8 மணி 8 நிமிடம்
அத்தியாயம் 1
வீட்டின் கதவைத் திறந்து உள் நுழைந்த பார்த்திபனை பின்பற்றி வந்த சேகர்.
“அப்பப்பா! என்னா வெயிலு! என்னா வெயிலு! ஊராடா இது. ச்சை.ஒரு வீடு வாடகைக்கு கிடைக்க மாட்டேங்குது. இல்ல நான் தெரியாம தான் கேட்கிறேன். கல்யாணத்துக்கு பொண்ணு மட்டும் பேச்சுலர் பையன பார்த்துக் கொடுப்பாங்களாம். ஆனா வீடு மட்டும் பேட்ச்லர் பசங்களுக்கு குடுக்க மாட்டாங்களாம். என்னங்கடா நியாயம்? இது உங்க நியாயம்?..” என்று தன் போல் அழுத்து கொண்டிருந்தவனை பார்த்த பார்த்திபன் அமைதியாகச் சென்று நாற்காலியில் அமர.
“ஏன் டா.? இங்க ஒருத்தன் புலம்பு புலம்புன்னு பொலம்பிட்டு இருக்கேனே. என்ன? ஏதுன்னு கேக்குறியாடா? ஆமா நீ ஏன்டா இப்படி மாறிட்ட? நல்ல கலகல கலன்னு தான இருப்ப. ஒன்னு ஒன்னுக்கும் கவுண்டர் கொடுத்துக்கிட்டு. உன்னைச் சமாளிக்கிறதே பெரிய பாடா இருக்கும் எனக்கு. ஆனா இப்ப என்னமோ மௌனச் சாமியார் ஆயிட்டடா நீ? ஒரு…. ஆறு மாசமா தான் இப்படி நீ இருக்க.” என்று தன் நாடியை தட்டி யோசித்தபடி கூறிய சேகர்,
“ஏன்னு தான் என்னால கண்டுபிடிக்க முடியல. கண்டுபிடிக்கிறேன்.” என்று வில்லன்போல் கூறியவனை. அதே அமைதி பார்வை பார்த்த பார்த்திபன் கண் மூடி அமர்ந்தான் நாற்காலியில் தலையைச் சாய்த்து விட்டத்தை பார்த்தபடி.
‘ஆறு மாதம் முன்பு கலகலன்னு இருந்த.’ அதுவே மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது.
‘கலகலன்னு இருந்த என்னுடைய கலகலப்ப தான் மொத்தமா வாரிச் சுருட்டி கிட்டு போயிட்டாளே. எங்க போனாளோ? எங்க இருக்காளோ?’ என்று நினைத்தவனுக்கு பெருமூச்சு தான். எவ்வளவு கட்டுப்படுத்த முயன்றாலும் கண்களில் ஓரம் துளிர்ந்த கண்ணீரை நண்பனுக்குத் தெரியாமல் சிமிட்டி உள் இழுத்துக் கொண்டான்.
‘காதலின் வலி எதிரிக்கும் வேண்டாம் நரக சுகம் அல்லவா’
என்ற பாடல் வரிதான் மனதில் ஓடியது. ‘சுகமாவா இருக்கு கொடுமையா இருக்கு’ என்று நினைத்தவன் பெருமூச்செறிந்து திரும்பிப் பார்க்க இவனையே நெற்றியை சுருக்கி பார்த்துக்கொண்டிருந்தான் சேகர். அவன் மனதில் ஓடும் எண்ணத்தைக் கண்டுபிடித்து விடும் நோக்கத்துடன்.
இவனின் பார்வை உணர்ந்தவன் எழுந்து இருந்த ஒரே ஒரு அறைக்குள் சென்று கதவடைத்துக்கொண்டான்.
“டேய் எங்கடா போற ரூம்குள்ள இப்ப. வாடா வெளிய. இன்னைக்கு உன் டர்ன் நீ தான் சமைக்கணும்.” என்று அமர்ந்திருந்தவாரே கத்திக் கொண்டிருந்தவனுக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.
“டேய் மௌனச்சாமி உள்ள போய் அடைச்சிகிட்டியா.? இருடி இன்னைக்கு உப்புமா தான்.? என்று தன் போல் பேசிக்கொண்டே அடுப்படிக்குள் நுழைந்தவன் உப்புமா செய்வதற்கான பொருட்களை எடுத்துக்கொண்டிருந்தான்.
இரண்டு ஆண் மகன்கள் இருந்து பாவிக்கும் இடம்போல் இல்லை அது. அவ்வளவு சுத்தமாகவும் நேர்த்தியாகவும் பொருட்கள் ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டு நீட்டாக இருந்தது. அதிக பொருட்கள் இல்லாமல் தேவைக்கேற்ப சில சமையல் சாமான்கள் இருந்தன.
ஒரு கடாயை எடுத்து அடுப்பில் ஏற்றியவன் இருவருக்கும் தேவையான அளவில் ரவையை அளந்து போட்டு வறுத்துக்கொண்டே.
“ஆமா இந்த உப்புமா ஏன் நிறைய பேருக்குப் பிடிக்க மாட்டேங்குது. நல்ல சூடான உப்புமாவில் சர்க்கரையை அப்படியே தூவி கொஞ்சமா நெய் விட்டுச் சுட சுட சாப்பிட்டா எவ்வளவு டேஸ்டா இருக்கும். ரசனை தெரியாத ஹுமன்ஸ். உப்புமா மை ஃபேவரிட்.” என்று கூறிக் கொண்டே வெங்காயத்தை நறுக்க ஆரம்பித்தான்.
உள்ளே அமர்ந்திருந்தவனுக்கு இவன் குரல் கேட்டுக் கொண்டே இருக்க மெலிதாகச் சிரித்துக் கொண்டவன். தான் எழுதிய கவிதை துணுக்குகளைப் பத்திரிகைகளுக்கு அனுப்புவதற்கு கவரில் போட்டு முகவரியை எழுதிக்கொண்டிருந்தான்.
அவன் பார்த்திபன். தாய் தந்தை சகோதர சகோதரிகள் உற்றார் உறவினர் என யாரும் இல்லை அவனுக்கு. ஒரே நண்பன் சேகர் மட்டுமே…அவனுக்கும் பெற்றோர் என யாரும் கிடையாது இருவருமே திருச்சியில் உள்ள ஒரு ஆசிரமத்தில் தான் வளர்ந்தார்கள். யார் அவர்களை அங்குச் சேர்த்தது என இருவருக்குமே தெரியாது நினைவு தெரிந்த நாளிலிருந்து அங்குதான்.
ஒன்றாகவே படித்து ஒன்றாகவே வளர்ந்தவர்களின் நட்பும் ஒன்றாகவே வளர்ந்தது. நண்பர்கள் என மற்றவர்களும் இருந்தாலும் ஏனோ ஒருவருக்கு ஒருவர் துணை என்பது போல இருவரும் ஒன்றாகவே சுற்றி திரிந்தார்கள்.பள்ளி படிப்பும் கல்லூரி படிப்பும். இவர்களின் நட்பை மேலும் இருக செய்தது…தமிழ் மேல் உள்ள ஆர்வத்தால் பார்த்திபன் தமிழ் இலக்கியம் எடுத்துப் படிக்கச் சேகரோ ஆங்கில இலக்கியம் எடுத்துப் படித்தான்.
கல்லூரி படிப்பு முடிந்த பின் ஆசிரமத்திலிருந்து வெளியேற வேண்டிய நிலை இவர்களுக்கு. அங்குப் படிக்கும் அனைவருக்குமே அதுதான் சட்டம். அப்படி வெளிவந்தவர்கள். வாழ வைக்கும் சென்னையென நினைத்துச் சென்னைக்கு வந்தவர்கள் திருவல்லிக்கேணியில் மொட்டை மாடியில் ஒரு சிறு அறை ஒரு வரவேற்பறை ஒரு சிறிய சமையலறையென இருந்த வீட்டில் கம்மி வாடகையில் தங்கி கொண்டார்கள்…
ஒரு டியூஷன் சென்டரில் ஆங்கில ஆசிரியராகச் சேகருக்கு வேலை கிடைக்க. பார்த்திபனோ ஏதேனும் பத்திரிகை அலுவலகத்தில் வேலை கிடைக்குமா எனப் பார்த்துக்கொண்டிருந்தான். சிறு சிறு கவிதைகள் கதைகள் எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்பி கொண்டிருந்தான் அதில் சிலது பிரசுரமாகி அதில் வரும் வருமானத்தில் வாழ்ந்து வந்தார்கள் இருவரும் சிக்கனமாக… தற்போது இருக்கும் வீட்டை, வீட்டின் உரிமையாளர் இடித்துக் கட்ட இருப்பதால் இவர்களைக் காலி செய்யச் சொல்லத் தங்களுக்கான வீட்டைத் தேடி அலைந்து கொண்டிருந்தார்கள் இருவரும்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு அது… அப்பர் மிடில் கிளாஸ் என்னும் சற்று வசதியானவர்கள் வாழும் குடியிருப்பு… ஐந்து அடுக்குகளைக் கொண்ட தளம்… இரவு ஏழு முப்பது. ஒன்று இரண்டு மூன்று மற்றும் ஐந்தாம் தளங்களில் சில பேச்சுக் குரல்களும் குழந்தைகள் சிரிக்கும் சத்தமும் விளையாடும் சத்தமும் கேட்டுக்கொண்டிருந்தது…
ஆனால் நான்காம் தளம் மட்டும் அமைதியின் சிகரமாக எந்தச் சத்தமும் இல்லாமல் நிசப்தத்துடன் இருந்தது.
ஒரு தளத்தில் மொத்தம் மூன்று வீடுகள்… மின்தூக்கி வசதியும் இருந்தது அங்கு… மின் தூக்கியிலிருந்து வெளிவந்தால் நேர் எதிராக இரண்டு வீடுகளும் சற்று தள்ளி மின் தூக்கியை எதிர்நோக்கும் வகையாக ஒரு வீடும் இருந்தது… நேர் எதிர் இருந்த இரண்டு வீடுகளிலும் விளக்கு வெளிச்சம் இருக்க ஒற்றையாக இருந்த வீடு மட்டும் இருளாக இருந்தது…
சிறிதாகப் பேச்சுச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்த வீடுகளிலும் மணி எட்டை நெருங்கவும் ஸ்விட்ச் போட்டு நிறுத்தியது போல மிகுந்த அமைதி நிலை ஏற்பட்டது… திடீரென மூடி இருந்த வீட்டிலிருந்து கிரீச் என ஒரு சத்தம் கேட்டது. அத்துடன் நாற்காலியை இழுக்கும் சத்தமும் கேட்டது பின் ஊஞ்சலில் ஆடினால் மேலிருக்கும் கம்பி உராய்ந்து க்ரிக் க்ரிக் எனக் கேட்கும் கம்பியின் சத்தம் விடாமல் கேட்டுக் கொண்டே இருந்தது…
மூடிய வீட்டிற்குள் இருந்து கேட்கும் சத்தம் சற்று பயத்தையே ஏற்படுத்தியது… அத்தோடு அவ்வீட்டின் கதவில் எழுதி இருந்த வாசகம்.
“மை ஹவுஸ் மை ரூல்…”
யாரின் வீடு அது. யாரின் சட்டம் தெரிந்து கொள்வோம்…
“ஏங்க உங்கள தான். வீடு பார்த்தீங்களா இல்லையா.?
“பாத்துட்டு தான் மா இருக்கேன். ஒன்னும் அமையல. நானும் என்ன செய்றது? சொந்த வீட்டை விட்டுவிட்டு வாடகை வீட்டுக்குப் போறதுக்கு மனசு அடிச்சுக்குது…”
“உங்களுக்கு என்ன? நீங்க ஏன் சொல்ல மாட்டீங்க. காலைல கிளம்பி போயிடுவீங்க ஆபீஸ்க்கு. நீங்க வர வரைக்கும் நான்தான் உயிரைக் கைல புடிச்சிட்டு இருக்கணும்…”
“ஏன்டி அப்படி சொல்ற? பகல் எல்லாம் எதுவுமே பிரச்சனை இல்ல தானே. நைட்ல மட்டும் தானே இந்த மாதிரிச் சத்தம் கேக்குது…”
“நைட்ல மட்டும் சத்தம் கேட்டா பகலில் கேட்க எவ்வளவு நேரம் ஆகும். பகலிலும் சத்தம் கேட்டு அது உக்கிரம் ஆகுற வரைக்கும் என்னால எல்லாம் இங்க இருக்க முடியாது. குழந்தையும் வச்சிக்கிட்டு எவ்வளவு பயமா இருக்கு தெரியுமா? இப்படித்தான் ரெண்டு நாள் முன்னாடி நீங்க வர லேட் ஆயிடுச்சு குழந்தை ரொம்ப அழுகுதேனு பால்கனி கதவ தொறந்து நின்னுகிட்டு இருந்தேன். பக்கத்து வீட்டு பால்கனியிலிருந்து யாரோ என்னையே உத்து பாக்குற மாதிரி இருந்தது. மெதுவா திரும்பிப் பார்த்தேன் கருப்பா ஏதோ நிக்கிற மாதிரி இருந்துச்சு ஓடியே வந்துட்டேன் உள்ள… கை, கால் எல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடுச்சு கொஞ்ச நேரத்துல… என்று பயந்து கொண்டே கூறியவள்.
“ஆனா அவ்வளவு நேரம் அழுதுட்டு இருந்த குழந்தை உள்ளே வந்தவுடனே அழுகையை நிறுத்திட்டு சமத்தா விளையாட ஆரம்பிச்சிட்டா. அதுதான் எப்படின்னு புரியல.” என்றவள்.
“எந்தக் கதவையும் திறக்கவும் முடியல எட்டு மணி ஆனா எல்லாத்தையும் அடைச்சிட்டு ரூமுக்குள்ள வந்து அடங்கிடுறேன். இதுக்கு மேல என்னால இங்க இருக்க முடியாது. ப்ளீஸ் வேற வீடு பாருங்க போன வருடம் எல்லாம் பாப்பா வயித்துல இருக்கும்போது எவ்ளோ சந்தோஷமா இருந்தது அந்தப் பக்கத்து வீட்டு பாட்டி தாத்தாவும் அவ்வளவு பாசமா இருப்பாங்க என்கிட்ட.அவங்க மட்டுமா…?” என்றவளுக்கு பெரும் மூச்சு தான்…
ஏதோ சிந்தனையில் அமைதியாக அமர்ந்திருந்தவளிடமிருந்து மகளை வாங்கியவன். அவளோடு அறைக்குள் செல்லச் சுயம் உணர்ந்து நிமிர்ந்தவள்
“ஐயையோ! என்னை விட்டுட்டு எங்க போறீங்க…?” என்று அலறியபடியே கணவனின் பின் சென்றாள்…
மனைவியின் அலறலில் தன்னையும் மீறிச் சிரித்தவன்
“ஏன்டி நம்ம வீட்டுக்குள்ள தானே இருக்கோம்…”எனக் கேட்க
“நம்ம வீட்டுக்குள்ள இருந்தாலும் மனசுக்குள்ள பயம் தோன்றாத வரைக்கும் ஒன்னும் தெரியல. பயம் தோணுச்சுன்னா தனியா இருக்க பயமா தான் இருக்கு எனக்கு.” என்றாள் அவனோடு அறைக்குள் நுழைந்து கொண்டு.
“பேசாம அந்த வீட்டை வாடகைக்கு விட்டுட்டா என்ன.?”
“வாடகைக்கு ஆள் வரணுமே. அதுக்கும் மேல வாடகைக்கு விடுறதுக்கு அவங்களும் ஒத்துக்கணுமே.”
“எப்படியாவது ஒத்துக்க வையுங்க. யாராவது ஆள் இருந்தா ஒன்னும் தெரியாது.”
“இப்படி நீ சொன்னேனு தான் மூணு மாசம் முன்னாடி அவங்க கிட்ட கேட்டு ஒருத்தவங்க வந்தாங்க. வந்து இரண்டே நாள்ல அடிச்சு பிடிச்சு ஓடிப் போயிட்டாங்க. அதைக் கேட்டதுல இருந்து அந்தத் தாத்தா, இனி யாருக்கும் வாடகைக்கு விடுவதில்லை. மனசு கஷ்டமா இருக்குன்னு சொல்லிட்டாரு. இப்ப நான் எப்படி போய் அவங்க கிட்ட கேட்க முடியும் திரும்ப வாடகைக்கு விடுங்கன்னு…”
“அதெல்லாம் எனக்குத் தெரியாது? எப்படியாவது கேட்டு யாரையாவது நீங்களே பார்த்து வாடகைக்கு வைங்க. இல்லையா சீக்கிரமா வேற வீட்டைப் பாருங்க நாம காலி பண்ணிட்டு போகலாம்.” என்ற மனைவியிடம் ஒன்றும் சொல்லாமல் யோசனையுடன் அமர்ந்து விட்டான் தீபன்.
மை ரூல்ஸ் வீட்டின் பக்கத்து வீட்டில் வாழ்கிறார்கள் இவர்கள் தீபன், மைதிலி. திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. இருவரின் பெற்றோரும் கும்பகோணத்தில் இருக்க தீபனின் வேலைக்காகச் சென்னையில் இருப்பவர்களுக்கு இரு வீட்டாரும் சேர்ந்து இந்தப் பிளாட்டை வாங்கி கொடுத்திருந்தார்கள் திருமண பரிசாக. இவர்களுக்கு ஒரு வயதில் மகள் இருக்கிறாள். அவள் பெயர் ரேஷ்மி.தீபன் ஒரு பிரபலமான பள்ளியில் கணக்கு வாத்தியாராக இருக்கிறான்.
மாலை நேரத்தில் சேகர் செல்லும் அதே டியூஷன் சென்டருக்கு இவனும் செல்கிறான். அதிகப்படி வருமானத்திற்கு.
யாரைப் பிடித்து வாடகைக்கு அமர்த்துவது அதற்குப் பெரியவரும் ஒத்துக் கொள்ள வேண்டுமே என்ற பெரும் சிந்தனையுடன் அமர்ந்திருந்தான் தீபன்.
தேடல் தொடரும்…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
7
+1
+1