Loading

 

 

மறுநாள் எழுந்த கயலுக்கு உதடு முனுமுனுவென இருக்க.. கண்ணாடியில் உதட்டைப் பிடித்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாள்.

“ஏன் இப்படி உதடு சிவந்துருக்கு?” என்று பார்த்துக்கொண்டிருக்க, அவளின் செயலை ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்த ஜீவா, மெதுவாக அவள் பின்னே வந்து நின்றான்.

கண்ணாடி வழியே தெரிந்த அவன் பிம்பத்தை விழி விரித்து பார்த்தவளுக்கு, நகர கூட தோன்றவில்லை.

கண்ணில் காதலை தேக்கி, அவளையே ஜீவா பார்க்க, அதனை உணராதவள் சட்டென்று சுதாரித்து, உடனே திரும்பி, “எ எ என்ன…” என்று கேட்க,

ஜீவா.. “என்ன என்ன” என்று கேட்டதும், கயல் பதில் சொல்லாமல் அங்கிருந்து வெளியில் சென்று விட்டாள்.

அவளை பார்த்து பெருமூச்சு விட்டவன், அவள் பின்னே செல்ல, அவள் அவனை கண்டுகொள்ளாமல், அடுக்களையில் சமைக்க ஆரம்பித்தாள்.

‘இவள் சொல்றதையே கேட்கமாட்டா போல…’ என்று அவளை முறைத்து விட்டு, எஸ்டேட்டிற்கு சென்றான் ஜீவா.

எண்ணமெல்லாம், கார்த்தியை யார் கொலை செய்திருப்பார்கள் என்ற கேள்வி தான் நிறைந்திருக்க, தன் தம்பியை கொலை செய்து, தன்னிடமே போக்குக் காட்டும் தைரியம் எவனுக்கு இருக்கிறது, என்று தீவிர யோசனையில் இருந்தவனுக்கு, கார்த்தியுடைய பாடி கூட கிடைக்கவே இல்லையே என்று கண்ணில் நீர் கோர்த்தது.

மதியம் வீட்டிற்கு சென்றவன், கயல், டைனிங் டேபிளில் சாப்பாடை எடுத்து வைத்து கொண்டிருப்பதை பார்த்து, அங்கு சென்று அமர்ந்தான்.

ஜீவா வரவும் அவனைப் பாராமல், தட்டை எடுத்து, சாப்பாடை பரிமாறியவள் அவன் அந்த சாப்பாடை சாப்பிடாமல் இருப்பதை உணர்ந்து, மெதுவாக நிமிர்ந்து அவனை பார்க்க, ஜீவா இவளையே தான் அளந்து கொண்டிருந்தான்.

இருவர் விழிகளும் ஒன்றோடு ஒன்று மோத, அவன் பார்வையின் வீரியம் தாங்காமல் கயலுக்கு தான் மூச்சு முட்டுவதை போல் இருந்தது.

அவளையே பார்த்தவன், சேரை இழுத்து போட்டு “உட்காரு” என்று சொல்ல, கயல் பேந்த பேந்த முழித்ததை கண்டதும், “உன்னை தான் உட்காரச்சொன்னேன்.. ” என்று அழுத்தமாய் சொல்ல, தயங்கி கொண்டே அவன் அருகில் இருந்த சேரை தள்ளி இழுத்து போட்டு அமர, “தெளிவு தான்” என்று மனதினுள் புலம்பிக்கொண்டான் ஜீவா.

அவளுக்கு ஒரு தட்டில் சாப்பாடை வைத்துக் கொடுத்து சாப்பிட சொல்ல, கயல் “எனக்கு வேணாம் நீங்க சாப்பிடுங்க” என்று அமைதியாய் கூறியதும்,

ஜீவா, ” இப்போ நீயா சாப்புடுறீயா இல்ல நான் ஊட்டி விடட்டுமா…” என்று கேட்க, அவள் அழுத்தமாய் அமர்ந்திருந்தாள்.

சேரை அவள் அருகில் ஒட்டி போட்டவன், “நான் ஊட்டி விட்டா சாதாரணமா ஊட்டிவிட மாட்டேன்… வேற மாதிரி தான் ஊட்டி விடுவேன்” என்று அவள் இதழை குறும்பாய் பார்த்துக் கொண்டே சொல்ல, அவளுக்கு அவன் பேசியது புரியவில்லை என்றாலும், அவனின் பார்வை வில்லங்கமாய் இருக்க, தன்னிச்சையாய் சாப்பிட ஆரம்பித்தாள்.

ஜீவா, “ம்ம் குட்… இனிமே நீ இங்க உக்காந்து தான் சாப்புடுற. புரியுதா…  நான் சொன்னதை நீ செய்யலைன்னா நானே உன்னை பண்ண வைப்பேன் ஸ்வீட் ஹார்ட்…” என்று கடுமையாய் சொல்ல, கயல் கண் கலங்க சரி என்று தலையாட்டினாள்.

ஜீவாவிற்கு தான், ‘ஏண்டி என்னை இப்படி பேசவைக்கிற. நான் சொல்றதை உடனே கேட்டா நான் ஏன் உன்னை இப்படி திட்ட போறேன்.’ என்று மனதில் பொங்கியவன், அவள் கலங்கிய கண்ணை காண முடியாமல் குனிந்து சாப்பிட ஆரம்பித்தான்.

ஆனால் சாப்பாடு தான் அவனுக்கு இறங்கவே இல்லை. கயலுக்கும் தான்.

“அண்ணியா வந்துவிடு” என்பானே! இன்று தெரிந்தோ தெரியாமலோ அந்த உறவு முறையில் அவன் வீட்டில் இருக்கிறேன். ஆனால் அவன் மட்டும் இல்லையே என்று நினைத்தவளுக்கு, அவன் இறந்திருப்பான் என்று இப்பொழுதும் நம்ப முடியவில்லை. ஏதாவது ஒரு அதிசயம் நடந்து அவன் திரும்பி வந்து விட மாட்டானா என்று இருந்தது.

மெதுவாக ஜீவாவிடம், “அந்த மலைல திரும்ப தேட சொல்றீங்களா?” என்று கேட்க,

ஜீவா புரியாமல் “என்ன தேடணும் கயல்” என்றான்.

“கார்த்தி பாடி… கார்த்தியை தான்.” என்று சொல்ல,

வேதனையுடன், “ஒரு தடவை இல்லை மூணு தடவை தேடியாச்சு. ஆனால் அவன் பாடி கிடைக்கவே இல்லை. இப்போ அந்த சம்பவம் நடந்தே ரெண்டரை மாசம் ஆச்சு. இனிமே தேடி எந்த யூசும் இல்ல” என்றவனுக்கு தொண்டையை அடைத்தது.

அவன் முகத்தில் இருக்கும் வேதனையைப் பார்க்க முடியாமல், கயல் திணற, திடீரென “அவன் சட்டை மட்டும் எப்படி கிடைச்சுச்சு…” என்று கேட்டதும்,

ஜீவா, “அது மட்டும் தான் ஒரு மரத்துல மாட்டி இருந்துச்சு. ஆனால் எவன் இதை பண்ணுனானோ, அவனை அதே மாதிரி மிருகத்துட்ட இறையாக்காம விட மாட்டேன்” என்று கடும் ரௌத்திரத்துடன் சொல்ல, கயலுக்கும் கூட கோபமே வந்தது.

கலங்கிய கண்ணுடன், “அவன் யாருக்கும் எந்த தப்பும் நினைச்சதே இல்ல. அவன் எதிர்பார்த்தது எல்லாம் பாசம் மட்டும் தான். அவனை போய் கொலை பண்ண எப்படி தான் மனசு வந்துச்சோ” என்று தேம்பி கொண்டு அழுக, ஜீவாவிற்கு அவள் அழுகை வெகுவாய் வலித்தது.

மேலும் கயல், “கால் தடுக்கி விழுந்து இறந்தவனும்  இருக்கான். 13 வது மாடில இருந்து விழுந்து பிழைச்சவனும் இருக்கான்னு பழமொழி சொல்லுவாங்க. அந்த மாதிரி, அவனும் உயிரோட இருந்தா நல்லா இருக்கும்ல…” என்று கேட்டவளை பாவமாய் பார்த்தவன், அவளை இழுத்து நெஞ்சோடு சாய்த்துக் கொண்டான்.

அவளும் தன்னை மறந்து அழுக, அவள் தலையை வருடியவன், “அப்படி இருந்தா நல்லா தான் இருக்கும்… ஆனா” என்று நொந்து போனவன்,

சடாரென்று அவளை நிமிர்த்தி, “கயல் அப்படியும் இருக்கலாம்ல…” என்று கேட்க, இப்போது கயல் தான் திருதிருவென விழித்தாள்.

“என்ன சொல்றீங்க?” என்று புரியாமல் கேட்க,

ஜீவா, “இதுவரை அந்த மலைல இருந்து சூசைட் செஞ்சுருந்த எல்லாரோட பாடியும் எடுத்திருக்காங்க. ஆனால் கார்த்தி பாடி மட்டும் கிடைக்கலைன்னா மே பி அவன் எங்கயாவது பத்திரமா இருக்கலாம்ல.” கண்ணில் நம்பிக்கை மின்ன கேட்க,

கயல் தான் , ‘ஐயோ இவரு இவ்ளோ நம்பிக்கையா இருக்காரே. ஒருவேளை அப்படி இல்லைன்னா ரொம்ப உடைஞ்சுடுவாரே. கடவுளே. கார்த்தியை திரும்பி கொண்டு வந்துடு.’ என்று மனதில் கடவுளுக்கு ஒரு அர்ச்சனையை போட்டு விட்டு, “இருக்கலாம்ங்க… ஆனா, கன்ஃபார்ம் – ஆ தெரியாம…” என்று இழுத்தாள்.

ஜீவாவோ, “இல்லை எனக்கு கன்ஃபார்ம் – ஆ தெரியும். அவன் இருக்கான். இருக்கணும். கண்டிப்பா நல்லா தான் இருப்பான்” என்று உறுதியாய் கூறினான்.

ஓங்கி உயர்ந்த மலைகளுக்கு  நடுவே, சிறிது சிறிதாய் குடில்கள் இருக்க, மாலை நேர பனி அந்த இடத்தையே சூழ்ந்திருக்க, கலர் கலரான லுங்கியை அங்கிருந்த ஆண்களும், விதவிதமான நிறத்தில் முட்டி வரை ஏற்றிய தாவணி போன்ற உடையை அங்கிருந்த பெண்களும் அணிந்திருக்க, கழுத்திலும் காதிலும் வித்தியாசமான பாசி மணிகளும் அணிந்து, மூத்த வயது பெண் ஒருத்தி, “ஏலேய்… அங்க என்னா பண்றே. இறங்கி வாலே…” என்று அங்கிருந்த ஒரு சிறிய மலையின் உச்சியை பார்த்து கத்தினாள்.

பின், மற்றொரு பெண்ணிடம், “இந்த சிறுக்கிக்கு அறிவே இல்ல. படிக்க போறாளாம் படிக்க… ஏதோ பக்கத்துக்கு பள்ளி கூடத்துல, பரீட்சை எழுத மட்டும் இவளை விட்டாங்க. இப்போ பெரிய இஸ்கூலுக்கு போய் படிக்கிறேன்னு அடம்பிடிக்குது இந்த கழுதை…” என்று பொரும,

அந்த பெண்மணி, “அட முத்தாயி… அது இஸ்கூலு இல்ல. ஏதோ காலூஸாம்(காலேஜ்) ல.” என்று நாடியில் கை வைக்க,

முத்தாயி கடுப்பாக,” அந்த கழுசடையில போய் தான் படிப்பேன்னு இந்த பூவு ரெண்டு நாளா பாடா படுத்தது…” என்று விட்டு,

“ஏலேய் பூவு இறங்கி வாலே. ஒழுங்கா என் தம்பியை கட்டிக்கிட்டு வூட்டுல கிட. ஊரை தாண்டி போகணும்னு நினைச்ச… காலை உடைச்சு புடுவேன் உடைச்சு” என்று கத்த, இவர்களின், சம்பாஷணைக்கு காரணமானவளோ, மலை உச்சியில் நின்று கொண்டு,

“நான் படிக்க  தான் போறேன். நீங்க ஒத்துக்குற வரைக்கும் இங்க இருந்து இறங்க மாட்டேன்.” என்று கத்தினாள் பூவரசி.

உண்மையில் அங்கிருந்த 100 குடும்பங்களுக்கு அரசி போன்று தான் அவள். அங்கிருக்கும் அனைவர்க்கும் செல்லம். அவளின் அம்மா தான் முத்தாயி. அப்பா, பெரியசாமி.

அந்த பழங்குடி மக்களுக்கு தலைவராய் இருப்பவர். அந்த படிக்காத பாமர மக்களுக்கு மத்தியில், இவளுக்கு தான் படிப்பில் மிகுந்த ஈடுபாடு.

பள்ளியில் இவர்களை அனுமதிக்கவில்லை என்றாலும், வெளியில் நின்று கொண்டே, பாடம் கவனித்து, மனதிலேயே படித்து கொண்டு, ஆர்வமாய் அவளின் பழங்குடி சிறு பிள்ளைகளுக்கு பாடம் கற்பிப்பவள். அவளின் கனவே, அவர்களை பள்ளிக்கூடத்திற்கு கூட அனுமதிக்காத, பள்ளியில் ஆசிரியை ஆகி, அதே மாதிரி ஒரு பள்ளி கட்டி, அதில் தன் இனத்தவரை படிக்க வைக்க வேண்டும் என்பது தான்.

முடிந்த அளவு, இப்பொழுது இருக்கும் சிறுவர் சிறுமியருக்கு பாடம் கற்பித்து, அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தாள்.

இவளின் ஆர்வத்தை பார்த்த, ஒரு ஆசிரியர் தான், இவள் பரீட்சை எழுத எல்லா ஏற்பாடும் செய்து கொடுத்து, 12 ஆம் வகுப்பு தேர்வை எழுத வைத்தது. அதிலும் அவள் மாவட்டத்தில் முதலாய் வந்தாள். ஆனால், மீடியாவுக்கும், பத்திரிகைக்கும் இவர்கள் எல்லாம் கண்ணுக்கு தெரியவே இல்லை.

இப்பொழுது தாய் தந்தையரிடம் கோபித்துக் கொண்டு, மலையேறிக் கொண்டிருந்தாள்.

பின் அவளின் அப்பா பெரியசாமி தான், “தாயி… நமக்கு இதுலாம் ஒத்துவராது தாயி. நீ சொல்லுற இடத்துல சேர்க்கணும்னா அவங்க நிறைய ஏதோ சான்றிதழ் எல்லாம் கேக்குறாங்க. அதுலாம் இல்லைன்னா சேக்க மாட்டானுங்களாம் தாயி…” என்றதும் அவளின் பூ முகம் சுருங்க, அதனை பொறுக்காத பெரியசாமி,

“ஆனாலும்… ஐயா உன்னை கண்டிப்பா சேத்து விடறேன்” என்று சொன்னதும், விழி விரித்து, “மெய்யாலுமா ஐயா… நெசமா என்னை சேர்த்து விடுவீகளா” என்று கேட்க, அவர் “நிசந்தான் தாயி” என்று சிரித்தார்.

 பூவரசி, “அந்த முத்தாயிட்ட சொல்லிப்புடுங்க ஐயா. அது தம்பிய எல்லாம் நான் கட்டிக்கிட மாட்டேன்னு…” என்றதும் பெரியசாமி,

“ஏலேய் தாயி, அவன் தான் உனக்குன்னு சின்ன வயசுலயே பேசுனது தான, அவனும் உனக்காவ தான் கல்யாணம் பண்ணிக்காம கிடக்கான்…” என்று சொல்ல,

பூவரசி, “அதெல்லாம் தெரியாது. நான் கட்டிக்கிட மாட்டேன். எப்ப பார்த்தாலும் குடிச்சுப்புட்டு கிடக்கான். எனக்கு அவனை பிடிக்கலை” என்று பிடிவாதம் பிடிக்க, அவரும் சிறு பிள்ளை விட்டு பிடிக்கலாம் என்று அவள் சொன்னதற்கு எல்லாம் தலையாட்டி ஒரு வழியாய் அவளை மலையில் இருந்து இறக்கி அழைத்து வந்தார்.

அவள் வந்ததும், முத்தாயி, விளக்கமாறை அவள் மேல் தூக்கி எறிந்து, “உன் ஐயனை பார்க்கவும் இறங்கி வரியலோ. காலை உடைச்சு அடுப்புக்கு போட்டுப்புடுவேன்…” என்று சொன்னதும், அங்கிருந்த மற்ற குடும்பங்கள் எல்லாம்,

“முத்து, புள்ளைய வையாத. பாரு அதுவே பசியில இருக்கு நீ வா தாயி உனக்கு பிடிச்ச, கேழ்வரகு செஞ்சு தாரேன்…” என்று கூப்பிட, அவளும், முத்தாயிக்கு அழகு காட்டி விட்டு அவர்களுடன் சென்றாள்.

முத்தாயி தான் அவளை பார்த்து கவலையாக, பெரியசாமியிடம், “இவள் மட்டும் ஏன்தான் இப்படி இருக்காளோ. இவள் வயசு புள்ளை எல்லாம் கல்யாணம் ஆகி, குழந்தை குட்டின்னு இருக்காளுங்க. இவள் தான் படிக்கோணும் படிக்கோணும்னு சொல்லிப்புட்டு திரியிறா…” என்று மூக்கை உறிஞ்ச,

பெரியசாமி, “அட விடு புள்ள… சின்ன புள்ள தான போக போக சரி ஆகிடும்.” என்று அவர் அடுத்த வேலையை பார்க்க சென்று விட்டார்.

பூவரசி, பக்கத்துக்கு வீட்டிற்கு சென்று, அவர்கள் வீட்டில் உணவு உண்டு அங்கிருக்கும் பெண் தோழிகளுடன் உரையாடி விட்டு, அவள் வீட்டிற்கு நடந்து வரும் வழியில், பக்கத்து குடிசையில் ஏதோ சத்தம் கேட்க, “இங்கன இருந்து என்ன சத்தம் வருது” என்று யோசனையுடன் அந்த கூரையை திறந்து பார்த்தவள், கை கால், தலை, கழுத்து என அனைத்து பாகத்திலும் கட்டுடன் ஒருவன் படுக்கையில் இருந்து எழுந்து கொண்டிருந்ததை கண்டாள்.

ஓடி சென்று, “ஏலேய்… எதுக்குலே இப்படி எந்திரிக்குறாப்புடி.” என்று கேட்க, அவன் தான் பேந்த பேந்த முழித்தான். அந்த இடத்தை சுற்றி முற்றி பார்த்தவன், பேச வாய் எடுக்க ஆனால் பேச முடியாமல் தொண்டை வலியில் முகம் சுருக்கினான்.

“நீ படுவோய்… நான் ஐயனை கூட்டியாரேன்” என்று விறுவிறுவென அவள் வீட்டிற்கு ஓடியவள் “ஐயா,  ஒருத்தனை மலைல அடிபட்டு தூக்கியாந்தீங்கள்ல அவன் கண்ணு முழிச்சுட்டான்” என்று சொல்ல, பெரியசாமி, உடனே அங்கு விரைந்தார்.

“சாமி, இப்போ எப்டியா இருக்கு” என்று கேட்க, அவனுக்கு தான் ஒன்றும் புரியவில்லை.

நாம் எப்படி இங்கே என்று முழித்தவன், ம்ம் என்று தலையாட்ட, “ரெண்டு மாசத்துக்கு முன்னாடி நீயு மலைல விழுந்து கிடந்தயா… எங்க ஆளுங்க பார்த்துட்டு உன்னை தூக்கியாந்தாங்க. நல்லவேளை எங்க கண்ணுல பட்டையா இல்லைன்னா.. நாய் நரிலாம் உன்னை குதறிருக்கும்… ரெண்டரை மாசமா நீ கண்ணு முழிக்கவே இல்ல.” என்று விட்டு, மேலும் ஏதோ இலைகளை அரைத்து, அவன் கை கட்டை அவிழ்த்து போட்டு விட, 

‘என்ன ரெண்டரை மாசமா நான் இங்க தான் இருக்கேனா’  என்று அதிர்ந்தான், வாசுவின் ஆருயிர் தம்பி கார்த்திகேயன்.

பின் தன்னை தெய்வமாய் காப்பாற்றிய பெரியசாமிக்கு சைகையிலேயே நன்றி சொல்ல, அவரும் “இன்னும் காயம்லாம் சரியாகலை சாமி. நீ உசுரு பொழைச்சதே நீ செஞ்ச புண்ணியம்” என்று விட்டு வெளியில் சென்றார்.

ஜீவாவிற்கு கார்த்தி உயிருடன் தான் இருப்பான் என்று உள்ளுணர்வு உணர்த்த, அவனை மீண்டும் தேடும் பணியில் இறங்கினான்.

இரண்டு நாட்களாய் ராத்திரி பகலாய் தேடியும், அவனுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. அன்று இரவு சோர்ந்து போய் வீட்டிற்கு வந்தவனை பார்த்த கயல், “ஏதாவது தகவல் கிடைச்சுச்சா?” என்று கேட்க, அவன் முகம் வாட இல்லை என்று தலையாட்டினான்.

ஏனோ அவனின் தலையை ஆதரவாய் கோதி சமாதானப்படுத்த வேண்டும் என்று எழுந்த ஆவலை அடக்கி கொண்டு, “சாப்பாடு எடுத்து வைக்கிறேன்… சாப்பிட வாங்க” என்று விட்டு, சாப்பாடை எடுத்து வைக்க, அவன் அப்பொழுது தான் கவனித்தான், ஜீவா என தன் பெயரை சொல்வதை தவிர்ப்பதை.

அன்று நான் தானே பெயரை சொல்லக்கூடாது என்று கூறினோம் என்று நினைத்தவன், அவள் மறுபடியும் தன் பெயரை சொல்ல மாட்டாளா என்று மருகினான்.

உண்மையிலேயே அவள் மெல்லிய குரலில் இவனை ஜீவா என்று அழைப்பது அவனுக்கு பரம சுகம் தரும். தொழிலிலும், வீட்டிலும் அவனை வாசு என்றே அனைவரும் அழைக்க, இவள் மட்டும் ஜீவா என அழைப்பது, அவள் மேல் இருக்கும் அவ்வளவு கோபத்திலும் தேனாய் இனிக்கும்.

 இப்பொழுது மறுபடியும் என் பெயரை சொல்லேன் என்று சொல்ல அவனுக்கு ஏதோ தடுக்க, அமைதியாய் உண்டவன், “நீயும் சாப்பிடு” என்று அருகில் அமரவைத்தான்.

அவளும் இவனிடம் வாதம் செய்ய முடியாது என்று நினைத்து அமர்ந்து சாப்பிட, ஜீவா அவளையே பார்த்து கொண்டிருந்தான். அவன் பார்ப்பதை உணர்ந்தாலும் நிமிராமல், தட்டையே பார்த்து அவள் சாப்பிட, ஜீவா “கயல்” என்று மென்மையாய் அழைத்தான்.

கயல் என்னவென்று பார்க்க, ஜீவா, “நான் ஏதோ தப்பா நினைச்சு… உன்னை பழிவாங்குறேன்னு நினச்சு அப்படிலாம் பேசிட்டேன். சாரி கயல்… என் பேர்” என்று சொல்லுகையில்

கயல், “இல்ல நீங்க சரியா தான் சொல்லிருக்கீங்க…” என்றவளை புரியாமல் பார்த்தான்.

“உங்க பேரை சொல்ல கூட எனக்கு தகுதி இல்லை தான். உங்க ஸ்டேட்டஸ்க்கும் எனக்கும் சுத்தமா செட் ஆகாது. உங்களுக்கு நான் பொருத்தமான பொண்ணும் கிடையாது. ஏதோ வயசுக்கோளாறுல நீங்க லவ் அது இதுன்னு சொல்லவும்…

சொல்லப்போனா… உங்களை பார்த்தாலே எனக்கு பயமா தான் இருக்கும். அதுனால தான் நான் கல்யாணத்துக்கு கூட ஒத்துக்கிட்டேன்னு நினைக்கிறன். சீக்கிரம் நான் இங்க இருந்து போய்டுறேன்.”  என்று சொல்லி எழுந்து சென்று விட, ஜீவா தான் அசையக் கூட தோன்றாமல், சிலையாகி விட்டான்.

கார்த்தி அந்த கயிற்று கட்டிலில் சாய்ந்து, கண்ணை மூடி அமர்ந்திருக்க, அவனால், காலிலும் கழுத்திலும் அடி பட்டதால் நடக்கவும், பேசவும் முடியவில்லை.

காயம் ஆற ஆற தான் சரியாகும் என்று அங்குள்ளவர்கள் சொல்லிவிட, அவனுக்குத் தான், அங்கிருப்பவர்களுக்கு வாசு அண்ணாவின் முகவரியை எப்படி கொடுத்து வரவழைப்பது ஒரு போன் கூட இல்லையே இவர்களிடம்  என்று நொந்தான்.

தன்னை காணாமல் தவித்து போயிருப்பாரே என்று வேதனையாய் நினைத்தவனின் எண்ணத்தை கலைக்க, “ஏலேய்” என்று சத்தத்துடன் அவன் அருகில் நின்று பூவரசி கத்தினாள்.

அதில் திடுக்கிட்டு எழுந்தவன் அவளை என்னவென்று பார்க்க, “என்னாலே கண்ணை திறந்துகிட்டு கனா கானுறீயளா… எத்தனை தடவ கூப்பிடறது…?” என்று முறைத்தவள், அவன் முறைப்பை எல்லாம் கணக்கில் எடுக்காமல், கையில் கொண்டு வந்த கம்பங்களியை அவனுக்கு கொடுத்து சாப்பிட சொன்னாள்.

எப்பொழுதும்  பெரிய சாமி வந்து தான் அவனுக்கு சாப்பிட கொடுத்து, அவனுக்கு என்ன தேவையோ அதனை செய்து விட்டு போவார்.

இன்று அவர் வராமல் இருக்கவும் அவளை புரியாமல் பார்த்தவனிடம், “ஐயா ஒரு சோலியா போயிருக்காக. அம்மையும் பூசைக்கு போயிருக்காக. நீ சாப்புடு.” என்று கொடுக்க, அவனுக்கு கையில் அடிபட்டிருப்பதில் அவன் கையை பார்த்தான்.

அதில் பூவரசி, “ஓ அடிபட்டுருக்குள்ள”  என்று விட்டு, அவனுக்கு ஊட்டி விட அவன் வாங்காமல் இருக்கவும், “என்ன” என்று மிரட்டி, “சீக்கிரம் சாபுட்ரீயலா எனக்கு சோலி இருக்கு…” என்று கடுப்பாக, அதில் அவனும் வேறு வழியில்லாமல் வாங்கி கொண்டான்.

பின், ஏதோ மூலிகை இலைகளை அரைத்து, எடுத்து வந்தவள், அவன் தலை கட்டை அவிழ்த்து அதற்கு மருந்து போட போக, அவன் சைகையில் “என்ன பண்ற” என்று கேட்க,

“ஐயா மருந்து போட சொன்னாக. இன்னைக்கு கட்டு மாத்தணும்.” என்று விட்டு, அவள் பாட்டிற்கு அவனை உரசி கொண்டு மருந்து போட்டு விட்டு, காலில் அவன் போட்டிருந்த உடையை முட்டிக்கு மேல் ஏற்ற அவன் தான் பதறி, அவளை தடுத்து, வேணாம் என்று தலையாட்டினான்.

பூவரசி, “ப்ச் இந்த மருந்தை போடணும். இல்லைனா ஐயா வந்து திட்டுவாக..” என்று விட்டு, அவள் வேலையை தொடர, அவனுக்கு தான் ‘ஐயோ என்ன பெண் இவள். கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் இப்படி செய்கிறாளே’ என்று இருந்தது..

அது போக அவள் பேசும் பாஷையும், அவள் உடையும் வித்தியாசமாய் இருக்க அவளையே பார்வையால் அளந்து கொண்டிருந்தான்.

கயல் பேசி விட்டு போன பிறகு, எவ்வளவு நேரம் அதே இடத்தில அமர்ந்திருந்தானோ தெரியாது. பல நிமிடம் கழித்தே சுய நினைவிற்கு வந்தவனுக்கு தன் மேலேயே கடுங்கோபம் வந்தது.

மேலும், அவள் இங்கிருந்து சென்று விடுவேன் என்று சொன்னது இன்னும் அவள் மேல் கோபம் ஏற்படுத்தியது.

இவளிடம் என்ன சொல்லி சமாதானம் செய்வது என்றும் அவனுக்கு புரியவில்லை. அவள் மனதையும் அவன் புரிந்து கொள்ளவில்லை. அவளுக்கு, அவன் காதலே பொய் என்றும், அவன் தன்னை காதலிக்கவே இல்லை என்றும் தான் மனதில் வெந்து கொண்டிருந்தாள்.

ஜீவா, அவளை காதலித்தது உண்மைதான் என்று உணர்த்தி இருந்தால், அவளும், சற்று சமாதானம் ஆகி இருப்பாள்.

ஆனால் அவன் அதனை செய்யாமல், நேராய் அவள் இருக்கும் அறைக்கு சென்றான். அவனை கண்டதும் திருதிருவென முழித்தவளிடம்.. கோபமாக, “நீ இங்க இருக்கிறதா வேண்டாமான்னு முடிவெடுக்க வேண்டியது நான் தான்…” என்றவன்,

அவள் அணிந்திருந்த தாலி கயிறை பிடித்து வெளியில் இழுத்து, “இந்த தாலி கயிறை நான் எந்த நிலமைல வேணும்னாலும் கட்டி இருக்கலாம். ஆனால் இப்போ நீ என் வைஃப். என்னை மீறி நீ இங்க இருந்து போகணும்னு நினைச்ச…” என்று பல்லைக்கடித்து கொண்டு, மிரட்ட, அதில் அரண்டவள், அவனையே பேய் முழியுடன் பார்த்தாள்.

 ஜீவா, அவள் விழியை கண்டு சுவாரஸ்யமாகி, ‘இந்த பயந்த முழியை வச்சே என்னை கவுத்திடுறாள்…’ என்று புலம்பி கொண்டவன்,

“நான் சொன்னது புருஞ்சுதுல.” என்றான் கடுமையாக. அவள் அசையாமல் வெறிக்கவும்,
சாவகாசமாக கட்டிலில் படுத்தான்.

அதனை பார்த்து மேலும் திகைத்தவள், அவனை பயத்துடன்  பார்க்க, ஜீவா, “சரி வா தூங்கலாம்” என்று அழைத்ததும் மேலும், நடுங்க ஆரம்பித்து விட்டாள்.

கயல் கண் கலங்க, “நீங்க நீங்க பக்கத்துக்கு ரூம்க்கு…” என்று சொல்லவர,

அவன், “நான் எதுக்கு பக்கத்துக்கு ரூம்ல போய் தூங்கணும். நீ என் பொண்டாட்டி தான. உன் கூட ஒரே ரூம்ல தூங்குறதுல என்ன தப்பு. ஹ்ம்ம்?” என்று புருவத்தை உயர்த்தி கேட்டு விட்டு, கொட்டாவி விட்டு கொண்டு,

“தூக்கம் வருது ஸ்வீட் ஹார்ட். லைட் ஆஃப் பண்ணிட்டு வா…” என்று கையை காலை நீட்டி படுக்க, கயலுக்கு அவன் பொண்டாட்டி என்று சொன்ன வார்த்தை இனித்தாலும், அவன் மேல் இருக்கும் கோபமும், பொய்யான நேசத்தில் ஆரம்பித்த இந்த உறவு தனக்கு வேண்டாம் என்ற நினைவிலும் உதட்டைக் கடித்து கொண்டு நின்றிருந்தாள்.

ஜீவா, “ப்ச்” என்று எழுந்து கயலை தூக்கிக் கொண்டு, கட்டிலில் போட.. அதில் அதிர்ந்தவள், கண்ணை இறுக்க மூடி  மறுபுறம் திரும்பி படுத்திருக்க,

அவளையே பார்த்தவன், ‘என்மேல அவ்ளோ நம்பிக்கை உனக்கு’ என்று மனதில் சலித்து கொண்டு, விளக்கை  அணைத்து விட்டு, அவளுக்கு மறுபக்கம் முதுகு காட்டி படுத்து கொண்டான்.

வெகுநேரம் கழித்து மெதுவாய் கண்ணை திறந்து பார்த்த கயல், அவன் மறுபுறம், ஒரு ஓரமாய் படுத்திருப்பதை பார்த்து, நிம்மதி பெருமூச்சை விட்டு கொண்டாள்.

அவன் முதுகையே வெகு நேரம் வெறித்திருந்தவள், எப்பொழுது தூங்கினாளோ தெரியாது. அன்றும் அவளுக்கு கனவில் ஜீவா முத்தம் கொடுப்பது போல் இருக்க, இவனுக்கு வேற வேலையே இல்லை. தூங்குனாலும், என்னை கனவுல வந்து இம்சை பண்ணுறான். என்று திட்டிக்கொண்டாள்.

இருந்தும், கண் விழித்தால் அந்த நிலை கலைந்து விடுமே என்று கண்ணை இறுக மூடி கனவில் அவனிடம் முத்த சண்டை நடத்தி கொண்டிருந்தாள்.

அவளுக்குத் தெரியவில்லை. நிஜத்திலேயே தினமும், ஜீவா அவள் இதழ்களை பருகிக்கொண்டிருப்பதை கனவென்று நினைத்து கொண்டிருக்கிறாள் என்று.

அன்றும், அவளுக்கு கொடுக்க வேண்டிய முத்தத்தை கொடுத்து விட்டு, “ஐ லவ் யு ஸ்வீட் ஹார்ட்” என்று ஜீவா காதல் போதை வழிய கூற, அவளும் உறக்கத்திலேயே, “லவ் யு ஜீவா” என்றதில் குதூகலமானவன், அவளை தன் நெஞ்சில் சாய்த்து இறுக்கி அணைத்தபடி உறங்கி விட்டான்.

நேசம் தொடரும்..
-மேகா

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
30
+1
106
+1
3
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்