அர்ஜுன் இருவரையும் கொலைவெறியுடன் முறைத்து விட்டு, “இப்போ நான் சொல்லவா வேணாமா?” என்று கோபமாகக் கேட்க,
அஜயும், விதுவும் “ஹே ரெண்டு பேரும் சும்மா இருங்க. அப்பறம் கதையைச் சொல்லாமல் போய்டப்போறான். நீ சொல்லு பங்கு” என்றனர்.
அர்ஜுன், அவளைப் பார்த்த தினத்தைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தான்.
அப்பொழுது தான், படித்து முடித்து, குழந்தைகள் நல மருத்துவராக இருந்தான்.
ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச, மருத்துவம் கிடைக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு ஏதாவது உடல்நிலை கோளாறு இருப்பின், அதனை உடனே கண்டறிந்து வைத்தியம் செய்ய வேண்டும் என எண்ணம் இருந்ததில், ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் குழந்தைகள் காப்பகம், ஆதரவற்றோர் இல்லம் அனைத்திலும், மெடிக்கல் கேம்ப் ஒன்று அமைத்திருந்தான்.
அப்பொழுது தான், மீரா இருக்கும், ஆதரவற்றோர் இல்லத்திற்கும் வந்திருந்தான்.
அப்பொழுது, மீரா படித்து முடித்து, ஒரு கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தாள்.
அங்கேயே அவள் வளர்ந்ததால், அங்கிருந்து செல்லாமல், அங்கிருக்கும் குழந்தைகளுக்கு பார்ட்-டைம் ஆகப் படிப்பு சொல்லிக் கொடுத்து, அவர்களுக்குத் தேவையானவற்றை செய்துகொண்டிருந்தாள்.
குழந்தைகளைப் பரிசோதிக்க மருத்துவர்கள் வருகிறார்கள் என அறிந்து, குழந்தைகளை வரிசையில் நிற்க வைத்து, ஒவ்வொருவராய் அர்ஜுனின் அருகில் அனுப்பினாள்.
பின், ஏதோ யோசித்தவள், அர்ஜுனிடம் சென்று, “எக்ஸ்கியூஸ் மீ” என்று கூப்பிட, அவள் குரல் கேட்டுத் திரும்பியவன், அவளை விழி விரித்துப் பார்த்தான். ஏதோ அவனுக்கு அவளுடன் பல காலம் பழகியது போன்ற உணர்வு.
மீரா அவனிடம் ஏதோ பேசவர, இங்கு உத்ரா “பங்கு பங்கு ஸ்டாப் ஸ்டாப்” என்று நிறுத்தினாள்.
அர்ஜுன் அவளை என்னவென்று பார்க்க, “அவள் உன்கிட்ட என்ன சொல்லிருப்பான்னு நான் சொல்றேன்.
‘டாக்டர் சார் எல்லாரும் சின்னக் குழந்தைங்க, அவங்களுக்கு வலிக்காமல் ஊசி போடுங்கன்னு தான் சொன்னாள்’ என்று எல்லாம் தெரிந்தவள் போல் சொல்ல,
அவன் தலையைக் குனிந்து கொண்டு இல்ல என்று கடுப்புடன் தலையாட்டினான்.
அனைவரும் குழம்பி “வேற எதுக்கு கூப்பிட்டா” என்று கேட்க, அவன், அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் தொடர்ந்தான்.
அவனை அழைத்த மீரா, “ஹலோ டாக்டர் வரலையா. கம்பௌண்டர மட்டும் எதுக்கு அனுப்பி இருக்காங்க. உங்க டாக்டர் எங்க?” என்று தான் கேட்டாள்.
இதனைக் கேட்ட அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்க, அஜய், “டேய் அண்ணா உன்னைப் பார்த்தா அண்ணி கம்பௌண்டர்ன்னு சொன்னாங்க” எனச் சிரிக்க,
விது “மாமா, எதை வச்சுடா அவள் உன்னை இப்படி சொன்னாள்” என்றான் நமுட்டு சிரிப்புடன்.
“அன்னைக்கு மார்னிங்ல வேற ஒரு இடத்துல கேம்ப் போட்ருந்தோம். அங்க இருக்குற பசங்களோட மண்ல உருண்டு விளையாடுனேன். அதுல டிரஸ்லாம் ரொம்ப அழுக்கா இருந்துச்சு. டிரஸ் மாத்த டைம் இல்லாமல், கோர்ட்டயும் வேன்ல வச்சுட்டு வந்துட்டேன்…” என்க, அதில் அவர்கள் மேலும் சிரித்தனர்.
சுஜி, “என்ன பங்கு, உன் ஆளைப் பார்க்கப் போறதுக்கு இப்படியா போவ. டிப் டாப் – ஆ போயிருக்க வேணாம்” அவனைக் குறை சொல்ல, அர்ஜுன்,
“ஆமா… நான் என்ன அவள் அங்க இருப்பா, அவளை லவ் பண்ணுவேன்னு நினைச்சா போனேன்” என்று முறைக்க,
உத்ரா, “சரி விடு பங்கு, அப்பறம் என்ன தான் ஆச்சு…” என்றதில், அவன் சிறு சிரிப்புடன் தொடர்ந்தான்.
மீரா சொன்னதில் திருதிருவென விழித்தவன், பின் கோபமாக, “என்னைப் பார்த்தா கம்பௌண்டர் மாதிரியா இருக்கு” எனக் கேட்க,
சற்று அதிர்ந்தவள், “ஓ சாரி நீங்களும் பேஷன்ட் – ஆ”
அவன் தான் வேணா நான் அழுதுடுவேன் என்ற ரீதியில் அவளைப் பார்த்தான்.
அப்பொழுது, அங்கு வந்த அந்த ஆஸ்ரமத் தலைவி தான்.
“டாக்டர் சார். இவள் பேர் மீரா. சின்ன வயசுல இருந்து இங்க தான் இருக்காள். நல்லா படிச்சு நல்ல வேலையிலயும் இருந்துகிட்டு, இங்க இருக்குற குழந்தைங்களுக்கு சர்விஸ் பண்ணிக்கிட்டு இருக்காள்” என்றவர்,
மீராவிடம், “இவர் தான் மீரா. டாக்டர் அர்ஜுன்.” என்று அறிமுகப்படுத்த, அவள் பே வென முழித்தாள்.
‘அய்யோயோ அவசரப்பட்டுப் பேசிட்டோமோ’ என்று உதட்டைக் கடித்தவளை அவன் விழிகள் ரசனையுடன் மேய்ந்தது.
அவள் கடித்த உதட்டினை எடுத்துவிட்டு, தன் கைக்குள் அடக்க வேண்டும் என அவனறியாமல் பேராவல் வர, அதில் அதிர்ந்தவன், தன்னை நிலைப்படுத்திக் கொண்டு வேலையைத் தொடர்ந்தான்.
அங்கிருக்கும் குழந்தைகளுக்குத் தைரியம் சொல்லி, அவர்கள் கூடவே இருந்து சிரிக்க வைத்துக் கொண்டிருந்தவளை நோட்டம் விடவும் அவன் தவறவில்லை.
வேலை முடிந்து கிளம்பும்போது, மீரா, “டாக்டர்” என அழைக்க,
அவனோ அங்கும் இங்கும் திரும்பித் திரும்பிப் பார்த்து, “என்னையாவா கூப்டீங்க? நான் டாக்டர்ன்னு இப்பவாவது ஒத்துக்கிட்டீங்களே.” என்றான் குறும்பாக.
அதில் விழித்து விட்டு, “சாரி டாக்டர். உங்க டிரஸ்லாம் அழுக்கை இருந்துச்சா அதான்” என்று இழுத்ததில்,
மென்மையாய் சிரித்தவன், “இட்ஸ் ஓகே. பை” என்று கையசைத்துக் கிளம்பினான்.
ஏதோ அவளின் நினைவுகளும் அவனுடவே பயணிப்பது போன்ற உணர்வு வர, விடுமுறை நாட்களில் எல்லாம் அங்குச் செல்ல ஆரம்பித்தான்.
அவனைக் கண்டாலே மலரும் அவள் முகத்தைக் கண்டவனுக்கு, மனதும் சேர்ந்து மகிழ்ந்தது.
அங்கிருந்த குழந்தைகளைக் கொஞ்சி கொண்டே, அவளையும் ரசித்து விட்டுச் செல்வான். ஆனால் இருவரும் பேசிக்கொள்ள மட்டும் இல்லை.
இப்படியே நாட்கள் செல்ல, ஒரு முறை, காரில் சென்று கொண்டிருந்தவன், மீரா பதட்டத்துடன் பேருந்து நிலையத்தில் நின்றிருப்பதைக் கண்டு அவளருகில் சென்றான்.
அவனைக் கண்டதும், அவள் கண்ணில் ஒரு மின்னல் வெட்ட, அதனை ரசித்தபடியே, “என்ன ஆச்சு மீரா இங்க நிக்கிற?” எனக் கேட்டான்.
அவன் சாதாரணமாய் அவள் பெயர் சொல்லிப் பேசியதிலேயே அவளுக்கு ஒன்றும் பேசவே தோன்றவில்லை.
பின், அவன் ஹாரனை அடித்து, “மீரா” என அழைத்ததும் தான்,
பூவுலகிற்கு திரும்பியவள், தயக்கமாக, அலுவலகத்திலிருந்து அவசரமாக ஆஸ்ரமம் செல்ல வேண்டும் எனவும், அங்கு ஒரு சிறுவனுக்குக் காய்ச்சலாக இருப்பதால், மருத்துவமனை அழைத்துச் செல்ல வேண்டும் எனவும் கூற,
அவன், “சரி கார்ல ஏறு நான் டிராப் பண்றேன்.” என்றான்.
“இல்ல டாக்டர் நீங்கப் போங்க நான் பஸ்ல போய்க்குவேன்” அவள் லேசாக மறுக்க,
“நான் ஒன்னும் உன்னைக் கடிச்சு சாப்ட மாட்டேன். அங்க குழந்தைக்கு வேற உடம்பு சரி இல்லைன்னு சொன்னீல, என்கூட வந்தீன்னா உன்னையும் ட்ராப் பண்ணிட்டு, அந்தப் பையனுக்கும் ட்ரீட்மெண்ட் பார்ப்பேன்”
பேருந்து வேறு வெகுநேரம் வராததால், வேறு வழி இல்லாமல் அவனுடன் சென்றாள்.
சற்று தயங்கிக் கொண்டே சீட்டின் நுனியில் அவள் அமர்ந்திருக்க,
அர்ஜுன், “ஃபுல் சீட்டும் உனக்குத் தான் நல்லா உக்காரு.” எனச் சிரித்ததில், அவள் அசடு வழிந்து விட்டு, நன்றாக அமர்ந்தாள்.
அவளிடம் அவளைப் பற்றி அவன் பேச்சு கொடுத்துக்கொண்டே வந்ததில், அவளின் பெற்றோர் அவளின் சிறு வயதிலேயே இறந்து விட்டதாகவும், ஸ்காலர்ஷிப்பில், பி.காம் படித்து, இப்போது பிரைவேட் இல் எம்பிஏ படித்துக் கொண்டிருப்பதாகவும், அங்கிருக்கும் குழந்தைகளுக்கு இவளும் உதவி செய்து கொண்டிருப்பதையும் தெரிந்து கொண்டான்.
இதெல்லாம் அவள் சொன்ன ஒற்றை வரி பதிலில் அவன் கண்டு கொண்டது.
பின் ஆஸ்ரமம் சென்று, சிறுவனைச் சோதித்து மருந்து கொடுத்து விட்டு, வெளியில் வந்தான்.
மீரா அவன் பின்னே வந்து “டாக்டர் ரொம்ப தேங்க்ஸ்” என்று சிறு புன்னகையுடன் கூற,
அவன் அவனின் கார்டை கொடுத்து, “யாருக்கு உடம்பு சரி இல்லைன்னாலும், என்னை கான்டாக்ட் பண்ணு. நானே இங்க வந்து பாக்குறேன். ஓகே வா” என்றதில், “தேங்க்ஸ்” என்று அதனை வாங்கி கொண்டாள்.
அதில், “என்னைப் பார்த்தா தேங்க்ஸ் சாரி மட்டும் சொல்லணும்னு அவசியம் இல்ல மீரா. வேற ஏதாவது கூடப் பேசலாம்” என நமுட்டு சிரிப்புடன் கூற, அவள் தான் கைகளைப் பிசைந்தாள்.
அவன் மேலும் அவளைச் சோதிக்காமல் சிறு சிரிப்புடன், பை என்று கையைக் காட்டிவிட்டு சென்று விட்டான்.
அதன் பின், அங்கு அடிக்கடி சென்றதன் மூலம், மீரா அர்ஜுனுக்கு நல்ல தோழியாகவே ஆகி விட்டாள்.
ஏதாவது மருத்துவ உதவி என்றாலும் அவனை அணுகி உதவி கேட்பதில் முதற்கொண்டு, அவனுடன் சேர்ந்து சாப்பிடும் அளவிற்கு அவனுடன் இயல்பாய் ஒன்றியிருந்தாள்.
அதில் அவன் குடும்பத்தைப் பற்றி நிறையவே சொல்லி இருந்தாலும், அந்த நேரத்தில் பெயர்கள் எல்லாம் அவள் நினைவில் நிற்கவில்லை.
அவனுடனான இந்த நட்பு அவளுக்குப் புது உலகத்தைக் காட்டியது. அர்ஜுனும் அவளை ஏதாவது பேசிச் சிரிக்க வைப்பதும், அவள் சாப்பிடவில்லை என்றால் அதட்டி சாப்பிட வைப்பதுமாக அவளைச் சிறு குழந்தைபோல் கவனித்து கொண்டான்.
மேலும், அவளுக்கு ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என ஆசை இருந்ததை எல்லாம் அறிந்து கொண்டு, அவளின் கனவு, ஆசை எல்லாவற்றிற்கும் உறுதுணையாகத்தான் இருந்தான்.
அவளும் நன்றாகத் தான் இருந்தாள். அவனுக்குச் சிறு கீறல் என்றாலும் துடிக்கத் தான் செய்தாள்.
அவன் அவளைக் காதலிக்கிறேன் என்று சொன்னபிறகு, கூட, ரோஜாவாய் அவள் முகம் மலரத் தான் செய்தது.
6 மாதமாய் அவளிடம் தன் காதலை கூற முடியாமல் தவித்தவன், அன்று எப்படியாவது உரைத்து விட வேண்டும் என்ற உறுதியுடன் அவளைக் கோவிலுக்கு அழைத்துச் சென்றான்.
அர்ஜுன், “மீரா, நீ லவ் பத்தி என்ன நினைக்கிற?” என்று அவளைக் குறுகுறுவெனப் பார்த்துக் கொண்டு கேட்க,
அவள் “லவ் பத்தி நான் நினைக்க என்ன இருக்கு அர்ஜுன்” என்று சிவந்த முகத்தை மறைத்துக் கொண்டாள்.
“இல்ல நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன் அவள்கிட்ட காதலை சொல்லணும்னு 6 மாசமா ட்ரை பண்றேன். பட் முடியதான் இல்லை…” என்றபடி அவள் கையைக் கோர்த்து கொண்டு சொல்ல, அதில் சிறிது அதிர்ந்தவள், பின் சிரிப்புடன், “ஏன் முடியல” என்றாள் திணரலாக.
” எங்க அவள பார்த்தாலே எல்லாம் மறந்துடுது…” என்று விட்டு, அவளைத் தன்னருகில் இழுத்தான் அர்ஜுன்.
மீரா சுற்றி முற்றி பார்த்து, “அர்ஜுன்” என உதடுகள் நடுங்க,
அஜய் “போதும் போதும் எல்லாரும் போய்த் தூங்குங்க” என்று தீவிரமாகக் கதை கேட்டுக் கொண்டிருந்த, உத்ராவையும், சுஜியையும் அனுப்பி விட முயற்சி செய்தான்.
அர்ஜுன் புரியாமல் “ஏண்டா?” என்று கேட்க,
அவன் “பங்கு, நீ சின்னப் பிள்ளைங்ககிட்ட சென்சார் விஷயத்தை எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்க. அதுங்களை அனுப்புனதும் நீ எங்களுக்கு மட்டும் தனியா சொல்லு” என இளிக்க,
அர்ஜுன் தலையில் அடித்துக் கொண்டு, “ஒரு எழவும் இல்லை. சொல்றதை முழுசா கேளு.” என்று விட்டு மீண்டும் தொடர்ந்தான்.
அவள் நடுங்கியதைக் கண்டதும், அங்கிருந்த படியில் அவளை அமரவைத்தவன்,
“மீரா! உன்னை ஏன் பிடிச்சுருக்கு எதுக்கு பிடிச்சுருக்குன்னு எல்லாம் எனக்குத் தெரியல. பட் இப்போ நீ என் உயிருடி. ஐ லவ் யு மீரா. என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா” என்று கேட்க, அவளுக்கு அப்பொழுது தான் தன் நிலையே ஞாபகம் வந்தது.
“அர்ஜுன், நான் நான் ஒரு அநாதை. உங்களுக்கும் எனக்கும் எப்படி…” என்று திணற,
“உனக்கு அப்பாவா, அம்மாவா, அண்ணனா, பிரெண்டா, லவரா, புருஷனா இப்படி எல்லாமாவும் நான் உனக்கு இருப்பேன் எப்பவும். நான் உயிரோட இருக்குற வரை நீ அநாதை இல்ல மீரா” என்று கடிந்தான்.
பின், “அப்பறம் உனக்கு நான் மட்டும் இல்லை. ஒரு குடும்பமே இருக்கு. பிருந்தாவனம் மாதிரி…” என்று மெலிதாய் சிரித்தவன்,
“அப்பறம்… நம்ம ஒரு குழந்தை இல்லை… ஆஸ்ரமத்தில இருக்குற எல்லா குழந்தைங்களையும் கூடத் தத்தெடுத்துக்கலாம்.
அப்பறம், உன்னை மாதிரி ஸ்வீட்டா ஒரு பொண்ணு. என்னை மாதிரி கொஞ்சம் அழகா ஒரு பையன். அப்பறம்… என்று பேசிக்கொண்டே அவளை ரசனையாகப் பார்க்க, அவள் தான் செவ்வானமாய் சிவந்தாள்.
அதனை ரசித்துச் சுகித்தவன், “நீ இவ்ளோ நாள் இழந்த எல்லா சொந்தத்தையும் உனக்குத் தருவேன் மீரா. லவ் யு டி” என்று அவன் கையை நீட்ட,
இங்கு உத்ரா, சுஜியிடம், “போய் லவ் சொல்லுடான்னு சொன்னா இவன் ஃபேமிலி பிளானிங் பத்தி பேசிருக்கான் பங்கு. அப்பறம் அவள் ஓடத் தான செய்வாள்…” என்று நக்கலடிக்க, அர்ஜுன், அவளை முறைத்து விட்டு,
“அப்போ எல்லாம் நல்லாத்தான் இருந்தாள். அவளுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். அது அவள் பார்வையிலேயே தெரியும்.
ஆனால் அவள் உடனே எதுவும் சொல்லல. அந்த நேரத்துல ஹாஸ்பிடல்ல இருந்து உடனே வரணும்னு போன் வந்தது. அர்ஜென்ட் கேஸ்ன்னு சொல்லி அவளை யோசிச்சு பொறுமையா சொல்லுன்னு சொல்லிட்டு ஹாஸ்பிடல் போய்ட்டேன்” என்று சொல்ல,
சுஜி, “ஹா ஹா, நீ தான அவளைப் பொறுமையா சொல்லச் சொன்ன அதான் அவள் பொறுமையா மூணு வருஷமா இழுத்து அடிக்கிறாள் போல,” எனச் சிரித்ததில் அர்ஜுன், பெருமூச்சு விட்டு, அமைதியாய் இருந்தான்.
அவனின் முக மாற்றத்தைக் கண்டு விளையாட்டைக் கை விட்டு, “அடுத்து என்ன ஆச்சு?” என்று கேட்டனர்.
அவனுக்கு மருத்துவமனையில் வேலை நெட்டி முறித்ததால், இரண்டு நாள் கழித்து தான் அவளைச் சென்று பார்த்தான்.
ஆனால் அன்று அவள் பார்வையில் எப்போதும் வரும் மலர்ச்சி இல்லை.
அவனின் கண்ணை நேராய் பார்க்காமல் குழையும் கண்கள் இல்லை.
அதில் குழம்பியவன். “என்ன மீரா ஒரு மாதிரி இருக்க. உடம்பு சரி இல்லையா?” என்று அவள் அருகில் வர,
அவள் பின்னே சென்று, “எனக்கு ஒன்னும் இல்ல நான் நல்லாத்தான் இருக்கேன்” என்றாள் அவனைப் பாராமல்.
அர்ஜுன், அவளைக் காண வராததால் கோபமாக இருக்கிறாளோ என நினைத்து,
“சாரி மீரா. ரொம்ப ஒர்க் ஆகிடுச்சு. அதான் உன்னைப் பார்க்க வரல. என்மேல கோபமா” என்று அவள் கன்னம் வருட வர,
அவளோ அதனையும் தடுத்து “உங்கமேல நான் எதுக்கு கோபப்படணும் அர்ஜுன். உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கு கோபப்பட?” என்றாள்.
அர்ஜுன் புரியாமல், “என்ன உளறுற? நம்ம கல்யாணம் பண்ணிக்க போறோம்” என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்.
“நான் இன்னும் உங்களுக்கு சம்மதமே சொல்லல அர்ஜுன்” என்றாள் அவளும் கண்டிப்பாக.
சற்று எரிச்சலானவன், “இப்போ என்ன பிரச்சனை உனக்கு”
“எனக்கு உங்களைப் பிடிக்கல அர்ஜுன். நான் உங்களை லவ் பண்ணல. இனிமே லவ் பண்றேன்னு என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க. நான் வேலைக்காக வெளியூர் போறேன். பை” என்று சொல்லிவிட்டு, திரும்ப, அவள் கையைப் பிடித்துத் தன் பக்கம் இழுத்தவன்,
“என்னடி ஆச்சு உனக்கு? ஏன் இப்படிலாம் பேசிகிட்டு இருக்க. நீ என்னை லவ் பண்ணலை… இதை என்ன நம்ப சொல்றியா” என்று கோபமாகவும் நக்கலுடனும் கேட்டான்.
“நீங்க நம்புனாலும், இல்லைன்னாலும் இதான் உண்மை.. நான் ஜஸ்ட் பொழுதுபோக்குக்குத் தான் உங்களோட பழகுனேன். நீங்க வேற ரொம்ப பணக்காரரா அதான்” என்று சொல்லி முடிக்கும் முன், அவன் அவளை அறைந்திருந்தான்.
அவன் அறையில் அதிர்ந்து இறுக்கமாய் நின்றவளிடம்,
“போதும் மீரா! உனக்கு என்னைப் பிடிக்கலைல. அதோட விட்டுடு. நான் எந்தக் காரணமும் கேட்கல. பொய்யான காரணத்தைச் சொல்லி உன்னை நீயே அசிங்கப்படுத்திக்காத. போ” என்றான் அழுத்தமாய்.
மீரா, கண்ணீருடன் அவனைப் பார்த்து விட்டு, திரும்பி நடந்தாள்.
அர்ஜுன் அவள் அவனை விட்டுச் செல்லச் செல்லக் கத்திக்கொண்டிருந்தான்.
“போடி மீரா… எங்க வேணும்னாலும் போ. நான் உன்னைத் தேடி வரமாட்டேன். என் காதல் உண்மைன்னா காலமே உன்னை என்கிட்ட கொண்டு வந்து சேர்க்கும் அந்த நாளுக்காக நான் காத்துகிட்டு இருப்பேன். அது எத்தனை வருஷம் ஆனாலும் சரி. ” என்று கண்ணீரில் தொண்டை அடைக்க உள்ளுக்குள் துடித்தான்.
சுத்தி சுத்தி நான் வருவேன் அதனாலா
பித்துக்குளி ஆகிப்புட்டேன் அதனாலா
பொத்தி பொத்தி உன்னை வச்சேன் அதனாலா
பாதகத்தி பாசம் வச்சேன் அதனாலா..
என் கண்ணுக்குள்ள நான் கனவா சேர்த்து வச்சதை
கண்ணீராகத் தான் சிந்துறேன் பார்த்து நிக்கிற..
நீ என் உசுர விட உசத்தியடி உனக்குப் புரியல..
அடி எதுக்கு பபுள்ள பொணக்கு என் மேல,
நான் உனக்குன்னு தான் பொறந்துட்ட மாமன்
எதுக்கு புள்ள பொணக்கு என் மேல..
கண்ணில் வண்ண வண்ணக் கனவுகளைக் காட்டிவிட்டு, இறுதியில் கண்ணைக் கட்டி விட்டுச் சென்று விட்டாளே என்று நிம்மதியின்றி அலைந்தவன். ஒரு வாரம் கழித்து, மீண்டும் அவளைக் காண ஆஸ்ரமம் சென்றான்.
ஆனால் அவள் அங்கு இல்லை. அங்கிருந்த யாருக்கும் எதுவும் தெரியவில்லை. அது போக, அந்த ஆஸ்ரமத்தில் இருந்த குழந்தைகளையும் வேறு இடத்திற்கு மாற்றி விட்டார்கள்.
ஏன்? எதற்கு? என்ற கேள்விக்கும், அவள் எங்கே சென்றாளெனப் புரியாமலும், மூன்று வருடமாய் தன் கண்ணில் படமாட்டாளா என்று ஏங்கி கொண்டிருந்தான். இப்பொழுது கண்ணில் பட்டும், தன்னை வலுக்கட்டாயமாக அவள் ஒதுக்குவது இதயத்தைப் பிழிந்தது.
கலங்கிய கண்ணுடன், அவன் பேச, அஜய்,
“கூல் டா. அண்ணி கண்டிப்பா உன்னைப் புருஞ்சுப்பாங்க” என்று சொல்ல,
அவன் மறுப்பாய் தலை அசைத்து விட்டு, “அவள் என்னைப் புரிஞ்சுக்க வேணாம். அவளுக்கு என்ன பிரச்சனைன்னு நான் புரிஞ்சிக்கிட்டாலே போதும்.” என்று, எச்சிலுடன் வேதனையையும் விழுங்கினான்.
விது “அந்த ஒரு வாரத்துல தான் ஏதோ நடந்துருக்கணும் பங்கு” என யோசிக்க,
உத்ரா, “ம்ஹும்… நீ லவ் சொல்லிட்டு போன அந்த ரெண்டு நாள்ல தான் ஏதோ நடந்துருக்கணும். சம்திங் ஃபிஷி.” என்றவள் தீவிர யோசனையுடன்,
“எனக்கு ஒரு விஷயம் தான் புரியல அர்ஜுன். எல்லாருக்கும் வில்லனா இருக்கிற அந்த துருவ், ஏன் சஞ்சுக்கும் மீராவுக்கு மட்டும் இவ்ளோ பண்ணனும்.
அண்ட், சஞ்சு அப்போ கைக்குழந்தையா தான் இருந்துருப்பான். உன்னை விட்டுப் போகணும்ன்னு நினைக்கிறவ தனியா போயிருக்கலாம்.
பட் ஒரு குழந்தையைத் தூக்கி கிட்டு எதுக்கு போகணும். அதுவும், வெளிநாட்டுக்கு போக வேண்டிய அவசியம் என்ன” என்று குழப்பமாய் பேச, அவனைவருக்கும் பயங்கர குழப்பமே.
உத்ராவிற்கு, துருவின் “உன் கேள்விக்கான பதில் நீயே தேடு உத்ரா” என்று சொன்னதே திரும்பத் திரும்பக் காதில் கேட்க, பல கேள்விகள் அவளை வண்டாய் குடைந்தது.
மறுநாள், இதே யோசனையுடன் உத்ரா அலுவலகம் செல்ல, அங்குத் துருவ் அவளிடம் “சைட்க்கு போகணும்” என்று, மீராவை அலுவலகத்திலேயே இருக்க சொல்லிவிட்டு, உத்ராவை அங்கு அழைத்துச் சென்றான்.
மீராவைப் பற்றிய சிந்தனையிலேயே இருந்தவள், இப்போது ‘சைட்’ இல் வேலையே நடைபெறவில்லை என்று யோசிக்கவே இல்லை.
அதன் பின்னே, அவனின் கார் வேறு ஏதோ ஒரு பாதையில் செல்கிறது என்று உணர்ந்தவள்,
“மிஸ்டர். துருவ் நம்ம எங்க போய்கிட்டு இருக்கோம்” என்று கோபமாகக் கேட்க,
அவன் “ம்ம்… டேட்டிங் போறோம்” என்று சொன்னதில் வெகுவாய் அதிர்ந்தாள்.
என்ன உளறுறீங்க அவள் மேலும் காட்டமாக, துருவ் லேசாய் சிரித்து விட்டு, காரை நிறுத்தி அவள் அருகில் சென்றான்.
அதில் அவனைத் தள்ளிவிட, மூளை சொன்னாலும், அவளின் கைதான் அவள் பேச்சைக் கேட்கவே இல்லை.
அவன், அவள் கன்னத்தைத் தொட போக, பின்னால் இரண்டு மூன்று கார்களை அவர்களை நோக்கி வருவதைக் கண்டு சீறி பாய்ந்து காரைக் கிளப்பினான்.
உத்ராவிற்கு அவர்கள் யார் என்று தெரியவில்லை. மேலும், இவன் சும்மா நம்மளை பயமுறுத்தாறானோ என்று அவனைப் பார்க்க, அவன் “சீட் பெல்ட் போடு” என்று கண்ணைக் கட்டினான்.
அவள் அதனைக் காதில் வாங்காமல், “யாரு அவங்கள்லாம்?” என்றாள் எரிச்சலாக.
“ம்ம் என் பங்காளிங்க” என்று நக்கலாகச் சொல்லி விட்டு, காரை ஓட்டிய படி, அவளைச் சீண்டிக்கொண்டு, சீட் பெல்ட்டை போட்டு விட்டான்.
அவனின் செய்கையில் அவள் உறைந்து இருக்க, உத்ராவின் ஜன்னல் பக்கம் வந்த ஒருவன் துப்பாக்கியை எடுத்து உத்ராவை நோக்கிக் குறி வைத்தான்.
துருவ் அதைக் கண்டுவிட்டு, “உதி” எனக் கத்தி, அதிவேகத்தில் குண்டு அவள்மேல் படாதவாறு காரை ஓட்ட, அப்படி இருந்தும், அவள் தோளில் ஒரு குண்டு உரசி கொண்டு சென்றது.
ஏற்கனவே ஒருவன் துப்பாக்கியைக் கட்டியதில் திகைத்து இருந்தவள், ஆ ஆ என்று தோள்பட்டையை பிடித்து வலியில் துடிக்க,
அதில் அதிர்ந்த துருவ் அலைபேசியில் “எல்லாரும் என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க… வேர் தி ஹெல் ஆர் யு?” என்று வெறித்தனமாய் கத்தினான்.
மேலும், இரண்டு மூன்று கார்களில் வந்த துருவின் ஆட்கள் அந்த கார்களில் இருந்தவர்களை பிடித்தனர். துருவ் அதி வேகத்தில் அவளைக் கூட்டிக்கொண்டு மருத்துவமனை செல்ல, அவள் மயங்கியே இருந்தாள்.
அதீத கோபத்தில் “ஷிட்! ஷிட்! ஷிட்!” என்று ஸ்டியரிங்கில் நங்கு நங்கென்று குத்தியவன், அவளை மருத்துவமனையில் சேர்க்க, அவனுக்கு போன் வந்தது.
அதில், “நீ என்ன பண்ணுனாலும், அவளை என்கிட்டே இருந்து காப்பாத்த முடியாது வேந்தா.” என்ற குரல் வெறுப்புக் குரல் ஒலிக்க,
துருவேந்திரன் உச்சகட்ட கோபத்திலும், வெறியுடனும், “என்னை மீறி என் உதியோட நிநிழலைக் கூடஉன்னால தொட முடியாது நண்பா…” என்று மருத்துவமனை அதிரும் அளவு உரக்கக் கத்தினான்.
சுஜி, அவளுக்காகப் பார்த்திருக்கும் மாப்பிள்ளையை மாப்பிள்ளையைப் பார்க்க, அழகாய் சல்வார் அணிந்து கொண்டு காரில் அமர, அங்கு, “ஹாய் பஜ்ஜி” என்று அஜய் ஏற்கனவே அமர்ந்திருந்தான்.
அவனை முறைத்து “நீ எதுக்கு டா வந்த”
“ம்ம் உனக்கு மாப்பிள்ளை பார்க்க” என்று சொல்லி ‘காபி ஷாப்’க்கு சென்றான்.
அங்கு சுஜியை பார்க்க வந்த, சந்துருவிற்கு சுஜி, அஜயை அறிமுகப்படுத்தி, என்ன பேசுவது என்று தெரியாமல் முழிக்க,
அஜய், “சொதப்பாத பஜ்ஜி, ஒழுங்கா பேசு…” என்று அவளைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, உத்ராவிற்கு அடிபட்டிருக்கிறது என போன் வந்ததில் அதிர்ந்தவன், சுஜியிடம் இப்பொழுது சொல்ல வேண்டாமென நினைத்து,
சுஜி, “நான் அவசரமா போகணும். நீ ஃபிரீ ஆகிட்டு எனக்கு கால் பண்ணு” என்று அங்கிருந்து நகர்ந்தான்.
அவனின் சுஜி என்ற அழைப்பிலேயே, ஏதோ பிரச்சனையென உணர்ந்தவள், சந்த்ருவிடம் ஒரு நிமிஷம் என்று விட்டு,
அஜய் பின்னால் சென்று “என்ன ஆச்சு அஜய்? எதுவும் ப்ராப்ளாமா?” என்று குழப்பமாய் கேட்க,
“அது அது ஒன்னும் இல்ல. நான் பாத்துக்குறேன் சுஜி” என்றதும்,
“இல்ல ஏதோ இருக்கு என்னன்னு சொல்லு. இல்லைன்னா நானும் உன்கூட வரேன்”
“பஜ்ஜி பெரிய பிரச்சனை எல்லாம் இல்ல. முதல் தடவை மீட் பண்ண வந்துட்டு பாதியில வந்தால் நல்லா இருக்காது. நீ போய் சந்துருவை பாரு.” என்று அவளின் கன்னத்தில் தட்டி விட்டு அங்கிருந்து சென்றான் அஜய்.
அவன் சென்றதும், ஏதோ ஒரு பாதுகாப்பின்மை அவளைச் சூழ, சந்துருவின் எதிரில் சென்று அமர்ந்தாள்.
அஜய் அவசரமாய் மருத்துவமனைக்குச் செல்ல, அங்குத் துருவ் இருப்பதை பார்த்து, அவன் சட்டையைப் பிடித்து,
“என்னடா பண்ணுன உதிய.” என்றான் கடுங்கோபத்துடன்.
அங்கிருந்த அர்ஜுன், “அஜய், விடு அவனை” என்று தடுத்தான்.
“விடு அர்ஜுன் இவன் தான் ஏதாவது பண்ணிருப்பான்.” என்று மேலும் கத்த, அர்ஜுன் கண்டிப்புடன், “உதிக்கு லேசான காயம் தான். துருவ் எதுவும் பண்ணல” என்றான்.
அஜய் அர்ஜுனை தள்ளி விட்டு, தற்போது அவன் போனிற்கு வந்த தகவலை அவனிடம் காட்டினான்.
துருவின், குடும்ப விவரம் இருந்தது.
அதில் காஞ்சனாவின் அருகில் அவன் நின்றிருக்கும் புகைப்படத்தைப் பார்த்த அர்ஜுன், அதிர்ந்து துருவை பார்த்து, “இவங்களுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் துருவ்?” என்று கூர்மையாய் கேட்க,
எங்கோ வெறித்தவன், “காஞ்சனா என் அத்தை” என்றான் புயலுக்கு முன் இருக்கும் அமைதியாய்.
உறைதல் தொடரும்
மேகா