553 views

தேவன் 8

 

தேவநந்தன் பலமுறை அழைத்துப் பார்த்து விட்டான். ஒரு அழைப்பை கூட ஏற்கவில்லை யாழினி. அவன் மீது உள்ள கோபத்தில் ஒரு நாள் முழுவதும் அறைக்குள்ளேயே இருந்தாள். 

 

ஆறு நாள் குலதெய்வ, ஊர் கோயில் திருவிழாவிற்கு இன்று முதல் நாள். வெள்ளை வேட்டி சட்டைகள் தான் எங்கும் தெரிந்தது அங்கு. பெருசுகள் அனைவரும் கொடியேற்றும் விழாவிற்கு வந்திருக்க, அம்மனை வழிபட்டவர்கள் மூங்கில் கொம்பை எடுத்து வந்தனர் கோவில் வாசலுக்கு.

 

 

சண்முகமும் அங்கு ஒருவராக நிற்க, பாண்டியன் இல்லாதது வருத்தமாக இருந்தது. இருந்தும் கம்பீரமாக நின்றவர் கொடியேற்றத்தை நிறைவு செய்தார். வீட்டிற்கு வரும் வழியில் வள்ளி வீட்டை கடக்க முயன்றவர் கால்கள் கடக்காமல் வீட்டு வாசலில் நின்றது. அண்ணனை கண்டதும் அனைத்தையும் மறந்த வள்ளி அன்போடு வரவேற்றார்.

 

“மச்சான் எல்லாத்தையும் சொன்னாரா.” என்று தங்கையிடம் கேட்க, அவரும், ‘ஆமாம்’ என்று தலையசைத்தார்.

 

“மனசுக்கு சங்கடமா இருக்கு வள்ளி. மச்சானுக்கு புத்தி ஏன் இப்படி கெட்டுப் போச்சுன்னு தெரியல. அவன் ஒருத்தனுக்காக இந்த ஊரையே பகைச்சுக்க நினைக்கிறது தப்பா தெரியுது வள்ளி. நீயாது கொஞ்சம் புரியிற மாதிரி எடுத்து சொல்லு.” என்றவரிடம் எதையும் விளக்க முடியாமல் அமைதியாக தலையசைத்தார் வள்ளி. 

 

அந்த நேரம் கல்லூரிக்கு கிளம்பி கொண்டிருந்த ஆராதனா வெளியில் வர, “வாடா இன்னைக்கு என்ன சீக்கிரமா கிளம்பிட்ட மாதிரி இருக்கு.”  என்ற வருங்கால மாமனாரை பார்த்து புன்னகைத்தவள்,

 

“செமினார் இருக்கு மாமா இன்னைக்கு.” என்று பதில் கொடுத்ததும் தாயிடம் திரும்பி, “மாமாக்கு சாப்பாடு எடுத்து வை ம்மா.” என்றாள்.

 

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம்டா. இப்ப தான் கோவில்ல மோர் குடிச்சிட்டு வரேன்.” என்பதற்கு சரி என்று தலையசைத்தவள், 

 

“யாழு ஊருக்கு கிளம்பிட்டாளா மாமா” அவளை இன்னும் வீட்டிற்கு சென்று பார்க்கவில்லை ஆராதனா.  

 

“இல்லம்மா திருவிழா நடக்க போறதால லீவு போட சொல்லி இருக்கேன். உன்ன தான் பார்க்க முடியலன்னு பொலம்பிட்டு இருந்தா. சாயந்திரம் காலேஜ் முடிச்சுட்டு வீட்டுக்கு வா.” 

 

“நேத்தே வரணும்னு நினைச்சேன் மாமா படிக்கிற வேலை இருந்ததால வர முடியல. இன்னைக்கு காலேஜ் முடிச்சுட்டு நேரா அங்கயே வந்துடுறேன்.” என்றவள், “அம்மா பஸ்சுக்கு நேரம் ஆச்சு நான் கிளம்புறேன்.”  தன் கல்லூரி பைகளை எடுத்துக் கொண்டு வாசலுக்கு சென்றாள்.

 

 

“என்னம்மா பஸ்ல போற. மச்சான் வரலையா.” என விசாரிக்க, பதில் சொன்னார் வள்ளி.

 

“சின்னவன் ஊருக்கு வரதா தகவல் சொன்னான் அண்ணா. அதான் கூட்டிட்டு வர போயிருக்காரு.” என்றதும் இருந்த சங்கடமெல்லாம் காணாமல் போய்விட்டது.

 

 

“மருமகன் வரானா!” கண்கள் மின்ன எழுந்து நின்றவர், “என்னம்மா நீ ஒரு வார்த்தை சொல்லி இருக்க கூடாதா. நானும் மச்சான் கூட போயிருப்பேன்ல. ” என்றார் குதிக்காத குறையாக.

 

 

“எனக்கு என்ன ண்ணா தெரியும். காலையில  ஃபோன் போட்டு இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துடுவேன்னு சொன்னான். எங்களாலயே அவன் ஊருக்கு வரத நம்ப முடியல. அவர் எதோ கனவுல இருந்து எந்திரிச்ச மாதிரி கிளம்பி போனாரு.” மகனின் செயலில் இணக்கம் இல்லாமல் அவர் பேசினார்.

 

“ஹா ஹா! என் மருமகனுக்கு இன்னும் அந்த விளையாட்டு குணம் போகல போல. வீட்டுக்கு வந்ததும் ஃபோன் போடுமா வந்து பார்த்துட்டு போறேன். இந்த விஷயத்தை யாழினி கிட்ட சொல்றேன் ரொம்ப சந்தோஷப்படுவா.” என்றவர் ஒருவித பரவசத்தோடவே அங்கிருந்து கிளம்பினார்.

 

அவர் கிளம்ப… வெளியில் வரவும், தேவநந்தன் வாசலில் நிற்கவும் சரியாக இருந்தது. அவனைக் கண்டு சண்முகம் முகத்தை திருப்பிக் கொள்ள, ஒரு துளி கூட மாமனை மதிக்கவில்லை தேவநந்தன். 

 

அப்படி ஒருவர் அங்கு இல்லை என்பது போல், “வா பாப்பா நான் காலேஜ்ல விடுறேன்.” என்றான் ஆராதனாவிடம்.

 

அண்ணனைக் கண்டு புன்னகை பூத்தவள், “அப்பவே நினைச்சேன் ண்ணா நீ வருவன்னு.” என்று உடனே ஏறிக் கொண்டாள். 

 

 

***

 

“யாழு! அம்மாடி யாழு…” வீட்டிற்குள் நுழைவதற்கு முன்னரே சண்முகம் மகளின் பெயரை ஏலம் விட, மாமனிடம் பேசாமல் இருக்கும் கடுப்பில் அவள் வரவே இல்லை வெளியில். 

 

 

நல்ல மனநிலையில் இருந்தவர் தானே அவள் அறைக்குச் சென்றார். தந்தையை கண்டதும் எழுந்து அமர்ந்தவள் பேசாமல் இருக்க, “சேதி தெரியுமா மாமன் வரானாம் ஊருக்கு.” என்றார் புன்னகையோடு.

 

அவள் மனநிலை சரியில்லாததால், “யார சொல்றீங்க.” என்று கேட்டிட,

 

“அட! என்னம்மா நீ மாமான்னு சொல்லும் போதே தெரிய வேணாமா.” என்றார் மகளின் தோள்களை தட்டி.

 

“என் மாமா தேவநந்தனை தவிர வேற யாரையும் எனக்கு தெரியாது ப்பா.” என்றதும் மகளின் தோள் மீது  இருக்கும் கையை வேகமாக எடுத்தவர் முறைத்தார் கடுமையாக.

 

அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் யாழினி மௌனம் காக்க, “இன்னொரு தடவை அவனை மாமான்னு சொன்ன… பொண்ணுன்னு கூட பார்க்க மாட்டேன்.” என்ற சத்தத்தில் பதறி அடித்து மகளின் அறைக்கு வந்தார் பரிமளம்.

 

நடப்பவை புரியாமல் அவர் கணவனை சமாதானப்படுத்த, “ஊருக்கு கண்ணன் வரதா வள்ளி சொன்னா. உன் பொண்ண கிளம்பி இருக்க சொல்லு வந்ததும் பார்த்துட்டு வந்துடலாம்.” என்று விட்டு அவர் நகர்ந்தார்.  நடந்ததை விசாரித்து, மகளை திட்ட ஆரம்பித்தார் பரிமளம்.

 

“இப்ப எதுக்கு என்ன திட்டுற. அவன் மாமா’ன்ற மாதிரி தேவநந்தன் மாமாவும் எனக்கு மாமா தான. இதை சொல்றதுல என்ன தப்பு இருக்கு. அவர மாதிரி நீயும் பேசாம நகரு நான் இருக்க கடுப்புக்கு கடிச்சு வைக்க போறேன்.” என்றவள் அவர் திட்டுவதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் வெளியில் தள்ளி தாழ்ப்பாள் போட்டுக் கொண்டாள்.

 

***

 

“மாமா எனக்கு ரொம்ப பயமா இருக்கு.” காதலர்கள் இருவரும் தனிமையில் பேசிக் கொண்டிருக்க,

 

“எதுக்கு ஆருமா.” மடியில் படுத்துக்கொண்டு அவள் கன்னத்தை கிள்ளி கேட்டான் கிருஷ்ணன். 

 

“இத்தனை நாள் மாமாவும் அப்பாவும் சண்டை எதுவும் போடாம இருந்தாங்க. இப்ப வரி பணம் கட்டுறதுல ரெண்டு பேருக்குள்ளயும் சின்ன மனஸ்தாபம் வந்துடுச்சு. இதுவே பெருசாக்கிடும்னு பயமா இருக்கு மாமா.” என்றதும் பெருமூச்சு விட்டவன்,

 

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. அப்படியே ஆனாலும் நான் பேசி சரி பண்ணிடுறேன் நீ கவலைப்படாத.” அவளுக்கு ஆறுதல் சொன்னான்.

 

 

“என்னத்த நீங்க சரி பண்ணுவீங்க. இப்பவே மாமா எது சொன்னாலும் பேசாம தான நிக்கிறீங்க.” மாமன் செயலில் இருக்கும் தவறை அவள் சுட்டிக்காட்ட,

 

“வேற என்ன பண்ணனும் எங்க அப்பன எதிர்த்து மல்லு கட்ட சொல்றியா.” கோபப்பட்டான் கிருஷ்ணன்.

 

“மல்லுக்கட்ட சொல்லல அவர் பேசுறது தப்புன்னு சொன்னா போதும் மாமா.”

 

“அப்படி என்னடி எங்க அப்பா தப்பு பண்ணிட்டாரு.” காதலியின் பேச்சில் கோபம் கொண்டவன் எழுந்த அமர்ந்து வாதிட,

 

 

“அண்ணன் விஷயத்துல மாமா பண்ற எதுவும் எனக்கு சரியா படல. ஊருசனம் சும்மா இருந்தாலும் இவர் சும்மா இல்லாம ஏதாச்சும் பண்ணிட்டே இருக்காரு. பாவம் பெரியம்மா எவ்ளோ கஷ்டப்படுறாங்க தெரியுமா.” என்றவள் மீதி பேச்சை தொடரும் முன்,

 

“என்னடி இது எங்க அப்பா பத்தி என்கிட்டையே தப்பா பேசுற.” சண்டைக்கு பாய்ந்தான் கிருஷ்ணன்.

 

 

“நான் என்ன மாமா தப்பா சொன்னேன். பெரிய மாமா பண்றதை தான சொன்னேன்.” என்றவளை விட்டு எழுந்து நின்றவன்,

 

“போதும் ஆரு இத்தோட நிறுத்து. எங்க அப்பா பண்றது தப்பாவே இருந்தாலும் அவர எதிர்த்து நிற்க என்னால முடியாது. பெரிய அத்தை பக்கம் இருக்க நியாயம் எனக்கு புரியுது. அதுக்காக எங்க அப்பா மனச கஷ்டப்படுத்த முடியாது. இன்னொரு தடவை எங்க அப்பா பத்தி இப்படி பேசுனா நான் மனுசனா இருக்க மாட்டேன்.” என்றவன் நில்லாமல் நடக்க தொடங்கினான்.

 

 

காதலித்த இரண்டு வருடங்களில் இப்படி ஒரு முகத்தை காட்டியதில்லை கிருஷ்ணன். மாமனின் புதிய முகத்தில் கண்ணில் மறைந்திருந்த அழுகை மடை திறந்தது. துடைக்க மறந்து அவன் சென்ற வழியவே பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

 

பார்த்த வழியில் திரும்பவும் அவன் கால் தடம் தெரிய, தலையை குனிந்து கொண்டாள் ஆராதனா. அமைதியாக பக்கத்தில் அமர்ந்தவன், “சாரி ஆரு அழாத.” என்று கன்னத்தில் கொட்டிக் கொண்டிருக்கும் கண்ணீரை துடைக்க, அவளோ தட்டி விட்டாள்.

 

 

“சாரிடா” என்று அவளை தன்னோடு இணைத்துக்கொள்ள பார்க்க, விலகி அமர்ந்தாள்.

 

 

திட்டியதால் விட்டுக் கொடுத்து அவளை உரசி கொண்டு அமர்ந்தவன், “அவர் பண்றது தப்புன்னு எனக்கும் புரியுது ஆரு. நீங்க எல்லாரும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது அதை அவர் கிட்ட காட்டுறீங்க. நானும் அவரை தப்புன்னு சொன்னா அவர் மனசு கஷ்டப்படாதா. எனக்கு முதல்ல என் அப்பா அதுக்கு அப்புறம் தான் ஊரு உலக நியாயம் எல்லாம்.” என்று பொறுமையாக எடுத்துக் கூறினான்.

 

 

 

வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டு, “நாளைக்கே பெரிய மாமா வேணாம்னு சொன்னா அவர் சந்தோஷத்துக்காக என்னை விட்டுட்டு போயிடுவீங்க அப்படித்தான.” என்றதும், விட்ட கோபம் மீண்டும் அவன் முகத்தில் ஏறிக்கொண்டது.

 

“என்னடி பேசிட்டு இருக்க நீ. நான் என்ன சொல்றேன் நீ என்ன புரிஞ்சிக்கிற. உன்னை எதுக்காக என் அப்பா வேணாம்னு சொல்ல போறாரு.” 

 

“ஒருவேளை சொல்லிட்டா என்ன பண்ணுவீங்க, பதில் சொல்லுங்க?” 

 

“அப்படி ஒருநாளும் எங்க அப்பா சொல்ல மாட்டாரு.” என்றான் உறுதியோடு.

 

“ஒரு வார்த்தை எங்க அப்பா வேணாம்னு சொன்னாலும் எதிர்த்து உன்ன கல்யாணம் பண்ணுவேன்னு சொல்றதுக்கு என்ன மாமா உங்களுக்கு பிரச்சனை.” என்ற ஆராதனாவின் அழுகை அதிகமானது.

 

“வாய் வார்த்தையா சொன்னா தான் நம்புவியா ஆரு. என் மேல இருக்க நம்பிக்கை அவ்ளோ தான உனக்கு.” தன்னை நம்பாமல் கேட்டுக் கொண்டே இருக்கும் ஆராதனா மீது இருக்கும் கோபம் அவனுக்கு அதிகமாக,

 

 

“உங்கள நம்புனதால தான் காதலிக்க ஆரம்பிச்சேன் மாமா. ஆனா இப்போ பயமா இருக்கு. எங்கடா என்னை வேணாம்னு சொல்லிட்டு போயிடுவீங்கன்னு ரொம்ப பயமா இருக்கு.” என்றவளை தன் நெஞ்சில் அடக்கி கொண்டவன்,

 

“அப்படியெல்லாம் உன்னை விடமாட்டேன் ஆரு. எங்க அப்பா மட்டும் இல்ல யார் உன் விஷயத்துல  குறுக்க வந்தாலும் அவங்களை எதிர்த்து நிற்க நான் ரெடி.” என்றவனை அவள் தலை உயர்த்தி பார்க்க,

 

“சும்மா உன்ன சமாதானப்படுத்த சொல்லல. யாருக்காகவும் உன்னை விட்டுக் கொடுத்துட்டு வாழ என்னால முடியாது. ஒருநாள் பார்க்கலன்னா  கூட என்னமோ மாதிரி இருக்குடி. வாழ்க்கை முழுக்க அந்த வலிய அனுபவிக்க நான் தயாரா இல்லை.” என்றவனை அவள் கட்டிக் கொள்ள,

 

“இன்னொரு தடவை என்னை நம்பாம பேசாத.” என்று அவனும் கட்டிக் கொண்டான். பிற்காலத்தில் இது போன்ற ஒரு சந்தர்ப்பம் கிடைக்காமல் போகும் என்பதை உணராமல். 

****

 

 

மகனுக்காக காத்திருந்தார் பாண்டியன். ஒரு மணி நேரத்தில் வருவதாக சொன்னவன் இரண்டு மணி நேரம் ஆகியும் வரவில்லை. பொறுத்திருந்து பார்த்தவர் மகனுக்கு அழைக்க, “பஸ் பிரேக் டவுன் ஆகி இப்ப தான் சரி பண்ணாங்க ப்பா. அரை மணி நேரத்துல வந்துடுவேன்.” என்றான். 

 

 

இந்த நான்கு வருடத்தில் மூன்று முறை மட்டுமே மகனை பார்த்திருக்கிறார்கள் பெற்றோர்கள். அதுவும் அவன் வராத காரணத்தினால் இவர்கள் சென்று பார்ப்பார்கள். விடுதியில் தங்கி இருப்பதால் மகனிடம் ஆசை தீர பேசக்கூட முடியாது பெற்றோர்களால். அவனும் வந்த கையோடு அனுப்பிவிடுவான். 

 

அதிசயமாக  கூப்பிடாமலே வந்த மகனை கண்டு உள்ள மகிழ்ந்தார். தந்தையை கண்டவன் சிரிப்போடு நலம் விசாரிக்க, மகனை உள்ளம் குளிர அன்போடு பார்த்தார் பாண்டியன். மகன் தூக்கி வந்த பெட்டிகளை தூக்க முடியல,

 

“என்ன ப்பா இதையெல்லாம் தூக்கிட்டு. விடுங்க நானே தூக்கிட்டு வரேன்.” என்றவன் மொத்தத்தையும் தூக்கிக் கொண்டான். 

 

நான்கு வருடங்கள் கடந்து ஊரை காண்பவனின் விழிகளில் அத்தனை ஆனந்தம். பெரிய மாற்றம் இல்லை என்றாலும் சின்ன மாற்றங்களை பெரிதாக பார்த்துக் கொண்டு வந்தான்.  ஊர் பக்கம் வர வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் படிப்பு தடை போட்டது. கண்ணன் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும்  வருங்கால மருத்துவர். 

 

ஊருக்குள் வந்ததும் பலரும் கண்ணனை பார்த்து நலம் விசாரித்தார்கள். ஒவ்வொருவருக்கும் சிரித்த முகமாக பதில் கொடுத்தவன் ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தான். மகனைக் கண்டதும் வரவேற்க மறந்த வள்ளி அழுகையில் ஆர்ப்பாட்டம் செய்தார். புன்னகையோடு அன்னையை அணைத்துக் கொண்டு சமாதானம் செய்தவன் வீட்டிற்குள் நுழைய,

 

“வாங்க சார் இப்ப தான் உங்களுக்கு வீட்டு ஞாபகம் வந்துச்சா.” அன்னை கேட்காத கேள்வியை தங்கை கேட்டு வரவேற்றாள்.

 

“நீ இருப்பன்னு தெரிஞ்சிருந்தா இப்பவும் வந்திருக்க மாட்டேன்.” என்றவனுக்கு சில அடிகளை பரிசாக கொடுத்தவள்,

 

“முஞ்சிய பாரு. நான் இங்க இல்லாம வேற எங்க இருப்பேன்.” என்ற ஆராதனாவை மரியாதை கொடுத்து பேசும்படி அதட்டினார் அன்னை.

 

“மகன் வந்ததும் மண்டையில ரெண்டு கொம்பு வந்துருச்சு ம்மா உனக்கு.” என்றாள் வக்கனை செய்து.

 

“உனக்கு என்ன இன்னைக்கு காலேஜ் இல்லையா வீட்டுல இருக்க.” அவள் வீட்டில் இருப்பதை பார்த்து கண்ணன் அக்கரையாக கேட்க,

 

“சொல்ல முடியாது.” என்று வள்ளி இடமிருந்து பல அடிகளை வாங்கிக் கொண்டாள்.

 

“பெரியவன் கூட தான் இன்னைக்கு காலேஜ் போனா.  அந்த ரோட்டு பக்கம் ஏதோ ஸ்ட்ரைக் நடக்குது போல. பிள்ளைய விட வேணான்னு வீட்டுல விட்டுட்டு போயிட்டான்.” கல்லூரி கிளம்பி சென்றவள் மீண்டும் வீட்டில் இருக்கும் காரணத்தை மகனுக்கு விளக்க,

 

“அண்ணா எப்படி ம்மா இருக்காரு. போன வருஷம் காலேஜ்க்கு வந்து பார்த்துட்டு போச்சு. அதுக்கப்புறம் ஆளையே காணும். போன் பேசுறதோடு சரி.”  

 

கண்ணனுக்கு அண்ணன் மீது அதிக பாசம் உண்டு. அவன் பிறந்ததிலிருந்து கூடவே இருந்தது தேவநந்தன் தான். பள்ளிப்படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்குச் சென்றதிலிருந்து தம்பியின் அனைத்து முக்கிய நிகழ்விற்கும் முதல் ஆளாக வந்து விடுவான். 

 

கண்ணன் மருத்துவம் படிக்க விருப்பம் கூறிய உடனே அவன் கேட்ட கல்லூரியில் சேர்க்க அனைத்து உதவிகளையும் செய்தான் தேவநந்தன். கூடவே அவன் இடத்திலிருந்து அவன் பெற்றோர்களையும் ஆராதனாவையும் கவனித்துக் கொண்டிருக்கிறான். 

 

“அண்ணன் மேல ரொம்ப தான் அக்கறை. அவர் தான் வந்து உன்னை பார்க்கணுமா நீ வந்து பார்த்தா என்ன குறைஞ்சு போயிடுவியா.” என்ற வீட்டின் செல்ல மகளின் பேச்சைக் கேட்டவாறு பாண்டியன் வேலைக்கு கிளம்ப,

 

“அவ அப்படித்தான் பேசிகிட்டு இருப்பா நீ உள்ளே போயா.” ஓய்வெடுக்க மகனை அனுப்பி வைத்தார் வள்ளி.

 

குளித்து முடித்து தயாரான கண்ணன் சாப்பிடாமல் கூட ஓடினான் அன்னம்  வீட்டிற்கு. மற்ற நால்வரை கூட ஏதோ ஒரு வகையில் பார்க்கும் கண்ணன் நான்கு வருடங்கள் ஆகிவிட்டது அவரை பார்த்து. பெற்ற தாயை விட ஒரு படி அதிகமாக கவனிக்கும் அன்னத்தின் அன்பை அள்ள ஓடியவனை கண்டு இன்பமாக அதிர்ந்தார் அன்னம்.

 

“கண்ணா! என்னடா இது இப்படி வந்து நிக்கிற‌. நான் ஏதாவது கனவு கண்டுட்டு இருக்கனா!. ஐயோ! என் பிள்ளை எம்புட்டு பெரியசா வளர்ந்துடுச்சு.  பார்க்க சினிமா நடிகன் மாதிரி இருக்க சாமி. எப்படிப்பா இருக்க…” என்றவர் காய்கறி நறுக்கி கொண்டிருக்கும் கையோடு இளைய மகனின் கன்னத்தில் கை வைக்க,

 

“நீங்க தான் பார்க்குறீங்களே சொல்லுங்க பெரியம்மா உங்க சின்ன மகன் எப்படி இருக்கான்.” என்றவன் அவர் கை வைத்துக் கொண்டிருக்கும் கன்னத்தில் கை வைக்க, அப்போது தான் கையை கவனித்தார் அன்னம்.

 

“என் பிள்ளை கன்னம் அழுக்காயிடுச்சு.” என்றவர் பதட்டத்தோடு சேலை முந்தானையில் அவன் கன்னத்தை துடைக்க,

 

“ஹா… ஹா! உங்க புடவையில இருக்க கரி இன்னும் அழுக்காக்கிடுச்சு பெரியம்மா.” என்றான் கன்னத்தில் இருக்கும் அடுப்புக்கரியை கையில் தடவி காட்டி.

 

 

“மன்னிச்சிடுயா சாமி!  தண்ணி அந்த பக்கம் இருக்கு கழுவிட்டு வாய்யா.”  பதட்டத்தோடு கை காட்டினார்.

 

அன்னம் தோள் மீது கை போட்டவன், “எதுக்கு பெரியம்மா இவ்ளோ டென்ஷன் ஆகுறீங்க. கழுவுனா சரியாகிடும். நீங்க வந்து இப்படி கொஞ்சம் உக்காருங்க.” என்றவன் அவரை திண்ணையில் அமர வைத்து விட்டு, முகத்தை கழுவி வந்தான்.

 

 

“என்னப்பா திடீர்னு வந்திருக்க படிப்பு முடிஞ்சுதா.” என்றவர் முகத்தை துடைக்க துண்டை கொடுக்க,

 

“இல்ல பெரியம்மா அது முடிய இன்னும் ஒரு வருஷம் இருக்கு. ட்ரைனிங் கொடுக்க வேறு ஊருக்கு போறேன். அதான் அதுக்கு முன்னாடி உங்க எல்லாரையும் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்.” 

 

“என்னப்பா சொல்ற இன்னும் ஒரு வருஷம் ஆகுமா. நீ இல்லாம உங்க அம்மா தான் ரொம்ப வாடிப்போயிட்டா. சீக்கிரம் படிப்ப முடிச்சுட்டு ஊரு பக்கம் வர பாருப்பா.” 

 

 

முகத்தை முழுவதுமாக துடைத்து முடித்தவன் அங்கிருந்து கொடியில் அதை காய போட்டு கொண்டு, “எனக்கு மட்டும் ஆசையா பெரிம்மா அவங்கள கஷ்டப்படுத்தணும்னு. நல்லா படிச்சு டாக்டர் ஆனா தான சந்தோஷமா பார்த்துக்க முடியும். ஊர் பக்கம் கூட வராம இருக்கன்னா அந்த அளவுக்கு எதிர்காலம் முக்கியம்னு அர்த்தம்.” என்ற இளைய மகனின் வார்த்தையை கேட்டவர் கண்கள் லேசாக பிசிறு அடித்தது கலங்கி.

 

பெரியம்மாவின் அழுகையில் பதறியவன் அவசரமாக அவரை நெருங்கி, “என்னாச்சு பெரியம்மா எதுக்காக அழுறீங்க.” என்று கன்னத்தை கண்ணீர் தொடும் முன் அதை துடைத்து விட்டான்.

 

“இல்லய்யா உன்ன மாதிரி உன் அண்ணனையும் படிக்க வச்சிருந்தா அவனும் நல்லா இருந்திருப்பான்ல. இங்க இருக்க காட்டு மேட்டுல சுத்திட்டு இருந்திருக்க மாட்டான். என் பிள்ளை வாழ்க்கைய நானே கெடுத்துட்டேன்னு குற்ற உணர்ச்சியா இருக்கு சாமி.” என்றவர் மகனை நினைத்து இன்னும் அழுகையில் தன்னை ஆழ்த்திக் கொள்ள,

 

 

“இதுக்கு எதுக்கு பெரியம்மா அழுகுறீங்க. நாங்க எல்லாம் கஷ்டப்பட்டு படிச்சு ஒருத்தருக்கு கீழே வேலை பார்க்கணும். ஆனா அண்ணனை பாருங்க தன்னோட சொந்த மண்ணுல விருப்பம் போல பிடிச்ச வேலைய பார்த்துக்கிட்டு ராஜாக்கணக்கா இருக்காரு. 

 

முதல்ல இருந்ததை விட இப்ப அதிக இளைஞர்கள் விவசாயத்தை தான் விரும்புறாங்க. பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சிட்டு இந்த வேலைய பார்க்கும் போது அண்ணனுக்கு என்ன குறை. நான் நிறைய நாள் அண்ணனை நினைச்சு பெருமைப்பட்டு இருக்கேன் பெரியம்மா. இவ்ளோ வயசுலயும் பெத்தவங்க காசுல படிச்சுக்கிட்டு இருக்க என்னை விட, விவரம் புரியாத வயசுல உங்கள தாங்கி நின்ன அண்ணன் மாதிரி யார் இருக்க முடியும் சொல்லுங்க.” என்றவன் பேச்சில் வார்த்தைக்கு வார்த்தை பெருமை கூடிக் கொண்டே சென்றது தமயனை நினைத்து.

 

 

கண்ணன் பேசும் வார்த்தைகளை கேட்டு உள்ளம் ஒரு பக்கம் மகிழ்ந்தாலும் இன்னொரு பக்கம் வருத்தத்தை கை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தது.  

 

பெரியம்மா தொடர்ந்து அழுது கொண்டிருப்பதை பார்த்தவன், “என்ன பெரியம்மா நீங்க இத்தனை வருஷம் கழிச்சு மகன் வந்திருக்கான் வாய்க்கு ருசியா சமைச்சு போடாம  ஒப்பாரி வச்சிட்டு இருக்கீங்க. இது தெரிஞ்சிருந்தா நான் ஊர் பக்கமே வந்திருக்க மாட்டேன்.” என்றதும் அரக்கப்பறக்க கண்களை துடைத்துக் கொண்டு,

 

“என்ன சாமி இப்படி சொல்லிட்ட.  உனக்கு என்ன வேணும்னு சொல்லு அரை மணி நேரத்துல செஞ்சு கொடுக்கிறேன்.” என்றவரை அன்போடு கட்டிக் கொண்டவன்,

 

“நீங்க எது செஞ்சு கொடுத்தாலும் எனக்கு ஓகே பெரியம்மா. வீட்டுல கூட சாப்பிடாம உங்க கை ருசிய சாப்பிட தான் ஓடி வந்தேன். ” என்றான் செத்துப்போன நாக்கிற்கு பெரியம்மா மூலம் உயிர் கொடுக்க.

 

“இப்படி உட்கார்ந்து டிவி பாருய்யா பத்து நிமிஷத்துல வந்துடுறேன்.” என்றவர் தன் மகனை அழைத்து,

 

“சாமி! சின்னவன் ஊர்ல இருந்து வந்திருக்கான். சந்தைக்கு போயிட்டு என்ன இருக்கோ எல்லாத்தையும் பிடிச்சிட்டு வந்துரு.” என்றதும் நம்ப முடியாமல் குழம்பியவன் தம்பியை அழைத்தான்.

 

“ஏண்டா வரதுக்கு முன்னாடி ஒரு வார்த்தை சொல்ல மாட்டியா. இன்னும் கொஞ்ச நேரத்துல  வீட்டுக்கு வந்திடுவேன் எங்கயும் போய்டாத.” என்ற கட்டளையோடு அழைப்பை துண்டித்தவன் விரைந்தான் சந்தைக்கு. 

 

பத்து நிமிடம் ஒதுக்கம் கேட்டவர் ஐந்து நிமிடத்திலேயே கையில் இட்லியோடு வந்தார். கூடவே ஒரு கிண்ணம் முழுவதும் ஆட்டுக்கறி நிறைந்திருக்க, மற்றொரு தட்டில் அவனுக்கு பிடித்த எள்ளு பொடியை வைத்தார். 

 

 

 

ஆட்டுக்கறி குழம்பை வாசம் படித்தவன் ஒரு வாய் வைத்ததும் நாக்கு உயிர் பெறுவதை உணர்ந்து கொண்டான். எத்தனை படிப்பு படித்து உயர்ந்த பதவியில் இருந்தாலும் தாயின் ஒரு வாய் சாப்பாட்டு ருசிக்கு ஈடாகாது. தட்டில் வைத்திருந்த ஆறு இட்லியையும் செரித்து ஏப்பம் விட்டவன் கையில் மற்றொரு தட்டை திணித்தார் அன்னம்.

 

 

 

பார்த்த கண்ணனின் நினைவுகள் சிறு வயதை எட்ட தவறவில்லை. பள்ளி முடித்து வந்ததும் தேவநந்தனுக்கு இதை தருவாரோ இல்லையோ கண்ணனுக்கு மறக்காமல் தந்து விடுவார். 

 

தட்டில் வீற்றிருந்த வேர்க்கடலை அரிசி உருண்டையை பார்த்தவன் ஆசையாக இரண்டை கையில் எடுத்துக் கொண்டான். 

 

 

“இதை சாப்பிட்டுட்டே இரு சாமி. கொஞ்ச நேரத்துல அண்ணன் வந்துடுவான் வாழைப்பழ பணியாரம் செஞ்சி தரேன்.” என்றவருக்கு மறுக்க மனம் வராமல் பலமாக தலையாட்டினான் பாண்டியனின் புதல்வன்.

 

 

இரண்டு உருண்டையை சாப்பிட்டு முடித்தவன் மூன்றாவது கையில் எடுக்க, “ஏண்டி என் சின்ன மகன் வந்திருக்கான்… அந்த முருங்கை இலையில நல்லதா நாளு பறிச்சு போடு.” பக்கத்து வீட்டில் இருப்பவரிடம் சத்தமிட்டு முருங்கை கொம்புகளை உடைத்து வந்தவர் அதை உருவி கொண்டிருந்தார்.

 

பெரிய அன்னையை கவனித்தவன் நினைவில் அழகான தருணங்கள் மட்டுமே நிறைந்து இருந்தது. ஒவ்வொரு முறையும் மனதில் வள்ளி இடம் பெற்றிருக்கும் இடத்தை விட உயரத்தில் நின்று விடுவார் அன்னம்.

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
26
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *