பெண்ணவள் கொடுத்த முத்தத்தில் நெளிந்து கொண்டிருந்த தஷ்வந்த், அவளை தள்ளி நிறுத்த முயல, அவளோ நகன்ற பாடில்லை.
“தள்ளி நில்லு பத்ரா.”
“தள்ளி நிக்கவா உன்னை இங்க கடத்திட்டு வந்தேன் அமுல் பேபி.” என்றாள் குறும்பு நகையுடன்.
“ப்ச். சொன்னா கேளு பத்ரா. ப்ளீஸ்.” என வம்படியாக அவளிடம் இருந்து நகர்ந்து வந்தவன்,
“உன் மனசுல நீ என்ன தான் நினைச்சுட்டு இருக்க…” என்றான் முறைப்புடன்.
“முறைக்கிறயா? சொல்லிட்டு பண்ணுடா. அது கூட எனக்கு ரொமான்டிக் லுக் விடுற மாதிரி தான் இருக்கு.” என வாரிட,
அதில் கேசத்தை கோதிக் கொண்டவன், “எனக்கு எதுக்கு இந்த வீடு, ட்ரைவர் எல்லாம். இதெல்லாம் உன் அப்பாவுக்கு தெரிஞ்சா உன்னை ஒன்னும் பண்ண மாட்டாரு. என்னை போட்டு தள்ளிட்டு போய்டுவாரு.” என்றான் சற்றே பயத்துடன்.
பக்கென சிரித்து, பின், “ஓ இதான் உன் பயமா? என் நானா என்னை மீறி உன் சுண்டு விரலை கூட தொட முடியாது”. என்றவளின் விழிகள் காட்டிய அழுத்தம் அவனை திகைக்க வைத்தது.
“பீ கூல் அமுலு. ரொம்ப யோசிக்காம ரெஸ்ட் எடு. குட் நைட்.” என நகர போன மஹாபத்ரா, அவன் எதிர்பாராத கணம் அவனது சட்டை காலரை பற்றி அவளிதழ் அருகில் இழுக்க அவனும் தடுமாறினான்.
“இங்க பாரு… நான் சொல்றதை மீறி ஏதாவது செஞ்சன்னு தெரிஞ்சுது…” என்ற மிரட்டலை விடுத்தவள், அங்கும் இங்கும் உருண்ட அவனது காந்த விழிகளை விழுங்கியபடி,
“உன்னை ஒண்ணும் பண்ண மாட்டேன் அமுலு… ஆனா பக்கத்து ரூம்ல இருக்கானே உன் ஃபிரண்டு ஹாஃப் பாயிலு அவனை அந்த ரூமோட வச்சு புதைச்சுடுவேன்” என்றாள் ஹஸ்கி குரலில்.
அவனோ விழிகளை மேலும் அகல விரிக்க, “ப்ச்” என சலித்தவள், “இந்த கண்ணு என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது அமுல் பேபி. அப்படி என்ன தான் வச்சுருக்குற இந்த ஹாட் ஐஸ் குள்ள…” என்று ரசனை மிகுந்த குரலில் கேட்டாள்.
அவனுக்கோ எதற்கும் பதில் பேச தான் இயலவில்லை. சில நொடிகள் ஃப்ரீஸ் மோடில் இருந்தவன், சற்றே நிகழ்விற்கு வந்து பின்னால் நகர்ந்து கொண்டு, “உனக்கு வெட்கமே இருக்காதா?” என்றான் பாவமாக.
அவள் அருகாமையில் கோபம் கூட வந்து தொலையாத நிலையை கண்டு எரிச்சல் வந்தாலும், அதையும் அல்லவோ அவனால் அவளிடம் காட்ட இயலவில்லை.
“இருக்கே. நிறையவே இருக்கு. ஆனா, நீ வெட்கப்படுற மாதிரி எதுவுமே பண்ண மாட்டேங்குறியேடா. சரி உன்னையவாவது வெட்கப்பட வைக்கலாம்ன்னு பார்த்தா, நீ ஏதோ பேயடிச்ச மாதிரியே பாக்குற. உன்ன வச்சுக்கிட்டு லிவ் இன் பிளான் பண்ணுனேன்ல என்னை சொல்லணும்…” என்று தலையில் அடித்துக் கொண்டாள்.
அவள் செய்கையில் சிரிப்பு வந்தாலும், “நீ என்ன செஞ்சாலும், என்கிட்ட இருந்து எந்த ரியாக்ஷனும் வராது பத்ரா. ஏன் தேவை இல்லாம, என் லைஃப்ல விளையாடுறதும் இல்லாம உன் லைஃப்பையும் க்ரிக்டிகல் ஆக்கிக்குற. இப்ப கூட ஒன்னும் குறைஞ்சு போகல. நான் ஹாஸ்டல் போயிடுறேன். என்னை விட்டுடு. அதான் நம்ம ரெண்டு பேருக்கும் நல்லது. எத்தனை நாளைக்கு என்னால நீ பண்றத அக்செப்ட் பண்ணிக்க முடியும்ன்னு நினைக்கிற.” என எடுத்துரைத்தான் பொறுமையாக.
“எத்தனை நாளைக்கு என்கிட்ட இருந்து நீ தப்பிக்க முடியும்ன்னு நினைக்கிற தஷ்வா?” அவனை ரசித்தபடி அவள் கேட்க,
“நான் மாறமாட்டேன் பத்ரா. எனக்கு என் படிப்பை தவிர வேற எதுவும் முக்கியம் இல்ல. இப்ப கூட, இதுனால என் படிப்பு கெட்டுட கூடாதுன்னு தான், இங்க வந்தேன். உனக்கு நான் சுத்தமா செட் ஆக மாட்டேன் சீனியர். நம்ம நல்ல ஃப்ரெண்ட்ஸா இருக்கலாம். பட், இப்படி, இதெல்லாம் வேணாம்…” என இறுதி வாக்கியத்தை தயக்கத்துடன் முடித்தான்.
அவளோ ரசனைப் பார்வையை சிறிதும் மாற்றவில்லை.
“சரி… இப்ப கூட உனக்கு சாய்ஸ் தரேன். என்னை ஓங்கி ஒரு அறை அறைஞ்சுட்டு, தாராளமா இங்க இருந்து கிளம்பி போ!” என தோள்களை குலுக்கியவளை, ஆயாசமாக பார்த்தான் தஷ்வந்த்.
“என்னை பத்தி நல்லா தெரிஞ்சு வச்சுக்கிட்டு லாக் பண்ற நீ. ஒருவேளை அடிச்சுட்டேன்னா அப்பறம் என்னை தப்பு சொல்ல கூடாது.” என அவன் எச்சரிக்கையுடன் கூற,
மறுப்பாக தலையசைத்தவள், “நோ அமுலு. உன்னை ஒண்ணுமே சொல்ல மாட்டேன்.” என தீர்மானமாகக் கூறி, அவன் மீதான ஆழ்ந்த பார்வையை இன்னும் அதிகரித்தாள்.
‘இவள் ஏன் இப்படி பார்த்து வைக்கிறா’ என்று தான் இருந்தது அவனுக்கு. அப்பார்வையில் அவனது மனமும் சண்டித்தனம் செய்ய, “எனக்கு தூக்கம் வருது. கிளம்புறியா.” என்றான் அவளை பாராமல்.
சட்டென சிரித்தவள், அவனை அமைதியாக ஏறிட்டு, “சரி. நம்ம ப்ரெண்ட்ஸாவே இருக்கலாம்.” என்றவளைக் கண்டு விழி விரித்தவன், “நிஜமாவா? அப்போ நான் கிளம்பவா” என ஆர்வமாக கேட்டான்.
அவளோ புன்னகையை அடக்கிக்கொண்டு, “ஐ மீன், பாய் ப்ரெண்டா கேர்ள் பிரெண்டா இருக்கலாம்ன்னு சொன்னேன்.” என நாக்கை துருத்த, அவனுக்கு சப்பென ஆகியது.
“அட்லீஸ்ட் இந்த கூத்தெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கு தாங்கும். அதையாவது சொல்லு பத்ரா. பல்லை கடிச்சுட்டாவது இருந்துட்டு போறேன்…” என அவன் இம்முறை எரிச்சலை மறைக்காமல் காட்ட,
“ம்ம்… ஓகே உன்னை பார்த்தாலும் பாவமா தான் இருக்கு. சோ, என் படிப்பு முடியிற வரை மட்டும்…” என மட்டுமை’ அழுத்தி உரைக்க,
அவனோ அதிர்ந்து, “என்னது உன் படிப்பு முடியிற வரையா… விளையாடுறியா… அதுக்கு இன்னும் கிட்டத்தட்ட மூணு வருஷம் இருக்கு” என்றான்.
“அதுக்கு நான் என்ன பண்ண முடியும் அமுலு. ஒரு வருஷத்தை ஸ்கிப் பண்ணிட்டா படிக்க முடியும்…” என கேலி நகை புரிந்தவள், “நான் தான் சொல்லிட்டேன்ல ரொம்ப யோசிக்காத. உன் கூட லவ் மேக் பண்ணலாம் எனக்கு இப்போதைக்கு ஐடியா இல்ல. சோ ஜஸ்ட் கோ வித் த ஃப்ளோ” என அவளுக்கு சம்பந்தமே இல்லாத மென் குரலில் கூறி விட்டு, அங்கிருந்து கிளம்பினாள்.
தஷ்வந்திற்கு தான், மழை அடித்து ஓய்ந்தது போலிருந்தது. ‘என்ன இவள் தன்னை இப்படி ஆட்டிவைக்கிறாள்’ என நொந்தவனுக்கோ, அங்கிருக்கவே ஒப்பவில்லை.
உயர் தர மெத்தையையும் அறையையும் ஒரு முறை வெறித்தவன், போர்வையை தரையில் விரித்து, படுத்துக் கொண்டான். படுத்தும் கூட உறக்கம் வரவில்லை. இப்படி வந்து சிக்கிருக்கியே என அவனது மனமே அவனை எகத்தாளம் புரிந்ததில், வெகுநேரம் கழித்தே துயிலுக்குள் புகுந்தான்.
நெஞ்சுக்குள் பெய்திடும் மா ரெய்னு…
வாட்டர்க்குள் மூழ்கிடும் லோட்டசு…
சட்டுன்னு சேஞ்ச் ஆச்சு லைஃப் ஸ்டைலு…
அக்கா நீ பெண் காடு…
என நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை பாடலை தன் விருப்பத்திற்கு பாடியபடி, பாத் டப்பினுள் நீராடிக் கொண்டிருந்தான் மாதவ்.
அவனைப் பணயக்கைதியாக அழைத்து வந்ததைக் கூட உணராமல், சாவகாசமாக குளித்துக் கொண்டிருந்தவனோ,
“அட அட… இந்நேரம் ஹாஸ்டல்ல இருந்திருந்தா ஒரு கப் தண்ணியை மேல ஊத்துறதுக்குள்ள நாலு பேர் கதவை தட்டி இருப்பானுங்க. இப்படி ரசிச்சு குளிச்சு எவ்ளோ நாள் ஆகுது.” எனக் கண்ணை மூடி அந்நிலையை அனுபவிக்கும் போதே, கதவு தட்டும் சப்தம் கேட்டது.
அதில் விழித்தவன், “சே… ஹாஸ்டல் பாத்ரூம்ல குளிச்சு குளிச்சு, எங்க குளிச்சாலும் யாரோ கதவை தட்டுற பிரம்மை ஏற்படுது. முதல்ல நம்ம காத செக் பண்ணனும்” என்று தன்னை தானே கடிந்து விட்டு, மீண்டும் கண்ணை மூட, அதே கதவு தட்டும் சத்தம்.
“அடப்பாவிங்களா… ஒரு மனுஷனை குளிக்க விட மாட்டீங்களா” என கடுப்பானவன்,
“வரேன்…” என கத்தி விட்டு, இரண்டு நிமிடத்தில் உடையையும் மாற்றி விட்டு, வெளியில் வந்து பார்க்க அங்கு யாருமே இல்லை.
தஷு தான் கதவை தட்டி இருப்பானோ, என்ற சந்தேகத்துடன் அவன் அறைக்கு செல்ல போக, அப்போது தான், வீட்டு வாசலில் யாரோ கதவை தட்டுவதை உணர்ந்து, காலங்காத்தாலயே வந்து என் நண்பனை டார்ச்சர் பண்ண போறாளோ என்றெண்ணி கதவை திறந்தான்.
அங்கு, பாவாடை சட்டையில், ரெட்டை ஜடையுடன் பதினாறு வயதிற்குட்பட்ட சிறு பெண் ஒருவள் நிற்பதை கண்டு, “யாரு பாப்பா நீ. வீடு மாத்தி கதவு தட்டிட்டியா…? இங்க எல்லா வீடும் ஒரே மாதிரி இருக்கு பாப்பா. எங்கயும் தொலைஞ்சு போயிடாம, கரெக்ட் ஆ போ.” என அவன் போக்கிற்கு பேச,
அவளோ, “யோவ் தள்ளுயா. பாப்பாவாம்ல பாப்பா. இதுல நாங்க தொலைஞ்சுடுவோமாம். இவரு பெரிய கூகுள் மேப்பு வழி சொல்லுறாரு.” என கரித்துக் கொட்டியவளை அவன் தான் விழிகள் தெறிக்க பார்த்தான்.
“பார்த்தா பச்சை மண்ணா இருக்கு. பேச்சை பார்த்தா அறுபது வயசு கிழவி மாதிரி இருக்கு.’ என்று தலையை சொறிந்தவன், “பாப்பா” என கூற வந்து விட்டு, அதை தவிர்த்து, “பாட்டி… நீங்க எதுக்கு உள்ள வந்தீங்க.” என்றான் பவ்யமாக.
அவளோ கடுப்பாகி விட்டாள்.
“எது பாட்டியா? நானா? என்னை பார்த்தா உனக்கு பாட்டி மாதிரியா இருக்கு.” என்று மேலும் கீழும் மூச்சு வாங்க, அவனுக்கோ இப்ப பேசுவோமா வேணாமா என்றாகி விட்டது.
அந்நேரம் தான், மஹாபத்ரா மதனுடன் பேசியபடி உள்ளே வந்தவள், “ஏய் ரோஜா நீ இங்க என்ன செய்ற?” என்றாள் புரியாமல்.
“மதன் அண்ணா தான்கா சமைக்க ஆள் வேணும்ன்னு அம்மாட்ட கேட்டுட்டு இருந்தாங்க.” என்றதில் மஹா மதனை முறைக்க,
“ஐயோ மஹா… நான் அவளை கூட்டிட்டு வரல. நீ கேக்குற சவுத் இந்தியன் டைப் சமையல் செய்ய ஆள் உடனே சிக்கல. அதான், நம்ம வீட்ல வேலை செஞ்சுட்டு இருந்த ராணியக்காவையே வர சொல்லலாம்ன்னு அவங்ககிட்ட கேட்டேன். அவங்களுக்கு உடம்பு சரி இல்ல. சரி ஆகி வர பத்து நாள் ஆகும், அதுக்கு அப்பறம் வரேன்னு சொல்லிட்டு இருக்கைலயே இந்த குட்டி சாத்தான் கார்ல ஏறி உட்காந்துருச்சு மஹா.” என்றான்.
அதில் அவள் ரோஜாவை முறைக்க, அவளோ அசடு வழிந்து, “நான் நல்லா சமைக்கிறேன்னு அன்னைக்கு நீ தானக்கா சொன்ன. அதான் என் கை வண்ணத்தை பத்து நாள் காட்டிட்டு போகலாம்ன்னு வந்தேன்.” என்றவளை நங்கென கொட்டினாள் மஹாபத்ரா.
“படிப்புல உன் கை வண்ணத்தை காட்ட சொன்னா, இங்க வந்து காட்டுறியா? என்கிட்ட அடி வாங்கிட்டு போய்டுவ ரோஜா மொதல்ல கிளம்பு” என்றாள் கண்டிப்பாக.
“ஐயோ அக்கா, எனக்கு பத்து நாள் எக்ஸாம் லீவ் தான்க்கா. வீட்ல சும்மா தான இருக்க போறேன். அதான் வந்தேன்.” என பாவமாக முகத்தை வைத்துக் கொண்டவள், “பத்து நாள் தானக்கா. தஷு அண்ணனுக்கு பிடிச்ச மாதிரி நான் சமைக்கிறேன்.” என அவளை குறும்புடன் பார்த்தாள்.
மஹாவோ இதெப்படி இவளுக்கு தெரியும் என்ற ரீதியில் மதனைப் பார்க்க, அவன் விழித்தான்.
வரும் வழியில் ரோஜா தான், அவனை தோண்டி துருவியதில், “மஹாவோட ப்ரெண்ட்க்காக தான் சமைக்க ஆள் கேக்குறாள்” என்றவனை, நம்பாமல் பார்த்து, மேலும் துருவிட, அவனால் வெளிப்படையாக சொல்ல முடியாததில், காதலென கூறி இருந்தான்.
“மஹாக்கா லவ் எல்லாம் பண்றாங்களா” என விழி விரித்தவள், தஷ்வந்த் பற்றியும் தெரிந்து கொண்டாள்.
“உனக்கு அறிவே இல்லையா?” மஹாபத்ரா மதனை அதட்ட,
அவனோ, “காலேஜ்க்கு கிளம்புற டைம் ஆச்சு மஹா. நான் போய் கார துடைக்கிறேன்” என்று ஓடியே விட்டான்.
அவனை பார்த்து சிரித்த ரோஜாவை காட்டமாக பார்க்க, “நான் போய் சமைக்கிறேன்க்கா.” என அவளும் சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.
“இவளை…” என பல்லை கடித்தவள் அச்சிறு பெண்ணை அதட்ட இயலாமல், “டேய் ஹால்ஃப் பாயிலு” என நடப்பதை ஆ வென பார்த்திருந்த மாதவை விளித்தாள்.
அவனோ, ஏதே ஹால்ப் பாயிலா? என்று தலையை சொறிய, “ஆமா அரை வேக்காடு. போய் அவளுக்கு ஹெல்ப் பண்ணு.” என்று உத்தரவிட்டதில், “நானா?” என எகிறினான்.
பின் கண்ணை சுருக்கி மஹா பார்த்த பார்வையில், “நான் போய் வெங்காயம் கட் பண்ணி தரேன்க்கா” என அசட்டு சிரிப்பை உதித்து விட்டு,
அடிப்பாவி… கடைசில என்னை சமையக்காரனாக்கிட்டியே… என நொந்த படி, உள்ளே சென்றவனுக்கோ ரோஜா ஏவிய வேலையில் மயக்கமே வந்தது.
“இவ்ளோ கலவரம் நடக்குது… இந்த அமுல் பேபி என்ன பண்றான்…” என எண்ணியபடி, அவன் அறைக்குள் புகுந்தவள், தலையில் அடித்துக் கொண்டாள்.
அனைத்து ஜன்னல்களும் அடைத்திருக்க, மின்விசிறி மட்டும் வேலை செய்ததில் அறையே சூடாக இருந்தது. அதிலும் தரையில் போர்வையை விரித்து படுத்திருந்தவனை கண்டவள், “ஆனாலும் உனக்கு இவ்ளோ பிடிவாதம் ஆகாது அமுலு” என செல்லமாக அதட்டிக் கொண்டாள்.
ஏசியை ஆன் செய்தவள், அவனருகில் வந்து அவன் தலைக்கு கொடுத்திருந்த கையை உருவி, அவள் தலை வைத்து படுத்துக் கொண்டாள்.
அவனது மற்றொரு கரத்தை எடுத்து, அவள் இடையை சுற்றிப் போட்டுக் கொண்டவள், “பெர்ஃபக்ட்…” என மெலிதாய் இதழ் விரிக்க, அவனோ எதையும் உணராமல் நித்திரையில் இருந்தான்.
“பெருசா படிப்பு முக்கியம்ன்னு சொல்லிட்டு, காலேஜ்க்கு டைம் ஆகுறது கூட தெரியாம, தூங்குறதை பாரு…” என அவன் மூக்கை பிடித்து ஆட்டியவள், அவனது மூச்சுக் காற்று தீண்டியதில், கண்ணை மூடி அதனை உள்ளிழுத்துக் கொண்டாள்.
ஏசியின் குளிர் அப்போது தான் லேசாக உறைக்க, எரிந்த விழிகளை கடினப்பட்டு திறந்தான் தஷ்வந்த்.
தனக்கு மிக அருகில் மஹாபத்ரா படுத்திருப்பதை கண்டு துணுக்குற்றவன், “பத்ரா” எனக் கத்தினான்.
அவன் கத்தியதில் படக்கென கண்ணை திறந்தவள், “என்னடா ஆச்சு?” எனக் கேட்க,
“நீ ஏன் இங்க வந்த? முதல்ல எந்திரி” என்றான் பதற்றமாக.
அவன் விழித்ததும், அவன் கை மீது வைத்திருந்த தலையை தூக்கிக் கொண்டவள், எழ தான் முயற்சி செய்து கொண்டிருக்கிறாள். ஆனால், முடியவில்லை.
அவனோ விடாமல், “எந்திரி பத்ரா. ப்ளீஸ்…” எனக் கடுப்பை அடக்கியபடி கூற,
“நீ என் இடுப்புல இருந்து கையை எடுத்தா தான் நான் எந்திரிக்க முடியும் அமுல் பேபி…” என்று சிரிப்புடன் கூறியதில் தான் நிலையுணர்ந்தவன், வெடுக்கென கையை எடுத்துக் கொண்டான்.
அவளோ சோம்பல் முறித்து எழுந்திட, அவனுக்கோ பக்கென இருந்தது.
எப்போதிருந்து இங்கிருக்கிறாள் என தெரியவில்லையே! என்னை என்ன செய்து வைத்தாளோ…? என பதறி தன்னை ஆராய, முதலில் அவனை புரியாமல் பார்த்தவள், பின் கலகலவென சிரிக்கத் தொடங்கினாள்.
“சிரிக்காத பத்ரா! உன்னை யாராவது உனக்கு பிடிக்காம தொட்டா அக்செப்ட் பண்ணிக்க முடியுமா? அதே மாதிரி தான் எனக்கு எரிச்சலா, அருவரு…” என்று கூற வந்தவன், சட்டென “எனக்கு எரிச்சலா இருக்கு…” என முடித்தான் புருவத்தை சுருக்கி.
“கம் அகைன்!” இறுகிய முகத்துடன் அவள் வினவ,
அவனுக்கு தான் மேலே பேச இயலவில்லை. ஒரு நொடி அவனை ஆழ்ந்து நோக்கியவள், “ரெடியாகிட்டு வா.” என்றதோடு, அவனது அறைக்கதவை அறைந்து சாத்தி விட்டே சென்றாள்.
அதிலேயே அவளது கோப அளவு புரிந்தது தஷ்வந்திற்க்கு. ஹப்பாடா அவள் கோபமாகிட்டா… நம்மளை இங்க இருந்து அனுப்பிடுவா! என நிம்மதியான மனதுடன் குளித்து முடித்து, அவனது பெட்டிகளையும் தயாராக எடுத்து வைத்து விட்டே வெளியில் வந்தான்.
“என்னதான் டாக்டருக்கு படிச்சு கிழிக்கிறீங்களோ தெரியல. தாளிக்கிறதுக்கு இவ்ளோ எண்ணெய் ஊத்த கூடாதுன்னு கூட தெரியல.”
“யோவ் டாக்டரு… பைத்தியமா உனக்கு? தக்காளியை இவ்ளோ அழுத்தி கட் பண்ணி வைக்கிற. அதுல இருக்குற சாறு எல்லாம் கீழ வேஸ்ட் ஆகுது பாரு. உன்னை என்ன கத்தியை வச்சு போஸ்ட் மார்ட்டமா பண்ண சொன்னேன்…”
“அட ச்ச்சே… முட்டைக்கோஸை கட் பண்ண சொன்னா, அதுக்கு வலிக்காம சொரண்டிட்டு இருக்க. நீ எல்லாம் எப்படி கத்தியை பிடிச்சு ஆபரேஷன் பண்ணுவ.”
இவை அனைத்தும், மாதவை நோக்கி ரோஜா வீசிய வாசகங்கள்.
‘அடியே பாப்பா… ஏதோ சின்ன பொண்ணா இருக்கியேன்னு கொஞ்சம் பாவம் பார்த்தா என்னையவே வச்சு செய்றியா?’ என எண்ண மட்டுமே முடிந்தது. பின்னே, வெளியில் தான் மஹாபத்ரா அமர்ந்திருந்தாளே.
ஒரு வார்த்தை பேச இயலவில்லை அவனால். அவளின் ஏச்சு பேச்சுகளை தன்னை நொந்து கேட்டபடி, அவள் சொன்னதை செய்து முடித்தவன், வியர்வையில் குளித்திருந்தான்.
தஷ்வந்த் தான், நண்பனைக் கண்டு ஒரு கணம் அதிர்ந்து விட்டு, ரோஜாவை யாரென பார்க்க,
மாதவோ, அவளை பற்றி கூறி விட்டு, “என்னை இங்க வந்து கோர்த்து விட்டுட்டீலடா…” என முறைத்தான்.
தஷ்வந்திற்கோ, ரோஜா அவனை திட்டுவதெல்லாம் அமிர்தமாக இருக்க, “நீ தான என்ஜாய் பண்ணனும்ன்னு சொன்ன என்ஜாய் பாஸ்.” என்று நமுட்டு நகை புரிந்தான்.
ரோஜா அப்போது தான் தஷ்வந்தை பார்த்து கண்களை அகல விரித்து, “ஹை… அண்ணா. நீங்க அழகா இருக்கீங்க. அதான் என் அக்காவே உங்ககிட்ட கவுந்துட்டாங்களோ?” என கேலி சிரிப்பு புரிய, தஷ்வந்த் பதில் பேசாமல் நின்றான்..
மறந்தும் அவன் அவளை பார்க்கவில்லை. அவளும் தான்!
மஹாவே, “ரோஜா டைம் ஆச்சு. சாப்பாடு எடுத்து வை.” என்றதில், உடனே இரு ஆடவர்களுக்கும் பரிமாறிட எத்தனிக்க, முதலில் தஷ்வந்த் அசையவே இல்லை.
ரோஜாவோ, தஷ்வந்த் அமராமல் இருந்ததில், “உக்காருங்க அண்ணா.” என்று சேரை பின்னால் இழுத்துப் போட்டதில், அவளிடம் வெடுக்கென பேசவும் மனம் வராமல், அமர்ந்தான்.
அத்தனை சுவையாக சமைத்திருந்தாள்.
மாதவிற்கோ காலையில் இருந்து வேலை பார்த்ததில் பசி வேறு வயிற்றை கிள்ளியது. முதலில் சுவை எல்லாம் பாராமல் சில விள்ளலை விழுங்கிய பிறகே அதன் சுவை நாக்கில் நின்றதில்,
*வாவ். டிபன் சூப்பரா இருக்கு பாட்டி. ஆனா, இந்த வாயை மட்டும் குறைச்சுக்கிட்டா இன்னும் நல்லா இருக்கும்” என புகழ்வது போல வாரி விட்டு, சாப்பாட்டில் கவனமாக ரோஜா அவனை முறைத்து வைத்தாள்.
மஹாவிற்கு இது ஏற்கனவே தெரியுமாதலால், அமைதியாக போனை உபயோகப்படுத்திக் கொண்டு இருக்க, சுவையாகவே இருந்தாலும், தஷ்வந்திற்கு உணவு உள்ளே இறங்கவில்லை. அதற்கு அவளின் அமைதியும் ஒரு காரணம் என்பதும் புரியவில்லை.
ரோஜா தான், “உங்களுக்கு பிடிச்சு இருக்காண்ணா?” என ஆர்வமாக தஷ்வந்திடம் கேட்க, அவளைக் கண்டு மென்னகை புரிந்தவன், “சூப்பரா இருக்கு ரோஜா. உன் கைல என்ன மேஜிக் வச்சு இருக்க.” என்றான் இலகுவாக.
“டேய் பாஸ்… எல்லா காயும் கட் பண்ணி குடுத்து, பாதி வேலை பார்த்தது நான் தானாக்கும். நான் பண்ணுன மேஜிக்ல தான், சாப்பிட இவள் நல்லா பண்ணிருக்கா” என சலித்துக் கொண்டான்.
அவளோ மேலும் அவனை முறைத்து, “அக்காவுக்காக தான் எல்லாமே பார்த்து பார்த்து செஞ்சேன்.” என தோளை இடித்துக் கொண்டாள்.
“ஓ அப்போ அக்கா சொன்னா அதுல விஷம் வைப்பியா?” என்று கேட்ட மாதவிடம்,
“எப்படியும் தஷு அண்ணாவுக்கு விஷம் குடுக்க சொல்ல மாட்டாங்க. ஆனா, உங்களுக்கு குடுக்க சொன்னா, கண்டிப்பா விஷ பாட்டிலோட தான் வருவேன்…” என திட்டவட்டமாக கூறியதில் மாதவிற்கு அடுத்த விள்ளல் உள்ளே இறங்கவே இல்லை.
அவளது கூற்றை சரிவர ஆராயாத தஷ்வந்திற்கு கவனமெல்லாம் மஹாவின் மீது தான்.
தொண்டையை செருமிக் கொண்டவன், “நீ சாப்பிடலையா பத்ரா.” எனக் கேட்க, அவளோ அதனை காதில் வாங்காதது போல அமர்ந்திருந்தாள்.
தன்னை நொந்தவன், “பத்ரா வந்து சாப்பிடு.” என்று அழைக்க,
அப்படி ஒருவன் அருகிலேயே இல்லை என்ற ரீதியில், “டேய் அரை வேக்காடு இவ்ளோ நேரம் சாப்பிட்டு அப்படியே தூங்க போறியா. சீக்கிரம் கிளம்பு. எனக்கும் லேட் ஆச்சு.” என்று கடிய, அவனுக்கோ இருவரின் ஊடலும் வெகு சுவாரஸ்யமாக இருந்தது.
தஷ்வந்தோ மீண்டும் “ப… பத்ரா…” என அழைத்துப் பார்த்தும், அவள் அழுத்தமாக அமர்ந்திருக்க, அவனுக்கு தான் நிலைகொள்ளவில்லை.
அவனது தவிப்பை ரசித்தவளோ தன்னிலையை மாற்றாமல் அவனை மேலும் தவிக்க விட, இவை அனைத்தும் இரு மடங்கு தனக்கே திருப்பி வரப்போவதை அறியாது உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டாள் பேதை.
காயம் ஆறும்!
மேகா.