1,189 views

காலை விடிந்ததும் மகள் எப்போது எழுவாள் என்று அவள் அருகில் அமர்ந்துக் கொண்டிருந்தார் நந்தினி. செல்வகுமாருக்கு இந்த விஷயம் தெரிந்தால் பெரிய பிரச்சினையாகிவிடும் என்பதால் அக்னிக்கு அழைத்து இதைப்பற்றி கூற வேண்டாம் என்று விட்டார். பத்து மணி ஆகியும் எழாமல் துயில் கொண்டிருந்தாள் அன்பினி.

அசதியில் தூங்குபவளை பார்த்தவர் மனம் கவலையில் சோர்ந்தது. செல்வகுமாருக்கு குடிக்கும் பழக்கம் இல்லை. விக்ரம் கூட நிறைய பார்ட்டிகளுக்கு சென்றிருக்கிறானே தவிர இது நாள் வரை மதுவை தொட்டதில்லை. இவளுக்கு மட்டும் ஏன் இந்த பழக்கம் என நொந்தவர் பெருமூச்சு விடும் நேரம் எழுந்தாள் அன்பினி சித்திரை.
தலையில் கை வைத்து அமர்ந்தவள் நேற்று நடந்ததெல்லாம் நினைத்து பார்த்தாள்.

“உன்கிட்ட இதை எதிர்பார்க்கல. வீட்டு ஆம்பளைங்களுக்கே இல்லாத பழக்கம் உனக்கு எப்படி வந்துச்சு. அதுவும் நிதானம் இல்லாத அளவுக்கு. ” என மகளை திட்ட தொடங்கியதும்,

“என்ன பழக்கம்” என்று கண்களை மூடிக்கொண்டு கேட்டாள்.

“நேத்து ராத்திரி வந்தியே அந்த பழக்கம் தான்.” என்ற நந்தினியை குழப்பத்தோடு பார்த்தாள் அன்பினி.

“அப்படி பார்த்தா என்ன அர்த்தம் எதுக்காக குடிச்ச?” மகளைப் பார்த்தவாறு திரும்பி அமர்ந்த நந்தினி சினத்தோடு கேட்க,

“ம்ம் என்ன!” அதிரவோடு அன்னையை நோக்கினாள்.

“அப்பாக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சிருந்தா என்ன ஆகி இருக்கும் தெரியுமா. வர கோபத்துக்கு நாலு வைக்கணும்னு தோணுது. உன்னை சொல்லி தப்பு இல்லை . இந்த அளவுக்கு நீ கெட்டு குட்டி சுவரா போனதுக்கு நாங்க தான் காரணம். கிட்ட வர முடியல அவ்ளோ நாத்தம். அந்த தம்பி என்ன நினைச்சிருப்பானோ நினைக்கவே அசிங்கமா இருக்கு அன்பினி. பெத்தவங்களுக்கு நல்ல பேர் எடுத்துக் கொடுத்துட்ட.” மனதில் இருக்கும் ஆதங்கத்தை கொட்டிக் கொண்டிருக்க,

“போதும் நிறுத்துமா நான் குடிச்சேன்னு உனக்கு யார் சொன்னது?”

“யாருடி சொல்லணும் இல்ல யாரு சொல்லணும்னு கேட்கிறேன்.” என்று எழுந்து நின்றவர்,

“அப்படி ஒரு நாத்தம் உன் மேல. பக்கத்துல நின்னா சாப்பிட்ட மொத்தமும் வாந்தியா வந்துரும் போல. ” என மகளை முறைத்தார்.

“நாத்தம் வந்தா குடித்திருக்கேன்னு அர்த்தமா.” என அன்னையை முறைத்தவள்,

“போன எனக்கு வர தெரியாதா எதுக்காக அவனை அனுப்பி வச்சீங்க.” என்றாள்.

“அப்படித்தான் இத்தனை நாளா நம்பிட்டு இருந்தேன். ஆனா நேத்து நைட்டு தான் தெரிஞ்சுது நான் வளர்த்த லட்சணம் என்னன்னு.”

“நிறுத்து ம்மா! நான் குடிக்கவும் இல்லை, குடிகாரியும் இல்லை. நேத்து பார்ட்டில மகேஷ் ஓவரா மட்டை ஆகிட்டான். அவனை என்னால கூட்டிட்டு போக முடியாதுன்னு அவன் டிரைவருக்கு கால் பண்ணேன். அவர் ரூட் கேட்டு ரொம்ப நேரமா அலைய வச்சுட்டாரு. அந்த கடுப்புல எதிர்ல வந்தவனை பார்க்காம மோதிட்டேன். கையில இருந்த சரக்கு மேல ஊத்திக்கிச்சு. கிளீன் பண்ணிட்டு கிளம்புறதுக்குள்ள அவன் வந்து சீன் கிரியேட் பண்ணிட்டான்.” நேற்று இரவு நடந்ததை நீண்ட விளக்கமாக சொல்லி முடித்தாள்.

“சரி குடிக்கல சந்தோசம் ஆனா எதுக்கு குடிக்கிற இடத்துக்கு நீ போற.”

“எந்த இடத்துக்கு வேணா போக எனக்கு உரிமை இருக்கு. எனக்கு மட்டும் இல்ல எல்லாருக்கும் அந்த உரிமை இருக்கு. அதுல இருந்து நம்ம எப்படி பாதுகாப்பா இருக்கோம் என்றதுல தான் எல்லாம் இருக்கு. பார்ட்டிக்கு போறதால நான் தப்பான பொண்ணும் இல்ல. கோவிலுக்கு போற எல்லாரும் நல்ல பொண்ணுங்களும் இல்லை. ” கடுப்பில் எழுந்து பாத்ரூம் சென்று விட்டாள்.

“இதெல்லாம் பேச நல்லா இருக்கும் அன்பினி பார்க்கிறவங்க நம்ப மாட்டாங்க.”

“என்னை யாரும் நம்பனும்னு அவசியம் இல்ல ம்மா. உங்க பொண்ண பத்தி உங்களுக்கே தெரியல அப்புறம் எப்படி பார்க்குறவங்களுக்கு தெரியும்.” என்று உள்ளிருந்து குரல் கொடுத்தாள்.

“ஆமாம் டி உன்ன பத்தி தெரியாம தான் பெற்று வளர்த்திருக்கேன்.” நந்தினியும் அவளுக்கு சரிசமமாக பேச,

“இப்போ உனக்கு என்ன தான் ம்மா பிரச்சனை.” என்றாள் அன்பினி.

“நீ தாண்டி என் பிரச்சனை. ஒழுங்கா இனிமே அந்த இடத்துக்கு எல்லாம் போகாம இரு. முக்கியமா அந்த மகேஷ் கூட சேராம இரு.” என்றவருக்கு  பதில் சொல்லவில்லை  அன்பினி.

மகளிடமிருந்து எந்த பதிலும் வராமல் போக சிறிது நேரம் காத்திருந்தவர் யோசனை வந்தவராக, “அது என்னடி நெத்தில காயம்.” என்று கேட்டார்.

பல் துலக்கி கொண்டிருந்த அன்பினிக்கு செயல்கள் அப்படியே நின்று விட்டது அவர் கேட்ட கேள்வியில். கைகள் தானாக காயம் பட்ட இடத்தை வருடியது. புருவத்திற்கு மேல் சின்ன வெட்டு காயம். ஆழமாக இல்லாததால் தையல் போட வேண்டிய வேலை மிச்சமானது அவளுக்கு. காயம் பட்ட இடத்தில் விரல் பட்டதும் லேசாக வலிக்க, நினைவு அதை கொடுத்தவனை துரத்த ஆரம்பித்தது.

***

காலையிலிருந்து பரமேஸ்வரி மிகுந்த ஆனந்தத்தில் உலாவி கொண்டிருந்தார். அக்னியின் திருமண பேச்சை ஆரம்பித்ததும் இந்த உற்சாகம் தொற்றிக் கொண்டது என்றாலும் உடனே பெண் அமைந்து விட்டதால் இன்னும் ஆனந்தத்திற்கு அளவில்லாமல் போனது. மேற்கொண்டு பெண் வீட்டில் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று விசாரிக்க சென்று இருக்கிறார் மணிவண்ணன்.

ஜாதகம் பொருந்தி விட்டதால் இந்த பெண்ணை பார்க்குமாறு போட்டோ காட்டினார் மகனுக்கு. பார்க்க வரும் நேரம் செல்வகுமாரிடமிருந்து அழைப்பு வந்திருந்தது. முக்கியமான மீட்டிங் இருப்பதால் பார்க்காமல் சென்று விட்டான். வழக்கம் போல் மகளிடம் பரமேஸ்வரி புலம்ப துவங்க, அவளோ அண்ணனுக்கு வாட்ஸப்பில் அனுப்பி வைத்தாள்.

பேசி முடித்து வந்த மணிவண்ணன் முகம் எல்லாம் பளிச்சிட புரிந்து கொண்டார் மகனுக்கு திருமண தேதியை குறிக்கலாம் என்று. அக்னி ஒரு வார்த்தை பெண்ணை பிடித்திருக்கிறது என்று விட்டால் உடனே அடுத்த கட்ட நடவடிக்கையை ஆரம்பிக்கலாம் என்று முடிவு  செய்தவர்கள் அழைத்தார்கள் அவனுக்கு.

மீட்டிங் இருப்பதாக வர சொன்ன செல்வகுமார் இன்னும் வராமல் இருக்க, அந்த அறையில் தன் எதிரிகளுடன் அமர்ந்திருந்தான் அக்னிசந்திரன். அன்பினி மீதி இருந்த கோபத்தால் அவளை பார்க்காமல் அமர்ந்திருந்தான். விக்ரம் வார்த்தைகளால் அவனிடம் கொக்கி போட அசைந்து கொடுக்காமல் இருந்தான்.

அம்மாவின் புகைப்படத்தோடு அழைப்பு வர, “சொல்லுங்கம்மா.” என்றான்.

“நீதான் சொல்லணும் அக்னி.” என்றதோடு அதற்கான காரணத்தையும் கூறினார்.

“அம்மா நான் ஏற்கனவே உங்க கிட்ட சொல்லிட்டேன் நீங்க எந்த பொண்ண பார்த்தாலும் எனக்கு சம்மதம்.” தாய் பேச்சை தட்டாத பிள்ளையாய் கூற,

“இவன் என்ன சொன்னாலும் எனக்கு நடிப்பவே தெரியுது அன்பினி ஏன்?” என்று தங்கையின் காதை கடித்தான் விக்ரம்.

“ஏன்னா நீயும் நானும் அவன மாதிரி நல்லவன் இல்லை.” என்ற அன்பினியை கடுமையாக முறைத்தான்.

“ஹா!ஹா! சும்மா விக்ரம். ஆனா பையன் பயங்கரமான அம்மா செல்லம் போல. அன்னைக்கு அம்மா ஃபோன் வந்ததும் மூஞ்சில அப்படி ஒரு பிரகாசம். இவன கட்டிக்க போறவ தான் ரொம்ப பாவம். பால் புட்டி மாறாத  இவன் கூட எப்படி குடும்பம் நடத்த போறாளோ.” என்ற கடைசி வார்த்தையை மட்டும் சத்தமாக சொன்னாள்.

அவை சரியாக அக்னியின் காதில் விழுந்து விட, அன்னையிடம் பேசியவாறு முறைத்தான் இருவரையும். “நெற்றிக்கண்ணை திறந்துட்டான் அன்பினி. இனி மூச்சு வாங்க பத்து பக்கத்துக்கு டயலாக் பேசுவான் பாரு.” என்று சிரித்தான் விக்ரம்.

இருவரும் தன்னை பற்றி தான் பேசுகிறார்கள் என்பதை நன்குணர்ந்த அக்னிசந்திரன், “அம்மா இப்ப என்ன உங்களுக்கு. பொண்ணு எப்படி இருக்குன்னு சொல்லணும் அதான.” என்ற கையோடு போனை ஸ்பீக்கரில் போட்டு விட்டு வாட்ஸ் அப்பில் இருக்கும் புகைப்படத்தை திறந்தான்.

அவன் பார்க்கும் ஆர்வத்தை விட எட்டிப் பார்க்கும் அன்பினியின் ஆர்வம் அதிகமாக இருந்தது. “நீ எதுக்கு இப்படி எட்டி பார்க்குற.” என்ற விக்ரமின் கேள்வியில்… இருக்கையை விட்டு முன்னே நகர்ந்து இருப்பது தெரிந்தது அவளுக்கு.

“பாவம் அந்த பொண்ண நினைச்சி கவலையா இருக்கு‌.” என்று சமாளித்தவள் இருநொடி கூட அமைதியாக இருக்கவில்லை மீண்டும் எட்டிப் பார்த்தாள்.

புகைப்படத்தில் இருக்கும் பெண்ணை பார்த்தவனுக்கு பிடித்துப் போக, “அம்மா உங்க மருமகளை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. பார்க்க குடும்ப பொண்ணா அழகா இருக்காங்க. சில பொண்ணுங்கள மாதிரி பஜாரி தனமா தெரியல . அது மட்டும் இல்ல இப்ப இருக்க பொண்ணுங்க விடிஞ்சதும் போற இடமே ஒயின்ஷாப் தான். ஆனா இந்த பொண்ண பார்த்தா அப்படி ஏதும் தெரியல.” என்ற அக்னியின் பார்வை அன்பினியை கேவலமாக தீண்டியது.

“மேற்கொண்டு ஆக வேண்டியதை பாருங்க.” என்றவன் அன்னையின் சிரிப்பு சத்தத்தை மனம் மகிழ்ந்து கேட்டுக் கொண்டிருக்க, வெடுக்கென அவன் கையில் இருந்த போனை பிடுங்கினாள் அன்பினி சித்திரை.

அவன் சுதாரித்து எழுவதற்குள் அந்த போனில் இருந்த பெண்ணின் புகைப்படத்தை அளித்து விட்டாள். அந்த கையோடு பரமேஸ்வரியின் அழைப்பையும் துண்டித்தாள்.

“என் ஃபோன கொடு.” முறைப்போடு அக்னி கேட்க,

“இது என்ன ஆபிசா இல்ல பொழுது போக்குற பார்க்கா. மீட்டிங் ஹால்’னு நினைப்பு இல்லாம உன் இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்க. மீட்டிங் முடிஞ்சதும் ஃபோன வாங்கிக்க.” என்று அவசரமாக பதில் அளித்தாள் அன்பினி சித்திரை.

“கோபப்படுத்தாத மரியாதையா என் ஃபோனை கொடுத்துடு.” என்ற நேரம் பரமேஸ்வரி மீண்டும் அழைத்தார். அதை அன்பினி கட் செய்ய, கோபம் துளிர்விடத் தொடங்கியது அக்னிக்கு.

“ஏய் கொடு டி!.” என்றவன் பறிக்க முயல,

“உனக்கு எதுக்கு அவன் ஃபோன். கொடு.” என்று விக்ரமும் சொல்லிக் கொண்டிருந்தான்.

எதற்கும் அசைந்து கொடுக்காதவள் “மீட்டிங் முடிஞ்சதும் ஃபோன வாங்கிக்க.” என்றாள் விடாப்படியாக.

“என் ஃபோன வாங்கி வைக்கிற உரிமை உனக்கு கிடையாது எங்க அம்மா பயந்துட்டு இருப்பாங்க போன கொடு.” அவன் கோபம் அறியாது அன்பினி பிடிவாதம் பிடிக்க மீண்டும் பரமேஸ்வரி அழைத்தார்.

அக்னியை வெறுப்பேற்ற எண்ணியவள் வரும் அழைப்பிற்கு உயிர் கொடுத்து, “ஆபீஸ் நேரத்துல எதுக்கு போன் பண்றீங்க எதுவா இருந்தாலும் உங்க மகன் வீட்டுக்கு வந்ததும் பேசிக்கோங்க.” என்றதோடு அழைப்பை பட்டென்று துண்டித்தாள்.

அன்பினி செயலில் அக்னியின் கோபம் கண்ணை மறைக்க அடிக்க கை ஓங்கினான். அதை பார்த்த விக்ரம் தங்கையை காப்பாற்ற வர, அவளுக்கு விழ வேண்டிய அடி அவன் கன்னத்தை பதம் பார்த்தது. அடி வாங்கிய கோபத்தில் விக்ரமும் அக்னியை அடித்து விட, இருவருக்குள்ளும் கைகலப்பு உருவானது.

இருவரும் அடியை கொடுத்து இரண்டு மடங்காக வாங்கிக்கொள்ள நடுவில் நின்று தடுத்துக் கொண்டிருந்தாள் அன்பினிசித்திரை. “அக்னி விடு அவனை” என்று அவன் தோளை தொட்டதும் வெகுண்டு எழுந்தவன் விக்ரமை அலேக்காக கீழே தள்ளினான்.

அன்பினி கழுத்தைப் பிடித்தவன் முன்னாள் நகர, அவளோ பயத்தோடு பின் நகர்ந்தாள் . அக்னியின் கண்களில் நீர் தேங்கி  கோபத்தில் முகம் விரிந்திருந்தது. பற்கள் கடிபடும் வீரியத்திற்கு ஏற்ப அவன் கைகள் அவள் கழுத்தை இறுக்கிக் கொண்டு சுவற்றில் முட்டியது. இடித்த வேகத்தில் அன்பினி கைகள் இரண்டும் சுவற்றில் ஒட்டிக்கொள்ள,

“கொடு டி ஃபோன.” என்றான் கரகரப்பான குரலில்.

மூச்சு வாங்கியது அன்பினிக்கு. அவனிடமிருந்து வெளிப்பட்ட கோபத்தின் அனலை தாங்கிக் கொள்ள முடியாதவள் பதில் சொல்ல முடியாமல் அரண்டு பார்த்திருக்க, கழுத்தைப் பிடித்து முன் இழுத்தவன் முடியையும் சேர்த்து இழுத்துக் கொண்டு சுவற்றில் ஓங்கி அடிக்க முயன்றான்.

அதைக் கண்ட விக்ரம் பதறி அடித்து தங்கையின் அருகில் ஓட, அவளோ கண்களை மூடிக்கொண்டாள் அவன் கைகளைப் பிடித்த படி. ஒரு இன்ச் இடைவெளியில் நினைத்ததை செய்யாமல் நிறுத்தியவன், “ஃபோன் எங்க?” என்றான்.

வேர்வைத் துளிகள் பயத்தில் கொப்பளித்தது அன்பினி முகத்தில். உயிர் பயத்தில் கைகள் தானாக டேபிளை காட்டியது. அவள் பார்வைக்கு திரும்பியவன், “எடுத்துட்டு வாடா” என விக்ரமுக்கு கண்ணை காட்டினான்.

அக்னிசந்திரன் இருக்கும் கோலத்தில் அரண்டு இருந்தவன் தங்கையின் உயிரை காப்பாற்ற விரைந்தான். ஃபோனை அவனிடம் நீட்ட, ஒற்றைக் கையால் பாஸ்வேர்ட் போட்டு திறந்தவன் அன்னைக்கு அழைத்தான்.

அன்பினி பேசியதில் பயத்தோடு அமர்ந்திருந்த பரமேஸ்வரி உடனே எடுத்து, “அக்னி என்னப்பா ஆச்சு ஏதாச்சும் பிரச்சனையா?” என குரல் வெடவெடுத்து  கேட்டார்.

அம்மாவின் குரலைக் கேட்டவன் அந்த ஒரு இஞ்சை குறைத்தான் கழுத்தை சுவற்றோடு அழுத்தி. “ஒன்னும் இல்லம்மா . முதலாளி பொண்ணு தான் பேசினாங்க. கொஞ்சம் துடுப்பு தனமா இருப்பாங்க வேற ஒன்னும் இல்ல.” என்று சிரித்த முகமாக பேசினான்.

அன்பினி, விக்ரம் இருவரின் கண்களும் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு விரிந்தது அவனின் மாற்றத்தை பார்த்து. கண்ணில் கோபம் கொழுந்துவிட்டு எரிய உதடுகள் பளபளத்தது. பரமேஸ்வரியை சமாதானப்படுத்தியவன், “எங்க அம்மா கிட்ட சாரி சொல்லு.” சிரிப்பை நிறுத்திவிட்டு ஆக்ரோஷமாக அவளுக்கு மட்டும் கேட்கும்படி கூறினான்.

அன்பினி புரியாமல் முழிக்க, கழுத்தில் அழுத்தம் கொடுத்தவன், “கேட்கலைன்னா செத்துடுவ.” என்றான்.

கண்கள் பட படக்க அழுத்தம் கொடுக்கும் கைகளுக்கு மேல் தன் கைகளை வைத்து விடும்படி கெஞ்சினாள். “கேக்குறியா” என்றவனுக்கு சம்மதமாக தலையசைக்க, கையை விடுவித்தான்.

“சாரி ஆன்ட்டி.” என்றாள் வராத குரலை வரவைத்து.

அவள் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளாத பரமேஸ்வரி சிரித்த முகத்தோடு பேசி அழைப்பை துண்டிக்க, “விளையாட்டு வினை ஆகிடாம பார்த்துக்கோங்க.” என்றவன் அடுத்த நொடி அவன் இருக்கையில் அமர்ந்திருந்தான்.

“என்னடா இது ஏசி ரூம்ல வேர்க்குது.” என்று கசங்கி இருந்த சட்டையை சரிப்படுத்திக் கொண்டவன் ஏசியை இன்னும் தூக்கலாக வைக்க, இருவருக்கும் பேயை பார்த்தது போல் பயமாக இருந்தது. இருவரும் அரண்டு நின்றிருக்க, ஒரு பொருட்டாக கூட மதிக்காத அக்னி பிடித்த பாடலை முனுமுனுத்தபடி தாளம் போட்டுக் கொண்டிருந்தான்.

வெளியில் கேட்கும் நடை ஓசையை வைத்து செல்வக்குமார் வந்து விட்டார் என்பதை அறிந்த அக்னிசந்திரன், “மேடம் அங்கு எதுக்கு நின்னுட்டு இருக்கீங்க வந்து இங்க உட்காருங்க.” என்றான் பவ்வியமாக.

அன்பினி பயத்தோடு விக்ரமை பார்க்க, “சின்ன முதலாளி உங்களுக்கு என்ன ஆச்சு சட்டை எல்லாம் கிழிஞ்சு இருக்கு.” என அவன் அருகில் செல்ல, விக்ரமும் அன்பினியும் அரண்டு பின்னால் நகர்ந்தார்கள்.

உள்ளுக்குள் எழும் சிரிப்பை பெரும்பாடு பட்டு அடக்கியவன், “இந்த வயசுலயும் இப்படி அடிச்சுக்கிறீங்க. பாவம் சார் எப்படித்தான் உங்க ரெண்டு பேரையும் சமாளிக்கிறாருன்னு தெரியல.” என்று கேலி பரிதாபம் காட்ட,

“என்ன ஆச்சு சந்திரா” என்றபடி உள்ளே வந்தார் செல்வகுமார்.

“ஒன்னும் இல்ல சார் எனக்கு அம்மா ஒரு பொண்ண பார்த்து இருக்காங்க. அந்த போட்டோவ பார்க்கிறேன்னு ரெண்டு பேரும் அடிச்சிக்க ஆரம்பிச்சிட்டாங்க. நான் ரொம்ப பயந்துட்டேன் சார் இவங்க சண்டைய பார்த்து.”என முகத்தை பயந்த சுபாவத்தில் வைத்துக் கொண்டான் அக்னிசந்திரன்.

“அதை ஏன் கேக்குற சந்திரா இவங்க சண்டைக்கு ஒரு முடிவே இருக்காது வீட்டுல. இப்பதான் கொஞ்ச நாளா இல்லாம இருந்துச்சு இன்னைக்கு இங்க நடந்திருச்சு. சில நேரம் ரத்தம் வர அளவுக்கு அடிச்சிப்பாங்க.” என்றவர் இருவரையும் பார்க்க, அவர்களோ இன்னும் தூக்கத்தில் இருந்து எழாத குழந்தைகள் போல் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அக்னிசந்திரனை.

“விக்ரம் உன்ன நம்பி பொறுப்பை கொடுத்தா என்ன இது பாக்கெட்டை கிழிச்சுகிட்டு இப்படி நிக்கிற.” என லேசாக கிழிந்திருந்த பாக்கெட்டை பார்த்த செல்வகுமார் கோபத்தோடு கேட்க,

“அப்பா இங்க ஒன்னும் நடக்கல சின்ன பேச்சுவார்த்தை தான் ஓடுச்சு.” குரல் வந்தது அன்பினியிடம் இருந்து.

பக்கத்தில் நின்றிருந்த அக்னி மெச்சுதல் பார்வையோடு அவளை பார்க்க, அவளது பார்வையும் அவனை மெச்சியது ‘நல்ல நடிகன் நீ’ என்று.

“பேச்சுவார்த்தைக்கு தான் சட்ட கிழியுமோ!” என்றவர் தன் இருக்கையில் அமர்ந்து கொண்டு,

“உங்க மூணு பேரையும் வர சொன்னதுக்கு முக்கியமான காரணம் இருக்கு வந்து உட்காருங்க.” என்றார்.

ஆசிரியர் முன் தலை சொரிந்து கொண்டு நிற்பது போல் தந்தையின் முன் நின்றவர்கள் ஐந்து நிமிடம் டைம் கேட்க, முறைப்போடு தலையசைத்தார். வெளியில் சென்றவர்கள் தங்களை ரெப்ரெஷ் செய்துக் கொண்டு உள்ளே வர, சிரிப்போடு அமர்ந்திருந்தான் அக்னி சந்திரன்.
கட்டுக்கடங்காத கோபம் இருப்பினும் தந்தை முன் அமர்ந்தார்கள் இருவரும்.

***

“இந்த காண்ட்ராக்ட் நம்ம கைக்கு நிச்சயம் கிடைக்கனும். ஏன்னா இதுக்கு போட்டி போடாத ஆட்களே இல்லைன்னு சொல்லலாம். புதுசா வந்தவங்கள்ல இருந்து இந்த ஃபீல்ட் ல கொடி நட்ட அத்தனை பேரும் போட்டிக்கு வருவாங்க.  அவ்ளோ பெரிய போட்டில நம்ம வாங்கிட்டா போதும் கம்பெனி புகழ் எங்கேயோ போயிடும். அது மட்டும் இல்ல அடுத்தடுத்த காண்ட்ராக்ட் எடுக்க இது பெரிய உதவியா இருக்கும். கம்பெனி ஆரம்பித்து  ஐம்பது வருடம் ஆகப்போகுது.

அந்த அடையாளத்தை கொண்டாடும் போது  இந்த ஒப்பந்தமும் நம்ம கையில இருந்துட்டா போதும் இன்னும் பல வருஷத்துக்கு நம்ம கம்பெனி பேரு நிலைத்து நிற்கும்.”

இந்த விஷயம் அக்னிக்கு ஏற்கனவே தெரியும் என்பதால் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. பெற்ற பிள்ளைகள் இருவரும் தந்தைக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக பேசிக் கொண்டிருக்க,

“சந்திரா இந்த ஒப்பந்தத்தோட முழு பொறுப்பும் உன்கிட்ட கொடுக்கிறேன். கூடவே இவங்க ரெண்டு பேரும் இந்த வேலை முடியுற வரைக்கும் உன் கூடயே இருக்கட்டும். இந்த எக்ஸ்பீரியன்ஸ் ரொம்ப உதவியா இருக்கும் இவங்களுக்கு.” என்றார் பிள்ளைகளின் முகம் மாறுகிறது என்பதை உணராமல்.

அக்னியின் பார்வை திட்டுத்தனமாக அவ்விருவரையும் கேலி பேச, “அடுத்து வர எல்லா ஒப்பந்தத்தையும் தனியா பண்ற அளவுக்கு கத்துக்கோங்க.” என்றார் செல்வகுமார்.

ஒப்புக்காக தலையாட்டிய இருவரும் அக்னியை முறைக்க, “சார் நீங்க சொன்ன எல்லாத்தையும் பக்காவா பண்ணிடலாம். அதே மாதிரி நீங்களும் எனக்கு ஒரு ஃபேவர் பண்ணனும்.” என்று கொக்கி போட்டான்.

“என்ன சந்திரா தூபம் எல்லாம் பலமா இருக்கு என்ன கேக்க போற.” எதார்த்தமாக கேட்க,

“அம்மாக்கு நான் ஒரு ப்ராமிஸ் பண்ணி இருக்கேன் சார். என் கல்யாண விஷயம் ஆரம்பிச்சதுல இருந்து அவங்க கூட தான் முழு நேரமும் இருப்பேன்னு. ஒரு  மாசம் முழுசா எனக்கு லீவ் வேணும்.”  என்றவனின் பார்வை தன் எதிரில் இருக்கும் இருவரை தான் ஊடுருவியது.

‘இவன் என்ன மனிதன்’ என்பதைப் போல் குழப்பம் சூழ்ந்த முகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு மாதம் சவால் விட்டிருக்க, அவனே ஒரு மாதம் விடுப்பு கேட்கிறான் என்ற குழப்பத்தில் அவர்கள் பார்க்க, இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம் என்று உள்ளுக்குள் மகிழ்ந்தான் அக்னி சந்திரன்.

“உன்ன மாதிரி ஒரு பிள்ளையை பெத்த அந்த புண்ணியவதி ரொம்ப புண்ணியம் பண்ணி இருக்கணும். இந்த காலத்துல இந்த மாதிரி ஒரு பையன பார்க்கவே முடியாது சந்திரா. ஒரு மாசம் என்ன ஆறு மாசம் லீவு எடுத்துக்க. நீ வர வரைக்கும் இவங்க ரெண்டு பேரும் எல்லாத்தையும் பொறுப்பா பார்த்துப்பாங்க. உனக்கு எப்ப தோணுதோ அப்ப நீ இந்த ஆபிஸ்க்கு வா. உனக்காக எப்பவும் காத்திருக்கும்.” என்று உள்ளம் மகிழ்ந்தார்.

நன்றி உரைக்காதவன் சிரிப்பால் அதை உணர்த்த, “பொண்ணு பேரு என்ன சந்திரா.” என்றதும் படபடத்தது அன்பினிசித்திரையின் இதயம்.

“தெரியாது சார் அம்மாவை தான் கேட்கணும்.” என்றவனை இப்போது செல்வகுமாரும் விசித்திரமாக பார்த்தார்.

“என்ன சார் பார்க்குறீங்க?”என்றவனை பார்த்து ‘ஒன்னும் இல்லை’ என்பது போல் தலையசைத்தார் செல்வகுமார்.

“எனக்கு எல்லாமே என் குடும்பம் தான் சார். அவங்க என்ன செஞ்சாலும் என் நல்லதுக்கா தான் இருக்கும். வர பொண்ணு என் குடும்பத்தோட ஒத்துப் போனாலே போதும் எனக்கு வேற எந்த எதிர்பார்ப்பும் அந்த பொண்ணு கிட்ட இல்ல. என் குடும்பமே அந்த பொண்ண தாங்கும். பதிலுக்கு என் மனைவி தாங்க வேண்டாம். அவங்களை ஒதுக்காம இருந்தாலே போதும் எங்க  வீட்டு சொர்க்கத்துல கடைசி வரைக்கும் அந்த பொண்ணுக்கு இடம் இருக்கும்.”  என்றவனை ஆழ்ந்து நோக்கிக் கொண்டிருந்தாள் அன்பினிசித்திரை.

“நிச்சயம் வர பொண்ணு நீ எதிர்பார்த்த மாதிரி இருப்பா சந்திரா.” என்றவரை பார்த்து சிரித்தவன் ஒப்பந்தம் தொடர்பாக பேச ஆரம்பித்தான்.

முதல் கட்டமாக ஒப்பந்தம் தொடர்பாக ஒருவர் வெளியூர் செல்ல வேண்டிய நிலை வருவதால் செல்வகுமார் செல்வதாக முடிவானது. அவர் வரும்வரை அன்பினி விக்ரம் இருவரும் அக்னியோடு சேர்ந்து இங்கு வேலை பார்க்க வேண்டும்.

விக்ரம் அனைத்து மன ஸ்தாபங்களையும் மறந்து அக்னியோடு சேர்ந்து ஒப்பந்தம் தொடர்பாக பேசிக் கொண்டிருக்க, அன்பினிசித்திரையின் மூளை வேறு எதுவோ கணக்கு போட்டது. அதன் வெளிப்பாடாக,

“அப்பா நீங்க மட்டும் தனியா போக வேண்டாம் விக்ரம் உங்க கூட வரட்டும். இங்க மூணு பேர் இருந்து வேலை பார்க்கிறதுக்கு பதிலா இரண்டு பேரா பிரிந்து வேலை பார்த்தா சுலபமா இருக்கும். அதேநேரம் நான் கற்றுக்கிட்ட வேலைய விக்ரமுக்கு சொல்லித் தர முடியும். அதே மாதிரி அவனும் எனக்கு சொல்லித் தருவான்.”  என்றதும் வேலை அடிப்படையில் யோசித்த செல்வகுமார்,

“பரவால  என் பொண்ணு பிசினஸ் உமனா மாறிட்டா.” என்று பெருமை கொண்டவர் அவள் சொல்லியபடியே பின்வரும் நாட்களை நடத்த திட்டமிட்டர் மகளின் திட்டம் சோதிக்கப் போகிறது என்பதை அறியாமல்.

அம்மு இளையாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
22
+1
5
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *