Loading

அந்தி வான சிவப்பும்
அவள் முன் தோற்றுவிடும்!

சஹஸ்ராவின் கன்னங்கள் பிரதிபலித்த வெட்க கீற்றுகள் அவனைப் பித்தாக்கியது.

‘காட்! இந்த அம்னீசியா இப்ப தான் வந்து தொலைக்கணுமா? உனக்கு இரக்கமே இல்ல காட்!’ மானசீகமாக கடவுளை அர்ச்சித்துக் கொண்டிருந்தான்.

அதற்கு மேல் அங்கு நின்றால், நம் முகமே தன்னை காட்டிக்கொடுத்து விடும் என்று பயந்தவள்,

“சாப்பிட கீழ வாங்க. நான் சவி ஸ்கூலுக்கு கிளம்பிட்டாளான்னு பாக்குறேன்.” என அவசரமாக மொழிந்து விட்டு, அவன் அடுத்து பேச வரும் முன் சிட்டாக பறந்திருக்க, ரசனைப் புன்னகை பூத்தான்.

தீரனுக்கு உடல் நிலை தேறும் வரை, அவளின் அலுவலக வேலையை தேவிகா பார்த்துக்கொள்ள, சஹஸ்ராவின் கவனம் முழுக்க தீரனின் மீதே இருந்தது.

அவனை உணவு உண்ண வைப்பதும், உறங்க வைப்பதுமே அவளுக்கு பெரிய வேலையாக இருந்தது. பின்னே, அவனிடம் தனிமையில் பேசத் தொடங்கி விட்டால், அவர்களின் காதல் கதையை அல்லவோ கேட்கிறான்! இல்லாத கதையை அவள் எங்கிருந்து கூறுவாள்.

ஒவ்வொரு முறையும் அவள் சமாளிக்க, அன்றோ காதல் கதை தெரியாமல் உணவு உண்ண மாட்டேன் என தர்ணா போராட்டம் செய்து விட்டான்.

இறுக்கமான இதழ்களுடன் கையைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தவன், தட்டில் இருந்த உணவில் கை வைக்காமல் பிடிவாதம் பிடிக்க,

“விளையாடாதீங்க தீரன்!” என்றாள் கெஞ்சலாக.

‘எப்படியோ போ’ என்று விடவும் அவளுக்கு மனமில்லை.

“நடந்ததை சொன்னா தான எனக்கு கொஞ்சமாவது ஞாபகம் வரும். நீ தான் எதுவுமே சொல்ல மாட்டேங்குற சஹி.” என முறைக்க,

“இப்ப என்ன சொல்லணும் உங்களுக்கு?” என்றாள் சலிப்பாக.

“யார் முதல்ல ப்ரொபோஸ் செஞ்சான்னு சொல்லு.” என ஆர்வமாக அவள் முகம் பார்க்க, ஏனிவன் தன்னை இப்படி சோதிக்கிறான் என்றிருந்தது சஹஸ்ராவிற்கு.

சொல்லாமல் விடமாட்டான் என்றுணர்ந்தவள், “அது… ப்ரொபோஸ்லாம் பண்ணல… கல்யாணம் பண்ணிக்க தான் கேட்டீங்க” என்றாள் சிறிது பொய்யும் உண்மையுமாக.

“ஓ ஷிட்! தட்ஸ் இட்? ரொமான்டிக்கா ப்ரொபோஸ் கூட செய்யலையா நான்.” எனக் கேட்டவன் தன் தலையில் தானே அடித்துக் கொண்டான். அது வலித்த பிறகே அடிபட்டது நினைவு வர, “ஆஆ…” என்று கத்தினான்.

உடனே அவனருகில் அமர்ந்த சஹஸ்ரா, “ஏன் தீரன் இப்படி அடிச்சுக்குறீங்க. இப்ப தான் கொஞ்சமா சரி ஆகிட்டு வருது. உங்க குரங்கு சேட்டையை கொஞ்சமாவது நிறுத்துங்க.” என்றாள் பதற்றத்தில்.

அதில் தான் நிமிர்ந்தவன், “என்னது குரங்கா? என்னை பார்த்தா உனக்கு குரங்கு மாதிரி இருக்காடி?” கண்ணை சுருக்கி அவன் கேட்ட கேள்வியில், சஹஸ்ரா விழித்தாள்.

“பாக்க மனுஷன் மாதிரி தான் இருக்கீங்க. ஆனா செய்றது எல்லாம் குரங்கு சேட்டை தான்…” என நக்கலடிக்க,

“எந்த ஊர்லடி குரங்கு இப்படி சமத்தா உட்காந்து பேசிட்டு இருக்கு ம்ம்ம்?” என்றவன், அவளின் இடையைப் பற்றி இழுத்ததில், அவள் நிலைதடுமாறினாள்.

“இந்நேரம், இவ்ளோ அமைதியா இருக்குமா? கடிச்சு வைக்கும், பிராண்டி வைக்கும்… பண்ணவா?” அவளின் மூக்கோடு மூக்கு உரசி, கண்டிப்பது போல கிசுகிசுத்தான்.

அக்குரலில் கிறங்கியவள், “தீ… தீரா. ப்ளீஸ்!” நடுக்கத்துடன் வந்த கெஞ்சலில் அவளை விலக்கியவன்,

“இப்போ சொல்லு பிரின்சஸ் நான் மனுஷனா? குரங்கா?” என்றான் குறும்புடன்.

“மனுஷக்குரங்கு!” வாய்க்குள் முணுமுணுத்தாலும் அதனைக் கண்டுகொண்ட தீரன், இரு விரலால் அவளின் இதழ்களைப் பிடித்து, “என்ன சொன்ன என்ன சொன்ன?” என்று நெற்றி இடுங்க பார்த்தான்.

“ம்ம்ஹும்… ஒன்னும் சொல்லல.” என்றபடி அவனிடம் இருந்து விடுபட போராடியவளை நோக்கி குனிந்தவன், அவ்வதரங்களை காயம் செய்து, “மனுஷக்குரங்கு இதான்டி செய்யும்” என்று நிரூபித்து விட்டே நகர்ந்தான்.

ஆடவனின் இதழீரம் பதிந்திருக்கும் தன்னுதடுகளை வெட்கத்தில் நடுங்கிய கரங்களுடன் துடைத்தவளுக்கு, இரத்தம் வராமல் இருந்ததில் ஆச்சர்யம் தான்.

அவனை நிமிர்ந்து பாராமல், அவள் அடுக்களைக்கு சென்று விட, மனமோ மீண்டும் மீண்டும் அவனிடமே சரணடைந்ததில் தவித்துப் போனாள்.

நேரம் செல்ல செல்ல, உதடுகளும் வலிக்க ஆரம்பிக்க, முகத்தில் நீரை வாரி இறைத்தாள்.

வாஷ் பேசினில் கரங்களை ஊன்றி தன்னை நிதானிக்க முயல, அது தேவை இல்லை என்பது போல பின்னிருந்து தீரன் அணைத்தான். கூடவே, கையில் துவாலையும் இருந்தது.

“வலிக்குதா பிரின்சஸ்?” ஒன்றும் தெரியாதவன் போல கேட்டு வைக்க, அதில் அவனிடம் இருந்து நகர்ந்து முறைத்தாள்.

அதுவும் சில நொடிகள் தான். அவன் பார்வையில் அம்முறைப்பும் அடங்கி விட, “உங்களுக்கு எல்லாம் ஞாபகம் வர்ற வரைக்கும், இதெல்லாம் வேண்டாம்ன்னு சொன்னேன்ல…” கேட்கும் போதே, கண்ணீர் வேறு காரணமின்றி கண்களை நிறைத்தது.

அத்தனை நேரம் இருந்த மோகம் வற்றி விட, முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டவன்,

“நான் மனுஷனா தான் இருந்தேன். நீ தான் ஏதேதோ பேசி குரங்கா மாத்திட்ட. இப்ப என்னை தப்பு சொல்லி எந்த பிரயோஜனமும் இல்ல…” என அசட்டையாகப் பழியை அவள் மீதே போட்டு விட்டு சென்றான்.

இதே போல் தான், நினைவு வந்த பின்பும் தன்மீது பழி போடுவானோ! என்றே வாடியவள், அடுத்த இரு நாட்கள் அவன் இருக்கும் திசைக்கே செல்லவில்லை.

அவன் அறையில் இருந்தால், அவள் வெளியில் செல்வதும், வெளியில் வந்தால் அறைக்கு செல்வதுமாக அவனிடம் கண்ணாமூச்சி விளையாட, அன்று மருத்துவமனைக்கு செல்வதாக இருந்தது.

அது தீரனுக்கும் நினைவு இருந்தாலும், கிளம்ப எத்தனிக்கவில்லை. நேரம் செல்வதை உணர்ந்து, வேறு வழியற்று அவளே அவனிடம் சென்று பேசினாள்.

“இன்னைக்கு ஹாஸ்பிடல் போகணும்.” அவள் எங்கோ பார்த்து பேச,

“போ!” என்றான் கட்டிலில் படுத்து கால் ஆட்டியபடி.

அவளோ விழித்து, “செக் – அப் உங்களுக்கு தான் தீரன். இன்னும் கிளம்பாம இருக்கீங்க.” என்றிட,

“இப்ப எனக்கு செக் – அப் பண்ணுனா என்ன பண்ணலைன்னா உனக்கு என்ன? எப்படியோ நான் சரி ஆகிக்கிறேன். நீ தேவை இல்லாம அக்கறை எடுத்துக்காத. எனக்கு ஞாபகம் வந்ததும், உன் அன்பு, காதல் பிளா பிளா எல்லாம் காட்டிக்க.” என்றான் சினம் மிகுந்த குரலில்.

அதில் திகைத்தவள், “என்மேல கோபம்ன்னா அதை என் மேல காட்டுங்க. உங்க மேலயே காட்டிக்காதீங்க தீரன்!” என வருத்தத்துடன் கூற,

‘உன்மேல காட்ட முடிஞ்சா, நான் ஏன் இப்படி இருக்கேன்…’ என்று தனக்குள்ளேயே பேசிக்கொண்டவன், கோபத்தை கடைபிடித்தான்.

ஒரு நிமிடத்திற்கு மேல் அவனின் கோபத்தையும் மௌனத்தையும் ஏற்க இயலாமல், “இப்போ நான் என்ன செய்யணும்?” என வார்த்தைகள் பிசிறடிக்க கேட்டாள்.

அதற்கும் அவன் மௌனமே காக்க, “சொல்லுங்க தீரன். இப்ப நான் என்ன செஞ்சா உங்க கோபம் போகும்?” இம்முறை தேம்பலாகவே வெளிவந்தது.

அவளை அமைதியாக ஏறிட்டவன், “ஒரு கிஸ் குடு. போய்டும்!” என இயல்பாக கூறிட, அவளோ அதிர்ந்து தன்னை கேலி செய்கிறானோ என்ற ரீதியில் விழித்தாள்.

அவன் முகமோ, நிச்சலனமாக இருந்ததில், அவளால் எதையும் கண்டறிய இயலவில்லை.

“இப்ப என்ன சொன்னீங்க?” மீண்டுமொரு முறை உறுதிப்படுத்த கேட்க, அவனும் அதையே கூறினான் அழுத்தமாக.

‘ஐயோ படுத்துறானே…’ என்றிருந்தாலும், முத்தம் கொடுக்க என்னும் போதே வெட்க ரேகைகள் அவளை சூழ்ந்தது.

கடும் குழப்பத்தின் மத்தியில், “சரி” என தலையாட்டியவள், கண்ணீரைத் துடைக்காமல் அவன் கன்னம் அருகில் செல்ல வர, அவனோ பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு மூடி இருந்த அவ்விழிகளையே ரசித்தான்.

உடனே அவளைத் தடுத்தவன், அவள் விழிகளைத் திறக்கும் முன் முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு,

“இப்படி அழுது வடிஞ்சு ஒன்னும் நீ தரவேணாம். சிரிச்சுக்கிட்டே, ரொமான்டிக்கா தரணும்.” என்ற நிபந்தனையை முன் வைக்க, இப்போதோ அவளுக்கு கடுப்பே எழுந்தது.

‘நான் இருக்குற நிலமைல ரொமான்டிக் வேற கேட்குதா இவனுக்கு?’ என முறைத்தவள்,

“உங்களுக்கு ஞாபகம் வந்தும் இதே மாதிரி கேளுங்க. இளிச்சுக்கிட்டே தரேன். தயவு செஞ்சு கிளம்பி ஹாஸ்பிடல் வாங்க. நான் வெளிய நிக்கிறேன்…” என்று கடுங்கோபத்தை தெளித்து விட்டே செல்ல, தீரன் அவளை புதிராய் பார்த்தான்.

‘ஏன்… ஞாபகம் வந்து கேட்க மாட்டேனா என்ன?’ என்ற குழப்பம் மேலோங்க, மனைவியின் சொல் தட்டாமல் கிளம்பி வந்தான்.

இருவரும் மருத்துவமனையில் சோதனைகளை முடித்து விட்டு, பார்க்கிங்கிற்கு வந்தனர். ஓட்டுநர் அருகில் இருக்கும் கடைக்கு சென்றிருக்க, அவரை வரக் கூறி விட்டு, காரின் அருகில் நிற்கையிலேயே, யாரோ ஒருவன் தீரனைக் கட்டையால் தாக்க வந்தான்.

“தீரா… பின்னாடி பாருங்க.” என சஹஸ்ரா கத்தியதுமே, ஆபத்தை உணர்ந்தவன் அவனிடம் இருந்து விலகி, அவனைத் தாக்க, அவனோ முகமூடி அணிந்திருந்தான்.

“யாருடா நீ?” என அவன் முகத்தைப் பார்க்க எத்தனிக்க, அவனோ அதற்கு அனுமதி தராமல், மேலும் தீரனை தாக்க முயன்று கையில் கட்டையை எடுக்க அது சரியாக தீரனின் நெற்றியை பதம் பார்த்தது.

ஏற்கனவே கட்டு போடப்பட்டிருந்த வெள்ளை துணியில் குருதி கசிய, சஹஸ்ரா அதிர்ந்து விட்டாள்.

தீரன் சீறலுடன், அவன் கழுத்தைப் பற்றி, முகமூடியை எடுத்து விட, சரியாக அவன் முகத்தை காட்டிய நொடியில் அங்கிருந்து ஓடி விட்டான்.

“டேய்…” என்ற கர்ஜனையுடன் தீரன் அவனைப் பின் தொடர போக, சஹஸ்ரா அவனை தடுத்து, மீண்டும் மருத்துவமனைக்கே அழைத்துச் சென்றாள்.

நிமிடத்தில் நேர்ந்த ஆபத்தில் இருந்து அவள் மனம் வெளிவர முடியாமல் அடம்பிடித்தது.

மருத்துவரோ, “இப்ப தான், மேஜர் சர்ஜரி செஞ்சுருக்கு மிஸ்டர் தீரன். ரொம்ப கவனமா இருங்க. இப்படி அடிபட்டுச்சுன்னா, ப்ரெய்ன் டேமேஜ் ஆக சான்ஸ் இருக்கு.” என்று எச்சரிக்கை விடுத்து, அவனுக்கு சிகிச்சை செய்ய, சஹஸ்ரா பயத்தில் தீரனின் தோள்பட்டையை இறுக்கி பிடித்துக்கொண்டாள்.

அவளின் பயம் உணர்ந்தவன், அவள் கையை அழுத்தி தைரியம் அளிக்க, ஒரு நாள் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க கூறியும், சஹஸ்ராவை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து விட்டான்.

“ஒரு நாள் ஹாஸ்பிடல்ல இருந்து இருக்கலாம்ல தீரன்?” அவள் ஆதங்கத்துடன் கேட்க,

“ப்ச்… அந்த ரெஸ்டை வீட்ல இருந்தே எடுக்கலாம் சஹி” என்றான் சோர்வாக.

அவனின் சோர்வு அவளையும் தாக்க, உணவையும் மருந்தையும் கொடுத்து உண்ண வைத்தவள், படுக்கையில் படுக்க வைத்து, அருகிலேயே அமர்ந்து கொண்டாள். இப்போதெல்லாம், இருவரும் ஒரே கட்டிலில் தான் உறங்குகிறார்கள்.

“அவன் யாரு தீரன்?” எனக் கேட்க, ஏற்கனவே யோசனையில் இருந்த தீரன் விழி நிமிர்த்தி அவளை ஒரு முறை பார்த்து விட்டு, அவள் மடியில் தலை வைத்துக்கொண்டான்.

“அப்போ அப்போ மட்டும் தான் தீரா வருமா சஹி?” என்றபடி அவளை குறுஞ்சிரிப்புடன் காண, முதலில் புரியாமல் விழித்தவள், அதன் பிறகே, “இது ரொம்ப முக்கியமா? நானே பயந்து போயிருக்கேன்.” என்றாள் கண்ணீரை அடக்கியபடி.

“உஷ்… என்ன இது அழுகை பிரின்சஸ்?” என வாஞ்சையுடன் கேட்க, அதற்கு மேல் முடியாமல் அவன் கழுத்தில் முகத்தை பதித்து, அழுது விட்டாள்.

“ரொம்ப பயந்துட்டேன் தீரா…!” அவ்வார்த்தைகளில் தான் அத்தனை வலி, அத்தனை தவிப்பு, அத்தனை நேசம்.
அதுவும் அவனுக்கே அவனுக்காய்! வாழ்வில் எத்தனையோ சாதித்த போதும் வராத நிறைவு அவனுள் உருவாக, இன்னுமாக அவள் மீதே பைத்தியம் ஆனான்.

அவளை இலகுவாக்கும் பொருட்டு, “இந்த தீராவை வரவழைக்கிறதுக்காகவே, தினமும் ஒருத்தனை என்னை அட்டாக் பண்ண வச்சு உன்னை பயமுறுத்தலாம் போலயே…!” கிண்டலுடன் அவள் கண்களை துடைத்து விட, அவள் நிமிர்ந்து முறைத்தாள்.

அதற்கும் வசீகரமாய் புன்னகைத்தவன், “ஐ ஆம் சோ மேட் ஆன் யூ பிரின்சஸ்!” என்றான் காற்றிலேயே முத்தத்தை பறக்க விட்டு.

அவன் செய்கையில், மனம் குளிர்ந்தாலும் அதை விட பயமே அதிகமாக இருந்தது.

“இப்ப இது ரொம்ப முக்கியமா? முதல்ல அவன் ஏன் உங்களை அட்டாக் பண்ணுனான்னு சொல்லுங்க தீரன்.” என்றாள் கண்டிப்பாக.

“ம்ம்ஹும்… என்னை தீரான்னு கூப்புடுற வரை, நான் வாயே திறக்க மாட்டேன்.” தலையை மறுப்பாக ஆட்டியவனுக்கு, அவளை சீண்டி சிவக்க வைப்பது ரசனையாக இருந்தது.

அவன் எண்ணியது போன்றே, ஒரு கணம் சிவந்தவள், “சொ… சொல்லுங்க தீரா.” என்றாள் தன்னை மீறி முறுவலித்து.

“தட்ஸ் சோ ஸ்வீட் சஹி. என்னமோ நீ என்னை அப்படி கூப்பிடும் போது தான் உங்கிட்ட நெருக்கமா இருக்குற மாதிரி ஃபீல் எனக்கு.” என ரசித்துக் கூறியவன்,

பின், “எனக்கும் அவன் யாருன்னு தெரியல சஹி. ரெண்டு மூணு தடவை அவனை பிசினஸ் மீட்டிங்ல பார்த்து இருக்கேன்.” என்றான் சிந்தனையுடன்.

அவன் கன்னத்தை வருடியவளின் முகம் குழப்பத்தை பரிசளிக்க, “வேற எதுவும் ஞாபகம் இல்லையா தீரா?” என்றாள்.

மறுப்பாக தலையசைத்தவன், “ஏன் உனக்கு எதாவது தெரியுமா?” எனக் கேட்க,

அவளோ, “நமக்கு கல்யாணம் ஆகி ரெண்டு நாள்ல அவன் உங்களை பார்க்க வந்தான். ரொம்ப கோபமா உங்ககிட்ட ஏதோ பேசுனான். அப்பறம், நீங்க அவனை ரூம்க்கு கூட்டிட்டு போயிட்டீங்க.” என்றதில் அவன் முகத்தில் குழப்ப ரேகைகள்.

“ஓ! அப்பறம் என்ன ஆச்சு?” என தீரன் வினவ, “தெரியல. நானும் ஆபிஸ் போய்ட்டேன்.” என்றாள்.

“ம்ம்…” என்றவன், வேறேதும் புரியாது, யோசனையுடன் அவள் இடையை இறுக்கிக்கொள்ள, முதலில் நெளிந்தவள், அதன் பிறகே சேயாக தன்னிடம் அவன் ஒட்டி இருப்பதே புரிந்தது.

அதில் அவளும் அவனை அரவணைத்துக் கொள்ள, “எனக்கு எதுவுமே புரியல சஹி. பேசாம எல்லாத்தையும் மொத்தமா மறந்துருக்கலாம். க்ளீன் ஸ்லேட் மாதிரி. இப்போ பிச்சு பிச்சு இருக்குற ஞாபகத்தை வச்சு, தலை வலி வர்றது தான் மிச்சம். ஐ ஆம் சோ டயர்ட் ஆஃப் திஸ்…” என்றவனின் அழுத்தக் குரல் இப்போது கரகரத்தது.

அவன் கண்கள் வழியே வழிந்த கண்ணீர் அவள் வயிற்றை நனைக்க, அவளோ பதறி,

“இது தற்காலிகம் தான் தீரா. எல்லாம் சரி ஆகிடும். என்ன இது?” என அவனின் முகத்தை நிமிர்த்தி கண்ணீரைத் துடைத்து விட,
அவளை ஆழமாய் ஒரு பார்வை பார்த்தவன், “என்னை விட்டு போக மாட்ட தான சஹி?” எனக் கேட்டான் திடீரென.

அக்கேள்வி எதற்கு என்று புரியாமல், “நீங்க போக சொல்ற வரை போக மாட்டேன்.” என்றவள், அவன் தவிப்பு உணர்ந்து நெற்றியில் அழுத்தமாய் இதழ் பதிக்க, அவன் மனமோ ‘சாரி சஹி…’ என்று மானசீகமாக மன்னிப்பு வேண்டியது.

யாரோ அவள்(ன்)
மேகா…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
36
+1
108
+1
4
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்