காலை நேர பரபரப்பில் எப்போதும் போல தத்தம் அலுவலுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தனர் பிரஷாந்தும் மைதிலியும். இப்போதெல்லாம் அவனிடம் பேச்சு வைத்துக் கொள்வதே இல்லை அவள். அவன் பேசினாலும் அது காதில் விழுகாதது போல இருக்க கற்றுக்கொண்டாள்.
மகிழினிக்காக பள்ளி விடும் நேரம் மட்டும் இருவரும் ஒன்றாக சென்று அவளை அழைத்து வருவர். இருவருமே வேலைக்கு நடுவில் வருவதால், அவளை தயானந்தனின் வீட்டில் விட்டு விட்டு மீண்டும் அலுவலகம் சென்று விடுவார்கள். இரவு, மகேஷோ தயாவோ அல்லது அமரோ யாரவது ஒருவர் மகிழினியை மைதிலியின் வீட்டில் விட்டு விடுவர். மைதிலிக்கு வேலை இல்லாத சமயங்களில் வீட்டில் இருந்தே மகளையும் பார்த்துக்கொண்டு வேலையையும் பார்த்துக் கொள்வாள். இருவரும் சனி ஞாயிறு நாட்களில் மகிழினியுடன் முழுதாய் செலவழிக்க விரும்புவதால் அன்று வேறு எந்த கமிட்மெண்ட்டும் வைத்துக் கொள்வதில்லை.
மகிழினியும் இந்த சூழ்நிலைக்கு அழகாய் பொருந்திப் போனாள்.
“மைலி… உனக்கு உப்புமா தான் ரொம்பப் பிடிக்குமா?” தட்டில் இருந்த உப்புமாவைப் பரிதாபமாகப் பார்த்தபடி கேட்டான் பிரஷாந்த்.
“ஏன்?” மைதிலி வினவ,
“இல்ல வாரத்துல நாலு நாள் பிரேக்பஸ்ட்க்கு இதை செஞ்சுடுறியே அதான் கேட்டேன்…” என்றவனின் முகம் போன போக்கைப் பார்த்து அவனுக்குப் பிடிக்கவில்லை என்று புரிந்தது.
“இதான் வேலை ஈஸியா முடியும். எனக்கும் மகிக்கும் பிடிக்கும். உங்களுக்குப் பிடிக்கலைன்னா சாப்பிடாதீங்க.” என்று விட்டேத்தியாக பதில் அளித்தவளை பெருமூச்சுடன் பார்த்தான்.
“இட்லி தோசைக்கு ஆசைப்பட்டு உப்புமாவ மிஸ் பண்ண விரும்பல. அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்” என்றவனின் கூற்றில் என்ன குற்றம் கண்டாளோ, “உங்களை யாரும் அட்ஜஸ்ட் பண்ண சொல்லல பிரஷாந்த். ஆறிப்போன உப்புமாவை சூஸ் பண்ணுனது நீங்க தான்.” என்றாள் தீப்பார்வையுடன்.
“மைதிலி… எதை எதோட கம்பேர் பண்ற? ஐ டிண்ட் மீன் இட்.” என்றவனை அலட்சியம் செய்தவள் மகிழினிக்கு மட்டும் உணவை கட்டிக்கொடுத்து விட்டு கிளம்பியே விட்டாள்.
அடுத்து வந்த ஒவ்வொரு முறையும் அவன் என்ன சொன்னாலும் அதில் குற்றம் கண்டுபிடித்து, அவனை கார்னர் செய்வதையே தனது வேலையாக வைத்திருந்தவளின் எண்ணம் பிரஷாந்திற்கும் புரிந்தது.
அவன் தெளிவாக சொல்லி விட்டான்.
“அனாவசியமா என்னை உன் வாழ்க்கைல இருந்து அவாய்ட் பண்ண நினைக்காத. அதுக்கு முயற்சியும் பண்ணாத மைலி. நீ செருப்பால அடிச்சு துரத்துனாலும் நான் போக மாட்டேன்… உன்னை நான் ஏதாவது டிஸ்டர்ப் பண்றேனா? நீயும் நார்மலா இரேன். எப்ப பார்த்தாலும் கடிச்சு குதற டைம் எதிர்பார்த்துட்டே இருக்காத. இட்ஸ் பெய்னிங்…” தனது வலியை வார்த்தைகளில் எதிரொலித்தவனை உணர்வற்று பார்த்தவள், பின் எதுவும் பேசுவதில்லை.
அன்று எப்போதும் போல மகிழினியைப் பள்ளிக்கு விட காரை எடுத்தவனிடம், “நானும் வரேன்” என்றாள் மைதிலி.
பிரஷாந்த் விழி விரித்துப் பார்க்க, “வரலாமே!” எனக் கண்ணோரம் சுருங்கப் புன்னகைத்தவன், உற்சாகம் மின்ன காரைக் கிளப்பினான்.
மகிழினியை பள்ளியில் இறக்கி விட்டு விட்டு, மீண்டும் காரை எடுத்தவன், “ம்ம் சொல்லு” என்றான்.
“என்ன சொல்ல?”
“நீ ஏதோ விஷயம் இல்லாம கார்ல ஏறி இருக்க மாட்டியே. அதான் கேட்டேன்…” என்றவனின் கேலிப் பார்வையில் சிலுப்பியவள், “ஒரு விஷயம் சொல்ல தான் வந்தேன்…” என்று இழுத்தாள்.
அவள் முகம் தீவிரமாக மாறி இருக்க, “என்ன மைலி எதுவும் பிரச்சனையா?” அவனும் சற்று கேலியை கை விட்டான்.
“ஹ்ம்ம்… பிரச்சனை வராம இருந்தா சரி தான் பிரஷாந்த்” என்றவளின் சலித்த குரலில் “என்னனு சொல்லு” என்றான்.
அந்நேரம் அவளது கைப்பேசி ஒலிக்க, அதில் ஒளிர்ந்த “மோனி ஜாய் அங்கிள்” என்ற பெயரைப் பார்த்ததும் கரங்கள் வேலை நிறுத்தம் செய்தது.
“போனை எடுத்து பேசு மைலி” என்ற பிரஷாந்தின் குரல் அவள் காதில் கேட்டதாக தெரியவில்லை என்றதும், அவள் தோள் தொட்டு உலுக்கினான்.
அதில் நிகழ்விற்கு வந்தவள், “ஹா என்னது?” எனக் கேட்க,
“போன ரிங் ஆகுது மைலி” என்றான் மீண்டும். அதற்குள் அலைபேசி அழைத்து ஓய்ந்தது.
“அதுவே கட் ஆகிடுச்சு” என்றவளின் முகத்தில் தெரிந்த மாற்றத்தை குறித்துக் கொண்டவன், “ஆர் யூ ஓகே?” என்றான்.
“ம்ம் ஓகே தான்…” என்றவள் சில நொடிகள் அமைதி காத்து விட்டுப் பின், “ப்ச் சொல்ல வந்த விஷயத்தை சொல்ல மறந்துட்டேன்” என்று தலையில் தட்டினாள்.
“உங்க அப்பா அம்மா பெயில்ல வந்துருக்காங்க பிரஷாந்த்” என்றதும், ஸ்டியரிங்கைப் பிடித்திருந்த அவனது கரங்கள் இறுகியது.
“எப்படி பெயில் கிடைச்சுது மைதிலி?” அவனிடம் சிறு சுணக்கம்.
“சுப்ரீம் கோர்ட்ல அப்பீல் பண்ணிருக்கலாம். இதுக்கும் அவங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லைனு ப்ரூவ் பண்ண நினைக்கிறாங்க… ஹைதராபாத்ல ஒரு டாப் வக்கீலைப் பிடிச்சு அதுக்கான வேலையைப் பார்த்துட்டு இருக்கிறதா கேள்விப்பட்டேன் பிரஷாந்த்” என்றதில் பிரஷாந்திற்கு எரிச்சலாக இருந்தது.
“உங்க மேலயும் கோபம் இருக்கலாம்” மைதிலி கூறியதும்,
“என் மேல கோபம் இருக்கட்டும். அவங்க செஞ்சதுலாம் எந்த விதத்துல சரி மைதிலி? ஒரு பொண்ணோட வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி வச்சு இருக்காங்க. தயா இல்லன்னா மிருவோட நிலைமையை யோசிச்சுப் பாரு. அதுவும் இல்லாம இப்ப தான் அவள் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கா. வெளில வந்தவங்க சும்மாவா இருப்பாங்க அவள் மேல சேறை பூச தான நினைப்பாங்க. என்னதான் அதெல்லாம் கண்டுக்க வேணாம்னு சொன்னாலும் அவளுக்கு எவ்ளோ கஷ்டம்ல மனரீதியா ச்சே…” என்று ஸ்டியரிங்கில் குத்தினான்.
“ரிலாக்ஸ் பிரஷாந்த். நம்ம சைட் வாலிட் பாயிண்ட்ஸ் இருக்கு. தகுந்த ஆதாரமும் இருக்கு. அவங்க என்ன ட்ரை பண்ணாலும், அவங்க தப்பு பண்ணலைன்னு நிரூபிக்க முடியாது. நான் ஹேண்டில் பண்ணிக்கிறேன். மிரு வரைக்கும் இந்த பிரச்சனை போகாம பார்த்துக்கலாம். அப்படி அவங்க அதிகமா போனா…” என்று நிறுத்தியவளை அவன் கேள்வியுடன் பார்த்தான்.
“நான் அவங்க பண்ணாத தப்புக்கான ஆதாரத்தையும் ரெடி பண்ணுவேன். அது உங்களுக்கு ஓகேவா?”
சிறு வலியொன்று அவன் மேனி முழுதும் பாய, “அவங்க செஞ்ச தப்புக்கு தண்டனை அனுபவிச்சு தான் ஆகணும் மைதிலி. இதுல நான் ஓகே சொல்ல என்ன இருக்கு” என்றான்.
“பிரஷாந்த் நீங்க வேணும்னா அவங்ககிட்ட பேசிப் பாக்குறீங்களா?” என்றதும் திரும்பி அவளை முறைத்தவன்,
“இதுல நான் பேச என்ன இருக்கு? நான் பேசுனா புருஞ்சுக்குற ஆள் இல்லை அவங்க. எப்பவும் அகரன் சொல்றதை தான் கேட்பாங்க. இப்பவும் அவன் செஞ்ச தப்புக்கு தான் முட்டுக் கொடுக்குறாங்க. இதுல அவங்க என்ன தப்பு செஞ்சுருந்தாலும் நான் சப்போர்ட் பண்ணனும்னு நினைச்சு என்னை கார்னர் பண்ணுவாங்க. இதெல்லாம் தேவையில்லாத வேலை. நீ உன் சைட்ல இருந்து எல்லாமே ஸ்ட்ராங்கா வச்சுக்கோ. வேற எவிடன்ஸ் வேணும்னாலும் ரெடி பண்ணலாம்…” என்றவனின் சிவந்த விழிகளை அவளால் கடக்க இயலவில்லை.
“ஆர் யூ சியூர்?” மீண்டுமொரு முறை உறுதிப்படுத்திக்கொள்ள கேட்டவளை இப்போது நன்றாகவே முறைத்தான்.
அந்நேரம் மீண்டும் மைதிலியின் அலைபேசி கத்தியது. அதே மோனி ஜாய் அங்கிளிடம் இருந்து வந்த அழைப்பை இப்போது தவிர்க்க இயலாமல் எடுத்து விட்டாள்.
எதிர்முனையில் ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க பெரியவரின் குரல் கேட்டது.
“மைதிலி எப்படிம்மா இருக்க. மகிழ் குட்டி எப்படி இருக்கா?” என்று பாசம் ததும்ப பெங்காலி மொழியில் கேட்டவரிடம், “பைன் அங்கிள். நீங்க எப்படி இருக்கீங்க. ஆண்ட்டி நல்லா இருக்காங்களா?” என அதே மொழியில் கேட்டாள்.
“எஸ். எஸ். ஆல் குட். இந்த இயர் எனக்கு ரிட்டயர்மெண்ட். கல்கத்தால தான் இருக்கேன்” என்றவரிடம், “ஓ! சூப்பர் அங்கிள்… அப்போ இனி ஆண்ட்டியோட டைம் ஸ்பென்ட் பண்ணலாம்…” என்றாள் லேசாய் புன்னகைத்து.
“ஹா ஹா… டைம் தான் போகாது எனக்கு. அவளுக்கும் நான் வந்துட்டா வேலையே சரியா இருக்கும்… இதுல எங்க டைம் ஸ்பென்ட் பண்ண. அதை விடுமா. நீ எப்ப கல்கத்தா வர்ற?” எனக் கேட்டார்.
“நான் சென்னைக்கு ஷிப்ட் ஆகிட்டேன்னு சொன்னேனே அங்கிள்…” மைதிலி மெல்லமாகக் கூற,
“என்னமா நாளை மறுநாள் ரகுவோட நினைவு நாள் ஆச்சே. இங்க நான் ஒரு ரிமெம்பரன்ஸ் மீட் மாதிரி ஏற்பாடு பண்ணலாம்னு இருக்கேன். அவன் கூட ஒர்க் பண்ணவங்களும் அதுல கலந்துக்க ஆர்வமா இருக்காங்க. அதுவும் இல்லாம, மகிழ் குட்டியையும் எல்லாரும் பார்த்த மாதிரி இருக்கும். அவளுக்கும் இது புரியிற வயசு தான. தன்னோட அப்பாவைப் பத்தி தெரிஞ்சு அவளும் பெருமைப்படணும்” என்றார் கம்பீரமாக.
“அவளுக்கு நாலு வயசு தான் அங்கிள். என்ன புரியும்னு எனக்கு தெரியல. நான் மட்டும் வரேன்” ஒப்புக்காக சிரித்த இதழ்கள் கூட இப்போது இறுகி விட்டது.
“நோ நோ… நீ கண்டிப்பா மகியை கூட்டிட்டு வரணும்… இது மேஜர் மோனியோட ஆர்டர். நாளைக்கே இங்க வந்துடு மைதிலி” என்று கண்டிப்புடன் கூறியவர் போனை வைத்திருக்க, அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த மூச்சை உஷ்ணத்துடன் வெளியிட்டாள்.
பிரஷாந்தும் அவளைக் கவனித்துக் கொண்டு தானே இருந்தான்.
“மைலி என்ன ஆச்சு? யார் போன்ல?” எனக் கேட்டதும்,
“நானும் மகியும் நாளைக்கு கல்கத்தா போறோம்” என்றாள் மொட்டையாக.
சரியாக அப்போது அவள் இறங்க வேண்டிய இடமும் வந்திருக்க, காரை நிறுத்தியவன், “என்ன திடீர்னு எதுவும் கேஸ் விஷயமா? அதுக்கு எதுக்கு மகி? அவளை விட்டுட்டுப் போ” எனப் புரியாமல் கேட்டான்.
“கேஸ் விஷயம் இல்ல. நாளைன்னக்கி ரகுவோட நினைவு நாள். கல்கத்தால ஒரு ரிமெம்பரன்ஸ் மீட் ஏற்பாடு பண்றாங்க போல. அவங்க மகியையும் எதிர்பாக்குறாங்க… சோ நாளைக்கு அவளை கூட்டிட்டுப் போறேன்” என்று தகவலாகக் கூறியவள் இறங்கப் போனாள்.
“நானும் வரட்டுமா?” கேட்டவனின் குரலில் என்ன இருந்ததென்று புரியவில்லை. ஆனால் அவன் கண்களில் ஒரு வித தவிப்பு அலைபாய்ந்தது.
“எதுக்கு?: என்றவளுக்கோ இன்னும் திருமணமான செய்தியை யாருக்கும் கூறவில்லையே என்றது வேறு உறுத்தியது.
அவளை இயல்பாக்க முயன்றவன், “வயசுப் பையனை வீட்ல தனியா விட்டுட்டுப் போறேன்னு சொல்றியே. எனக்கு பாதுகாப்பு இல்லை மைலி. சோ என்னையும் கூட்டிட்டுப் போ. நானும் மகி கூட சமத்தா இருந்துப்பேன்…” என்றவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“சில நேரம் மகியை கூட சமாளிக்கலாம் ஆனா உங்களை சமாளிக்க முடியல” எனப் பல்லைக்கடித்தவள், “நீங்க வயசுப் பையனா? எனக்கும் உங்களுக்கும் ஒரே ஏஜ் தான” என்றாள் முறைப்பாக.
“ஆமா நமக்கு அப்படியே அறுபத்தஞ்சு முடிஞ்சு கிழடா இருக்கோம் பாரு. வீ ஆர் ஜஸ்ட் 26 மைலி” என உதட்டைச் சுளித்தான்.
இறுதியில் அவளை பேசி பேசி கரைத்தே கல்கத்தாவிற்கு செல்லவும் ஒப்புதல் வாங்கி விட்டான்.
அவனது சில உடமைகள் இன்னும் வில்லாவில் இருக்க, அங்கு சென்றவனை தேவஸ்மிதா பிடித்து விட்டாள்.
“என்ன புது மாப்பிள்ளை சார் உங்களை பார்க்கவே முடியிறது இல்ல இப்போல்லாம்” என்று நக்கலாகக் கேட்டவளிடம்,
“ஹே என்னை என்ன உன்னை மாதிரி நினைச்சியா. நான் என் ஆள் கூட கல்கத்தா போகப் போறேன் குரங்கு. கல்கத்தா ஸ்பெல்லிங் தெரியுமா உனக்கு… கல்யாணம் ஆகி இவ்ளோ நாள் ஆகுதே தரமங்கலம் தவிர எங்கயாவது போயிருக்கியா உன் ஆளோட. நான் அப்படி இல்ல. மீ கோயிங் மங்கி… வித் மை லவ்” என்று யாரடி நீ மோகினி தனுஷ் பாணியில் சீன் போட்டான்.
தேவா அவனை கேவலமாகப் பார்த்து, “டேய் என்னமோ ஹனிமூன் போகப் போறது மாதிரி பிலிம் காட்டுற. அவள் எக்ஸ் புருஷன் எக்ஸ்பயர் ஆனதுக்கு பேக் கிரவுண்ட் மியூசிக் போட தான் உன்னையவே கூட்டிட்டுப் போறா…” என்று நொடித்துக் கொண்டாள்.
“மூடிட்டு கிளம்பு” என்று அவளை முறைத்து அனுப்பி விட்டவன், மறுநாள் மனைவி குழந்தை சகிதம் கல்கத்தாவிற்கு சென்றான்.
மைதிலியின் முகமே முற்றிலும் சரி இல்லை. அதில் அவன் அவளை தொந்தரவு செய்யாமல் மகிழினியிடம் மட்டும் பேச்சு வார்த்தை வைத்துக் கொண்டான்.
நேராக அவர்கள் சென்றது மோனி ஜாயின் வீட்டிற்குத் தான். அவரும் அவரது மனைவி ஷோமாவும் இன்முகத்துடன் அவர்களை வரவேற்றனர்.
ரகுவைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வம் மிகுந்தே பிரஷாந்தும் வந்தான். ஆனால், இவர்கள் வரவேற்கும் மொழி கூட புரியவில்லையே… இது என்னடா நமக்கு வந்த சோதனை என்று நொந்தாலும், எல்லாம் புரிந்த மாதிரியே சிரித்து வைத்தான்.
அவன் விழிப்பதைப் பார்த்ததுமே மோனி ஜாய் கேட்டு விட்டார். “சாருக்கு பெங்காலி வராதோ” என்று.
“அட நீங்க தமிழ் பேசுவீங்களா. ஹப்பா இப்ப தான் நிம்மதியா இருக்கு…” என்றவனிடம் “நீங்க மைதிலிக்கு என்ன வேணும்?” என்று கேட்டார்.
“நான் மைதிலிக்கு ஹஸ்பண்ட் வேணும் அங்கிள்” என்று சாவகாசமாக சொல்ல, “ஓ” என்றவர் சில நொடிகள் கழித்தே அர்த்தம் புரிந்து மைதிலியைப் பார்த்தார்.
“டூ வீக்ஸ் ஆகுது அங்கிள்” என்றவளிடம், “சந்தோசம்மா! எங்ககிட்ட சொல்லிருக்கலாமே…” என்றிட, ஷோமாவும் வெகுவாய் மகிழ்ந்தார்.
“ரொம்ப ஹேப்பி மைதிலி. உனக்கும் குட்டிக்கும் கண்டிப்பா ஒரு துணை வேணும். நல்ல முடிவு எடுத்த. பையனைப் பார்த்தாலும் நல்ல மாதிரியா இருக்கு” என்று வெகுவாய் மகிழ்ந்தவரிடம் தொண்டையை செருமிய மோனி, “முதல்ல சாப்பாடு எடுத்து வை ஷோமா” என்றார்.
“இதோ போறேன்… நீங்க ப்ரெஷ் ஆகிட்டு வாங்க” என அவர்களுக்கு ஒரு அறையைக் காட்டினார்.
மகிழினி தான் “அம்மா இது யார் வீடுமா. இங்க எதுக்கு வந்துருக்கோம். எனக்கு மாமா வீட்டுக்குப் போகணும்” என்றாள் உதட்டைப் பிதுக்கி.
மைதிலி பதில் கூறும் முன்னே, “இவங்களும் உனக்கு தாத்தா பாட்டி மாதிரி தான் மகி பேபி. நாளைக்கு நைட்டு நம்ம கிளம்பிடலாம். இங்க சுத்திப் பார்க்கவும் நிறைய இடம் இருக்கு தெரியுமா…” என்று ஆசை காட்டி அமைதி படுத்தினான்.
பின் மைதிலியிடம் திரும்பி “இவங்க யாரு மைதிலி?” எனக் கேட்க,
“ரகுவோட வெல்விஷர்ஸ். சின்ன வயசுல இருந்து ரகுவை தெரியும் அங்கிளுக்கு” என்றாள்.
“ஓ… அந்த ஆண்ட்டி நல்ல டைப்பா இருக்காங்க. ஆனா அந்த அங்கிள் கொஞ்சம் முசுடோ? ரொம்ப விறைப்பா இருக்காரே!” நொடியில் கணித்து விட்டவனை விழி அகல பார்த்தவள், “அவர் அப்படி தான். ஆர்மில மேஜரா இருந்தவருல. சோ அவருக்கு எல்லாமே பெர்பக்ட்டா இருக்கணும். இங்க கூட மிலிட்டரி ரூல் தான்” என விளக்கமளித்தாள்.
“ஓஹோ… அப்போ ரகுவும் அவ்ளோ ஸ்ட்ரிக்ட்டா?” கேட்டபிறகே நாக்கைக் கடித்துக் கொண்டான்.
அவனை சலனமற்றுப் பார்த்தவளிடம் “அது… நீயும் எப்ப பார்த்தாலும் உர்ருன்னு விறைப்பா இருக்கியே. அதான் ரகுகிட்ட இருந்து வந்ததான்னு தெரிஞ்சுக்க…” என்று இழுத்தான்.
“அவ்ளோ ஸ்ட்ரிக்ட் எல்லாம் இல்ல…” என்றவள் மேலும் அவன் கேள்வி கேட்கும் முன் விருட்டென வெளியில் சென்று விட்டாள்.
“மைதிலி வா சாப்பிடலாம்” ஷோமா அழைத்ததில், “மகி” என மகளை அழைத்தாள்.
மகிழினியைத் தூக்கிக் கொண்டு வந்த பிரஷாந்த், “வீட்ல நீங்க ரெண்டு பேர் தான் இருக்கீங்களா ஆண்ட்டி?” எனக் கேட்டான்.
“எங்களுக்கு ஒரு பொண்ணு இருக்கா. இப்ப கல்யாணம் ஆகி மாப்பிள்ளையோட அமெரிக்கா போய்ட்டா” என்றிட, அதனைக் காதில் வாங்கியபடி தட்டில் வைத்த உணவை மகளுக்கும் ஒரு வாய் கொடுத்து விட்டு தானும் உண்டான்.
மோனி ஜாயும் அவர்களுடன் தான் அமர்ந்திருக்க, பிரஷாந்தை பார்வையால் அளந்தார். அதனை உணர்ந்தாலும் அவன் கருத்தில் கொள்ளவில்லை.
“இன்னும் மகிழ்குட்டி அவளா சாப்பிட்டுப் பழகலையா மைதிலி?” எனக் கேட்டதும்,
அப்போது தான் ஒரு விள்ளலை வாயில் வைக்கப் போனவள், “சாப்பிடுவா அங்கிள்… புது இடம்னு அனீஸியா பீல் பண்றா” என்றதும் அவர் அமைதியாகி விட்டார். ஒரு வித இறுக்கத்துடன் அங்கு அனைவரும் உண்டு முடிக்க, பின் ஆசுவாசமாக சோபாவில் அமர்ந்தனர்.
மைதிலி அடுக்களையில் ஷோமாவிற்கு உதவி புரிய, சிறிது நேரத்தில் மகிழினியும் அங்கு பழகி விட்டாள்.
மோனி ஜாய் அவளிடம் பேசியபடி மடியில் அமர வைத்துக்கொண்டு, “குட்டி ஸ்கூலுக்கு எல்லாம் கரெக்ட்டா போவீங்களா?” என்றார் கொஞ்சலாக.
“ம்ம் போவேன் தாத்தா. அங்கிள் காலைல வருவாங்க ஸ்கூல்ல விட… சாயந்தரம் அம்மாவும் அங்கிளும் சேர்ந்து வருவாங்க. அப்பறம் நான் மாமா வீட்டுக்குப் போய்டுவேன். அங்க குட்டிப் பாப்பாலாம் இருக்காங்க அவங்க கூட விளையாடுவேன்” என்று தலையை ஆட்டிக் கூறிக் கொண்டிருந்தாள்.
“வெரி குட் நீ உன் அப்பாவைப் பாக்குறியா?” என்று கேட்டதில் அவள் விழித்தாள்.
பிரஷாந்த் புருவம் சுருக்கிட, மோனியோ ஒரு போட்டோ பிரேமை எடுத்து வந்து சிறுமியிடம் காட்டினார்.
அழகும் வசீகரமும் கலந்த புன்னகையுடன் ஆர்மி உடையில் மின்னினான் ரகுவீர்.
“இதான் உன் அப்பா…” புகைப்படத்தைக் காட்டியதும் மகிழினி இன்னுமாக விழித்தாள்.
அதிலேயே மைதிலி ரகுவின் புகைப்படத்தைக் கூட அவளிடம் காட்டவில்லை எனப் புரிந்து விட, மகிழினியோ “தாத்தா இவங்க இல்ல என் அப்பா. பிரஷாந்த் அங்கிள் தான என் அப்பா… அவங்க தான் என்னை குளிக்க வச்சு சாப்பாடு ஊட்டி ஸ்கூல்ல விடுவாங்க. எனக்கு கதை சொல்லி தூங்க வைப்பாங்க. எனக்கும் அம்மாவுக்கும் சமைச்சு தருவாங்க. எங்களுக்காக கார் வாங்கிருக்காங்க. அதுல என் பேர் கூட இருக்கே” என்று பெருமையுடன் கூறியவளை கண்டு பிரஷாந்த் உருகினான். கர்வப்புன்னகையும் அவன் இதழ்களில் நிரந்தரமாக வீற்றிருந்தது.
இங்கு அனைத்தையும் காதில் வாங்கியபடி அடுக்களையில் நின்றிருந்த மைதிலி வேலையை முடித்து விட்டு அங்கு வர, மோனி அவளை பார்வையால் எரித்தார்.
“என்ன மைதிலி இது… ரகு இந்த நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவன். அவன் பேரை கூட நீ அவன் பொண்ணுக்கிட்ட சொல்லாம இருக்குறது சரி இல்ல” என்று அதட்ட, அது என்னவோ பிரஷாந்திற்கு பிடிக்கவில்லை.
அவள் என்ன உயிருடன் இருக்கும் கணவனையா மறைத்து வைத்தாள்?
“சொல்ல கூடாதுனு இல்ல அங்கிள். அவளுக்குப் புரியிற வயசு வரும் போது அவளே தெரிஞ்சுக்கட்டும்னு விட்டேன்…” இயல்பாக அவள் பதிலளிக்க,
“அவளுக்குப் புரியிற வயசு எல்லாம் வந்தாச்சு உனக்கு தான் இன்னும் வரல. மெச்சூரிட்டி இன்னும் கூட உனக்கு வரல மைதிலி” என்றதில் அவளுக்கு சுருக்கென இருந்தது.
பிரஷாந்த் இடைபுகுந்து, “மெச்சூரிட்டியோட அளவு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி அங்கிள். என்னை பொறுத்தவரை சிங்கிள் பேரண்ட்டா ஒரு பெண் குழந்தையை வளர்க்குற மெச்சூரிட்டி எல்லோரை விட அவளுக்கு நிறையவே இருக்கு.
பேபிக்கிட்ட எதை சொல்லணும் எதை சொல்லக்கூடாது, எதை எப்ப சொல்லணும்ன்ற தெளிவு, வளர்க்குற அவளுக்கு தெரியும் அங்கிள். அதுல நீங்களோ நானோ இல்ல வேற யாருமோ தலையிட அவசியம் இல்ல. நானே அவள் ஓவர் மெச்சூர்டா இருக்கானு சொல்லிட்டு இருக்கேன். நீங்க அவள் பேசுற ரெண்டு மூணு வார்த்தையையும் கட் பண்ணி விட்டுருவீங்க போல” என விளையாட்டாக பேசியபடி அவர் பேச்சுக்களை மறுத்தான்.
அதில் சமாதானம் ஆகாத மோனி, “என்ன இருந்தாலும் அப்பாவோட பேரை சொல்லாம வளர்க்குறது தப்பு தான பிரஷாந்த். நாளைக்கு உங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தாலும் நீங்களும் அதான் எதிர்பார்ப்பீங்க…” என்றிட, மைதிலிக்கு எரிச்சல் எழுந்தது.
“அவர் மகியவே அவரோட பொண்ணா தான பாக்குறாரு. நான் அவரை அங்கிள்னு கூப்பிட சொல்லியும் அப்பா பிளேஸ்ல தான் அங்கிள் இருக்காரு. இங்க யாரை எப்படி கூப்பிடுறோம், இரத்த சொந்தமான்றது முக்கியம் இல்ல. அவங்க அவங்க கடமையை செஞ்சா தான் அந்த உறவுக்கு மதிப்பு… நாளைக்கு வரைக்கும் இங்க இருந்து என் கடமையை செஞ்சுட்டு கிளம்பலாம்னு இருக்கேன். இருக்கணுமா வேணாமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க!” திட்டவட்டமாக நிமிர்வுடன் பேசியவளை ஷோமா வியப்புடன் பார்த்தார்.
இதுவரை கணவரை எதிர்த்துப் பேசியதே இல்லை அவள். தைரியம் இல்லை என்றதை விட, பேசி பிரயோஜனம் இல்லையென்பது அவள் கருத்து.
ஒற்றைப் புருவம் உயர்த்தி மைதிலியை மெச்சுதலாகப் பார்த்த பிரஷாந்திற்க்கோ ‘அய்யயோ என் பொண்டாட்டி எனக்கு சப்போர்ட் பண்றாளே’ என்று கத்த வேண்டும் போல இருந்தது. சென்னையில் இருந்திருந்தால் கத்தி இருப்பான்.
‘இங்க சும்மாவே இந்த மனுஷன் மெச்சூரிட்டி அது இதுனு நம்மகிட்ட இல்லாத ஐட்டமா பேசிட்டு இருக்காரு. கத்துனா என்னைத் தேச துரோகின்னு முத்திரை குத்துனாலும் குத்துவாரு…’ என்று மிரண்டவன் சாதுவாக இருந்து கொண்டான்.
உயிர் வளரும்
மேகா