நீரஜா தாயைப் பற்றிப் பேசியதும், “இப்ப ஏண்டி அவங்களை இழுக்குற. பக்குன்னு வருது.” என நெஞ்சைப் பிடித்த சிரஞ்சீவி,
“எப்படியோ சமாளிக்கலாம். என்கூட வீட்டுக்கு வா வாட்டர்.” என்றான் பிடிவாதமாக.
“சொன்னா புருஞ்சுக்கோங்க ரஞ்சி. உங்க அம்மா கல்யாணத்துக்கு சம்மதம்ன்னு சொன்னா மட்டும் தான் நம்ம கல்யாணம் நடக்கணும்ன்னு நான் சொல்லி இருந்தேனா இல்லையா. அவங்க சம்மதிக்கலைன்னா, இப்படி தான் திருட்டுத் தனமா கல்யாணம் பண்ணுவீங்களா…? இந்த தாலியை கழட்டி தூக்கி போட்டுட்டு போக எனக்கும் ரொம்ப நேரம் ஆகிடாது ரஞ்சி. இதை கட்டுனது நீங்கன்ற ஒரே காரணத்துக்காக தான், அதை மதிக்கிறேன். ஆனா, கண்டிப்பா உங்க வீட்டுக்கு வர முடியாது. இதுனால, நம்ம கணவன் மனைவியாவும் ஆகிட முடியாது” என்றாள் திட்டவட்டமாக.
“அம்மா புருஞ்சுப்பாங்கடி” அவன் பேச எத்தனிக்கும் முன்,
“என் அம்மாவும் அப்பாவும் வீட்டை எதிர்த்து, லவ் மேரேஜ் பண்ணி இங்க வந்தப்ப, நல்லா தான் இருந்தாங்க ரஞ்சி. ஆனா, அவங்களுக்கு கஷ்டம்ன்னு ஒன்னு வரும் போது, ஒரு சொந்தம் கூட வரல. வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கிறது ஈஸி ரஞ்சி. அதனால நமக்கு எந்த பிரச்னையும் இல்ல. ஆனா நமக்கு அடுத்த ஜெனரேஷன் ரொம்ப கஷ்டப்படும். குடும்பம், சொந்த பந்தம்ன்னு நாலு பேர் இருக்கணும் ரஞ்சி. என் அம்மா, அப்பா பண்ணுன அதே தப்பை நானும் பண்ண விரும்பல.
அத்தைக்கு என்னை பிடிக்கலைன்னா, விட்டுடுங்கன்னு சொன்னேன் தான. ஏன் இப்டி செஞ்சீங்க.” ஆதங்கத்துடன் சிரஞ்சீவியின் மீது குற்றைப் பார்வை வீசினாள்.
“உன்னை விரும்புறேன்டி. உன்னை மட்டும் தான் விரும்புறேன். அதான் இப்படி செஞ்சேன். எனக்கு வேற என்ன செய்யன்னு தெரியல நீரு. ஐ லவ் யூ ட்ரூலி.” என மனமுணர்ந்து சொல்லும் போதே, அவள் கன்னத்தில் கண்ணீர் வழிந்தது.
“வழி விடுங்க. நான் போகணும்.” தேம்பிய குரலில் நீரஜா கூற,
“எனக்கு ஒரு வழி சொல்லு. வழி விடுறேன்.” என்றான் கையைக் கட்டிக்கொண்டு.
“ம்ம்… வழி தான. இதோ வாசல். இந்த வழியா போங்க. உங்க வீடு வரும். போய் உங்க அம்மாகிட்ட நல்லா சாத்து வாங்குங்க. அப்ப தான் உங்களுக்கு அறிவு வரும்.” என முறைத்தவள், அவனைத் தாண்டி கோவிலை விட்டு வெளியில் வந்தாள்.
“நீயும் கூட வா. அம்மாகிட்டயும் அடி வாங்கிக்கிறேன். உன்கிட்டயும் அடி வாங்கிக்கிறேன். நான் ரொம்ப நல்லவன் வாட்டர். யூ க்னோ பிகாஸ், நான் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவேன்.” என்றவன், அவளது பெயரை சுருக்கினால் வரும் ‘நீரு’ என்ற பெயரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து செல்லப் பெயர் ஆக்கிக்கொண்டான்.
அந்நேரம், நீரஜாவின் போன் வைப்ரேட் ஆனதில், சிரஞ்சீவி மீது காரப்பார்வை வீசியபடி எடுத்தவள், எடுத்த நொடியிலேயே, “எனக்கு தெரியும். இந்த மாதிரி கேவலமான ஐடியா எல்லாம் நீ தான் குடுத்து இருப்பன்னு. அண்ணணும் தம்பியும் ஏன்டா என் உயிரை வாங்குறீங்க.” எனப் பல்லைக்கடித்தாள்.
எதிர்முனையில் இந்திரஜித் தான், சத்தமாக சிரித்தான்.
“ஏய் நீரஜ்… நான் போட்ட பிளான் ஓடிப்போக மட்டும் தான். என் நல்லவன் அண்ணன், எனக்கே தெரியாம பெரிய சம்பவத்தை நடத்தி இருக்கான். உனக்கு தாலி கட்டுற அளவுக்கு, அவனுக்கு எப்ப தைரியம் வந்துச்சுன்னு தெரியல. இன்னும் கொஞ்ச நேரத்துல, என் அம்மா, என்னை என்கொயரிக்கு கூப்பிடுவாங்க. சேதாரம் ஏதாவது ஆச்சுன்னா, உங்க ரெண்டு பேர் பேரையும் தான் வாக்கு மூலமா குடுப்பேன்.” என்று மிரட்டல் விடுத்தான்.
“நான் என்னடா செஞ்சேன்…” நீரஜா விழிகளை சிமிட்டி பதற்றமடைய, அந்நிலையிலும் தன்னவளை ரசித்தது சிரஞ்சீவியின் விழிகள்.
“என் அண்ணனை லவ் பண்ணுன தான. அது தான் முதல் குற்றமா பதியப்படும்.” என்னும் போதே, பாலகிருஷ்ணன் அழைக்கும் சத்தம் கேட்க, “சீக்கிரம் வீட்டுக்கு வா அண்ணி.” என்று விட்டு போனை வைக்க, அவளோ சோர்ந்தாள்.
“கூப்பிட்டீங்களாப்பா?” தந்தையின் அறையில் தலையை விட்டு சமத்தாக கேட்டவனின் மீது, தலையணை பறந்து வந்தது.
அதனை இலாவகமாக கேட்ச் பிடித்த இந்திரஜித், “என்னம்மா நீங்க… புது மாப்பிள்ளை மேல இவ்ளோ பெரிய கனமான பொருளை தூக்கி போடுறீங்க. டூ பேட்.” என்று தலையை ஆட்டி குறை கூறினான்.
இந்த பஞ்சு தலையணை இவனுக்கு கனமாம்! பானுரேகா ஆத்திரத்துடன் “எங்க உன் அண்ணன்?” என்றார்.
“அவனா… அண்ணியை வீட்டுக்கு வர சொல்லி கெஞ்சிக்கிட்டு இருக்கான்.” என்றதும், அவரின் கோபம் அதிகமாக,
இப்போது விளையாட்டை கை விட்டவன், “நீரஜாவை வேணாம்ன்னு சொல்ல எந்த வேலிட் ரீசனும் இல்லாதப்ப, அவங்க ஆசையை தடை சொல்றது, கொஞ்சம் கூட நல்லா இல்லைம்மா. அவள் ஹேண்டிகேப் தான். அதனால, அவங்க வாழ்க்கையில எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட போறது இல்ல. கண்டிப்பா அண்ணனோட காதலும் குறையாது. எந்த சொந்தக்காரங்களாவது கேனத்தனமா கேள்வி கேட்டா, என்ன பதிலடி குடுக்கணும்ன்னு எனக்கு தெரியும்.
இவ்ளோ டிராமா பண்றதுல எனக்கு விருப்பம் இல்லம்மா. நீங்க முதல்லயே ஓகே சொல்லிருந்தா, அனாவசியமா வைஷுவை இதுல இழுக்க வேண்டிய அவசியமே இருந்துருக்காது. அவளும் அவள் அத்தை பையனை லவ் பண்ணுன ஒரே காரணத்துனால தான், இந்த கல்யாணம் இவ்ளோ தூரம் வந்துச்சு.” என்றான் அழுத்தமாக.
“எனக்கு இது சுத்தமா பிடிக்கல இந்தர். உங்க இஷ்டத்துக்கு தான் நடந்துக்குவீங்கன்னா, எதுக்கு இந்த குடும்பம் எல்லாம். எல்லாரும் தனி தனியா போய் எப்படி வேணாலும் இருங்க. நீயும் சத்யாவும் தனிக்குடுத்தனம் போங்க. யாரும் இங்க இருக்க வேணாம்.” எனக் கோபத்தில் கொந்தளித்தார்.
“நீங்க கழுத்தை புடிச்சு வெளிய தள்ளுனாலும் என்னால போக முடியாது. இங்க இருந்து உங்களை டென்சன் பண்ணிக்கிட்டே தான் இருப்பேன். நீங்க வேணும்ன்னா, உங்க புருஷனோட தனிக்குடித்தனம் இருந்துக்கங்க. அதுவும் இந்த ரூம்லயே. நானும் ஜாலியா 10 மணி வரைக்கும் தூங்குவேன்.” என்று கண்ணடித்து தாயின் தோள் மீது கை போட்டுக்கொண்டான்.
அதனை வெடுக்கென தட்டி விட்டவர், “சும்மா ஏதாவது பேசி, என்னை திசைதிருப்ப நினைக்காத இந்தர்.” விரல் நீட்டி பானுரேகா எச்சரிக்க, பாலகிருஷ்ணன் தான், “எனக்கு ஒரு சந்தேகம்டா” என ஆரம்பித்தார்.
“எஸ். ப்ளீஸ்.” சமத்தாக கேட்ட இந்திரஜித்தை முறைத்தபடி, “வைஷாலியும் வேற ஒருத்தன விரும்புனா, ஜீவியும் வேற பொண்ணை விரும்புனான், சரியா போச்சு. இதுல சம்பந்தமே இல்லாம, சார் எதுக்கு சத்யாவை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?” என கிண்டலாகக் கேட்டார்.
அவனோ வெகு தீவிரத்துடன், “அந்த ரூப்ஸ், விவரம் தெரியாம என்னை மாப்பிள்ளையாக்கி கோர்த்து விட்டுட்டாப்பா. என்ன இருந்தாலும், மாப்பிள்ளைன்னு வந்ததுக்கு அப்பறம் கல்யாணம் நின்னு போனா, யாருக்கு அசிங்கம்…?” எனக் கேட்க,
“யாருக்கு அசிங்கம்?” அவரும் சந்தேகத்துடன் பார்த்தார்.
“நம்ம குடும்பத்துக்கு தான்பா. அதான், அவளையே கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எனக்கு நம்ம குடும்ப மானம் தான் முக்கியம். கரெக்ட் தான மம்மி.” அவனைப்போல ஒரு நல்லவன் உலகிலேயே இல்லை என்பது போல தாயிடம் வினவ, பானுரேகா பதில் பேசாமல் அவனை பார்வையால் சுட்டெரித்து விட்டு சென்றார்.
“ப்பா… விட்டா பார்த்தே என்னை ப்ரை பண்ணிடுவாங்க போல. சரி அவங்கள விடுங்க. பையனுக்கு கல்யாணம் ஆச்சே. அவனுக்கு பர்ஸ்ட் நைட்டுக்கு ரெடி பண்ணுவோம்ன்ற அக்கறை இருக்காப்பா உங்களுக்கு.” என்று பாலகிருஷ்ணனிடம் முறுக்கிக்கொள்ள,
“எல்லை மீறி போறடா. நீ…” என்று அவரும் முறைத்து விட்டு சென்றார்.
அப்போது, தமையனிடம் இருந்து போன் வந்ததில், “என்னடா அண்ணி என்ன சொல்றா?” என்றான் புன்னகையுடன்.
“நீ வேறடா. கோவில் வாசல்ல போடுற செருப்பை மதிக்கிற அளவு கூட, என்னை மதிக்க மாட்டேங்குறா. என்னவோ, நமக்கு வாச்ச அம்மாவையும் சமாளிக்க முடியல, வாக்கப்பட்டவளையும் சமாளிக்க முடியல. ம்ஹும்…” என பெருமூச்சு விட்டான் சிரஞ்சீவி.
“நம்ம டிசைன் அப்டிடா…” நமுட்டு சிரிப்பு சிரித்தவன், “எப்ப வீட்டுக்கு வருவ?” எனக் கேட்டான்.
“தெரியலடா. கார்மெண்ட்ஸ்க்கு வேற போகணும். வீட்டுக்கு போகாம அங்க போனா, என்னை கூண்டோட தூக்கிடுவாங்க. நீருவும் என்னை புருஷனா மதிச்சு வீட்டுக்கு வரமாட்டேன்னு அடம்பிடிக்கிறா. வாட் டூ டூ…” என்று புலம்பித் தள்ளிட, சில நிமிடம் ஏதோ யோசித்த இந்திரஜித், “எதுக்கும் ஒரு பத்து நாள் கழிச்சு வா டா.” என்றான்.
“அது என்ன இந்தர் பத்து நாள் கணக்கு. அதுக்குள்ள அம்மா மனசு மாறிடுவாங்களா?” வாயெல்லாம் பல்லாக கேட்டான் சிரஞ்சீவி.
“அட ச்ச்சே இல்லடா. செல்ஸீ புட் பால் மேட்ச் இருக்கு. அது முடியிற வரை, கிரிக்கெட் பாக்குறேன், கமர்கட்டு பாக்குறேன்னு, டீவி ரிமோட்டை புடுங்கி என்னை கடுப்பேத்துவ. அதனால, பொறுமையா வா. அவசரம் இல்லை.” என்று விட்டு போனை வைத்தவனை, “அட கிராதகா.” என்று திட்டி தீர்த்தான் தமையன்.
இந்நிலையில், மூன்று நாள் பொழுது கழிந்திருக்க, இந்திரஜித்திற்கும் சத்யரூபாவிற்கும் முதலிரவு ஏற்பாடானது.
சத்யரூபாவிற்கு தான் இதெல்லாம் இப்போது தேவை தானா என்றிருக்க, அதனை முகத்தில் காட்டாமல் இருக்க பிரம்ம பிரயத்தனம் பட்டாள்.
பானுரேகா, “சத்யா… கிட்சன்ல பால் வச்சுருக்கேன் எடுத்துக்கோ. நாளைக்கு காலைலயே அதியூருக்கு கிளம்பிடுங்க. நல்ல நேரத்துல தான் மறுவீட்டுக்கு போகணும். ஞாபகம் வச்சுக்க. அப்பறம், போயிட்டு மூணு நாள்ல வந்துடுங்க. இடைல, இந்தர்க்கு லீவ் கிடைக்கும் போது போய்க்கலாம்.” என அடுக்கியவர், உறங்க சென்று விட்டார்.
தலையை மட்டும் ஆட்டியவளுக்கு, இந்திரஜித்தின் அறைக்கு செல்வதை நினைத்தால் தான், அடி வயிற்றில் புளியை கரைத்தது.
சில நிமிடத்தில் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, மாமியார் கூறியது போன்று பால் டம்பளரையும் எடுத்துக்கொண்டு அவன் அறைக்கு சென்றாள்.
சற்று பெரிய அறை தான். அனைத்தும் நேர்த்தியாய் வசதியாய் இருந்தது. அலமாரி முழுக்க, சிஏ சம்பந்தப்பட்ட புத்தகங்கள் நிரம்பி வழிந்தது.
‘ரொம்ப படிப்ஸ் போல.’ என எண்ணிக்கொண்டவள், அமைதியே உருவாய் அவன் முன் நின்றாள்.
சட்டென அவள் கையைப் பற்றிய இந்திரஜித், அவனுக்கு அருகில் அமர வைக்க, அவளுக்கோ இதயம் அதிக பட்ச டெசிபலில் துடித்தது.
“சோ, பர்ஸ்ட் நைட் பத்தி ட்ரீம்ஸ் எதுவுமே இல்லையா?” ஹஸ்கி குரலில் இந்திரஜித் கேட்டிட,
அவளுக்கு தான் எதுவுமே ஒப்பவில்லை. எதிலும் ஒட்டாத நிலை. திடீர் திருமணத்தை மனசளவில் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. எழிலழகனும் ஒரு காரணமோ என மனம் கூக்குரலிட்டாலும், அதற்கு பதில் கூற தெரியவில்லை அவளுக்கு.
“என்ன சௌண்டு சிஸ்டம், மியூட் போட்ட மாதிரி சைலண்ட்டா இருக்க. ஸ்டார்ட் பண்ணலாமா?” அவன் பொங்கிய சிரிப்பை அடக்கிக்கொண்டு கேட்க, சத்யாவிற்கு ஏனோ கண்ணைக் கரித்தது.
அப்போதைக்கு அவனிடம் சண்டை இடக் கூட தோன்றவில்லை. உடலும் மனதும் சோர்வாய் போனது போலொரு உணர்வு.
இந்திரஜித்தோ, மெல்ல அவளருகில் வர, அவள் கண்ணை இறுக்கி மூடிக் கொண்டாள்.
அவனது மூச்சுக்காற்று அவள் கன்னத்தில் பட்டும் படாமல் உரசும் போதே, ஒரு துளி கண்ணீர் பொத்தென வழிந்தது.
அதில் படக்கென விலகியவன், “ஆர் யூ ஓகே சத்யா?” எனக் கேட்க, அவள் அவனை நிமிர்ந்து பாராமல், தலையை ஆட்டினாள்.
“ம்ம்ஹும். நீ ஓகே இல்ல. அப்படி இருந்திருந்தா இந்நேரம் உன் சவுண்டு சிஸ்டம ஆன் பண்ணி, ஊரை கூட்டி இருப்பியே.” என நக்கலடித்தவன், “ஹே, ரூப்ஸ். இங்க பாரு.” என்று அவள் நாடியை பிடித்து நிமிர்த்தினான்.
அவனை ஏறிட விருப்பமின்றி, விழிகளை திருப்பிக்கொள்ள,
“சீரியஸ் ஆகிட்டியா? சும்மா உன்னை கலாய்ச்சேன் ரூப்ஸ். என் அம்மா, என்னை திட்டுனதுக்கு சிரிச்சதும் இல்லாம, என்னை போட்டுக்கொடுக்க சொன்னதுக்கு தலையை ஆட்டுனதுக்கு, உன்னை டீஸ் பண்ணி, சண்டை இழுக்கலாம்ன்னு பார்த்தா, நீ என்ன கண்ண கசக்குற. விட்டா, நீ எனக்கு 90’ஸ் வில்லன்ற நேம் போர்ட கழுத்துல மாட்டி விட்டுடுவ போலயே…” விழிகளை உருட்டி பாவம் போல கேட்டான்.
‘சே… கொஞ்ச நேரத்துல என்னையவே நம்ப வச்சுட்டானே…’ என நொந்தவள், அவன் கையை தட்டி விட்டு, “எது எதுல விளையாடன்னு விவஸ்தையே இல்லையா இந்தர் உனக்கு?” என்றாள் சத்தத்துடன்.
காதை குடைந்து கொண்டவன், “விவஸ்தை இருக்கோ இல்லையோ.. இன்னும் கொஞ்ச நாள்ல எனக்கு காது இல்லாம ஆக போகுது. கொஞ்சம் மெதுவா தான் பேசேன்.” என்று முறைத்தவனை அவளும் முறைத்து வைத்தாள்.
அலைபாயும்…
மேகா!