அத்தியாயம் 7
இரு நாட்கள் கடந்திருந்தது. நந்தேஷ் தான் ரோஜாவின் நினைவாகவே இருந்தான்.
மைத்ரேயனோ “டேய் அவள் உண்மையாவே லவ் பண்ணிருந்தா நானே இந்நேரம் டி. ஆர் லவ் பெயிலியர் சாங் எல்லாம் டவுன்லோட் பண்ணிக் குடுத்து உன் துன்பத்துல பங்கு எடுத்துருப்பேன். இதுவே ஒரு அரைவேக்காட்டு லவ்வு. இதுக்கு ஏன்டா பிழிஞ்சு பிழிஞ்சு சோகத்தை வழிய விடுற…” எனக் கேலி செய்ததில் நந்தேஷ் முறைத்தான்.
அவன் பதில் பேச வரும் முன் மடிக்கினிணியில் பார்வையைப் பதித்திருந்த விஸ்வயுகா, “போதும்டா. உடனே அவள் எப்படி வேணாலும் இருக்கட்டும் நான் உண்மையா லவ் பண்ணேன்னு 90ஸ் கிட்னு ப்ரூவ் பண்ண போற அதான. கேட்டு கேட்டு காதுல ஓட்டை விழுந்துடுச்சு. இந்த லவ் கான்செப்ட் என்னை ரொம்ப கடுப்பேத்துது. போய் வேலையைப் பாருங்க” என்றவளுக்கு ரோஜாவைப் பற்றி பேசினாலே அந்த சிபியை-இன் திமிர்த்தனமும் இறுதியாக அவன் பார்த்த அழுத்தப்பார்வையுமே கண் முன் நிழலாடியது.
அவனை நினைக்க நினைக்க கோபம் வேறு தலைக்கேறியதில், அவ்வப்பொழுது கோபம் குறைக்கப் பயன்படுத்தும் ஸ்மைலி பந்தை பிரெஸ் செய்து கொண்டே இருந்தாள்.
“அவன விடு நீ ஏன் ரெண்டு நாளா இவ்ளோ டென்ஷனா இருக்க?” என மைத்ரேயன் வினவ,
“நத்திங்…” எனும் போதே மூச்சிரைக்க கதவை உடைக்காத குறையாகத் திறந்து உள்ளே வந்தாள் ஷைலேந்தரி.
“கைஸ் கைஸ் கைஸ்! பேப்பர் பார்த்தீங்களா?” எனக் கேட்க,
“ம்ம் இதோ இருக்கே இவ்ளோ பேப்பர்” என மேஜை மீது நிறைந்திருந்த ப்ரொஃபைல் தாள்களை காட்டிய விஸ்வயுகாவிடம், “அடியேய்… இதோ பாரு” என்று செய்தித்தாளை நீட்டினாள்.
மூவரும் அதனுள் தலையை விட்டுப் படித்து திடுக்கிட்டனர்.
நந்தேஷ் அதிர்வுடன், “விஸ்வூ நீ சொன்ன மாதிரி ரோஜா டெத்தைக் கொலைன்னு தான் போட்டு இருக்காங்க” என வெளிறிட,
“இந்த கேஸை சிபிஐ பார்க்குறதா போட்டுருக்கு. போலீசைத் தாண்டி ஏன் சிபிஐ எடுத்துக்குறாங்க. அதுலயும் டெல்லில இருந்து ஸ்பெஷல் ஆபிசரை அப்பாயிண்ட் பண்ணிருக்காங்க. ரொம்ப பெரிய கேஸா இருக்குமோ” என்று லேசாய் அச்சம் பிறக்கக் கேட்டான் மைத்ரேயன்.
விஸ்வயுகா யோசனையுடன், “ம்ம்… சிபிஐ ஸ்பெஷல் இன்வெஸ்டிகேட்டிங் ஆபிசர் யுக்தா சாகித்யன்னு போட்டு இருக்கு, இவன் ஒருவேளை அவனா இருப்பானோ?” என புருவம் சுருக்கிக் கேட்க,
ஷைலேந்தரி வேகமாக “இருக்கும் விஸ்வூ, பேரும் கெத்தா இருக்கு. ஆளும் கெத்தா இருக்கான். மேட்ச் ஆகுது” என்று அனைத்துப் பல்லையும் காட்டினாள்.
அவளை மூவருமாக சேர்ந்து முறைக்க, “சரி சரி என்னை முறைக்கிறதை விட்டுட்டு இதுல நந்து பேர் வராம என்ன செய்யலாம்னு யோசிங்க” என்று பேச்சைத் திசை திருப்பினாள்.
“ப்ச் அந்தப் பொண்ணு தெளிவா எக்ஸ் லவர்க்காக சாகுறேன்னு எழுதி வச்சுருக்கு. ஆனா கொலைன்னா, கண்டிப்பா முதல் சந்தேகம் நந்து மேல தான் வரும் ஷைலா. இந்நேரம் அந்தப் பொண்ணோட போன் ஹிஸ்டரியை எல்லாம் நோண்ட ஆரம்பிச்சு இருப்பாங்க” என்று நொந்து நந்தேஷைப் பார்க்க, அவன் முகம் மாறியது.
“எங்க பெர்சனல் எல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்சுடுமா விஸ்வூ” எனப் பரிதாபமாகக் கேட்க, மைத்ரேயன் அவனுக்கு மட்டும் கேட்கும் வண்ணம், “ஏன்டா, எதுவும் 18 + ஆ பேசி வச்சுருக்கியா?” எனக் கிசுகிசுத்தான்.
“ப்ரெண்ட்ஸ்ஸா இருக்கும் போது இல்ல. ஆனா லவ்வ சொன்னதுக்கு அப்பறம்” என முணுமுணுத்தவன் வார்த்தையை முற்றுப்பெறாமல் இழுக்க, ‘இந்த நாய்க்கு எப்படி லவ்வு செட் ஆகி இருக்கும்’ என்ற குமுறலுடன் “சிக்குனடி” என்பது போல பார்த்தான்.
“என்னடா ரெண்டு பேரும் தனியா பேசிட்டு இருக்கீங்க?” விஸ்வயுகா அவர்களைக் கவனித்துக் கேட்க,
“ஒன்னும் இல்லையே” என்று இருவரும் வேகமாக தலையாட்டினர்.
“ப்ச், இது சம்பந்தமா உனக்கு பிரச்சனை வராத மாதிரி ஏதாவது முன்னேற்பாடு பண்ணனும் நந்து. என்கிட்ட எதையும் மறைக்காத” என்று கண்டிப்புடன் கேட்க,
“தங்கச்சிகிட்ட போய் இதை எப்படி சொல்ல விஸ்வூ?” என்றான் தயங்கி.
ஷைலேந்தரியோ, “என்னடா உங்களுக்குள்ள மேட்டரு ஓவரா?” என நேரடியாகக் கேட்டதில், மைத்ரேயன் தலையில் அடித்துக் கொண்டான்.
நந்தேஷ் பதறி “ஏய் அதெல்லாம் இல்ல. சும்மா லவ்வர்ஸ் டாக் தான். ஆனா அதெல்லாம் ஆபிஸர்ஸ் பார்த்தா என்னைக் கண்டிப்பா பிடிச்சுடுவாங்க” என்றதும்,
விஸ்வயுகா “அம்மாகிட்ட சொல்லலாமா நந்து?” எனக் கேட்டாள்.
“ஐயோ வேணாம் விஸ்வூ. தெரிஞ்சா அவ்ளோ தான். சிக்கலை இழுத்து விட்டதுக்கும் சேர்த்து செருப்பால அடிப்பாங்கடி” என சோகமாகக் கூற,
“ம்ம்க்கும் அதை லவ் பண்றதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும்” என முறைத்தவள், “அம்மாவுக்குத் தெரியாம யாரைப் பிடிக்கிறது…” என்று வாய்விட்டு சிந்தித்தவள் செய்வதறியாமல் மானிட்டரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஷைலேந்தரியோ, “விஸ்வூ, ஃபர்ஸ்ட் நம்மகிட்ட நேரடியா இந்தப் பிரச்சனை வரட்டும். அப்பறம் பார்த்துக்கலாம்” என்று கூறி முடிக்க, அவளை நிமிர்ந்து ஏறிட்ட விஸ்வயுகா, மானிட்டரை அவள் புறம் திருப்பி “பிரச்சனை வந்துடுச்சு” என்று காட்டினாள்.
சிசிடிவியில் யுக்தா சாகித்யனின் உருவம் பதிவாக, விழிகளை அகல விரித்த ஷைலேந்தரி “வாவ் ஹேண்ட்ஸம் கை இங்கயும் வந்துட்டானா” என ஜொள்ளை டன் கணக்கில் வழிய விட்டாள்.
“அடியேய்” என்று அதட்டிய மைத்ரேயன் “போய் அவனை ரிஸப்ஷன்ல வெய்ட் பண்ண வை. இவனை நாங்க ப்ரிப்பேர் பண்ணிட்டு சொல்றோம்…” என்னும் போதே, யுக்தா ரிசப்ஷன் பெண்மணி காத்திருக்கக் கூறுவதை எல்லாம் காதில் வாங்காமல் சேர்மன் அறையைத் தேடி பின் சரியாக விஸ்வயுகாவின் அறைக்குள் அனுமதி இன்றி நுழைந்து விட்டான்.
“என்ன இவன் இவ்ளோ பாஸ்ட்டா இருக்கான்” எனப் பீதியில் விழித்த நந்தேஷ், “டேய் நானே பேசாம சரண்டர் ஆகிடவா” என மைத்ரேயன் காதில் ஓதினான்.
வாயைப் பிரிக்காமல் அடிக்குரலில், “சனியனே… செத்த வாயை மூடு” என்று அடக்கிய மைத்ரேயன், “ஹெலோ கதவை தட்டிட்டு வரமாட்டீங்களா?” என முறைப்பாகக் கேட்க, யுக்தாவோ வந்தது முதலே சுழல் நாற்காலியில் கம்பீரத்தின் மருவுருவமாக வீற்றிருந்தபடி அவனை நேருக்கு நேராய் உறுத்து விழித்த விஸ்வயுகாவின் மீதே விழிகளை ரசனையாகப் பதித்திருந்தவன், “யூ ஆர் டேமின் பியூட்டி ஏஞ்சல்!” என கிறங்கிய குரலில் கூறினான், பாதி வரை தெரிந்த உருவத்தைக் கூட ஊடுருவியபடி.
பற்களை அழுந்தக் கடித்து கோபத்தை அடக்கியவள், “அதை நீ சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என வெடுக்கென பதில் அளிக்க,
“சொல்ல வேண்டியது என் கடமையாச்சே. ரசிக்கிறத பாராட்டுறது என் பழக்கம்!” என்றான் இதழ்களை ஏளனமாக வளைத்து.
அவன் பார்வையும் பேச்சும் அவளுக்கு மட்டுமல்ல மைத்ரேயனுக்கும் பிடிக்காமல் போனது.
ஷைலேந்தரி தான், நெஞ்சில் கை வைத்து, ‘நான் இவனை சைட் அடிச்சா இவன் அவளை சைட் அடிக்கிறானே…’ என மூக்கை உறிஞ்சி “இருந்தாலும் நீங்க ரொம்ப மோசம் சிபிஐ சார். அந்த அடங்காப்பிடாரி உங்களுக்கு ஏஞ்சல் மாதிரி தெரியுறா. உங்களுக்காக வகை வகையா சாப்பாடை பார்த்து பார்த்து எடுத்துட்டு வந்த நான் ஊஞ்சல் மாதிரி இருக்கேனா” என ஒப்பாரி வைத்தாள்.
‘இவள் வேற கூவ ஆரம்பிச்சுட்டா’ எனத் தோள்களில் பரவிய கூந்தலைக் கடுப்புடன் பின்னால் தள்ளிய விஸ்வயுகாவின் சிறு செயலையும் விடாமல் விழுங்கியவன்,
“ஹே! நீயும் பியூட்டி தான். ஆனா, அதை உன்ன ரசிக்கிற ஆள்கிட்ட கேளு. அப்ப தான் உன் பியூட்டியோட ஒரிஜினல் வெர்ஷன் உனக்குப் புரியும். நான் சொன்னா ஜஸ்ட் லைக் தட் இருக்கும்…” என அவளையும் அழகு என ஆராதிக்க,
“ம்ம்க்கும் ரசிக்கிற ஆளுக்கு நான் எங்க போவேன். உங்களுக்கு டீ, காபி சொல்லட்டா சார்” என்று அவன் தலையில் ஒரு கூடை ஐஸை வைத்ததில்,
“எஸ் ப்ளீஸ்!” என இமை சுருங்க ஒப்புக்கொண்டவன் மீண்டும் கவனத்தை விஸ்வயுகாவின் மீது வைக்க, அவளோ தங்கையின் மீது கொலைவெறியில் இருந்தாள்.
மைத்ரேயன் தான் ஷைலேந்தரியை மேலிருந்து கீழ் வரை பார்த்து விட்டு, “பியூட்டியாம்… பாட்டிக்கு பாண்டியா வேஷம் போட்ட மாதிரி மூஞ்சியை வச்சுக்கிட்டு இந்த நாய் பண்ற அட்டூழியம் தாங்க முடியல” எனக் கடுகடுத்தான்.
யுக்தா நந்தேஷை ஒரு பார்வை பார்த்து விட்டு, விஸ்வயுகாவிடம் “உங்கிட்ட பேசணும்… தனியா” என்று அழுத்தமாகக் கூற,
‘இவன் அவனை விசாரணை பண்ணுவான்னு பார்த்தா அவளை ஏன் குறுக்கு விசாரணை பண்ணிட்டு இருக்கான்’ என்ற குழப்பம் எழுந்தாலும் விஸ்வயுகா மற்றவர்களை வெளியில் செல்லச் சொல்லி கண்ணைக் காட்டியதில் மறுக்காமல் வெளியில் சென்றனர்.
நிமிடங்கள் கடந்தும் யுக்தா அவளை ஆழப் பார்த்தபடி அமர்ந்திருந்தானே தவிர ஒரு வார்த்தைப் பேசவில்லை.
பொறுமை இழந்த விஸ்வயுகா, “மிஸ்டர் என்ன விஷயம்னு சொல்லிட்டுக் கிளம்புறீங்களா. எனக்கு வேலை இருக்கு” என்று எரிச்சலுற,
“என்ன விஷயமா நான் வந்தேன்னு உனக்குத் தெரியாது அப்டி தான?” என்றான் நக்கலாக.
“தெரியாது” அசட்டையாக தோளைக் குலுக்கியவளிடம், “ஓ நோ! உன் அண்ணனோட அரண்ட முகமே உங்க திருட்டுத் தனத்தைக் காட்டிக் குடுத்துடுச்சு ஏஞ்சல். சோ சேட்” எனப் போலியாகப் பாவப்பட்டுக் கொண்டவனைக் கண்டு லேசாய் திகைத்தாள்.
ஆனாலும், “அவன் முகமே அப்படி தான்! நீங்க வந்த விஷயத்தை சொல்லுங்க” என்று இலாவகமாகப் பேசிட,
ஒரு விரலை உதட்டில் ஸ்டைலாக வைத்தபடி அவளை ரசித்திருந்தவன், ஒற்றைப்புருவம் உயர்த்தி “பிசினஸ் வுமன் ஆச்சே. ட்ரிக்கியா பேச சொல்லியா தரணும்” எனப் பாராட்டி விட்டு,
“ரோஜாவோட கொலைல உன் அண்ணன் நந்தேஷ் ப்ரைம் சஸ்பெக்ட். அவளைக் காதலிச்சு ஏமாத்தி, ஆசை வார்த்தைப் பேசி அவளை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி, கல்யாணத்து அன்னைக்கு மிரட்டி பாய்சன் குடுத்து கொன்னுருக்கான். இதை பார்த்த கல்யாண மாப்பிள்ளைக்கும் பாய்சன் குடுத்துருக்கான்” என்று நிறுத்த விஸ்வயுகா அதிர்ந்தாள்.
“ஸ்டாப் திஸ் நான்சென்ஸ். அவனும் ரோஜாவும் லவ் பண்ணிருக்காங்க. அவள் தான் இவனை கழட்டி விட்டுட்டு வேற ஒருத்தனைக் கல்யாணம் பண்ண போனா. அப்பவும் என் அண்ணன் டீசண்டா விலகிட்டான். மைண்ட் யுவர் வர்ட்ஸ் மிஸ்டர் யுக்தா” என்று கோபத்தில் பொறிந்திட, இதழோரம் குறுநகை சிந்தியவன், “ம்ம்… இதை முன்னாடியே சொல்றதுக்கு என்ன ஏஞ்சல்” என்றான் எகத்தாளமாக.
தன்னைப் போட்டு வாங்கி இருக்கிறான் என்பதே அப்போது தான் புரிய, “இன்வெஸ்டிகேட்டிங் ஆபிசர் ஆச்சே போட்டு வாங்க சொல்லியா தரணும்” என அவனைப் போன்றே மெச்சுதலும் நக்கலும் கலக்க கேட்டாள்.
மெல்லப் புன்னகைத்தவன், அவள் முன்னே சில தாள்களை வைத்தான்.
“இது ரோஜாவும் நந்தேஷும் லவ் சேட்ல கொஞ்சி மிஞ்சி முத்தெடுத்த ரொமான்டிக் டாக்ஸ். இந்த ஒரு ஆதாரம் போதும் ஏஞ்சல். உன் அண்ணனை இப்பவே அரெஸ்ட் பண்ணி, உள்ள தள்ளி முட்டிக்கு முட்டி தட்டி, அவன் தான் கொலை பண்ணான்னு நைட்டோட நைட்டா ஒத்துக்க வச்சு, நாளைக்கு காலைல இந்த கேஸை க்ளோஸ் பண்ற அளவு, நந்தேஷ்க்கு எதிரா ஸ்ட்ராங் எவிடன்ஸ், மோட்டிவ் எல்லாமே இருக்கு” எனத் தோளைக் குலுக்க, அவள் அயர்ந்து போனாள்.
“வாட் த பஃ***க்? லவ் பண்ணிருந்தா அவன் தான் கொலை பண்ணிருப்பானா? அவ்ளோ சாதாரணமாலாம் அவன் மேல கை வைக்க விட மாட்டேன் மிஸ்டர்” என்று விழிகளில் நெருப்பைக் கக்க,
“ஹே ஜஸ்ட் சில் ஏஞ்சல். தண்ணி குடி” என்று கொஞ்சலாய் கூறுவது போல அவள் மேஜை மீதிருந்த நீர் பாட்டிலை எடுத்துக் கொடுக்க, அவள் அதனை தவிர்த்தாள்.
“லுக் ஏஞ்சல். இதெல்லாம் நான் ஏன் உங்கிட்ட எக்ஸ்ப்ளெய்ன் பண்ணனும். அரெஸ்ட் பண்றதுன்னா வந்ததுமே பண்ணிருப்பேனே. அப்படி எல்லாம் உன்னை ஹர்ட் ஆக விட்டுருவேனா?” என வெகு தணிவாய் பேசிட, கண்ணைச் சுருக்கி அவனை ஆழ்ந்து பார்த்தவள், “அதான ஏன் அரெஸ்ட் பண்ணல?” எனக் கேட்டாள்.
“அதெல்லாம் பொறுமையா பண்ணிக்கலாம். உன் அண்ணன் சஸ்பெக்ட்டா இருக்கான்னு தெரிஞ்சதும் இந்த கேஸை பொறுமையா ஆற அமர பார்த்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். அவனுக்கு எதிரா இருக்குற இந்த மெசேஜ் ரெக்கார்ட எல்லாம் உன்கிட்டயே குடுத்துடலாம்னு தான் வந்தேன்…” என்று நிறுத்தி விட்டு அவளைப் பார்த்தவனை அவளும் கூர்மையுடன் பார்த்தாள்.
“ஆவ்… உனக்காக உன் அண்ணனை அரெஸ்ட் பண்ணலைன்னு சொல்றேன் சர்ப்ரைஸ் ஆக மாட்டியா ஏஞ்சல்” எனக் குறைபட கேட்டவனிடம், “உனக்கு எவ்ளோ பணம் வேணும்?” எனக் கேட்டாள் நேரடியாக.
“ஹா ஹா…” என அறை அதிரச் சிரித்தவன்,
“கமான் ஏஞ்சல். பணமெல்லாம் என்கிட்ட தேவையான அளவு இருக்கு. எனக்கு நீ தான் வேணும்!” என்று கேட்டு, பேப்பர் வெயிட்டை கையில் எடுத்து அவளைப் பார்த்தபடியே உருட்டி விட்டவனை விழி தெறிக்க அதிர்ந்து நோக்கினாள் விஸ்வயுகா.
அத்தியாயம் 8
யுக்தாவின் கூற்றில், “எங்க வந்து, யார்கிட்ட என்ன பேசிட்டு இருக்க?” என சினம் மிகுந்து எழுந்தே விட்டவள், அவனைத் தீயாக முறைக்க, அந்நேரம் கதவு தட்டப்பட்டது.
வேலையாள், சுட சுட தேநீரைக் கொணர்ந்திருக்க யுக்தாவோ “ரொம்ப சூடா இருக்க. ஹாட்டா டீ குடிச்சா, ஹாட் ப்ளஸ் ஹாட் கூல் ஆகிடும் ஏஞ்சல். ட்ரை இட்!” என்று ஒரு கப்பை அவள் புறம் நீட்டியதில், முகத்தைச் சுளித்து திரும்பிக் கொண்டாள்.
அதனை கண்ணிமைக்காமல் பார்த்தபடியே அவளுக்கு கொடுத்த தேநீரை அவனே சுவைக்க ஆரம்பித்தான்.
பார்வையின் சூடோ அவளை உருக்கிக் கொண்டிருந்தது.
சில நிமிடங்கள் செலவழித்து, நிதானமாக குடித்து முடித்தவன், அதரம் மடித்து உதட்டில் தேங்கி இருந்த தேநீரை உள்ளிழுத்தபடி அவளை சில்மிஷமாக நோக்க, அவனைக் காண காண ஆத்திரம் எரிமலையாக சூழ்ந்தது அவளுக்கு.
‘கண்ணை நோண்டுனா என்ன?’ என்ற சினம் தாக்க, முகம் சிவந்து அமர்ந்திருந்தவளிடம்,
“வெல்… எல்லாத்துக்கும் முன்னாடி நான் உங்கிட்ட இன்னொரு விஷயம் சொல்லணும் ஏஞ்சல். என்னைப் பார்த்துக் கோபப்படு, இந்த கோலிமுட்டை கண்ணை வச்சு எவ்ளோ வேணாலும் ஃபயர் விடு என்று மோகம் தோய்ந்த குரலில் பேசிக்கொண்டே வந்தவனின் விழிகளும் குரலும் அழுத்தம் பெற்றது.
“ஆனா, இந்த முகத்தை சுளிக்கிற வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்காத. செகண்ட் டைம், வார்னிங்கோட விடுறேன்…” என்று விரல் நீட்டி எச்சரிக்க,
“என்னடா செய்வ?” என எகிறினாள் விஸ்வயுகா.
“என்னன்னவோ செய்வேன். யூ காண்ட் டாலரேட் தட். ஓகே கமிங் டூ த பாயிண்ட். உனக்கு இந்த எவிடன்ஸ் வேணுமா வேணாமா?” எனக் கட் அண்ட் ரைட்டாக கேட்க, அவள் பல்லைக்கடித்தபடி, ஸ்மைலி பந்தை பிரெஸ் செய்து கொண்டிருந்தாள்.
அதனைப் பார்த்து விட்டவன், “ப்பா… அந்த பாலுக்கு பதிலா நான் இருந்தா நல்லா இருக்கும்!” என ஒரு மாதிரியாகக் கூற, “வாட்?” எனப் புரியாமல் கேட்டாள்.
அதற்கு அவன் கோணலாக புன்னகைக்க, “உனக்கு என்ன பிரச்சனை? எதுக்கு தேவை இல்லாம என்னை கார்னர் பண்ற? ஹூ தி ஹெல் ஆர் யூ?” என எரிச்சலாக கேட்டாள்.
“என் கண்ணு உன்னை பார்த்துருச்சே அது தான் பிரச்சனை. உன்னை கார்னர் பண்ணலைன்னா, நீ என்கூட டைம் ஸ்பென்ட் பண்ணுவியா ஏஞ்சல். சோ ஐ டோன்ட் ஹேவ் சாய்ஸ். உன் அண்ணன இதுல இருந்து தப்பிக்க வைக்க, என்னால மட்டும் தான் முடியும். அதுக்கு நீ ஒரு ஒன் வீக், ஜஸ்ட் ஒரு ஒன் அவர் என்கூட டைம் ஸ்பெண்ட் பண்ணனும். தட்ஸ் ஆல் ஏஞ்சல்!” என்று இயல்புடன் கூறியதில்,
“நான் நினைச்சா உன் கேரியரையே இல்லாம பண்ணிடுவேன் மிஸ்டர் யுக்தா!” என்றாள் வெறுப்பை உமிழ்ந்து.
நக்கல் புன்னகை சிந்திய யுக்தா சாகித்யன், “இன்னைக்கு ஈவ்னிங் ஆறு முப்பது வரைக்கும் உனக்கு டைம். அதுக்குள்ள நீ என்னை வேலையை விட்டுத் தூக்கணும். அப்படி இல்லன்னா, சரியா ஏழு மணிக்கு நான் அனுப்புற லொகேஷன்க்கு நீ வரணும்” என்றவன்,
“ஹே… ஐம் அ 50 பெர்சன்ட் ஜென்டில்மேன். ஒன் அவர் டைமை ரொமாண்ட்டிக்கா ஸ்பெண்ட் பண்றதும், என் முகத்தைப் பார்த்துக்கிட்டே நேரத்தைக் கடத்துறதும் உன் விருப்பம். பட் யூ ஷுட் பீ தேர். இல்லன்னா, நாளைக்கு காலைல உன் அண்ணன் ஜெயில்ல இருப்பான். காட் இட்” என்றான் அழுத்தம் திருத்தமாக.
“என்னால உன்னை அடக்க முடியாதுன்னு நினைக்கிறியா?” அவள் சீறி விட்டு, அவளது தாய்க்கு போன் செய்யப் போக, அதனைப் பறித்து பார்த்தவன், “அம்மாவுக்கா? நான் கூட நீ ஏதோ ஹையர் ஆபிஸர்ஸ்கிட்ட பேசப் போறன்னு நினைச்சேன்…” எனக் கேலியாய் கேட்டவன்,
“என்ன ஏஞ்சல்… நீயே இவ்ளோ பெரிய பிசினஸை எவ்ளோ அழகா ஹேண்டில் பண்ற. உன்னால என்னை தனியா ஹேண்டில் பண்ண முடியாதா? அம்மாகிட்ட சொல்லுவேன் ஆட்டுகுட்டிக்கிட்ட சொல்லுவேன்னு கிளம்பாம, உன் ஓன் இன்ப்ளூயன்ஸ் வச்சு, என்ன வேணாலும் பண்ணு. ம்ம்… அண்ட் டோன்ட் பர்கெட். ஒன் வீக் ஒன் அவர்!” என்று மீண்டும் நினைவு படுத்தினான்.
“நீ என்னை சைக்கோவா. சொன்னதையே சொல்லிட்டு இருக்க… உனக்கு கூடி கூத்தடிக்க வேற எவளும் கிடைக்கலையா? டெல்லில மேஞ்சு மேஞ்சு போர் அடிச்சுப் போச்சோ!” என வார்த்தைகளைத் துப்ப,
அதற்கும் அளவாய் சிரித்தவன், “ஐ திங்க், நீ போர் அடிக்க மாட்ட. பார்க்கலாம்” என விஷமக் கண் சிமிட்டலுடன் ஆதாரங்களை மீண்டும் எடுத்துக்கொண்டவன்,
“இதெல்லாம் ஜெராக்ஸ் காபி தான். இதை எடுக்குறதுக்கு போற வழில அடியாளு எல்லாம் ரெடி பண்ணி டைம் வேஸ்ட் பண்ணாத. பாவம் உனக்கே டைம் கம்மியா இருக்குல்ல! கேட்ச் யூ சூன் ஏஞ்சல்” என தூர நின்றே அவள் வடிவத்தை அளந்து முத்தமிட்டுக்கொண்டு வெளியில் சென்றவனை கொன்றே விடலாமா என்றிருந்தது அவளுக்கு.
‘ச்சை… எந்தப் பைத்தியக்கார ஆஸ்பத்திரில இருந்து தப்பிச்சு வந்துச்சுன்னு தெரியல இந்தப் பைத்தியம்!’ என்று நெற்றியைப் பிடித்தவளுக்கு, இந்த வழக்கில் நந்தேஷ் மாட்டினால், நிச்சயம் பெரிய அளவில் அவன் வாழ்வே பாதிக்கப்படும் எனப் புரிந்தது.
ஆனால் என்ன செய்வது? அதற்காக இந்தப் பைத்தியம் சொல்படி நடக்க எனக்கு என்ன பைத்தியமா? என கடுகடுத்தவள், அடுத்து அடுத்து பேச வேண்டிய ஆட்களிடம் பேசினாள்.
மினிஸ்டர் நாச்சியப்பன். விஸ்வயுகாவிற்கு ஒரு வகையில் மாமன் முறை.
ஆளுங்கட்சியில் முதலமைச்சருக்கு அடுத்து அதிக செல்வாக்கு உள்ளவர்.
சட்டசபைக்கு கிளம்பிக் கொண்டிருந்த நாச்சியப்பன், வெள்ளை வேட்டி சட்டையும் நெற்றியில் திருநீருமாக நேரத்தைப் பார்த்தபடி காரில் ஏறி அமர்ந்தார். முன் சீட்டில் அமர்ந்திருந்த அவரது உதவியாளர் பரணி, “ஐயா பாப்பா பேசுது” என அலைபேசியை நீட்டினார்.
தனது கரகரத்த குரலில், “சொல்லு விஸ்வாம்மா!” என்றார்.
“மாமா… எனக்கு நீங்க உடனே ஒரு பேவர் பண்ணனும்!”
“என்னம்மா எப்பவும் உன் அம்மா தான் போன் பண்ணி இதெல்லாம் கேட்பா. இப்ப நீ கேட்குற?” மெல்ல நகைத்தார் நாச்சியப்பன்.
“ஏன் நான் கேட்டா செய்ய மாட்டீங்களா?” அவள் குதர்க்கமாக கேள்வி எழுப்ப,
“அட என்ன விஸ்வாம்மா. நீ சொல்லி முடிக்கிறதுக்குள்ள நான் செஞ்சு முடிச்சுடுறேன் சரியா?” என்றதும் அவளிடம் கர்வப்புன்னகை.
விஷயத்தை மேலோட்டமாகக் கூறியவள், “அவன் பேச்சும் பார்வையும் சரி இல்ல மாமா. அவன் இந்த கேஸை எடுத்து நடத்த கூடாது. முடிச்சு விடுங்க!” என்று கறாராய் கூறிட, ஒரு நொடி யோசித்த நாச்சியப்பன், “நான் பேசிப் பார்க்கட்டாம்மா?” எனக் கேட்டார்.
அவளும் சிறு யோசனைக்குப் பிறகு, “சரி பேசிங்க. ஆனா இன்னொரு தடவை அவன் கேஸ் விஷயமாவோ மத்த விஷயமாவோ என்னைப் பார்க்க வரக்கூடாது” என்று தீர்மானமாகக் கூறி விட்டு போனை வைத்தாள்.
அவன் சுற்றி விளையாடிய பேப்பர் வெயிட்டை இப்போது அவள் சுற்றிக்கொண்டிருந்தாள்.
‘யார்கிட்ட? என்கிட்டயே உன் திமிரைக் காட்டுறியாடா டொமேட்டோ’ என இதழ் வளைத்து நகைத்திட, அந்நேரம் மூவரும் கும்பலாக உள்ளே நுழைந்தனர்.
“என்ன ஆச்சு விஸ்வூ? என்ன சொன்னான் அவன்” என்று மைத்ரேயன் வினவ, “ஆல் ஓகேடா. மீட்டிங் அரேஞ்ச் பண்ணிருந்தோம்ல. கம் லெட்ஸ் கோ” என்று சுறுசுறுப்பாக மீட்டிங் ஹாலினுள் நுழைந்தவள், ஐந்து மணி வரையிலும் அமர நேரமில்லாமல் சுழன்றாள்.
சற்றே ஆசுவாசமாகி அவளது அறைக்குள் நுழைந்து அமர்ந்த நேரம் நாச்சியப்பனே போன் செய்தார்.
“சொல்லுங்க மாமா. வேலை முடிஞ்சுதா?” என நீரை அருந்தியபடி கேட்டவளிடம்,
“அதாவது விஸ்வாம்மா, யுக்தா தம்பி என்ன சொல்றாருன்னா” என ஆரம்பிக்க, குடித்துக் கொண்டிருந்த தண்ணீரை துப்பி விட்டாள்.
“எதே அவன் உங்களுக்கு தம்பியா? மாமா என்ன ஆச்சு?” என உட்சபட்ச சினத்துடன் கேட்க, “ம்மா… கொஞ்சம் கோபப்படாம பொறுமையா நான் சொல்றதை கேளு. நான் தம்பிகிட்ட நேர்லயே பேசிட்டேன்” என்று சுருளை சுற்ற விட்டார்.
விஸ்வயுகா போன் செய்து வைத்ததும், பரணியிடம் யுக்தாவைப் பற்றி விசாரிக்க கூறி விட்டு, அவனது அலைபேசி எண்ணையும் வாங்கி அவனுக்கே நேரடியாக அழைத்து விட்டார்.
“நான் மினிஸ்டர் நாச்சியப்பன் பேசுறேன்…” என்று தொண்டையை கனைக்க,
‘இந்த பரதேசியா’ என முணுமுணுத்தவன், “ஐயா சொல்லுங்கய்யா” என்றான் வார்த்தைகளில் மட்டும் பணிவாக.
“என்னை வந்து பாரு உடனே!” என்று கட்டளையிட்டவர், சட்டசபையை வேலையை முடித்து விட்டு, காரில் ஏறப்போனார். அந்நேரம் அவர் முன் தோன்றிய யுக்தா, லேசாய் குனிந்து “ஐயா… கூப்பிட்டீங்களா?” என வணங்க, அவனை மேலிருந்து கீழ் வரை பார்த்தவர் “ம்ம் கார்ல ஏறு” என்று அவனிடம் கூறி விட்டு பரணிக்கும் கண்ணைக் காட்டினார்.
உள்ளே அமர்ந்து, கார் நகர்ந்ததும் “என்னப்பா, டெல்லில இருந்து வந்தா இஷ்டத்துக்கு இருக்கலாம்னு நினைப்பா. என் மருமவைகிட்ட ராங்கா நடந்தியாமே. இங்க பாரு… பெரிய இடத்துல கை வைக்கிற. ஒழுங்கா ஒதுங்கி போய்டு. இல்லன்னா நீ இருக்குற இடம் தெரியாம ஆக்கிடுவேன்…” என்று மிரட்ட,
ஒரு கணம் முகத்தில் குழப்பத்தை காட்டிய யுக்தா, “ஐயா நீங்க என்ன சொல்றீங்கன்னே எனக்குப் புரியல. நந்தேஷ் சார் சம்பந்தப்பட்ட கேஸ நான் தான் டீல் பண்றேன். ரெட்டை கொலை கேஸ் சார். அதுக்கு ஆதாரம் எல்லாம் நந்தேஷ் சார்க்கு எதிரா இருக்கு… விஸ்வயுகா மேடம்கிட்ட நான் இதெல்லாம் சொல்லி, அவங்களுக்கு எதிரா இருக்குற ஆதாரத்தை அவங்ககிட்டயே குடுத்துடுறேன்னு சொல்லிட்டேனே சார்…” என்றான் தணிவாக.
அந்நேரம் அவனுக்கு போன் வந்ததில், “ஒரு நிமிஷங்கய்யா” என போனை கூட பணிவாக எடுத்தவன், எதிர்முனையில் கபீரின் குரல் கேட்டு, “சார் நான் மினிஸ்டர் ஐயா கூட பேசிட்டு இருக்கேன். எதுவா இருந்தா இருந்தாலும் அப்பறம் பேசுறேன்” என்று போனை வைத்து விட இங்கு கபீருக்கு லேசாய் நெஞ்சு வலித்தது.
‘மினிஸ்டர் ஐயாவா? இவன் என்கிட்ட கூட இவ்ளோ பொலைட்டா பேசுனது இல்ல. இதுல பொலிட்டிஷனை பார்த்தாலே வன்மத்தை கக்குவான். என்ன ஆச்சு இவனுக்கு?’ என்று விழி பிதுங்கி வெகு நேரமாக போனையே பார்த்துக் கொண்டிருந்தார் பாவம்.
அவனை யோசனையுடன் பார்த்தா நாச்சியப்பனிடம், “இதுல இன்னொரு விஷயம் என்னன்னா, விஸ்வயுகா மேடம் நடத்துற மேட்ரிமோனி அண்ட் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் வழியா தான் கல்யாணமே நடந்துருக்குங்க ஐயா. அங்க தான் கொலையும் நடந்ததுனால, எனக்கு ஏகப்பட்ட ப்ரெஷர். உங்களுக்கு தெரியாதது இல்ல. நான் அவங்க பேக் கிரவுண்ட் தெரிஞ்சு, நேரா மேடம்கிட்ட போய் ‘எவிடன்ஸ குடுத்துடுறேன் மேடம். நீங்க எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் பண்ணனும்’னு தான் கேட்டேன் சார்” என வெகு பரிதாப தோரணையுடன் முகத்தைப் பாவமாக வைத்தபடி பேசினான் யுத்ரா.
‘என்னது?’ என்பது போல மினிஸ்டர் பார்க்க,
“அவங்களை இன்வெஸ்டிகேட் பண்ணுன மாதிரி சும்மா ஒரு பாவ்லா காட்டுனா போதுங்கய்யா. அவங்களை என் இடத்துக்கு கூட்டிட்டுப் போய் விசாரிச்சா அவங்க பேர் கெட்டுப்போகும். அவங்க வீட்டுக்குப் போனாலும் மீடியாவுக்குப் போய்டும். அதான், ரெண்டு பேருக்கும் பொதுவா இருக்குற இடத்தில, ஒரு ஒரு வாரத்துக்கு தொடர்ந்து ஒரு மணி நேரம் அவங்களை விசாரிச்சு விவரத்தை தெரிஞ்சுக்குற மாதிரி ஏற்பாடு பண்றேன். அப்பறம் அப்டி இப்டி நானே ஒரு பைல் ரெடி பண்ணி, அந்த ரெண்டு டெத்தும் தற்கொலை தான்னு சொல்லி கேஸை முடிச்சு விடுறேன்னு சொன்னேங்கய்யா. அதை மேடம் தப்பா புரிஞ்சுக்கிட்டு, உங்ககிட்ட சொல்லி…” என்று வருத்தம் தோய்ந்த குரலில் பேசி முடித்தான்.
நாச்சியப்பனும் பரணியும் தான் அவனை விழி எடுக்காமல் பார்த்தனர்.
“ஐயா இப்ப கூட ஒன்னும் இல்ல. நான் கைக்கு கிடைச்ச ஆதாரத்தை கொடுத்துடுவேன். ஆனா, நான் சரியா கேஸை விசாரிக்கலைன்னு என்னை தூக்கிட்டு வேற ஆபிசர் வந்தா, அவரு நேரா அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டுப் போய்டுவாரு. கொஞ்சம் எனக்கு கோ ஆபரேட் பண்ண சொன்னீங்கன்னா, இந்த கேஸை முடிச்சு விட்டுடுவேன்” என்றான் கெஞ்சல் தொனியில்.
“புரியிதுப்பா…” என நாச்சியப்பன் யோசனையில் ஆழ்ந்தார்.
“விஸ்வயுகா மேடம்கிட்ட எங்க போனாலும் உங்களுக்கு லொகேஷன் அனுப்ப சொல்லிடுங்கய்யா. உங்களை மீறி அவங்கள என்ன செஞ்சுட முடியும். நான் ஆஃப்டர் ஆல் ஒரு ஆபிசர்” என்று கையைக் கட்டிக்கொண்டு பேச, அது அவர்களுக்குப் பணிவாய் தெரிந்தது போலும்,
“சரிப்பா சரிப்பா. நீ சொல்றதும் சரி தான். ஆனா, எனக்குத் தண்ணி காட்டுனன்னு தெரிஞ்சா…” எனப் பேசி முடிக்கும் முன், “என்னை தண்ணியில்லா காட்டுக்கு மாத்திடுங்கய்யா. உண்மையா இருக்குறவங்களுக்கு தான் எல்லா சோதனையும்ல” என்று நெஞ்சை நக்கினான்.
அதில் நெகிழ்ந்து போன நாச்சியப்பன், அவன் தோள் மீது ஆதரவாக கையைப் போட்டு, “பரணி தம்பிக்கு வேண்டிய தொகையை செஞ்சுக்குடு. கேஸை பார்த்துக்க தம்பி. நான் மருமவகிட்ட பேசுறேன்” என்று அவரே அவனை குவார்ட்டர்ஸிலும் இறக்கி விட்டுச் சென்றார்.
இதனைக் கேட்டு எதிர்வினை ஆற்றத் தோன்றாமல் ஸ்தம்பித்துப் போனாள் விஸ்வயுகா.
“மாமா அவன் நடிக்கிறான் மாமா…” எனப் பேச முயல,
“விஸ்வாம்மா, இந்தப் பிரச்சனைல நீங்க யாரும் மாட்டுனா குடும்ப பேரே கெட்டுடும். அந்த தம்பி உன்னை விசாரிக்க தான தனியா கூப்பிடுது. எனக்கு உன் லொகேஷனை அனுப்பி வச்சுடு. அவ்ளோ தான. அது பக்கமும் நம்ம யோசிக்கணும்ல. தம்பி சொன்ன மாதிரி கொஞ்சம் கோ ஆபரேட் பண்ணு. இதை ரொம்ப ஆறப்போட்டா அப்பறம் சிவகாமிக்கு தெரிஞ்சு அவள் ஆட்டமா ஆடிடுவா. பாத்துக்க…” என்று போனை வைத்து விட்டார்.
“ஷிட் ஷிட் ஷிட்” எனத் தரையில் காலை உதைத்தவள், “போடா புடலங்கா மாமா…” என நாச்சியப்பனை சரமாரியாகத் திட்டி தீர்த்தாள்.
சரியாக ஆறு முப்பது மணிக்கு, அவள் அலைபேசிக்கு முத்த ஸ்மைலியுடன் அவள் வர வேண்டிய இடத்திற்கான லொகேஷனை அனுப்பி வைத்தான் யுக்தா சாகித்யன். அவன் அதரங்களில் வெற்றிக் களிப்பு நடனமாடியது.
ஒரு பக்கம், அடுத்த கொலை நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகிக் கொண்டிருக்க, தங்களைச் சுற்றி பின்னப்படும் மாயவலையை மதிக்காமல், விஸ்வயுகா யுக்தா அனுப்பி வைத்திருந்த இடத்திற்குச் செல்ல, அங்கோ பதின்மூன்று மாடி கட்டடம் இருள் அடைந்து காணப்பட்டது. கீழ் தளங்களெல்லாம் இருட்டில் மூழ்கி இருக்க, 13 ஆவது மாடியில் மட்டுமே விளக்கு எரிந்து கொண்டிருந்ததில் நிமிர்ந்து பார்த்தாள்.
அங்கு ஜன்னலின் அருகே, கையில் வைன் கிளாஸுடன் நின்ற யுக்தா சாகித்யனுக்கு அவளது வரவில் ஏளனப் புன்னகை பரவியது.
எதிரில் இருந்த கட்டடத்திலும் ஒரு நிழலுருவம் அவர்களை வெறித்து நோக்கிக் கொண்டிருந்தது.
மோகம் வலுக்கும்
மேகா