514 views

 அத்தியாயம் 6 ❣️

இளந்தளிரைக் கண்ட கோவர்த்தனன் வாகனத்தின் இயக்கத்தை நிறுத்தினான்.

” நண்பா ஏன் வண்டிய திடிர்னு நிறுத்திட்ட ? ” 

அதிலிருந்து இறங்கிய ஹரீஷ் தோழனிடத்தில் விசாரித்தான்.

கோவர்த்தனன் திரும்பி நண்பனைப் பார்த்து ,

” அதுவா ! ” என்று சொல்ல வாயெடுக்கும் போதே இளந்தளிரின் இருசக்கர வாகனம் இவர்களுக்கு அருகில் வந்திருந்தது.

ஹரீஷின் கேள்விக்கு விடையளிப்பதை ஒத்தி வைத்து விட்டு அவளைப் பார்த்துப் புன்னகைத்தான் கோவர்த்தனன்.

அவளும் இவனைப் பார்த்துக் கொண்டே தான் வண்டியை ஓட்டினாள்.

” இப்போ புரிஞ்சுடுச்சு ” 

ஹரீஷ் அவளது வாகனத்தின் முன்னே வந்து திடுமென போய் நின்றான். அதை எதிர்பாராத தளிர் சட்டென்று வண்டியை நிறுத்த வேண்டியதாயிற்று.

அவனைத் திட்டத் தொடங்குவதற்குள் ஹரீஷ் பேச ஆரம்பித்து விட்டான்.

” ஹாய் ஃப்ரண்ட் ! ” 

அறிமுகப்படலத்தை ஆரம்பித்து வைக்க , கோவர்த்தனனோ ஹரீஷின் செயலைக் கண்டு அதிர்ச்சியுற்றான்.

” அடேய் ஏன்டா ! ” 

இளந்தளிரின் குணத்தைப் பார்த்த ஒரு முறையிலேயே கண்டு கொண்டதால் அவளுக்கு இப்படியான அணுகுமுறைகள் அவ்வளவு பிடித்தம் கிடையாது என்பதை புரிந்தும் கொண்டு இருந்தான் கோவர்த்தனன்.

” ஃப்ரண்ட்டா ? ” 

இதழ் வார்த்தைகளை வெளிப்படுத்தியதென்னவோ ஹரீஷின் அருகில் இருந்த கோவர்த்தனனைப் பார்த்துத் தான் !

அவன் தான் தன்னைப் பற்றி இவனுக்குக் கூறியிருக்க வேண்டும் என்று யூகித்தவள் அவனை முறைக்கவும் தவறவில்லை.

” கவுத்துட்டியேடா ஹரீஷ் ! ” 

நண்பனின் காதுகளுக்குள் ரகசியமாக இதைக் கூறிய பிறகு திருதிருவென முழித்தான் கோவர்த்தனன்.

” இது உங்க வேலை தான ? ” 

இப்போது நேரடியாக கேள்வியால் தாக்கினாள் சம்பந்தப்பட்டவனை.

கோயிலுக்குச் சென்று கடவுளை தரிசிக்க நினைத்தவனை இங்கோ இளந்தளிர் பாவமே  பார்க்காமல் அர்ச்சித்துக் கொண்டு இருந்தாள்.

” தளிர் ! சும்மா தான் அவன்கிட்ட சொன்னேன் . வேற எந்த இன்டென்ஷனும் இல்லை ” 

இவர்கள் பேசிக் கொள்வதைக் கண்ட ஹரீஷிற்கு  தாம் தான் தேவையில்லாமல் ,  தேரை இழுத்து தெருவில் விட்டிருக்கிறோம் என்று அப்போது தான் புரிந்தது.

அதற்குள் அந்த தளிர் என்ற வார்த்தையைக் கேட்டதும் இவளுக்கு இன்னும் அவனை அர்ச்சிக்க வாய்ப்புக் கிடைத்தாயிற்று.

” தளிர்ன்னு பெட்நேம் வைக்கிற அளவுக்கு வந்தாச்சா ? ” கிடுக்குப் பிடியாய் அவனைப் பிடித்துக் கொண்டாள்.

” இப்போ நீ தான் மச்சி கவுத்துட்ட ! ” 

இந்த தடவை காதுகளுக்குள் முணுமுணுக்கும் முறை 

ஹரீஷூடையதாகி விட்டது.

” ப்ச் ! டேய் ! ” 

இவனை அதட்டியவனுக்கு அவளிடம் என்ன கூறுவதென்று தெரியாமல் போக , மறுபடியும் அவளிடமிருந்து அதே கேள்வி எழும்பியது.

” பதில் சொல்லுங்க ? ” 

தாயும் , சகோதரியும் ஏன் தந்தை கூட அவளை இளா என்று செல்லமாய் அழைப்பதுண்டு. யாரும் தளிர் என்று கூறியதைக் கேட்டதில்லை அவள்.

இந்த கோவர்த்தனன் இத்தனை விரைவிலேயே என் பெயரைச் சுருக்கி விட்டான் என்பதோடு , அவளைப் பற்றி நண்பனிடமும் விவாதித்து இருக்கிறான் என்பதையும் எவ்வாறு அவளால் ஜீரணிக்க முடியும் ? 

” சாரிங்க இளந்தளிர் ! 

பெட்நேம் – லாம் வைக்கனும்னு இல்லை. பிடிச்சிருந்துச்சு அவ்ளோ தான். இனிமே கூப்பிட மாட்டேன் ” 

சுரத்தைக் குறைந்து வந்த வாய்மொழியில் அவனது முகத்தை ஆராய்ந்தாள் இளந்தளிர்.

ஹரீஷும் , அவனும் பாவமாய்ப் பார்த்துக் கொள்ள ,

“சாரி சிஸ்டர். உங்களை எதேச்சையாக சந்திச்சதை அவன் எங்கிட்ட சொன்னான். அப்போ உங்கப் பேரையும் சொன்னான். வேற எதையும் ஷேர் பண்ணல. நானும் கேட்டுக்கல. இப்போ உங்களைப் பார்த்ததும் இவனோட எக்ஸ்ப்ரஷனைப் பார்த்து ,நான் தான் உங்ககிட்ட பேச நினைச்சேன். ஃபர்ஸ்ட் டைம் இவன் உங்களை மீட் செய்தப்போ அவ்ளோ மெச்சூர்ட் ஆக பேசினீங்கன்னு சொன்னான். உங்க ஆட்டிட்யூட் நல்லா இருக்குன்னும் தெரிஞ்சுது. அதனால் தான் உங்க வண்டியை நிறுத்தினேன். ஒன்ஸ் அகைன் வீ ஆர் ஸாரி சிஸ்டர் ! ” 

இளந்தளிரிடம் தெளிவாக விஷயத்தைக் கூறி மன்னிப்புக் கேட்ட ஹரீஷை நன்றி உணர்வுடன் பார்த்தான் கோவர்த்தனன்.

ஹரீஷின் ‘ சிஸ்டர் ‘ என்ற அழைப்பும் , அவன் கூறிய விளக்கமும் இளந்தளிருக்கு ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருந்ததால்,

அதற்கு மேல் விஷயத்தைப் பெரிதுபடுத்தாமல் , 

” ம்ம் ! இந்த தளிர்ன்றது இனிமே வேணாம் ”  

எதிரில் இருந்தவனை எச்சரித்து விட்டு , ஹரீஷிடம் திரும்பினாள்.

” சடன் ஆக வந்து வண்டி முன்னாடி நின்னா பதட்டம் , பயம் , கோபமெல்லாம் வரத் தான் செய்யும். புரியும்னு நினைக்கிறேன். எனிவேஸ் சாரி ” 

இவளும் தனது கோபத்திற்கு ஏற்ற விளக்கம் கொடுத்து விட்டு , இரு சக்கர வாகனத்தை அங்கிருந்து வேகமாக நகர்த்தினாள்.

” வண்டில ஏறு ” 

இளந்தளிர் சென்றதும் கோவர்த்தனன் ,

ஹரீஷிடம் இதை மட்டுமே கூறினான்.

நண்பன் தன் மேல் பயங்கர கோபத்தில்  இருக்கிறான் என்றுணர்ந்த ஹரீஷ் அவன் சொன்ன அடுத்த நிமிடத்தில் வண்டியில் ஏறினான்.

கோவர்த்தனன் தன்னிடம் சொன்னதாய் ஹரீஷ் மொழிந்த விஷயங்களை நினைத்துப் பார்த்த இளந்தளிர் ‘ இவ்ளோ அப்சர்ப் பண்ணி இருக்கானா ? ‘ முதலில் தோன்றியது அது தான்.

‘ இதுல பெட்நேம் வேற ‘ கோபமா ? திகைப்பா ? சொல்லொண்ணா உணர்வு உள்ளுக்குள் உதைத்துக் கொண்டு இருந்தது.

இறைச்சிக் கடை வந்துவிட , சிக்கனை வாங்கச் சென்றாள். முடிந்தளவு சீக்கிரம் வாங்கி விட்டு வீட்டிற்கு விரைந்தாள். 

மீண்டும் அவ்விருவரையும் எதிர்பார்த்து இருந்ததோ அவளது நேத்திரங்கள் ! ஏனெனில் ஏமாற்றத்தின் சுவடுகள் அவற்றில் காணக் கிடைத்ததே ! 

இதை வளர விடாமல் பார்த்துக் கொள்ள எண்ணியவள், இல்லத்தின் வாயிலில் வண்டியை நிறுத்தி விட்டு கையிலிருந்தப் பையை இவளது வாகனச் சத்தம் கேட்டதும் வெளி வந்த அன்னையிடம் கொடுத்தாள்.

” இளா ! நான் குழம்பு வைக்கிறேன். இன்னைக்கு சுபாஷினி தலைக்குக் குளிச்சிருக்கா. ஐஸ்க்ரீமை நாளைக்குச் சாப்பிட்டுக்கச் சொல்லு ” 

சிவசங்கரி சொல்லியதும் இவளுக்குள் திடுக்கிடல் . 

‘ அந்த ஃப்ரண்ட்ஸ் கிட்ட வம்பு பேசிட்டு வந்ததுல இதை மறந்துட்டேனா ! ‘ 

விரித்துப் போடப்பட்டிருந்த கூந்தலுடன் அங்கே வந்து சேர்ந்தாள் இவளது தங்கை.

” அக்கா ! ஐஸ்க்ரீம் வாங்கிட்டு வந்துட்ட தான ! ” 

வாய் கேள்வி கேட்க ,  கை பரபரத்ததால் ஐஸ்க்ரீமைத் தேட ஆரம்பித்தாள்.

அவள் துழாவிய நோக்கம் முடிவடையாமல் பைக்குள் இறைச்சியைத் தவிர வேறொன்றும் இல்லை என்பது புலப்பட்டது அவளுக்கு.

” வேகமா ஐஸ்க்ரீமை எடுத்துட்டுப் பையைக் குடுடி ” 

சிவசங்கரி அவளைத் துரிதப்படுத்தினார்.

” இந்தாங்க பை. நானும் குழம்பு வைக்க உதவி பண்றேன் ” 

அமைதியாக சமையலறைக்குச் செல்லத் திருப்பினாள் சுபாஷினி.

” சுபா  ! ப்ளீஸ் டி. மன்னிச்சு….! ” 

தங்கையின் முகவாட்டம் இளந்தளிரை இம்சித்தது.

” ஐஸ்க்ரீமை நினைச்சு எவ்ளோ 

ஹேப்பியா இருந்தேன். இனி அடுத்த சண்டே தான்  வாங்க முடியும் ” 

அவர்கள் வீட்டில் குளிர்ச்சியான தின்பண்டங்கள் வாங்குவது குறைவே.சுபாஷினியும் இந்த காரணத்திற்காகத் தான் குறைபடுகிறாள் என்று இளந்தளிருக்குப் புரிந்தது.

” நாளைக்கே வாங்கித் தர்றேன் . நீ காலேஜ் முடிஞ்சு வந்ததும் கண்டிப்பாக ஐஸ்க்ரீம் ஃப்ரிட்ஜ்ல இருக்கும் ”  

தமக்கை அவ்வாறாக வாக்குறுதி அளித்ததும் , இளையவளால் வருத்தத்தை இழுத்துப் பிடித்து வைத்திருக்க இயலவில்லை. 

” நாளைக்குப் பாக்குறேன்க்கா ” 

அப்போதும் அரை மனதாக கூறினாள். 

கோயிலுக்குள் நுழைந்த கோவர்த்தனன் மற்றும் ஹரீஷ் முன்னால் இருந்த கடவுள்களை வழிபட்ட பின்னர் , கர்ப்ப கிரகத்தில் தீட்சைக் குறையாமல் இருந்த முதன்னைக் கடவுளையும் வழிபட்டனர்.

கடவுள் வழிபாடு முடிந்ததும் , ஒரு இடம் பார்த்து அமர்ந்த நண்பர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை.

ஹரீஷிற்கு தயக்கம் , கோவர்த்தனன் என்ன மனநிலையில் இருக்கிறான் என்பதும் புரிபடவில்லை ஆதலால் , இருவருக்கும் இடையில் சில நாழிகைகள் மௌனமே நிலவிக் கொண்டு இருந்தது.

” என்னால தான நீ கோபமா இருக்க நண்பா ? ” 

இறுதியாக ஹரீஷ் வாய் திறந்து பேசினான்.

” நீ ஏன் இப்படி எடுத்துக்குற ? நான் முதல்லயே சொன்ன மாதிரி தளிர் கட் அண்ட் ரைட் ஆகத்  தான் பேசுவாங்க. அவங்க பேசின பாய்ண்ட்டும் கரெக்ட் தான் . வீணாக உன்னைய திட்டு வாங்க வச்சுட்டேனோன்னு ஃபீல் ஆகுது. உன் மேல கோபம் இல்லை ” 

அழுத்தமில்லாத மென்மை தொனி  அவனது பேச்சில் இருந்தது.

” தாங்க்ஸ் டா. நானா தான வண்டிக்கு முன்னாடி விழுந்து அவங்களை பயமுறுத்துறா மாதிரி நடந்துக்கிட்டேன். அதுக்கு அவங்க திட்டுனது கம்மி தான்” 

என்று இடைவெளி விட்டவன் ,

” ஆனா பாரேன் ! அவங்களும் சாரி கேட்டாங்க ” 

ஹரீஷ் இதை ஞாபகம் வைத்து நண்பனிடத்தில் கூறினான்.

” யெஸ் டா. பேசிக் காமன்சென்ஸ் (basic common sense ) ” 

இதழ்களில் மெல்லியதாக புன்னகை அரும்பியது.

” அவங்க சிஸ்டரோட ஹெல்த் இம்ப்ரூவ் ஆகி இருக்கான்னுக் கேட்க நினைச்சேன்டா , ப்ச் ” 

அவர்களது முதல் சந்திப்பிற்குக் முழுக் காரணமே இளந்தளிரின் தங்கையால் தானே ! 

அந்த நிகழ்விற்குப் பிறகு , தளிர் அவளை மிரட்டிக் கூட உணவுண்ண வைப்பாள் என்று இவனுக்குத் தெளிவாக தெரியும்.

” தேர்ட் மீட்டிங்ல கேட்டுத் தெரிஞ்சுக்கோ நண்பா ” கூறிய ஹரீஷைப் பார்த்து உதட்டைப் பிதுக்கி , இல்லை என்று தலையை இடவலமாக ஆட்டினான்.

” எனக்குத் தெரிஞ்சு இதான் லாஸ்ட் மீட்டிங்னு நினைக்கிறேன். இனி நோ சான்ஸ். ஃபர்ஸ்ட் மீட்டிங்லயே சின்னதா ஸ்பார்க் போட்டுட்டேன். அதுக்குச் சேதாரம் இல்லாம செகண்ட் மீட்டிங்ல நாம இன்னும் தீ மூட்டிக் கொளுத்திப் போட்டுட்டோம். திகுதிகுன்னும் எரிஞ்சாச்சு. இப்போதைக்கு பாத்துக்காம கொளுத்திப் போட்டதை அணைக்கிறது தான் முதல் வேலை ” 

கோவர்த்தனன் நிலைமையை நன்றாக எடுத்துரைத்தான்.

” நீ பாக்காம இருப்ப , ஆனா எதிர்பாராத விதமா மீட் பண்ணினா என்ன பண்ணுவ ? ” 

இவனோ சீரியஸாகக் கேட்க ,

” எல்லாத்துக்கும் ஹரீஷ் தான் காரணம்னு சொல்லி உன்னை மாட்டி விட்ருவேன். சிம்பிள் ” கூலாக கூறினான் .

” எதே ! உங்களுக்கு நான் தான் கிடைச்சேனா ?  ஒழுங்கா வந்துரு. வீட்டுக்குப் போகனும் ” 

ஹரீஷ் தன்னைக் கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு போவதைப் பார்த்து கலகலவென சிரித்தான் கோவர்த்தனன்.

– தொடரும் 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்