509 views

அத்தியாயம் 7 ❣️

கோயிலில் இருந்து வெளி வந்த கோவர்த்தனன் மற்றும் ஹரீஷ் தங்கள் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்று அதில் தத்தமது வீட்டிற்குச் செல்ல தயாராகிய பொழுது ,

” ஹரீஷூ ! அம்மா மதியம் சமையலுக்குச் சமைக்க காய்கறி வாங்கிட்டு வர சொன்னாங்கடா ” 

நல்ல வேளை நினைவுக்கு வந்தது என்று கோவர்த்தனன் அவனிடம் கூறினான்.

” நோ கமெண்ட்ஸ். போகலாம் ” 

இவன் வீட்டிலோ இன்றைய முக்கிய பதார்த்தமான மீன் குழம்பை ருசி பார்க்க இருந்தவனை , காலையிலேயே கோவர்த்தனனுடன் கோயிலுக்கு அனுப்பி வைத்து விட்டாரே இவனது தாய்க்குலம்.

அந்த கடுப்பில் பேசிக் கொண்டு இருந்தான் ஹரீஷ்.

” விட்றா ! விட்றா ! இப்போ அந்த கடைக்குக் கிட்ட வண்டிய நிறுத்திட்டு போய் வாங்கிட்டு வந்துடலாம் ” 

வண்டியை ஓரமாக நிறுத்தியவன் , ஹரீஷூடன் இணைந்து மளிகைக் கடைக்குச் சென்றனர்.

கடையில் இருந்த நடுத்தர வயதானவரிடம் ,

“அண்ணே புடலங்காய் ஒரு கிலோ , ஒரு அப்பளப் பாக்கெட் குடுங்க ” தனக்கு வேண்டிய பொருட்களைக் கூறி அவர் அவற்றை எடுத்து வரும் வரை ஹரீஷிடம் அளவளாவ ஆரம்பித்தான்.

” புடலங்காய் கூட்டு , அப்பளம் காம்பினேஷன் பத்தி என்ன நினைக்குற நண்பா ? ” 

தன்னை வம்பிழுக்க எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு விளக்கம் கொடுக்காமல் , அவனை பார்வை வட்டத்திற்குள் இருந்து வெளியேற்றி இருந்தான் ஹரீஷ்.

” ஏன்டா இவ்ளோ கோபம் ? நான் வேணும்னா உனக்கு நாளைக்கு உனக்குப் பிடிச்ச 

சாப்பாட்டை வாங்கிக் குடுக்குறேன். இன்னைக்கு தான் நமக்கு ஃப்ரீ , இப்பவும் நீ உர்ருன்னு இருக்கிறது எனக்கு என்னமோ மாதிரி இருக்குடா நண்பா ! ” 

கோவர்த்தனன் உணர்ந்து கூறியதை ஹரீஷினால் மறுக்க இயலவில்லை.அதற்குள் கடைக்காரர் அழைத்து , அவனுக்கு காய்கறி மற்றும் அப்பளம் பாக்கெட்டைக் கொடுத்து விடவும் பெற்றுக் கொண்டவன் , நண்பனின் முகம் இப்போதும் வாடி இருக்கிறதா ? என்று 

ஒருமுறை அவனைப் பார்த்தான்.

ஆனால் , ஹரீஷோ இவனை ஆராய்ச்சிப் பார்வை பார்த்துக் கொண்டு இருக்க ,

கோவர்த்தனன் ” உண்மையா தான்டா சொல்றேன். நாளைக்கு கன்ஃபார்ம் ஆக நான் சொன்னதை செய்வேன் ” 

இன்னும் தெளிவில்லாமல் இருந்தவனை சமாதானம் செய்யாமல் விடப் போவதில்லை என்ற விதமாய் இவன் கூற ,

” அதெல்லாம் ஒன்னும் வேணாம். நீ உனக்கு ஏதோ மனசு சரியில்லைன்னு நேத்து சொன்னியே ! அதென்ன விஷயம் ? ” 

நேற்று கூறியதை தான் மறந்தாலும் , கோபத்திலும் கூட இவன் சிந்தையில் இருக்கிறதே ! என்று மனம் இப்போதே , இலேசாகி விட்ட மாதிரி தோன்றியது கோவர்த்தனனிற்கு.

” என்ன தான் நம்ம வேலை பார்த்துக்கிட்டு இருக்கோம் , வெல் செட்டில்ட் ஆக இருந்தாலும் ஏதோ ஒரு அழுத்தம் உள்ளுக்குள்ள இருந்துட்டே தான் இருக்கு ஹரீஷ். அப்பா இறந்த பிறகு , அம்மாவும் , நானும் ஸ்திரமான நிலைக்குக் கொஞ்ச , கொஞ்சமா மாறிட்டு வர்றோம். ஆனா , அந்த அழுத்தம் விட மாட்டேங்குது. அவங்களும் எங்கிட்ட நல்லா பேசுற மாதிரி தான் தெரியுது. அது என்னவோ எனக்கு எதுவும் சரியா இல்லாத மாதிரி ஃபீல் ஆகுது ” 

தன்னை , தன் மனதை , தன்னைப் பெற்றெடுத்தவரை அழுத்தும் பாரம் இன்னதென்று புரியாமல் தவித்திருந்த கோவர்த்தனன் வடிகாலாக , முன்னால் இருக்கும் நண்பனைத் தவிர வெறெவரும் இதைப் பற்றிப் பேச , தீர்வளிக்கச் சரியான ஆளில்லை என்று அவனிடம் உள்ளதை உள்ளபடியே கொட்டித் தீர்த்தான்.

நண்பன் வெளிப்படையாகக் கூறியதை கவனமாக கேட்டு , அவனது அலைப்புறும் மனதை அடக்கி , அதி உற்சாகமாக மாற்றும் வகையில் இவன் பேச ஆரம்பித்தான்.

” நீயே சொல்ற ! அப்பா இறந்த பிறகு அம்மாவும் , நீயும் இப்போ தான் நார்மலா ஆகி இருக்கிங்க. அப்பறம் ஏன் இவ்ளோ ஸ்ட்ரெஸ் ? ஃபேமிலி வெல் செட்டில்ட் தான். பட் அதுல மட்டுமே மனசு நிறைஞ்சுடாதே ! நம்ம கம்ப்யூட்டர் முன்னாடி இருக்கிற நேரம் ரொம்ப அதிகம். வீட்ல இவ்ளோ நேரத்தை ஸ்பெண்ட் செய்றோமான்னுக் கேட்டா கண்டிப்பாக கிடையாது. மெஷினைப் பார்த்து , வேலையை முடிச்சு வீட்டுக்குப் போக எப்படியும் லேட் ஆகிடும் அல்லது நாம சீக்கிரம் வேலையை முடிச்சா சீக்கிரம் வீட்டுக்குப் போகலாம். தட்ஸ் இட் ” 

இவனைப் பற்றித் தெளிவாக கணக்கிட்டுக் கூறினான் ஹரீஷ்.

” அம்மாவுக்கும் அப்படி தான் இருக்குன்னு சொன்னியே அவங்க தனிமைல இருக்காங்க. அது அவங்களை வாட்ட ஆரம்பிச்சுருச்சு. அந்த சமயத்தில் அவங்களுக்கு எல்லாமே சூன்யமா தெரியும். நீ தான் அவங்க கூட இருக்கிற ஒரே உறவு. அடுத்து ஃப்யூச்சர்ல உனக்கு வரப் போற வொய்ஃப். அவங்க ஹெல்த் மட்டும் இல்ல , மனசையும் கவனிச்சுப் பார்த்துக்கோ. இப்போ என்கூட கோயிலுக்கு வந்திருக்க , இனிமே அடுத்தடுத்த வாரங்கள்ல அம்மாவைக் கூட்டிட்டுக் கோயிலுக்குப் போ , வீட்ல அவங்க  கூட நிறைய நேரம் பேசிட்டு இரு. மதிய சமையலை நீயும் அம்மாவும் சேர்ந்து சமைச்சுப் பாரு. ஒவ்வொரு விஷயத்திலயும் அவங்களோட ஒபினியன் கேளு. நம்மக் குழந்தையா இருந்த வரைக்கும் அவங்க தான நமக்கு நல்லது , கெட்டது சொல்லி வளத்தாங்க. இப்பவும் அந்த விஷயங்களை கேட்டுத் தெரிஞ்சுக்கோ. வாழ்வியல் மாற்றங்கள் உனக்கும் , அம்மாவுக்கும் கண்டிப்பாக தேவை ” 

ஒரு சொற்பொழிவே ஆற்றி விட்டு , சாதாரணமாக நின்றிருந்த நண்பன் ஹரீஷை ஆரத் தழுவிக் கொண்டான் கோவர்த்தனன்.

பேச்சற்ற நிலையில் இருந்தவனிடம் ,

“ஓவரா பேசிட்டேனோ ! இவன் என்ன ரியாக்ஷனே குடுக்காம இருக்கான் ” 

தன்னைக் கட்டிப் பிடித்து இருந்த கோவர்த்தனனின் செவிகளில் விழுந்து இருந்தால் அவனே பதில் கூறுவான் என்று காத்திருந்தான் ஹரீஷ்.

” எப்படித்தான் கலாய்க்கவும் செய்ற , இப்படி க்ளாஸூம் எடுக்குற நண்பா ? ஐ ‘ யம் டோட்டலி சேஞ்ச்ட் டா. நல்லா எனக்குப் புரியுற மாதிரி சொன்ன பாத்தியா யூ ஆர் க்ரேட் ! ” 

” அப்படி என்னப் பெருசா சொல்லிட்டேன். உன்னை சுத்தி நடக்கிற விஷயங்கள் தான் இதெல்லாம் கூர்ந்து கவனி எல்லாம் உனக்கே புரியும். வெரி ஈசி “

அவனைப் பார்த்துப் புன்னகைத்த கோவர்த்தனன் ,

” இதுக்காகவே நாளைக்கு உனக்கு ட்ரீட் இருக்குடா ” என்று அவனை விடுவித்தான்.

” ரொம்ப நேரமா ரோட்ல நின்னுட்டு இருக்கோம். பைக்ல ஏறி வீட்டுக்குப் போகலாமா மேன் ? ” 

அவன் கலாய்த்ததை ஏற்றுக் கொண்டவன் ,

“போகலாம் மேன் ” என்று அவனைப் போலவே கூறி வண்டியில் வீடு சென்றனர்.

முதலில் ஹரீஷை அவன் வீட்டில் இறக்கி விட்டுவிட்டு தன் இல்லத்திற்குச் சென்றான் கோவர்த்தனன்.

” டேய் ஹஷூ ! சாமி தரிசனம் சூப்பரா முடிஞ்சதா ? ” இவனது தாயார் தான் வம்பிழுத்தார்.

” ம்ம்.பலே சூப்பரா முடிஞ்சதும்மா. இப்போ சாம்பாரா ? இல்லை கூட்டு , இல்லை ரசமா ? ” 

மனம் பிடித்த உணவிற்கு ஏங்கினாலும் வீட்டில் சமைத்து வைத்திருப்பதை புசிக்க முடிவெடுத்திருந்தான்.

” சமத்துப் பையன்டா நீ ! ” பாராட்டிய அன்னை அடுத்து அவன் உண்ணுவதற்கு தட்டையும் , பரிமாறுவதற்கு உணவுப் பாத்திரத்தையும் இரு கைகளிலும் ஏந்திக் கொண்டு வந்தார்.

” தனியா காய்கறிக் கூட்டு செஞ்சேன்.உனக்குப் பிடிச்ச குழம்பு கிச்சன்ல தான் இருக்கு. ஆனா நாளைக்குக் காலைல சூடு பண்ணித் தர்றேன் சாப்பிட்டுக்கோ. இப்போ ஃபீல் பண்ணாம இந்த குழம்பை ஊத்திச் சாப்பிடு ” 

அவரது வார்த்தையைத் தட்ட தோன்றுமா ? ஹரீஷ் சாதத்தில் குழம்பைப் பிசைந்து உண்டு கொண்டே , கோயிலில் தனக்காகவும் அர்ச்சனை செய்து விடுமாறு கோவர்த்தனனின் அம்மா கூறியதையும் , அதை அப்படியே அவன் செய்தான் என்பதையும் அவரிடம் தெரிவித்தான்.

” சுமதியம்மா எப்பவும் இப்படித் தானடா ! அவங்க ஹஸ்பண்ட் இறந்து போன அப்பறம் வீட்ல நிலைமை இப்போ பரவாயில்லையா ? ” 

கேட்டுக் கொண்டே அவனது தட்டில் அன்றைக்கு சமைத்தப் பொரியலை பரிமாறினார்.

” எங்க ம்மா ! எதுவும் இம்ப்ரூவ் ஆகல. இன்னும் அப்படியே தான் இருக்காங்க ” 

என்று கோவர்த்தனன் கூறியதை அவரிடம் பகிர்ந்தான்.

” என்ன சொல்றது ! திடீர்னு தவறிட்டாரே ! இந்த ஆறு மாசமா அவங்க அதுல இருந்து வெளிய வர்றது கஷ்டம் தான். மெதுவா எல்லாம் சரியாகட்டும் ” 

கோவர்த்தனனின் தாயின் நிலையறிந்து அவர்களுக்காக வேண்டிக் கொண்டார் ரோகிணி. 

அவரிடம் பேசிக்கொண்டே உணவுண்டு முடித்திருந்த ஹரீஷ் ,

” மைதிலியை எங்க காணோம்மா ? தூங்கி எழுந்தாளா ? இந்நேரம் அவ இந்தக் குழம்பைப் பார்த்துக் கத்தி இருப்பாளே ! ” 

தங்கையைக் துழாவியது அவனது விழிகள்.

” இல்ல. அவளுக்கு கண்ணு எரியுதுன்னு சாப்பிட்டதும் போய் ரெஸ்ட் எடுக்குறேன்னு ரூம்ல அடைஞ்சுக் கிடக்குறா , உங்க அப்பாவும் பேச்சுக் குடுத்துட்டு கொஞ்ச நேரம் முன்னாடி தான் மெடிக்கல்ல மாத்திரை வாங்கப் போயிருக்காரு ” 

விவரம் சொன்னார் தாய்.

” நானே வாங்கிட்டு வந்துருப்பேன்ல ம்மா ” 

உரிமையாய் ஒலித்தது இவன் குரல்.

” அவருக்கு சிரமமாக இருந்திருந்தா உங்கிட்ட சொல்லி இருப்பாரு தான ? விடுடா . நீ போய் மைதிலி கிட்டப் பேசு ” என்று அவனை தங்கையிடம் பேசுமாறு சொல்ல , கோயிலில் பெற்றுக் கொண்ட விபூதி , குங்குமத்தை ரோகிணியிடம் கொடுத்த பிறகு தங்கையைப் பார்க்கச் சென்றான்.

தன்னறையில் காலையில் குடித்த காஃபிக் கோப்பை ஒரு புறமிருக்க மற்றைய புறம் மடிக் கணிணியில் தீவிரமாக எதையோ தட்டச்சு செய்த வண்ணம் இருந்த மைதிலியின் அருகில் அமர்ந்தவன் , 

” கண்ணாடி போடாம டைப் செய்யாத மைதிலி ! கண்ணு எரியுதுன்னு தான அம்மாகிட்ட சொல்லிருக்க அப்பறமும் ஏன் இந்த வேலைப் பாக்குற ? ” 

அக்கறையில் மொழிந்த வார்த்தைகள் அவளை அசைத்துப் பார்க்கவில்லை போலும். 

மைதிலி தட்டச்சு செய்வதை நிறுத்தவில்லை. சிரத்தைத் திருப்பி அவனிடம் உரையாடவும் இல்லை. 

” உன்னை தான் சொல்றேன் ” 

அவளது முடியைப் பிடித்திழுத்தவன் மடிக் கணிணியையும் அசந்த வேளையில் பிடுங்கி இருந்தான்.

” அடேய் ! லேப்டாப்பைக் குடு . ப்ரோக்ராம் போட்டு வச்சிருந்ததை சேவ் கூட செய்யலை. அதுக்கு எதாவது ஆச்சு உனக்கு அவ்ளோ தான் ! ” 

” நான் சேவ் செய்துட்டேன். நீ இரு நானே செய்து குடுக்குறேன் ” என்று ப்ரோக்ராமை அவனே போட்டு முடித்தான்.

” என்ன இன்னைக்கு சாருக்கு ரொம்ப பாச ஊற்று ஊர்வலம் ஆகுது ? ” 

இவனைக் கிண்டல் செய்து வாரி விட ,

” சும்மா தான் டி. உன் ஸ்பெக்ஸ் எங்க ? ” 

கேட்டவனிடம் அதற்குரிய பெட்டியில் இருந்து எடுத்துக் கொடுத்தாள்.

” இதை உள்ள பூட்டி வச்சுப் பாதுகாத்துக்கோ. நாளப் பின்ன திருடன் வந்து பொக்கிஷம்ன்னு நினைச்சுட்டு தூக்கிட்டுப் போய்டப் போறான். ரொம்ப வெய்ட்டாவும் இருக்கும் போலயே ? ” 

” கிண்டல் செய்யாதடா கிங் காங். 

அதைக் குடு ” 

வாங்கிப் போட்டுக் கொண்டாள்.

இன்றைய பொழுது முழுவதும் தன் குடும்பத்தினருக்காக நேரம் செலவழிக்க நினைத்திருந்தான் ஹரீஷ்.அதனாலேயே தங்கையிடம் வாயாடிக் கொண்டு இருந்தான்.

கோவர்த்தனன் புடலங்காய் அரிந்து கொண்டு இருந்த தாயின் அருகில் அமர்ந்து கொண்டு , கூட்டில் சேர்ப்பதற்கான மற்ற பொருட்களைக் கழுவியும் , அரிந்தும் அவருக்கு உதவிக் கொண்டிருக்க , மகனின் இந்த வேலையைப் பார்த்து அவருக்கும் உற்சாக ஊற்றுப் பிறப்பெடுத்தது.

தாயும் , மகனுமாக அந்த சமையலில் தங்களது திறமையை காட்டிக் கொண்டு இருந்தனர்.

ஐஸ்க்ரீம் இல்லை என்றாலும் முகம் வாடாமல் , இறைச்சியைக் கழுவிக் கொண்டு இருந்தால் இளந்தளிரின் தங்கை சுபா.

மூத்தவள் அதில் மஞ்சள் சேர்த்து மற்றுமொரு தடவைக் கழுவி விட்டு  , அதை சமைக்க ஆயத்தமானாள்.

” சிக்கன் ஃப்ரை ஆ ? இல்லை இது மட்டும் போதுமா ? ” 

என்று சிவசங்கரி மகள்களிடம் கேட்டார்.

” எனக்கு குழம்பு போதும்மா . இவளுக்கு ஃப்ரை செஞ்சுக் குடுங்க ” என்று தங்கைக்காகப் பேசினாள் இளந்தளிர்.

இப்போதாவது நல்லது செய்தாயே ! என்பதைப் போல் , அக்காவைப் பார்த்தாள் சுபாஷினி.

” சரி இளா நீ இதை முடிச்சுடு. நான் ஃப்ரை செய்றேன். முடிச்சுட்டு சொல்லு “

 

அன்றைய சிக்கன் குழம்பு இவளது கை வண்ணத்தில் தான் தயாராகப் போகிறது.

சுபாஷினியும் உதவி புரிய குழம்பு ஜோராகத் தாயாராகியும் விட்டது. வறுத்தெடுக்கும் வேலையும் முடிந்தால் , கோழிக்கறி உணவுப் பதமாய் , பிரமாதமாய் இவர்களுக்கு இனிமையான மதிய உணவாக அமைந்து விடும்.

சிவசங்கரி வறுத்தெடுத்த சிக்கனை வட்டிலில்   எடுத்து வந்து , மகள்களுடன் அமர்ந்து உண்டார்.

” இளா அக்கா ! சாப்பாடு செம்மயா இருக்கு. இப்படி டெய்லி சாப்பிட்டா நான் ஏன் மயங்கி விழுகப் போறேன் ! ” என்று பாராட்டிக் கொண்டே உணவுக் கவளத்தை உள்ளே வயிற்றினுள்ளேத் தள்ளிக் கொண்டாள் சுபாஷினி.

” அப்போ  தினமும் சாப்பிட்ற, என்னோட சமையல் மட்டும் உனக்குக் கசக்குதா சுபா ? ” 

சிவசங்கரி இளைய மகளை மிரட்டவும் ,

 ” கசக்குதுன்னு சொல்லவே இல்லையேம்மா . அக்காவோட கைப்பக்குவமும் நல்லா இருக்குன்னுப் பாராட்டுனேன் அவ்ளோ தான் ” 

அவரை சமாளித்து விட்டு , இன்னும் இரண்டு தட்டு உணவுண்டு விட்டுத்தான் எழுந்தாள்.

இவளிடம் இவ்வாறு கேட்டிருந்தாலும் தன் மூத்த மகளது கை மணம் ஊர் மெச்சுவது போலத்தான் இருக்கும் என்பதில் அவருக்கு சந்தேகம் இருந்ததில்லை.அவரும் ரசித்துக் கொண்டே தான் உணவுண்டு முடித்தார்.

திங்கள் கிழமையை நினைத்து , கலங்கி , தமக்கையை ஆறுதலாகப் பற்றிக் கொண்டு , எப்படியோ விடுமுறை நாள் விரல் சொடுக்குவது போல் , உடனே மறைந்து விட்டது போலத் தோன்றியது சுபாஷினிக்கு.

இளந்தளிருமே இதைத்தான் எண்ணிப் பார்த்தாள். அடுத்த நாளைய வேலைக்கு இன்றே சில முன்னேற்பாடுகளை முடித்து வைத்து , கண் அசந்தாள்.

– தொடரும் 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்