அத்தியாயம் 75
“என்னடா ஓடிப் பிடிச்சு விளையாடிட்டு இருக்கீங்க?” மூவரையும் பார்வையாலேயே அதட்டினாள் விஸ்வயுகா.
ஷைலேந்தரி முயன்ற மட்டும் தன்னைச் சமன்செய்து கொண்டு எழுந்தவள், மைத்ரேயனைப் பாராமல் தவிர்த்தாள்.
“என்ன தான்டா ஆச்சு? அங்கிள் என்ன சொன்னாரு…” என விஸ்வயுகா கேட்டதும், நொடியில் சுருங்கிப் போன வதனத்தை வெளிக்காட்டாமல், “நானே தனியா போற பிளான்ல தான் இருந்தேன். இப்ப அவரே அனுப்பிட்டாரு அவ்ளோ தான். விடு விஸ்வூ” என்றவன் நடந்ததை முழுதாய் கூற மறுத்து விட்டான்.
நந்தேஷ் தான் “ஷைலு நீயாவது சொல்லு” என்றதில் அவளும் குனிந்த தலையை நிமிர்த்தவே இல்லை.
“பிரச்சினையை முழுசா சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்?” விஸ்வயுகா தீயாக இருவரையும் முறைக்க, “என்ன பிரச்சனைன்னு நான் சொல்லட்டுமா?” எனக் கேட்டான் யுக்தா.
மைத்ரேயன் சட்டென நிமிர்ந்தான்.
“உன் அப்பன நேத்து நைட்டே நான் தூக்கிட்டேன்…” என்றதும் திகைத்தான்.
விஸ்வயுகாவோ, “அவரை ஏன் தூக்குன? அப்போ நந்துவை அட்டாக் பண்ண சொன்னது கன்ஃபார்மா அவர் தானா?” என அதிர்வுடன் கேட்டதில், “அது மட்டும் தானா… உன்னை இவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சு போட்டுத் தள்ள பிளான் பண்ணுனதும் அந்த ஆளு தான்” என்றான் விழி சிவக்க.
அதில் நந்தேஷும் விஸ்வயுகாவும் ஒன்றாய் அதிர்ந்தனர்.
பின் முழு விஷயம் அறிந்து ஆடிப்போக, “சாரி விஸ்வூ” என்ற மைத்ரேயனுக்கு மனமே ஆறவில்லை.
“ப்ச் ஏன்டா… விடு அதான் அப்டி எதுவும் ஆகலைல…” என அவனை அவளே சமன்செய்ய முனைய,
யுக்தா “எதுவும் ஆகல. ஆனா நினைச்சதுக்கு தண்டனை தர வேணாம்?” என இதழோரம் ஏளனப் புன்னகையை படர விட, விஸ்வயுகாவிற்கு பக்கென இருந்தது.
மைத்ரேயனின் தந்தை என்ற ஒரே காரணத்திற்காக தான் அவளும் இத்தனை யோசிக்கிறாள்.
“யுகி…” என அவள் பேச வரும் முன், இதை பற்றி கலந்துரையாட ஒன்றும் இல்லை என்பது போல, “மைத்ரா நீயும் ஷைலுவும் சர்ச் ஹிஸ்டரி ரெட்ரைவ் பண்ண பாருங்க. அதுக்கு என்ன மாதிரி ஃபெசிலிடீஸ் வேணும்னு சொல்லு நான் அரேஞ்ச் பண்றேன்” என்றான் தீவிரமாக.
தந்தையை சாதாரணமாக விட்டு விட மாட்டான் என்பது மட்டும் மைத்ரேயனுக்குப் புரிந்து விட்டது.
“ஆபிஸ்லயே இதுக்கான ஸ்பேஸ் நாங்க கிரியேட் பண்ணி தான் வச்சிருக்கோம். அங்க இருந்தே ப்ரொசீட் பண்ணலாமா?” எனக் கேட்டான்.
“ஓகே… உங்க பெர்சனலை ஓரம் கட்டி வச்சுட்டு எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் எனக்கு ஒரு சொலியூஷன் வரணும்” எனக் கட்டளையிட்டதில் இருவருமே மெல்லமாகத் தலையாட்டினர்.
“குறிஞ்சி, அனுராவை ஃபாலோ பண்ண டிபார்ட்மெண்ட்ல இருந்து ஆள் அனுப்ப வேணாம். மஃப்டில போனா கூட கில்லர்க்கு சந்தேகம் வர சான்ஸ் இருக்கு” என்றதும் நந்தேஷ் “கரெக்ட் யுக்தா” என ஆமோதித்தான்.
“எஸ் கரெக்ட் தான். சோ நீ தான் அவளை ஃபாலோ பண்ண போற. குறிஞ்சி உனக்கு பட்டன் கேமரா செட் பண்ணித் தருவா. எப்படியும் அனுராவை நம்ம ஃபாலோ பண்ண நினைக்கிற மாதிரி கில்லரும் ஃபாலோ பண்ண ட்ரை பண்ணுவான். அதுல அவன் மாட்டவும் சான்ஸ் இருக்கு. அவள் என்ன மாதிரியான ஃபுட் சாப்புடுறா, எங்க எங்க போறா எல்லாத்தையும் க்ளோசா வாட்ச் பண்ணு. குறிஞ்சியும் உன் கூட இருப்பா. பட் கார்ல. அவள் கூட எப்பவும் ப்ளூடூத்ல கனெக்ட்ல இருந்துக்கோ. எவெரி மூவ்மெண்ட்டும் அவளுக்கு அப்டேட் வரணும். அது எனக்கும் வரணும்… க்ளியர்?” என மடமடவென உத்தரவுகளைக் கொடுத்ததில் நந்தேஷ் கதிகலங்கிப் போனான்.
“லவ் பண்ணுன பொண்ணு பின்னாடி சுத்த வேண்டிய வயசுல சீரியல் கில்லர் பின்னாடி சுத்த வைக்கிறீங்களே. பேசாம நானும் ஆவியாகி ரோஜா ஆவியோட கலந்துடவா…” எனப் பாவமாகக் கேட்க,
“அது உன் இஷ்டம்” என அசட்டையாகக் கூறியவனை முறைத்து பார்த்தான்.
“எங்களை எல்லாம் வேலை குடுத்து அனுப்பி விட்டுட்டு நீ என்ன பண்ண போற?” என ஒரு மார்க்கமாகக் கேட்க,
“நைட் ஸ்டே அட் தி பப்!” என்றான் விஸ்வயுகாவின் மீது காந்தப்பார்வையை சிதறவிட்டபடி.
“ம்ம்க்கும் நீங்கள்லாம் பப்புக்கு போவீங்க. நாங்க மட்டும் பரலோகத்துக்கு போகணும் அதான… நீ நடத்து மச்சான்…” எனப் புலம்பிட,
“அடேய்” என தமையனை அதட்டிய விஸ்வயுகா, ஷைலேந்தரியின் தோளில் தட்டி, “ஏண்டி அந்த ஆளு வெளில போக சொன்னா… அப்படியே வெறும் கையை வீசிட்டு ரெண்டுபேரும் வந்துடுவீங்களா… உன் கார் அவன் காசுல வாங்குன பைக்… உங்க ட்ரெஸ் எதுவுமே எடுத்துட்டு வரலையா?” என்றதும் அவள் தலையை சொறிந்தாள்.
“ஆமால. மறந்துட்டேன்டி… அசிங்கப்படுத்தி அனுப்புனதும் அங்க இருந்து ஒரு குண்டூசி கூட எடுத்துட்டு வர கூடாதுன்னு மைண்ட்ல ஓடிட்டே இருந்துச்சா. அதெல்லாம் எங்க காசுன்னே ஞாபகம் இல்ல…”
“க்கும்… மனசுல பெரிய சூர்யவம்சம் சரத்குமார் தேவையானைன்னு நினைப்பு… அந்தப் பெருசுங்க வெளில போக சொல்லுச்சுங்களாம் இதுங்க வந்துடுச்சுங்களாம். அவங்களைத் துரத்தி விட வேண்டியது தான” எனக் கண்டித்ததில் இருவருமே அசடு வழிந்தனர்.
பின் சொன்னது படி குறிஞ்சியின் காரிலேயே ஷைலுவையும் மைத்ராவையும் அலுவலகத்தில் இறக்கி விட்டுவிட்டு, நந்தேஷும் குறிஞ்சியும் அனுரா இருக்கும் ‘மால்’ நோக்கிச் சென்றனர். இடைப்பட்ட நேரத்தில் மூவருக்கும் தேவையான உடையையும் வாங்கி கொண்டனர்.
ட்ரவுசருடன் மாலில் உலா வர விட்டு விடுவார்களோ என்ற பதைபதைப்பு சற்றே நீங்கியது நந்தேஷிற்கு.
அனைவரும் சென்றபின்னே விஸ்வயுகாவின் அருகில் நெருங்கி அமர்ந்த யுக்தா, “தொல்லைங்க எல்லாம் போயாச்சு” என அவள் தோள் மீது கை போட்டான்.
அதனைத் தட்டி விட்டு முறைத்தவாறே, “லிங்கம் அங்கிளை என்ன பண்ண போற?” எனக் கேட்டாள்.
“என்ன பண்ணலாம்னு இன்னும் டிசைட் பண்ணல. வில் ஸ்ஸீ!” எனத் திமிராய் உரைப்பவனை என்னதான் செய்வது?
அவனின் பார்வை அவள் மீது தீவிரமாய் படிவதை உணர்ந்தவள், விருட்டென எழுந்து “லன்ச்க்கு பசிக்க ஸ்டார்ட் பண்ணிடுமே. வீட்ல என்ன வச்சுருக்க…” எனக் கேட்டபடி தப்பித்து அடுக்களைக்குள் நுழைந்தாள்.
தலையாட்டிக் சிரித்துக் கொண்டவன், “ஆர்டர் பண்ணிக்கலாம். நீ ஆபிஸ் போகணுமா?” என ரகசியக்குரலில் கேட்க,
“போகல. நீ?” எனக் கேட்டபடி குக்கரைக் கையில் எடுத்தாள்.
“போகணுமான்னு யோசிக்கிறேன்” என்றபடி அவளது தோளில் முகத்தை பதித்து சின்ன முத்தமொன்றை வழங்க, சிலிர்த்த தேகமதை சமன்படுத்த இயலாது திணறினாள்.
லேசாக கைகள் நடுங்க குக்கரைத் திறக்க முயன்றிட குக்கர் மூடியின் கைப்பிடி உடைந்து கையில் வந்தது.
“அச்சச்சோ!” எனப் பதறியவளிடமிருந்து மூடியை வாங்கியவன்,
“ஆல்ரெடி உடைஞ்சது தான் ஏஞ்சல். சில்!” என்றபடி ஸ்க்ரூ ட்ரைவரை வைத்து கைப்பிடியைச் சரி செய்தான்.
“ஏன்டா சம்பாரிக்கிறதை எல்லாம் குடிச்சே அழிச்சுட்டியா. ஒரு குக்கர் கூடவா வாங்கி வைக்க முடியாது” எனத் திட்ட,
“நான் என்ன என் பொண்டாட்டி மாதிரி பிசினஸ்ல குதிச்சு நீச்சல் அடிச்சுட்டு இருக்கேனா… நானே மாச சம்பளக்காரன்” என மூக்கைச் சுருக்கிட, இதழோரம் புன்னகைக்கத் துடித்தது அவளுக்கு.
“நான் என்ன உன்னை குக்கர் கம்பெனியா வைக்க சொன்னேன். ஒரு குக்கர் தானடா வாங்கச் சொன்னேன். கஞ்சம்” என அவன் விலாவில் ஒரு இடி இடித்து விட்டு குக்கரில் பருப்பைக் கொட்டினாள்.
“ஏய் என்னடி செய்ற? குடு நான் பண்றேன்” என அவன் அவளைத் தடுக்க நினைக்க, அவளோ அதனைக் காதிலேயே வாங்கவில்லை.
அவன் தான் லேசாக மிரண்டான்.
“அடியேய் நீ ஆபிஸ்க்கே கிளம்பு. இத்துனூண்டு ரொமான்ஸ்க்கு ஆசைப்பட்டு நான் சாக விரும்பல” என்றவனை இடுப்பில் கை வைத்து முறைத்தாள்.
“டேய் ஏதோ போனா போகுதேன்னு சமைக்க வந்தா ஓவரா பேசுற. எனக்கு என்ன இன்னைக்கும் ஹோட்டல்லயே சாப்பிட்டுக்க” எனச் சிலுப்பிக் கொண்டு நகர எத்தனிக்க, அவளது வயிறுடன் அணைத்துப் பிடித்தவன் “நீ விஷம் குடுத்தாலும் குடிச்சுப்பேன்டி. என்ன கேஸ் எல்லாம் பெண்டிங்ல இருக்கு அதான் யோசிச்சேன்” எனக் கேலி செய்ததில், நொடிப்பொழுதில் மயங்கி நின்றவள் பின் கோபம் எழ அவனைத் திரும்பி கன்னத்திலேயே பட்டென அடித்தாள்.
கன்னத்தைத் தேய்த்துக் கொண்டே, “இந்த பட்டுக் கை பட்டு என் கன்னம் வலிக்கும்னு நினைச்சு அடிக்கிற உன் மன தைரியத்தை பாராட்டுறேன்…” என்றான் குறும்பாக.
இருக்க இருக்க தேய்வதை உணர்ந்து, “ஆளை விடு சாமி. நான் கிளம்புறேன்” எனக் கும்பிட்டவளின் கன்னம் வருடியவன், “நிஜமாவே உனக்கு சமைக்க தெரியுமா?” எனக் கேட்டான் சிறிதான ஆச்சர்யத்துடன்.
“அதுக்கு ஏன்டா இவ்ளோ ஷாக் ஆகுற?”
“பார்ன் வித் சில்வர் ஸ்பூன். பிசி பிஸ்னஸ் வுமன். சமையல் கத்துக்கலாம் டைம் இருக்குமோன்னு நினைச்சேன் “என்றதும் அவள் முகம் மாறியது.
“ஏதோ கொஞ்சம் தெரியும்” என அவள் நகரும்போதே அவனுக்கு அலுவலகத்தில் இருந்தும் அழைப்பு வந்ததில் தீவிர முக பாவனையுடன் அவளுக்கு தலையசைப்பைக் கொடுத்து விட்டு அவசரமாக வெளியேறினான்.
கதவு அடைபடும் சத்தத்திலேயே அவன் சென்று விட்டதை உணர்ந்த விஸ்வயுகா செய்த வேலையைப் பாதியில் நிறுத்தி விட்டு அடுப்பு மேடையில் தளர்ந்து சாய்ந்தாள்.
மூடிய விழிகளுக்குள் பழைய நிகழ்வு ஒன்று நிழற்படமாக சுழன்றது.
—-
“சித்தி சித்தி… ப்ளீஸ் சித்தி” குதிரை வால் முதுகினில் துள்ளி விளையாட தலையை ஆட்டி அஸ்வினியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் விஸ்வயுகா.
“வேணாம் யுகாம்மா சொன்ன கேளு. அக்கா பார்த்தா திட்டுவாங்க” எனப் பயந்து விழிக்க,
“அம்மா கிளம்பிட்டாங்க சித்தி. இனி நைட்டு தான் வருவாங்க. அப்பாவும் இல்ல. காயத்ரி சித்தியும் அவங்க மம்மி வீட்டுக்குப் போயிருக்காங்க. யுகியும் நாளைக்கு டெல்லி கிளம்பிடுவான்ல. ப்ளீஸ் சித்தி. அவனுக்காக தான் கஷ்டப்பட்டு இந்த மெனு கத்துக்கிட்டேன்” என அடம்பிடித்தாள்.
“சொன்னாக் கேளு ஏஞ்சல். அவனுக்கு மீன் குழம்பே பிடிக்கிறது இல்ல. நானே வச்சு குடுத்தா கூட அவன் அம்மா வைக்கிற மாதிரி இல்லைன்னு ஃபீல் பண்ணுவான். என்னவோ அவனால சாப்பிடவே முடியாது அதை மட்டும். நான் வருத்தப்படுவேன்னு அவனோட ஃபீலிங்க்ஸை மறைச்சுக்கிட்டு சாப்ட்டுக்குவான். அவனுக்கு அவன் அம்மா ஞாபகம் வருதேன்னு தான் நான் அவனுக்கு மீன் மட்டும் செஞ்சு குடுக்குறதே இல்லை. அவனும் எங்கயும் சாப்பிட மாட்டான். நீ என்னன்னா மீன் செஞ்சு தரேன்னு அடம்பிடிக்கிற. நீயே இப்ப தான் அக்காவுக்குத் தெரியாம கொஞ்ச கொஞ்சமா சமைக்க கத்துட்டு இருக்க. வேணாமே!” என் செல்லம்ல என அவள் நாடியைப் பற்றி கொஞ்சினார்.
“ஐயோ சித்தி… அவனுக்காகவே நான் அவங்க ஸ்டைல்ல ஃபிஷ் கறி வைக்கிறது எப்படின்னு காசிமேடுல ஒரு ஃப்ரெண்டை பிடிச்சு கத்துக்கிட்டேன். நல்லா வரும் சித்தி. ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்… ஒரே ஒரு டைம். இதுவும் அவனுக்குப் பிடிக்கலைன்னா அப்பறம் நான் ட்ரை பண்ணல” எனக் கெஞ்சி கொஞ்சி அவரை ஒரு மணி நேரத்திற்கு அறைக்குள் தள்ளினாள்.
“நான் சமைக்க கத்துக்கிட்டதே அவனுக்காக தானாம்…” எனத் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டவள், காதில் ஹெட் போனை மாட்டிக்கொண்டாள்.
இதற்கு முன் பச்சை மீனைக் கையால் கூட தொட்டது இல்லை அவள். ஒரு வேகத்தில் வாங்கிக் கொண்டு வந்து விட்டாலும் மீனைத் தொட்டு கழுவவே பயமாகத் தான் இருந்தது.
நெலுநெலுவென கையில் இருந்து வழுக்கிக் கொண்டு சென்ற மீன்களின் வாடை அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
‘அய்யயோ கழுவவே இவ்ளோ லேட்டானா சித்தி எடுத்துட்டுப் போக மாட்டாங்க…’ என ஒரு முடிவோடு மூக்கில் மாஸ்கைப் போட்டுக்கொண்டவள், சில நிமிடங்கள் செலவு செய்து ஒரு வழியாக கழுவியும் முடித்தாள்.
“ப்பா… ஹெவி டாஸ்க் இது தான் போல…” எனக் கையை கன்னத்தில் வைத்திட, “உவேக்… என்ன இப்படி ஸ்மெல் வருது. நம்ம சாப்பிடும் போது இவ்ளோ கவுச்சியா இருக்காதே. ஒருவேளை கெட்ட மீனா வாங்கிட்டோமா?” என்ற சந்தேகம் வேறு எழுந்தது.
அத்தியாயம் 76
பின் தலையை உதறிக்கொண்டு சமைக்கத் தொடங்கியவளுக்கு ஈடாக ஹெட் போனிலும் பாடல் ஒலித்தது.
அக்கம் பக்கம் யாருமில்லா
பூலோகம் வேண்டும்…
என்ற வரிகளைக் கேட்டதுமே வாடையையெல்லாம் ஒதுக்கி தள்ளியவளுக்கு ஒரு வித கனவு நிலை ஆட்டிப்படைத்தது.
வெந்தயத்தை எண்ணையில் போடும் போதே லேசாக மேலே தெறிக்க, “அவுச்…” எனத் தேய்த்து கொண்டவள்,
நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து செய்வேன் அன்பே ஓர் அகராதி…
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல் பார்ப்பேன் தினம் உன் தலை கோதி…
பாடலுடன் இணைந்து அவளும் கருவேப்பிலையை பூங்கொத்தாக எண்ணிப் பாடினாள்.
காதோரத்தில் எப்போதுமே
உன் மூச்சுக்காற்றின் வெப்பம் சுமப்பேன்…
கையோடு தான் கை கோர்த்து தான்
உன் மார்புச் சூட்டில் முகம் புதைப்பேன்…
வேறென்ன வேண்டும் உலகத்திலே இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே…
ஏழேழு ஜென்மம் வாழ்ந்து விட்டேன்…
கண்ணை மூடி கருவேப்பிலைக் கொத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அவனை மனக்கண்ணில் உருவகப்படுத்தி உருகிக் கொண்டிருக்க,
“ஏஞ்சல்… முடிஞ்சுதா?” என்ற அஸ்வினியின் குரல் கேட்டதில், கனவில் இருந்து மீண்டவள் “இதோ இதோ…” என அவசரமாக மீண்டும் சமையலில் இறங்கினாள்.
அவளிடம் இருந்து டிபன் கேரியரை வாங்கியபடி “திட்டப்போறான் ஏஞ்சல்” என்றார் பரிதாபமாக.
“திட்டுனா வாங்கிக்கங்க…” என நாக்கைத் துருக்கியவளிடம், “நீ தான் செஞ்சன்னு சொல்லுவேன்” என்றார் விழிகளை உருட்டி.
அதில் பதறியவள், “ஐயோ வேணாம் சித்தி. நீங்க செஞ்சேன்னு சொல்லுங்க. இல்லனா கடைல வாங்குனதா சொல்லுங்க…” எனப் படபடத்தாள்.
ஒருவேளை இது அவனது தாயின் சமையலுக்கு ஈடாக இல்லையென்று அவனுக்குப் பிடிக்காது போய் விட்டால் அவளுக்கு கஷ்டமாகி விடுமே!
“எப்படி தெளிவா எஸ்கேப் ஆகுற நீ… என்ன செய்ய காத்திருக்கானோ!” எனப் புலம்பியவாறே கிளம்பினார்.
ஒரு வித பதற்ற நிலையிலேயே இருந்த அஸ்வினியைக் கண்டதும் புன்சிரிப்புடன் அவரருகில் வந்த யுக்தா, “என்னமா ஏன் இவ்ளோ டென்ஷனா இருக்கீங்க?” எனக் கேட்டான்.
“அது வந்து… ஹான் வீட்ல சமைக்க முடியல. அதான் நமக்கு லன்ச் வாங்கிட்டு வந்துட்டேன்…” என உளறினார்.
“சரி!” அவன் புரியாமல் பார்க்க,
“ஆனா பாரு அங்க ஃபிஷ் கறி மட்டும் தான் இருந்துச்சு” என்றதும் அவன் முகம் மெல்ல வாடியது.
அதைக் கண்டு அஸ்வினியின் முகமும் மாறுவதைக் கண்டு நொடியில் தன்னை சீராக்கிக் கொண்டவன், “அதுக்கு என்னமா சாப்பிட்டுட்டா போச்சு…” எனக் கண் சிமிட்டினான்.
‘இந்த ஏஞ்சல் என்னை இப்படி கோர்த்து விட்டிருக்க வேணாம்…’ எனத் தனக்குள்ளேயே நொந்து கொண்டவர் அவனுக்கும் உணவை எடுத்து வைத்தார்.
அந்த மணமே அவனுக்குள் ஒரு வித படபடப்பை கொடுத்தது.
தான் பிடிக்கும் மீன்களில் நாலைந்து சிறிய மீன்களை மட்டும் எடுத்து விட்டு மற்ற மீன்களை வியாபாரத்திற்கு அனுப்பி விடுவார் அவனது தாய்.
அந்த சின்ன துண்டுகளை வைத்து அவர் செய்யும் குழம்பில் இருந்து வரும் மணத்திற்கு ஐந்து நட்சத்திர உணவகத்தின் டாப் செப் உணவு கூட தோற்று விடும்.
வீட்டில் இருக்கும் மசாலாக்களை வைத்து தான் செய்திருப்பார். சில நேரம் ஒன்றிரண்டு மசாலா பொருட்கள் காலியாக கூட இருக்கும். ஆனாலும் அந்த மணமும் சுவையும் ஒரு நாளும் குறைந்ததில்லை.
அவர் சென்ற பின்னே, மீனையும் தவிர்க்க ஆரம்பித்தான்.
“ஸ்மெல் நல்லா இருக்கே எங்க வாங்குனீங்க?” என எதார்த்தமாக கேட்டபடி உணவை வாயில் வைத்தவனின் விழிகள் சாசர் போல விரிந்தது.
“வாவ்! என் அம்மா செய்ற ஸ்டைல்லயே இருக்குமா. எப்படி இது? என்ன ஹோட்டல்?” என ஆர்வமாகக் கேட்டபடி உண்டான்.
அவருக்கும் வியப்பு தாளவில்லை. “நிஜமாவே நல்லா இருக்கா எனக்காக சொல்லலைல…” மீண்டுமொரு முறை கேட்டுக்கொண்டார் அஸ்வினி.
“அட இல்லம்மா… நல்லா இருக்குறதை தாண்டி இட் ஹிட்ஸ் மை ஃபீலிங்ஸ் மா! நீங்களும் சாப்பிடுங்க…” என்றவன் உணவில் புதைந்தான்.
“அச்சோவ்!!!!” என முகத்தை மூடிக்கொண்ட விஸ்வயுகாவிற்கு தன் காதுகளேயே நம்ப இயலவில்லை.
“நிஜமாவே அவனுக்குப் பிடிச்சு இருந்துச்சா சித்தி?” என மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டாள்.
“ஆமா ஏஞ்சல்… எனக்கே ஆச்சர்யம் தான். எனக்கும் ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. கலக்கிட்ட போ” என அவள் கன்னம் கிள்ளியவருக்கு பாவம் அப்போது கூட அவளது காதல் மனது தெரிந்திருக்கவில்லை. அவன் டெல்லி சென்ற பின்னே தானே இருவரின் காதலையும் அவர் உணர்ந்தது.
“பேசாம நான் ஒரு ஹோட்டல் ஆரம்பிச்சுடவா…” தீவிர யோசனையுடன் கேட்டவளை முறைத்தார்.
“ஏற்கனவே அக்கா டென் ஸ்டார் ஹோட்டல் கட்டுறேன்னு பண்ற கரப்ஷன் எல்லாம் பத்தலையா. நீயும் ஆரம்பிச்சுடாத ஏஞ்சல்” எனக் கிட்டத்தட்ட கெஞ்ச, “ஓகே ஓகே கூல்! என் கையை கட்டிப்போட்டுட்டீங்கப்பா” என வெகுவாய் ஃபீல் செய்ததில் அஸ்வினியும் சிரித்து விட்டார்.
இப்போதும் அந்நினைவில் அவள் இதழ்கள் தன்னை மீறி முறுவலித்து இருந்தது. ஆனால், அதே இதம் தான் இல்லை.
—
“சார் லைப்ரரி அசிஸ்டண்டா வேலை பார்த்த இளங்கோவோட நம்பர ட்ரேஸ் அவுட் பண்ணதுல அது கத்தார்ல இருக்குற பப்ளிக் பூத்ன்னு தெரிஞ்சுது. எப்பவும் சனிக்கிழமை மதியம் தான் வீட்டுக்கு பேசுறான். சோ இப்பவும் அவன் பேச சான்ஸ் இருக்கு. அவங்க விஷயத்தை சொன்னதும் நமக்கு போன் பண்றானான்னு பாக்கலாம்” என்றான் அருண்.
அவன் வீட்டிற்கு போன் செய்து வைத்து முடித்த நொடியில் யுக்தாவிற்கு அழைத்து விட்டான்.
“சார் அம்மாவுக்கு போன் பேசுனேன். நீங்க போன் போட சொன்னதா சொன்னாங்க. சொல்லுங்க சார்” எனச் சிறிது பதற்றத்துடன் பேசியவனிடம், யுக்தா நேரடியாக விசாரணைக்கு வந்தான்.
“அண்ணா லைப்ரரில எத்தனை வருஷம் வேலை பார்த்தீங்க மிஸ்டர் இளங்கோ?”
“3 வருஷம் இருக்கும் சார்.”
“ஏன் வேலையை விட்டுப் போனீங்க?”
“அந்த சம்பளம் பத்தலைங்க சார். தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணனும். அதான் வெளிநாட்டுக்குப் போனேன். வாழ்ந்து கெட்ட குடும்பம் எங்களோடது. அப்பா இருந்தவரை வசதியா இருந்தோம். அதே மாதிரி தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி குடுக்கணும்னு தான் போனேன் சார்”
“ஓகே… அங்க இருந்த புக்ஸ எல்லாம் மேனேஜ் பண்ணது நீங்க தான?” யுக்தாவின் கேள்விக்கணைகளை தொடர, “ஆமாங்க சார்… பெரிய லைப்ரரின்றதுனால எல்லா ஃப்ளோர்லையும் அசிஸ்டன்ட் இருப்பாங்க” என்றான்.
“ஆனா மெலடி தட் கில்ஸ் ஸ்லோலி அப்பிடின்ற புக் இருந்த ஃப்ளோர்க்கு அசிஸ்டன்ட் நீங்க தான் ரைட்?” என்றதும்,
“இருக்கலாம் சார். பொதுவா சைன்ஸ், மெடிக்கல் மாதிரியான புக்ஸ்க்கு நான் தான் இன்சார்ஜ். நீங்க சொன்ன புக்கும் இருந்துருக்கலாம் சார்”
“இருந்துருக்கலாம்னா உங்களுக்கு ஞாபகம் இல்லையா?”
“அங்க ஆயிரக்கணக்குல புக் இருந்துச்சு சார். எல்லா புக் பேரும் ஞாபகம் வச்சுக்க சீரிஸ் நம்பர் அடிப்படையில தான் நாங்க மெயின்டெய்ன் பண்ணுவோம். பேர் அவ்ளோவா தெரியலைங்க சார்…”
“ரெஜிஸ்டர்ல சைன் ஆகாத புக்ஸ லைப்ரரில அக்செப்ட் பண்ணுவீங்களா?”
“இல்ல சார். எந்த புக் புதுசா உள்ள வந்தாலும் ரெஜிஸ்டர் பண்ணிடுவோம்”
“அப்போ ஏன் அதை மட்டும் பண்ணல?”
அவனிடம் சிறு குழப்பம். “ஆனா அப்படி ரெஜிஸ்டர் பண்ணாத புக்ஸை வச்சுக்க மாட்டோம் சார். யார்கிட்ட இருந்து வாங்குனோம் அப்டின்ற டீடெய்ல்ஸ் கூட இருக்கும்” என்றான் உறுதியாகி.
“இல்லையே! ஹொவ்?” யுக்தா துருவினான்.
சற்று யோசித்தவன், “அந்த நேரத்துல லைப்ரரில ரெனோவேஷன் வொர்க் நடந்துச்சு. அதனால மிஸ் ஆகியிருக்கலாம் சார்” எனத் தயக்கமாகக் கூற, “இர்ரெஸ்பான்சிபிள் ஆன்சர்” என்றான் கடுமையாக.
“சாரி சார்!” எனப் பேந்த பேந்த விழித்தவனுக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை.
யுக்தா அழைப்பைத் துண்டித்து விட்டு எரிச்சலானான்.
மீண்டும் அலைபேசி ஒலிக்க இம்முறை குறிஞ்சி அழைத்தாள்.
“யுக்தா இப்ப நாங்க ஃபீனிக்ஸ் மால்ல இருக்கோம். நந்து அவளை ஃபாலோ பண்ணிட்டு இருக்கான். பிரீ வெடிங் மேக் அப்க்காக வந்துருக்காக அந்தப் பொண்ணு. இப்ப வரை சந்தேகப்படுற மாதிரி எதுவும் இல்ல.”
நெற்றியை நீவிய யுக்தா “குறிஞ்சி டூ ஒன் திங்க். நந்துவை அவனோட ஈவண்ட் மேனேஜ்மெண்ட் பத்தி பேசுற மாதிரி அனுராவை மீட் பண்ணி அவளோட உயிருக்கு ஆபத்துன்னு ஹிண்ட் குடுக்க சொல்லு. பட் வெளில இருந்து பாக்குற யாருக்கும் அவன் ஹிண்ட் குடுக்குறதும் தெரியக்கூடாது. அவளும் அதைக் காட்டிக்க கூடாது. இல்லன்னா மறுபடியும் ஒரு இழப்பை சந்திக்க வேண்டியது வரும். இன்கேஸ் கில்லர்க்கு சந்தேகம் வந்துட்டா அவன் டார்கெட்டை மாத்தவும் வாய்ப்பு இருக்கு. சோ பீ கேர்ஃபுல்” என்றதும் அவள் நந்தேஷிற்கு இந்தத் தகவலைப் பகிர நந்தேஷ் நெஞ்சைப் பிடித்தான்.
“நான் யார் தெரியுமா? என் பேக் கிரவுண்ட் என்னன்னு தெரியுமா? என்னை போய் மார்க்கெட்டிங் பண்ண சொல்லிட்டு இருக்கீங்க…” எனப் பொங்கியவனிடம்,
“கில்லர் கிட்ட மாட்டுனா அதே கிரௌண்ட்ல நம்மளை புதைச்சுடுவான் பரவாயில்லையா?” என அவனை அமைதியாக்கினாள் குறிஞ்சி.
“இப்படியே உசுப்பேத்துங்க” என நொந்தபடி அனுராவை பார்க்க தகுந்த நேரம் பார்த்திருந்தான். மாலுக்கு அடுத்து அவள் சென்றது நகைக்கடைக்குத் தான். அங்கும் சிறிதும் நேரம் சுற்றி விட்டு அவள் கார் பார்க்கிங்கிற்கு வரும் நேரம், அவளை வழி மறித்தான்.
“யார் நீங்க?” அனுரா குழப்பமாகப் பார்க்க, நந்தேஷ் தன்னைப் பற்றி சுருக்கமாகச் சொன்னதும், “ஹோ… ஹலோ சார்” எனக் கை கொடுத்தாள்.
அவனும் பதிலுக்கு கை கொடுக்க, அவர்களுக்கு பக்கவாட்டில் காரில் அமர்ந்து அனைத்தையும் நோட் செய்து கொண்டிருந்த குறிஞ்சிக்கு இலேசாக வயிறு காந்தியது.
“கையைப் பிடிச்சது போதும். விஷயத்தை சொல்லுங்க” பல்லைக் கடித்து குறிஞ்சி கடிய, ப்ளூடூத்தை சரி செய்த படி அசடு வழிந்த நந்தேஷ், “உங்க மேரேஜ் பத்தி கேள்வி பட்டேன் காங்கிரேட்ஸ் அனு” என்றதும் “தேங்க்ஸ்…” என வெட்கப்பட்டாள்.
“உங்களுக்கு ஈவண்ட் மேனேஜ்மெண்ட் ரிலேட்டடா ஏதாவது அரேஞ்ச்மெண்ட் பண்ணனும்னா ப்ளீஸ் ஃபீல் ஃபிரீ டூ காண்டாக்ட் மீ. திஸ் இஸ் மை கார்ட்” என்று தனது விசிட்டிங் கார்டை நீட்டினான்.
‘இவனை ட்ரவுசரோட மீட் பண்ண விட்டு இருக்கனும். பொம்பளை பிள்ளையைப் பார்த்ததும் நுனி நாக்குல இங்கிலிஷ் பாயை விரிச்சு படுக்குது!’ என நொடித்துக் கொண்டாள் குறிஞ்சி.
அனுரா தான் நந்தேஷை விசித்திரமாகப் பார்த்தாள்.
‘என்ன இவரே டைரக்டா அப்ரோச் பண்ணிட்டு இருக்காரு’ என்ற யோசனையுடன் விசிட்டிங் கார்டைப் பார்க்க,
“டேஞ்சர் அனு. யூ ஆர் நாட் சேஃப். டோன்ட் சேஞ்ச் யுவர் ஃபேஸ் எக்ஸ்பிரஷன்” என பெருக்கல் குறியீடு போட்டு அவளை பயமுறுத்தி வைத்தான்.
கூடவே அருகில், ஒரு சோலைக்காட்டு பொம்மையையும் வரைந்து வைத்திருந்தான். பிரச்சனையின் தீவிரத்தை விளக்குகிறாராம்!
பாவம் அப்பெண்ணிற்கு பயத்தில் கை காலெல்லாம் உதற தொடங்கி விட்டது.
“நந்து என்ன பண்ணி வச்சீங்க. அந்தப் பொண்ணு ஃபேஸ் எல்லாம் மாறுது” குறிஞ்சியும் பதற, “விசிட்டிங் கார்ட்ல அலர்ட் பண்ணுனேன்” என முணுமுணுத்தான்.
“யோவ்! பைத்தியக்காரா…” எனக் கத்தியே விட்டவளுக்கு யுக்தா போன் செய்ததில் “இந்தப் பைத்தியக்காரன் வேற காட்டு கத்தா கத்துவானே கர்த்தரே…” என்று நொந்து போனாள்.
—
எரிச்சல் நீங்காதவனாக மதியம் 3 மணி அளவில் தான் வீட்டை அடைந்தான் யுக்தா சாகித்யன்.
சோலைக்காட்டு பொம்மையை வரைந்து அப்பெண்ணை பயமுறுத்திய நந்தேஷைக் கெட்ட வார்த்தையால் வர்ணித்து விட்டே கிளம்பினான்.
வீட்டுக் கதவைத் திறந்ததும் ஒரு நொடி நின்று விட்டான்.
மீன் குழம்பின் வாசம் ஆடவனின் நாசியைத் தொட்டு மீண்டது.
மோகம் வலுக்கும்
மேகா