Loading

ஆரவ் கூறிய விஷயத்தில் ஹேமாவும் தன்விக்கும் அதிர்ந்திருந்தனர் என்றால், கவின் கோபத்தின் உச்சியில் இருந்தான்.

பின்னே, அலுவலகம் வந்ததும், தான் வான்மதியை திருமணம் செய்யப் போவதாக அல்லவா நண்பர்களிடம் அறிவித்து இருக்கிறான்.

“உன் மனசுல என்ன தான் ஆரவ் நினைச்சுட்டு இருக்க?” ஆதங்கத்துடன் கவின் எழுப்பிய கேள்விக்கு அத்தனை சீக்கிரம் பதில் அளித்து விடுவானா அவன்.

தன்விக் லேசான தயக்கத்துடன், “ஏற்கனவே, அவசரப்பட்டு டைவர்ஸ் பண்ணதுனால நீ மட்டும் இல்லாம இஷுவும் ரொம்ப கஷ்டபட்டான் மச்சான். இப்ப சடன் – ஆ மேரேஜ்ன்னு சொல்ற. மறுபடியும், இஷு…” என பேசிக்கொண்டே சென்றவன் ஆரவின் வெற்றுப்பார்வைக் கண்டு நிறுத்தினான்.

‘ஏன் நிறுத்திட்ட முடிச்சுடு’ என்பது போல, கையை ஆட்டி அவன் பேச உத்தரவு கொடுத்தான்.

ஆனால், அவனுக்குத் தான், பேச நா எழவில்லை.

கவினோ, “நீ கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறது ஹேப்பி தான் மச்சான். ஆனா, உனக்கு வேற பொண்ணே கிடைக்கலையா?” என்றான் எரிச்சலாக.

“கிடைக்கல” அவனும் பெரியதாக உணர்வுகளைக் கொட்டாமல் அசட்டையாக பதில் அளிக்க,

கவின் மேலும் பேசும் முன், “இதுக்கு மேல அவளை பத்தி ஏதாவது பேசுன… நான் மனுஷனா இருக்க மாட்டேன் கவின்.” அமைதியாக அதே நேரம், கர்ஜனையாக வெளிவந்தது ஆரவின் குரல்.

அதில் ‘எவளோ ஒருத்திக்காக நீ ஏன் இவளோ மெனக்கெடுற’ என்ற கோபம் மிகுந்தாலும்,

“சரிடா ஒண்ணுமே சொல்லல. நீ என்ன வேணாலும் பண்ணிக்கோ நாங்களும் ஒண்ணும் கேட்கல. அவ வந்ததுல இருந்து, நீ தான் எங்க ஃப்ரெண்ட் ஆவே இல்லையே.” என்று மனம் கேளாமல் வேதனையை கொட்டினான்.

ஹேமா தான் அவனை அமைதிபடுத்தி, “ஆரவ், அவன் கேட்கிற கேள்வியே வேற. அதை கேட்க தெரியாம உளருறான்.” என்று சமாளித்து,

“முதல் கல்யாணம் தான், நீ உனக்காக பண்ணல. அட்லீஸ்ட் இந்த கல்யாணம் ஆச்சு உனக்காக லைஃப் ஃபுல் – ஆ உன்கூட வர்ற பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணலாம்ன்றது தான் எங்க அபிப்ராயம்.

வான்மதிய நான் தப்பு சொல்லல ஆரவ். ஆனா, இஷுக்காக ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிறீங்க. இது எந்த அளவு சரியா வரும்ன்னு எனக்கு புரியல.

எங்களுக்கு உன் லைஃப் நல்லா இருக்கணும். இன்னொரு தடவை நீயும் இஷுவும் தனியா கஷ்டப்படக்கூடாது அவ்ளோ தான்.

அவளுக்கும் ஆல்ரெடி டிவோர்ஸ் ஆகிருக்கு. அது எதுனாலன்னு கூட தெரியல. அது எதுவா வேணாலும் இருந்துட்டு போகட்டும். ஆனா, நாளைக்கு மறுபடியும் ஒரு பிரச்சினை வந்துடக் கூடாது. நீ டிவோர் ஸ் பண்ணிட்டன்றதுக்காக டிவோர்ஸ் பண்ண பொண்ணை தான் கல்யாணம் பண்ணிக்கணுமா?” என்றவளுக்கும் அவன் திருமணம் செய்ய போகிறேன் என்று கூறியதும் மகிழ்ச்சியே.

ஆரவ், சிறிதான முறைப்புடன், “அவளுக்காவது வெறும் டைவர்ஸ் மட்டும் தான். ஆனா எனக்கு ஒரு குழந்தையே இருக்கு. அப்படி பார்த்தா என்னை கல்யாணம் பண்ண அவ தான் யோசிக்கணும்.” என அழுத்தமாக கூறியதிலேயே, அவளை என்னை விட சிறிதாய் பேச அவள் ஒன்றும் மட்டமாகிப் போய் விடவில்லை என்ற கண்டிப்புத் தெறிக்க, ஹேமா வாயை மூடிக் கொண்டாள்.

கவினுக்கு தான் ஏதோ நெருட, “அவளை தான் கல்யாணம் பண்ணனும்ன்னு, என்ன அவசியம் ஆரவ்? அதுவும் இஷுக்காக… அப்படி இஷுக்காகன்னாலும் கல்யாணம் பண்ணனும்ன்னு அவசியம் இல்லயே. தினமும் கொஞ்ச நேரம் பார்த்துக்கிட்டாலே போதும். இப்ப அவ பாத்துக்குற மாதிரி. எனக் குழப்பமாக வினவ, மீண்டும் அவனிடம் ஓர் அமைதி.

“அப்ப நீ எந்த கேள்விக்கும் பதில் சொல்ல மாட்ட?” கோப பெருமூச்ச்சுகள் விட்டபடி கவின் பொரும,

“சொல்ல முடியாது கவின். எதுக்கு சொல்லணும்? நான் டைவர்ஸ் பண்ணும் போது, காரணம் சொன்னேனா? இல்ல அதை தான் உங்களால புரிஞ்சுக்க முடிஞ்சுதா? இப்ப வரை நான் எடுத்த முடிவு உங்களை பொறுத்த வரை தப்பு தான. அப்ப இந்த கல்யாணமும் தப்பாவே இருக்கட்டும். அந்த தப்ப இஷுக்காக மட்டும் இல்ல எனக்காகவும் நான் செஞ்சுக்குறேன்.”

என அழுத்தம் திருத்தமாக சிறு வலியைக் கொட்டி விட்டு தாடை இறுக அமர்ந்திருந்தவனை மூவருமே அதிர்ந்து பார்த்தனர்.

முதன் முறை ஒரு வித குற்ற உணர்வு கவினை அரித்தது. நண்பனை சரியாக புரிந்துகொள்ளவில்லையோ?
என்ற எண்ணம் தோன்றினாலும்,
‘அட்லீஸ்ட் செகண்ட் லைஃப் ஆச்சு நல்ல படியா அமைச்சுக்கலாமே.’ என்று மருகினான்.

பின், “நீ வான்மதியை லவ் பண்றியா மச்சான்?” நேரடியாக கவின் கேட்டு விட, அதில் ஆரவிடம் சிறு அதிர்வு தான்.

ஆனால் நொடியில் தன்னை சீர்படுத்திக் கொண்டவன் அக்கேள்வியில் நளினமாய் இதழ் விரித்தான்.

“இருக்குமோ…” லேசாக முளைத்திருந்த தாடியை மெலிதாய் நீவி விட்டபடி கேட்டவனின் பாவனை அவர்களை முறைக்கவும், அதேநேரம் ரசிக்கவும் வைத்தது.

தன்விக் “ஒன்னு இருக்குன்னு சொல்லு. இல்ல இல்லன்னு சொல்லு. இதென்ன பதில்?” என கண்ணை சுருக்கி கேட்க,

அதற்கும் உதட்டை மடித்து புன்னகைத்தவன், “அவள்கிட்ட ஏதோ இருக்கு.” என்றான் பின்னந்தலையை கோதி.

அதில் கவின் அவனை ஒரு மாதிரியாக பார்த்து, “அவகிட்ட ஜவுளி கடை தான் இருக்கு மச்சான்.” என நக்கலாகக் கூற,

ஆரவோ அலட்டல் இல்லாமல், “டிஸ்கௌண்ட்ல ட்ரெஸ் வாங்கிக்கலாம் மச்சான்” என இடக்காக பதில் அளித்தான்.

“ட்ரெஸ் – அ விடுடா. அன்னைக்கு கடைல பார்த்த ஃபிகரு கல்யாணத்துக்கு வருமா?” என ஹேமா ஆர்வமாகக் கேட்டாள்.

கவினும் தன்விக்கும் அவளை முறைக்க, கவின், “இப்ப இது ரொம்ப முக்கியமா?” என்றதில்,

“டேய். அவன் மட்டும் ரெண்டு கல்யாணம் பண்ணுறான். நான் இன்னும் ஒண்ணு கூட பண்ணல டா.” என்று கதறினாள்.

அந்நேரம், கதவை தட்டி விட்டு வான்மதி உள்ளே வர, என்ன இருந்தாலும் நண்பனை திருமணம் செய்யப் போகிறாளே என்ற ரீதியில் “கங்கிராட்ஸ் வான்மதி” என கையை நீட்டினாள் ஹேமா.

அதில் திருதிருவென விழித்த வான்மதி “எதுக்கு?” எனக் கேட்க,

“என்ன எதுக்குன்னு கேக்குற. உங்க மேரேஜ்க்கு தான்.” என்றதில், இன்னுமாக விழித்தாள்.

‘நான் யோசிச்சு தான சொல்றேன்னு சொன்னேன்.’ என்றவாறு ஆரவை முறைக்க, அவன் கையை கட்டிக்கொண்டு ரோலிங் சேரில் சுழன்றபடி நடப்பதை வேடிக்கை பார்த்தான்.

இன்னும் பெண்ணவளின் கை நீட்டியபடி இருந்ததில் வேறு வழியற்று கையை கொடுத்தவளிடம், மீண்டும் ஒரு வாழ்த்தை உரைத்தவள், வான்மதியின் கரங்களின் மென்மையைக் கண்டு,

“ஹே, உன் கை ரொம்ப சாஃப்ட் – ஆ இருக்கு. கிரீம் ஏதாவது யூஸ் பண்றியா?” எனக் கேட்க, அவளோ அறையில் இத்தனை ஆண்களை வைத்துக் கொண்டு இப்படி கேட்கிறாளே என சங்கடமாக நெளிந்தாள்.

ஆரவும் ஒரு முறை அவளின் உள்ளங்கையை விழிகளால் வருடி விட்டு, “நான் வான்மதிகிட்ட தனியா பேசணும்” என பொதுவாகக் கூற,

கவின் முதல் ஆளாக எழுந்து விட்டு, இருவரையும் முறைத்தான்.

தன்விக்கோ “நீ பேசு மச்சான். நாங்க என்ன வேணாம்ன்னா சொன்னோம்.” என சாவகாசமாக நாற்காலியில் சாய,

ஹேமா தலையில் அடித்து “நீ எல்லாம் சாகுற வரை ஒரு கல்யாணம் கூட பண்ண முடியாது.” என அவனை இழுத்துக் கொண்டு செல்ல, கவின் நகராமல் அங்கேயே நின்றான்.

அதில் “எப்ப கிளம்புவ?” ஆரவ் கேலியாக வினவ,

அவனோ “எனக்கு இந்த கல்யாணத்துல துளி கூட விருப்பம் இல்ல. ஆனா உன் விருப்பத்தில நான் தலையிட விரும்பல. நீயும் விட மாட்ட. ஆனா எனக்கு ஒரே ஒரு பிராமிஸ் பண்ணு.”

என்று கையை நீட்ட, அவன் இன்னும் நாற்காலியில் சுழன்று கொண்டே என்னவென பார்த்தான்.

“அவள் கூட தான் மேரேஜ்ன்னு ஃபிக்ஸ் பண்ணிட்ட. அப்போ, இனிமே என்ன பிராப்ளம் வந்தாலும் ரெண்டு பேரும் டைவர்ஸ் பண்ணக் கூடாது. அப்படி ஒருவேளை நீங்க பிரியிற சூழ்நிலை வந்தா உன் பெர்மிஷன் கூட எதிர்பார்க்காமல் இஷாந்தை நான் தத்து எடுத்துப்பேன்” என்றான் உறுதியாக.

இன்னுமொரு முறை ஆரவ் உறவிழந்து நிற்பதை அவனால் காண இயலாதே.

ஆரவ் ஒரு விழி உயர்த்தி கவினை மெச்சுதலாக நோக்கி விட்டு, “கண்டிப்பா பண்ண மாட்டேன்” என அடுத்த நொடியே அவன் கை மேல் கையை வைக்க கவினுக்கும் வியப்பு தான்.

சில நொடிகளாவது சிந்திப்பான் என அவன் எண்ணியிருக்க இப்போதோ ஆரவின் மாற்றம் கண்டு அவனுள் பெரும் குழப்பம்.

ஆனாலும், மனதை திடப்படுத்திக் கொண்டு நகர எத்தனித்தவனை ஆரவ் தடுத்தான்.

“இதே பிராமிஸ்ஸ அங்கயும் வாங்கிடு.” என கால் மேல் கால் போட்டுக்கொள்ள, வான்மதி தான் திகைத்தாள்.

இப்போது கவின் வான்மதியைப் பார்க்க, அவளோ “நான் சார் கூட பேசணும்.” என்று பதறினாள்.

ஆரவும் “ஃபைவ் மினிட்ஸ் வெளிய வெயிட் பண்ணு கவி.” என்றதில் அவனும் யோசனையுடன் வெளியில் சென்று விட,

வான்மதி பல்லைக்கடித்து “நான் தான் இன்னும் மேரேஜ்க்கு ஓகே சொல்லவே இல்லயே. அப்பறம் ஏன் உங்க பிரெண்ட்ஸ்ட்ட சொன்னீங்க.”
என்றாள்.

“நேத்து நீ தான் ஓகேன்னு சொன்னதா ஞாபகம்…” அவன் சிந்தித்தவாறு குறுநகை பூத்தான்.

“அது… நமக்குள்ள பேபி தவிர வேற எந்த ரிலேஷன்ஷிப் உம் இல்லன்னா தான் சொன்னேன்.”

“நான் அதை மறுக்கலையே…” அவன் தோளைக் குலுக்க,

“ஆனா நீங்க அதை ஸ்ட்ராங் – ஆ சொல்லல சார்.” என்றாள் மெல்லிய குரலில்.

“ஸ்ட்ராங் – ஆ ன்னா எப்படி சொல்லணும்? சூடம் ஏத்தி சத்தியம் பண்ணனுமா?” கேட்டவனின் விழிகள் குறும்பைத் தாங்கி இருந்தது.

அவளோ உணர்வற்று அவனை ஏறிட்டு,

“எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல. ஆனா, கல்யாணம் ஆனாலும் நீங்க என் ஹஸ்பண்டும் இல்ல. நான் உங்க வைஃப் உம் இல்ல. நம்ம உறவு நிலையானதுன்னு என்னால உத்தரவாதம் குடுக்க முடியாது சார்.

ஏன்னா நீங்க சொன்ன மாதிரி நாளைக்கு லைஃப் எப்படி மாறும்ன்னு தெரியாது. ஏன் நீங்க எப்படி மாறுவீங்கன்னும் தெரியாது. அதனால உங்க பிரெண்ட்க்கு குடுத்த வாக்கை திரும்ப வாங்கிக்கங்க. என்னாலயும் அவருக்கு வாக்கு குடுக்க முடியாது.”
எனத் தீர்மானமாக கூறியவள், பின் பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டு குரலைத் தாழ்த்தி,

“ஆனா, உங்க பெர்சனல்ல நான் தலையிட மாட்டேன். நீங்க வேற… ரிலேஷன்ஷிப் வச்சுக்கிட்டாலும் எனக்கு பிரச்சினை இல்ல. பட், வீட்டுக்கு வெளிய…” என கூற வந்ததை முழுதாய் சொல்லி முடித்த திருப்தியுடன் நிமிர்ந்தாள்.

அவனோ, சில நிமிடங்கள் அவளையே ஆராய்ந்து விட்டு, “ஓகே. தேங்க்ஸ் ஃபார் யுவர் கன்சர்ன்.” என்று மறுக்காமல் அவள் கொடுத்த சுதந்திரத்திற்கு தலையசைத்தான் நக்கலுடன்.

அவளும் ஒரு நொடி விழித்து விட்டு, பின் முகம் இறுக திரும்ப, ஆரவ் சொடுக்கிட்டு நிறுத்தினான்.

அதில் நின்றவள், திரும்பி என்னவென பார்க்கையில் ஆரவ் அவளருகில் நின்றிருந்தான்.

இவரு எப்போ எந்திரிச்சாரு என்ற எண்ணம் தோன்றினாலும் அவளின் கால்கள் தன்னிச்சையாக இரண்டடி பின்னால் நகர்ந்தது.

அப்பொழுதும் அவன் ஒன்றும் அவளைத் தீண்டும் தூரம் நிற்கவில்லை தான்.

“வெல்… நீ சொன்னது தான் உனக்கும். எனக்காக இவளோ யோசிச்சு பேசுற உனக்காக நான் இது கூட பண்ணலைன்னா எப்படி…” என உள்குத்துடன் பேசியவனை வான்மதி புரியாமல் பார்த்தாள்.

அவனோ அலுங்காமல், “உனக்கும் வேற ரிலேஷன்ஷிப் வேணும்ன்னா வச்சுக்கோ. நான் தடுக்க மாட்டேன்” என அவளின் கண்களை ஊடுருவியபடி கூற, அவளுக்கோ சுள்ளென்று கோபம் வந்தது.

“என்னை பத்தி என்ன நினைச்சுட்டு இருக்கீங்க ஆரவ்? உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னதுக்காக என்னை சீப்பா நினைச்சுட்டீங்களா?” கண்கள் சிவக்க ரௌத்திரத்துடன் வினவ,

அவனும் விழி இடுங்க உறுத்து விழித்து, “நீ என்னை பத்தி என்ன நினைச்சுட்டு இருக்க வான்மதி. நான் எப்படி வேணாலும் இருக்கலாம்ன்னு நீ சொல்லலாம். ஆனா அதையே நான் உனக்கு சொன்னா அது தப்பா?

உனக்கு இருக்குற அதே டிக்னிடி, அதே கற்பு , அதே ஃபீலிங்க்ஸ் எனக்கும் இருக்கு. ஏன் பையன்னா மட்டும் தான் செக்ஸ் வச்சுக்கணுமா? பொண்ணுங்க மட்டும் முற்றும் துறந்த துறவியா? எல்லாருக்கும் ஒரே சதை, ஒரே உணர்வு தான். நீ எனக்கு குடுத்த ஆப்ஷன் உன்னை பொறுத்த வரை சரின்னா, அதே ஆப்ஷனை நான் உனக்கு குடுக்குறதும் சரி தான். இப்ப சொல்லு, நீ சொன்னது சரியா தப்பா?” கடும் சீறலுடன் எரிமலையாக நின்றான் ஆரவ்.

அவளுக்குத் தான் ஒன்றுமே ஓடவில்லை.

அவனிடம் இருந்து இப்படிபட்ட விளக்கத்தை எதிர்பாராதவளுக்கு அவனை காணவே ஏதோ தடுத்தது.

அந்நேரம் உறங்கிக் கொண்டிருந்த இஷாந்த் சிணுங்க, அவன் அப்போதும் நகர்ந்தானில்லை.

“பேபி அழுறான்.” என அவனை நோக்கி செல்ல எத்தனித்தவளையும், நகர விடாதவாறு மறித்து நின்றான்.

அவன் விழிகளோ நெருப்பை உமிழ, அதற்கு மேல் முடியாமல், “தப்பு தான்.” என்றாள் முணுமுணுப்பாக.

“கேட்கல… வேற ஒருத்தி கூட படுக்க சொன்னப்போ சத்தமா தான சொன்ன. இப்பவும் சத்தமா சொல்லு” என்று சட்டமாகக் கூற அவளுக்கோ கண்ணில் நீர் நிறைந்து இருந்தது.

“தப்பு தான். சாரி.” என குரலை உயர்த்தி கூற வரும்போதே வார்த்தைகள் நடுங்கலாக வெளிவந்தது வான்மதிக்கு.

“ம்ம்.” என உறுமியவன், இஷாந்தை தூக்கி, தட்டிக் கொடுத்து, பால் பாட்டிலை புகட்ட, அவள் அவனைப் பாராமல் கையை பிசைந்தபடி நின்றாள்.

பின் வான்மதியே “என்கிட்ட குடுங்க. நான் வச்சுருக்கேன்.” என இஷாந்தைக் கேட்க, “இன்னும் நான் பேசி முடிக்கல.” என்றான் ஆழ்ந்த குரலில்.

அதற்குள் இஷாந்தும் துயிலில் புகுந்து கொள்ள, மீண்டும் அவளருகில் வந்தவன்,

“இங்க பாரு வான்மதி. நான் சாகுற வரை என் நிழல் கூட உன் மேல படாது. இந்த கல்யாணம் கூட வெறும் சம்பிரதாயம் தான்… பிளா பிளான்னு என்னால உளற முடியாது.

அஃப் கோர்ஸ். இப்போதைக்கு இஷுக்காக மட்டும் தான் இந்த கல்யாணம். ஆனா, என்னால துறவியா வாழ முடியாது. நமக்குள்ள எப்போவுமே எந்த ரிலேஷன்ஷிப்பும் இருக்காதுன்னு அஸ்ஸுரன்ஸ் எல்லாம் குடுக்க முடியாது. ஆனா, உன் விருப்பம் இல்லாம என் சுண்டு விரல் கூட உன் மேல படாது. அதை நீ தாராளமா நம்பலாம்.” என்று உறுதியாகக் கூறியவனுக்கு மறுமொழி கூறத்தான் அவளிடம் வார்த்தைகள் இல்லை.

அதெப்படி இவரின் வார்த்தைகளை நம்புவது என்ற சிந்தனை ரேகைகள் அவள் முகம் முழுதும் ஓட, அதனை அவள் வெளிப்படுத்தும் முன்னே,

“என்னை நம்புறதும் நம்பாததும் உன் இஷ்டம். சாய்ஸ் இஸ் யுவர்ஸ்.” என்றான் அவள் மனதைப் படித்தவன் போல.

‘இவரென்ன மைண்ட் ரீடிங் செய்றாரா?’ என விழி விரித்தவள், சில நிமிடங்கள் வரை, யோசனையுடனே நின்று விட்டு, பின் “ஓகே. எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம்” என்றாள்.

லேசாக முறுவலித்தவன், “ம்ம். உன் வீட்ல யார்கிட்டயாச்சு பேசணுமா?” எனக் கேட்க,

“தேவை இல்ல.” என ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டாள்.

“சியூர்? அப்பறம்…” என நெற்றியைத் தேய்த்தவன், ஏதோ கேட்க வந்து விட்டு கேளாமல் தயக்கம் கொள்ள, திடீரென அவன் மௌனமானதில் நிமிர்ந்தவள், “அப்பறம் என்ன?” என்று புருவம் சுருக்கினாள்.

“நாளைக்கு பிராப்ளம் வரக்கூடாதுன்னு தான் கேக்குறேன் வான்மதி. டிவோர்ஸ் லீகளா ஆகிடுச்சுல?

உன் எக்ஸ்… அவன் சைட் பெண்டிங் ஏதாவது இருந்தா நம்ம ரெஜிஸ்டர் பண்ண முடியாது. அதான்…” என்றவனுக்கும் அவளின் விழிகள் காய்வதைக் கண்டு என்னவோ போல தான் இருந்தது.

“இல்ல ஆரவ். லீகலா டிவோர்ஸ் ஆகிடுச்சு. பேப்பர்ஸ் என்கிட்ட தான் இருக்கு. தேவைப்பட்டா வாங்கிக்கங்க”
… என்றவள் அவனைப் பாராமல் பதிலளிக்க, “மேக்சிமம் தேவைப்படாது.” என்றான் அவளை நோட்டம் விட்டபடி.

“வேற டாகுமெண்ட் வேணும்ன்னா கேளுங்க. நான் தரேன்.” என கூறி விட்டாலும், ‘நம்ம கண்டிப்பா கல்யாணம் செஞ்சுக்கணுமா’ என்றே மனம் அச்சத்தில் தவித்தது.

நம்ம தப்பு பண்றோமோ என்ற தேவையற்ற உணர்வு வேறு அவளை வாட்ட, அதனை கண்டுகொண்டவன், “இஷுவ பார்த்துக்கோ. நான் வெளிய போய்ட்டு வரேன்.” என்று கிளம்ப, அவளை சரி செய்யவென்றே இஷாந்தும் உறக்கத்தில் இருந்து விழித்து அவளைப் பார்த்ததும் மெலிதாய் புன்னகைத்தான்.

அத்துடன், அனைத்தையும் மறந்தவள், இனிமே இந்த குட்டி பேபியோட தான் இருக்க போறேன் என வெளிப்படையாகவே முகம் மலர்ந்தாள்.

ஜன்னல் வழியே, அவளின் பாவனைகளை படம் பிடித்து இருந்தவனின் இதழ்களும் மெலிதாய் மலர்ந்தது.

தன் கையையே வெறித்தபடி இருந்த கவினைக் கண்ட “ஹேமா, என்னடா உன் கைக்கு நீயே ஜோசியம் பாக்குறியா?” என வாரி விட்டு, அவன் கையை பிடிக்கப் போக அவனோ வேகமாக உதறினான்.

“ஏய் லூசு. கையை பிடிக்காத. கையில சத்தியம் பண்ணனும்.” என்று உளற,

“அய்யயோ. ஃப்ரெண்ட்க்கு கல்யாணம்ன்னு சொன்னதும் நீ பைத்தியம் ஆகிட்டியா. டேய் தன்வி வேகமா வாடா. இவனை பாரு” எனப் பதற, அதில் நொந்தவன்,

“அட ச்சை. இந்த கையில தான் ஆரவ்ட்ட சத்தியம் வாங்கினேன். அதே மாதிரி வான்மதிட்டயும் சத்தியம் வாங்கணும். அப்ப தான் சத்தியம் பலிக்கும்.” என ‘நான் சிங்காக’ பேச,

“மச்சான்… உன்ன எத்தன தடவ சொல்றது. தலையில இருக்குற நட்டை எல்லாம் காலைல ஆபிஸ் வரும் போதே டைட் பண்ணிட்டு வந்துடுன்னு. இப்ப பாரு… உள்ள எது எது லூசாச்சோ தெரியல. நீ ஒரு மார்க்கமா பேசுற” என அதட்டிய தன்விக் அவன் தலையை ஆராய, கவின் கடுப்பானான்.

“டேய். உன்ன கொல்ல போறேன். நான் சீரியஸ் – ஆ பேசுறேன். முதல்ல அவள் வந்துட்டாளான்னு பாரு.” என்று கடிய, அதற்குள் ஆரவே அங்கு வந்து விட்டான்.

ஹேமா, “ஹப்பாடா. சீக்கிரம் வாடா. இவனுக்கு ஏதோ பைத்தியம் பிடிச்சுருச்சு. என்னன்னு கேளு” என்றிட, கவின், “அவள் எப்ப சத்தியம் பண்ணுவா?” எனப் பிடிவாதமாக நின்றான்.

“அவகிட்ட சத்தியம் வாங்குறது உன் தலைவலி.” என அசட்டையாக கூறியதில், அவனுக்கோ கோபம் வந்தது.

“எனக்கு என்ன தலையெழுத்தா? அவட்ட போய் நிக்கணும்ன்னு. ஆனா, நீ ப்ராமிஸ் பண்ணிருக்க. அதை மீறிடாத.” எனக் கண்டிக்க, ஆரவ் “நான் குடுத்த வாக்கை மீற மாட்டேன்…” எனப் பொறி வைத்துப் பேச, மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அதன் பிறகு, ஆரவ் துரிதமாக திருமண வேலைகளில் மூழ்கினான். சட்டப்படி பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை நடத்த, தினமும் ஓராயிரம் முறையாவது வான்மதிக்குள் திருமணம் செய்தே ஆக வேண்டுமா என்ற குழப்பம் ஒருபுறம் ஓடிக்கொண்டே இருக்கும்.

ஆனால், இஷாந்தைக் கண்டதும், இவ்வெண்ணம் மறைந்து விடும். அடுத்த பத்து நாட்களிலேயே இருவருக்கும் பதிவு திருமணம் முடிவாகிற்று.

பட்டுச்சேலை, மாலை என எதுவுமே வேண்டாம் என்று விட்டாள். வெறும் கையெழுத்து மட்டும் போதும் என்றவளை அவனும் வற்புறுத்தவில்லை.

கவினோ, “தாலியாச்சு கட்டுவியாடா?” எனக் கேட்க, அதற்கு லேசாக முறுவலித்து நகர்ந்து விட்டான்.

ஹேமா தான், “இதென்னடா. கல்யாணம் கல்யாணம்ன்றானுங்களே தவிர, ஒரு பட்டுசேலை கூட வாங்கி தர மாட்டுறானுங்க.” என நொந்து போக,

தன்விக், “இங்க கல்யாண பொண்ணே சுடிதார்ல தான் வருதாம். வேடிக்கை பார்க்க வர்ற உனக்கு எதுக்கு சேலை.” என தலையில் அடித்தான்.

அன்று பதிவு அலுவலகத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த ஆரவிற்கு வான்மதி போன் செய்தாள். அவளின் பதட்டம் உணர்ந்தவன், “சொல்லு வான்மதி. ஆர் யூ ஓகே?” என வினவ,

“ஆரவ். ஒரு மாதிரி பயமா இருக்கு. இஷுக்காக தான் இதுக்கு ஒத்துக்கிட்டேன். கல்யாணம் பண்ணதும், நீங்க மாறிட மாட்டீங்கள்ல.” குரலில் நடுக்கம் அப்பட்டமாகத் தெரிய,

அவனோ, “ஏன்? நான் கல்யாணம் ஆனதும் ஹல்க் – ஆ மாறிடுவேனா? இல்ல ஜாம்பி ஆகி, உன் ரத்தத்தை குடிச்சுடுவேனா. எனக்கு ரத்த பொரியல் எல்லாம் பிடிக்காது வான்மதி.” என்றான் கிண்டலாக.

வெகு தீவிரத்துடன் பேசியவளோ, இதனை எதிர்பாராமல் ஒரு நொடி விழித்து விட்டு, அவனை ‘ஜாம்பி’ போன்று கற்பனை செய்து சிரித்து விட்டாள்.

“என்ன நான் ஜாம்பியா மாறுனா எப்படி இருப்பேன்னு இமேஜின் பண்ணுனியா?” அவன் அதட்டலாகக் கேட்க, அவள் சிரிப்பை அடக்கிக்கொண்டு “ஆமா” என கூற வந்து விட்டு, “இல்ல இல்ல” என்றாள் வேகமாக.

“இதுக்காகவே உன் ரத்தத்தை உறுஞ்சுறேன் இரு.” என மிரட்டலாகக் கூறினாலும், அவளுக்கு பயம் எழவில்லை.

அவள் சற்று இயல்பானதில் புன்னகைத்தவன், “கிளம்பிட்டியா. நான் 10 மினிட்ஸ்ல வந்துடுவேன்.” என்றதும்,
மலர்ந்திருந்த முகம் லேசாக இறுக்கம் கொள்ள, “வந்து… கிளம்பிட்டேன். ஆனா. இன்னொன்னு சொல்லணும்.” என்றாள் தயக்கத்துடன்.

“என்ன தாலியையும் நீயே கட்டிக்கிறியா?” அவன் கிண்டலாகத் தான் கேட்டான். ஆனால், அவளோ பெரும் அமைதி காக்க, அவ்வமைதியே அது தான் விஷயம் என்று உரைத்தது.

“இதெல்லாம் ஓவர் வான்மதி. இதை என்னால அக்செப்ட் பண்ணிக்க முடியாது.” என முடிவாய் மறுக்க, அவளோ மென்குரலில், “எனக்கு ஒரு மாதிரி எம்பாரிசிங் – ஆ இருக்கு ஆரவ். ப்ளீஸ். சைன் மட்டும் போதும்” என்றிட,

சில நொடிகள் சிந்தத்தவன், “சரி. ரெஜிஸ்டர் ஆபிஸ்ல வைச்சு தாலி கட்ட தான உனக்கு ஒரு மாதிரி இருக்கு. நம்ம வீட்டுக்கு வந்ததும் கட்டுறேன். ஆனா, நான் தான் தாலி கட்டுவேன். அதுல நோ சேஞ்ச்.” என திட்டவட்டமாகக் கூறியதில் அவளாலும் மறுக்க இயலவில்லை.

பின், இஷாந்தை கிளப்பிக்கொண்டு வான்மதியின் விடுதிக்கு சென்று அவளையும் அழைத்துக்கொண்டு பதிவு அலுவலகம் வந்தான். சுடிதார் தான் அணிந்திருப்பாள் என்று தான் நினைத்தான். ஆனால், அத்தனை மோசமாக இல்லாமல், சிவப்பு பார்டர் வைத்த காட்டன் புடவை ஒன்றை அணிந்திருந்தவள், சிறிய தோடும், மெலிதான செயினும், இரு கைகளிலும் ஒரு ஒரு வளையலும் அணிந்திருந்தாள்.

பின்னால் அமர்ந்து, இஷாந்தை மடியில் வைத்து, அவனுக்கு விளையாட்டுக் காட்டிக்கொண்டே வந்தவளை, அவனும் கண்ணாடி வழியே அவ்வப்பொழுது கண்களால் தீண்டிக்கொண்டான்.

ஏற்கனவே நண்பர்கள் மூவரும் அங்கு வந்திருக்க, சுதாகரும் வந்திருந்தான். அவனைக் கண்டு முறைத்த வான்மதி, “நீ ஏன் வந்த?” எனக் கேட்க,

ஹேமா “அவனே நல்ல பையனா நமக்கு முன்னாடி வந்துட்டான். இவளுக்கு என்னவாம்” என குறைபட, கவினும் தன்விக்கும் தான் முறைத்தனர்.

சுதாகரோ, அவளை இன்னுமா முறைத்து வைத்து, “என்ன மேடம் பண்றது. எங்க கடையோட முதலாளியம்மா கல்யாணத்துக்கு கூப்பிடாமையே வந்தாகணுமே.” என சலிப்பது போல் கூற, “முதல்ல கிளம்பு” என்றாள் பல்லைக்கடித்து.

ஆரவோ அமைதியாக “நான் தான் வர சொன்னேன்” என்றதில், அவள் அவனையும் முறைத்து விட்டு உள்ளே சென்று விட்டாள்.

மற்ற மூவருக்கும் ஒன்றுமே புரியவில்லை. கையெழுத்து போட ஆள் பற்றவில்லை என்று அவனை வரவைத்து இருப்பான் என்று தான் நினைத்தார்கள்.

ஆனால், சுதாகரோ “சொந்த தங்கச்சி கல்யாணத்துக்கு கூட வர உரிமை குடுக்க மாட்டுறா. இவளை என்ன பண்றதுன்னு எனக்கும் தெரியல ஆரவ்.” எனப் பாவமாக கூறும் போதே அவனுக்கு கண்ணெல்லாம் கலங்கி விட்டது.

அதில் மற்றவர்களுக்கு அதிர்ச்சி தான். ஹேமா நெஞ்சைப் பிடித்து, “என்னது… தங்கச்சியா? அப்போ, அவ எனக்கு நாத்தனாராடா.” என வெகு முக்கியமாகக் கேட்க,

கவின் தான், “ஓங்கி அடிச்சேன்னு வை.” என்று கடுப்பாக, அவளோ அசட்டையாக “வலிக்கவே வலிக்காது.” என்றாள் தோளைக் குலுக்கி.

“வலிக்காதா” என கடியானவன் அவள் கையை கிள்ளி வைக்க, அவள் அவனின் கையை கிள்ளிட என அங்கு சண்டையே ஆரம்பிக்க, ஆரவ் முறைத்த முறையில் இருவரும் அடக்கமாக நின்றனர்.

“ஃப்ரீயா விடுங்க சுதாகர். வாங்க உள்ள போகலாம்.” என அழைக்க, அனைவரும் உள்ளே சென்றனர்.

அங்கு ஏற்கனவே எல்லாம் தயாராக இருக்க, உடனேயே இருவரும் கையெழுத்திட்டனர். பெரியதாக இருவரும் முகத்தில் எவ்வித உணர்வையும் வெளிப்படுத்தவில்லை.

நல்லவேளையாக கையில் இஷாந்தை வைத்திருந்ததால், அவனின் மென்மை அவளுக்கு நிற்பதற்காகவாவது சிறு தைரியத்தைக் கொடுத்தது.

தன்விக் வேகமாக, “மச்சான் நீ இதை கட்ட மறந்துட்ட.” என ஏற்கனவே வாங்கி வைத்திருந்த மஞ்சள் கயிறை எடுத்துக்கொடுக்க, அதனை வாங்கி அவனின் பேண்ட் பாக்கெட்டினுள் திணித்துக் கொண்டவனை, நால்வரும் விசித்திரமாகப் பார்த்தனர்.

“சரி. எல்லாரும் கிளம்புங்க. நான் வான்மதிய கூட்டிட்டு வீட்டுக்கு போறேன்” என்க, சுதாகர் தன் தங்கையை வருத்தத்துடன் பார்த்து விட்டு, எதுவும் பேசாமல் கிளம்பி விட, அவனின் நண்பர்களோ ‘அப்போ நீ சோறு கூட போட மாட்டியா’ என்ற ரீதியில் முறைத்திருந்தனர்.

தன்விக்கோ, “டேய். இப்பவே மதியம் ஆகிடுச்சு. ஒழுங்கா ஹோட்டல் கூட்டிட்டு போய் சாப்பாடு குடுத்து எங்களை வீட்டுக்கு அனுப்பி வை. இல்லன்னா சிங்கிள்ஸ் சாபம் உங்களை சும்மா விடாது.” என்க,

ஹேமா, “ஆமா ஆமா. என்ன இருந்தாலும் உன் மச்சான் தான அந்த ஃபிகரு. அவனுக்காச்சு ஒரு வாய் பர்கர் கொடுக்கணும்னு தோணுச்சா உனக்கு.” என அவனுக்காக வரிந்து கொண்டு வர, வான்மதி அப்போது தான் இவர்களின் சம்பாஷணையைக் கேட்டு, ‘என்னது ஃபிகரா?’ என்று விழித்தாள்.

கவினோ, “அடிப்பாவி. அப்போ நீ இவ்ளோ நேரம் போராடுறது எங்க வயித்துக்காக இல்ல. அவன் வயித்துக்காக தானா?” என கோப மூச்சுக்கள் வாங்க, “யா யா” என்றாள் பெருமையாக.

அவளை ஒரு மாதிரியாக பார்த்து வைத்த வான்மதி, “சாப்பிட்டே போய்டலாமே” என்றிட, ஆரவும் உடனே சரி என்றான்.

“பாருடா. இவ்ளோ நேரம் நாங்க கத்துனது கேட்கல இவருக்கு. பொண்டாட்டி சொன்னதும் உடனே சரின்னு சொல்லிட்டாரு.” என ஹேமா நக்கலடித்து விட்டு, வான்மதியின் தோளில் கை போட்டு, “நல்லா கேட்டுக்க வான்மதி. கல்யாணம் ஆகி, முதல்ல ஒரு மாசம் தான் நம்ம சொல்றதை கேட்பானுங்க. அப்பறம் எல்லாம், நம்ம பேசுனா கூட என்னன்னு கேட்க மாட்டானுங்க.” என அவளுக்கு அறிவுரை வழங்க,

பின்னால் இருந்து அவள் தலையில் பட்டென்று அடித்த ஆரவ் தான், “இவ அப்படியே பத்து கல்யாணம் பண்ணிட்டா. மூடிட்டு போடி!” என்றான்.

அதில் சிலுப்பிய ஹேமா, “டேய். கல்யாணத்துல நான் உன்னை ஓவர் டேக் பண்ணல. நான் ஹேமா இல்லடா. குறைஞ்சது நாலு கல்யாணமாச்சு செஞ்சு, உங்களுக்கு சோறு குடுக்காம காய விடுறேன் பாருங்க.” என சபதம் எடுக்க, மூவரும் நமுட்டு சிரிப்பு சிரித்தனர்.

ஆனால், வான்மதி அவளின் கையைப் பற்றிக்கொண்டு, “வேணாம் ஹேமா. விளையாட்டுக்கு கூட அப்படி எல்லாம் பேசாதீங்க. சில நேரம், நம்ம பேசுறது பலிக்கும்ன்னு சொல்லுவாங்க. ஒரு கல்யாணம் தோல்வியாகி
இன்னொரு கல்யாணம் பண்றதை விட கொடுமை வேற எதுவுமே இல்ல. இனிமே இப்படி பேசாதீங்க ப்ளீஸ்.”
என கெஞ்சுதலாகவே கூறியவளைக்கண்டு ஒரு கணம் உறைந்தவளுக்கு ஒரு மாதிரி சுருக்கென வலித்தது.

கவினுக்கும் தன்விக்கிற்கும் தான். ஆரவ் அமைதியாக அவளையேப் பார்த்து விட்டு, பின், உணவகத்திற்கு அழைத்துச் சென்றான். யாருக்கும் உணவு தொண்டையில் இறங்கவே இல்லை. அவளைப் பார்த்து எரிந்து விழும் கவினுக்கும் வான்மதியை காண ஏதோ ஒரு வித தயக்கம் மேலோங்கியது.

பிறகு, அவரவர் வீட்டிற்கு சென்று விட, விடுதியில் இருந்த வான்மதியின் பொருட்களை எடுத்துக்கொண்டு அவளும் ஆரவுடன் அபார்ட்மெண்ட்டிற்குள் காலடி எடுத்து வைத்தாள்.

இஷாந்த் பயணத்திலேயே உறக்கத்தில் புகுந்து கொள்ள, அவனை வாங்கிய ஆரவ் அவனறையில் படுக்க வைத்து விட்டு வெளியில் வர, வான்மதி தான், தலையை தரையில் புதைத்து கையைப் பிசைந்தபடி நின்றாள்.

ஆரவ் அருகில் வரும் அரவம் கேட்டதும், நிமிராமல் “எனக்கு தனி ரூம் வேணும்.” எனக் கேட்டாள் மெல்லிய குரலில்.

“உன் இஷ்டம். ஆனா, இஷாந்த் நைட்டு என்கூட தான் தூங்குவான்.” என்று நிபந்தனை விதிக்க, முதலில் அவளுக்கும் ஒன்றும் தெரியவில்லை. அதனால் சரியென தலையசைத்தாள்.

மெலிதாய் இதழ் விரித்தவன், “உனக்காக தான் அந்த ரூம் ரெடி பண்ணிருக்கேன். மோஸ்ட்லி உனக்கு தேவையானது எல்லாம் செட் பண்ணிட்டேன். வேற ஏதாவது வேணும்ன்னா சொல்லு வாங்கிடலாம்” என அவன் அறைக்கு அருகில் இருக்கும் அறையைக் காட்ட, அவள் அப்போது தான் நிமிர்ந்து அவனை ஏறிட்டாள்.

தன்னை சங்கடப்படுத்தாமல் ஏற்கனவே அனைத்தையும் செய்து வைத்தவனின் மேல் பரவியிருந்த தயக்கம் லேசாக விலகியது பெண்ணவளுக்கு.

“தேங்க்ஸ் ஆரவ்” என அவள் உள்ளே செல்ல விரைய, “ஒன் செக் வான்மதி!” என அவளைத் தடுத்தவன், பேண்ட் பாக்கெட்டில் இருந்து மஞ்சள் கயிறை எடுத்தான்.

அதனைக்கண்டதும் வான்மதியின் விழிகள் கலங்கத் தயாராக, ஆரவோ அவளின் விழிகளுக்குள் தன் விழியை புகுத்திய படியே, “இந்த தாலி சென்டிமெண்ட்ல எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை தான். ஆனா, இது நமக்கு ஒரு அடையாளம். அந்த அடையாளத்தை நான் தான் உருவாக்கணும்ன்னு நினைக்கிறேன். மே ஐ?” எனப் பொறுமையாக விளக்கம் அளித்தவன், இறுதியில் கேள்வியுடன் முடிக்க, அவள் தான் அசையாமல் அவன் விழிகள் பேசும் மொழியில் கரைந்து நின்றாள்.

அவள் அறியாமல், அவளின் தலையும் ஆமோதிப்பாக ஆட, மென்னகை புரிந்தவன், “ஹேப்பி மேரேஜ் டே.” எனக் குறும்பு வழிய கூறியபடி அவள் கழுத்தில் மூன்று முடிச்சு இட, அவள் தான், அவனின் வாழ்த்திலும் நெருக்கத்திலும் அவனை நேர்கொள்ள இயலாமல் விழிகளை சட்டென தாழ்த்திக்கொண்டாள், இறுக்கத்துடன்.

தேன் தூவும்!
மேகா.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
47
+1
235
+1
11
+1
6

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான காதல் கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.

    2. Wonderful story. Am enjoying reading. Ps don’t remove this story from Facebook until night.