463 views

“ஐயோ! சார் போதும் நிறுத்துங்க”

“வயசான உடம்பு இதுக்கு மேல முடியாது.”

“உங்க பொண்டாட்டி எனக்கு பொண்ணு மாதிரி.” என்றதும் வேகமான குத்து ஒன்று அழகுசுந்தரத்தின் வாயை தாக்க,

“பொண்ணு மாதிரி இல்ல சார் பொண்ணே தான்.” என்று மயக்கத்தில் சரிந்தார்.

பத்து நிமிடங்கள் கடந்திருக்க, மயக்க நிலையில் சுவற்றில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தார் அழகுசுந்தரம். பக்கத்தில் நின்றிருந்த ரகுவரன் அலட்டிக் கொள்ளாமல் முட்டி மடக்கி குனிந்து, “டேய்! நீ மயங்கலன்னு எனக்கு தெரியும். மரியாதையா எந்திரிச்சிடு இல்லன்னா அடுத்த ரவுண்டுக்கு தயாராகிடுவேன்.” தன் குட்டு உடைந்து விட்டதை அறிந்ததும் பதறி கண் திறந்தார் அவர்.

“அடிக்கிற எனக்கு தெரியாதாடா… மயக்கம் வர அளவுக்கு அடிக்கிறனா இல்லையான்னு. தில்லாலங்கடி என்கிட்டயே தில்லாலங்கடி வேலை காட்டுறியே நீ எவ்ளோ பெரிய போக்கிரியா இருப்ப.” என ரகுவரன் கைகளை முறுக்க,

“அய்யய்யோ சார் விட்டிடுங்க. சத்தியமா வலி தாங்க முடியாம தான் மயக்கம் போடுற மாதிரி நடிச்சேன். இதுக்கு மேல ஒரு அடி விழுந்தாலும் என்னை உயிரோட பார்க்க முடியாது.” காலில் விழப் போகிறான் என்ற மிதப்பில் வந்த அழகுசுந்தரம் அவமானம் பார்க்காது ரகுவரன் காலில் விழுந்து விட்டார்.

அவர் மீது பாவப்பட்டு தன் செயலை நிறுத்தவில்லை ரகுவரன். தொடர்ந்து அடித்ததன் காரணமாக விரல்கள் லேசாக வழி எடுக்க, பெருந்தன்மையாக விட்டுக் கொடுப்பது போல் பாவனை செய்தான்.

அழகுசுந்தரத்துக்கு தில் அதிகம் போல எழுப்பி விட உதவி கேட்டு கை நீட்டினார் ரகுவரனிடம். அவனோ பல்லை கடித்துக் கொண்டு முறைக்க, “வயசானவனுக்கு உதவி செஞ்சா பெரும் புண்ணியம் தம்பி.” என்றவர் உடனே தன் வார்த்தையை திருத்திக் கொண்டார், “புண்ணியம் மருமகனே” என்று.

பட்டென்று புன்னகைத்தான் ரகுவரன். அவன் சிரிப்பை பார்த்ததும் நிம்மதி பெருமூச்சு விட்ட அழகுசுந்தரம் தானே எழுந்து நின்று, “ஆமா கட்டுன பொண்டாட்டி பின்னாடி எதுக்காக ரோமியோ மாதிரி சுத்திட்டு இருந்த. ரெண்டு பேருக்குள்ள ஏதாச்சும் பிரச்சனையா.” என கேட்டார்.

பதில் சொல்லாத ரகுவரன் மௌனமாக தலையை மட்டும் அசைக்க, “உனக்கு விருப்பம் இருந்தா என்ன பிரச்சனைன்னு என்கிட்ட சொல்லு. சேர்த்து வைக்க நல்ல ஐடியா தரேன்.” என்றார் அழகு.

மனைவி சம்பந்தப்பட்ட கேள்வி என்பதால் உடனே காதல் நேரத்திற்கு பறந்து விட்டான் ரகுவரன்.

“பொண்டாட்டி எங்க இருக்க?”

“இப்பதான் வேலை முடிஞ்சிது ரகு, இன்னும் அரை மணி நேரத்துல அங்க இருப்பேன்.”

“சீக்கிரம் வாடி பொண்டாட்டி மதிய நேரம் நீ இல்லாம சாப்பாடு இறங்க மாட்டேங்குது.”

“ஏழு கழுதை வயசானதுக்கு அப்புறமும் இதே டயலாக்கை வச்சு பொழப்ப தள்ளு.”

“அடியே! என்ன நக்கலா?”

“பின்ன இருக்காதா”

“அப்படி என்னடி இந்த ரகுவரன் பண்ணிட்டான்.”

“ஆரம்பத்துல ஏதோ ஓவர் லவ்ல சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தேன். உன் பொண்ணுக்கு பத்து வயசு ஆகுது. பையனுக்கு நாலு வயசாக போகுது. இன்னமும் குழந்தை மாதிரி நான் வந்தா தான் சாப்பிடுவேன்னு அடம் பிடிக்கிறது நல்லாவா இருக்கு.”

“என்னடி பண்ண பொண்டாட்டி என் பசங்களுக்கு வயசு ஏறுற மாதிரி எனக்கு என் பொண்டாட்டி மேல ஆசை ஏறிட்டே போகுதே. அவ தர சாப்பாட்டை விட பத்து நிமிஷம் மடியில படுக்க வைப்பா பாரு அப்ப்ப்பா….” என்று கணவன் இழுக்கும் ராகத்தில் புன்னகைத்தாள் மகிழினி.

“அந்த பத்து நிமிஷம் தான்டி பொண்டாட்டி வாழ்க்கையில நான் எவ்ளோ புண்ணியம் பண்ணி இருக்கன்னு புரியும்.”

“பேசியே மயக்கிடுவடா ரகுவரா…”

“நானாது பேசி தான்டி மயக்குறேன் நீ என்னை பார்த்தே மயக்குற.”

“அப்படி என்ன பார்த்துட்டாங்களாம்”

“ஒன்னா ரெண்டா உன் வரலாறு அதிகம் டி பொண்டாட்டி.”

“ஏதாச்சும் ஒன்னு சொல்லுடா புருஷா கேட்டுக்கிட்டே வரேன்.”

“சொன்னா என்னடி தருவ?”

“வழக்கம்போல எல்லாம் ரகுவரன் விருப்பம்.” என்ற மனைவியின் பேச்சில் அடக்க முடியாத வெட்கம் இருப்பதை கண்டு கொண்டவன்,

“இந்த வெட்கம் வேணும், தருவியா?” கேட்டான்.

பதில் பேசாமல் மகிழினி கைபேசியில் காத்திருக்க, “ஓய் பொண்டாட்டி” குரல் கொடுத்து பதிலை தெரிந்து கொள்ள முயன்றான்.

“நீ வந்ததுக்கு அப்புறம் இந்த வெட்கம் இருந்தா தாராளமா எடுத்துக்கோ சைக்கோ.” என்றதும் இப்பொழுது வெட்க புன்னகை அவன் முகத்தில்.

“நேத்து உன் பையனை இடுப்புல தூக்கி வச்சுக்கிட்டு சமைச்சிட்டு இருந்தல பொண்டாட்டி” என்ற கணவனின் பேச்சுக்கு அவள் பதில் மொழியாக, “ம்ம்ம்” என்க,

“அப்போ நான் கூட உன் பையன் பார்த்துடாம பின்னாடி வந்து இடுப்ப கிள்ளிட்டு போனேன்ல…” என்றான்.

“ஃபிராடு”

புன்னகையோடு தொடர்ந்தான், “நான் கிள்ளுனதும் உன் பிள்ளைய காட்டி நீ என்னை முறைச்ச.” சொல்லும்  போதே அந்த நேரத்தை நினைத்து சிரித்தவன் பேச்சை நிறுத்தினான்.

“முறைக்காம என்ன பண்ணுவாங்கடா ரகுவரா”

“ஹா..ஹா… உன்னை யாரடி அந்த இடத்தை காட்டிகிட்டு வேலை பார்க்க சொன்னா. நல்லா வெண்ணை கட்டி மாதிரி இருந்தா கிள்ள தான் செய்வாங்க.”

“ஃபிராடு உன் வாய திறந்தாலே பொய் தான்டா வருது. நான் எங்கடா புடவை கட்டி இருந்த… இடுப்பு தெரியா.”

“ஈஈஈஈஈ” என்று சமாளித்தவன், “சொல்லிட்டு இருக்கும்போது இடையில தடுத்து நிறுத்தாதடி மக்கு பொண்டாட்டி.” என்று தொடர்ந்தான்.

“நீ முறைச்சதும் நான் பேசாம ஹாலுக்கு வந்துட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு மேடம் என்னை லுக்கு விட்டீங்க. அதுவும் பயங்கர லவ்வோட. நான் கண்டுக்காம டிவி பார்த்துட்டு இருந்ததும்  ரொம்ப கோவம் வந்துருச்சு மேடம்க்கு. உடனே பையனுக்கு விளையாட்டு காட்ற மாதிரி  என்னை கிராஸ் பண்ணி போகும்போது பார்த்த பாரு ஒரு பார்வை…. அங்க ரகுவரன் விழுந்துட்டான்டி அப்படியே.” மனைவியின் செல்ல சில்மிஷங்களை சொல்லி ரசித்தவன் பாடினான்,

“கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைந்தாய்…”

தன்னுள் அவள் பார்வையை உணர்ந்து பாடிக் கொண்டிருந்தவன் அடுத்த வரியை பாடும் பொழுது அழைப்பு துண்டிக்கப்பட்டது. அதைக் கூட உணராமல் ரகுவரன் ஆழ்ந்து பாடிக் கொண்டிருந்தான் மனைவியை நினைத்து. பாடலை முழுவதுமாக பாடியவன், “என்னடி பொண்டாட்டி ஒன்னுமே சொல்ல மாட்ற.” என சாதாரணமாக பேச்சு கொடுக்க, அதன்பின் தான் தெரிந்தது அவள் தொடர்பில் இல்லை என்று.

என்ன ஆனது என்று தெரியாததால் அவனே மீண்டும் அழைத்தான். எடுக்கவில்லை மகிழினி தொடர் அழைப்புகளை. முதலில் சாதாரணமாக அழைத்துக் கொண்டிருந்தவன் பத்து தடவைக்கு மேலாக சென்றதும் பதற்றமானான். அவளுக்கு என்ன ஆனதோ என்று பரிதவித்தவன் அழைத்துக் கொண்டே இருந்தான்.

பலமுறை முழு அழைப்பு விடுத்தவனுக்கு பதில் கொடுக்காத மகிழினி கடைசி அழைப்பை துண்டித்தாள். புருவம் முடிச்சிட்டு கொண்டது ரகுவரனுக்கு. மீண்டும் அழைக்க, இந்த முறை முழுவதுமாக கைபேசி துண்டிக்கப்பட்டிருந்தது. மிகுந்த பதட்டத்தோடு அலுவலகத்தில் இருந்து கிளம்பிய ரகுவரன் அழைத்துக் கொண்டே தேடினான் வரும் வழி எல்லாம்.

வழக்கமாக அவள் தன் அலுவலகம் வரும் வழி முழுவதும் தேடியவன் பயத்தோடு வீட்டிலிருந்தவர்களுக்கு அழைத்து விசாரித்தான். மேலோட்டமாக விசாரித்ததால் அவர்களுக்கு இவனின் பதற்றம் தெரியாமல் போனது. மகி அலுவலகம் சென்றவன் அங்கிருந்தவர்களிடம் விசாரிக்க, எப்போதோ கிளம்பி விட்டதாக தகவல் வந்தது.

ஒன்றும் புரியாமல் பைத்தியம் பிடிக்காத குறையாக அவளை தேடி அலைந்து கொண்டிருந்தான். ரகுவரன் எடுத்திருக்கும் கேஸ் பற்றிய விபரங்களை சேகரிக்க சென்ற ஜூனியர்கள் அவனை அழைக்க, “கொஞ்ச நேரத்துக்கு யாரும் என்னை தொந்தரவு பண்ணாதீங்க.” என்று அழைப்பை துண்டித்துக் கொண்டான்.

நேரம் சென்றதே தவிர மகிழினி எங்கிருக்கிறாள் என்ற தகவல் கிடைக்கவில்லை ரகுவரனுக்கு. மனைவி நலமுடன் இருக்க வேண்டும் என்று ஆயிரம் பிரார்த்தனைகளை வைத்தான் கடவுளிடம். மாலை வேளை வந்துவிட்டது அதைக் கூட உணராமல் அவள் நினைப்பில் சுற்றிக் கொண்டிருந்தான்.

மகள் தனக்காக காத்திருப்பாள் என்ற எண்ணம் மறந்து அலைந்தவனை ஞாபகப்படுத்தியது அலாரம். மகளுக்காக இவன் வைத்திருக்கும் எச்சரிக்கை ஒலி இது. தன்னை மறந்து எந்த வேலை பார்த்தாலும் இந்த ஓசை மகளை அழைத்து வர வேண்டும் என்ற செய்தியை அவனுக்கு கொடுக்கும். ஒலி கேட்டதும் இன்னும் பதட்டம் அதிகமானது அவனுக்கு.

ஒன்றும் புரியாமல் நடுரோட்டில் நின்றவன் எண்ணத்தில் ஆகாஷ் வர, அழைத்தான் மச்சானுக்கு. வேலையில் இருந்தவன் முதலில் எடுக்காமல் பின் எடுத்து விசாரிக்க,

“எதுக்கு அந்த போன வச்சிருக்க? தூக்கி போட்டு உடை.” என்று கத்தினான் ரகுவரன்.

“ஏன்? நீ வேற போன் வாங்கி தர போறியா.” என்றவன் நக்கல் பேச்சு ரகுவரன் இருக்கும் நிலைமைக்கு எரிச்சலை கொடுத்தது.

“உன் காமெடிக்கு அப்புறம் சிரிக்கிறேன் என் பொண்ண போய் கூட்டிட்டு வா.”

“மணி என்ன ஆகுது இப்ப வந்து சொல்ற கூட்டிட்டு வான்னு. உன்னால போக முடியாதுன்னு தெரியும் போதே என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல. உன்னால என் மருமக காத்துட்டு இருப்பா அங்க.”

“டேய்! நான் என்ன நிலைமையில இருக்கேன்னு தெரியாம பேசாத. ஒழுங்கு மரியாதையா என் பொண்ண கூட்டிட்டு வா.” செய்தி சொன்ன கையோடு அழைப்பை துண்டித்து விட்டான் ரகுவரன்.

மனைவியின் தரிசனமும் கிடைக்காமல் அவள் கைப்பேசியும் எடுக்கப்படாமல் பதட்டத்தில் தன்னை மறந்தவன் எங்கு செல்கிறான் என்று அவனுக்கே தெரியவில்லை. நன்றாக இருட்ட ஆரம்பித்துவிட்டது. கார் ஓட்டும் தைரியம் இல்லாததால் மிக குறைவான வேகத்தில் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்க, கைபேசி ஒலித்தது.

பார்த்தவன் மனைவி எண் என்று தெரிந்ததும் படக்கென்று அழைப்பை ஏற்று, “எங்கடி போன? எவ்ளோ நேரம் உன்னை தேடிட்டு இருக்கிறது. ஃபோனை எதுக்காக ஸ்விட்ச் ஆப் பண்ணி வச்சிருக்க. இப்போ எங்க இருக்க? உனக்கு எதுவும் பிரச்சனையா?” படபடவென்று ஆதங்கத்தோடு மனைவியை நலம் விசாரித்தான்.

“எனக்கு ஒன்னும் இல்ல ரகு நான் நல்லா இருக்கேன். இப்ப நான் வீட்டுக்கு தான் போயிட்டு இருக்கேன். நீயும் வீட்டுக்கு வந்துடு மத்த விஷயத்தை நேர்ல பேசிக்கலாம்.” மனைவியின் குரலைக் கேட்ட பின் பயம் விட்டிருந்தாலும் ஏதோ ஒரு சந்தேகம் அவனுக்குள் ஓடியது.

நேரில் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் வேகமாக புறப்பட்டான் வீட்டிற்கு. அவன் வருவதற்குள் மகிழினி வீடு வந்து சேர்ந்தாள்.

***

சாலையில் போடப்பட்ட சமஞ்சை விளக்கை தவிர வேறு எங்கும் நிற்கவில்லை ரகுவரனின் வாகனம். அதிவேகத்தில் வந்தவன் காரை வாசலில் விட்ட கையோடு சாவியை கூட எடுக்காமல் ஓடினான் மனைவியை தேடி. தந்தையின் ஓட்டத்தை பார்த்த மான்விழி, “அப்பா” என்றழைக்க, கால்கள் நிதானம் பிடித்தது.

தன்னருகே மூச்சு வாங்க நிற்கும் தந்தையை பார்த்து, “மூச்சு வாங்குது ப்பா பொறுமையா போங்க” என்று நெஞ்சை நீவி விட்டாள்.

மகளின் அன்பில் உள்ளம் நெகிழ்ந்தவன் தன் நெஞ்சை தடவிக் கொண்டிருக்கும் கைகளுக்கு முத்தம் கொடுத்து, “தங்கம் அப்பா கொஞ்சம் அம்மா கிட்ட பேசிட்டு வந்துடுறேன்.” என்று மகளின் நெற்றியில் இதழ் பதித்து விட்டு அவள் பார்வையில் இருந்து மறையும் வரை பொறுமையாக நடந்தவன் வேகம் எடுத்தான்.

அவர்கள் இருக்கும் இரண்டாம் தளத்திற்கு வந்தவன் கதவை வேகமாக திறக்க, மகனை இடுப்பில் வைத்துக் கொண்டு நின்றிருக்கும் மனைவி தெரிந்தாள். அடிவயிற்றிலிருந்து ஏதோ ஒரு ஊற்று மனைவியை பார்த்ததும் பிறப்பெடுக்க, வேகமாக ஓடிச் சென்று அணைத்துக் கொண்டான்.

தன் பதட்டம் குறையும் வரை அவளை விட்டு நகரவில்லை ரகுவரன். மகிழினி ஒரு கையில் மகனை வைத்துக்கொண்டு மறு கையில் கணவனை அணைத்துக்கொள்ள, “ப்பே” என்று தள்ளி விட்டுக் கொண்டிருந்தான் மகிழ்வரன் தந்தையை.

அதை உணரும் நிலையில் இல்லாத ரகுவரன் சற்று விலகி மனைவியின் நெற்றியில் இதழ் பதித்தான். அதைப் பார்த்ததும் இளையவன் தந்தை முத்தமிட்ட இடத்தை, “எச்சி” என்று துடைத்து விட்டான்.

அதில் தந்தையானவன் மகனை முறைக்க, சிரித்தாள் மகிழினி. அன்னை சிரிப்பதை பார்த்து பிள்ளையும் சிரிக்க, “எனக்குன்னு வந்து பிறந்து இருக்கான் பாரு.” அழுத்துக் கொண்டான் ரகுவரன்.

“உன் பிள்ளை ரகு அப்படியே உன்னை மாதிரி தான் இருப்பான்.”

“அதை விடுடி எதுக்கு போன சுவிட்ச் ஆஃப் பண்ண, என்ன ஆச்சு?”

“இரு இவனுக்கு பால் ஆத்தி கொடுத்துட்டு வரேன்.” என்றவள் சொன்னது போல் செய்ய,

“கீழ உக்கார வச்சுட்டு செஞ்சா என்னடி.” என்றான் இடுப்பில் மகனை வைத்துக்கொண்டு பாலாத்திக் கொண்டிருக்கும் மனைவியை கண்டு.

“இறங்க மாட்டேங்கிறான் ரகு. அடம் பிடிக்கிறதுல அப்படியே உன்ன மாதிரி இருக்கான்.”

“டேய்! என் பொண்டாட்டி இடுப்பு  உனக்கு சோபா மாதிரி தெரியுதா இறங்குடா கீழ.” என மகனை இறக்க ரகுவரன் போராட, கத்தி ஆர்ப்பாட்டம் செய்து விட்டான் மகிழ்.

“என்னடா பண்ணேன் இப்ப கத்துற” என தந்தை ஒரு அதட்டு அதட்டியதும், ரோஷம் கொண்டு அன்னை இடுப்பை விட்டு இறங்கி விட்டான்.

மகனின் கோப முகத்தை கண்ட மகிழினி, “எதுக்கு ரகு பிள்ளைய அதற்ற. அவனே ஒரு நாள் முழுக்க என்னை பார்க்குறது இல்ல. இருக்க கொஞ்ச நேரமாது என் கூட இருந்துட்டு போகட்டும்.” என்றவாறு தான் பெற்ற புதல்வனிடம் சென்றவன்,

“நீ வாடா மகிழ்” என்று தூக்க முயன்றாள்.

இளையவன் சிணுங்கிக் கொண்டு அன்னையிடம் செல்ல மறுத்தான். தாய் மகன் இருவரும் செய்யும் பாச போராட்டத்தை கண்டு சளித்தான் ரகுவரன். அதிலும் இளையவன் தொடர்ந்து அழுது கொண்டே மனைவின் கையை தட்டி விடுவதை பார்த்து, “உனக்கு என்னடா இந்த வயசுல இவ்ளோ கோவம் வருது. நாலு வெச்சேன்னா தெரியும் முதுகுல. ஒழுங்கா உட்கார்ந்து பாலக்குடி.” விளையாட்டுக்கு சத்தமிட்டான்.

“ஞேஞேஞேஞே….ம்ம்மாமாமா…” வழக்கம்போல் உச்ச ஸ்தானத்தில் கத்த ஆரம்பித்தான் மகிழ். அவன் அழுகை கீழே இருந்த அனைவருக்கும் கேட்டது. தம்பியின் அழுக்குரலில் வீட்டு பாடத்தை செய்து கொண்டிருந்த மான்விழி ஓடினாள்.

“பாப்பா” என்ற அக்காவின் குரல் கேட்டதும் அழுதுக்கொண்டே தத்தக்கா புத்தக்கா என்று ஓடி அவள் இடுப்பில் அமர்ந்துக் கொண்டான்.

தம்பி எதற்கு அழுகிறான் என்று தெரியாவிட்டாலும் கண் துடைத்து சமாதானப்படுத்தினாள். சின்ன வாண்டு தாய் தந்தை திட்டியதை சொல்லி துணைக்கு அக்காவை அழைக்க, “அப்பா பாப்பா பாவம் ப்பா. தினமும் திட்டிக்கிட்டே இருக்கீங்க. தம்பி பாப்பா இன்னொரு தடவை அழுதா மான்குட்டி உங்க கிட்ட பேசாது.” என்று தந்தையிடம் மல்லு கட்டினாள்.

மகள் மீது சிறு கோபம் கூட கொல்லாதவன் மகனை வெறிக்கொண்டு முறைத்தான். தன் காரியம் முடிந்து விட்டதால் மகிழ்வரன் அழுகை நிறுத்திவிட்டு அக்காவின் தோள் மீது சமத்தாக சாய்ந்து கொண்டான். தம்பியை சமாதானம் செய்த இளவரசி பால் டம்ளரை உதட்டருகே கொண்டு செல்ல, சமத்தாக குடிக்க ஆரம்பித்தான்.

மகன் கொடுக்கும் நடிப்பை கண்டு ரகுவரன் இன்னும் அதிக கோபத்தோடு முறைக்க, தந்தையின் முறைப்பை கண்டு கொண்ட மகிழ் விசும்பு ஆரம்பித்தான். தம்பியின் விசும்பலில் பார்வை தந்தையிடம் செல்ல, “தங்கம் அவன் நடிக்கிறான் நம்பாத.” என்று சரணடைந்து விட்டான்.

“அக்கா நான் ஒன்னும் பண்ணல…அப்பா தான் இப்படி” விசும்பலோடு பேசிக் கொண்டிருந்தவன் தந்தையைப் போல் முறைத்துக் காட்டி, “முறைச்சு பார்த்தாரு.” என்றான்.

மகிழ்வரனின் முகபாவணையில் அனைவருக்கும் சிரிப்பு அரும்பியது. அதைக் கண்டவன் மீண்டும் அழுகையை கையில் எடுக்க, “எதுக்கு ரெண்டு பேரும் என் தம்பி பாப்பாவ பார்த்து சிரிக்கிறீங்க… இன்னொரு தடவை சிரிச்சீங்க மான்குட்டி எல்லாரையும் அடிச்சிடும்.” என்று வரும் சிரிப்பை அடக்கிக் கொண்டு வெளியில் அழைத்துச் சென்றாள் தம்பியை.

பிள்ளைகள் இருவரும் தங்களை விட்டு கடந்ததும் பார்வை மனைவியிடம் சென்றது. அவளும் சிரிப்பை நிறுத்திவிட்டு அவனைப் பார்க்க, கண்களால் கேள்வி எழுப்பினான். அருகில் அமரும்படி மனைவி சைகை செய்ய, பக்கத்தில் அமர்ந்தவன் அவளுக்கு ஆதரவாக கைகளைப் பற்றிக் கொண்டான்.

“உன் கூட பேசிட்டு வரும்போது ஒருத்தன பார்த்தேன் ரகு.” என்றதும் ரகுவரனின் புருவங்கள் முடிச்சிட்டது.

“அவனை எங்கயோ பார்த்த மாதிரி இருந்துச்சு. ஆனா, சரியா ஞாபகம் இல்ல. கொஞ்ச தூரம் வந்ததுக்கு அப்புறம் தான் அந்த முகம் மந்தாகினி கேஸ்ல சம்பந்தப்பட்ட முகம்னு ஞாபகத்திற்கு வந்துச்சு.” என்று பேச்சை நிறுத்தினாள்.

முடிச்சிட்ட புருவங்கள் அப்படியே இருக்க, “யார் அவன்?” கேள்வி எழுப்பினான்.

“வாடகத்தாய் விஷயத்துல அரெஸ்ட் ஆன புரோக்கர்ல அவனும் ஒருத்தன். ஆனா, இவ்ளோ சீக்கிரம் வெளிய வருவான்னு நினைக்கல ரகு. பார்த்ததும் ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு. அவன ஃபாலோ பண்ணலாம்னு பின்னாடியே போனேன். அவன் பேசுறதை கேட்டதுக்கு அப்புறம் தான் ஒரு உண்மை தெரிஞ்சது.” என்றவள் பேச்சை நிறுத்தி கணவனின் முகத்தை பார்க்க, ஒரே முகபாவனையோடு அவளை உற்று நோக்கிக் கொண்டிருந்தான்.

“அவன் அரெஸ்ட் ஆகி கொஞ்ச மாசத்திலேயே வெளிய வந்திருக்கான். அவனோட அரெஸ்ட் ஆன பல பேர் இன்னும் வெளிய வராம இருக்கும்போது இவன் மட்டும் எப்படி வந்தான்னு சந்தேகமா இருக்கு ரகு. இவன விடக்கூடாது ஃபாலோ பண்ணி என்ன பண்றான்னு தெரிஞ்சுக்கணும்.”

“தெரிஞ்சு என்ன பண்ண போற?”

“இது என்ன கேள்வி ரகு என்ன பண்ண போறன்னு. இன்னமும் மந்தாகினி கேஸ் நடந்திட்டு தான் இருக்கு தெரியும்ல. மான்விழிக்காக அதுல தலையிடாம இருக்கேன் அவ்ளோ தான். இவன பார்த்ததுல இருந்து மனசுக்கு எதுவோ சரியில்ல. உண்மை என்னன்னு கண்டுபிடிச்சு இவனுக்கான தண்டனைய வாங்கி தரணும்.”

“அந்த மாதிரி எந்த கிறுக்குத்தனமான வேலையும் பண்ணாத. முடிஞ்ச பிரச்சனை முடிஞ்சதாவே இருக்கட்டும். அதெல்லாம் கேஸ் நடத்துற அட்வகேட் பார்த்துப்பாங்க. இதை அவங்க கிட்ட சொன்னதோட நிறுத்திக்க.”

“எவ்ளோ பெரிய தப்பு பண்ணிட்டு ஒருத்தன் சாதாரணமா உலா வந்துட்டு இருக்கான். அவனை கண்காணிச்சு தண்டனை வாங்கி தரணும்னு சொல்றது கிறுக்குத்தனம் மாதிரியா தெரியுது உனக்கு.”

“ஆமா… நீ பண்றதுக்கு பேரு கிறுக்குத்தனம் தான். என்னைக்கோ முடிஞ்ச பிரச்சனைய இப்ப எதுக்கு நோண்டிட்டு இருக்க. என்னை பார்க்க வரேன்னு சொல்லிட்டு இந்த வேலைய நீ பார்த்ததே தப்பு. அதுவும் போன சுவிட்ச் ஆப் பண்ணிட்டு என்னை அலைய வச்சது ரொம்ப பெரிய தப்பு. நீ இந்த வேலை தான் பார்க்கிறன்னு தெரியாம பைத்தியக்காரன் மாதிரி அங்க இங்கன்னு அலஞ்சி தேடினேன். இப்படி ஒன்னுமே இல்லாத ஒரு சப்பை காரணத்தை வந்து சொல்ற.”

“ஸ்டாப் இட் ரகு! எது உனக்கு சப்ப காரணமா தெரியுது? உன்ன பொறுத்த வரைக்கும் நடந்த விஷயம் ஒரு நியூஸ், கூட இருந்து பார்த்த எனக்கு தான் தெரியும் எந்த அளவுக்கு அது என்னை பாதிச்சுதுன்னு.”

“எதுவா வேணா இருக்கட்டும் இனி இந்த விஷயத்துல நீ தலையிடாத அவ்ளோ தான்.”

“எதுக்கு தலையிடக்கூடாது இந்த விஷயத்தை முதல்ல வெளிக்கொண்டு வந்ததே நான் தான். என் பொண்ணுக்கு இதனால பிரச்சனை வந்திடக் கூடாதுன்ற ஒரே காரணத்துக்காக தான் விலகி இருந்தேன். ஆனா, அவன பார்த்ததுக்கு அப்பறம் இதுல வேற ஏதோ பிரச்சனை இருக்க மாதிரி தெரியுது. தப்புன்னு தெரிஞ்சும் அமைதியா இருந்தா மந்தாகினி மாதிரி நிறைய பெண்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கு.”

“அதை சிபிசிஐடி பார்த்துப்பாங்க. நீ உன்னோட வேலைய மட்டும் பாருன்னு சொல்றேன்.”

“நீ இப்படி பேசுவன்னு கொஞ்சம் கூட நினைக்கல ரகு. ஒரு அட்வகேட்டா இருந்துட்டு இப்படி பேசுறது சரியா சொல்லு? இந்த உலகத்துல நடக்கிற தப்பை தட்டிக் கேட்கிற இடத்துல நம்ம இருந்துட்டு வாய மூடிட்டு எப்படி இருக்க முடியும்.”

“இருந்து தான் ஆகணும். எல்லா நேரத்திலும் நீ நினைக்கிற மாதிரி சட்டம் பேச முடியாது. இப்போ நீ தனி ஆள் இல்ல. நீ பண்ற ஒவ்வொரு விஷயமும் சுத்தி இருக்க எங்க எல்லாரையும் பாதிக்கும்.”

“அதுக்காக எதையும் கண்டும் காணாமலும் வாழ சொல்றியா.”

“அப்படி இருக்குறதுல தப்பு இல்லன்னு சொல்றேன்.”

“என்னால அப்படி இருக்க முடியாது ரகு. புருஷன் அதிகாரத்தை என்கிட்ட காட்டாத.” என்றதும் அதுவரை மனைவியின் காரியம் பிடிக்காமல் பேசிக் கொண்டிருந்த ரகுவரனுக்கு கோபம் வந்துவிட்டது.

“என்னடி உன்கிட்ட அதிகாரத்தை காட்டிட்டேன். உனக்கு என்ன ஆச்சுன்னு தெரியாம நாள் முழுக்க நாய் மாதிரி அலைஞ்சு இருக்கேன். அதிகாரம் காட்றவனா இருந்திருந்தா எங்கயோ போனு விட்டு இருப்பேன். நீ இந்த விஷயத்துல இனிமே தலையிடக்கூடாது அவ்ளோ தான்.”

“அப்படி எல்லாம் யாரு செத்தா எனக்கு என்னனு என்னால இருக்க முடியாது ரகு. எனக்காக இல்லனாலும் நீ சொன்ன இந்த வார்த்தைக்காகவாது திரும்பவும் இந்த கேஸ கைல எடுப்பேன்.” என்ற மனைவியின் வார்த்தையில் மிகுந்த ஆத்திரம் பிறந்தது அவனுக்கு.

“எடுக்குற கைய உடைச்சிடுவேன்.”

“நீ உடைக்கிற வரைக்கும் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன்.”

“கூட கூட பேசாதடி.”

“நியாயத்தை யார் வேணா எப்ப வேணா பேசலாம்.”

அருகில் இருக்கும் டேபிளை காலால் உதைத்தவன், “ஏய்! நீ இதுல தலையிடக் கூடாதுன்னு சொல்றேன் மதிக்காம பேசிட்டு இருக்க. ஒழுங்கா உன் வேலைய மட்டும் பாரு.” என்று வெளியேறி விட்டான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
3
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்