Loading

தூரத்தில் இருந்து பார்க்க, செங்குத்தான கோபுரமாக இருந்ததாலும், பகலிலும் பனி மூடி இருந்த அம்மலை, அருகில் செல்ல செல்ல நடை பாதை அமைப்பிலேயே இருந்தது. ஆனாலும், அந்த சிறிய ஏற்றத்தில் கால் மணி நேரம் கூட வசுந்தராவால் முழுதாக நடக்க இயலவில்லை.

“ஊஃப்… ஊஃப்” என பெரிய பெரிய மூச்சை இழுத்து விட்டபடி நடந்தவளுக்கு, வியர்த்து வழிந்தது.

அவளைப் பார்த்து நமுட்டு நகை புரிந்த ஜிஷ்ணு தர்மன், “என்னடி… இன்னும் காவாசி தூரம் கூட போகல. அதுக்குள்ள மயங்கிடுவ போல…” என்று நக்கலடிக்க,

அவனை முறைத்தவள், “நான்லாம் இதே மாதிரி பத்து மலைல ஏற சொன்னாலும் அசால்ட்டா ஏறுவேன்… வந்துட்டான் பேச” என்றாள் கெத்தை விட்டுக்கொடுக்காமல்.

“ஓஹோ…! அப்ப நட!” தலையை ஆட்டி வெகு ஏளனத்துடன் கூறியவன், பல முறை ஏறி பழக்கப்பட்டு இருந்ததால், விறுவிறுவென மேலேற, அவளுக்கோ கால்கள் வலுவிழந்தது போல இருந்தது.

பசி வேறு வயிற்றைக் கிள்ள, மூச்சு வாங்கியபடியே “இவ்ளோ வேகமா எங்கடா போற?” எனக் கேட்க,

அதில் திரும்பியவன், “அசால்ட்டா ஏறுவேன்னு சொன்ன? இப்ப என்ன நின்னுட்ட…” என்றான் சிரிப்பை அடக்கியபடி.

‘ஒரு பேச்சுக்கு சொன்னா, அதையே பிடுச்சுட்டு தொங்குறான்’ என அவனை வாய்க்குள்ளேயே திட்டியவள், “போடா. இதுக்குமேல என்னால ஏறமுடியாது. வா வீட்டுக்கு போலாம்…” என்று அங்கேயே ஒரு பாறையில் அமர்ந்து விட, ஜிஷ்ணு நன்றாகவே சிரித்திருந்தான்.

“போதும் நீ சிரிச்சது. செம்மயா பசிக்குது. கீழ கூட்டிட்டு போ!” என நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்தபடி சிணுங்க, அவளின் பாவப்பட்ட பாவனையில் சிரிப்பை நிறுத்தியவன் கனிந்து,

“அதுக்கு தான் சொன்னேன். இப்ப வேணாம்ன்னு… சொல்பேச்சு கேட்காம அடம்பிடிச்சா இப்படி தான் ஆகும்!” என்று கூறிக்கொண்டே அவளருகில் வந்தவன், அவளின் துப்பட்டா கொண்டே, அவள் முகத்தை துடைத்து விட்டான்.

ஒரு கணம் அதனை எதிர்பாராமல் திகைத்தவள், தடுக்கவும் தோன்றாமல் அப்படியே இருக்க, “இப்ப பரவாயில்லையா வசு பேப். கீழ இறங்கலாமா?” எனக் கேட்டான் நெற்றி உயர்த்தி.

தன்னிச்சையாக அவள் தலையும் ஆட, “வா…” என்று அவளின் கையை பிடித்துக்கொண்டவன், “இறங்கும் போது, வழுக்கி விடும் பேப். என்னை பிடிச்சுக்கிட்டே இறங்கு சரியா?” என மென்மையுடன் கூறியபடியே, அவளை அழைத்துச் செல்ல, அவளோ அவனையே பார்த்தபடி இறங்கினாள்.

கருமையும் இல்லாது வெண்மையும் இல்லாத வெளீர் நேரம் அவனுக்கு. எப்போதும் கண்களை நேருக்கு நேராய் சந்திக்கும் தீர்க்க விழிகள். விளையாட்டாக பேசினாலும், அழுத்தமாகவே எதிரில் இருப்பவரை, அவன் பேச்சைக் கேட்க செய்யும் வசியக் குரல். அவ்வப்பொழுது ஈரப்படுத்திக்கொள்ளும் இறுக்கமான இதழ்கள், காரணமின்றி இறுக்கத்தை தளர்த்தாது என்பதை அப்பட்டமாக காட்ட, அது தனியாக தெரியாத அளவு, இயல்புடனே புன்னகைக்கும்.

ஆறடிக்கு மிகாது வேட்டி சட்டையிலேயே எப்போதும் இருப்பவனின் தோற்றத் திமிரும், கல்லூரியில் வெள்ளை கருப்பு கலந்த யூனிஃபார்மில் இருக்கும் மிடுக்கும், பல வகையில் வித்தியாசத்தைக் கொடுத்தாலும் இரண்டுமே ரசிக்கவும் வைக்கும், அதே நேரம் மற்றவரை ஒதுங்கவும் செய்யும்.

ஜிஷ்ணுவைப் பற்றிய எண்ணத்திலேயே நடந்தவள், “ஜிஷு… நீ எப்படி ரௌடியா ஃபார்ம் ஆன?” என்ற அதிமுக்கிய கேள்வியைக் கேட்க, அவளின் பார்வை தன் மீது படிந்திருந்ததை உணர்ந்திருந்தாலும், அவளை தடுக்கி விழாதவாறு அழைத்து வந்து கொண்டிருந்தவன், இக்கேள்வியில் நின்று முறைத்தான்.

“நான் ரௌடின்னு சொன்னேனாடி?” பல்லைக்கடித்து கேட்டவனிடம், “அப்போ, அடியாள் தான?” என்றாள் அவனை சுவாரஸ்யமாகப் பார்த்தபடி.

“ம்ம்… ஆமா!” எனக் கடுப்புடன் கூற, “மினிஸ்டர் என்ன சொன்னாலும் செய்வியா?” என்று சிந்திக்கும் பாவனையுடன் கேட்டாள்.

“செய்வேன்…” அவன் உடனடியாக பதிலளிக்க, “என்னை போட்டுத் தள்ள சொன்னா?” குறும்புடன் தலையை சாய்த்து கேட்டதில், ஒரு கணம் அவள் கண்களை ஆராய்ந்தவன்,

“போட்டுத் தள்ளிட வேண்டியது தான். அரசியல்வாதி ஆகணும்ன்னா, சில பல கொலைகள் செஞ்சு தான ஆகணும்…” என அவள் முகம் நெருங்கி எக்களித்தான்.

விளையாட்டாய் கேட்ட கேள்விக்கு அவனும் விளையாட்டாக பதிலளித்தானா? அல்லது, உண்மையிலேயே கூறுகிறானா? என்பதை பிரித்தறிய இயலாதவளுக்கு, ஏதோ ஒரு கோபமும் ஏமாற்றமும் சூழ்ந்தது.

அதனை வெளிக்காட்டப் பிடிக்காதவள், “நீ கொலை பண்ற வரை என் கை என்ன பூ பறிச்சுட்டு இருக்குமா. நானும் உன்ன போட்டு தள்ளிடுவேன்… “என்று சிலுப்பலுடன் கூறி விட்டு, அவனைத் தாண்டி நடக்க,
அதரம் தாண்டி வெளிவந்த புன்னகையை வஞ்சகமின்றியே வெளிப்படுத்தியவன், இரண்டே எட்டில் அவளை நெருங்கி இரு கையிலும் ஏந்தி இருந்தான்.

நொடியில் நடந்த நிகழ்வில் அவள் விழிக்க, அவனோ கண்களை அவள் முகமெங்கிலும் அலைபாயவிட்டு, “எனக்கு பாலிடிக்ஸ்ல ரொம்ப இன்ட்ரஸ்ட் பேப். அதுக்காக நான் எந்த எல்லைக்கும் போவேன். ஆனா, அதுல நீ மட்டும் எக்செப்ஷன்.” என்றவனின் பார்வை அவள் இதழ்களில் தேங்கி நின்றது.

‘உன்னோட எல்லை எது?’ எனக் கேட்க வந்தாலும் அதனை தவிர்த்து விட்டு, அவனின் இறுதி வாக்கியத்தில் தொக்கி நின்று, “ஏன்? நான் மட்டும் எக்ஸப்ஷன்?” எனக் கேட்டவளின் விழிகளும் அவன் முகத்தை அளந்தது.

லேசாக நெற்றி நெறித்தவன், “ம்ம்… என்கிட்ட வார்த்தைக்கு வார்த்தை பேசி, என்னையவே கொஞ்சம் ஜெர்க் ஆக வைக்க, இனிமே ஒருத்தி பிறந்து தான் வரணும். இனிமே அவ பிறந்து வர லேட் ஆகும்ல. அதான் அதுவரை நீயே அந்த இடத்தை ஃபில் பண்ணிக்க பேப்!” என்றான் குறும்பு கொப்பளிக்க.

“ஓ… டெம்பரவரியா உயிரோட விடுவ அப்படி தான?” என ஒற்றைப் புருவத்தை தூக்கி, அவன் சட்டையை பிடித்து கேட்டவளிடம், “ஆமா. ஒரு அறுபது வருஷம்… தாற்காலிமா உன்ன போனா போகுதுன்னு விட்டுருவேன்.”  என்றவனின் அதரம் தாங்கிய சிறு நகை அவள் இதழ்களிலும் பரவியது.

“ஐயோ அடியாள் சார்…! அறுபது வருஷம் பத்தாது ஒரு எழுபதா மாத்திக்கோங்க.” பயப்படுவது போல பாவனை செய்தவளிடம், “அதுவரை நீ என்னை உயிரோட விட்டு வைடி” என்றதில், இருவரும் சிரித்து விட்டனர்.

அதன் பிறகே, அவன் கைகளில் தவழ்ந்திருப்பது உணர, “இதை தூக்கி தான் சொல்லுவியாடா? இறக்கி விடு!” என்றாள் அதிகாரமாக. அவனோ “உனக்கு கால் வலிக்குது தான? கொஞ்ச தூரம் தூக்கிட்டு வரேன்.” என்றபடி நடையை தொடர்ந்தான்.

அவளாலும் மறுக்க இயலவில்லை. உண்மையில் கால் வலித்ததோடு, ஆடவனின் கரங்களில் குழந்தையாய் தவழ அவளுக்கும் பிடித்தே இருந்தது.

சிறிது நேரம் என்றவன், கீழே இறங்கி நடைபாதை வரும் வரை தூக்கியே தான் நடந்தான். முதலில் சற்றே சங்கடமாக இருந்தாலும், போக போக, உரிமையாய் அவன் மீது சாய்ந்து கொண்டவள், சாவகாசமாக காலை ஆட்டிக்கொண்டே வர, “ஏண்டி… ஒருத்தன் இவ்ளோ நேரம் தூக்கிட்டு வர்றானே. கை வலிக்குமே. போதும் இறக்கி விடுன்னு சொல்ல மாட்டியா?” அவன் கிண்டலாக கேட்டான்.

“ஊர்ல இருக்குற அத்தனை பேரையும் அடிச்சு அடிச்சு, தெம்பா தான இருப்ப. தூக்கிட்டு வா. இதை கூட பண்ணாம எப்படி அரசியல்வாதி ஆகுறது…” என தோளைக் குலுக்கினாள்.

‘உன்ன தூக்குறதுக்கும் அரசியலுக்கும் என்னடி சம்பந்தம்’ என்ற ரீதியில் அவன் விழிக்க, சிரிப்பை அடக்கியபடி இன்னும் ஜம்பமாக அவன் மீது சாய்ந்து கொண்டாள்.

“ராட்சசி…!” என முணுமுணுத்தாலும், அவள் மீதிருந்து வந்த சந்தன மணத்தை சுவாசம் செய்தபடியே, அவன் வீட்டின் தெரு வரைக்கும் வந்த பிறகே, அவளை இறக்கி விட்டான்.

சின்ன சின்னதாக இரு படுக்கையறை கொண்ட, பழைய காலத்து வீடு தான் அவன் வீடு. முற்றத்தில், இரு மாடுகளும் கட்டிப்போட்டு இருக்க, வீட்டு வாசலில் அமைந்திருந்த மர நிழலிலேயே உறங்கி விடலாம்போல, பார்க்க அத்தனை இதமாக இருந்தது.

அவ்வீட்டிலிருந்து சற்று தள்ளி தான், கணபதிக்கு சொந்தமான சிறிது நிலமும் இருக்க, விவசாயமும் பார்த்துக்கொண்டு, கட்சி வேலையும் பார்த்துக் கொள்வார்.

குமரன் தான் வாசலில் அங்கும் இங்கும் நடந்தபடி இருக்க, இவர்களைக் கண்டதும் வேகமாக அருகில் வந்தவன், “இவளை இங்க இருக்குற ஊர்ல இருந்து கூட்டிட்டு வர இம்புட்டு நேரமாடா?” என்றான் முறைப்பாக.

அதற்குள், சத்தம் கேட்டு உள்ளே இருந்த அலமேலு வெளியில் வந்து சற்று விழித்தார்.

முந்தைய நாளே, ஃப்ரெண்டை அழைத்து வருவதாக கூறி இருந்தவன், ஒரு பெண்ணை அழைத்து வருகிறேன் என்று கூறவில்லை.

அவரோ அதில் பதறி, “ஏங்க, அத்த” என கணபதியையும் சோலையம்மாவையும் அழைக்க, அவர்களோ என்னவோ ஏதோ என்று வெளியில் வந்து பார்த்து விழித்தனர்.

குமரன் கேட்ட கேள்வியை கண்டுகொள்ளாத வசுந்தரா, உள்ளே நுழைந்து, “என்ன எல்லாரும் இப்படி முழிக்கிறீங்க. நான் அழகான பொண்ணு தான். ஆனா, இவ்ளோ ரசிச்சு பாக்குற அளவு அழகா இருக்கேனா என்ன?” என தீவிர சிந்தனையுடன் கேட்க, ஜிஷ்ணு தலையில் அடித்துக்கொண்டான்.

குமரனோ, “சுய தம்பட்டம் போதும். வா உள்ள” என அழைக்க, அதற்குள் அலமேலுவே நினைவுக்கு வந்து, “உள்ள வாத்தா” என அழைக்க, கணபதி “நீ ராஜசேகர் பொண்ணு தானம்மா?” எனக் கேட்டார் யோசனையுடன்.

அவளோ விழிகள் மின்ன, “அட ஆமா. உங்களுக்கு என்னை தெரியுமா அங்கிள்?” என்றாள் வேகமாக.

“சின்ன வயசுல அடிக்கடி நீ வரும் போது பார்த்து இருக்கேன்மா. இப்ப இங்கயே படிக்க வந்துட்டியா?” சிறு புன்னகையுடன் வெகுளியாக கேட்க, “ஆமா அங்கிள்” என்றவள்,

ஆடவர்களின் புறம் திரும்பி, “பாத்தீங்களாடா. அங்கிளுக்கு என்னை தெரிஞ்சு இருக்கு. உங்களுக்கு தான் என்ன தெரியல. அதுக்குள்ள, நான் என்னமோ ஊருக்குள்ள குண்டு போட வந்த மாதிரி எவ்ளோ கேள்வி கேட்டுட்டீங்க. பார்த்துக்கோங்க. நானும் இந்த ஊர்ல ஃபேமஸ் ஃபிகர் தான்…” என்று காலர் இல்லாத சுடிதாரை தூக்கி விட்டுக்கொண்டாள்.

ஜிஷ்ணுவோ முறைத்து வைக்க, குமரன் தான், “ம்மா இவளுக்கு வேகமா சோத்த போட்டு அனுப்புங்க. இல்லன்னா, ரொம்ப டேமேஜ் பண்ணுவா.” என்றான் பாவமாக.

“ஏன் குமரா வீட்டுக்கு வந்த பொண்ண இப்படி சொல்லுற? பசியோட இருப்பீக. வந்து சாப்பிடுங்க.” என்றிட,

சோலையம்மா, “இந்த புள்ளைய கூப்பிட தான், நீ வெள்ளப்பாளையம் போனியாக்கும்” என ஏற இறங்க பார்க்க, “இந்தாம்மா உன் பேரு என்ன?” என்றார் திணக்கமாக.

“வசுந்தரா பாட்டி.” முதலில் அடக்கமாகவே பதில் உரைத்தவளிடம், “அப்பவே கிளம்பிட்டீகன்னு குமரா சொன்னான்?” என ஆராய்ச்சியாக அவளை பார்க்க,

ஜிஷ்ணுவோ, “இந்த இம்ச தான் மலைக்கு போகணும்ன்னு கூட்டிட்டு போய்டுச்சு. அப்பறம் பாதில நடக்க முடியலன்னு வந்துட்டோம்.” என்க,

‘நான் உனக்கு இம்சையா?’ எனக் கறுவியவள், மிகவும் நல்ல பெண்ணாக, “ஆமா பாட்டி. என்னால நடக்கவே முடியலையா. அப்பறம் ஜிஷு தான் என்னை தூக்கிட்டு வந்தான். மலை ஏறி இறங்குற பொண்ணுங்களுக்கு எல்லாம், அவன் இப்படி தான் ஃபிரீ சர்விஸ் பண்ணுவானா பாட்டி? இல்ல எனக்கு மட்டும் ஆஃபரா” எனக் கேட்டு, அங்கிருந்தவர்களை அதிர வைத்தாள்.

ஜிஷ்ணுவோ இப்படி பட்டென உடைப்பாள் என எதிர்பாராது, அவளை உறுத்து விழிக்க, குமரன் தான், ‘எதே தூக்கிட்டு வந்தியா’ என அவனை மேலும் கீழும் பார்த்தான்.

சோலையம்மா வாயில் கை வைத்து இருக்க, “என்ன பாட்டி நீங்க ஷாக் ஆகுறத பாத்தா இதுவரை அவன் உங்களை கூட தூக்குனது இல்லையா? என்னடா நீ… பாட்டிக்கு ஆஃபர் கொடுக்குறது இல்ல…” என ஜிஷ்ணுவின் புறம் திரும்பி எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றினாள்.

அலமேலுவும் கணபதியும் வேறு அவனை குறுகுறுவெனப் பார்த்ததில், “ம்மா… பசிக்குது. சாப்பாடு வைப்பீங்களா மாட்டீங்களா?” என முறைத்து சமாளிக்க, அவர் “இந்தா வைக்கிறேன் தம்பி” என அடுத்த நொடி அடுக்களையில் இருந்தார்.

“ரொம்ப தான் மிரட்டுற? இவன் வீட்ல இப்படி தான் சிடுசிடுன்னு இருப்பானா அங்கிள். வெளில என்கிட்ட எல்லாம் உருகி குழைஞ்சு சிரிச்சு பேசுறான்.” என்று மீண்டும் போட்டுக்கொடுக்க, குமரனுக்கு சிரிப்பை அடக்கவே இயலவில்லை.

அத்துடன் பொறுமை இழந்த ஜிஷ்ணு, அவளின் காதை திருகியபடி தரதரவென வெளியில் இழுத்து வந்தவன், வீட்டின் பக்கவாட்டு சுவற்றில் சாய்த்து, ஒரு கையால் கழுத்தைப் பிடித்திருந்தான்.

“ஆ… கொலை கொலை! காப்பாத்துங்க…” என அவள் கத்திட, அவளின் வாயையும் மூடி, “சாவடிச்சுடுவேன்டி உன்ன” என்று விழிகளில் நெருப்பை கக்கியவன், கடும் கோபத்தில் இருந்தான்.

“ம்ம்… ம்ம்” என்று முனகியவள், ஏதோ பேச வர, மெல்ல அவள் இதழுக்கு விடுதலை கொடுத்தவன், “என்னடி?” என கர்ஜிக்க,

“கண்ணுல ஃபயரு விட்டா நான் பயந்துடுவேனா? நீ மட்டும் என்னை இம்சைன்னு சொன்ன? இம்சையா இருந்தா என்ன ஆகும்ன்னு இப்ப தெரியுதா?” என்றாள் மூக்கை சுருக்கி.

வசுந்தராவின் பாவனையில் கோபம் விலகி ரசனை அதிகமாக, “என்ன சொன்ன என்ன சொன்ன? உருகி குழைஞ்சு பேசுவேனா உங்கிட்ட… அப்படி பேசுனா என்ன ஆகும்ன்னு இப்ப காட்டவா?” என அழுத்தத்துடன் கூறிக்கொண்டே வந்தவனின் குரல் இப்போது குழைந்தது.

இன்னும் நன்றாக அவளை நெருங்கியவன், பாவையின் கருங்கூந்தலை வாசம் பிடித்தான்.

“வசு பேப்… கமகமன்னு மணக்குற! என்னை மயக்கவா பேப்? நான் தான் ஏற்கனவே உன்கிட்ட மயங்கிட்டேனே…” தன் விரல்களை அவள் விரல்களுக்குள் நுழைத்து, கிட்டத்தட்ட கிறங்கும் பாவனையில் அவளை கிறங்கடித்தவனை இமைக்காமல் பார்த்திருந்தாள்.

விழிகள் மட்டுமே அவனைப் பார்த்திருந்தது. மூளை எப்போதோ செயலிழந்திருந்தது. அவளின் உறையும் பார்வையில் பக்கென சிரித்தவன், அவசரமின்றியே விலகி, இரு புருவத்தையும் உயர்த்தி, “என்ன பேப்! ஒரு சாம்பிள் காட்டுனதுக்கே ஸ்டன் ஆகிட்ட. ம்ம்?” என்றான் குறும்புடன்.

அவன் சாதாரணமான பேச்சில் தான், சற்றே நினைவுக்கு வந்தவளை குமரன் ஏலமிட்டான்.

“வசு சாப்பிடவா எங்க இருக்க?” என்ற அவன் குரலில், ஜிஷ்ணுவை வெறியாக முறைத்து விட்டு, உள்ளே சென்றவளை, ‘இனிமே வாய் பேசு உன்ன பாத்துக்குறேன்’ என வறுத்தபடி அவனும் அவள் பின் சென்றான்.

ஆனால், அவளின் வாயை அடக்க இயலும் என்று அவன் எண்ணியது தான் பொய்யாகிப் போனது.

இத்தனை நேரமும் அங்கிள், ஆண்ட்டி என கூறிக்கொண்டிருந்தவள், அடக்க ஒடுக்கமாக, “அத்தை… நீங்களும் உட்காந்து சாப்பிடுங்க…” என்றதில், பாவம் அலமேலுவிற்கு இதயமே வெடித்து விட்டது.

திருதிருவென விழித்தபடி நின்ற கணபதியை ஏறிட்டவள், “அட உட்காருங்க மாமா. நம்ம சேர்ந்தே சாப்பிடலாம்.” என அவரையும் தாக்க, சோலையம்மா ஜிஷ்ணுவை இன்னும் ஆராய்ச்சியாக பார்த்தார்.

“இந்த கிழவி வேற… நம்மளை நோண்டுமே” என நொந்தவன், “மூடிக்கிட்டு சாப்பிடுடி.” என்றான் பல்லைக்கடித்து.

குமரனோ, இருவரையும் சுவாரஸ்யமாக பார்த்து, “ஒன்னும் சரி இல்ல மாப்ள. எனக்கு தெரியாம, இவ எப்ப இங்க மருமகளானா?” என்று அவன் பங்கிற்கு வார, ஜிஷ்ணுவிற்கு சத்திய சோதனையாக இருந்தது.

அதனையெல்லாம் கண்டுகொள்ளாதவளாய் இலையில் வைத்திருந்த, ஆடு கோழி அனைத்தையும் கூச்சமே படாமல் ஒரு பிடி பிடித்தவள், “அத்தை… உங்க கைப்பக்குவம் சூப்பரா இருக்கு. உங்க சாப்பாட சாப்புடுறதுக்காகவே நான் வாரா வாரம் வருவேன்!” என்று முன்பதிவு செய்து கொண்டாள்.

அவள் ரசித்து சாப்பிடுவதில் பூரித்த அலமேலு, “அதுக்கென்ன, நீ வெள்ளனையே வந்துடுத்தா.” என்றதில், ஜிஷ்ணு நிமிர்ந்து அவரை முறைத்தான்.

“ஏம்மா… ஒரு நாளைக்கே என் உசுர வாங்குறா. இதுல வாரா வாரமா? அடுத்த வாரம் நானே கூட்டிட்டு வந்தாலும் இவளை உள்ள விடாதீங்க” என்றதில், “ஏப்பா அப்படி சொல்ற. அந்த புள்ள வந்து வீடே கலகலன்னு இருக்கு…” என்றார் பெருமையாக.

“இன்னும் கொஞ்ச நேரம் அவள் இங்க இருந்தா லகலகன்னு இருக்கும்மா…!” குமரன் பட்டென அவரை வார, ஜிஷ்ணு அவனுக்கு ஹை ஃபை கொடுத்துக்கொண்டான்.

கேலியும் கிண்டலுமாக, மாலை வரை அலமேலுவிடமும் சோலையம்மாவிடமும் பேசித் தீர்த்தவளை அனைவருக்கும் பிடித்து விட்டது.

“நீ பேசுனது போதும். பஸ் வந்துடும்… உன்ன விட்டுட்டு நான் திரும்பி வரணும் வா.” என ஜிஷ்ணு அவளை அழைக்க, “நீ ஏன் வர்ற ஜிஷு? நான் மட்டும் போய்க்கிறேன்.” என்றபடி, கைப்பையை எடுத்துக்கொண்டவள், அருகிலிருந்த குமரன் வீட்டிற்கும் சென்று அவனின் தாய் தந்தையையும் கலங்கடிக்க, காலில் விழுகாத குறையாக இருவரும் பேருந்து நிலையம் அழைத்துச் சென்றனர்.

மூவருமே அரட்டை அடித்தபடி, அவளை ஊரில் விட்டு விட்டு கிளம்ப, வசுந்தராவிற்கு இந்த ஒரு நாளே, பல நாட்களாக நீடித்தது போன்றதொரு உணர்வு. அந்த இனிமை தந்த கதகதப்பிலேயே மறுநாள் விடுமுறையையும் நெட்டித் தள்ளினாள்.

ஏன் இத்தனை மெதுவாக நேரம் நகர்கிறது என புரியாதவளாய், ‘சே… இன்னைக்கும் கன்னிமனூர் போயிருக்கலாம்’ என எண்ணம் செல்ல, கூடவே அவ்வெண்ணம் ஆடவனின் வாசத்தையும் இழுத்து வந்தது.

தலையை குலுக்கி தன்னை சமன்படுத்திக்கொண்டவள், இரவு சீக்கிரமாகவே உறங்கி விட, நடுநிசியில் கையில் ஏதோ ஊர்வது போல இருந்தது.

முதலில் தட்டி விட்டு மீண்டும் உறக்கத்தைத் தொடர்ந்தவளின், தோள்பட்டை தொடங்கி, இடை வரை ஊர்வது தொடர, திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள்.

அதன்பிறகே, தன்னை தீண்டியது ஒரு குச்சி என்று உணர்ந்தவள், அது வந்த திசையை நோக்கிப் பார்க்க, அது நேராக ஜன்னலுக்கு சென்றது.

ஜன்னலுக்கு மறுபுறம் யாரோ நின்றிருப்பதைக் கண்டவள், கத்த வாயைத் திறக்க, “பேப்… கத்திடாத. நான் தான்…” என்ற ரகசிய குரலிலேயே அது ஜிஷ்ணு என்று அறிந்து ஆசுவாசமானவள், “இந்த நேரத்துல இங்க என்ன பண்ற ஜிஷு” என்றாள் கிசுகிசுப்பாக.

“சொல்றேன். நீ யாருக்கும் தெரியாம வெளிய வா” என்றதில், “என்ன விளையாடுறியா? நான் எப்படி வரமுடியும். யாராவது பார்த்தா அவ்ளோ தான்.” என்று மறுக்க, “இப்ப நீ வரல. நான் உள்ள வந்துடுவேன் பேப்!” கிட்டத்தட்ட மிரட்டல் குரலில் அவன் கூற, அவளுக்கோ ஐயோ என்றிருந்தது.

“இருடா வந்து தொலைக்கிறேன்…” என்றபடி, யாருக்கும் தெரியாமல் பின் வாசல் வழியாக சென்றவள், அவனையும் அங்கு வர சொல்ல, அவனோ அவளை வெளியில் அழைத்து செல்ல, அவன் கையை உதறியவள், “ஜிஷு நீ என்ன பண்ணிட்டு இருக்க?” என்றாள் சுற்றும் முற்றும் பார்த்து.

“ஷ்ஷ்! செல்றேன்டி. கொஞ்ச நேரம் அமைதியா இரு…” என்றவன் அவளை இழுத்துக்கொண்டு, நான்கு தெருவைக் கடந்ததில், “டேய்ய்ய்…! என்ன கூட்டிட்டு ஊர விட்டுட்டு ஓட போறியா?” அவள் கடுப்பாக கேட்க, அவன் ஒரு பெரிய வீட்டின் முன் நின்றான்.
  
“இங்க ஏன் ஜிஷு நிக்கிறோம்?” வசுந்தரா புரியாது பார்க்க, “நீ தானடி சொன்ன. அந்த போலீஸ்காரனை கட்டையால அடிக்கணும்ன்னு. அதான்…” என்றபடி முதுகுக்கு பின்னால் இருந்த கட்டையை எடுத்தவனை விழி விரித்துப் பார்த்தாள்.

“சீக்கிரம் வா…” என்றவன், சுவர் ஏறி குதித்து அவளையும் குதிக்க வைத்து, “பின் பக்கம் வழி இருக்கு பேப். அது வழியா உள்ள போய் மாடிக்கு போய்டலாம். அங்க தான் அவன் ரூம் இருக்கு.” என்று ப்ளூ பிரிண்டோடு கூற,

அவளோ, “ப்ச்… ஜிஷு. மேல இருக்குற ரூம்ல பிரென்ச் விண்டோ தான் இருக்கு. எதுக்கு சுத்தி போகணும். வா நான் ஒரு வழி சொல்றேன்…” என்று, பைப்பின் மீது தாவி, ஒரு சன்ஷேடில் நின்றாள்.

ஜிஷ்ணு தான், அவளையே ‘பே’ வென பார்த்து, “உண்மையை சொல்லுடி! சென்னைல நீ சர்க்கஸ் தான காட்டிட்டு இருந்த!” என கேலி புரிந்திட, “இப்ப இது ரொம்ப முக்கியமா. வா மேல” என்றதில், அவனும் ஒரே தாவில் மேலே ஏறினான்.

இருவருமாக, சங்கர் இருக்கும் அறையின் ஜன்னல் புற சன்ஷேடில் நின்றதும், ஜிஷ்ணு ஜன்னலை திறக்கப் போக, வசுந்தரா வேகமாக தடுத்தாள்.

“ஜிஷு ஜிஷு… நம்ம பாட்டுக்கு இப்படி அர்த்த ராத்திரியில வந்துட்டோமே. அவன் வைஃப் கூட இருந்தா என்ன பண்றது” என தயக்கமாகக் கேட்க,

“இருந்தா என்ன? வீடியோ எடுத்து ப்ளூ ஃபிலிம் போட்டுடலாம் பேப்” என்றான் புன்சிரிப்புடன்.

“ச்சீ…” என முகத்தை சுருக்கியவள், அவள் தோளை செல்லமாக அடித்திட, அவனோ “அவன் பொண்டாட்டி ஊருக்கு போயிருக்காடி. அதான் உன்ன இன்னைக்கு கூட்டிட்டு வந்தேன்” என்றதில், “அடியாளுன்னா அடியாள் தான்…” என்றாள் அவன் தலையை கலைத்து விட்டு.

அதில் போலியாய் முறைத்தவன், ஜன்னலை மெல்ல திறந்து விட்டு பட்டென மூடி விட்டான்.

“ஏன் ஜிஷு மூடுன?” அவள் அவனுக்கு பக்கவாட்டில் நின்று விழி அகல கேட்க, அவ்விழிகளுக்குள் தன்னை இழந்தவன், “அவன் உள்ள பிசியா இருக்கான் பேப்” என்றான் கிண்டலாக.

“இந்த நேரத்துல கூட பிசியா இருக்கானா என்ன?” என்று தலையை சொறிந்தவளிடம், “ம்ம்… அவன் கீப் கூட பிசியா இருக்கான். பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டான்னு விசாரிச்சேன். கீப்ப பத்தி விசாரிக்காம விட்டுட்டேன்…” என்று அவன் தாடையை தடவ,

“கருமம் கருமம்! இந்த கருமத்தை எல்லாம் பார்க்க வேண்டியதா இருக்கு. இப்ப என்னடா பண்ண?” அவள் தலையில் அடித்துக்கொண்டு கேட்க,

“என்ன பண்றது… அவன் முடிச்சுட்டு வர்ற வரை வெய்ட் பண்ணலாம்.” என சலிப்பது போல கூறியவன், அந்த சன்ஷேடிலேயே காலை தொங்க போட்டு அமர்ந்து, அவளையும் அருகில் அமர வைக்க, “என்னடா நீ ஏதோ ஊஞ்சல்ல உட்காந்துருக்குற மாதிரி சாவகாசமா உட்காந்து இருக்க?” என்று அவள் கீழே இருந்த உயரத்தைக் கண்டு மிரண்டாள்.

“அடியாள்ன்னா இதை கூட பண்ணலைன்னா எப்படிடி?” என்று காலரை தூக்கி விட்டு கொண்டவன், மறுபுறம் பார்த்தபடியே அவள் தோள் மீது கை போட, அவனை திரும்பி முறைத்தவள், அவன் கையை தட்டி விட்டாள்.

மீண்டும், அவள் தோள் மீது கரத்தை சுற்றி வளைத்தவனின், வெப்ப மூச்சு அவள் கன்னங்களை பதம் பார்க்க, ஜிஷ்ணு மூச்சை நன்றாக இழுத்து விட்டான்.

“இன்னைக்கு சோப் மாத்திட்டியா பேப்? வேற ஃபிளேவர் மாதிரி இருக்கு. எனக்கு சந்தன வாசம் தான் பிடிச்சுருந்துச்சு…” உருகும் குரலில் அவளை வசமிழக்க வைத்தவனின் முகத்தை தள்ளியவள், “உன் பேச்சே சரி இல்ல. என்னடா என்ன லவ் பண்றியா?” எனக் கேட்டாள் அழுத்தமாக.

மறுநொடியே, “ச்சே ச்சே இல்ல.” என தோளைக் குலுக்கியவன், “ஆனா, உங்கிட்ட உரச பிடிச்சுருக்கு. உங்கிட்ட மட்டும் இப்படி பேச பிடிச்சு இருக்கு பேப்… நீ என்னை லவ் பண்றியா?” அவளின் ஒவ்வொரு விரலையும் சொடுக்கெடுத்தபடி, அவன் ரசனையாய் கேட்க, அவளோ “ப்ச், ப்ச்… இல்ல!” என்றாள் மறுப்பாக தலையாட்டி.

அதில், “ஓ!” என்றவன், அவள் கையை மட்டும் விடவில்லை. அவனையே ஓரக்கண்ணில் பருகிய வசுந்தரா, “ஆனா, நீ உரசுனா பிடிச்சுருக்கு. நீ கொழைஞ்சா மட்டும் கேட்க பிடிச்சு இருக்கு…” என்றபடி அவன் தோள் மீது சாய்ந்து கொண்டவள், மெல்ல புன்னகைத்தாள்.

அவனும் அதே இளநகையுடன், அவளின் கழுத்தை கட்டிக்கொண்டு, உச்சந்தலையில் தன் முதல் முத்திரையை பதிக்க, அம்முத்தம் பெண்ணவளின் உள்ளங்கால் வரை சிலிர்ப்பைத் தந்தது.

 

காதலைப் பரிமாறிக்கொள்ளவில்லை. அதற்கு பதிலாக உரிமையை பரிமாறிக்கொண்டனர். நேசத்தை வெளிப்படுத்தவில்லை, மாறாக உணர்வுகளை வெளிப்படுத்தினர். இருவருக்குள்ளும் எழுந்த உறவுப்பிணைப்பை பற்றி பேசிக்கொள்ளவில்லை இருவரும், ஆனால் அவர்களுக்கு பிடித்த வழியில் உறவை வளர்த்துக்கொண்டனர்… தங்களை சுற்றி பின்னப்படும் சதி அறியாமலேயே!

தீயோ தென்றலோ அவள்(ன்)
மேகா!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
16
+1
90
+1
5
+1
6

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல். பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க முடிந்தது.