Loading

8 – விடா ரதி…

 

அடுத்த நாள் காலை 5 மணிக்கு அலாரம் அடிக்கவும் எழுந்த ரகு, மனைவியை பார்த்தான். அவள் அவனின் மார்பில் கிடந்த மாலை போலவே பற்றிக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள். 

 

“ஹம்ம்…. சும்மா சொல்லக்கூடாது…. நல்ல அழகி தான். ஆனா ஒன்னும் உருப்படியா செஞ்சிக்கறது இல்ல… அதனால தான் அப்போ என் கண்ணுக்கு சரியா படலியோ என்னவோ? இன்னிக்கி இவள வேறமாதிரி காட்டணும்….”, எனத் தனக்குள் பேசிக்கொண்டு அவளை எழுப்பினான். 

 

“ஸ்வர்….ஸ்வர்….. எந்திரி டி… உன் ப்ரெண்ட் கல்யாணத்துக்கு போகணும்ல…..”, மெல்லக் காதருகில் கூறினான். 

 

“ம்ம்…. இன்னும் கொஞ்ச நேரம் மம்மி…”, என அவள் கூறவும் அவனுக்கு வந்ததே கோபம். 

 

சட்டென எழுந்து அவளது தோளைப் பற்றி உலுக்கவும், தூக்கம் கலைந்து மிரண்ட விழிகளுடன் அவனைப் பார்த்தாள். 

 

“என்னடா ராக்கி? என்னாச்சி?”, ஒன்றும் புரியாமல் தலையைப் பிடித்தபடி அவனையே கேட்டாள். 

 

“இன்னுமா டி உனக்கு கல்யாணம் ஆனது மனசுல பதியல? எப்ப எழுப்பினாலும் மம்மி அம்மின்னுட்டு இருக்க….. எட்டு வருசமா எந்த அம்மி வந்து உன்ன எழுப்பினாங்க?”, படபடவென அவன் பொரியவும் அவளுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. 

 

“குடிச்சி இருக்கியா? ஏன் ஒளர்ற?”, தலைமுடியை ஒதுக்கியபடிக் கேட்டாள் . 

 

அவன் அவளைப் பார்த்து முறைத்தபடி மணியைப் பார்க்க, அது 5.30 எனக் காட்டியது. 

 

“அச்சச்சோ…. என்ன ராக்கி நீ இவளோ லேட்டா எழுப்பற ? நான் தான் உன்ன 5 மணிக்கு முன்ன எழுப்ப சொன்னேன்ல…. பாரு நேரம் ஆகிரிச்சி… நான் குளிக்க போறேன் நீ இன்னொரு பாத்ரூம்ல குளிச்சி ரெடியாகி வா சீக்கிரம்…. அவள கோயிலுக்கு அழைச்சிட்டு போகமுன்ன நான் அங்க இருக்கணும். இல்லனா என்னை கொன்னுடுவா…”, என மடமடவென பேசியபடி டவலுடன் பாத்ரூம் உள்ளே சென்றாள். 

 

“ராக்கி… நீ ஹீட்டர் போட்டு விடலியா? தண்ணி சூடாவே இல்ல… உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பு இல்ல …”, பாத்ரூமிற்குள் இருந்துக் கத்தினாள். 

 

அவன் அத்தனையும் அமைதியுடன் கேட்டபடி, இருந்த இடத்தை விட்டு அசையாமல் இருந்தான். 

 

அவள் பத்தே நிமிடத்தில் குளித்துவிட்டு, டவலுடன் வெளியே வர, அவன் அப்படியே உட்கார்ந்திருப்பதுக் கண்டு, “என்ன ராக்கி ஹீட்டர் போட்டு இருக்கியா? சரி இங்கேயே நீ குளிக்கலாம் இப்ப தண்ணி சூடா தான் வரும். நீ உள்ள போ.. நான் புடவை கட்டணும்…”, எனப் பேசியபடி புடவையை எடுத்து மெத்தையின் மேல் வைத்துவிட்டு அவனைப் பார்க்க, அவன் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டு இருந்தது. 

 

அவன் மனதில் இருந்த கோபமெல்லம் இப்போது தாபமாக உருமாறியிருந்தது அவளின் அப்போதைய தோற்றம் கண்டு. 

 

“ரகு… ரகு…”, அவன் முன்னே சொடக்கிட்டு அழைத்தாள். 

 

அவன் அவள் முகம் பார்க்கவும், “போய் குளிங்க….”

 

அது வரையிலும் அவள் நிற்கும் நிலையை இன்னும் உணரவில்லை. அவன் தான் தன் மனதின் திடத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டு அவளை அழைத்து சென்று கண்ணாடியின் முன் நிறுத்தி அவளின் பின்னே நின்று முகத்தை முன்பக்கமாக திருப்பவும், அவள் ஒரு நொடி திகைத்து அவனையே கட்டிக்கொண்டாள். 

 

“ர..தி…..”

 

“………”

 

“ர…. தீ……”, அவள் முதுகில் கைகளை ஊர்கோலம் போகவிட்டு காதோரத்தில் மெல்ல குனிந்து அழைத்தான். 

 

“வேணாம் ராக்கி.. நீ வெளிய போ…”, என இன்னமும் இறுக்கிக் கொண்டாள். 

 

“பிளீஸ்……”, என அவனது கைகள் செய்த வேலையை உதடுகள் ஆரம்பித்தன.  

 

“நோ…….”, அவனை அறையை விட்டு வெளியே தள்ளிக் கதவடைத்துவிட்டுத் தயாராகத் தொடங்கினாள். 

 

பாவம் அவன் தான் இப்போது தவித்தபடிக் கதவையே பார்த்தபடி நின்றிருந்தான். 

 

5 நிமிடம் கதவை தட்டியும் அவள் திறக்காததால் இன்னொரு அறையில் குளித்துவிட்டு வந்து கதவில் கைவைக்கவும் திறந்தது. 

 

“ராட்சஸி…. இன்னிக்கு கலியாணம் முடிஞ்சி வரட்டும் பாத்துக்கறேன்….”, என முணுமுணுத்தான் மெத்தையில் இருந்த வேஷ்டி சட்டையை அணிந்து தயாராகி வெளியே சென்றான். 

 

அவள் சமையலறையில் இருவருக்கும் டீ போட்டுக் கொண்டு வெளியே வந்து அவனிடம் ஒரு கோப்பையைக் கொடுத்துவிட்டு, இரண்டு பிஸ்கட் எடுத்து டீயில் முக்கி சாப்பிடத் தொடங்கினாள். 

 

அவன் அவளைத் தான் விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவனின் துரத்தும் பார்வையை தாள முடியாமல், “ரகு… போதும் வேற பக்கம் திரும்புங்க…”

 

முடியாதென தலையை ஆட்டிவிட்டு மீண்டும் அவளையே பார்வையால் தொடர, அவள் அவன் அருகில் வந்து, ”இப்படி பாத்துட்டே இருந்தா எனக்கு டிஸ்டர்ப் ஆகுதுங்க…. “

 

“எனக்கு ஆகாதா?”, அவன் குரலில் ஏகத்துக்கும் கோபமும், தாபமும் போட்டியிட்டன. 

 

“ரகு….”

 

“ராக்கி…. அப்படியே கூப்பிடு இனி…..”, எனக் கூறி அவளை அருகே இழுத்து, அவள் தலைமுடி பின்னலை அவிழ்த்தான். 

 

“என்ன பண்றீங்க ரகு ?”

 

“ராக்கின்னு கூப்பிட சொன்னேன்…..”, குரலில் கண்டிப்புக் காட்டியபடி அவளை தங்கள் அறைக்கு அழைத்துச்சென்று கண்ணாடியின் முன் அமரவைத்து, தற்போதைய பட்டை பின்னலாக பின்னி, கோர்த்த குண்டுமல்லியை பிறை வடிவில் வைத்து, அதற்கு மேலே சிறிய ரோஜா மலர்களை வைத்தான். முன்னால் இரண்டு பக்கமும் லேசாக சுருண்டிருந்த முடிகற்றையை இழுத்துவிட்டு, நெற்றியில் கீற்றாக குங்குமம் வைத்துவிட்டு, முந்நெற்றியிலும் வைத்துவிட்டான்.

 

இப்போது அவளது தோற்றமே முற்றிலும் வேறு கோணமாக தெரிந்தது. சிம்பிள் அண்ட் கோர்ஜியஸ் லூக். 

 

“ம்…. இப்போ பாரு எப்படி இருக்க? இப்படி எல்லாம் அப்பவே நீ செஞ்சி இருந்தா இந்நேரம் நமக்கு ரெண்டு புள்ளைங்க இருந்திருக்கும்….”, என அவள் காதோரத்தில் கூறிக் கன்னத்தில் அழுத்தமாக இதழ் ஒற்றிவிட்டுச் சென்றான். 

 

அவனின் கூற்றிலும் செயலிலும் அவள் வெட்கபூக்கள் பூக்க, தன்னை ஒருமுறை கண்ணாடியில் பார்த்துக் கொண்டு பரிசுப் பொருளுடன் வெளியே வந்தாள். 

 

அவளின் புடவை நிறத்தில் அவனது சட்டை இருந்தது. வேஸ்டியில் அத்தனை கம்பீரமாக இருந்தான் அவளின் பதி. இவனுக்காக தான் இத்தனை வருட காத்திருப்போ என்று தான் தோன்றியது. காதலைச் சொன்ன நொடியில் இருந்து அவனின் செயல்பாடுகள் அனைத்தும் அவளைச் சார்ந்தே, அவளின் மகிழ்ச்சியை மையப்படுத்தியே இருந்தன. 

 

இவனின் இந்த புது மாற்றம் அவளை சந்தோச கடலுக்கு அழைத்து சென்றாலும், அவளால் தான் இன்னும் முழுதாக அதில் முத்துக் குளிக்க முடியவில்லை. இன்று அந்த தடை நீங்கிவிடும் என்று நினைக்கிறாள். பார்ப்போம்…. 

 

என்ன தான் இருவரும் முப்பது வயதை நெருங்கி இருந்தாலும் இருவரின் முகங்களும் 7 – 8 அகவையை குறைத்தே காண்பித்தன. அத்தனை மகிழ்ச்சியும், பூரிப்பும் முகத்தின் வழியே அகத்தினைக் காட்டின. 

 

இருவரும் காரில் சென்று சுந்தரியின் வீட்டில் இறங்கும்போது எதிரில் வந்த பாட்டி அவர்களை அப்படியே நிறுத்தி அங்கிருந்த காலடி மண்ணை எடுத்து திருஷ்டிச் சுற்றி முற்சந்தியில் போட்டு விட்டு, “அடியே…. மை இருந்தா எடுத்து காதுக்கு பின்ன ரெண்டு பேரும் வச்சுக்கோங்க….. கண்ணு பட்டுறும்…. “, எனக் கூறிவிட்டு செல்லவும், அவள் தனது கைப்பையில் தேடினாள் . 

 

“என்ன தேடற செல்லம்?”, அவளைப் பிடித்து நடந்தப்படியே அவன் கேட்டான். 

 

“காஜல் தான்….”

 

“அது உன் பேக்ல எப்போ இருந்திருக்கு?”, அவன் நக்கலாக கேட்கவும் அவனை முறைத்தாள். 

 

“உங்களுக்கு ரொம்ப தெரியுமோ என் ஹாண்ட்பாக்ல என்ன இருக்கும் இருக்காதுன்னு?”

 

“எனக்கு தெரியாம உனக்குள்ள நெறைய விசயம் இருந்திருக்கலாம்…. ஆனா இனிமே எல்லாமே எனக்கு தெரிஞ்சிடும் பேபி….. “

 

“சரி சொல்லுங்க… பொதுவா என் பேக்ல என்ன என்ன இருக்கும்?”

 

“ரெண்டு மடக்கு கத்தி, ஒரு குட்டி டார்ச், மின்ட் சாக்லேட், சேஃப்டி பின், ஒரு பிந்தி, சின்ன ஜிப் முழுக்க காய்ன்ஸ், உள்ளாரா குட்டி ஜிப் ல என் ஃபோட்டோ, அப்பறம் 2 ஆயிரம் எப்பவும் வச்சி இருப்ப…. மழை காலமா இருந்தா ஒரு குடை, அப்பறம் தண்ணி பாட்டில், ஒரு bourbon பிஸ்கட்…. கரெக்ட் அஹ்?”

 

“எப்போ என் பேக் எடுத்து பாத்தீங்க?”, சிரிப்பை மறைத்தபடிக் கேட்டாள். 

 

“உன் தம்பி தான் அன்னிக்கி எடுத்து குடுத்தான் நீ விட்டுட்டு வந்துட்டன்னு…. “

 

“அப்போ திருட்டு தனமா எல்லாத்தையும் பாத்து இருக்கீங்க…”

 

“ஹே…. அது பொண்டாட்டி பேக்ல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்கற ஆர்வம்… நீ எப்படி என் பர்ஸ்அஹ் அன்னிக்கி ஆராய்ச்சி பண்ணியோ அப்படி?”, என அவளை அருகில் இழுத்து காதில் இன்னும் சில விசயத்தைக் கூறிவிட்டு மை வாங்கி வருவதாக சொல்லிச் சென்றான். 

 

“நான் சுந்தரிகிட்ட வாங்கிட்டு வரேன் இருங்க…”

 

“வேணாம்…. இத எப்பவும் உன் ஹாண்ட்பாக்ல வச்சுக்கோ இனிமே….. பக்கத்துல தான் கடை இருக்கு…”, எனக் கூறிவிட்டுச் சென்றான். 

 

அவளும் இதழில் மென்னகையுடன் சுந்தரியின் அறைக்குச் செல்ல அங்கே மீனாவும், பிரியாவும் அவளுடன் பேசிக்கொண்டிருந்தனர். 

 

அவர்களைக் கண்டதும் ஒரு நொடி முகம் கோபத்தில் சிவந்தாலும், மனதைக் கட்டுப்படுத்தியபடி உள்ளே சென்றாள். 

 

“ஹே புது பொண்ணு வந்துட்டா பாருங்க…”, சவி கூறவும் இருவரும் அவளைப் பார்த்தனர். 

 

“ஹே ரதி.. சொல்லாமயே கலியாணம் பண்ணிட்டல்ல நீ? எங்களுக்கு கல்யாண சாப்பாடு போடவே இல்ல போ….”, என இருவரும் மாறி மாறி கேட்டனர். 

 

“இன்னிக்கி போட்டுறலாம் ….. எப்படி இருக்கீங்க ரெண்டு பேரும்? எங்க உங்க பசங்க எல்லாம்?”, அவளும் சகஜமாக பேசியபடி சுந்தரி அருகில் வந்து அமர்ந்தாள். 

 

“அவங்கள எல்லாம் அம்மா வீட்ல விட்டுட்டு தான் வந்தோம்…. இங்க வச்சி சமாளிக்க முடியாது…. சுந்தரி இங்க கல்யாணம் வச்சது எங்களுக்கு வசதியா போச்சி…. இதையே டிரிப் மாறி பண்ணிக்கலாம்ன்னு பேசி வச்சி கூட்டிட்டு வந்தோம்…”

 

“ஹோ.. 3rd ஹனிமூன்-ன்னு சொல்லுங்க…”

 

“அப்படியும் வச்சுக்கலாம்….”, எனச் சிரித்தனர். 

 

“சரி உன்ன கல்யாணம் பண்ண புண்ணியாவன் யாரோ? எங்களுக்கு காட்ட மாட்டியா?”, எனக் கேட்டனர். 

 

“கடை வரைக்கும் போய் இருக்காரு … வரட்டும் இன்ட்ரோ தரேன்…”, எனக் கூறிவிட்டு சுந்தரிக்கு புடவைக் கட்ட உதவினாள். 

 

“அப்பறம் என்ன வேலை பண்றாரு? பேரு என்ன?”, பிரியா கேட்டாள். 

 

“ரகு…. ரீடெயில் டிரஸ் ஷாப் வச்சிருக்காரு..”, எனக் கூறியதும் பிரியாவின் முகம் குழப்பத்தில் ஆழ்ந்தது. 

 

“பார்ரா ….. எப்படி கல்யாணம் பண்ணிகிட்ட? எனக்குள்ள முதல் காதல் அப்படியே இருக்கு.. மறக்க முடியாதுன்னு டயலாக்லாம் பேசுனா?”, மீனா கிண்டலாகக் கேட்டாள். 

 

“ரதி…”, எனக் கதவைத் தட்டி யாரோ அழைக்கவும், பிரியா கதவை திறக்க ரகு நின்றிருந்தான். 

 

“பிரியா.. நல்லா இருக்கியா? வீட்ல நல்லா இருக்காங்களா?”, எனக் கேட்டபடி உள்ளே வந்தவன் ரதியின் கைப்பிடித்து இழுத்தான். 

 

“நான் மறக்கல மீனா…. இதோ என் புருஷன் ரகு @ மை ராக்கி….. என் காதல் கைவிட்டு போகல…. நானே எதிர்பார்க்காமல் என் கைசேந்துடிச்சி…. ராக்கி.. இவ மீனா… இவ பிரியா உங்க சொந்தம் தானே தெரியும்…இவ சவி….. “, என அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தாள். 

 

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
18
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்