்களை மட்டுமல்ல அன்பினியையும் சேர்த்து.

இரண்டு மணி நேரங்கள் கடந்து மீட்டிங் வெற்றிகரமாக முடிந்தது. அதுவரை பார்வையாளராக வீடியோ காலில் இருந்த செல்வகுமார் ஒரு மணி நேரத்திற்கு பாராட்டி விட்டார் அக்னியை. விக்ரம் முதல்முறையாக அக்னியின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

மீட்டிங் ஹாலில் இருந்து வெளியில் வந்தவன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அன்பினுக்கு கட்டளையிட்டான். “கவனமா பண்ணுங்க மேடம் இதுல எந்த மிஸ்டேக்கும் வரக்கூடாது. இந்த டாக்குமெண்ட் தான் நம்ம சப்மிட் பண்ண போற முக்கியமான ஒன்னு. சின்ன புள்ளியில கூட மிஸ்டேக் வராம பார்த்துக்கோங்க.” என்று.

பூம்பூம்மாடு தலையாட்டுவது போல் அவனுக்கு சைகை செய்தவள் தன் அலுவலக அறைக்கு சென்று விட்டாள். அக்னியும்  அறைக்கு செல்ல, அவை வெறுமையாக காட்சி அளித்தது. குழம்பியவன் அங்கிருந்த வேலையாளிடம் விசாரிக்க,

“மேடம் உங்க ரூம்ல இருந்த எல்லா பொருளையும் அவங்க ரூமுக்கு மாற்ற சொல்லிட்டாங்க.” என்றார்.

குழப்பத்தோடு அன்பினி அறைக்கு செல்ல, அவள் மேஜைக்கு எதிரில் அக்னியின் மேஜை போடப்பட்டிருந்தது. அவன் உபயோகிக்கும் அனைத்து பொருட்களையும் அழகாக அடுக்கி வைத்திருந்தாள்.

“எதுக்காக என்னோட பொருள் எல்லாத்தையும் இங்க வச்சிருக்கீங்க மேடம்.”

“இதெல்லாம் என்ன உன்னோட காசுல வாங்கின பொருளா? எங்க வச்சிருந்தா உனக்கு என்ன. அது இருக்கிற இடத்துல தான் நீ
உட்கார்ந்து வேலை பார்க்கணும்.”

“அப்படியெல்லாம் என்னால வேலை பார்க்க முடியாது.” என்றவன் வெளியேற முடியல வேகமாக ஓடி அவன் முன்பு நின்றவள்,

“அடிமை ப்ராஜெக்ட் வொர்க் நிறைய இருக்கு என்னால அடிக்கடி உன் ரூமுக்கு நடந்து வர முடியல அதான் இங்க மாத்தி இருக்கேன் ஒழுங்கா இங்கே இரு.” என்று விரல் நீட்டி அவள் மிரட்ட, அந்த விரலையே முறைத்துக் கொண்டிருந்தான் அக்னி.

அக்னியின் முறைப்பில் நீட்டி இருந்த கை தானாக கீழ் இறங்கியது. அதன்பின் தான் முறைப்பதை நிறுத்தினான். “உங்க இஷ்டத்துக்கு என்னால வேலை பார்க்க முடியாது. இன்னும் பத்து நிமிஷத்துல எல்லா பொருளும் என் ரூம்ல  இருக்கணும் இல்லன்னா சார் கிட்ட சொல்லிடுவேன்.” என்றவன் தன் போக்கில் நடக்க,

“சொல்லிக்க அவரை சமாளிக்கிறதா எனக்கு ஒரு பிரச்சனை.” பின் நின்று குரல் கொடுத்தாள் அன்பினி.

“இந்த ப்ராஜெக்ட்ல ஒரு சின்ன தப்பு நடந்தாலும்  சாரோட கோபத்துக்கு அளவே இருக்காது. இது அவரோட பல வருட கனவு. பெத்த பொண்ணுன்னு கூட பார்க்க மாட்டாரு. உங்க அப்பாவ பத்தி என்னை விட உனக்கு நல்லா தெரியும்ன்னு நினைக்கிறேன்.” சொல்லியவன் நடந்து கொண்டே மறைந்தான்.

தன்னுள் எழும் தன்மான கோபத்தை தனக்குள் அடக்கியவள் அனைத்தையும் இடமாற்றினாள். சிறிது நேரம் காத்திருந்தவன் மாறி இருக்கும் என்ற எண்ணத்தோடு அறைக்குள் நுழைய, பெரும் மாற்றம் நிகழ்ந்திருந்தது அங்கு. அவனுடைய அனைத்து பொருட்களோடு சேர்த்து அன்பினியும் இடம் பெயர்ந்து இருந்தாள்.
***

அன்றிலிருந்து தன் அறையில் கூட நிம்மதியை இழந்து விட்டான் அக்னிசந்திரன். எதற்கெடுத்தாலும் ஒப்பந்தத்தின் பெயரை சொல்லியே காரியம் சாதித்தாள்.

மதிய இடைவேளை வந்ததும் வழக்கம் போல் தன் உணவை எடுத்துக் கொண்டு அவன் செல்ல, பூனை குட்டி அன்பினி நடைப்பழகியது அவன் பின்னால் நடந்து.

நேற்று வேலை இருப்பதாக அன்பினி சாப்பிட மறுக்க, கண்டு கொள்ளாதவன் கிளம்பி விட்டான் சாப்பிட. அதில் பொசுக்கென்று கோபம் கொண்ட அன்பினி அவனை திட்டுவதற்காக ஆறாம் தளத்திற்கு சென்றாள். அன்று போல் பெண்கள் கூட்டம் சூழ நடுவில் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் அக்னிசந்திரன்.

அவர்களை விலக்கியவள் வேலை இருப்பதாக அழைக்க, உணவு இடைவேளை முடிந்து வருவதாக கூறிவிட்டான். சத்தமிட்டு சிரிக்க வில்லை என்றாலும் அனைவரின் முகத்திலும் கேலி சிரிப்பு அளவில்லாமல் இருந்தது. அவமானப்படுத்தி விட்டதாக நினைத்தவள் தண்டனையாக இன்று அவனுடன் சாப்பிட செல்கிறாள்.

இந்த தண்டனை அவனை பெரிதும் பாதிக்காது என்பதை அறிந்தவள் தான் அன்பினி.  சிறுபிள்ளைத்தனமாக இவ்வளவு பெரிய தண்டனையை எதற்காக கொடுக்கிறோம் என்று யோசிக்க, மூளை செய்தி கொடுத்தது பொறாமை என்று. இன்று அனைவரின் முன்பும் அவனை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக அங்கு சென்றவள் நிலைமை பரிதாபமானது.

நடுத்தர வர்க்கத்திற்கு உச்சி வெயிலில் இரும்பு தகரத்தின் கீழ் அமர்ந்து சாப்பிடுவது பழகிப்போன ஒன்றாக இருக்க, இவளால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. பத்து நிமிடங்கள் கூட சென்று இருக்காது உடலில் வேர்வை ஆறு போல் ஓடியது.

“பூனை புலி மாதிரி இருக்க உடம்பு முழுக்க கோடு போட்டுச்சாம்.” அவள் நிலையை உணர்ந்த அக்னி காதில் நேரம் பார்த்து குத்தி காட்டினான்.

அனல் தாங்காமல் எழ முயன்றவளை தடுத்தவன், “எங்க ஓடுறீங்க மேடம் பல வருஷமா இங்க இருக்க எல்லாரும் இப்படித்தான் சாப்பிட்டுட்டு இருக்காங்க. நீங்களும் இனிமே பழகிக்கோங்க.” என்று அங்கேயே சாப்பிட வைத்தான்.

ஃபேன் வசதி குறைவில்லாமல் இருந்தும் ஆறாவது மாடி வெயில் அதை தோற்கடித்திருந்தது. வேர்வை துளிகளை துடைத்துக் கொண்டு சாப்பிட்டவள் அக்னியை பார்த்தாள். அவன் உடல் வேர்வையில் நனைந்து இருந்தது. உள்ளே போட்டிருக்கும் பனியனின் அச்சு அதில் தெளிவாகத் தெரிய, சந்தேகம் கொண்டு அங்கிருந்தவர்களை பார்த்தாள்.

நேரடியாக இல்லை என்றாலும் மறைமுகமாக அடிக்கடி அக்னியை தீண்டியது அங்கு இருந்தவர்களின் பார்வை. வேர்வை ஆறுக்கு பதில் கடலே ஓட ஆரம்பித்தது உள்ளுக்குள் எரியும் எரிச்சலில் அன்பினிக்கு.

அக்னியும் பார்க்கிறானா என்று கடை கண்ணால் ஆராய்ந்தவள் ரசிக்க ஆரம்பித்து விட்டாள். இடது புற காதின் ஓரம் முடிகள் சூழ்ந்து இருக்கும் இடத்தில் இரண்டு சொட்டு வேர்வை துளிகள் நகர்ந்து அவன் கன்னம் தொட்டு சட்டையில் பட்டதும்.

பக்கத்தில் அமர்ந்திருந்த மற்றொரு ஆணுடன் பேசிக்கொண்டே கையால் துடைத்தவன் நெற்றியில் ஈரத்தோடு பதிந்திருந்த முடிகளை நன்றாக மேல் தூக்கி சீவி விட்டான். கையில் இருந்த வாட்ச் அதில் சற்று ஏறிவிட்டது போல நீட்டி சரி செய்து மணியை பார்த்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தான்.

மீண்டும் விடாமல் வேர்வை துளிகள் நெற்றி, கன்னம், கழுத்து என ஊற்றெடுக்க, துடைக்க பரபரத்தது பாவையின் கைகள். சட்டை கலரை பின் தள்ளியவனின் மார்பு மேல் பகுதி ஒரு பாதியாக அவளுக்கு காட்சியளிக்க, அதில் வேர்வைத் துளிகள். அவை மெல்ல கீழிறங்க, அன்பினியின் பார்வையும் கீழ் இறங்கியது. தன்னை அறியாமல் அவன் உலகில் செல்ல ஆரம்பித்தவள் கைகள் வாட்டர் பாட்டிலை தவற விட்டது.

அவை சரியாக அக்னியின் காலில் விழுந்து விட, அவன் உணர்ந்து துடிப்பதற்குள் சில பெண்கள் துடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அரை நொடியில் நான்கு பெண்கள் அவனை சுற்றிக் கொண்டனர். மூக்கு உடைக்க உஷ்ண மூச்சு விட்டவள் கிளம்பி விட்டாள்.

அம்மு இளையாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
27
+1
3
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *