அன்றைய பொழுது மோனி ஜாய் வீட்டிலேயே கழிந்திட, மோனியின் பேச்சு எங்கு சுற்றினாலும் ரகுவீரிடமே வந்து நின்றது.
பிரஷாந்திற்கும் ரகுவைப் பற்றித் தெரிந்து கொள்ள நிறைய இருந்ததில், அவன் ஆர்வத்துடன் கேட்டான்.
“ரகுவுக்கும் ஆர்மில சேருறது தான் இஷ்டமோ?” இந்த ஒற்றைக் கேள்வி போதுமே மோனிக்கு.
“ரொம்ப… அவனோட அப்பா ராஜ்வீர் ஆர்மில இருந்து வீர மரணம் அடைஞ்சவரு தான். என் பெஸ்ட் ப்ரெண்ட் ராஜ். ராஜோட மனைவியும் அவன் இறந்த கொஞ்ச நாள்ல உடல்நிலை சரி இல்லாம இறந்துட்டாங்க. ரகுவை நான் எப்பவும் என் பையனா தான் பார்த்தேன். அவனுக்கும் நான் அப்படி தான்… அன்பானவன். அவனுக்கும் அவன் அப்பா மாதிரி ஆர்மில வேலை பார்க்கணும்ன்றது பெரிய கனவு. அதுக்காக ரெகமெண்டேஷன் எல்லாம் இல்லாம, எக்ஸாம் எழுதி தகுதியை வளர்த்துக்கிட்டு தான் அவன் உள்ள வந்தான். வந்ததும் அடுத்த அடுத்த உயர்வுக்கு போக ஆரம்பிச்சான். எந்த ஒரு டெரரிஸ்ட் ஆபரேஷனையும் ரொம்ப நேர்த்தியான முறையில, திட்டம் போட்டு பண்ணுவான். அவன் சாகும் போது கூட, ஒரு பாம் பிளாஸ்ட்டை தடுக்க நினைச்சான். பாமை டிபியூஸ் பண்ணியும், எதிரி நாட்டுக்காரனோட புல்லட் அவன் உயிரை குடிச்சுடுச்சு… ஆனா, அவன் செத்தும் எல்லார் மனசுலயும் ஒரு முன்னோடியா தான் இருக்கான்…” என்று இன்னும் பல விதத்தில் ரகுவின் பெருமையைக் கடை பரப்பினார்.
அவையெல்லாம் பெருமை என்பதை விட, ரகு நாட்டின் மீது கொண்ட பெரும் பற்றையும், அவனது கடின உழைப்பையும் பிரஷாந்தால் புரிந்து கொள்ள முடிந்தது.
“உண்மையாவே க்ரேட் அங்கிள்…” என்று வியந்தவனுக்கு, மறுநாள் ரகுவுடன் வேலை செய்த மற்ற நண்பர்கள் அவனது கல்லறையில் கூடி, அவன் பணியில் இருந்த போது செய்த வீர தீர செயல்களை பற்றியெல்லாம் சொல்லும் போது அவனை பிடித்து கூட விட்டது.
ஆள் பார்க்கவும் அத்தனை வாட்ட சாட்டமாக இருக்கிறானே! ஆனால் மைதிலி? அவள் ஏன் இப்படி எதிலும் ஒட்டாமல் தனித்து இருக்கிறாள்… என்று எண்ணியபடி தூரத்தில் எங்கோ வெறித்தவாறு நின்றுகொண்டிருந்த மைதிலியைப் பார்த்தான்.
அங்கு ஒவ்வொருவரும் ரகுவைப் பற்றி பேசி சிலாகித்து விட்டு, இறுதியாக மைதிலியையும் பேச அழைத்தனர்.
அதில் பிரஷாந்த் அவள் அருகில் சென்று, “மைதிலி… உன்னைக் கூப்புடுறாங்க. வா!” என்றிட,
“எதுக்கு?” என்றாள் புருவம் சுருக்கி.
“ரகுவைப் பத்தி பேச…”
“என்ன பேசணும்?”
“என்ன மைதிலி?” பிரஷாந்த் ஆதங்கமாக கேட்டான்.
“மத்தவங்களை விடவா எனக்கு நிறைய தெரிஞ்சுடப் போகுது. ஹீ இஸ் அ ஜெம். மை பிலவ்ட் ஹஸ்பண்ட். இதைத் தவிர வேற என்ன சொல்ல? சொல்றதுக்கு எதுவும் இல்ல பிரஷாந்த். வேணும்னா நீங்க கேட்ட கதைகளை எல்லாம் தொகுத்து நீங்களே ஒரு ஸ்பீச் பண்ணிட்டு வாங்க” என்றவள் குரலில் ஏளனம் தெறித்தது.
“கதையா? அப்போ அதெல்லாம் உண்மை இல்லையா?” பிரஷாந்த் லேசாய் திகைக்க, “காட்… உண்மை இல்லைனு நான் எப்போ சொன்னேன். மத்தவங்க ரகுவைப் பத்தி சொன்ன எல்லாமே உண்மை தான். ரொம்ப நேர்மையான, டேலண்ட்ட் ஆர்மி ஆபிசர். இப்ப என்ன அதுக்கு? நான் என்ன பண்ணனும் இப்போ?” என்றவளின் குரலில் இப்போது சிறு எரிச்சல்.
அவளை அமைதியாய் ஏறிட்ட பிரஷாந்த், “ரகு ஆர்மில இருந்தது உனக்குப் பிடிக்கலையா மைதிலி” என்றான்.
சிவந்த விழிகளை நிமிர்த்தி பார்த்தவள், அதற்கு பதில் கூறாமல் இறுகினாள்.
அந்நேரம் “மைதிலி!” என்ற அழைப்புடன் அவர்களை நெருங்கினான் ஒரு ஆடவன். சஞ்சீவ், ரகுவின் ஆருயிர் தோழன். அவனைக் கண்டதும் மைதிலியின் முகத்தில் சிறு மலர்வு.
“ஹாய் அண்ணா. எப்படி இருக்கீங்க” என வந்தவனை அன்புடன் அழைக்க,
“நல்லா இருக்கேன்மா நீ எப்படி இருக்க… குட்டி எங்க இருக்காங்க” என்று தேடியவன், சற்று தூரத்தில் மகிழினி மோனியிடம் இருப்பதை பார்த்து விட்டு,
பிரஷாந்தை நோக்கி “இவரு?” என யோசனையுடன் கேட்டான்.
பிரஷாந்த் அவனாகவே “மைதிலியைக் கல்யாணம் பண்ணுன பாவப்பட்ட ஜீவன். பிரஷாந்த். நீங்க?” என்றான் அவனை அறிமுகம் செய்து கொண்டு.
“வாவ்! நிஜமாவா சொல்றீங்க. எனக்கு ரொம்ப ஹேப்பி. நான் ரகுவோட ப்ரெண்ட்ஜி. எப்ப மைதிலி கல்யாணம் ஆச்சு. என்கிட்ட சொல்லவே இல்ல பாத்தியா” என்று பிரஷாந்திடம் பேசியபடி மைதிலியிடமும் குறைப்பட்டவனின் முகத்தில் உண்மையான மகிழ்வைக் குறித்துக் கொண்டான் பிரஷாந்த்.
“எனக்கே சொல்லல” மைதிலி முணுமுணுக்க அதனைக் கண்டு கொண்ட சஞ்சீவ் இருவரையும் குழப்பமாகப் பார்த்தான்.
பிரஷாந்த் தான், “ஒன் சைட் லவ்ல சிக்கி, கை கால்ல விழுகாத குறையா கல்யாணம் பண்ணிக்கிறேன்ஜி” என்றதும்,
“பார்றா, நிறைய கலவரம் நடந்துருக்கும் போலயேஜி… ஒன் சைட் டூ சைட் ஆகிடுச்சா?” எனக் கேட்டான் குறும்பாக.
இயல்பான அவனது பேச்சு பிரஷாந்தைக் கவர, “கூடிய சீக்கிரம் ஆகிடும்ஜி…” என்றான் மைதிலியை சிரிப்புடன் பார்த்தபடி.
அதற்கு மைதிலி அவனை முறைக்க, சஞ்சீவ் அடக்கப்பட்ட சிரிப்புடன், “வர்ற ஃபயர் பார்வையை பார்த்தா அப்படி எதுவும் அறிகுறி தெரியலையே ஜி.” என்றான்.
“அதெல்லாம் வெளிப்பார்வைக்கு ஜி. உள்ளுக்குள்ள என் மேல ஒரு வாளி லவ் தூங்கிட்டு இருக்கு. அது என் கண்ணுக்கு மட்டும் தான் தெரியும்” என்றதும் சஞ்சீவ் நன்றாக சிரித்து விட்டான்.
“எப்படியோ உங்க கண்ணுக்காவது தெரியட்டும் என் தங்கச்சியோட லவ்” என்றவனின் வார்த்தைகளில் ஒரு வித வலி தொக்கி நிற்க, பிரஷாந்த் அவனை ஆராய்ச்சியாய் பார்த்தான்.
மைதிலி ஒன்றும் சொல்லாமல் அமைதி காக்க, சஞ்சீவ் தன்னை சமன்படுத்தி விட்டு, “நீங்க இருப்பீங்கள்ல?” என்று இருவரையும் பார்த்து கேட்க,
மைதிலி “இல்லண்ணா, ஈவினிங் பிளைட்ல கிளம்புறோம்” என்றதும், “நோ வே… நீங்க நாளைக்கு என் வீட்டுக்கு விருந்துக்கு வர்றீங்க” என்றான் கட்டளையாக.
“எதுக்குண்ணா விருந்துலாம். நெக்ஸ்ட் டைம் பார்த்துக்கலாமே” மைதிலி சங்கடத்துடன் மறுக்க,
“புதுசா கல்யாணம் ஆன ஜோடிங்களுக்கு விருந்து கொடுக்குறது எங்க முறை மைதிலி. மாப்பிள்ளைஜி நாளைக்கு என் தங்கச்சியை கண்டிப்பா கூட்டிட்டு வர்றீங்க. உங்க நம்பர் குடுங்க” என்றதும் பிரஷாந்த் மைதிலியைப் பார்த்தான்.
“எனக்கு வர்றதுல ஒன்னும் இல்லஜி. பட் அவளுக்கு ஆக்வார்டா இருந்தா நாங்க வரல. சாரி…” என்று அவளது மனநிலை உணர்ந்து கூற, சஞ்சீவ் மைதிலியைப் பார்த்தான். அதில் சிறு கெஞ்சலும் தெரிய, அவனை வருத்தப்படவைக்க மனமில்லாமல், “ஓகே அண்ணா” என்றாள்.
அதில் அகமகிழ்ந்தவன், மோனியிடம் இருந்த மகிழினியையும் தூக்கிக் கொஞ்சி, அவனை அறிமுகப்படுத்திக் கொண்டான். அன்றும், மோனியின் வீட்டிலேயே அவர்கள் தங்கி விட்டனர்.
இரவு 9 மணி அளவிலேயே மோனியும் ஷோமாவும் உறங்கச் சென்று விட, மைதிலி அங்கிருந்த சிறு மலர் தோட்டத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டாள்.
காலையில் இருந்து ஏற்பட்ட அலைச்சலில் மகிழினிக்கும் உறக்கம் கண்ணைச் சுழற்ற, பிரஷாந்தின் நெஞ்சின் மீது சாய்ந்து உறங்கிப் போனாள். அவளை மெத்தையில் படுக்க வைத்த பிரஷாந்த் மைதிலியைத் தேடிப் போனான்.
“நீ சாப்பிட்ட ரெண்டு சப்பாத்திக்கு இவ்ளோ நேரம் நடந்தா பெருங்குடல் சிறுகுடலை சாப்பிட்டுடும் மைலி” எப்போதும் போல கிண்டலுடன் அவளை நெருங்க, முறைப்புடன் நிறுத்திக் கொண்டவள், மீண்டும் நடந்தாள்.
அவளுடன் பேண்ட் பாக்கெட்டினுள் கரத்தை நுழைத்து அவனும் நடந்தபடி, “நீயும் ரகுவும் லவ் மேரேஜா மைலி?” எனக் கேட்டான்.
அதில் அவளது நடைப்பயணம் நின்று விட, “அது தெரிஞ்சு என்ன செய்யப் போறீங்க? இந்த கல்யாணத்தை கேன்சல் பண்ணிடுவீங்களா?” என்றாள் சுருக்கென.
“நோ வே. அதுக்குலாம் சான்ஸே இல்ல. இந்த ஜென்மத்துல உனக்கு நான் தான் எனக்கு நீ தான்” என்றான் தோளைக் குலுக்கி.
மேலும், “எனக்கு ரகுவைப் பார்க்கும் போது சிண்ட்ரெல்லா கதை தான் ஞாபகம் வருது மைதிலி. ஒரு பிரின்ஸ் மாதிரி இருந்துருக்கான். அதான் ஒருவேளை லவ்வா இருக்குமோன்னு” என்று அவன் இழுக்க,
அதில் இறுகிய தேகத்துடன் அவளிடம் நீண்ட மௌனம்.
“எல்லா கேள்விகளுக்கும் மௌனம் பதிலா ஆகாது மைதிலி…” பிரஷாந்த் நிதானமாக அவளைப் பார்க்க,
“அதே மாதிரி விவாதங்களும் முடிவைக் கொடுக்காது பிரஷாந்த்!” என்றாள் அழுத்தத்துடன்.
அவளையே பார்வையால் ஊடுருவியவன், “உங்கிட்ட சம்திங் ஒரு ரகசியம் இருக்கு மைலி. நான் அதைத் தெரிஞ்சுக்கலாமா?” எனப் புருவம் இடுங் கினான்.
அவள் அதே மௌனத்தைத் தொடர, “உனக்கு ரகுவைப் பிடிக்காதா?” என அவளிடம் எதிர்வினை பெறுவதற்காக துருவினான்.
அதில் விழுக்கென நிமிர்ந்தவள், “பிடிக்கும். ரொம்ப பிடிக்கும். ஐ லவ்ட் ஹிம்…” என்னும் போதே அவள் விழிகளில் சிறு துளி நீர் கலங்கி நின்றது.
அது அவனுக்கு வலியைக் கொடுத்தாலும், மனதை திடப்படுத்திக்கொண்டவன், “அப்பறம் ஏன் அவரோட ரிமெம்பரன்ஸ்ல வேண்டா வெறுப்பா கலந்துக்கிட்ட மைதிலி. இழப்பை தாங்க முடியாது தான். ஆனா, அதைத் தாண்டி ஏதோ ஒன்னு இருக்கு” என்றான்.
“வேண்டா வெறுப்பா கலந்துக்கல பிரஷாந்த். ப்ச்…” எனத் தலையைப் பிடித்தவள், அழுத்தம் தாளாமல் அப்டியே அமர்ந்து விட்டாள்.
“மைலி…” என அவளைப் பிடிக்க வந்தவனிடம் நிமிர்ந்து கோப விழிகளால் சாடினாள்.
“எனக்கு தெரியல எப்படி நடந்துக்கணும், என்ன செய்யணும், எப்படி தான் இந்த இழப்பை ஏத்துக்கணும்னு எனக்கு தெரியல. மே பி அங்கிள் சொன்ன மாதிரி எனக்கு மெச்சூரிட்டி இல்லையோ என்னவோ. அதான், நாட்டுக்காக உயிரைக் கொடுத்தவர என்னால புகழ முடியலை. மகிக்கிட்ட கூட இன்னும் நான் சொல்லல… ரகு பேரைக் கூட… பட் ஐ லவ்ட் ஹிம்” என்றவளின் முகத்தில் கலவையான உணர்வுகள்.
பிரஷாந்த் குழப்பத்தின் உச்சியில் இருந்தான். அது அவனது வதனத்திலும் பிரதிபலிக்க, “வியர்டா இருக்குல்ல. இப்படி தான் எல்லாருமே என்னை வியர்டா பாக்குறாங்க. என்னால யாருக்குமே நிம்மதி இருந்தது இல்ல பிரஷாந்த்.
என் அம்மாவுக்கு, என் அண்ணனுக்கு, பூபாலன் மாமா குடும்பத்துக்கு, மிருவுக்கு, மல்லி அம்மா குடும்பத்துக்கு, கடைசியா ரகுவுக்கும்… இங்க யாரையும் நான் சரியா புரிஞ்சுக்கல” தேய்ந்த வார்த்தைகளதில் ஆயிரம் வலிகள்.
“நீ யாரையும் புருஞ்சுக்கலன்றதை விட, நீ சொன்ன யாரும் உன்னை புருஞ்சுக்கலைன்னு தான் எனக்குத் தோணுது மைதிலி!” என ஆழ்ந்த குரலில் கூறியவனைத் திகைத்துப் பார்த்தாள்.
சில நிமிட அமைதிக்குப் பிறகு, “என் வீட்ல எனக்கு பாதுகாப்புக்காக கல்கத்தால இருந்த மல்லிம்மா வீட்டுக்கு அனுப்பி விட்டாங்க. சதாசிவம் சித்தப்பா, அவங்க பையன் ரவி அண்ணா, ரியா அண்ணி, அவங்க குட்டி பையன் அசோக் எல்லாரும் என்மேல பாசமா தான் இருப்பாங்க. என்னை படிக்க வச்சாங்க. நல்லா பாத்துப்பாங்க. என் சித்தப்பா ஒரு சில விஷயத்துல அவங்க குடும்பப் பொண்ணா என்னை ஏத்துக்கிட்டது இல்ல. அவங்களை தப்புலாம் சொல்ல மாட்டேன். என் சித்தப்பா போலீஸ் ஆபிசர் தான். சோ நாங்க போலீஸ் குவார்ட்டர்ஸ்ல தான் இருந்தோம். அங்க எனக்கு பாதுகாப்புக்குலாம் குறை இல்லை. ஆனா என்ன தான் பாத்துக்கிட்டாலும், எனக்கு எப்பவுமே என் குடும்பம்ன்ற ஒரு பீல் வராது. அப்போ நான் பி. ஏ.பி.எல் நாலாவது வருஷம் படிச்சுட்டு இருந்தேன். என் சித்தப்பாவுக்கு எனக்கு கல்யாணம் பண்ணிட்டா ஒரு கடமை முடியும்ன்ற எண்ணம் இருந்துச்சு. அதுலயும் எனக்கு ஒன்னும் தப்பு தெரியல…”
என்றவளின் எண்ணங்களோ சில வருடங்களுக்கு முன்னால் பயணித்தது.
ஈஸி சேரில் அமர்ந்திருந்த சதாசிவம், மைதிலிக்கு மாப்பிள்ளைப் பார்க்க போவதாகக் கூறியதும் மல்லிகா அதிர்ந்தார்.
“என்னங்க இது. அவள் சின்னப்பொண்ணு இன்னும் படிப்பைக் கூட முடிக்கல” என்றிட,
“பொம்பளைப்பிள்ளையை வீட்ல வச்சுட்டு வயித்துல நெருப்பைக் கட்டிட்டு இருக்க முடியல மல்லி. நாளைக்கு அவளுக்கு ஒரு பிரச்சனைன்னா, அவள் ஊர்க்காரங்க நம்மளை தான கேட்பாங்க. இவ்ளோ நாள் பார்த்துக்கிட்ட எனக்கு தெரியாதா அவளுக்கு எதை எப்ப நடத்தணும்னு” என்று அதட்டினார்.
“அப்படி சொல்லலைங்க” என்று மல்லிகா தயங்கும் போதே, துள்ளல் நடையுடன் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்தாள் மைதிலி. அவர்கள் பேசியது அனைத்தும் காதில் விழத் தான் செய்தது.
“அம்மா… சித்தப்பா எது செஞ்சாலும் என் நல்லதுக்காக தான் இருக்கும். இப்ப எனக்கு கல்யாணம் பண்றது சரின்னு தோணுனா மாப்பிள்ளை பார்க்கட்டும். எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல” என்று தீர்மானமாகக் கூறி விட்டதில் மல்லிகா வாயடைத்து நின்றார்.
சதாசிவம் சற்று ஆசுவாசமாகி, “உனக்கு எப்படி பட்ட மாப்பிள்ளை வேணும்னு சொல்லுமா. நான் தரகர்கிட்ட சொல்லி வைக்கிறேன்” என்றவருக்கு உள்ளுக்குள் சிறு பெருமை. ஆனாலும் அவளிடம் வெளிக்காட்டிக் கொள்ளாமல் எப்போதும் போல விறைப்பாக இருந்து கொண்டார்.
“நீங்க உங்களுக்குப் பிடிச்ச மாதிரி பாருங்க சித்தப்பா. எனக்கு பெருசா எந்த எதிர்பார்ப்பும் இல்லை. என்னை உங்களை மாதிரி நல்லா பார்த்துக்குறவங்களா இருந்தா போதும். என் கூடவே இருக்கணும் அவ்ளோ தான். அப்பறம் இந்த போலீஸ் வேலைல இருக்குறவங்கலாம் வேணாம் சித்தப்பா. கல்கத்தாலேயே ஏதோ ஒரு டீசண்ட்டான வேலைல இருந்தா போதும்” என்று விட்டு அடுக்களைக்கு சென்றவள், அங்கு காபி தயாரித்துக் கொண்டிருந்த ரியாவிடம், “அண்ணி எனக்கு சூடா ஒரு காபி” என்று கேட்டபடி அடுப்பு திண்டில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
ரியா அவளை முறைத்து, “ஏண்டி படிச்சு முடிக்கிற வரை கல்யாணம் வேணாம்னு சொல்லுவன்னு பார்த்தா, தலையாட்டிட்டு வந்து நிக்கிற. மாமா தான் புரியாம பண்றாருன்னா நீ அவருக்கு மேல இருக்க. நீ வக்கீல் ஆகலாம் வேணாமா. மாப்பிள்ளை வீட்ல உன்னைப் படிக்க வேணாம்னு சொன்னா என்னடி செய்வ?” என்று திட்டியவளுக்கோ அவளது படிப்பை எண்ணி கவலை.
“அட நீங்க ஏன் அண்ணி இவ்ளோ டீப்பா யோசிக்கிறீங்க. இந்த காலத்துல படிக்க வேணாம்னுலாம் சொல்லுவாங்களா. அதுவும் போக, எனக்கே கல்யாணம் பண்ணிக்க ஆசை தான்…” என்றாள் அசடு வழிந்து.
“அடிப்பாவி” ரியா வாயில் கை வைக்க,
மைதிலியோ கனவு உலகத்தில் பறந்து கொண்டிருந்தாள்.
“இந்த சிண்ட்ரெல்லா கதை எல்லாம் கேட்டு இருக்கீங்களா அண்ணி. ஒரு ராஜகுமாரன் ஒரு பொண்ணை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டு, அவளை கேர் பண்றதுலாம் செம்ம பீல்ல. அந்த மாதிரி ஒரு பிரின்ஸ் என் லைப்ல வந்தா எப்படி இருக்கும்… எனக்கே எனக்கா ஒருத்தன். அவனை நான் அவ்ளோ லவ் பண்ணுவேன். அவனும் என்னை லவ் பண்ணுவான். எங்களுக்குன்னு ஒரு குடும்பம். சோ அமேஸிங்ல” என்றாள் பரவசமாக.
“உனக்குள்ள இப்படி ஒரு ரொமான்டிக் பெர்சன் இருக்காங்கன்னு எனக்கு தெரியவே இல்லையே மைதிலி” ரியா அவளைக் கிண்டல் செய்ததில், “ச்சு போங்க அண்ணி. எனக்காக ஒரு ப்ரின்ஸ் வரணும்னு உங்க முருகன்கிட்ட ஒரு அப்ளிகேஷன் போட்டு வைங்க” என்று வெட்கம் மின்ன சொல்லி விட்டுச் சென்றாள்.
அதன் பிறகு, நாட்கள் மாதங்களாக வருடமும் கடந்தது. மைதிலியும் படிப்பை முடிக்க ஐந்து மாதங்களே இருந்தது. அதுவரையிலும் அவளுக்கு எந்த வரனும் அமையவில்லை. வருபவர்களெல்லாம் அவளது குடும்பப் பின்னணியைக் கேட்டு ஓடி விடுவார்கள். அதில் சதாசிவம் வெகுவாய் சோர்ந்து போனார். மைதிலியும் கூடத்தான்.
திருமணத்திற்கு அவசரம் காட்டாத மல்லிகாவிற்கே மைதிலியின் வருங்காலத்தை எண்ணி பயம் எழுந்தது. அதில் கணவனை அவசரப்படுத்திக் கொண்டே இருந்தார். இதற்கிடையில், 40 நாட்களுக்கு கோவிலில் தினமும் விளக்கு வைத்தால், மனத்திற்குப் பிடித்த மணவாளன் கிடைப்பான் என தோழி ஒருவள் கூறியதில், அதையும் மைதிலி தவறாமல் கடைபிடித்தாள்.
சரியாக 39 நாட்கள் முடிந்திருந்த நிலையில் கோவிலில் இருந்து வந்த மைதிலியை அழைத்தார் சதாசிவம்.
“உனக்கு ஒரு வரன் வந்துருக்குமா. நல்ல பையன். எந்த கெட்ட பழக்கமும் இல்ல. அரசாங்க வேலை. பார்க்கவும் பையன் நல்லா இருக்கான். உன்னைப் பத்தி எல்லாமே சொல்லிட்டேன். அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லன்னு சொல்லிட்டான். நாளைக்கு உன்னைப் பார்க்க வரேன்னு சொல்லிருக்கான். இதுல பையனோட போட்டோ இருக்கு. பாரு. என்ன ஒன்னு உன்னை விட வயசு தான் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு. பையனுக்கு 31 ஆகுதாம். உனக்கு 21 தான். அப்பா, அம்மாவும் இல்லை. பேசிப்பார்க்கலாம்…” என்று கூறி விட்டு ஒரு கவரைக்கொடுக்க,
“ஓகே சித்தப்பா” என்றவள், அதனை வாங்கி கொண்டு அறைக்கு ஓடி விட்டாள்.
“துர்கையம்மா, நாளையோட நாப்பது நாள் விளக்கேத்தி முடிக்கப் போறேன். என் பிரின்ஸ் இவர்தான்னா எனக்குப் பிடிக்க வைம்மா. ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…” என்று அவசர மனு ஒன்றை போட்டவள் கவரைப் பிரிக்க, அதில் பின்பக்கம் தான் தெரிந்தது.
“ரகுவீர்” என்ற பெயர் அதில் எழுதி இருக்க, “ரகு” என சொல்லிப் பார்த்துக்கொண்டது அவளது சிவந்த இதழ்கள்.
போட்டோவைத் திருப்பிப் பார்த்தவள் ஒரு கணம் கண்ணை அங்கும் இங்கும் அசைக்கவே இல்லை.
கறுப்பு நிற சட்டையில், அவனது சிவந்த நிறம் மேலும் எடுப்பாய் தெரிய, ஆணழகனாய் இருந்தான் ரகுவீர்.
‘ஹிந்தி ஹீரோ மாதிரி இருக்கானே. இவனையா சித்தப்பா எனக்குப் பார்த்து இருக்காரு. ஆளை பார்த்தா 25 மாதிரி இருக்கான். இவன் என் போட்டோவை பார்த்தானா முதல்ல. இவன் முன்னாடி நின்னா நான் கலர் கம்மியா இருப்பேனே. ஐயோ! இது என்னடா எனக்கு வந்த சோதனை. நாளைக்கு ஒரு கோட்டிங் எக்ஸ்ட்ரா போட்டுட வேண்டியது தான்’ என்று முடிவெடுத்துக்கொண்டவள் மேலும் சில நிமிடங்கள் அவனது முகத்தை ரசித்தாள்.
மாலை தாண்டி தான் ரகு வீட்டிற்கு வருவதாக சொல்லி இருந்ததால், மைதிலி சீக்கிரமே கோவிலுக்குச் சென்று விட்டு வருவதாகக் கூறி விட்டு, பச்சை வண்ண பாவாடை தாவணியில் தன்னை அலங்கரித்துக்கொண்டு கோவிலுக்குச் சென்றாள்.
விளக்கேற்றி முடித்தவள், துர்கை அம்மனின் முன் கைகூப்பி நின்றாள்.
இங்கோ ராயல் என்பீல்டு வண்டியில் கோவிலை நோக்கிப் பறந்தான் ரகுவீர்.
பின்னால் அமர்ந்திருந்த சஞ்சீவ் தான், “டேய் ராசா கொஞ்சம் மெதுவா போடா” என்று மிரள,
ரகுவோ “நான் வேகமா போகலைடா. அந்தப் பொண்ணு எனக்கு நோ சொல்லிடுமோன்ற பதட்டத்துல கை தானா வேகமா போகுது” என்றான்.
“உன்னைப் போய் வேணாம்னு சொல்லுமாடா. எல்லாம் நல்லபடியா நடக்கும். நீ பேச வேண்டியதை எல்லாம் பேசிடு” என்னும் போதே கோவிலை அடைந்தனர்.
சஞ்சீவ், “சரி சரி நீ சிஸ்டரைப் பாரு. நான் கோவில்ல உனக்கு சிஸ்டர் கிடைக்குமான்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்கேன்” என்று சிரித்து வைக்க, அவனை முறைத்த ரகு, “மூடிட்டு நில்லு. ஈவ் டீசிங்ல உள்ள போய்டுவ” என்று எச்சரித்து விட்டு கோவிலினுள் நுழைந்தான்.
‘இங்க தான வந்துருக்குறதா சதாசிவம் அங்கிள் சொன்னாரு…’ என்று முணுமுணுத்தபடி அழுத்த விழிகளை அலைபாய விட்டான் ரகுவீர்.
அலைபாய்ந்த கண்களுக்கு விருந்தாய் கண் மூடி நின்ற மைதிலியின் ஒரு பக்க உருவம் தெரிய, ‘போட்டோல பார்த்தது இந்த பொண்ணு தானா?’ என்ற சந்தேகத்துடன் அவள் மீதிருந்த கண்ணை அகற்றாமல் அவளுக்கு முன்னால் சென்று நின்றான்.
முழு முகத்தையும் கண்ணில் நிரப்பிய நேரம் அவன் இதயத்தில் மெல்லிய அதிர்வு. பிரம்மன் செய்த சிலைக்கு எல்லாம் யாருடா உயிர் கொடுத்தது என்ற மனசாட்சியின் கூவலை அடக்க இயலாமல் அவளை அப்பட்டமாக சைட் அடித்துக் கொண்டிருந்தான் ரகு.
மைதிலியோ கண்ணை மூடி எதையோ முணுமுணுத்தபடி இருக்க, ‘என்ன இவ்ளோ சீரியஸா வேண்டிட்டு இருக்கா?’ என்று காதை தீட்டிக் கூர்மையாக்கியவனுக்கு, அவளது வேண்டுதல் மெதுவாக கேட்டது.
“துர்கையம்மா ரகுவுக்கு என்னைப் பிடிச்சு இருக்கணும். அவர் கண்ணுக்கு நான் அழகு தேவதையா தெரியணும். எனக்கும் அவருக்கும் எல்லாப் பொருத்தமும் பொருந்திப் போகணும். என் பிரின்சா அவர் இருக்கணும். ப்ளீஸ் ப்ளீஸ்… இன்னைக்கு முழுக்க முழுக்க உன்னை நம்பி தான் இருக்கேன்…” என்றவளுக்கு பதற்றத்தில் நெற்றியில் இருந்து வியர்வைத் துளிகள் கன்னத்தில் வழிந்தது.
ரகுவீர் அவளது வேண்டுதலைக் கேட்டு திண்டாடினான். மகிழ்வில் உள்ளம் ஆர்ப்பரிக்க, “க்கும்” என்று தொண்டையை செருமினான்.
‘எவன் அவன் இங்க வந்து டிஸ்டர்ப் பண்றது’ என்ற எரிச்சலுடன் கண்ணைத் திறந்தவள் எதிரில் அழகிய சிரிப்புடன் ஸ்டைலாக நின்ற ரகுவீரைக் கண்டு திணறிப் போனாள்.
‘இவர் எப்படி இங்க?’ என்ற அதிர்வு மாறாமல் திருதிருவென விழித்தவளைக் கண்டு அவனது சிரிப்பு பெரிதாகியது.
“ஹாய் மைதிலி. ஐ ஆம் ரகு” என இளமைத் ததும்ப தன்னை அறிமுகம் செய்ய, “ஹ ஹா ஹாய்…” என்று திக்கி திணறினாள் மைதிலி.
“என்ன மைதிலி… வக்கீலுக்குப் படிக்கிறன்னு சொன்னாங்க. இப்படி திணறுற. அப்பறம் எப்படி வாதாடுறதாம்?” புருவம் உயர்த்தி கேலி போல கேட்டதில், அவளுக்கு அடிவயிற்றில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் ஒன்றாகப் பறந்தது.
“அதெல்லாம் அங்க வாதாடுவேன். இப்ப திடீர்னு நீங்க வந்து நிக்கவும்… என்ன பேசுறதுன்னு…” என்று பதற்றம் கொண்டவள், வியர்வையை முந்தானையால் துடைத்தபடி கையைப் பிசைந்தாள்.
“ரிலாக்ஸ் மைதிலி. உன்னைத் தனியா பார்த்து சைட் அடிக்க, ச்சே சாரி பேச தான் கோவிலுக்கு வந்தேன். வீட்லன்னா ரொம்ப பார்மலா இருக்கும்…” என்றதில் கன்னங்கள் ரோஜாவாய் சிவந்தது.
கூடவே , “சைட் அடிக்கவா?” எனத் திகைத்தவளிடம், “எஸ். நீ அம்மன்கிட்ட வேண்டுனது பலிச்சுடுச்சு பாரேன்” மீண்டுமொரு கன்னக்குழி சிரிப்பு அவனிடம்.
“என்… என்ன என்ன பலிச்சுச்சு?”
‘அய்யயோ இவனுக்கு எப்படி நான் வேண்டுனது தெரிஞ்சுது…’ என்று மீண்டும் பதறினாள்.
“எனக்கு உன்னை பார்த்ததும் புடிச்சுருச்சு. என் கண்ணுக்கு அழகு தேவதையா தெரியிற மைதிலி. உனக்கும் எனக்கும் எல்லாப் பொருத்தமும் பொருந்தி இருக்கும்னு என் மனசு அடிச்சு சொல்லுது. உன் பிரின்ஸ் நான் மட்டும் தான்…” தலை சரித்து ஒவ்வொன்றாய் ரகு கூறியதில், உச்சி முதல் உள்ளங்கால் வரை சிலிர்த்தது மைதிலிக்கு.
தேகமெல்லாம் செங்கொழுந்தாகி இருக்க, வெட்கத்தில் வார்த்தை மறந்து போனாள்.
“நான் வீட்டுக்குப் போறேன்” என்று அவள் தடுமாறி நகரப் போக, “உன் பிரின்ஸ் நான் தான மைதிலி? பதில் சொல்லிட்டுப் போயேன் ப்ளீஸ் ப்ளீஸ்…” அவளை போன்றே கேட்டவனைப் பார்க்கவே கூச்சம் தடுத்தது.
“என் பிரின்ஸா இருக்க உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே ரகு…” என்று தரையைப் பார்த்தே கூறியவள், அவன் அருகில் நெருங்கும் முன் வெட்கத்துடன் ஓடி விட்டாள். இருவரின் இதழ்களிலும் நேசப் புன்னகை நிறைந்திருந்தது.
உயிர் வளரும்
மேகா