அத்தியாயம் 72
“உனக்கும் சேர்த்து தான் கொண்டு வர சொன்னேன்…” தனக்கு மட்டுமாக ஊட்டி விட்டுக் கொண்டிருந்தவனை நிமிர்ந்து பாராமல் கூறிய விஸ்வயுகா, நீண்ட கூந்தலை சென்டர் கிளிப்பில் அடக்கினாள்.
அவனோ அதைக் காதில் வாங்கினாலும் பதில் பேசவில்லை.
“உன்னைத் தான் சொல்றேன்” அவள் அழுத்திக்கூற, “கை அழுக்காகிடும்” என்றான் உதட்டைப் பிதுக்கி.
திரும்பி முறைத்தவள், “இப்ப மட்டும் ஆகலையா?” என்றதில், “இல்ல உன் லிப்ஸ் பட்டு க்ளீன் ஆகிடுச்சு” ரசனைக்குரலில் அவன் கூறிட, மீண்டும் சிவப்பு படலம் அவளை ஆக்கிரமித்தது.
“ஃப்ளர்ட் பண்ணாத!” தன்னை அடக்கிக்கொண்டு அவனைக் கண்டித்தாள்.
“ஊட்டி விடுடி” நேரடியாக கேட்டு விட்டவன் அவளருகில் நெருங்கி நிற்க, அவள் மறுத்து விட்டாள்.
அதில் முகம் வாட, தட்டை டேபிள் மீது வைத்தவன் தனது பேகை எடுத்துக்கொள்ள, அவன் முகத்தைப் பார்க்கக் கூடாதென்று வீம்பாக இருந்தாலும் அவளால் முடியவில்லை.
“தினமும் நான் ஊட்டி விட்டுத் தான் சாப்பிட்டியா? டெட் பாடி பக்கத்துல கூட முகம் சுளிக்காம சாப்பிடுற கேஸ் தான நீ. எதுக்கு ஓவரா பண்ற?” எனத் திட்டியபடி தானாக பூரியை ஒரு எடுத்து அவன் வாயருகே கொண்டு சென்றாள்.
அவளறியாத வெற்றி புன்னகை பூத்தவன், “பழகிடுச்சு ஏஞ்சல்” என்றதில் “உன் ட்ரெயினிங்ல இதை எல்லாமா சொல்லிக்குடுத்தாங்க?” என சிலுப்பினாள்.
“சொல்லிக்கொடுக்கல. அனுபவத்துல பழகுனது” உணவை மென்றபடி கூறியவனைப் புரியாமல் பார்த்தாள்.
“புரியல?” அவள் கேட்டதும், “கண்டிப்பா சொல்லனுமா?” என்றான் நிதானமாக.
அப்போதும் புரியாமல் தலையாட்டியவளிடம், “நாட் அ பிக் டீல். சுனாமி வந்த நேரத்துல எனக்கு நிறைய அடிபட்டுச்சு. ஆனா ஏதோ தாக்குப் பிடிச்சு உயிர மட்டும் பிடிச்சுக்கிட்டேன். ஒரு போட்ல மாட்டிக்கிட்டேன். அதுல இருந்த எல்லாமே டெட் பாடீஸ் தான். கண்ணுக்கு எட்டுன தூரம் வரை சுத்தி தண்ணி. என்னை மீட்க மறுநாள் ஆகிடுச்சு. ஹெலிகாப்டர்ல வந்து சிலரை மீட்டுட்டுப் போனாங்க. நா இருந்த போட்ல எல்லாம் டெட் பாடின்னு நினைச்சுட்டாங்க போல. அப்பறம் தான் நான் ஒருத்தன் உயிரோட இருக்குறதே தெரிஞ்சுச்சு. சிலரை ரெகவர் பண்ண டைம் ஆனதுனால ஹெலிகாப்டர்ல இருந்தே சாப்பாடை எல்லாம் குடுத்தாங்க. அப்படி எனக்கும் குடுத்துட்டுப் போனாங்க.
டெட் பாடில இருந்து ஸ்மெல் வந்துச்சு தான். அதை விட பசி தான் பயங்கரமா இருந்துச்சு. பர்ஸ்ட் வாய் வைக்கும் போது வாமிட் வந்துச்சு. அப்பறம் பழகி தான ஆகணும்னு…
அப்பறம் என்னை ஹாஸ்பிடல்ல சேர்த்தாங்க. என் அம்மாவோட பாடி கூட கிடைக்கல. அட்லீஸ்ட் அவங்களை கடைசியா ஒரு தடவை பாக்கணும்னு இறந்தவங்களை மார்ச்சுவரிக்கு கொண்டு வரும் போதெல்லாம் நானும் போய் பாப்பேன். சில நேரம் மார்ச்சுவரிலேயே இருப்பேன்… அப்படியே பழகிடுச்சு… எனக்கு அதுக்கு அப்பறம் டெட் பாடியை பார்த்தா ஒரு உணர்வுமே வராது” எனத் தோள் குலுக்கி கதை போல கூறியவன், “ஷிட்! லேட் ஆகிடுச்சு ஏஞ்சல். கிளம்பலாமா?” என்றான் மணியைப் பார்த்தபடி.
அவன் அவசரப்படுத்தியதை உணராமல் சிலையாக நின்றிருந்தாள் விஸ்வயுகா.
நெஞ்சைக் கிழித்துக் கூறாக்கும் வலிதனை தனக்கு பகிர்ந்து விட்டு அவன் எவ்வாறு வலிக்காதவாறே நிற்கிறான்?
பழகி விட்டது. எல்லா வலிகளும் ஒரு நாள் பழகி விடும் போலவே! தினசரி வாழ்க்கையின் ஊடாக, எப்போதும் பின்தொடரும் மாயை தரும் நிலவைப் போல வடுக்களும் பின்தொடர்ந்தபடியே தான் இருக்கும் அல்லவோ?
அதே போல தானும் பழகிக்கொள்ள வேண்டுமா? தனக்குத் தானே கேட்டுக்கொண்டவள் அவன் பின்னேயே சென்று விட்டுப் பின் விழித்தாள்.
“டேய் டேய் டேய் நீ என்னடா பால்கனி வழியா வெளில போகாம ஒய்யாரமா முன்வாசல் வழியா வர்ற…” என அவனைத் தடுத்து நிறுத்தியவளைக் கண்டு நமுட்டு நகை புரிந்தவன்,
“நான் தான் சொன்னேனே என் ஹெட் ஆபிசரைப் பார்க்க போகணும்டி. இந்த வைட் ஷர்ட்டோட பால்கனில இருந்து குதிச்சா அழுக்காகிடும். என் மாமியார நான் சமாளிச்சுக்குறேன்” என்றான் குறும்பாக.
“யுக்தா… ஒழுங்கா நில்லு” என்றவளைக் காதில் வாங்காமல் அவன் மடமடவென மாடியில் இருந்து இறங்க, தங்கை தான் வருகிறாளென எண்ணி காபியைப் பருகியபடியே நந்தேஷ், “குட் மார்னிங் விஸ்வூ” எனச் சொல்லிக்கொண்டே மேலே பார்த்து அதிர்ந்து விட்டான்.
பருகிய காபியை துப்பியவன், “அடேய் நீ என்னடா பண்ணிட்டு இருக்க இங்க” எனப் பதறி ஹாலை சுற்றி பார்வையிட,
“பதறாத மச்சான். இப்ப தான் பெட் காபி குடுக்கிறியா சோம்பேறி. வா வா” என அவன் சட்டையையும் பிடித்து தரதரவென வெளியில் இழுத்துச் செல்ல, “ஐயோ நான் இன்னும் பல்லு கூட விலக்கல என்னை விடுடா” எனக் கதறியதை எல்லாம் கண்டுகொள்ளவே இல்லை.
அனைவரிடமும் இருந்து தப்பித்து காருக்கு அருகில் வரும்போது சௌந்தர் சரியாக உள்ளே நுழையப்போக அவரும் யுக்தாவைக் கண்டு அதிர்ந்து விட்டார்.
“ஹாய் டேடி… வெரி குட் மார்னிங்” என்று ராகத்துடன் கூறி விட்டு, “நானும் என் பொண்டாட்டியும் மச்சானோட தயவுல வெளில போறோம். உங்க பாசமிகு அண்ணிக்கு தகவலை ஒப்படைச்சுடுங்க. பை” என்று சிரித்த முகத்துடனே கிளம்ப, விஸ்வயுகாவிற்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.
‘நாசமா போனவனே!’ சௌந்தரின் பார்வையில் அசடு வழிந்தவள், விருட்டென காரில் ஏறிக்கொள்ள, நந்தேஷின் இதயம் துடிப்பது மட்டுமே நிற்கவில்லை. மற்றபடி அனைத்து பாகங்களும் உயிருக்கு ஊசலாடியது.
“என்னமோ நானே இவனுக்கு கதவைத் திறந்து விட்ட மாதிரி கோர்த்து விட்டுட்டானே” என நொந்தவனையும் வம்படியாக காரில் ஏற்றிச் சென்று அவனது அலுவலகம் முன் நிறுத்தினான் யுக்தா.
“மேக்சிமம் அரை மணி நேரத்துல மீட்டிங் முடிஞ்சுடும். அதுவரை கார்லயே இருங்க” என்று பணித்திட,
“நைட் ட்ரஸோட பட்டப்பகல்ல ஒரு ஆம்பளை பையனைக் கடத்துறியே உனக்கு வெட்கமா இல்ல?” என்ற நந்தேஷின் புலம்பலைக் கண்டுகொள்ளாமல், “ஏய் ஏஞ்சல்… இன்னைக்கு நம்மளை யாரும் பாலோ பண்ணல. இறங்கி எவனையாவது அடிச்சுட்டு இருக்க கூடாது. குட் பொண்ணா கார்லயே இருக்கணும்” என்று அவளது கன்னம் பற்றிக் கிள்ளியதில் அவள் பேந்த பேந்த விழித்தாள்.
‘இவனை வச்சுக்கிட்டு ஒரு எழவும் ஒழுங்கா பண்ண முடியல’ என உதடு திட்டினாலும் தன்னிச்சையாகப் புன்னகையும் பூத்தது.
சொன்னது போன்றே அரை மணி நேரத்திற்குள்ளாகவே வந்து விட்டான் யுக்தா. அவனுடன் குறிஞ்சியும் வந்திருந்தாள். பின்னால் நந்தேஷின் அருகில் ஏறிக்கொண்டவள் அவனைக் கண்டு ஸ்னேகமாகப் புன்னகைக்க, அவனிடமும் அதே புன்னகை.
யுக்தாவின் முகம் தான் யோசனையைத் தாங்கி இருந்தது.
“என்ன ஆச்சு?” விஸ்வயுகா கேட்டதும்,
“நீ சைன்டிஸ்ட் பாஜி தான சொன்ன?” புருவம் சுருக்கியவனிடம், “ம்ம் புக்ல அந்த பேர் தான் போட்டு இருந்துச்சு” என்றாள்.
“எடிஷன் இயர் எதுவும் ஞாபகம் இருக்கா யுகா?”
“எடிஷன் இயர்…” என உதட்டைக் கடித்து சிந்தித்தவள்,
“2018 இல்லைன்னா 2019 ஆ இருக்கும் ஐ திங்க். நாட் சியூர். அண்ட் அந்த புக்குக்கு செகண்ட் பார்ட் இருக்குன்னு கூட போட்டுருந்துச்சு. அதை பத்தி நான் லைப்ரரியன் கிட்ட கேட்டப்போ கொரோனா டைம்னால இன்னும் ரிலீஸ் ஆகல. இந்த புக்கும் கொரோனா ஃபர்ஸ்ட் வேவ் அப்போ தான் வந்துச்சு. இன்னும் டிஸ்ட்ரிபியூஷன் முழுசா முடியலைன்னு சொன்னாரு. சோ மேக்சிமம் அந்த டைமா தான் இருக்கும் யுகி” என்றாள்.
“ஆர் யூ சியூர்?” தீவிரத்துடன் கேட்டதற்கு தலையசைப்பைப் பதிலாகத் தந்தவளிடம், “சைன்டிஸ்ட் பாஜி இறந்தது 2017ல கொரோனாலாம் வர்றதுக்கு முன்னாடி. அந்த மாதிரி ஒரு புக்கை அவர் எந்த ஒரு பப்ளிகேஷன்லயும் பப்ளீஸ் பண்ண அனுப்பலைன்னு விசாரிச்ச வரை சொல்றாங்க. எங்கேயுமே பப்ளிஷ் ஆகாத புக் லைப்ரரில மட்டும் எப்படி இருந்துருக்கும் யுகா…” என்றான் கடுப்பாக.
அவனை திகைத்துப் பார்த்தவள், “என்ன சொல்ற யுகி. எனக்கு ஒன்னும் புரியல…” அவளும் தலையில் கை வைத்தாள்.
கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்த நந்தேஷோ, “எனக்கு காபி குடிக்காம எதுவும் யோசிக்க வராது. முதல்ல நான் பல்லு விலக்கணும்… அப்ப தான் எனக்கு ஐடியா வரும்” என்றான் பரிதாபமாக.
“இல்லன்னா மட்டும் அப்படியே பொங்கி வழிஞ்சுடும்” யுக்தா முறைத்தபடியே காரை கிளப்பினான்.
குறிஞ்சி சிரிப்பை அடக்கியபடி “என்னடா ஒரு கில்லர போய் அண்டர் எஸ்டிமேட் பண்ற…” என வாரிட, “கில்லர்னு பேர் வைக்க கொஞ்சமாவது முக லட்சணம் வேணும் குறிஞ்சி” என்றான் நக்கலாக.
இருவரும் தங்களைக் கிண்டல் செய்வது உணர்ந்து நந்தேஷ் “விஸ்வூ… நம்ம ஒரு பயங்கரமான பயங்கரவாதிங்கன்னு காட்டுற நேரம் வந்துடுச்சு” எனத் தீவிரமாக உரைக்க, யுக்தா கண்ணாடியில் அவனைப் பார்த்தபடியே “கொஞ்சம் முன்னாடி வா” என அழைத்தான்.
“அந்த பயம் இருக்கட்டும். என்ன சொல்லு?” என முன்னால் தலையை நீட்டிக் கேட்ட நந்தேஷின் தலையில் நறுக்கென ஒரு அடி வைத்தான்.
“கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணாம மூடிட்டு வா…”
“ஆஆ என்னடா அடிக்கிறீங்க: எனத் தலையைத் தேய்த்தவனுக்கு ஷார்ட்ஸுடன் குறிஞ்சியின் அருகில் அமர்ந்திருப்பது வேறு சங்கடமாக இருந்தது. அவள் அவ்வப்பொழுது அவனை மேலிருந்து கீழ் வரை கேலியாய் பார்ப்பது வேறு கூச்சத்தைக் கொடுக்க, கையால் முட்டியை மறைத்துக் கொண்டான்.
பொங்கி வந்த சிரிப்பை அடக்கும் முன் குறிஞ்சிக்கு கண்ணே கலங்கி விட்டது.
விஸ்வயுகா தான், “ஐயோ கொஞ்சம் சும்மா இருங்கடா. என்னடா குழப்பி எடுக்குற. அந்த புக்கை எழுதுறதுக்கு முன்னாடியே சைன்டிஸ்ட் இறந்துட்டாருன்னு சொல்ல வர்றியா? அப்போ நான் படிச்ச புக்கை யார் எழுதி இருப்பாங்க?” எனக் குமுறினாள்.
குறிஞ்சி தான் உடனடியாக, “அதை பத்தின இன்வெஸ்டிகேஷன் நடந்துக்கிட்டே இருக்கு. சைன்டிஸ்ட் பாஜியோட நேட்டிவ் டெல்லி தான். சோ யுக்தா அவன் டீம் மெம்பர்ஸ் மூலமா மூவ் பண்ணிட்டு இருக்கான். இப்ப அதை விட பெரிய ப்ராபளம் ஒன்னு இருக்கு” என்றதும் பின்னால் திரும்பிய விஸ்வயுகா என்னவெனப் பார்த்தாள்.
“மத்த ஸ்டேட்ல நடந்த கொலைகளை சூசைட்ன்னு முடிச்ச மாதிரி இங்கயும் முடிக்க சொல்லி ஏகப்பட்ட ப்ரெஷர். இறந்து போன பசங்களோட பேமிலி மெம்பர்ஸ் மட்டும் தான் தங்களோட எதிரிங்க யாரும் இதை செஞ்சுருப்பாங்களோன்னு சந்தேகப்படுறாங்க. பசங்களைக் கொன்னது வேற ஆளுன்னு தெரியவும், பொண்ணுங்க கேஸை டீல்ல விட்டுட்டு முழுக்க முழுக்க பசங்க கேஸ்ல இன்வால்வ் ஆக சொல்லி பொலிட்டிகல் பிரஷர்” என்றாள் எரிச்சலாக.
“ஓ! சர்ச் ஹிஸ்டரி வச்சு ஃபைண்ட் அவுட் பண்ண பெர்மிஷன் என்ன ஆச்சு?” விஸ்வயுகா யுக்தாவைப் பார்க்க,
“கேசையே க்ளோஸ் பண்ண சொல்றானுங்க. இதுல எப்படி பெர்மிஷன் கிடைக்கும். மைத்ரேயன் வச்சு தான் மூவ் பண்ணனும்” என்றான் தீர்க்கமாக.
“சரி அவனுக்கு போன் பண்றேன்” நந்தேஷ் போனை எடுக்க, “எதுக்கு நேராவே பார்க்கலாம்” எனப் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மகிழுந்தை சீறிப்பாய விட்டான்.
அத்தியாயம் 73
“மைதாவை பார்க்க இந்தப் பக்கம் ஏன் போற?” விஸ்வயுகா குழப்பமாகப் பார்த்ததும், யுக்தா முந்தைய நாள் நிகழ்ந்ததைக் கூறினான்.
நந்தேஷும் விஸ்வயுகாவும் திகைத்தனர்.
“இதை நேத்து நைட்டே சொல்லிருக்கலாம்ல” விஸ்வயுகா முறைத்ததில், “எதுக்கு கூட்டமா போய் ஆறுதல் சொல்றேன்னு கபில் ஸ்பேஸை டிஸ்டர்ப் பண்ணவா. நீங்க ரெண்டு பேரும் சைலண்டாவே இருந்தாவே போதும்” எனச் சின்ன சிரிப்புடன் கிண்டலடித்ததில் அவன் புஜத்தில் நங்கென குத்தினாள்.
“ம்ம்க்கும் இல்லைன்னா மட்டும் என் நண்பன் அப்படியே காதல் கடல்ல முத்தெடுத்து முங்கிடுவான் பாரு. மூதேவி எப்படியும் அங்க போயும் கவுந்தடிச்சு தூங்க தான் போகுது” என்றதும் விஸ்வயுகா வாய்விட்டுச் சிரித்தாள்.
:நம்ம தங்கச்சி மட்டும் என்ன பண்ணுவா. அவனுக்கு மேல கும்பகர்ணி அவ!” எனத் தமையனுக்கு ஹைஃபை கொடுத்துக் கொண்டவளின் சிரிப்பை நிரந்தரமாக்க துடித்தது ஆடவனின் மனது.
குறிஞ்சி தான், “அடச்சே அண்ணன் தங்கச்சி மாறியா பேசுறீங்க?” என முறைக்க,
“ஓ! உங்க ஊர்ல அண்ணன் தங்கச்சிக்குன்னு தனி செட் ஆஃப் பேச்சு இருக்கா” நந்தேஷ் வாரியதில் மீண்டும் இருவரும் நகைத்தனர்.
இவர்களின் பேச்சுவார்த்தையின் ஊடே வீடும் வந்துவிட, யுக்தா தான் காலிங் பெல்லை அடித்தான்.
ஒரு போர்வைக்குள் பதுங்கி இருந்த இருவருக்கும் களைப்பும் துயிலும் இன்னும் நீங்கவில்லை.
தூரத்தில் ஏதோ சத்தம் கேட்பது போல தோன்ற கண்ணைச் சுருக்கி விழித்தவளுக்கு முதலில் எங்கிருக்கிறோமென்றே புரிபடவில்லை.
மைத்ரேயனோ அவள் புறம் நன்றாகத் திரும்பி படுத்து, “அந்த அலாரத்தை ஆஃப் பண்ணுடி” என உளற, “அலாரம் இல்ல யாரோ பெல் அடிக்கிறாங்க…” என்றபடி எழும்போதே அவனும் கண் விழிக்க போர்வையும் நழுவியது.
சரட்டென இருக்கும் நிலை புரிந்து போர்வையைப் பிடித்துக் கொண்ட ஷைலேந்தரி திருதிருவென விழித்தாள்.
அப்பட்டமாக முதல்நாள் இரவு நினைவு வர, தலையைத் தரையில் புதைத்தாள்.
உடலெல்லாம் வலி வேறு. மனதைப் பகிராத குறையொன்று அவளைச் சுழட்டி அடிக்க, உணர்ச்சி வேகத்தில் நடந்த கூடலை ஏற்க மறுத்தது உள்ளம். முற்று முழுதாய் அவன் மீது பிழை சுமத்தவும் பிடித்தமில்லை. தனது விருப்பத்தை அறியும் முன்னே தன்னை நெருங்கியிருக்க வேண்டாமென்ற வருத்தம் மட்டுமே மேலோங்கி இருந்தது.
அதிகாலையில் அவளது தரிசனம் கண்டு அவனுக்கு முறுவலுடன் கிறக்கமும் தோன்றியது. தனது வருத்தத்தைக் காட்டும் வழி தெரியாமல் அவனை நிமிர்ந்து பாராமல் எழ முயன்றவளுக்கு கால்கள் ஒத்துழைக்காமல் மீண்டும் கட்டிலிலேயே அமர்ந்து விட்டாள்.
உடல் சோர்வும் மன சோர்வும் அவளை வாட்டியதோ என்னவோ முணுக்கென ஒரு துளி நீர் தரையில் விழுந்தது.
அதனைக் கண்ட மைத்ரேயனுக்கு அத்தனை நேரமும் இருந்த இதம் தொலைந்து போக, முகமே இறுகி விட்டது.
அவசரத்தில் நேர்ந்த கூடலில்லை. ரசித்து நேசித்தே அவளை ஆட்கொண்டான். அவளுக்கும் புரிந்தது தான். ஆகினும் ஏதேவொரு ஏமாற்றம். இன்னதென்று கூற இயலாமல் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
காலிங் பெல்லின் சத்தம் வேறு கேட்டுக்கொண்டே இருக்க, இப்போது அலைபேசியும் அழைத்தது.
“நான் சொல்லல ரெண்டும் கும்பகர்ணிங்க. கதவைக் கூட திறக்காம தூங்குதுங்க” என்ற விஸ்வயுகாவிடம் “இன்னொரு சாவி இருக்கு திற” என்று அவளையே திறக்கச் சொன்னான் யுக்தா.
அதற்குள் மைத்ரேயன் உடையை அணிந்து கொண்டு கலைந்த தலையை சரி செய்து கொண்டே வரவும் அவள் கதவைத் திறக்கவும் சரியாக இருந்தது.
“என்னடா காலங்காத்தால எல்லாரும் கூட்டமா வந்துருக்கீங்க…” எனக் கேட்டவனின் முதுகில் பளாரென அடித்தாள் விஸ்வயுகா.
“பரதேசி மணி பத்தரை ஆகுது” எனக் கடிந்தவள், “எனக்கு போன் பண்ண வேண்டியது தான?” என முறைத்தாள்.
“உனக்கு எதுக்கு போன் பண்ணனும்…” எனத் தலையை சொறிந்த மைத்ரேயனுக்கு பாவம் கூடலுக்கு முன்னான நினைவுகள் தற்காலிகமாக மறந்து விட்டது போலும்!
“அடேய்ய்ய்ய்” நந்தேஷும் விஸ்வயுகாவும் நெற்றிக்கண்ணைத் திறக்கவும் தான் அவனும் நிகழ்விற்கு வந்து அசடு வழிந்தான்.
யுக்தா கையைக் கட்டிக்கொண்டு “அதென்ன உன் கைல ரப்பர் பேண்ட்?” என மேலுதட்டைக் கடித்தபடி வினவ, அதன்பிறகே அவனும் கவனித்தான்.
ஷைலேந்தரியின் போனிடெயிலை அவிழ்த்து விட்டு, அக்கறையாக ரப்பர் பேண்டை கையில் போட்டுக்கொண்டான்.
அதனைக் கழட்டி பின்னால் மறைத்து வைத்தபடி “அது… ஷைலாவோடது” என நெளிய, குறிஞ்சி சத்தமாக சிரித்தாள்.
“பாஸ்… உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு…” என நந்தேஷிடம் கேலி செய்திட,
அவனோ அதிர்ச்சி விலகாமல் “சே சே… இல்ல குறிஞ்சி. என் நண்பன் உலகம் தெரியாதவன். சும்மாகாச்சுக்கு அவள் ரப்பர் பேண்டை வச்சுருப்பான் இல்லடா” எனக் கேட்டதில் மைத்ரேயனுக்கு ‘அட பைத்தியக்காரனே!’ என்றிருந்தது.
விஸ்வயுகா நெஞ்சில் கை வைத்து “உன் முழியே சரி இல்லையே. அவள் எங்கடா?” எனப் பின்னால் தேட, “பாத்ரூம்ல!” என்றவன் பேச்சை மாற்ற “நீ என்னடா ட்ரவுசரோட நிக்கிற” என்றதில் நந்தேஷ் அவனைத் தோளோடு தள்ளிக்கொண்டு அடுக்களைக்கு தனியாக சென்றான்.
அவனுக்கு நடந்ததை அறிய வேண்டுமென்ற ஆவல் அப்பட்டமாக இருந்தது.
யுக்தா அறைக்குள் செல்லாமல் சோபாவிலேயே அமர்ந்து விட, குறிஞ்சி அலைபேசி அழைப்பு வந்ததில் வாசலுக்குச் சென்றாள்.
அதே சோபாவில் விஸ்வயுகாவும் அமர்ந்து விட்டவள், “உண்மையாவே நம்ம நண்பன் ரொமான்டிக் பெர்சன் தானோ” என்ற சந்தேகத்தில் இருக்க, “அடியேய்… கல்யாணம் ஆனதுங்களை ஏன் இவ்ளோ கேள்வி கேக்குறீங்க. விவஸ்தையே இல்லையா உங்களுக்கு” என அதட்டினான்.
“விவஸ்தையா அதெல்லாம் இல்லை…” பட்டென அவள் பதில் அளித்ததும் தலையில் அடித்துக்கொண்டான்.
அவள் புறம் நன்றாக திரும்பி அமர்ந்தவன், “ஒரு தடவைக்கு நாலு தடவை நல்லா யோசியேன். அபர்ணா சம்பந்தப்பட்ட வேற எதுவும் மிஸ் பண்றீங்களா?” எனக் கேட்டான்.
“ஐயோ அபர்ணா ஆவி கூட என்னை நிம்மதியா விட மாட்டேங்குது…” எனக் கன்னத்தில் கை வைத்தவளைக் கண்டு சிரித்தவன், கையை எடுத்து விட்டு, “யோசிடீ!” என்றான்.
நகத்தைக் கடித்து சிந்தித்தவள், “எவ்ளோ யோசிச்சாலும் ஒன்னும் தெரியல யுக்தா. மாமாகிட்ட விசாரிச்சுப் பார்க்கலாம்ல?” என்றதும், “அங்கேயும் ஒன்னும் தேறல. அவளப் பத்தி வேற யார்கிட்ட கேட்கலாம்” என்றபடி நகத்தைக் கடித்த கையைப் பிடித்து தனது கைக்குள் வைத்துக்கொண்டான்.
அதனை எடுக்க முயன்றவளுக்கு தோல்வியே கிட்ட, இத்தனை நேரமும் இயல்பாக திரும்பிய மனதை மீண்டும் அழுத்தத்துக்கு உட்படுத்த விரும்பாதவளாக எப்படியும் வழக்குகள் முடிவுக்கு வரும் வரையிலும் தானே என்ற தைரியத்தில் அவன் போக்கில் விட்டுவிட்டாள்.
அவன் மனம் தேடுவதைத் தானே அவள் மனமும் ரகசியமாய் விரும்புகிறது!
“அவளைப் பத்தி அவளோட கனடா ப்ரெண்ட்ஸ்ட்ட வேணாலும் கேட்கலாம். இன்னொரு ஆள் நரேஷ் தான். அவன் பிரச்சனையே முழுசா தெரியலையே நமக்கு! அவன் கிடைச்சுருந்தா கூட நமக்கு லீட் கிடைச்சு இருக்கும். அது சரி அவளோடதை ஸ்கிப் பண்ணிட்டு இப்ப நடக்குற பிரச்சனையை மட்டும் பாக்கலாமே யுகி” என அவன் முகம் பார்த்தாள்.
சில நேரங்களில் அவளறியாமலேயே யுகி வந்து விடுகிறது. அதனைக் கண்டும் காணாதது போல இருந்து விடுபவனுக்கு அந்நொடி மனம் தேனாய் இனிக்கவே செய்கிறது.
இப்போதும் நெஞ்சில் குளுமையாக ஒரு இனிமைப் பரவ, அதனை தனக்குள்ளேயே வைத்துக் கொண்டவன், “எனக்கு என்னவோ அவளோட டெத் பத்தி பிரேக் பாய்ண்ட் கிடைச்சா இப்ப நடக்குற எல்லாத்துக்கும் சொலியூஷன் கிடைக்கும்னு என் இன்டியூஷன் உறுதியா நம்புது. அதை நோக்கி போக போக டெட் எண்டு தான் கிடக்குதுடி” என்றான் நெறித்த புருவத்துடன்.
அந்நேரம் குறிஞ்சி உள்ளே வந்து, “யுக்தா தரகர் மூலமா ரெண்டு மூணு பையனைப் பார்த்து ரிஜெக்ட் பண்ணிட்டு தென் மேட்ரிமோனில பிக்ஸ் பண்ணுன பொண்ணுங்க லிஸ்ட் வந்தாச்சு” என அவளது அலைபேசியைக் கொடுத்ததும் அவன் அதில் மூழ்கினான்.
விஸ்வயுகாவோ “இன்னைக்கு சனிக்கிழமை” என்றாள் அமைதியாக.
குறிஞ்சி “ஏன் சனிக்கிழமை பொண்ணுங்க லிஸ்ட் பார்க்க கூடாதா?” எனப் பாவம் போல கேட்க,
“ப்பா மரண மொக்கை… இன்னைக்கு உதித் பப்புக்கு வருவான். அவனை லாக் பண்ணனும்” என்றாள்.
யுக்தா, “ம்ம்… எல்லாமே அட் அ டைம்ல நடக்கட்டும். குறிஞ்சி நானும் யுகாவும் இன்னைக்கு நைட்டு பப்புக்கு போறோம். மைத்ராவையும் ஷைலுவையும் வச்சு சர்ச் ஹிஸ்டரி ரெட்ரைவ் பண்ண பார்க்கலாம்” என்றதில்,
“அப்போ லிஸ்ட்ல இருக்குற பொண்ணுங்க? எல்லாரையும் அருணை வச்சு ஃபாலோ பண்ண சொல்லவா?” எனக் கேட்டதும் “எல்லாரையும் எதுக்கு?” என இதழை வளைத்தான்.
இரு பெண்களும் புரியாமல் விழித்ததில், அலைபேசியை மீண்டும் குறிஞ்சியிடம் நீட்டியவன், “பேர் அனுரா. இவள் தான் அடுத்த டார்கெட். ஃபாலோ ஹெர்…” என்று அழுத்தமாக உத்தரவிட்டதில் அவள் அப்பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்தாள்.
நீல நிற குர்தியும் அதற்கு தோதாக ஜீன்சும் அணிந்திருந்தவளுக்கு வயது 25 க்குள் இருக்கும்.
விஸ்வயுகா எழுந்த ஆர்வத்தை அடக்க இயலாமல் “அதெப்படி இவள் தான்னு கன்பார்மா சொல்ற? கெஸ் தப்பா இருந்தா…” என விழி விரித்துக் கேட்டதும்,
கர்வப்புன்னகை வீசியவன், “அந்த கில்லர் ரொம்ப ஸ்மார்ட்டா கனெக்ஷன் இல்லாத பொண்ணுங்களை டார்கெட் பண்றான். அந்த கனெக்ஷன் இல்லாத பொண்ணுங்கள போட்டுத் தள்ளுறதுக்கு அவனுக்கு தெரியாமலேயே ஒரு குட்டி கனெக்ஷனை விட்டு வச்சுட்டான்” என்றான் வஞ்ச விழிகளுடன்.
“புரியல என்ன அது?” குறிஞ்சி கேட்டதும்,
“அவனுக்கு பிரச்சினை மேட்ரிமோனி தான். தரகர் மூலமா வர்ற மிடில் க்ளாஸ் பசங்களை ரிஜெக்ட் பண்ணிட்டு மேட்ரிமோனில ஹை ப்ரொஃபைலை சூஸ் பண்ற பொண்ணுங்களை தான் அவன் டார்கெட் பண்ணிட்டு இருக்கான். புரியுதுல. இந்தப் பொண்ணு தரகர் மூலமா வந்த லோ ப்ரொபல்ஸை ரிஜெக்ட் பண்ணிட்டு மேட்ரிமோனில வந்த வரனை சூஸ் பண்ணிருக்கா. மீதி எல்லாரும் தரகர் மூலமாவும் ஹை ப்ரொபைல் பார்த்துட்டு அப்பறம் டைரக்டா மேட்ரிமோனில ரெஜிஸ்டர் பண்ணவங்க தான். சோ…” எனத் தோளைக் குலுக்கியவனை வியப்பாக ஏறிட்டாள் விஸ்வயுகா.
“அவ்வ்வ் ஸ்மார்ட்டு” அவன் கன்னம் கிள்ள துடித்த கையை அடக்கிய விஸ்வயுகா, “அட்லீஸ்ட் இப்பவாவது இதை கண்டுபிடிச்சியே” என அசட்டையாக திரும்பிக் கொண்டாள்.
அங்கு, அனுராவின் புகைப்படத்தைக் கையில் வைத்தபடி மாலுக்குள் சுற்றித் திரிந்தது அவ்வுருவம்.
மால் ஒன்றில் ப்ரீ பிரைடல் டெஸ்ட்டிற்காக அழகுப்பதுமையாக வந்த அனுரா அழகு நிபுணர்களிடம் பேசிக்கொண்டிருக்க, “உன் அழகை நான் ஆராதிக்கிறேன் அனு. உனக்கு என்ன மாதிரி பாய்சன் குடுக்கலாம்… அழகு கெடாம!” என இகழ்ச்சியாக இதழ் விரித்து எகத்தாளம் செய்தான் அவன்.
அத்தியாயம் 74
“அடப்பாவி”
வெட்கத்துடன் முகத்தை மூடி “நான் பேச்சுலர் லைஃப்ல இருந்து ரிலீவ் ஆகிட்டேன் மச்சான்” என்ற மைத்ரேயனைக் கண்டு நந்தேஷ் வாயில் கை வைத்தான்.
“வீட்டை விட்டு துரத்துனா கமிட் ஆகிடுலாமாடா. இது தெரிஞ்சுருந்தா எப்பவோ வீட்டை விட்டு வந்துருப்பேனே…” என அங்கலாய்த்தவனின் முதுகில் பட்டென அடித்தான் யுக்தா சாகித்யன்.
“நாட்டை விட்டுத் துரத்துனா கூட நீ எல்லாம் கடைசி வரை சிங்கிள் தான்” என்று சாபமிட்டதில், “ஆமா நான் சிங்கிள் தான். அதான் என் எக்ஸ் செத்துட்டாளே” எனக் கண்ணீர் டேமை திறந்து விட ஆயத்தமானான்.
“அய்யயோ யுக்தா தாழ்வான பகுதி நோக்கிப் போய்டலாம். இவன் அழுகப்போறான்” என்று மைத்ரேயன் தயாராக, “டேய் எருமைங்களா” எனச் சிரித்து விட்டான்.
“என் லவ்வு உங்களுக்குலாம் காமெடியா இருக்குல்ல”
“புரிஞ்சுக்க மச்சான். உன் ஆளு அவள் ஆளோட பரலோகத்துக்குப் பறந்து போய் பல நாள் ஆச்சு. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங். ஆனா உனக்கு ஓவர் பீலிங் டா…” என யுக்தா கிண்டல் செய்ததில், நந்தேஷ் உர்ரென இருந்தான்.
மைத்ரேயன் தான், “ஆனா எனக்கு ஒரு டவுட்டு…” என ஆரம்பித்து, “இந்தப் பொண்ணுங்க வீட்டுல எல்லாம் ரேப்பிஸ்ட்டை ட்ரக் யூஸ் பண்ணவனுங்களைப் பார்த்து செலக்ட் பண்ணிருக்காங்களே… இவங்களுக்குல்லாம் அறிவு இருக்கா இல்லையா?” என்றான் புரியாமல்.
“அவனுங்க ரேப்பிஸ்ட், ட்ரக் யூஸ் பண்ணவங்கன்னு எந்த ஆதாரமும் இல்லாதப்ப, வெளில இருந்து பார்க்க நல்லவங்களா தான தெரியுவாங்க. தேங்க்ஸ் காட் இதுல குறிஞ்சி நல்லவேளையா எஸ்கேப் ஆகிட்டா” என நிம்மதியானான் யுக்தா.
நந்தேஷ், “அது இருக்கட்டும். அவளை எதுக்கு வேற ஒருத்தனை எனக்கு மாப்பிள்ளைன்னு காட்ட சொன்ன? விக்ரம் தான் எங்க விக்டிம்னு மேரேஜ்க்கு முதல் நாள் நைட்டு தான் எங்களுக்கு தெரிய வந்துச்சு. அதனால நைட்டோட நைட்டா அவனுக்கு பாயசம் போட வேண்டியதா போய்டுச்சு. அந்தப் பொண்ணு கல்யாணம் நிக்குமேன்னு வருத்தமா இருந்தாலும். அவனோட வாழுறதுக்கு அவள் நாலு மொழம் தூக்குல தொங்கிடலாம்னு தான் அமைதியா இருந்துட்டேன்” என்றான்.
“உங்கூட இன்டராக்ட் பண்ணி தான உன் மொபைல் டேட்டா எடுக்க பிளான். அது மூலமா சிவகாமியைப் பத்தின ஆதாரம் திரட்டவும் பிளான். சோ விக்ரம் செட் ஆக மாட்டான்னு தான் எங்க கூட படிச்ச ஒருத்தனை கூட்டிட்டு வந்து மாப்பிள்ளைன்னு காட்டுனா. அண்ட் நீ நைட்டோட நைட்டா பாயாசம் வைக்கலைன்னா கூட விக்ரம் செத்துருப்பான். ஓரமா போய் புலம்பு” என அவனை ஒதுக்கி விட்டு ப்ரிட்ஜில் இருந்து பால் பாக்கெட்டை எடுத்தவனை இருவரும் கலவரத்துடன் பார்த்தனர்.
“நான் பாயாசம் வைக்கலைன்னாலும் செத்துருப்பானா புரியலையே” நந்தேஷ் விழித்தபடி கேட்க,
இருவரின் தலை முடியையும் இரு கையிலும் கொத்தாகப் பிடித்த யுக்தா கிடுகிடுவென ஆட்ட, “ஐயோ டேய் என்னடா பண்ற விடுடா எங்களை… விஸ்வூ எங்களை காப்பாத்துடி உன் ஆள் கிட்ட இருந்து” என்று மைத்ரேயன் கத்தியதில் அவளும் குறிஞ்சியும் அடுக்களையை எட்டிப் பார்த்தனர்.
“யுகி என்ன பண்ற?” விஸ்வயுகா கேட்டதும்,
“மனசுல பெரிய சீரியல் கில்லர்ன்னு நினைப்பு நாலு பேருக்கும். உங்க மேல சந்தேகம் வராத மாதிரி எல்லாம் பண்ணுனீங்களே நீங்க கலந்து குடுத்த பாய்சனை விக்டிம் குடிச்சானான்னு செக் பண்ணுனீங்களாடா” என்றதும் மூவரின் முகத்திலும் ஈ ஆடவில்லை.
குறிஞ்சி நமுட்டு சிரிப்புடன், “அதெப்படி செக் பண்ண… பாய்சனைக் கலக்கவும் பின்னங்கால் பிடரில அடிக்க ஓடி வந்துருப்பானுங்க” என்றாள் கேலியாக.
விஸ்வயுகா எச்சிலை விழுங்கியபடி “என்னடி சொல்ற?” எனப் படபடப்புடன் கேட்டதில், “என்னத்த சொல்ல… நீங்க கொலை பண்ணனும்னு நினைச்சு ரெண்டு பேருக்கும் ஸ்கெட்ச் போட்டது என்னவோ வாஸ்தவம் தான். ஆனா நீங்க குடுத்த பாய்சன்னால அவனுங்க சாகல. அது மட்டும் கன்பார்ம்” என்றவளை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.
“யப்பா ராசா ஏற்கனவே இருக்குற ட்விஸ்ட்ல தலை எந்திரன் ரஜினி மாதிரி சுத்திக்கிட்டே தான் இருக்கு. நீ வேற சுத்த வைக்காத” என மைத்ரேயன் கதறியதுமே இருவரையும் விட்டவன்,
“இன்னொரு தடவை கொலை பண்ணுனேன் கத்திரிக்காய்ல கொழம்பு பண்ணுனேன்னு உருட்டிட்டு இருந்தீங்க, தலையை தனியா கழட்டி சுத்த விட்டுடுவேன்” என்று விரல் நீட்டி மிரட்டினான்.
“அப்போ மீ பயங்கரவாதி இல்லையா?” நந்தேஷிற்கு அவன் கவலை.
குறிஞ்சி அவனருகில் நெருங்கி அமைதியாக, “இல்ல நந்து. உன் ஆழ் மனசுக்குள்ள புகுந்து யாரோ நீ பயங்கரவாதின்னு நம்ப வச்சுருக்காங்க. ‘எங்க என் பேஷண்ட்’னு சந்தானம் மாதிரி கதறுனா கூட, நோ யூஸ்” என்று இறுதியில் அடக்கமுடியாத சிரிப்புடன் முடித்தவளை ரொம்ப கலாய்க்கிறாளே என முறைத்தான்.
விஸ்வயுகாவோ யுக்தாவின் சட்டையைப் பிடித்து “டேய் நீ பொய் சொல்லல தான? என்னை ஃப்ரேம் பண்ண கூடாதுன்னு எவிடென்ஸ மாத்துறியா?” திகைப்பு மாறாமல் கேட்டவளிடம்,
“ஒருவேளை அந்த ரெண்டு கொலைகளும் உங்களால நடந்துருந்தா கண்டிப்பா எவிடன்ஸ மாத்தி இருப்பேன். ஆனா, நீ பாய்சன் நேம் சொன்னதுமே அதை கண்டுபிடிக்கிற மாதிரியான டெஸ்ட்டை முரளியை வச்சு பண்ண சொன்னேன். நீ யூஸ் பண்ணுன பாய்சன் பொலினீயம்****. அது இறந்ததுக்கு பின்னாடி டிசால்வ் ஆகிடும். ரைட் தான். போஸ்ட் மார்ட்டம்ல கண்டுபிடிக்க முடியாது அதுவும் கரெக்ட் தான். ஆனா இம்பாஸிபிளையும் பாசிபிள்லா மாத்துற அட்வான்ஸ்ட் டெக்னாலஜி எல்லாம் இப்ப யூஸ் பண்ணிட்டு இருக்கோம்.
அந்த டாக்சிகாலஜி டெஸ்ட் மூலமா பாய்சனை ஃபைண்ட் அவுட் பண்ண முடியல. ஆனா அதுக்கு பதிலா வேறொரு பாய்சன் தான் கிடைச்சு இருக்கு…” என்றதும் மூவரும் பீதியுடன் அவனைப் பார்த்தனர்.
குறிஞ்சி யுக்தாவின் சட்டையில் இருந்த விஸ்வயுகாவின் கையை எடுத்து விட்டு, “எ***லியம்… இதை விக்டிம் சாகுறதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடியே குடுத்துருக்கணும். நீங்க இல்லாம வேற யாரோ இந்த கொலைகள்ல இன்வால்வ் ஆகிருக்காங்க” என்றாள் தீவிரமாக.
இவன் சட்டையைப் பிடிக்கிறதுக்கு எனக்கு உரிமை இல்லையா? என்ற கோபம் தானாய் எழ, அவளை முறைத்து வைத்தவள் மீண்டும் அவன் சட்டையை இறுக்கிப் பிடித்து, “இஸ் இட் ட்ரூ?” என்றாள் வினவளாக.
அந்நிலையிலும் அவளது உரிமைப் போராட்டம் ஆடவனைப் பித்துப் பிடிக்க வைத்தது.
நந்தேஷ் தொண்டையை செருமிக் கொண்டு, “சரி போகட்டும். எப்படியோ எங்க கையால சாகனும்னு நினைச்சவனுங்க யார் கையாலயோ செத்துட்டானுங்க அவ்ளோ தான” என்றதும்,
யுக்தா கூர்மையுடன், “என்னது அவ்ளோ தானா? பைத்தியமே எப்படி இருந்தாலும் சிசிடிவி ஆஃப் பண்ணுனது நீ. நீங்க பிரான்ஸ்ல இருந்து எக்ஸ்போர்ட் பண்ணி ஹேண்ட் ஓவர் பண்ணிக்கிட்ட பாய்சன் புட்ஏஜ் எல்லாம் கிடைச்சாச்சு. ஷைலு தான மால் ரெஸ்ட்ரூம்ல போய் கமுக்கமா பாய்சனை கை மாத்திட்டு வந்தது. அதை ஒருத்தன் வீடியோ எடுத்து உங்களுக்கே மெயில் பண்ணிருக்கான்.
உங்களோட போனை எல்லாம் செக் பண்ணதுல அந்த வீடியோவும் என் கிட்ட சேஃபா இருக்கு. ஆக மொத்தம் கொலை நீங்க பண்ணலை. ஆனா அதுக்கான மோட்டிவ், அதுக்கான ஆதாரம் எல்லாமே உங்களுக்கு எதிரா தான் இருக்கு. அது மட்டும் இல்ல. அடுத்து உதித்தும் அவன் கையால செத்துட்டா நமக்கு வேண்டிய தகவல் எதுவும் கிடைக்காம போய்டும். உங்களோட அடுத்த டார்கெட் யாருன்னு வாட்ச் பண்ணி, அவனும் பொறுமையா கொலை பண்ணுறான். இப்ப உதித் தான் உங்க டார்கெட்னு தெரிஞ்சுட்டா நீங்க எதுவும் பண்ணலைன்னாலும் அவன் சாவான். இப்படியே எல்லாரும் செத்துட்டா, யார் தான் இதுக்கெல்லாம் மூல காரணம்னு எப்படி கண்டுபிடிக்கிறது?” என்று விழிகளில் நெருப்பைப் பொழிந்தான்.
“எனக்கு இதெல்லாம் கேட்க கேட்க மூல காரணத்தை தேடி மூளை வெடிச்சுடும் போல… ஒரு நாள் தானடா சந்தோசமா இருந்தேன். அது பொறுக்கலையா உங்களுக்கு…” என மைத்ரேயன் வாய் விட்டே புலம்பி விட, யுக்தா சட்டென கோபம் தணிய “போடாங்…” என திட்ட வந்தான்.
விஸ்வயுகாவிற்கு பெருமூச்சு எழுந்தது. என்னங்கடா சுத்தி சுத்தி அடிக்கிறீங்க மொமெண்ட் அவளுக்கு.
பின் “அதுசரி ஷைலு எங்கடா? இவ்ளோ நேரமா குளிக்கிறா…” எனக் கேட்டபடி அறைக் கதவைத் தட்டினாள்.
சில நொடிகளில் அவளும் கதவைத் திறக்க, முகமே அழுது வீங்கி இருந்தது.
முந்தைய நாள் அணிந்த உடையையே அணிந்திருந்தாள்.
அவளைக் கண்டு அதிர்ந்த விஸ்வயுகா, “ஹே ஷைலு என்னடி இது. அழுதியா… என்னைப் பாரு” என்று பதறியதும், இவள் சத்தம் கேட்டு ஆடவர்களும் வெளியில் வந்தனர்.
ஷைலேந்தரி “இல்லையே…” என மறுப்பாகத் தலையாட்டி விட்டுக் கவனமாக மைத்ரேயனைக் காணாது தவிர்க்க, அவனுக்கு முகமே செத்து விட்டது.
“ப்ச் ஏய் அடிவாங்குவ என்ன ஆச்சுன்னு சொல்லு” விஸ்வயுகா அவளை சோபாவில் அமர வைத்து அவளும் அருகில் அமர்ந்து அதட்டியதும், “ஒன்னும் இல்லைன்னு சொல்றேன்ல…” என்றவளை முறைத்தாள்.
பின் அழுத்தம் தாளாமல் முகத்தை மூடி தமக்கையின் மடியில் புதைந்து கொண்டாள். அழவில்லை தான். ஆனாலும் குழப்பம் தீர்க்கவும் வழியில்லை.
அவள் தலையை மெல்ல கோதிவிட்ட விஸ்வயுகா நிமிர்ந்து மைத்ரேயனைப் பார்க்க அவன் சிலையாகவே இறுகிப்போனான்.
பிடித்தமில்லை என்றால் என்னைத் தள்ளி விட்டுருக்கலாமே! அல்லது அவசரப்பட்டு விட்டேனா? நினைக்கவே நெஞ்சம் குமுறிட மீண்டும் சமையலைறைக்குள் வந்து நின்றான். இருப்பதே சிறிய இடம் என்பதால் சுற்றி சுற்றி அதற்குள்ளேயே இருக்க வேண்டிய நிலை.
நந்தேஷ்ஷும் யுக்தாவும் யோசனையுடன் அவன் பின்னே செல்ல, நந்தேஷ் “டேய் என்னடா இது? உங்களுக்குள்ள எல்லாம் ஓகே தான…” என்றதும் அவனை அடிபட்ட பார்வை பார்த்தவன், “நான் ஒன்னும் அவளை ரேப் பண்ணலைடா. நீயும் என்னை தப்பா நினைக்காத…” எனக் கண்ணில் மிதந்த நீருடன் பார்த்ததில் நந்தேஷ் திகைத்து விட்டான்.
“நான் ஏண்டா அப்படி நினைக்கப்போறேன். ஏதோ மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்க் அவளுக்கு. பேசி சரி பண்ண பாரு…” என்று தோளைத் தட்டிக்கொடுத்தான்.
யுக்தா அடுப்பு மேடையில் சாய்ந்து கையைக் கட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தவனை அமைதியாகப் பார்க்க, “நீ என்னடா ஏதோ பொருட்காட்சிக்கு வந்த மாதிரி சாவகாசமா பார்த்துட்டு இருக்க?” என்றான் மூக்கை விடைத்து.
“அதில்ல என் வீட்ல நானே பர்ஸ்ட் நைட் செலெப்ரெட் பண்ணல இன்னும். அதுசரி லவ்வ சொல்லிட்ட தான?” எனக் கேட்டான் சந்தேகமாக.
“அதெல்லாம் சொல்லிட்டேன்…” மைத்ரேயன் வேகமாக தலையாட்ட, “ரைட்டு அவள் சொல்லிட்டாளா?” எனக் கேட்டதும் தான் சுருக்கென தலையில் ஒன்று உதித்தது.
“சொல்லல. ஆனா அவளுக்குப் பிடிக்கலைன்னா தடுத்துருப்பாளே…” பரிதாப நிலையில் பேசியவனைக் கண்டு நந்தேஷ்ஷும் பரிதாபமாகப் பார்த்தான்.
யுக்தா அழுத்தத்துடன், “உனக்கு இருக்குற மைனியூட் பீலிங்ஸ் அவளுக்கும் இருக்கலாம். ஏன் தடுக்கணும் அவள்… அவள் என்ன டீன் ஏஜ் பொண்ணா. கல்யாணம் பண்ணி இதெல்லாம் நடக்குற வயசு தான… மொதல்ல அவள லவ்வ சொல்ல வை. சும்மா கல்யாணம் ஆகி கடமைக்காக எதுவும் நடக்கலன்னு புரிய வை. அப்பறம் உக்காந்து ஒப்பாரி வைக்கலாம். ப்பே!” என்று விரட்டியவனிடம் “அவசரப்பட்டுட்டேனோ?” என்றான் உதட்டைப் பிதுக்கி.
“லிட்டில் பிட்” யுக்தா நமுட்டு நகை புரிய, ‘கல்நெஞ்சக்காரன் ஒரு கர்டசிக்காகவாவது அதெல்லாம் இல்லைன்னு சொல்றானா…’ என முணுமுணுத்தவன், “ஆனாலும் சகல… ரொம்ப ராசியான வீடு தான் போல. கபிள்ஸ்க்குள்ள டக்குன்னு பத்திக்கிது” என்று நக்கலடித்தான்.
நந்தேஷோ, “இஸ் இட். மச்சான்… அப்போ நானும் இன்னைக்கு நைட்டு…” என வெட்கத்துடன் ஆரம்பித்ததில் “இன்னைக்கு நைட்டு?” கண்ணைச் சுருக்கி யுக்தா கேட்டதும்,
“அவுஜா போர்டோட வந்து செத்துப்போன ரோஜாவோட ஆன்மாவை எழுப்பிடுறேன்டா…” என்றதும் மைத்ரேயன் சத்தம் வராதவாறு வாயைப் பொத்தி சிரிக்க,
யுக்தா வெறியாகி, “டேய் நானே எவன் கொலை பண்றான்னு தெரியாம மண்டை காஞ்சு போய், என் ஆளை எப்படி கரெக்ட் பண்றதுன்னும் புரியாம, செஞ்சு வச்ச கிறுக்குத்தனத்தை சரி பண்ணவும் வழி இல்லாம திணறிட்டு இருக்கேன். என் முன்னாடியே ஆளாளுக்கு ரொமான்ஸ் பண்ணி வெறுப்பத்துறீங்களா…” என அடிக்கத் துரத்த இருவரும் வீட்டை விட்டே ஓடி விட்டனர்.
மோகம் வலுக்கும்
மேகா