346 views

  அத்தியாயம் 8 ❣️

அலுவலகம் , வீடு என்று இளந்தளிர் மற்றும் கோவர்த்தனன் தங்களது அன்றாட வேலைகளை சிறப்பாக செய்து கொண்டு இருந்தனர்.

அதேபோல் , ஹரீஷின் அருகாமையில் கோவர்த்தனன் தனது மன அழுத்தம் தளர்ந்து , கல்லூரியில் இருந்த பழைய கோவர்த்தனனாக மாறி நண்பனை ஒருவழியாக்கிக் கொண்டு இருந்தான்.

இளந்தளிர் வீட்டில் எப்போதும் போல் , சுபாஷினி தன் வாலுத்தனத்தாலும் , இளந்தளிர் அவளை மிரட்டுவதிலும் அவர்கள் வீட்டைக் கலகலப்பாக வைத்திருந்தனர்.

ஒருநாள் மாலை வேளையில் , ஏழு மணியளவில் தங்களது வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்து இளந்தளிர் , சுபாஷினி இவர்களது தாய் சிவசங்கரி மூவரும் அந்த நிலா வெளிச்சத்தின் சுகந்தங்களை , ஆசுவாசமாக , அனுபவித்து , அந்த தருணத்தில் லயித்து , ரசித்துக் கொண்டு இருந்தனர்.

அன்றைய இரவு உணவும் அங்கே நடந்தேறிக் கொண்டு இருந்தது.

” சுபா ! காரச் சட்னியை அளவா ஊத்திச் சாப்பிடு. ஏற்கனவே ஒழுங்கா சாப்பிடாம மயக்கம் போட்டு விழுந்துட்டு இருக்க , இப்போ இப்படி சாப்பிட்டா கண்டிப்பாக அல்சர் வந்துரும் ” 

சின்ன மகளை அதட்டினார் அன்னை.

” கொஞ்சமா தான்மா ஊத்துறேன் ” 

அவளும் சினுங்கிக் கொண்டே பதில் கூறியபடி தோசையைப் பிட்டு வாயில் வைத்துக் கொண்டாள்.

இளந்தளிர் அந்த ஏகாந்த நேரத்தைக் கணப்பொழுதும் தவற விடாமல் , ரசனையில் மிதந்து கொண்டிருந்தாள். 

”  அக்கா !  என்ன சாப்பிடாம வேடிக்கைப் பாத்துட்டு இருக்க ? ” என்று மனதில் தமக்கையிடம் கேட்டாள் சுபாஷினி.

” சுபா! இந்த மாதிரி நாம மொட்டை மாடில உக்காந்து டின்னர் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சுல்ல ! அதான் இந்த க்ளைமேட் , செனாரியோ (scenario) எல்லாமே பர்ஃபெக்ட் ஆக இருக்கு. அதனால் தான் இந்த நிமிஷத்தை ரசிச்சுக்கிட்டு இருக்கேன் ” 

ரசனையாய்  அவளிடம் இருந்து பதில் வந்தது.

” ஆமால்ல ! இனிமே இதை வாரா வாரம் பண்ணலாம். அப்போ தான் நமக்கும் நல்ல ஃபீல் கிடைக்கும் ” 

அதை உணர்ந்து ஒப்புக் கொண்டாள் சுபாஷினி.

” ம்ம். பண்ணலாம் , பண்ணலாம். நீ போய் தட்டைக் கழுவி வச்சுட்டு வா ” 

என்று சிவசங்கரி அவளை அனுப்பி வைக்க , இளந்தளிரும் உண்டு முடித்திருந்ததால் அவளும் தான் சாப்பிட்டத் தட்டைக் கழுவி வைத்து விட்டு வந்தாள்.

சிவசங்கரியும் அதேபோல் , செய்து விட , இரவு உணவை முடித்து விட்டு , அங்கேயே சில மணி நேரங்கள் அமர்ந்திருக்க முடிவு செய்து இருந்தனர்.

” நான் உங்கிட்ட ஒரு விஷயத்தைப் பத்திப் பேசனும்னு நினைச்சுட்டே இருந்தேன் இளா. ஆனா அதுக்கான சரியான நேரம் தான் அமையல. அதுக்காக கேட்காமலே தள்ளிப் போட முடியாதே ! ” 

தாய் சிவசங்கரியின் பேச்சில் கனிவு , தயக்கம் நிறைந்திருப்பதைக் கவனித்து அவரை கூர்மையான பார்வையில் ஏறிட்டாள் இளந்தளிர்.

ஏதோ முக்கியமான விஷயம் என்று சுபாஷினி குறும்புப் பேச்சைக் கைவிட்டு விட்டு அன்னையின் பேச்சில் கவனம் செலுத்தினாள்.

” நீங்க இவ்ளோ தயக்கமா பேசற அளவுக்கு அது என்ன விஷயம்ன்னு சொல்லுங்கம்மா ? ” 

இங்கு வீட்டில் யாருமே இவ்வாறு சுற்றி வளைத்துப் பேசியதில்லை. அப்படி இருக்க தன்னிடம் பேசுவதற்கு அன்னை இவ்வளவு தயக்கம் கொள்கிறார் என்றால் அது என்னவாக இருக்கும் என்று அவரை பார்த்தாள் இளந்தளிர்.

” எல்லா அம்மாவும் கேட்குறது தான்.உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாமான்னு யோசிக்கிறேன். உன்னோட சம்மதத்துல , எல்லாம் நடந்தா சரி தான். நீ என்ன சொல்ற ?” 

மகளிடம் திருமணப் பேச்சை எடுத்தவர் , இளந்தளிரின் சம்மதமோ அல்லது மறுப்போ எதுவாயினும் அதைக் கேட்கத் தயாராக இருக்கிறார் என்பது புரிந்தது அவளுக்கு.

அதே சமயம் அக்காவுக்குத் திருமணம் செய்து வைக்கத் தாய் விருப்பம் கொள்வதைக் கேட்ட சுபாஷினிக்கும் சந்தோஷம் தான். 

சக தோழியரின் திருமணம் மற்றும் அவர்களது சகோதர , சகோதரிகளின் திருமணம் இவற்றையும் , சொந்தங்களில் நடைபெறும் திருமணம் இவற்றையும் இதுவரை பார்த்து வியந்திருந்த சுபாஷினிக்குத் தன் சொந்த அக்காவின் திருமணத்தைக் கண்டு களிக்க வாய்ப்பு கிட்டியதே ! அளவில்லா ஆனந்தத்தில் திளைத்துத்தான் போனாள் இளையவள்.

அவர் திருமணப் பேச்செடுத்ததும் திடுமென தனக்குள் எழுந்த இயல்பான பயம், பதட்டத்தினூடே சிக்கித் தவித்தவள் அதிலிருந்து மெல்ல மீண்டு , 

” கரெக்ட் தான்மா. இவ்வளவு நாளா கேட்பிங்கன்னு எதிர்பார்த்தேன். இன்னைக்குக் கேட்டுட்டிங்க. உங்க விருப்பம்ன்னு பொய்யாவும் சொல்ல முடியல , கொஞ்ச நாள் இல்லனா ஒரு வருஷம் போகட்டும்ன்னும் சொல்ல முடியல.இப்போதைக்கு இதைப் பத்தி எந்த டிசிஷனும் எடுக்கறதுக்கு மனசளவுல நான் ப்ரிப்பேர் ஆகல.அது தான் உண்மை.உங்களுக்கு என்ன பதில் வேணும்னு நீங்க நினைக்குறிங்க ? ” 

அவரிடம் மனதில் நினைத்ததை மறைக்காமல் கூறி இருந்தாள் மகள்.

அக்காவின் பதிலைக் கேட்டு சுபாஷினியும் ஆர்வமானாள். 

” நீ என்ன முடிவு சொன்னாலும் பரவாயில்லை. நான் கேட்கனும்னு நினைச்சதைக் கேட்டாச்சு. முன்னாடியே சொன்ன மாதிரி உன்னோட விருப்பம் , சம்மதம் எல்லாமும் முக்கியம் தான்.உனக்குச் சட்டுன்னுக் கல்யாணத்தை முடிச்சுட மாட்டேன். உனக்கான வரனைத் தேடி , பொருத்தம் பார்த்து , பையனோட பழக்க வழக்கம் எல்லாம் பார்த்து எல்லாத்தையும் தீர விசாரிச்சுட்டுத் தான் உனக்குக் கல்யாணம் பண்ணி வைப்பேன். அதுனால யோசிக்கவும் டைம் நிறையவே இருக்கு. நல்லா யோசி ” 

எதையும் பக்குவமாக எடுத்துக் கூறுவது , கையாள்வது இந்த குணநலன்கள் அவளது தாயிடம் இருந்து தான் இளந்தளிருக்கு வந்துள்ளது.அப்படி இருக்கு அக்குணங்களின் இருப்பிடமாகத் திகழும் அவருக்கு தன் மூத்த மகளின் எண்ணவோட்டத்தைக் கண்டறிவது கடினமான விஷயம் இல்லையே ! 

” ம்ம் சரிம்மா. யோசிச்சு சொல்றேன். எனக்கு கல்யாணம் செய்துக்க மனசளவுல ஒரு க்ளாரிட்டிக் கிடைச்சா , ஓகே சொல்றேன் ” 

இளைய மகள் மௌனமாக இருவர் பேசுவதைக் கவனிக்கிறாள் என்ற போதும் , தங்களது உரையாடல்கள் இவளது மனதிலும் பதிந்து இருக்கும் தானே , அப்போது இவளும் தன் கல்யாணம் பற்றிய பேச்சு வார்த்தையின் போது புரிந்து , தன்னுடைய விருப்பத்தை யோசித்துக் கூறவும் இயலும் என்ற ரீதியில் தான் சிவசங்கரி இளையவள் இருக்கும் போதே பேச ஆரம்பித்தார்.

இளந்தளிரின் எண்ணமும் அவளது வாயிலாக தெரிந்து விட , அவளது சம்மதத்தை உறுதிப்படுத்திய பின்னரே மேற்கொண்டு வரன் பார்க்கத் தொடங்கலாம் என்று சிவசங்கரி நினைத்தார்.

இவர்கள் நிலா வெளிச்சத்தில் இரவுச் சாப்பாடு , நீண்ட நேர புத்துணர்வான , இதமான உரையாடல்கள் , அக்கா , தங்கைகளுக்கிடையேயான சீண்டல்கள் இத்தனை இத்தனையாய் சந்தோஷங்களை வாரியிறைத்த அந்த நாளின் முடிவில் அக்குடும்ப உறுப்பினர்கள் மிகுந்த மகிழ்ச்சியாகவே உறங்கச் சென்றனர்.

ஹாலில் மெத்தையில் உறங்கி விட்டார் சிவசங்கரி. சகோதரிகள் இருவரும் தாங்கள் உறங்குவதற்கு ஆயத்தம் செய்தவர்கள் துயில் கொள்ள தயாராகியிருக்க , 

சுபாஷினி , ” ஏன்க்கா ! உன் கல்யாணம் சீக்கிரமே நடந்தா எவ்ளோ ஜாலியா இருக்கும் ! ” என்று தொடங்கினாள்.

அவளை விசித்திரமாகப் பார்த்து வைத்தவள் ,

” ஏன்டி உனக்கு இந்த நினைப்பு ? ” 

” உன் கல்யாணத்தப்போ என்னென்ன சடங்கு , சம்பிரதாயங்கள்லாம் நடக்கும்னு நானும் பார்த்து தெரிஞ்சுப்பேன்ல , அதோட நம்ம வீட்ல ரொம்ப நாள் கழிச்சு நடக்கப் போற ஸ்பெஷல் விசேஷமாச்சே ! மிஸ் பண்ணுவேனா நானு ! ” என்று புன்சிரிப்பை உதிர்த்தாள்.

அவளோடு சேர்ந்துப் புன்னகைத்த இளந்தளிர் ,

” இப்படி ஆசை கூட உனக்கு இருக்கா ?  இதையெல்லாம் யோசிக்காமல் , தூங்குடி “

மிரட்டவில்லை ஆனால் கண்டிப்புடன் கூறினாள். 

” அக்கா! நான் இப்போ எல்லாம் ஹெல்த்தியா தான இருக்கேன் ? ரொம்ப வீக் இல்லைல ? ” 

வேறு கேள்வி கேட்டாள் சுபாஷினி.

” தூங்க சொன்னா , என்னடி கேள்வியா கேட்டுட்டு இருக்க  ? ” 

” ப்ளீஸ் சொல்லுக்கா ! ” 

இறைஞ்சிய தங்கையிடம் ,

” அம்மா எதுவும் கம்ப்ளைண்ட் பண்றது இல்லை. அப்போ நீ ஹெல்த்தியா தான் இருக்க ” 

” நல்லவேளை அன்னைக்கே கோவர்த்தனன் சார் எனக்கு அட்வைஸ் செஞ்சாரு. அது மட்டுமில்லாமல் , ” இப்போ நான் உன்னை இங்க கூட்டிட்டு வந்து அட்மிட் செஞ்சது இதான் கடைசி தடவையா இருக்கனும். இனிமே , இந்த மாதிரி சுவிட்ச்வேஷன்ல வந்து நிக்கக் கூடாது ” –  ன்னுக் கேட்டுக்கிட்டாரு. மிரட்டல்லாம் இல்லை. ஜஸ்ட் அட்வைஸ் அண்ட் கன்சர்ன் க்கா. அவர் சொன்னதில் இருந்து நானும் அதை ஸ்ட்ரிக்ட் ஆக ஃபாலோவ் செய்றேன் ” 

மருத்துவமனையில் சேர்த்திருந்த அன்று சுபாஷினியிடம் கோவர்த்தனன் என்னென்ன விஷயங்களைப் பேசியுள்ளான் என முழுமையாக தெரியாமல் இருந்திருந்தாலும் , சிறு பெண்ணிடம் எந்தவொரு அனுகூலமும் எடுத்துக் கொள்ளாமல் , அவளுடைய உடல்நிலை குறித்து அறிவுரை மட்டுமே வழங்கி இருக்கிறான் அந்த ஆடவன் என்று அப்போது புரிந்தது இளந்தளிருக்கு.

 ” இன்னும் ஒரு விஷயம்க்கா. நர்ஸ் பில் கட்ட சொன்னதும் கோபப்படாம , உங்க வீட்ல இருக்கறவங்ககிட்ட கேளுன்னுக் கூட சொல்லாம அவரே பணத்தைக் கட்டிட்டாரு. அதுக்கப்றம் தான் உனக்குக் கால் பண்ண ட்ரை செஞ்சு இருப்பாரு போல. நான் அப்போ மயக்கமா இருந்ததால பில் பே பண்ணதுக்கு அப்றம் என்ன நடந்துச்சுன்னுத் தெரில. கண்ணு முழிக்கும் போது நீ எதிர்ல நின்னுட்டு இருந்த ” 

திருமணத்தில் ஆரம்பித்து , இடையில் உடல்நலனைப் பற்றிய சந்தேகத்தைக் கேட்டு , தற்போது கோவர்த்தனனைப் பற்றிய பேச்சில் முடித்திருந்தாள் தங்கை.

தாய் அவளிடம் திருமணம் செய்து வைக்கக் கேட்ட சம்மதமும் , தமக்கை இறுதியாக கூறிய கோவர்த்தனனின் நடவடிக்கைகளும் உள்ளத்துள் ஒன்றன் பின் ஒன்றாக  வந்து , அவளது அமைதியான மனதில் அழுத்தமாக அல்லாது மென்மையாக தன் இயல்பான குணத்தால் கால் பதித்து இருந்தான் கோவர்த்தனன். 

அவளறிந்தோ , அறியாமலோ அவனது , 

 ” தளிர் ” என்ற அழைப்பு சரியான நேரத்தில் ஞாபகத்தில் வந்து இளந்தளிரைச் சிலிர்க்க வைத்தது.

அதற்கு நேர்மாறாக , 

” அது பொதுவா எல்லாரும் செய்ற ஹெல்ப் அண்ட் அட்வைஸஸ் தான். அவருக்கு இயல்பாகவே ஹெல்ப்பிங் டென்டன்ஸி இருக்கும். அதனால உனக்கு ஹெல்ப் பண்ணாரு. அட்வைஸ் பண்ணதும் அதே மாதிரியான விஷயம் தான். இதுக்கு இவ்ளோ உணர்ச்சி வசப்பட்டு பேசாத சுபா ” 

தங்கையிடம் கூறியவள் , இதை தனக்கும் சேர்த்துத் தான் கூறி இருந்தாள்.

கோவர்த்தனனிடம் தன் மனம் இளகி விடுமோ  ?என்ற அச்சத்தினால் , தனக்குத் தானே கூறிக் கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையே ! 

காலமும் , நேரமும் தலையிட்டால் இது தகர்ந்திடுமோ ? 

– தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *