அத்தியாயம் 2
மனைவி சொன்னதையே நினைத்துக்கொண்டிருந்தான் தீபன். ரங்கராஜன் தாத்தாவை இன்று நேரில் சென்று பார்க்கலாமா என்ற சிந்தனையே மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.
தனக்கான பாடத்தை எடுத்து விட்டு இவனின் அருகே வந்து அமர்ந்த சேகர் தன் போல்
“இன்னைக்கும் காலையிலிருந்து வெளியில சுத்தியாச்சு. ஒரு வீடு அமைஞ்ச மாதிரி இல்ல.” எனப் புலம்பிக் கொண்டிருக்க. இவனின் அருகில் சிந்தனையில் இருந்தவனின் காதுகளில் அது விழுந்தாலும் மூளையில் சென்று சேரவில்லை. எப்பொழுதும் நன்றாகப் பேசும் தீபன் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதை பார்த்த சேகர்,
‘நம்ம போல இவனுக்கும் ஏதோ பிரச்சனைபோல.’ என நினைத்தவாறு மறுபடியும் தன் வீடு தேடும் படலத்தைத் துவங்குவதற்காக, அவனுக்கான பாட நேரம் முடிந்த பின்பு கிளம்பினான் வீடு வேட்டைக்கு.
ஆழ்ந்த யோசனைக்குப் பின்பு மனைவி கூறியது போல ரங்கராஜன் தாத்தாவை நேரில் சென்று கண்டு யாரையேனும் வீட்டில் குடி அமர்த்துவதை பற்றி அவரிடம் பேச வேண்டும் என முடிவெடுத்தவனாகச் சிந்தனையிலிருந்து விடுபட்டவன். அப்போதே நினைவு வந்தவனாகத் திரும்பிப் பார்க்கச் சேகர் அமர்ந்திருந்த இடம் காலியாக இருந்தது.
‘இங்க தானே உட்கார்ந்த மாதிரி இருந்துச்சு. அதுக்குள்ள போயிட்டானா என்ன.? ஆமா, ஏதோ புலம்பிக்கிட்டு இருந்த மாதிரி வேற இருந்துச்சே.’ என நினைத்துக் கொண்டே சுற்றிமூற்றி பார்த்தவன். தனக்கும் நேரம் ஆவதை உணர்ந்து தன் பாட நேரத்தை வேகமாக முடித்துக் கொண்டு ரங்கராஜன் தாத்தாவின் வீட்டை நோக்கிப் பயணம் ஆனான் தன் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு.
அவர்கள் வடபழனி அருகில் உள்ள ஒற்றை அறை கொண்ட பிளாட்டில் வசித்து வந்தார்கள். இவன் சென்று காலிங் பெல்லை அடிக்கத் திறந்து பார்த்த லட்சுமி பாட்டி
“வா வா, தீபன். நல்லா இருக்கியா.?” என இன் முகத்துடன் வரவேற்றார். “நல்லா இருக்கேன் பாட்டி. நீங்க எப்படி இருக்கீங்க? தாத்தா எப்படி இருக்காங்க…?”
“இருக்கோம் ஏதோ.” என்றார் கண்களை எட்டாத புன்னகையுடன்.
தன் காலணியைக் கழட்டி விட்டு உள் நுழைந்த தீபன் சோபாவில் அமர அவனுக்குக் குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த பாட்டியிடம் தண்ணீரை வாங்கி குடித்தவன்.
“எங்க தாத்தாவைக் காணோம்.?” எனக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே வாசலில் அரவம் கேட்கத் திரும்பிப் பார்த்த தீபனை பார்த்தபடியே வந்துகொண்டிருந்தார் ரங்கராஜன் தாத்தா. அவரின் முகத்தில் சோகம் இருந்தாலும் அதையும் மீறிய ஏதோ ஒரு தவிப்பு அவர் மனதை ஆக்கிரமித்து இருப்பதாக நினைத்தான் தீபன்.
“வா, பா, தீபன். நல்லா இருக்கியா.?”
“நல்லா இருக்கேன் தாத்தா. நீங்க எப்படி இருக்கீங்க? எங்க வெளிய போயிட்டு வரீங்களா?”
“இங்க வடபழனி கோயில் போயிட்டு வரேன் பா…” (‘ செய்த பாவத்தைத் தீர்த்துக்கணுமே…’) என மனதில் நினைத்தவர்.
“வீட்டிலேயே அடைந்து இருக்க ஒரு மாதிரி இருக்கு. அதான் வாக்கிங் மாதிரி போயிட்டு வரேன். இவளையும் கூப்பிட்டேன் ஒரு நாள் வரா, ஒரு நாள் முட்டி வலிக்குதுன்னு வராமல் இருக்கிறாள்.” என்று கூற.
அவர் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு மனது வெகுவாகப் பாரமானது.தங்களின் பக்கத்து வீட்டில் அவர்கள் இருக்கும்போது எவ்வளவு இனிமையாகவும் சந்தோஷமாகவும் மகிழ்ந்து இருந்தார்கள் இப்போது ஏதோ வாழ்வை வெறுத்த நிலையாகத் தங்களின் இறுதி காலத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் இரண்டு முதியவர்களைப் பார்க்கும்போது சொல்லொன்னா வலி மனதை அழுத்தியது.
“இந்தா பா, பிரசாதம் எடுத்துக்கோ.” என அவனிடம் கொடுக்க அவனும் வாங்கிக் கொண்டான் பக்தியுடன்.
“தம்பிக்குக் காபி எதுவும் குடுத்தியா.?” என்ன மனைவியைப் பார்த்துக் கேட்ட தாத்தாவைப் பார்த்தவன்.
“இல்ல தாத்தா இப்பதான் நானே வந்தேன். வாங்க வந்து உட்காருங்க.” என அவரின் கைப்பிடித்து தன் அருகில் அமர்த்திக் கொண்டவன்.
“பாட்டி நீங்களும் உட்காருங்க. இப்ப சாப்பிடுற நேரம் எனக்குக் காபி எல்லாம் எதுவும் வேண்டாம். மைதிலி வேற தனியா இருப்பா குழந்தையை வச்சுக்கிட்டு. சீக்கிரம் போகணும்.” என்ற படியே அவரையும் பக்கத்தில் அமர்த்தியவனிடம்,
“ஏதோ பெத்த பிள்ளையாட்டம் மாசம் ஒருவாட்டி வந்து நீயும் எங்கள பாத்துட்டு போற. அதுவே எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்.” என்றார் பாட்டி கண்களை நனைத்த கண்ணீரை சேலை தலைப்பில் துடைத்துக் கொண்டு.
“நானும் உங்க பேரன் தானே பாட்டி. ஏன் இப்படி நினைக்கிறீங்க.” என்றவன்
“சரி, நான் வந்த விஷயத்தைச் சொல்லிடுறேன். வீட்டை அப்படியே மூடி வைக்கிறது நல்லதில்லன்னு நினைக்கிறேன். யாரையாவது வாடகைக்கு வைக்கலாமா.?” என மெதுவாகக் கேட்க.
“ஏம்பா உங்களுக்கும் ரொம்ப தொந்தரவா இருக்கா.?” என்ற அவரின் கேள்விக்குப் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தவனின் மௌனமே அவருக்கான பதிலைக் கூற பெருமூச்சு எடுத்தவராக.
“ஏற்கனவே வாடகைக்கு வந்தவங்க என்ன எல்லாம் சொல்லிட்டு போனாங்க. அதுவே மனச ரொம்ப அழுத்தமா ஆக்கிடுச்சு.” என்றவர் சிறிது யோசனைக்குப் பிறகு,
“சரி, உங்களுக்கும் கஷ்டம் கொடுக்கக் கூடாது யாராவது நல்ல ஆளா இருந்தா நீங்களே பாருங்க. வாடகை எல்லாம் அதிகம் வேண்டாம்.கம்மி வடகையாக இருக்கட்டும் ஆளுங்க வந்து இருந்தா அந்த வீட்ல எந்தத் தொந்தரவும் இல்லன்னு மத்தவங்க புரிஞ்சிப்பாங்க இல்லையா. அதுக்காகவாவது யாரையாவது வாடகைக்கு பார்க்கத் தான் வேணும். பாருங்க… பார்த்து யாரையாவது கூட்டிட்டு வாங்க.” என்றவரின் பதிலில் சற்று நிம்மதி அடைந்தவன். அவரின் வேதனையை அதிக படுத்தாமல், அதற்கு மேல் அமர்ந்திருக்கவும் முடியாமல், மனைவியும் தனியாக இருப்பாளே என்ற நினைவில் எழுந்தவன்.
“சரி தாத்தா நான் யாரையாவது பார்க்கிறேன்.” என்ற படியே விடை பெற்று சென்றான் தீபன். ‘யாரைத் தேடிப் பிடிப்பது’ என்ற சிந்தனையுடன்.
வீட்டிற்கு அவசரமாக வந்தவன் நேரம் எட்டு பத்தை கடந்திருக்க மனதில் சிறு பயத்துடன் மின் தூக்கியில் ஏறியவன் நான்காவது பொத்தனை அழுத்திவிட்டு சற்று படபடப்புடன் நின்றுகொண்டிருந்தான்…
தனக்கான தளம் வந்ததும் மின் துக்கியின் கதவு திறக்க. மனம் படபடக்க. தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்தவனுக்கு நேர்த்திசையில் பார்வையை கொண்டு செல்லவே ஒருவித தயக்கமாக இருந்தது. பயம் என்று கூற முடியாது ஆனால் ஏதோ சொல்ல முடியாத ஒரு உணர்வு.
வேகமாக மின் தூக்கியிலிருந்து வெளிவந்தவன் தன் வீட்டின் முன் நின்று தன்னிடம் உள்ள சாவியை கொண்டு கதவைத் திறக்க. மூடி இருந்த பக்கத்து வீட்டிலிருந்து நாற்காலி இழுபடும் சத்தமும் யாரோ வேகமாக ஓடும் சத்தமும் கேட்க அதைக் கவனத்தில் எடுக்கக் கூடாது என்று மனதில் உறு போட்டுக் கொண்டே தன் வீட்டுக்குள் நுழைந்து வேகமாகக் கதவை அடைத்தவனை கொலை வெறியுடன் முறைத்துக் கொண்டிருந்தாள் மைதிலி அழும் மகளை மடியில் வைத்துத் தட்டிக் கொடுத்துக் கொண்டே.
“சாரிமா கொஞ்சம் லேட் ஆயிடுச்சு.”
“ஏங்க இப்படி பண்றீங்க? ஏழு மணிக்குள்ள வீட்டுக்கு வந்துருங்கன்னு உங்ககிட்ட எவ்வளவு வாட்டிச் சொல்றேன். இவளும் சரியா எட்டு மணி ஆகும்போது தான் அழ ஆரம்பிக்கிறா. இவளைச் சமாளிக்கிறதா? நான் பயப்படுறதா? ஒண்ணுமே புரியல எனக்கு. நான் சொல்றத நீங்கக் காதுலயும் வாங்க மாட்டேங்கறீங்க.” என்று புலம்பியவளின் அருகில் அமர்ந்தவன். மகளைத் தூக்கி மடியில் வைத்து உச்சி முகர்ந்தவாறு சமாதானம் செய்தவன்.
மனைவியையும் ஒரு கையால் அணைத்து கொண்டு.
“கவலைப்படாத. இன்னைக்கு தாத்தா பாட்டிய போய்ப் பார்த்துட்டு வந்தேன். அதான் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. அந்த வீட்டுக்கு யாரையாவது வாடகைக்கு வைக்கிறதுக்கு அவங்க கிட்ட சம்மதம் வாங்கிட்டேன். நீயே நல்ல ஆளா பார்த்து வைன்னு சொல்லிட்டாங்க.” எனக் கூற
“அப்பாடா ஒத்துக்கிட்டாங்களா…?” என்று ஆசுவாசமடைந்தவள்.
“எப்படி இருக்காங்க ரெண்டு பேரும்.?” என்று கேட்டு விட்டு அவன் பதிலை எதிர்பார்க்காமல்,
“டிபன் எடுத்து வைக்கிறேன் வாங்க.’ எனக் கூறியபடி சமையல் அறைக்குச் சென்றவளை பார்த்தவன் பெருமூச்செறிந்து விட்டு. விடாது அழும் மகளைத் தூக்கிக் கொண்டு பால்கனி பக்கம் செல்ல. சொல்லி வைத்தது போல அங்குச் சென்றதும் அழுகையை நிறுத்தி இருந்தாள் ரேஷ்மி. அவனின் செல்ல மகள்.
அதோடு மட்டுமல்லாமல் பக்கத்து வீட்டைக் கைகாட்டி தன் பொக்கை வாய் கொண்டு சிரிக்க, திரும்பிப் பார்க்கத் தோன்றிய எண்ணத்தை அடக்கியபடி சிறிது நேரம் நின்ற தீபன் தன் மகளின் கைகளைப் பிடித்து மேலும் கீழும் ஆட்டியபடி தன் பின்னே யாரோ நிற்பது போன்று உணர்ந்தவனுக்கு அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் பால்கனி கதவைத் திறந்து அறையினுள் வந்தவன் வேகமாகக் கதவை மூடிவிட்டு கர்ட்டன்களையும் இழுத்து விட்டான் முழுவதுமாக. ஏதோ ஒரு சொல்ல முடியாத உணர்வு பயத்தையும் தாண்டி மனதில் பரவியது.
அறையினுள் வந்தவனுக்கு ஏதேதோ எண்ண ஓட்டங்கள்.
‘அண்ணா.’ எனச் சிரிப்புடன் அழைக்கும் குரல் செவிகளை நிறைத்தது. மனைவியின் உலுக்களில் அதிர்ந்தவன் அவளை நிமிர்ந்து பார்க்க,
“என்ன ஆச்சு? அவ்ளோ நேரமா உங்கள கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன். நீங்கப் பாட்டுக்கு ஏதோ கனவு உலகத்தில் மிதந்துகிட்டு இருக்கீங்க. நீங்கதான் கனவுல இருக்கீங்கன்னு பார்த்தா உங்க மகளும் வாய்க்கொள்ளா சிரிப்போடு சிரிச்சுக்கிட்டு இருக்கா.” என்றவள் மகளின் இரு கைகளையும் ஒற்றை கையால் பிடித்துக் கொண்டு ஒரு விரலை அவள் முகத்தின் முன் நீட்டி,
“ஏய் ரவுடி, எங்கிட்ட இருக்கும்போது மட்டும் அழுது கிட்டு இருக்கே.” என மகளைப் பார்த்துக் கேட்டவள் அவளின் பொக்கை வாய் சிரிப்பில் மயங்கி,
“அப்படியே மயக்கிடு மாயக்காரி. வா மம்மம் சாப்பிடலாம்.” எனக் கூறியபடியே அவளை இடுப்பில் இடுக்கி கொண்டு வெளியேற. அவளின் பின் சென்று டைனிங் டேபிள் அமர்ந்தவனுக்கு சூடான சொதி யுடன் இடியாப்பத்தை பரிமாறி மகளுக்கும் ஊட்ட ஆரம்பித்தவள் தானும் இடையிடையே உண்டு கொண்டாள்.
பார்த்திபன் வீட்டிற்குள் நுழையும்போது அடுப்படியில் ஏதோ உருட்டிக்கொண்டிருந்தான் சேகர்.
இவனின் அரவம் கேட்டு வெளியில் வந்தவன் “வாடா இப்பதான் வரியா? ஏதாவது வீடு அமைஞ்சுதா.?”
என்று கேட்டவனிடம் “இல்லை” என்பதாகத் தலையாட்டி விட்டு உள்நுழைய.
“மௌனச்சாமி. ஒன்னும் பேசமாட்டான். இவன் செய்ற ஆக்சன்ல இருந்தே நம்ம புரிஞ்சுக்கணும். என்ன சொல்ல வரான்னு. நல்லா இருக்குடா என் பொழப்பு.” எனப் புலம்பிக்கொண்டே விட்ட வேலைகளைத் தொடர சென்றான் அடுப்படிக்குள்.
குளியலறை சென்று குளித்து வந்த பார்த்திபன் தன் பையிலிருந்து எடுத்த அந்த வாரக் குமுதம் புத்தகத்தை எடுத்துக்கொண்டு நண்பனைத் தேடிச் சென்றவன் அதை அவன் முகத்தின் முன் நீட்ட.
“என்னது டா.?” என்று கேட்டவனிடம் “ஒரு பக்க கதை பிரசுரம் ஆகி இருக்கு.” என்றவன் அவன் கைகளில் புத்தகத்தைக் கொடுத்து விட்டு நகர்ந்து சென்றான்.
“ஹேய் சூப்பர்.!” என்று குதுகலித்த சேகர். செய்து கொண்டிருந்த வேலைகளை அப்படியே போட்டுவிட்டு புத்தகத்தோடு ஐக்கியம் ஆனவன். கதையைப் படித்து விட்டு.
“ப்ப்பா எப்படிடா ஒரு பக்க கதையிலேயே அப்படியே மனச பிழிஞ்சு எடுக்கிற…?” என்று கேட்டவனிடம் புன்னகையையே பதிலாகக் கொடுத்தவன் மனதிலும் சொல்ல முடியாத வலி. தன் வலியை மறைத்தவாறு,
“நீ ஏதாவது வீடு போய்ப் பார்த்தியா இன்னைக்கு…?” எனக் கேட்டவனிடம்.
“ம்ம் பார்த்தேன்.ஆனா எதுவுமே செட் ஆகல. வீடு நல்லா இருக்குன்னு போய்க் கேட்டா வாடகை அதிகமா சொல்றாங்க. சரி வாடகை கம்மியா இருக்கே பார்க்கலாம்னு போனா பேச்சுலர்க்கு வீடு இல்லன்னு சொல்றாங்க.எங்க போனாலும் இதையே சொல்லிக் கொலையா கொல்றாங்க.”எனச் சலித்தவனுக்கு.
“நல்ல வீடாவே கிடைக்கும். தேடுவோம்…” என்றான் லேசாகப் புன்னகைத்த படி.
கிடைக்குமா இவர்களுக்கு நல்ல வீடு…