Loading

அத்தியாயம் 7

“என்னடி இந்த எருமைங்க நம்மளை அடைச்சு வச்சுட்டானுங்க. இப்ப எப்படி இங்க இருந்து எஸ்கேப் ஆகுறது?” என்று பரிதாபத்துடன் கேட்டாள் விஹானா.

“மூணு பேரும் பயில்வான் மாதிரி இருக்கானுங்க டார்ல்ஸ். அதுவும் கடைசியா ஒருத்தன் மிரட்டிட்டு போனானே, அவனை பார்த்தாலே எனக்கு அள்ளு விடுது” என ஸ்வரூப்பை எண்ணி மிரண்டாள் அக்ஷிதா.

“அப்போ அந்த ரெண்டு மண்டையனுங்களை பார்த்தா பயமா இல்ல?” என விஹானா முறைப்புடன் கேட்க,

“சே சே… அந்த காட்ஸில்லா முறைச்சு பார்த்தா பயமே வர மாட்டேங்குது. சிரிப்பு தான் வருது. அதுலயும் சிப்ஸ மண்டைல கொட்டிட்டு அவனை அவனே பாவமா பார்த்தான் பாரு… ஹா ஹா… எனக்கு சிரிப்பை அடக்கவே முடியல. பட், சிப்ஸ் போய்டுச்சுன்ற கவலைல, அப்போ அதை நான் எஸ்டாபிளிஷ் பண்ணல.” என்று வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தாள்.

இங்கு, மூன்று ஆடவர்களும் ஒருவரை ஒருவர் பாராமல், வரவேற்பறையில் ஆளுக்கொரு சோபாவில் தள்ளி தள்ளி அமர்ந்திருந்தனர்.

மூவரின் முகத்திலும் தீவிர யோசனை. ஸ்வரூப்பிற்கு இவர்கள் வெறும் பணத்தை திருட வந்தது போல தெரியவில்லை. அப்படி என்றால், இந்நேரம், கையில் கிடைப்பதை எடுத்துக்கொண்டு சென்றிருப்பர். பணமில்லை என்றால்? வேறென்ன…? இவர்களை யார் அனுப்பி இருப்பது? இவற்றை அவர்கள் வாயாலேயே வெளிவரவைக்க எண்ணினான்.

மூவரின் போனிலும், பெண்களின் அறையில் இருந்த சிசிடிவி வீடியோ ‘கனெக்ட்’ ஆகி தான் இருந்தது.

அதில் அக்ஷிதாவின் கூற்றில், சஜித்திற்கு மண்டை நரம்பெல்லாம் சூடானது.

ஜோஷித்திற்கு தான், அவள் சஜித்தை கிண்டலடித்ததில் கெக்க பெக்க வென சிரிப்பு எழுந்தது. சிரித்தால், எப்படியும் இங்கு ஒரு சண்டை நடக்கும் என்று உணர்ந்தவன், வெகுவாய் தலையைக் குனிந்து சிரிப்பை அடக்கிக்கொள்ள, அதனை சஜித் பார்த்து விட்டான்.

“சிரிக்கவா செய்ற… உன்ன பாத்துக்குறேன் இரு.” என்று அவன் கருகும் போதே, விஹானாவும் அங்கு சிரித்துக் கொண்டிருந்தாள்.

“அவன் கூட பரவாயில்ல டார்ல்ஸ், அந்த பனங்கா மண்டையன் இருக்கானே… மயக்க மருந்து மாதிரி, கையில சிகரெட்டை வச்சுக்கிட்டே சுத்துவான் போல. பெரிய ஆல்பா மேல்ன்னு மனசுல நினைப்பு. அவரை பார்த்து நாங்க பயந்துட்டோமாம். இருட்டுக்குள்ள, அவன் விட்ட புகையில அவன் மூஞ்சியே தெரியலையாம்.” என்று உதட்டைச் சுளித்தாள்.

ஒரு கணம், ஜோஷித்தின் விழிகள், அவ்வுதடுகளிலேயே தஞ்சம் புகுந்து விட்டது.

இத்தனை வருடத்தில், மற்ற பெண்களை ரசனையுடன் கூட ஏறிட்டது கிடையாது. அவர்களின் பார்வை மாற்றம் கூட, அங்கு பேசு பொருளாகி விடும்.

அவர்களது ஊரில் இருக்கும் பெண்கள் அனைவருமே, இவர்களை அண்ணன்களென அன்புடன் பழக, அவர்களும் பெண்களை மதித்தே பழகியவர்கள்.

நிச்சயம் செய்த அத்தை பெண்களிடம் கூட, முழுதாய் அரை மணி நேரம் பேசியது கிடையாது. ஆனால், அவர்களுக்குள் மட்டுமே, அவர்களது சேட்டையும் குறும்பும் வெளிப்படும்.

முதன் முறை, ஒரு பெண்ணைத் தவறாக பார்த்ததில், அவனது மனசாட்சியே அவனைக் குத்த, கண்ணை இறுக்கி மூடித் திறந்த ஜோஷித், அவளைப் பாராமல் நிமிர்ந்தான். அங்கோ, சஜித் தான் சத்தம் வராமல் குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தான்.

அவனைத் தீப்பார்வையுடன் ஏறிட்ட ஜோஷித், முகம் கடுகடுக்க, போனை எடுத்து தேஜஷ்வினுக்கு அழைத்தான்.

அவனோ, திருமணமாகி ஆறு மாதமே ஆன தனது புது மனைவியுடன் கொஞ்சிக் கொண்டிருக்க, ஜோஷித்திடம் இருந்து அழைப்பு வந்ததில், அடித்து பிடித்து போனை எடுத்தான்.

“சொல்லுங்க பாஸ்!” எனக் கேட்டவனிடம்,

“சிரிப்பு வேண்டியது இருக்கா உனக்கு. இன்னொரு தடவை சிரிச்ச, பல்லை பேத்துருவேன். அந்த திருடிங்க, கொஞ்சம் கூட மரியாதை இல்லாம பேசுறாளுங்க, உனக்கு சொரணை இல்ல. இதே நம்ம ஊரா இருந்தா, அவளுங்களை அங்கேயே சமாதி கட்டிருப்பாங்க நம்ம ஊர் மக்கள்.” என்று கோபத்தில் பொறிந்தான்.

சித்தூரில் அவர்களை அனைவருமே மரியாதையுடன் தான் அழைப்பர். ஐயா, ராசா, சாமி என ஒவ்வொருவரும், பேச்சில் கூட பணிவை விடுத்தது இல்லை. வீட்டில் கூட, தாய் தந்தையர், எங்கப்பா போனீங்க? சாப்டீங்களாப்பா? என அன்பும் பாசமும் கலந்தே பேசுவர்.

இதனை எல்லாம் திருடிகளிடம் எதிர்பார்க்க இயலுமா? அவர்கள் தான், வாயைத் திறந்தால், மூடாமல் கலாய்த்து தள்ளுகிறார்களே! என்ற கடுப்பில் சஜித் அமர்ந்திருக்க, தேஜஸ்வினுக்கோ என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை.

“பாஸ்… நீங்க யாருக்கோ போன் பண்ணி திட்டுறதுக்கு பதிலா எனக்கு பண்ணிட்டீங்க.” என்று தலையை சொரிந்தான்.

“எனக்கு என்ன கண்ணு அவிஞ்சு போயிருக்கா. தேஜா நீ தான. உனக்கு தாண்டா போன் பண்ணுனேன். வெண்ணை. சும்மா மசமசன்னு இருக்காம, அவளுங்கள என்ன பண்றதுன்னு சொல்லு. திருட வந்தவளுங்களை வீட்டுக்குள்ள வச்சு காவல் காக்க முடியாது.” என்று யோசனையுடன் அமர்ந்திருந்த ஸ்வரூப்பை பார்த்து முறைத்தபடி கூறி விட்டு போனை வைத்தான்.

அந்நேரம், அறைக்குள் சிந்தனையில் புதைந்திருந்த உத்ஷவியை உலுக்கினர் இரு பெண்களும்.

“என்னடி புடிச்சு வச்ச புள்ளையார் மாதிரி உட்காந்து இருக்க.” என்ற கேள்வியில் தான் சுயத்திற்கு வந்த உத்ஷவி,

“ப்ச், அவனே இங்க கேமரா இருக்குன்னு சொல்லிட்டு தான போயிருக்கான். நீங்க விடாம, அவனுங்கள கலாய்ச்சு, இங்கயே இருக்க வச்சுடாதீங்கடி. அப்பறம் அந்த டைனோசர், என்ன தான் புடிச்சு சோபால தள்ளி விடுவான். ஏற்கனவே ஒரு பக்கம் இடுப்பு போச்சு.” என்று முகத்தை சுருக்கியவள், அங்கு நான்கு மூலையிலும் இருந்த கேமராவை பார்த்து,

“டேய் டைனோசர்… அதான் நாங்க ஒண்ணுமே திருடலைல. எங்களை விடேன்டா. பிசாசு.” என்று தன் போக்கில் திட்டிக்கொண்டிருந்தாள்.

விஹானா தான், “ம்க்கும் எங்களை கலாய்க்காதன்னு சொல்லிட்டு, இப்ப நீ என்னடி பண்ணிட்டு இருக்க.” என்று முறைக்க,

உத்ஷவி அசடு வழிந்தாள்.

அவளை அழுத்தமாய் பார்த்திருந்த ஸ்வரூப், இப்போது தேஜஸ்வினுக்கு அழைத்தான்.

ஏற்கனவே ஜோஷித்தின் கூற்றில் குழம்பியக் குட்டையாக இருந்தவன், ஸ்வரூப் போன் செய்ததில் மேலும் பதறினான்.

ஸ்வரூப்போ, நேரடியாக, “அந்த பொண்ணுங்க எதை திருட வந்தாங்க, இதுக்கு பின்னாடி யார் இருக்கான்னு கண்டு பிடிக்கணும். அதுவரை, நான் சொல்றத கேட்டு, அது படி பண்ணுங்க. நாளைக்கு ஒரு நாள் அந்த ரூம்லயே இருக்கட்டும். கொஞ்சமாவது பயம் வருதான்னு பார்க்கலாம்.” என்றவனது நயனங்கள்,

ஏதோ சுற்றுலாவிற்கு வந்தது போல, மல்லாக்க படுத்து விட்டத்தை பார்த்து படுத்திருந்த உத்ஷவியை சுற்றியது.

ஆகாய சூரியனை
ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி
சுட்டியில் ஒட்டியவள்
இவள் தானே எரிமலை அள்ளி
மருதாணி போல் பூசியவள்

என்ற பாடலை ஹம் செய்து கொண்டிருந்தவளை, ஒரு நிமிடம் அசையாமல் பார்த்தவன்,

பின், “ம்ம்ஹும்… சுட்டு போட்டாலும் பயம் வராது. நான் சொல்றதை கவனமா கேளு.” என்ற ஸ்வரூப், தேஜஸ்வினுக்கு திட்டத்தைக் கூறுவது போல, சகோதரர்களிடம் பேசினான்.

அவர்களும் அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு, புருவம் சுருக்கிட, ஸ்வரூப் வஞ்சப் புன்னகை வீசி,

“எப்படியும் ஆப்ஷன் ஏ எக்சிகியூட் பண்ணும் போதே, மூணு பேர்ல யாராவது ஒருத்தர் ஆர் மூணு பேருமே உண்மையை சொல்ல வாய்ப்பு இருக்கு. அதையும் மீறி போனா, ஆப்ஷன் பி எக்சிகியூட் பண்ணலாம்.” என்றான் குரூரமாக.

அதனை ஆமோதிக்கும் விதமாக, பெருமூச்சை வெளியிட்ட இரு ஆடவர்களும் அவரவர் அறைக்கு சென்று விட, தேஜஸ்வின், ‘நான் எதுக்கு சரி பட்டு வரமாட்டேன்னு சொல்லாமலேயே போனை வச்சுட்டாரே…’ என வடிவேலு பாணியில் கதறினான்.

மறுநாள் காலை, விஹானா கதவை உள்ளிருந்து படபடவெனத் தட்டினாள்.

ஹால் சோபாவில் படுத்தே ஸ்வரூப் உறங்கி விட, கதவு தட்டும் சத்தத்தில் எரிச்சலடைந்தவன், உள்ளிருக்கும் பெண்களை வீடியோவில் ஒருமுறை பார்த்து விட்டு, கதவை திறந்தான்.

“என்ன?” உறுமலாக வெளிவந்த ஸ்வரூப்பின் குரலில், பேந்த பேந்த விழித்த விஹானா, திரும்பி மற்ற இருவரையும் பார்த்தாள்.

ஸ்வரூப் பொறுமை இழந்து, “எதுக்கு கதவை தட்டுன. உண்மையை சொல்லாம யாரும் இங்க இருந்து நகர கூட முடியாது.” எனக் கடிந்து விட்டு, கதவை மூட எத்தனிக்க,

ஒரு காலை கதவிடுக்கில் விட்டு, மூட விடாமல் தடுத்தாள் உத்ஷவி.

“என்னடி?” கடுப்புடன் அவன் கேட்க,

“ஜெயில்ல கூட, டாய்லட் இருக்கும்.” என்றாள் முறைப்பாக.

அதன் பிறகே அவர்கள் கதவை தட்டியதன் அர்த்தம் விளங்க, “இதை ஜெயிலோட கம்பேர் பண்ணாத திருடி. அதை விட கொடூரமா இருக்கும்.” என சலனமற்று கூறியவன், அவளது காலை உள்ளே தள்ளி விட்டு, கதவை அறைந்து சாத்தினான்.

“டேய் கதவை திறடா” எனக் கதவை காலால் எத்திய உத்ஷவி, “டைனோசர் இப்ப நீ கதவை திறக்கல. நானே கதவை உடைச்சுடுவேன்.” எனக் கத்தினாள்.

“முடிஞ்சா உடைச்சுக்க…” என அசட்டையுடன் கூறியவன், சாவகாசமாக அமர்ந்து கொள்ள, அவளோ கதவை உடைக்காத குறையாக எத்தினாள்.

சத்தம் கேட்டு, வெளியில் வந்த சஜித்தும், ஜோஷித்தும் என்னவாகிற்று எனத் தெரியாமல் நிற்க, நெற்றியை ஒரு விரலால் தேய்த்துக் கொண்ட ஸ்வரூப், “ப்ச்… கெட் தெம் டு தி டாய்லட்.” என சீறலுடன் மொழிந்தான்.

அதில் ஜோஷித், கதவைத் திறக்க, அதனை எதிர்பாராமல், விஹானா, “நீ இரு டார்ல்ஸ். இப்ப பாரு நான் எத்துறதுல கதவு தானா ஓபன் ஆகும்…” என்று முழு வலுவையும் கொண்டு, எத்தினாள்.

அந்நேரம், கதவு திறக்கப்பட்டதில், ஜோஷித்தின் கால்களிலேயே நங்கென்று எத்தி விட, “அவுச்…” என காலைப் பிடித்துக் கொண்டான்.

ஜோஷித் கத்தியதில், சஜித் பதறி அவனருகில் வர, அதற்கு முன் ஸ்வரூப், ஜோஷித்தைப் பிடித்தான்.

“ஆர் யூ ஓகே?” என்ற ஸ்வரூப்பின் கரத்தை வெடுக்கென தட்டி விட்டான் ஜோஷித்.

“என்னை தொடாத. நான் இருந்தா என்ன செத்தா உனக்கு என்ன?”  என கண்கள் சிவக்க சீறியவன், விறுவிறுவென அறைக்குள் புகுந்து கொண்டான்.

முகம் கறுக்க நின்றிருந்த ஸ்வரூப் அவன் சென்ற திசையையே அடக்கப்பட்ட கோபத்துடன் நோக்க, சஜித் ஒன்றும் பேசாமல் கவலையை தனக்குள் மறைத்துக் கொண்டு, ஸ்வரூப்பை பார்த்தான்.

விஹானா தான், ‘ஹப்பாடா… இவனுங்க பிரச்சனைல நான் தான் அவனை மிதிச்சேன்றதை மறந்துட்டானுங்க டார்ல்ஸ்” என உத்ஷவியின் காதில் கிசுகிசுத்தாள்.

உத்ஷவியோ, எதிரில் நின்ற ஸ்வரூப்பின் பாவனைகளை தான் அசராமல் அளவெடுத்தாள்.

“இது என்ன கண்களா? அல்லது உணர்ச்சிக் குவியலின் குடோனா?” என ஆடவனின் விழிகளை எண்ணி கவிதை பிறக்க,

அவளுக்கோ ‘அடடா… நமக்குள்ள கவித்துவமான நிறைய விஷயம் இருக்கும் போலயே. இது தெரியாம போச்சு. பரவாயில்ல… இன்னைல இருந்து நானும் கவிதை எழுதி மிஸ். திருடி கவிதாயினி ஆகுறேன்.’ என்று அவள் எண்ணியதை கவிதை என அவளே நம்பிக் கொண்டு சபதம் எடுத்தாள்.

“டார்ல்ஸ்” எனப் பல்லைக்கடித்த விஹானா, “நான் பேசிக்கிட்டே இருக்கேன். நீ என்ன அவன் மூஞ்சியை ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்க.” என உத்ஷவியின் கவி நேரத்தைக் கலைத்து விட,

“இரு டார்ல்ஸ். நான் இன்னைக்கு தான் எனக்கு இன்னொரு திறமை இருக்குன்னே கண்டுபிடிச்சு இருக்கேன்.” என்றாள் கேலியாக.

அத்தனை நேரமும் தன்னை விழியெடுக்காமல் பார்த்து வந்த உத்ஷவியை அழுத்தம் திருத்தமாய் பார்த்து விட்டு, அங்கிருந்து அகன்றான் ஸ்வரூப்.

அக்ஷிதா தான், “ஐயோ… பாத்ரூம் எங்கடா இருக்கு.” என்று நெளிந்தபடி கேட்டதில், சஜித் தான் மூவரையும் அவனது அறைக்கு அழைத்துச் சென்றான். கொஞ்சம் விட்டாலும் தப்பிக்க திட்டமிட்டு விடுவர் என்றெண்ணி, யாராவது ஒருவரை அவர்களுடனே இருக்க சொல்லி இருந்தான் ஸ்வரூப்.

அக்ஷிதாவும் உத்ஷவியும் அவன் பின்னே செல்ல, வேகமாக அறையில் இருந்து வந்த ஜோஷித், விஹானாவைத் தீயாக முறைத்து வைத்தான்.

“என்னையாவா மிதிக்கிற. வா என் ரூம்குள்ள போட்டு உன்னை மூச்சடைச்சு சாகடிக்கிறேன்…” என தர தர வென அவனது அறைக்கு இழுத்துச் செல்ல, “அய்யயோ என்னை காப்பாத்துங்கடி…” என்று கதறினாள் விஹானா.

அத்தியாயம் 8

ஜோஷித்தின் அறைக்குள் நுழைந்ததுமே, மூக்கையும் கண்ணையும் மூடிக்கொண்டவள், “மூச்சடைச்சு செத்தாலும் பரவாயில்ல, இந்த சிகரெட் புகையை மட்டும் சுவாசிக்க மாட்டேன்.” என்று வீம்பாக நின்றாள்.

அவனோ, தோளை குலுக்கிக்கொண்டு “அப்போ, மூச்சை அடைச்சுக்கிட்டே நில்லு.” என அசட்டையாகக் கூற, அவள் சில நொடிகளுக்கு மேல் தாக்குப் பிடிக்க இயலாமல், மூச்சு விட ஆரம்பித்தாள்.

கண்ணையும் திறந்து விட்டவள், அவள் மூச்சுக்காக போராடுவதை வெகு அசட்டையுடன் பார்த்துக் கொண்டிருந்த ஆடவனைக் கண்டு கடுப்பானாள்.

ஆனால், அடுத்த நொடி அவளது விழிகள் வியப்பில் விரிந்தது.

முந்தைய இரவு பார்த்தது போல் அல்லாமல், அறை சுத்தமாக இருந்தது. முக்கியமாக, உயிரைக் கொல்லும் சிகரட் வாடை வரவில்லை.

அதில் மீண்டும் ஒருமுறை மூச்சை இழுத்து விட்டவள், “குட் பாய்.” என்று அவன் கன்னத்தை தட்டி விட்டு, அறையை முழுதும் சுற்றிப் பார்த்தாள்.

எங்கு திரும்பினாலும், ஒரே மாதிரி சுவர் இருக்க, “இதென்னடா வீடு. பாத்ரூம் டோர் கூட எதுன்னு தெரியல. இப்படியா இன்டீரியர் பண்ணுவீங்க கேவலமா இருக்கு.” என்று சலித்துக் கொண்டாள்.

அவளது செயல்களில் திகைத்து, பின் முறைத்தவாறே, ஒரு ‘ஸ்லைட் டோரை’ திறந்தான்.

“பாரேன்… வார்ரோப் கதவு மாதிரி இருக்கு. இதான் பாத்ரூம் டோரா? இருந்தாலும் அவசரத்துக்கு, குழம்பிடாது.” என யோசனையுடன் கேட்டவள், அவன் பதில் கூறும் முன்னே, உள்ளே சென்று கதவை சாத்திக்கொண்டாள்.

புயலடித்து ஓய்ந்தது போல இருந்தது ஜோஷித்திற்கு. தலையை உலுக்கி, பெருமூச்சு விட்டவன், கட்டிலில் சென்று அமர்ந்து கொண்டான்.

இங்கு, உத்ஷவி சஜித்திடம் சண்டை இட்டாள்.

“எதுக்குடா அவன் அவளை இழுத்துட்டு போறான். நாங்களும் அங்க போறோம்” என்று முறைத்திட,

சஜித், “உன் இஷ்டத்துக்கு எல்லா இடத்துக்கும் போக, நீ என்ன டூருக்கா வந்துருக்கா. பாக்குறது திருட்டு வேலை. பேச்செல்லாம் பாரு… என்னமோ பெரிய உத்தமிங்க மாதிரி.” என்றான் எரிச்சலுடன்.

ஏற்கனவே, முறிந்திருக்கும் உறவை, இவர்களது வரவு மேலும் முறித்து விடுமோ என்றிருந்தது அவனுக்கு. காலையிலேயே சண்டை இழுத்து விட்டார்களே!

ஆனால், அவனுக்கு தான் ஒரு விஷயம் புரியவில்லை. இத்தனை நாட்களாக, சண்டை இடுவதற்கு கூட ஒருவர் மற்றொருவர் முகத்தை பாராமல் இருந்தனர். இன்றோ, அந்த திரை விலகி இருக்கிறது என்று.

அவன் பேச்சை எல்லாம் ஒரு பொருட்டாக கூட மதிக்காத உத்ஷவி, “நீங்க மட்டும் பெரிய உத்தமனுங்களாடா? நீங்க உத்தமனுங்களா இருந்திருந்தா, இந்நேரம் எங்களை விட்டு இருக்கணும், இல்லையா போலீஸ்ல புடிச்சு குடுத்து இருக்கணும். இது எதுவும் பண்ணாம, கேமரா இருக்குற ரூமுக்குள்ள எங்களை அடைச்சு வச்சு, எங்களை திருட்டுத்தனமா நைட்டு முழுக்க பார்த்துட்டு இருந்துட்டு பெரிய ஒழுக்க சீலன் மாதிரி பேசுற…” என்று எகிறினாள்.

சஜித்திற்கோ கோபம் அடங்கவே மறுத்தது.

“ஆமா, ஆமா அப்படியே பாத்துக்கிட்டே இருக்குறதுக்கு மூணு பேரும் ரம்பை ஊர்வசி பாரு. உங்க  மூஞ்சிங்களை முழுசா அஞ்சு நிமிஷம் கூட பார்க்க முடியாது. இதுல நைட்டு முழுக்க பார்த்துட்டு இருந்தோமாம்.” என்று கோபத்தில் கொந்தளிக்க, இவற்றை எல்லாம் காதில் வாங்கியபடியே அக்ஷிதா கழிவறைக்கு சென்று விட்டு, நைசாக அடுக்களைக்கு சென்று அங்கிருந்த ஸ்னாக்ஸை காலி செய்ய தொடங்கினாள்.

கூடவே, ‘எங்களையாவது அஞ்சு நிமிஷம் தான் முழுசா பாக்க முடியாது. உங்களை எல்லாம் ஒரு நிமிஷம் கூட பார்க்க முடியாது போவியா…’ என மனத்தினுள்ளேயே அவனை கலாய்த்து விட்டு, அவளது சாப்பிடும் வேலையை சிரத்தையாக செய்து கொண்டிருந்தாள்.

உத்ஷவியோ, விவாதத்தை முடித்து வைக்கும் மனநிலையில் இல்லை. இங்கிருந்து தப்பித்து சென்று விட வேண்டும். திருட வேண்டிய பொருளையும் திருட வேண்டும். இதுவே அவளது எண்ணமாக இருந்தது.

“நீங்க மட்டும் பெரிய ஆணழகனாடா. உன் மூஞ்சியை நீ கண்ணாடில பார்த்து இருக்கியா?” என்று உத்ஷவி முறைக்க, அதற்கு அவன் பதில் கூறும் முன்னே, மாடியில் இருந்து, “ஏய் திருடி… இங்க வா.” என்று அதிகாரமாய் அழைத்தான் ஸ்வரூப்.

“வர முடியாது போடா.” என முகத்தை திருப்பினாள்.

“நீயா வந்தா சேதாரம் இருக்காது. நான் வந்தா, உன் முடியை பிடிச்சு தரதரன்னு இழுத்துட்டுப் போவேன். உனக்கு உன் முடிமேல ஆசை இல்லைன்னா, நானே வரேன்.” என அர்த்தப் பார்வையுடன் நக்கல் தொனி கலந்து அவன் முதல் படியில் கால் வைக்க, அவளோ திருதிருவென விழித்தாள்.

முந்தைய நாள், அவன் பிடித்ததற்கே இன்னும் தலைவலிக்கிறது… என மிரண்டவள்,.

“என் தலைல கை வைக்கிற வேலை வச்சுக்காத டைனோசர். எனக்கு செம்மயா கோபம் வரும்.” என்றவள், அவன் அடுத்த படியிலும் இறங்குவதைக் கண்டு நொந்து, “நானே வரேன்.” என்றாள் முணுமுணுப்பாக.

கண்ணாலேயே மேலே வரும் படி பணித்தவன், அவள் வரும் வரை அங்கேயே நிற்க, சஜித் தான் உத்ஷவியை வெறியாய் முறைத்து விட்டு, அக்ஷிதாவை தேடினான்.

இந்த பைத்தியம் எங்க போய் தொலைஞ்சுச்சு என்று அறைக்குள் பார்த்திட, அங்கும் இல்லை. பின் அவனே ஒரு முடிவெடுத்து, அடுக்களைக்குள் எட்டிப் பார்க்க, அங்கே இருந்த பிஸ்கட் பாக்கெட்டுகளை காலி செய்து கொண்டிருந்தாள்.

ஒருத்தி பேசி கொல்றா. ஒருத்தி சாப்பிட்டே கொல்றா. என கடுப்பானவன், “இன்னும் வேற எதையாவது மிச்சம் வச்சு இருக்கியா?” என கனத்த குரலில் கேட்க, அப்போதும் திடீரென கேட்ட குரலில் பதறியவள், துள்ளிட, கையில் வைத்திருந்த பிஸ்கட் பாக்கெட் பறந்து அவன் தலையில் கொட்டியது.

உத்ஷவி அறைக்குள் நுழைந்ததும் தான் தாமதம், அவளை சுவற்றோடு தள்ளி அணை கட்டிய ஸ்வரூப், “இன்னொரு தடவை என் தம்பிங்ககிட்ட திமிரா பேசுன…” என எரிக்கும் பார்வையுடன் எச்சரிக்க,

“ப்பா. என்னா ஃபயரு” என வியந்தாலும், பயமென்னவோ வரவே இல்லை.

“அவனுங்க உன் தம்பியா? அப்போ நீங்க மூணு பேரும் அண்ணன் தம்பிங்களா” என அதையே அப்போது தான் தெரிந்து கொண்டு கேட்டாள்.

“எங்களை பத்தி எதுவுமே விசாரிக்காம, திருட வந்து தப்பு பண்ணிட்ட திருடி. இதுக்கான தண்டனையை நீ கண்டிப்பா அனுபவிப்ப.” என்றான் கண்டனத்துடன்.

“அது அனுபவிச்சிட்டு போறேன். சரி, திமிரா பேச தான் செய்வேன். என்னடா பண்ணுவ?” என எகத்தாளத்தின் மறுஉருவமாக கேட்டாள் உத்ஷவி.

அவளை திமிராய் ஏறிட்டவன், இதழ்களை மெல்ல விரித்து, “நீ இப்படி கேட்பன்னு எனக்கு தெரியும்டி. உனக்கு எதுவா இருந்தாலும் டெமோ தான் காட்டணும்.” என பொடி வைத்துப் பேசியபடி, டிராயரை திறந்தான்.

அங்கிருந்த ஊசி நூலை எடுத்து கோர்த்தபடி, அவளருகில் வந்தவனை திகைத்து பார்த்தவள், “என்னடா இது?” என்று எச்சிலை விழுங்கினாள்.

“இது தெரியல. ஊசி நூல்டி திருடி. உன் வாயை தைக்கணும்ல.” என்றபடி, ஊசியை அவளின் இதழ்களுக்கு அருகில் கொண்டு செல்ல, அவள் அவனைப் பிடித்து தள்ளி விட்டாள்.

“அடேய்… சைக்கோவா நீ.” என்று கத்தியவளை சிறிதும் பொருட்படுத்தாதவன், மீண்டும் ஊசியை வைத்து இதழ்களை குத்த போக, அவளோ வாயை மூடிக்கொண்டு, மறுப்பாக தலையசைத்தாள்.

“இனி திமிரா பேசுவ?” புருவம் உயர்த்தி ஸ்வரூப் கேட்ட விதத்தில், அடுத்த நொடி “மாட்டேன் மாட்டேன்” என்று தலையாட்டினாள்.

அதில் சற்று தளர்ந்தவன், “அந்த செகண்ட் டோர் தான் பாத்ரூம்” என்று கண் காட்ட, ம்க்கும் என நொடித்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

ஆனால், கதவை மூடிய நொடி மீண்டும் திறந்து தலையை மட்டும் வெளியில் நீட்டியவள், “டேய் டைனோசர்” என மறுபுறம் திரும்பி நின்ற ஸ்வரூப்பை அழைக்க, அவனுக்கு சினத்தை அடக்குவது தான் பெரும்பாடாக இருந்தது.

“வளர்ந்து கெட்டவனே… உன்னை தான்… இங்க ஒரு நிமிஷம் பாரு” என்று அழைக்க, அவனோ, “உனக்கு வாயை தச்சா தான் சரியா வரும்” என்றான் உறுமலுடன்.

அவளோ அசட்டையாக, “உன் தம்பிங்க கிட்ட தான திமிரா பேச கூடாதுன்னு சொன்ன, உங்கிட்ட பேச கூடாதுனு சொல்லவே இல்லையே டைனோசர்…”  என்றதில், ஸ்வரூப் அவ்தேஷ் பதிலற்று போனான்.

பின் அவளே, “சரி அதை விடு. பாத்ரூம்ல கேமரா எதுவும் வைக்கலைல…” என சந்தேகத்துடன் கேட்க,

“வச்சிருந்தா என்ன பண்ணுவ?” என்றான் வினவளாக.

“அந்த ஊசி நூலை வச்சு உன் கண்ணை தச்சுடுவேன்.” என்றவளின் நிமிர்வான மிரட்டலில், ஒரு கணம் அதிசயித்தவன்,

“தேவை இல்ல. உன்னை கேமரா வச்சு பாக்குற அளவு எல்லாம் நீ ஒர்த்தும் இல்லை. பாக்கணும்ன்னு நினைச்சா, கேமரா வைக்க வேண்டிய அவசியமும் இல்ல” என்றான் நக்கல் புன்னகையுடன்.

உத்ஷவி அவன் கூற்றில் புரியாமல் பார்க்க, “ஐ மீன், பார்க்கணும்ன்னு முடிவு பண்ணிட்டா, இங்கயே இப்பவே, உன்னை என்ன வேணாலும் என்னால பண்ண முடியும். நீ சொன்ன, அந்த உத்தமனுங்களா இருக்க போய் தான், இன்னும் நீ கற்போட என் முன்னாடி இருக்க. மைண்ட் இட். “ என அவள் முகத்துக்கு அருகில் குனிந்து அமர்த்தலாக கூறியவன், ஒற்றை விரலை அவள் நெற்றியில் வைத்து தள்ளி, கதவை படக்கென அடைத்தான்.

குளியலறையில் இருந்து உத்ஷவி வெளியில் வந்ததும், இருவரும் கீழே வர, அக்ஷிதா ஆற அமர டைனிங் டேபிளில் அமர்ந்து பிஸ்கட்டை பதம் பார்த்தாள்.

தலையில் கொட்டிய பிஸ்கட் துகள்களை பல்லைக்கடித்து தட்டி விட்ட சஜித், அக்ஷிதாவை முறைத்த வண்ணம் இருக்க, அவளோ உண்ணுவதில் கவனமாக இருந்தாள்.

அவளை ஸ்வரூப்பும் கடுமையாக பார்த்தபடி இருக்க, அக்ஷிதா தான், ‘இவன் பாக்குறதை பார்த்தா பிஸ்கட்ல பங்கு கேட்பான் போலயே… ?’ என பதறி, திரும்பி அமர்ந்து கொள்ள, சஜித்தோ எதையோ தேடியபடி இருந்தான்.

பின், டைனிங் டேபிள் மீதும் தேடலை தொடர்ந்தவன், ’இங்க ஒரு பிரெட் பாக்கெட் இருந்துச்சே எங்க போச்சு’ என முணுமுணுத்தபடி பசியினால் எழுந்த தலைவலியை அடக்கிக்கொண்டிருந்தான்.

அது அக்ஷிதாவிற்கு கேட்டு விட, “பிரெட் பாக்கெட் தேடுறியா காட்ஸில்லா, இதோ பாரு.” என்று வெறும் கவரை நீட்ட,

“இதுல இருந்த ப்ரெட்டு எங்கடி” என்றான் கடுப்பாகி.

“என் வயித்துக்குள்ள போய்டுச்சு. வேணும்னா, வாமிட் பண்ணவா?” என நக்கலுடன் கேட்டிட, உத்ஷவியும் பசிக்கு அவளிடம் இருந்து தின்பண்டங்களை வாங்கி உண்டபடி சிரித்து விட்டாள்.

அந்நேரம், அறையில் இருந்து கடுங்கோபத்துடன் வந்த ஜோஷித், இரு பெண்களின் முன்பும் தீப்பிழம்பாக நின்றான்.

“பாத்ரூம் வழியா உங்க கூட வந்தவளை தப்பிக்க விட பிளான் பண்றீங்களாடி. அவ போய் ஒரு மணி நேரம் ஆச்சு. இன்னும் வெளில வரல.” என பரபரத்தவன், தோட்டத்தில் வேலை செய்பவர்களை அழைத்து, பின் பக்கம் சோதிக்க சொன்னான்.

இங்கோ அக்ஷிதா வாயை பொத்தி நகைக்க, உத்ஷவியோ எழுந்த சிரிப்பை கடினப்பட்டு அடக்கியபடி, “இன்னும் ரெண்டு மணி நேரம் ஆனா கூட அவள் வரமாட்டாடா. தப்பிச்சும் போக மாட்டா.” என்றாள் தோளை குலுக்கி.

மூன்று ஆடவர்களும் அவளைப் புரியாமல் பார்க்க, “டேங்க்ல தண்ணி இருக்கா?” என்றாள் சம்பந்தமில்லாமல்.

“இருக்கு. காலைல தான் டேங்க் புல் ஆச்சு” என்றவனிடம், “இனிமே இருக்காது.” என்ற அக்ஷிதா, உத்ஷவிக்கு ஹை ஃபை கொடுத்துக் கொண்டாள்.

சரியாக அப்போது, அறையில் இருந்து விஹானா குரல் கொடுத்தாள்.

“டேய் பனங்கா மண்டையா எங்கடா போன. மோட்டர் போட சொல்லுடா. ஒரு மனுஷியை திருட வந்த இடத்துல கூட நிம்மதியா குளிக்க விட மாட்டுறானுங்க. சேச்சே.” என்று குரல் கொடுத்து விட்டு, மீண்டும் குளியலறைக்குள் தஞ்சம் புகுந்து கொள்ள, அவள் தப்பித்து ஓடி விட்டாள் என எண்ணி, தாம் தூமென குதித்த ஜோஷித்திற்கு விழி பிதுங்கி விட்டது.

சஜித்திற்கோ சிரிக்கவும் இயலவில்லை. சிரிப்பை அடக்கவும் இயலவில்லை.

இத்தனை நேரமும் அழுத்தத்துடன் அமர்ந்திருந்த ஸ்வரூப்பிற்கு கூட, ஜோஷித்தின் பாவனை கண்டு மெல்ல புன்னகை எழுந்தது. மனதிலிருந்த ஒரு வித இறுக்கம் கூட தளர்ந்து தான் போனது.

அதனை உணர்ந்தாலும், ஏற்றுக்கொள்ளாதவன், அலுவலகத்தில் ஒரு வேலை இருந்ததில், கிளம்பும் பொருட்டு எழுந்தான். எழுந்தவன், அருகில் வைத்திருந்த கார் சாவியின் கீ செயினை காணாமல் தேடினான்.

‘சாவி மட்டும் இருக்கு, கீ செயின் எங்க போச்சு. எடுத்துட்டு வரும் போது இருந்துச்சே,’ என்ற குழப்பத்தில் அங்கும் இங்கும் தேட, அதனை எடுத்தவளோ, அங்கிருந்து ஓடி அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் புகுந்து கொண்டாள் சமத்தாக.

முதலும் முடிவும் நீ!
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
34
+1
0
+1
8

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  1 Comment

  1. Indhu Mathy

   Omg.. writer jii… சிரிக்க வச்சே சாகடிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா… என்னால சிரிப்பை கண்ட்ரோல் பண்ணவே முடியல… 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😅😅😅😅

   தேஜா பாவம் டா நீ… மொத இவனுங்களை டிவோர்ஸ் பண்ணிட்டு பொண்டாட்டி கூட ஹனிமூன் கிளம்பு 😆

   எவ்ளோ தெனாவட்டு, நக்கல் இந்த திருடிங்களுக்கு… கொஞ்சமாவது பயம் இருக்கா..🤭🤭🤭🤭🤭 வந்த இடத்துலயும் அவங்க வேலைய மட்டும் perfect ஆ செய்யுறாங்க… 😛

   அக்ஷு நம்மாளு 🤗🤗🤗🤗 சாப்பாடு தான் முக்கியம்… விஹா ஷவி… 🤩🤩🤩 செம… 🤓

   ஹீரோஸ் ரொம்ப பாவம்… 🥴🥴🥴🥴🥴🥴