2,105 views

 

மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கப்பட்டது. நேற்று ஆதிலட்சுமியை பகைத்துக் கொண்டதாள் அவர் இல்லாத இடத்தில் இருந்தாள் சிவானி. கடைசி நாள் ஆட்டத்தை பார்க்க வந்திருந்தார் தயாளன். தாய் தந்தையரை மகிழ்விக்க வெற்றிவாகை சூடினான் அவர்களின் ஒரே புதல்வன் தரணீஸ்வரன்.

சுற்றி இருக்கும் அனைவரின் வாழ்த்துக்களோடு தாய் தந்தையருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டான். அதே புகைப்படத்தை தூரத்தில் நின்று எடுத்தாள் சிவானி. அவனின் பெற்றோர்கள் இல்லாத நேரம் பார்த்து நெருங்கினாள்.

நேற்று நடந்ததை ஆதிலட்சுமி இவனிடம் சொல்லி இருப்பார் என்பதால் மழுப்பும் எண்ணத்தோடு அவள் வர, “சாரி சிவானி, நேத்து அம்மா உன்னை தவறா புரிஞ்சிக்கிட்டாங்கன்னு நினைக்கிறேன்.” என்று தானாக சிக்கினான் அவளிடம்.

உடனே தன் மனதை மாற்றிக் கொண்டவள் ஏதோ விட்டுக் கொடுப்பது போல், “பரவால்ல இருக்கட்டும். பெரியவங்க அவங்க, எதுவும் சொல்ல முடியாது. அதனால தான் எதிர்த்து பேச முடியாம கிளம்பிட்டேன்.” என்றாள்.

திட்டம் போட்டு எல்லாம் தரணீஸ்வரனை அவள் சுற்றிவரவில்லை. இங்கு பார்த்ததிலேயே அதிக பேச்சு இவனைப் பற்றி ஓட, பார்க்கவும் அழகாய் இருப்பதால் பின் தொடர்கிறாள். தயாளன் தம்பதிகள் ஊருக்கு கிளம்புவதற்காக பெட்டி படுக்கைகளை தயார் செய்ய சென்றிருக்க, தனக்கான நல்ல நேரமாக எடுத்துக் கொண்டவள் பேச்சை வளர்த்தாள்.

அவன் ஊர், குடும்பம், வாழ்க்கை என்று அனைத்தையும் அலசி ஆராய்ந்து விட்டாள் பேச்சில். ஓரளவிற்கு அவனைப் பற்றி தெரிந்து கொண்டவள் மனதில் முதல் எண்ணம் உருவாக, தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டாள். பின்னாளில் சிக்கி சிதைய போகிறோம் என்பதை அறியாமல் அவனும் கொடுக்க, அன்று ஆரம்பித்தது தான் அவர்களின் காதல்.

முதலில் அவளின் குறுஞ்செய்திகளுக்கு ஓரிரு வார்த்தையோடு நிறுத்தியவன் நேரம் காலம் பார்க்காமல் பதில் கொடுக்க ஆரம்பித்தான். குறுஞ்செய்தி அழைப்புகளாக மாறியது. அவர்களையும் மறந்து பேச ஆரம்பித்தார்கள். மூன்றாண்டு பட்டப்படிப்பை முடித்தவன் இரண்டு ஆண்டு பட்டப்படிப்பை தொடர்ந்தான். ஆறு மாத காலம் பேசிய பேச்சில் அவனை காதலிக்க துவங்கிய சிவானி ஒரு நாள் சென்னைக்கு படையெடுத்தாள்.

அவனிடம் எந்த முன்னறிவிப்பும் கொடுக்காமல் அவன் படிக்கும் கல்லூரி முன்பு நின்றாள். இன்பமாக அதிர்ந்தவனின் சூட்டோடு தன் காதலை போட்டு உடைத்தாள். என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை அவனுக்கு.

“சாரி சிவானி, உன்ன அந்த மாதிரி நான் பார்க்கல. நல்ல பிரண்டா தான் நினைக்கிறேன்.” என்றான்.

வீட்டிற்கு ஒரே பிள்ளை என்பதால் தாய் தந்தையின் முழு பாசத்தில் தத்தளித்தவன் அவர்கள் காட்டும் பெண்ணை தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தான். அதனால் வந்த ஒரு சில காதல் அழைப்புகளையும் துண்டித்தான். அதையும் மீறி சிவானி அவன் முன்பு நின்றாள்.

“ஃப்ரண்ட லவ் பண்ண கூடாதுன்னு ஏதாச்சும் இருக்கா தரணி. நம்ம மீட் பண்ணி ஆறு மாசம் ஆக போகுது. இந்த ஆறு மாசத்துல உன்ன தவிர வேற எதையுமே என்னால நினைக்க முடியல. உனக்காக தான் என் வீட்ல இருக்கவங்க கிட்ட சொல்லக்கூடாத பொய்ய சொல்லி இங்க வந்து  இருக்கேன்.”

“எனக்கு எல்லாம் புரியுது சிவா. ஆனா என் அப்பா அம்மாவ மீறி என்னால எந்த முடிவையும் எடுக்க முடியாது. உன்ன பத்தி அவங்க கிட்ட சொல்றேன். அவங்க சமாதிச்சா நம்ம காதலிக்கலாம்.” என்றதும் உள்ளுக்குள் அவனை திட்ட கூடாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தாள்.

சிவானி மூன்று ஆண்டு பட்டப் படிப்பை முடித்துவிட்டாள். மேற்கொண்டு பெற்றோர்கள் படிக்க சொல்ல அதில் விருப்பம் இல்லாததால் நழுவிக் கொண்டிருந்தாள். முதலில் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்ட பெற்றோர்கள் நாளடைவில் நண்பர்களோடு சேர்ந்து மகள் அடிக்கும் கும்மாளத்தில் கண்டிக்க ஆரம்பித்தார்கள்.

குடும்பத்தில் தொடர் வாக்குவாதங்கள் ஏற்பட்டது. மகளுக்கு திருமண ஏற்பாடு செய்தார்கள் பெற்றோர்கள். அதிலிருந்து தப்பிக்கவும், தரணி மீது அவள் கொண்டுள்ள ஆசைக்காகவும் சென்னை வந்து விட்டாள்.

“அப்போ அவங்க வேணாம்னு சொன்னா என்னை விட்டுடுவியா. நீ மட்டும் என்னை வேணாம்னு சொன்னா நான் ட்ரெயின்ல குதிச்சு செத்துடுவேன்.” என்று ஒரு அதிர்வை அவன் மனதில் விதைக்க,

“எதுக்கு இப்படி எல்லாம் பேசுற சிவா. எங்க அம்மா அப்பா கண்டிப்பா ஒத்துப்பாங்க.” என்றான் அவளை சமாதானப்படுத்தும் நோக்கோடு.

எந்த இடம் என்றும் பாராமல் வேகமாக அவனை கட்டி அணைத்தாள். தடுமாறி நின்றவன் தடுப்பதற்குள், “அப்போ நீ என்னை லவ் பண்ற. அதனால தான் உங்க வீட்ல பேசி சம்மதம் வாங்கிடுவேன்னு இவ்ளோ உறுதியா சொல்ற.” என்று இன்னும் ஒரு அதிர்வை அவனுக்கு கொடுத்தாள் கன்னத்தில் முத்தமிட்டு.

அதற்கு மேல் பேச அவனிடம் மொழி இல்லை. தன்னை நம்பி வந்திருக்கும் பெண்ணை பத்திரமாக ஊருக்கு அனுப்புவதற்காக கல்லூரியில் இருந்து கிளம்பியவன் இரவு ஒன்பது மணி வரை அவளோடு இருந்தான். காதல் பேச்சுகளால் மயக்கினாள்‌. முதலில் தடுமாறியவன் அவளோடு பழகியதால் ரசிக்க ஆரம்பித்தான்.

***

வீடு திரும்பிய தரணீஸ்வரன் பெற்றோர்களிடம் இதைப் பற்றி பேச முடிவெடுத்தான். சாப்பிட்டு முடித்ததும் பேசலாம் என்று அவன் நினைத்திருக்க, கம்பெனி சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்ற கவலையில் புலம்பினார் தயாளன். தந்தைக்கு தோள் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில்,

“அப்பா இனிமே கம்பெனிய நான் பார்த்துக்கிறேன். கொஞ்ச நாள் என் கூட வந்து என்னென்ன பண்ணனும் மட்டும் சொல்லி கொடுங்க.” என பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.

மறுநாள் காலை அழைத்த சிவானி அவனை விசாரிக்க, “இல்ல சிவா அதை பத்தி பேச போகும்போது  கம்பெனியில சில பிரச்சனை இருக்குறதா அப்பா சொல்லிட்டு இருந்தாரு. அதனால இனிமே கம்பெனிய பார்த்துக்கலாம்னு இருக்கேன்.” என்றான்.

தான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே என்று சண்டையிட்டாள் அவனிடம். அவன் பொறுமையாக அவளை சமாதானப்படுத்திக் கொண்டிருக்க, “என்னோட லவ்வ நீ அக்செப்ட் பண்ணிக்கல நான் இப்பவே சாகுறேன்.” என்றிட, கோபம் கொண்டவன் நன்றாக திட்டி அழைப்பை துண்டித்தான்.

குறுஞ்செய்தியில் சில புகைப்படங்களை அனுப்பி வைத்தாள். ஆறு மாத காலங்களாக பேசிக் கொண்டிருப்பதால் அவளை திட்டிய வருத்தம் அவனுக்கு அதிகமானது. பேசலாம் என்று கைப்பேசியை எடுத்தவன் அதிர்ந்தான் அவள் அனுப்பிய புகைப்படத்தை பார்த்து. கையை அங்கு… அங்கு கீறி வைத்து ரத்தத்தோடு அனுப்பி இருந்தாள். உடனே அவன் அழைக்க,

“என்னால நீ இல்லாம வாழ முடியாது தரணி. உங்க அப்பா அம்மா கிட்ட வேணா உன் படிப்பு முடிஞ்சு பேசிக்கலாம். அதுவரைக்கும் நம்ம ரெண்டு பேரும் காதலிக்கலாம்.” என்று பேச்சால் சலவை செய்ய,  சம்மதம் பாதி தயக்கம் பாதி என்ற நிலையில் நாட்களை கடத்தினான்.

அடுத்த இரு வாரங்கள் கழித்து மீண்டும் அவன் முன்பு நின்றாள் சிவானி. மனம் மகிழ்ந்தவன் எதற்கு என்று விசாரிக்க, “இனி ரெண்டு வருஷத்துக்கு நானும் சென்னையில தான் இருக்க போறேன்.” என்றாள் ஆர்ப்பாட்டத்தோடு.

திருமண ஏற்பாடு செய்திருக்கும் பெற்றோர்களிடம் சண்டையிட்டவள் கல்யாணத்தை விட படிப்பு மேலென்று படிக்க சம்மதம் சொன்னாள்.  அவர்கள் சம்மதம் கிடைத்ததும் அவர்களுக்கு தெரியாமல் சென்னையில் இருக்கும் கல்லூரியில் சேர்ந்தாள். விபரம் அறிந்த பெற்றோர்கள் மறுக்க, எப்பொழுதும் பிடிக்கும் அதே பிடிவாதத்தை காட்டி சம்மதிக்க வைத்தாள்.

தனக்காக ஒரு பெண் இவ்வளவு தூரம் செய்கிறாள் என்பதில் ஆனந்தம் கொண்டவன் முன்பை விட அதிக நெருக்கம் காட்டினான் அவளோடு. நேரம் காலம் பார்க்காமல் கதை அளந்தார்கள். சென்னையில் ஒரு இடம் பாக்கி இல்லாமல் வளம் வந்தார்கள்.

இதற்கு நடுவிலும் படிப்பை கனக்கச்சிதமாக கையாண்டான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் கம்பெனிக்கு சென்றவன் கற்றுக்கொள்ள ஆரம்பித்தான் அனைத்தையும். பகல் பொழுதில் கல்லூரி, காதலி என்று உலா வருபவன் இரவில் கடுமையாக தந்தையோடு கலந்துரையாடல் செய்வான்.

அவன் கொடுத்த ஐடியாவின் பெயரில் பல மாற்றங்கள் நடந்தது கம்பெனியில். அடுத்த இரண்டு மாதங்களில் அதற்கான வரவேற்பு கிடைக்க, மகனை முழுவதுமாக நம்பி பொறுப்பை ஒப்படைத்தார். கல்லூரிக்கு முறையாக தகவல் தெரிவித்து பரீட்சை எழுத சம்மதம் வாங்கியவன் கம்பெனியின் பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.

முதலில் தந்தைக்காக தொழிலை கையில் எடுத்தவன் அதில் இருக்கும் வளைவு சுழிவுகளை அறிந்து ஆர்வம் கொண்டான். அவன் எடுத்து வைக்கும் முயற்சிகள் அனைத்திற்கும் பாராட்டுகளும், முன்னேற்றங்களும் கூடிக்கொண்டே போக… வெகுவாக அதில் தன் கவனத்தை திசை திருப்பிக் கொண்டான்.

தந்தைக்கு முழுவதுமாக ஓய்வு கொடுத்தவன் முழு நேரமும் கம்பெனியில் செலவழித்தான். இதனால் சிவானி உடனான சந்திப்புகள் குறைந்தது. முதலில் அவனுடன் சண்டை போடக்கூடாது என்பதற்காக விட்டுக் கொடுத்தவள் பின்னாளில் அதையே சாக்காக வைத்து தினமும் சண்டையிட்டாள். அப்படி இப்படி என்று முழுமையாக இரண்டு ஆண்டுகள் ஓடியது.

கம்பெனி அவன் எதிர்பார்த்ததை விட நல்ல நிலைமைக்கு வந்தது. அது தொடர்பாக இருக்கும் அத்தனை தொழில் வட்டாரங்களுக்கும் பரிச்சயம் ஆனான் தரணீஷ்வரன். பெற்றோர்கள் எங்கு சென்றாலும் மகனைப் பற்றிய பேச்சுக்களை அதிகம் கேட்டார்கள். கூடுதலாக நூறு நபர்களை வேலைக்கு வைக்கும் அளவிற்கு தொழில் பெருகியது.

இவைகளுக்கு நடுவில் காதலியை சமாதானப்படுத்தவும் மறக்கவில்லை அவன். அவளோடு சண்டை வரும்போது எல்லாம் அதிகம் விட்டுக் கொடுத்து செல்வான். தன்னை நம்பி பெற்றோர்களை தூரம் தள்ளி வைத்தவள் அன்பில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டான்.

இரண்டு ஆண்டு படிப்பு எப்பொழுது முடியும் என்று காத்துக் கொண்டிருந்த சிவானிக்கு அன்றைய நாளும் வந்தது. அவனை சந்தித்தவள் திருமண பேச்சை ஆரம்பிக்கும்படி கேட்டாள். இதற்கு மேலும் இவளை சமாளிக்க முடியாது என்பதால் பெற்றோர்கள் முன்பு நின்றான்.

விபரத்தைக் கேட்டவர்கள் உண்மையாகவே உள்ளம் மகிழ்ந்தார்கள். அவன் காதலுக்கு முழு சம்மதத்தோடு பச்சைக் கொடி காட்டினார்கள். பெண் யார் என்று கேட்க, நேரில் அழைத்து வருவதாக சொன்னவன் சிவானியை அவர்கள் முன்பு நிறுத்தினான் மறுநாள்.

பார்த்ததும் கண்டுகொண்ட ஆதிலட்சுமி கணவனிடம் விஷயத்தை பகிர்ந்தார். யாரைப் பற்றியும் தவறாக பேசாத மனைவியின் பேச்சில் வருங்கால மருமகள் மீது அவநம்பிக்கை ஏற்பட்டது. இருவரும் சிவானியை மறுக்க, முதலில் அமைதியாக கையாண்டவன் அவள் கொடுத்த அழுத்தத்தில் அடம் பிடிக்க ஆரம்பித்தான்.

இருவரும் மகனின் நலனுக்காக தங்கள் முடிவில் உறுதியாக இருந்தார்கள். பெற்றோர், காதலி நடுவில் மாட்டிக் கொண்டு முழித்தவன் அவளை சமாதானப்படுத்தி ஊருக்கு அனுப்பி வைத்தான். அங்கு சென்றவள் ஒரு வாரம் கழித்து மீண்டும் சென்னை திரும்பினாள். அதன்பின் உண்டான அனைத்தையும் ஏற்கனவே அவள் அறிந்து கொண்டதால் பெரிதாக அதிர்வை காட்டவில்லை அகல்யா.

மாமியார் மருமகள் இருவரின் பேச்சையும் நிறுத்தினார் தயாளன். மனைவி பேச்சை கேட்டவர் அப்படியே சோபாவில் அமர்ந்து விட, மகன் துயில் கொண்டு எழுந்து வருவதை அறிந்து இருவரையும் நிறுத்தினார். மூவரின் பார்வையும் அவன் மீது இருக்க,

“அம்மா பசிக்குது” என்றான்.

பெற்ற பிள்ளை பசிக்கிறது என்றதும் மற்ற பேச்செல்லாம் தூரம் போனது அவரை விட்டு. காலை உணவை எடுத்துக்கொண்டு ஓடினார் மகனிடம். இருக்கையில் ஆடவன் அமர்ந்து கொண்டிருக்க, நின்றவரே ஊட்டி விட துவங்கினர். அன்னையின் கண்கள் கலங்குகிறது என்பதை அறிந்து உள்ளுக்குள் அழுதான்.

மனதில் பாரம் குடியேறி சாப்பாடு புரை ஏறியது. இருமும் மகனின் தலையை தட்டி விட்டவர் தண்ணீரைத் தேட, அதற்குள் தயாளன் ஓடிச் சென்று எடுத்து வந்தார். நெஞ்சை நீவி விட்டவர் சாப்பாட்டை ஊட்ட, பக்கத்தில் தண்ணீரோடு அமர்ந்துக் கொண்டிருந்தார் தயாளன். மூவரும் வெளிப்படையாக பேசிக்கொள்ளாமல் வருத்தத்தில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

கிட்சன் வாசலில் நின்றவள் இவர்களைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொருவரின் விழியிலும் தெரியும் கோபமும் வருத்தமும் அடங்கிப் போனது பாசத்தின் முன்பு. பெருமூச்சு விட்டவள் அங்கிருந்து நகர பார்க்க,

“சாரி மாம்” என்றான் தரணீஸ்வரன்.

படியேறியவள் அப்படியே நிற்க, “என்ன சொல்றதுன்னு தெரியல தரணி. ஆனா உன்னை இந்த மாதிரி பார்க்குற சக்தி எனக்கு இல்ல. குழந்தைல இருந்து நீ பசிக்கிறதுக்கு முன்னாடியே சாப்பாட்டு கொடுத்துடுவேன். அந்த அளவுக்கு பார்த்து…பார்த்து வளர்த்த என் பிள்ளை பசிக்குதுன்னு சொல்லும்போது நெஞ்சில யாரோ கத்தி வைச்சு கிழிச்ச மாதிரி இருக்கு.” என்ற அன்னையை எழுந்து நின்று கட்டிக்கொண்டான்.

அவரோ அடக்கி வைத்திருந்த மொத்த அழுகையையும் கொட்டு தீர்த்தார். கொட்ட முடியாத சூழ்நிலையில் விழியில் தேங்கியிருக்கும் கண்ணீரைத் துடைத்தார் தயாளன். சமாதானப்படுத்த கட்டி அணைத்தவன், “சாரி மாம். என்னால உங்களுக்கு கஷ்டம் மட்டும் தான் இப்ப வரைக்கும். நானும் உங்களுக்காக மாறலாம்னு பல முயற்சி பண்றேன்.” என்றவன் அவர்களை விட்டு விலகி நின்று,

“என்னால முடியல ம்மா. சாயந்திரம் ஆகிட்டா போதும் கை, கால் எல்லாம் நடுங்குது. குடி இல்லாம என்னால அஞ்சு நிமிஷம் கூட தூங்க முடியல. உங்க பேச்சை ஆரம்பத்துல இருந்து கேட்டிருந்தா எனக்கு இந்த நிலைமை வந்திருக்காது. என்னை மன்னிச்சிடுங்க.” பெற்றோர்களின் காலடியில் மண்டியிட்டு கண்ணீர் சிந்தினான்.

மகனை தூக்க முயற்சித்த ஆதிலட்சுமி முடியாமல் அவனோடு மண்டியிட, இருவரையும் தாங்க வேண்டிய சூழ்நிலையில் துயரை காட்டாமல் பக்கத்தில் அமர்ந்தார் தயாளன். அகல்யாவின் மனம் தன்னை அறியாமல் கண்கள் வழியாக நீரை வெளியேற்ற ஆரம்பித்தது. அவை மொத்தமாக படையெடுத்து மூவரின் உருவத்தையும் மறைக்கும் நொடி தான் கண்டு கொண்டாள் அழுகிறோம் என்று. கன்னத்தை தொடும் முன் அழுந்த துடைத்தவள்,

“இப்ப எதுக்கு மூனு பேரும்   அழுதுட்டு இருக்கீங்க. எனக்கு என்னமோ சாவு வீட்ல இருக்குற மாதிரியே இருக்கு.” என்றாள்.

மூவரும் அவளை திரும்பிப் பார்க்க, “எப்ப பாரு அழுதுட்டே இருந்தா வீடு எப்படி விளங்கும். குடிகார மகனுக்கு சாப்பாடு ஊட்ட தெரிஞ்சா மட்டும் போதாது தைரியமா இருக்கவும் சொல்லிக் கொடுத்து இருக்கணும்.” என்ற மனைவி முறைத்தவன்,

“யாருக்குடி தைரியம் இல்லை? என்னோட தைரியம் என்னன்னு தெரியுமா உனக்கு. தேவை இல்லாம பேசிட்டு இருக்காத.” என கோபமாக பேசினான்.

“உனக்கு தான் தைரியம் இல்லை.” என்றவளின் விழி அவனை கேவலமாக பார்க்க, அழுகையை நிறுத்தியவன் துணைவியை நெருங்கினான் உஷ்ணத்தோடு.

அருகில் வருபவனை பார்க்காமல் பின்னால் இருக்கும் மாமியாரை பார்த்தவள், “நீங்க தூங்க போனதும் உங்ங மகன் பண்ண வேலை என்னன்னு தெரியுமா?” என்றிட, வேகமாக வந்தவனின் கால்கள் நின்றது.

நடையை நிறுத்தியவனை கேலி பார்வை பார்த்தவள், “இதுக்கு பேர் தான் தைரியம் இல்லைன்னு சொல்றது.” என்றாள்.

ஏதாவது பேசினால் நேற்று இரவு நடந்தது பெற்றோர்களுக்கு தெரிந்து விடும் என்பதால் அவன் முறைத்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்து விட்டான். ஆடவன் செயலில் லேசாக சிரிப்பு தோன்றியது அகல்யாவிற்கு.

“நேத்து என்ன நடந்துச்சு?” என்ற மாமியாரின் பேச்சில் சிரிப்பை மறந்தவள்,

“அது தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க?” என்றவளும் கணவனை பின் தொடர்ந்தாள்.

***

போனில் எதையோ தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தான் அவன். அவனையே அதிதீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தாள் அகல்யா. எதர்ச்சையாக திரும்பியவன் மனைவியின் பார்வையை கண்டுகொள்ள, முறைத்து விட்டு தன் வேலையில் கண்ணாக இருந்தான்.

இருந்தும் சில நொடிகளில் பார்வை அவளிடம் சென்றது. இன்னும் கண்ணெடுக்காமல் தன்னை பார்த்துக் கொண்டிருக்கும் மனைவியின் முன் நின்றவன், “எதுக்கு என்னை இப்ப பார்த்துட்டு இருக்க?” என்று கேட்டிட,

“நீ நல்லவனா கெட்டவனான்னு யோசிச்சிட்டு இருக்கேன்.” என்றாள்.

“நான் கெட்டவன் தான்.”

“அது தெரியுது!” என்றதும் கோபமான பார்வையை வீசியவன், “அப்புறம் எதுக்கு சந்தேகம் வருது?” கேட்டான்.

“இல்ல உன்னையும் ஒரு பொண்ணு நல்லவன்னு நம்பி கல்யாணம் பண்ணி இருக்கு பாரேன். இந்த அதிசயம் எப்படி நடந்துச்சுன்னு  யோசிச்சிட்டு இருக்கேன். கெட்டவனா இருக்க நீ எப்படி நல்லவனா வேஷம் போட்டு அந்த பொண்ண ஏமாத்துன?” இவ்வார்த்தையை அவள் உதிர்த்ததும் தரணீஸ்வரனின் முகம் முற்றிலும் மாறிவிட்டது.

மனக்கண்ணில் அதை நோட்டம் இட்டவள் கடந்த காலத்தை பேசுவான் என்று எதிர்பார்க்க, அவனோ வேகமாக அங்கிருந்து சென்று விட்டான். போகும்பொழுது கோபம் மொத்தத்தையும் கதவில் காட்டிவிட்டு செல்ல, அது கொடுத்த சத்தத்தில் இதயம் தூக்கி போட்டது.

போட்ட திட்டம் வீணாய் போனதில் சலித்துக் கொண்டவள் அன்றைய நாளை கடத்தினாள். அவ்வளவு நிம்மதியாக கடக்க விடமாட்டேன் என்பது போல் தள்ளாடிக் கொண்டு அறையில் நின்றான் தரணீஸ்வரன். கண்டபடி வசை பாடியவள் தூங்க முயன்றாள்.

“எந்திரிடி! நான் நல்லவன் மாதிரி வேஷம் போட்டு அவளை ஏமாத்துனனா? என்னை பார்த்தா உனக்கு அப்படியாடி தெரியுது. அவ தான்டி வேஷம் போட்டு என்னை ஏமாத்திட்டா.” அவன் பேச வந்ததும் கண்டு கொள்ளாமல் படுத்திருந்தவள் வேகமாக எழுந்து அமர்ந்தாள்.

விஷயத்திற்கு வராமல் உளறிக் கொண்டே இருந்தான் தரணி. அவனைப் பேச வைக்க முடிவெடுத்தவள், “சும்மா நடிக்காதடா. நீ தான் அந்த பொண்ண ஏமாத்தி இருக்க. அதனால தான் உன்னோட வாழ்க்கை வேணாம்னு ஓடிப் போயிட்டா.” என்று உசுப்பி விட்டாள்.

வெறி பிடித்தவன் போல் கத்தியவன், “ஆமா! நான் தான் அவள ஓட வச்சேன். எல்லாத்துக்கும் நான் தான் காரணம்.” என்று கடந்த காலத்திற்குள் நுழைந்தான்.

***

தரணி நிம்மதி சிறிது சிறிதாக தொலைய ஆரம்பித்தது. ஆதிலட்சுமிக்கும் மனைவிக்கும் சுத்தமாக ஆகவில்லை என்பதை அறிந்தவன் அமைதியாக நாட்களை கடத்தினான். இருந்தும் விடுவதாக இல்லை மனைவி. தினமும் இரவு அவனோடு சண்டையிட்டாள் உன் அன்னை சரியில்லை என்ற புகாரோடு.

விட்டுக் கொடுத்துப் போனான் தினமும் அவளுக்கு பிடித்த அனைத்தையும் வாங்கி கொடுத்து. ஹனிமூன் செல்ல அவள் விருப்பப்பட, கம்பெனியில் முக்கியமான வேலை இருப்பதால் கொடைக்கானலுக்கு ஏற்பாடு செய்திருந்தான். அவளோ வெளிநாடு செல்ல வேண்டும் என்று அடம் பிடித்தாள்.

மெதுவாக விஷயம் பெற்றோர்கள் காதிற்கு வர, “கம்பெனிய நான் பார்த்துக்கிறேன் நீ போயிட்டு வா.” என்று அனுப்பி வைத்தார் தயாளன்.

மனைவியோடு வெளிநாடு சென்றவன் ஒரு வாரம் கழித்து தான் வந்தான். வரும்பொழுது இருவரும் சண்டையோடு  வந்தார்கள். தேன்நிலவிற்கு சென்றவர்கள் அதை முழுமையாக அனுபவிக்கவில்லை. ஊருக்கு கிளம்ப மனம் வராமல் இன்னும் சில நாட்கள் இருக்கலாம் என்ற அடம் பிடித்தாள் சிவானி.

ஒரு வாரம் ஆகிவிட்டதால் அவன் கிளம்ப தயாராக, “இப்ப நீ எதுக்காக போறன்னு தெரியும். அங்க உங்க அம்மா கிட்ட என்னை மாட்டிவிட்டு கஷ்டப்பட வைக்க தான. அந்த பொம்பளைக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல. எப்ப பாரு எதையாது ஒன்ன சொல்லிக்கிட்டே இருக்கு. சரியான குரங்காட்டியா இருக்கும் போல.” என்றதும் அவளிடம் முழுவதுமாக தன்னை மாற்றிக் கொண்டு அன்னையின் மகனாக பேசினான்.

“நான் சொல்றதுல எந்த தப்பும் இல்லை. ஒரு ஷாப்பிங் போகணும்னா கூட அவங்க கிட்ட பர்மிஷன் கேட்க வேண்டியதா இருக்கு. உன்கிட்ட காசு கேட்டா எதுக்கு இவ்ளோ செலவு பண்றன்னு என்னை கேள்வி கேக்குறாங்க. அவங்க யாரு அதெல்லாம் கேட்க.”

“போன மாசம் நீ ரொம்ப அதிகமா செலவு பண்ணிட்ட சிவா. அதனால தான் அம்மா உன்ன கேட்டு இருப்பாங்க.”

“பண்ணா என்ன தப்பு? என்னை சந்தோஷமா வச்சுக்கிறது தான உன்னோட வேலை. என்னை கேள்வி கேட்கிற உரிமை உன் அம்மாக்கு இல்ல. இனிமே  மாசம் எனக்கு ஒரு தொகைய கொடுத்துடு. என் தலையெழுத்து உன்ன காதலிச்ச பாவத்துக்காக அதுலயே எல்லாத்தையும் முடிச்சுக்கிறேன்.”

“சிவா நீ எல்லாத்தையும் தப்பா புரிஞ்சிக்கிற. எங்க அம்மா நீ நினைக்கிற மாதிரி இல்ல. அனாவசிய செலவு எதுக்குன்னு தான் நினைக்கிறாங்க. இப்ப கூட எவ்ளோ பொருள் வாங்கி வச்சிருக்கன்னு பாரு. இதெல்லாம் நீ யூஸ் பண்ண கூட மாட்ட. ஆனாலும் வாங்கி இருக்க.”

“ஓஹோ! இதெல்லாம் அனாவசிய செலவா தெரியுதா உனக்கு. எங்க அப்பா ஒரு தடவ கூட இந்த மாதிரி பேசுனது இல்ல. பொண்டாட்டிக்கு செலவு பண்றதை இப்படி அசிங்கப்படுத்துற.”

“அசிங்கப்படுத்தல சிவா. இப்பவே எல்லாத்தையும் செலவு பண்ணிட்டா பிற்காலத்துல என்ன பண்ணுவோம். அதை யோசிச்சு தான் நம்மளை சிக்கனமா குடும்பம் நடத்த சொல்றாங்க.”

“திரும்பத் திரும்ப அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்கன்னு என்கிட்ட சொல்லாத. ஆம்பள தான நீ… ஃபியூச்சருக்கு என்ன தேவையோ அதை சம்பாதி. அதை விட்டுட்டு என்னை கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்காத.” என்ற பெரும் போர்க்களத்தோடு இல்லம் திரும்பினார்கள்.

சென்னையில் படிக்கும் பொழுது அவளுடன் தொடர்பில் இருந்த நண்பர்கள் வட்டாரத்தை வீட்டிற்கு அழைத்து இருந்தாள். வந்தவர்கள் உடையும் பேச்சும் சுத்தமாக பிடிக்கவில்லை மூவருக்கும். காதலிக்கும் பொழுது இந்த மாதிரி நட்புகள் இருக்கிறது என்று தெரியாது தரணீஸ்வரனுக்கு. பெற்றோர்களின் முகமாறுதல்களை அறிந்து மெதுவாக அவளிடம் பேச்சு கொடுக்க,

“இதுல என்ன தப்பு இருக்கு தரணி. அவங்க டிரஸ மட்டும் பார்த்து பேசாத.” என்று பேச்சை முடித்தாள்.

நாளுக்கு நாள் மருமகள் செய்யும் அட்டூழியங்களை சகிக்க முடியாமல் நேரடியாகவே சண்டையிட ஆரம்பித்தார் ஆதிலட்சுமி. திருமணத்திற்கு சம்மதிக்காமல் தன்னை அலைய விட்ட கோபத்தையும் சேர்த்து அவளும் காட்டி விட்டாள். தினம் ஒரு சண்டை என்று அந்த வீடு ஆர்ப்பாட்டத்தோடு பகலையும் இரவையும் சந்தித்தது.

சில நேரம் அன்னைக்கு பேசுபவன் பல நேரம் மனைவி பக்கம் இருப்பான். காரணம் ஒவ்வொரு முறையும் அவன் காதலுக்காக தான் எல்லாம் என்று வாயடைத்து விடுவாள். காதலியின் மனதில் இருக்கும் காதலுக்காக அனைத்தையும் விட்டுக் கொடுத்து போனான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
29
+1
53
+1
2
+1
4

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *