436 views

தேவன் 7

 

ஊர் பெரியவர்கள் அனைவரும் பேசி முடித்து குலதெய்வ கோவில் திருவிழாக்கு ஏற்பாடு செய்து விட்டனர். வரிப்பணம் கட்டுவதில் முதல் உரிமையாக சண்முகம் நிற்க, அவருக்கு அடுத்ததாக பாண்டியன் நின்றார். 

 

 

இந்த முறை சண்முகம் தன் மகன் கிருஷ்ணனை வரி பணம் கட்டச் சொல்ல, “நீங்களே கட்டுங்க ப்பா.” என்றான்.

 

“எனக்கு அப்புறம் எல்லாமே நீ தான். நான் இருக்கும் போதே இதை நீ செஞ்சினா மனசுக்கு நிறைவா இருக்கும்.” பக்குவமாக மகனிடம் எடுத்துச் சொல்ல, தந்தையை மீற விரும்பாதவன் சம்மதித்தான்.

 

 

கிருஷ்ணனின் காதில், “அவ்ளோ நல்ல எண்ணம் உங்க அப்பாக்கு இல்ல கிருஷ்ணா. நீ எங்கடா வெளி ஆளு பொண்ண பார்த்திட போறன்னு இப்பவே மறைமுகமா உன்ன கட்டி போடுறாரு.” மச்சான் அறியாது கூறினார் பாண்டியன்.

 

“அதெல்லாம் தெரியுது மாமா. என்ன பண்ண அப்பாவ எதிர்த்து பேச முடியல.” இருவரும் பேசிக் கொண்டிருப்பதை கவனித்த சண்முகம்,

 

“மச்சான் அவன் கிட்ட என்ன பேச்சு. அடுத்தது நீங்க தான் வரி பணம் போடணும், வாங்க.‌” என்று அழைத்தார்.

 

அவர் நகராமல் தயக்கத்தோடு நிற்க, “என்ன மச்சான் யோசனை.” அவர் மனதில் இருப்பது தெரியாமல் கேட்க,

 

“இல்ல மச்சான் உங்கள மாதிரி நானும் என் மகனை விட்டுக் கொடுக்கலாம்னு யோசிக்கிறேன்.” என்றார் நிதானமாக.

 

“அதெல்லாம் சரி தான் மச்சான். ஆனா, என் மாப்பிள்ளை தான் இங்க இல்லையே!” 

 

“இங்க தான் இருக்கான் மச்சான்.”

 

“ஊர்ல இருந்து எப்ப வந்தாரு மாப்பிள்ளை. என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல.” மருமகனின் வரவை அறிந்து வாயெல்லாம் பல்லாக இருந்தது சண்முகத்திற்கு.

 

 

அதை பாண்டியன் உணர்ந்து… அடுத்து வரப்போகும் கடுமையை பார்க்க தயாராக இருந்தார். பதில் சொல்லாமல் இருக்கும் மச்சானை மீண்டும் கேட்க, “சின்ன மகன் இன்னும் ஊர்ல இருந்து வரல மச்சான். என் பெரிய மகன் இங்க தான் இருக்கான். இந்த வருஷமாது கொஞ்சம் விட்டுக் கொடுத்து போனீங்கன்னா அவன விட்டு வரி பணத்தை போட சொல்லுவேன்.” என்றதும் கையில் இருந்த தாம்பள தட்டை தூக்கி எறிந்து தன் கோபத்தை காட்டினார் சண்முகம்.

 

“என்ன மச்சான் பேசுறீங்க? உங்களுக்கு பிறந்த மகன் தான் வரி பணம் கட்டணம். யாரோ ஒருத்தனுக்கு பொறந்தவன் எப்படி கட்டுவான். இது என்ன முறை!” என்று அவர் சத்தமிட்ட பின்பும் பாண்டியன் நிதானமாக,

 

“பிறந்த மகன் தான் வரி பணம் கட்டணும்னு எந்த வழக்கு முறையும் நம்ம வழக்கத்துல இல்ல மச்சான். என் வாரிசு யாராயிருந்தாலும் வரி பணம் கட்டலாம். தேவநந்தன் தான் என்னோட மூத்த மகன். பிறந்தது வேணா வேற ஒருத்தனுக்கா இருக்கலாம். மூனு வயசுல இருந்து இந்த நெஞ்சில  தூக்கி போட்டு  வளர்த்து இருக்கேன். சித்தப்பான்னு அவன் கூப்பிட்டதுக்கப்புறம் தான் அப்பானு கூப்பிட எனக்கு ஒரு மகனே வந்தான்.” என்று பேசினார்.

 

 

“என்னப்பா இது புதுசா பேசிக்கிட்டு. வேற ஒரு ஜாதி பையன கல்யாணம் பண்ணிக்கிட்டு நம்ம சாமிக்கு பொங்கல் வச்சா எப்படி சாமி ஏத்துக்கும். தெய்வ குத்தம் ஏதாவது ஆகி இந்த ஊருக்கு ஆபத்து வந்துட்டா எல்லாருக்குமே  பிரச்சனை.” என்று கோவில் விஷயமாக பேச வந்த ஒருவர் பேசினார்.

 

அவரைப் போலவே வரி பணம் கட்ட வந்த மற்றொருவர், “அப்படி சொல்லுங்க!. இவங்க பாசத்தை காட்டுறன்னு ஏதாவது பண்ண போயி சாமி நம்மள தண்டிக்க போகுது.” என்றார்.

 

 

இருவரின் சம்பாசனைகளைக் கேட்ட சண்முகம் தன் மச்சானை முறைத்துக் கொண்டு, “நீங்க என் மச்சானா இருக்கலாம் அதுக்காக நீங்க சொல்ற எல்லாத்தையும் என்னால கேட்க முடியாது. உங்க சொந்த மகன் வரி பணம் கட்டுறதா இருந்தா கட்டட்டும். இல்லையா நீங்க கட்டுங்க. அதை விட்டுட்டு வேற ஒருத்தன் கட்டுறதை ஏத்துக்க முடியாது.” தெளிவாக பேசி விட்டார்.

 

“தேவநந்தன் வேற ஒருத்தன் இல்ல உங்க தங்கச்சி மகன்.” புரிய வைக்கும் நோக்கோடு பேசினார் பாண்டியன்.

 

“அதெல்லாம் கல்யாணம் பண்ணி வேற ஒரு சாதி ரத்தம் கலக்காத வரைக்கும்.”

 

“உங்க ரத்தம் இல்லாம தேவநந்தன் வந்திருக்க முடியாது.”

 

 

இருவரும் முட்டிக் கொள்வதற்கு முன் சமாதானப்படுத்த நினைத்த கிருஷ்ணன், “மாமா எதுக்கு வீணா சண்டை விடுங்க. நீங்க என்ன பேசுனாலும் இங்க இருக்க யாரும் மாறப்போறது இல்ல. நல்ல காரியம் நடக்கும் போது நம்மளால பிரச்சனை வேணாம்.” என்றான் நல் மனதோடு.

 

“படிச்சவன் மாதிரி பேசு கிருஷ்ணா. காலம் எங்க போயிட்டு இருக்கு இன்னும் இந்த விஷயத்தை பிடிச்சு தொங்கிட்டு இருக்காங்க. தேவநந்தன் தான் வரிப்பணம் கொடுப்பான் ஏத்துக்குறதா இருந்தா கோவில் திருவிழாவுல நான் கலந்துக்கிறேன். இல்லையா என் மகன் மாதிரி ஒதுங்கி நின்னுக்கிறேன்.” என்றவர் அவர்களை விட்டு ஒதுங்கி நின்று கொண்டார்.

 

 

சபையில் பேச்சுக்கள் ஒரு சில பாண்டியன் பக்கம் நின்றாலும் பெரும்பாலும் சண்முகம் பக்கமே நின்றது. கிருஷ்ணனுக்கு தந்தை மீது கோபம் இருந்தாலும் அவரை விட்டுக் கொடுக்க முடியாமல் அமைதி காத்தான். கடைசியாக ஒருமுறை பாண்டியனிடம் அனைவரும் பேசி பார்க்க, அவரோ சொன்ன வார்த்தையில் உறுதியாக இருந்தார். குழு  ஆலோசனைக்கு பிறகு அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட, பாண்டியனும் நிராகரித்துச் சென்றார்.

 

 

வீட்டிற்கு வந்த பாண்டியன் நடந்த மொத்தத்தையும் மனைவியிடம் பேசி வருத்தப்பட்டார். கணவன் பேசியது சரியாக இருந்தாலும் இந்த வருடம் தான் கோவிலுக்கு செல்ல முடியாததால் தர்ம சங்கடமான நிலையில் அமர்ந்திருந்தார் வள்ளி. மறுநாள் இந்த சம்பவங்களை பரிமளம் மகளிடம் சொல்லிக் கொண்டிருக்க, அவளோ தந்தை மீது ஆத்திரத்தில் இருந்தாள்.

 

 

 

இந்த வருட கோவில் திருவிழாவில் தானும் கலந்து கொள்ள கூடாது என்ற உறுதி மனதில் உருவாக, அதை கலைக்க போகிறாள் இன்னும் இரண்டு தினங்களில்.

 

 

அரசல் புரசலாக நடந்த பிரச்சனைகள் அன்னம் காதிற்கு வந்தது. அவர் ஒரு வார்த்தை புலம்பவில்லை அதை நினைத்து. தன்னை ஒதுக்குபவர்கள் முன்பு வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதே அவரின் எண்ணமாக இருப்பதால் எப்போதும் போல நடந்து கொண்டிருந்தார். சின்ன வருத்தம் பல வருடங்களாக கோவிலுக்குள் நுழையாமல் இருப்பது மட்டுமே.

 

 

அன்னை அறிந்த விஷயம் மகன் அறிய மாட்டானா! எதுவும் நடக்காதது போல் இல்லம் வந்தவன் அன்றைய கணக்கு வழக்குகளை காட்டிக் கொண்டிருந்தான் அன்னத்திடம். தினமும் கணக்கு காட்டுவதற்காகவே ஒரு மணி நேரம் ஒதுக்கி வைப்பான். எவ்வளவு சம்பாதிக்கிறானோ அதில் ஒரு பைசா குறைவில்லாமல் அப்படியே கணக்கையும் காட்டி விடுவான் அன்னையிடம்.

 

 

பலமுறை இதை அவர் கண்டித்தாலும் தேவநந்தன் மாறுவதாக இல்லை. தோட்டத்தில் பயிரிட்ட சோளக்கதிர்கள் அறுவடை செய்யும் நிலையில் இருப்பதால் அதற்கான வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தவன் முன்பு நின்றாள் யாழினி.

 

 

“என்ன பாப்பா ஊருக்கு கிளம்பிட்டியா.” பஞ்சு மூட்டையை கோணியில் அடக்கி தைத்தவாறு கேட்க,

 

“இல்ல மாமா” என்றாள் சோகமாக.

 

அதில் நிமிர்ந்து அவள் முகம் பார்த்தவன் சிரிப்போடு, “திருவிழா வரதால லீவு போட சொல்லிட்டாரா.” மாமனின் நடவடிக்கைகளை கணித்து விட்டான் அழகாக.

 

“ஆமா மாமா. தப்பிச்சு எப்படியாது ஓடலாம்னு பார்த்தா இப்படி பண்ணிட்டாரு.” என்றவள் மேல் பஞ்சு சில விழ,

 

“ஐயோ! என் மேல எல்லாம் ஒரே பஞ்சு. ச்சீ!” ஏதோ மேலே படக்கூடாது பட்டது போல் தட்டி விட்டு குதித்தாள் யாழினி.

 

“என்னமோ சாக்கடை பட்ட மாதிரி மூஞ்சிய சுழிக்கிற. அது வெறும் பஞ்சு தான் பாப்பா.” 

 

“இதெல்லாம் எனக்கு பிடிக்காது மாமா.” என்றவள் முகத்தைத்தான் ஆழ்ந்து நோக்கி கொண்டிருந்தான் தேவநந்தன்.

 

“நீ எதுக்கு மாமா இந்த மாதிரி வேலை எல்லாம் செஞ்சுக்கிட்டு இருக்க. அதான் இப்போ நல்ல வருமானம் வருதுல வேலைக்கு யாராவது ஆள் போட வேண்டியது தான.”

 

 

“அவங்களுக்கு கூலி கொடுக்கிற காசுக்கு நானே செஞ்சா இன்னும் வருமானம் பார்க்கலாம் பாப்பா” என்றவன் வார்த்தையில் கடுப்பானவள்,

 

“இப்படி எல்லாம் எதுக்கு மாமா கஷ்டப்படுற. முதலாளியா ஜம்முனு நல்லா டிரஸ் பண்ணி தோரணையா இருக்க பாரு. நீ இப்படி இருக்குறதால தான் என் அப்பா உன்னை மதிக்க மாட்டாரு.” என்றாள் இன்னும் சுழியை மாற்றாத முகத்தோடு.

 

 

அவன் எதுவும் பேசாமல் வேலையை கவனித்துக் கொண்டிருக்க, “உன்கிட்ட தான் மாமா பேசிக்கிட்டு இருக்கேன்” என்றாள் அவனிடத்தில் இன்னும் நெருங்கி.

 

“தோரணைய பார்த்து வரதுக்கு பேரு மரியாதை இல்ல பாப்பா. நம்ம குணத்தைப் பார்த்து தானா கிடைக்கணும். இன்னைக்கு முதலாளியா பத்து பேருக்கு வேலை தர முடியும். ஆனா ஒரு காலத்துல நான் கையேந்தி நின்னு இருக்கேன். பழசை மறந்துட்டு இன்னைக்கு பத்து பேர அடிமையா வச்சிருக்க மனசு வரல பாப்பா.” என்றவன் இப்போதும் அவளை பார்க்காமல் வேலையைத்தான் கவனித்துக் கொண்டிருந்தான்.

 

 

“உன்னை யாரு மாமா அடிமையா வச்சிருக்க சொன்னா. உன்னைய கொஞ்சம் மாத்திக்கன்னு சொல்றேன் அவ்ளோ தான்.”

 

“இதான் பாப்பா நான். இதோட என்னை ஏத்துக்கிற உண்மையான அன்பு எனக்கு போதும். ஊருக்காகவும், உறவுக்காகவும் முகமூடி போட்டுக்க என்னால முடியாது.” 

 

 

“உன்னை எல்லாம் மாத்த முடியாது மாமா.” சளிப்போடு அவள் இருக்கையில் அமர,

 

“உனக்கு இதெல்லாம் புரியாது பாப்பா. தேவநந்தன் சாகுற வரைக்கும் மனசுக்கு மட்டும் தான் கட்டுப்பட்டு நடப்பான். இவன உனக்கு பிடிக்கலன்னா பேசாத பாப்பா.” அவன் சாதாரணமாகவே அவளிடம் இவ்வார்த்தையை உதிர்த்தான்.

 

யாழினியின் முகம் அப்படியே சுருங்கி விட்டது அவன் வார்த்தையில். இருக்கையில் இருந்து எழுந்தவள், “நான் எப்பவாது அப்படி உன் கிட்ட சொல்லி இருக்கனா மாமா. உன்னை எல்லார் மாதிரியும் பார்க்கணும்னு எனக்கும் ஆசை இருக்க தான செய்யும். உடைய மாத்திக்கிட்டா குணம் மாறிடுச்சுன்னு அர்த்தமில்லை மாமா.” என்ற யாழினி பேச்சில் பிசிறுகள் பல அடித்தது.

 

மாமன் மகளின் மனம் வருந்தி விட்டது என்பதை உணர்ந்தவன், “பாப்பா நான் உன்ன சங்கட படுத்தணும்னு சொல்லல. நீ நல்லா படிக்கிற பொண்ணு உனக்கு இதெல்லாம் பிடிக்காதுல. மாமனுக்காக சகிச்சுக்கிட்டு இருக்க வேணாம்னு சொன்னேன்.” என்றான் அவள் விழிகள் கலங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாமல்.

 

“திரும்பவும் என்னை புரிஞ்சுக்காம பேசாத மாமா. உன்கிட்ட எதுக்கு நான் சகிச்சுக்கிட்டு பேசணும். உன் மனசுல என்னை பத்தி இப்படி தான் நினைச்சுக்கிட்டு இருக்கியா. ஆமா! எனக்கு இந்த ஊர் பிடிக்காது. இங்க நடக்குற விஷயங்க பிடிக்காது. அதுக்காக உன்னை பிடிக்காம போயிடுமா.” யாழினியின் கண்களில் இருந்து உவர்நீர் கசிய, பதறி விட்டான் தேவநந்தன்.

 

“கிட்ட வராத மாமா. உன் மனசுல என்னை பத்தி தப்பா நிறைய விஷயங்கள் இருக்குன்னு இப்ப தான் புரியுது. ஊருக்கு வரதே உன்னை பார்க்க தான். இனிமே வரமாட்டேன் வந்தாலும் உன் முகத்துல முழிக்க மாட்டேன்.” என்றவள் அவன் அழைப்பதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் விழியில் வழியும் கண்ணீரை அடக்கிக் கொண்டு சென்று விட்டாள்.

 

அம்மு இளையாள்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
24
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *