468 views

அத்தியாயம் 7

மாலை வீட்டிற்கு வந்த அதிரூபாவிற்கு அந்த மிஸஸ். பிரித்வி என்பதே ஓடிக் கொண்டு இருந்தது.

உடை மாற்றியவள் அதற்குப் பிறகு எதுவும் செய்யத் தோன்றாமல், அறையிலேயே அமர்ந்திருந்தாள் அதிரூபா.

மாலை தேநீரையே சகுந்தலா தான், அவளுக்கு அறைக்கு வந்து கொடுத்து விட்டுப் போனார்.

லயா கல்லூரி முடிந்து வந்து விட்ட விஷயம் கூட அவளுடைய குரலின் மூலமாகவே, அதிரூபாவிற்கு தெரிந்து விட்டது.

யார் என்ன செய்தாலும், என்ன சொன்னாலும்? அதிரூபா கீழே இறங்கி வரும் மனநிலையில் இல்லை.

நேரமே வந்து விட்ட பிரித்வி, “லயா! உங்க அண்ணி எங்கே?” என்று தங்கையிடம் தான் மனைவியைப் பற்றிக் கேட்டான்.

“எனக்கும் தெரியாது அண்ணா.அண்ணி வந்துட்டாங்களா அம்மா?” என்று தாயிடம் கேட்டாள்.

“வந்துட்டா.மேலே ரூம்ல தான் இருக்கா. வந்ததுமே ரூமுக்குள்ளப் போய் அடைஞ்சுக்கிட்டா.நான் டீ கொண்டு போய் கொடுத்தேன். அப்பவும் எதுவும் பேசல.ஆஃபீஸ்ல எதுவும் பிரச்சினையா இருக்குமோ? என்னன்னு போய்க் கேளு பிரித்வி”

சகுந்தலா இவ்வாறு கூறியதும் உடனடியாக மனைவியைச் சந்திக்கச் சென்றான்.

யோசனையின் பிடியில் இருந்த அதிரூபாவோ வந்தவனைக் கவனிக்கவில்லை.

பிரித்வி, “அதி” என்று மெதுவாகத் தான் அழைத்தான்.

ஆனால் அதிரூபா இருந்த நிலையில், அவனது மென்மையைப் புறக்கணித்து விட்டு,
“இப்போ தான் வந்தீங்களா? ஃப்ரஷ் ஆகிட்டு வாங்க” என்று மட்டும் கூறினாள்.

“அது இருக்கட்டும். நீ ஏன் இப்படி இருக்க? வந்ததில் இருந்து யார் கூடவும் பேசலன்னு சொன்னாங்க. ஆஃபீஸ்ல எதுவும் ப்ராப்ளமா?” என்று அக்கறையாக கேட்டான்.

அந்த அக்கறையை ஏற்றுக் கொள்ளவும் , ரசிக்கவும் தோன்றவில்லை அவளுக்கு.

வெடுக்கென்றும் பேச முடியவில்லை.ஆனால் அங்கே பேசியவர்கள் கூறிய வார்த்தைகளை இன்னும் மனதினுள் ஓட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தவளுக்குப் பொறுமையாக இருப்பது மிகவும் கடினமாக இருந்தது.

தான் கேட்டதற்கு இன்னும் அவள் பதிலளிக்கவில்லை என்று பிரித்விக்குமே சிறு கோபம் துளிர்க்கத் தொடங்கி விட்டது.

அதன் விளைவாக, “அதி!!!” என்று சற்று சுத்தமாக அழைத்து விட்டான்.

அதில் தனக்குள்ளே இருந்த ஆற்றாமை தலைத் தூக்கவும்,
“என்னங்க? எனக்கு யோசிக்கக் கூட நேரம் கிடையாதா? அந்தளவுக்கு நான் உங்களுக்கு இளக்காரமாகப் போய்ட்டேனா?” என்று கணவனைப் பொரிந்து தள்ளி விட்டாள் அதிரூபா.

விஷயத்தின் தலையும் புரியாமல், வாலும் புரியாமல், தாம் தூம் என்று குதிக்கும் மனையாளை ஆச்சரியத்துடனும், அச்சத்துடனும் பார்த்தான்.

இவளுக்கு என்ன ஆயிற்று? கொதிகலனாய்க் கொதிக்கும் அளவிற்கு என்ன நடந்தது? நான் என்ன செய்தேன்? என்று பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டான் பிரித்வி.

அதை விடவும் முக்கியமானது அதிரூபாவின் இந்த மாற்றத்திற்குக் காரணம் என்ன? என்பதை அறிய நினைத்தான்.

“எதுக்கு இதெல்லாம் பேசுற? நீ நார்மலாக இல்லை.அதை என்னன்னுக் கேட்கக் கூட உரிமையில்லையா எனக்கு?”

அவன் அப்படி உரைத்ததும் தான் அவள் பேசிய வார்த்தைகளை உணர்ந்தாள்.

அதற்கு மன்னிப்புக் கேட்கும் விதமாக,
“ப்ளீஸ் என்னைப் புரிஞ்சுக்கோங்க பிரித்வி. உங்க அக்கறை எனக்குப் புரியுது. ஆனால் அதை ஏத்துக்கிற மனநிலை இப்போ எனக்கில்லை.வீணாக எங்கிட்ட பேசி என்னை கடுமையாக நடந்துக்க வைக்காதீங்க” என்று தன்மையாக கூறினாள் அதிரூபா.

“ஹ்ம்… ஓகே அதி. நீ ரெஸ்ட் எடு”

என்று தன்னைச் சுத்தப்படுத்தக் கொள்வதற்குச் சென்று விட்டான் பிரித்வி.

இங்கு அதிரூபாவோ, இப்படியே அமர்ந்திருந்தால் எண்ணங்கள் தன்னைக் கலக்கம் அடையச் செய்து விடும் என்று மடிக்கணினியில் வேலையைப் பார்த்தாள்.

உடை மாற்றி வந்தவனோ மனைவியை ஒரு பார்வை பார்த்தவன்,

தான் பேசுவது அவளுக்கு நிச்சயம் தலைவலியைத் தான் கொடுக்கும். இந்தச் சமயத்தில் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கீழே போய் விட்டான்.

பெருமூச்செறிந்தவாறே,வேலையைத் தொடர்ந்தாள் அதிரூபா.

கீழே வந்த மகனிடம், “என்னாச்சு பிரித்வி? ரூபா எதாவது சொன்னாளா? ஏன் அப்படி இருக்கா?” என்று வினவினார் சகுந்தலா.

மகனின் முகமும் தெளிவாக இல்லையே!என்ற பதைபதைப்பு ஏற்பட்டது.

“இல்லம்மா.மேரேஜ் முடிஞ்சு இப்போ தானே வேலைக்குப் போயிருக்கா, அங்கே எல்லாமே மறுபடியும் பிக்கப் பண்ண கஷ்டமாக இருக்குப் போல, அந்த டென்ஷன் தான். சரியாகிடுவாள்” என்று விளக்கினான்.

‘சரியாகி விடுவாள்’ என்றால் மருமகள் இன்னும்  சரி ஆகவில்லையா?

“நான் போய் பேசவா பிரித்வி?”

“வேண்டாம் அம்மா. அவள் வொர்க் பண்ணிட்டு இருக்கா”

ஆழ மூச்செடுத்த மகனைப் பார்த்து,
“டின்னர் சாப்பிடக் கூப்பிட்டு வந்துரு” என்று கூறினார் சகுந்தலா.

அந்த நேரத்தில்,
“அம்மா ! இன்னொரு பஜ்ஜி வேணும்” என்று வந்து நின்றாள் லயா.

“கிச்சன்ல தான இருக்கு. போய் எடுத்துக்கோ லயா”

“அண்ணாவும் பஜ்ஜி சாப்பிடல போல. இருங்க எடுத்துட்டு வர்றேன்” என்று சமையலறைக்குப் போனாள்.

லயாவின் முன்னால் இவ்விஷயத்தைப் பேச வேண்டாம் என்று நினைத்ததால், அமைதியாகப் போய் சோஃபாவில் அமர்ந்தான் பிரித்வி.

இதற்கு மேல் சகுந்தலாவாலும் வெளிப்படையாக விசாரிக்க முடியாதல்லவா? அதனால் அவரும் மருமகளின் போக்கு விரைவாக மாற வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.

“இந்தாங்க அண்ணா” என்று அவனிடம் தட்டைக் கொடுத்தவள்,
“நான் போய் அண்ணிக்கும் கொடுத்துட்டு வர்றேன்” என்று இவன் பேச வாய் திறப்பதற்குள் மாடியில் ஏறி விட்டாள் லயா.

அதிரூபா தங்கையைத் திட்டி விடுவாளோ! என்ற கலக்கத்தில் இருந்தான் பிரித்வி.

நாகரீகமாகக் கதவைத் தட்டிக் கொண்டு வெளியே நின்று காத்திருந்தாள் லயா.

“யாரு?”

அதிரூபா கேள்வி எழுப்பினாள். ஏனெனில் பிரித்வி போன வேகத்திற்கு உள்ளே வர சாத்தியமில்லை என்பது அவளது கணிப்பு.

அது நூறு சதவிகிதம் உண்மை என்பது போல,
“நான் தான் அண்ணி” என்று லயாவின் குரல் கேட்டது.

“உள்ளே வா லயா”

அனுமதியளித்தவள் மீண்டும் கணினியில் கவனத்தைப் புகுத்திக் கொண்டாள் அதிரூபா.

அதைப் பார்த்து வேற்றுமையாக நினைக்காத, கல்மிஷம் தெரியாத லயாவோ,
“இந்தாங்க சாப்பிட்டுக்கிட்டே வேலைப் பாருங்க” என்று பஜ்ஜி நிறைந்த தட்டை அவளருகில்  வைத்தாள்.

“தாங்க்ஸ் லயா” நன்றியுடன் பஜ்ஜியை எடுத்துக் கடித்துக் கொண்டாள்.

“இட்ஸ் ஓகே அண்ணி. வர்றேன்” என்று கீழே போய் விட்டாள்.

அவள் கீழிறங்கியதும், அறைக்குப் போன பிரிதிவியோ,
“தாங்க்ஸ்”என்றான் அதிரூபாவிடம்.

அவளோ, ” எதுக்கு?” என்று புரியாமல் கேட்டாள்.

“லயாவைத் திட்டாம இருந்ததுக்கு”

ஒரு கணம் நிமிர்ந்து அவனைப் பார்த்தவளோ,
“ஒருத்தர் மேல இருக்கிற கோபத்தை இன்னொருத்தர் மேல காட்ற பழக்கம் எனக்கில்லை”என்று தீர்க்கமாக கூறினாள் அதிரூபா.

” அப்போ என் மேல தான உனக்குக் கோபம்? அது என்னன்னு சொல்லு? சரி பண்ண ட்ரை பண்றேன் “

மடிக்கணினியை அணைத்து விட்டு, அவனைப் பார்த்தாள் அதிரூபா.

“உங்க மேலேயும் எனக்குக் கோபம் இல்லை. ஆஃபீஸ்ல தான் ஒரு பிரச்சினை. அதைப் பத்திப் பேசக் கூட எனக்கு சக்தி இல்லை. அதுனால கோபம் போனதுக்கு அப்பறம் கண்டிப்பாக சொல்றேன். அதுக்கு முன்னாடி அடிக்கடி இதைக் கேட்காதீங்க. எனக்கு நம்ம வீட்ல யார் மேலேயும் கோபம் இல்லை”

தெளிவாக உரைத்தவளிடம் அதற்குப் பிறகு எதுவும் கேட்கவில்லை பிரித்வி.

அலுவலகத்தில் பிரச்சினை எனில், ப்ராஜெக்ட் அல்லது சக ஊழியரால் ஏற்பட்டிருக்கக் கூடும் என்று தோன்றியது. அவளால் சமாளிக்க முடியவில்லை என்றால் நிச்சயமாக நம்மிடம் வந்து கூறுவாள் அது வரை காத்திருப்போம் என்று பிரித்வி அமைதியடைந்து விட்டான்.

அவன் மறுபடியும் கீழே வந்ததும், சகுந்தலாவிடம், “அதிக்கு ஆஃபீஸ்ல ஏதோ பிரச்சினை அம்மா. அதுதான் அப்படி இருக்கா. நான் முதல்லயே சொன்னேன்ல.நம்ம வீட்ல யாராலும் பிரச்சினை இல்லைன்னு சொன்னா” என்றதும் தான் அவருக்குமே நிம்மதி தோன்றியது.

“ஆஃபீஸ்ல தானா? கல்யாணம் ஆன புதுப் பொண்ணுல்ல, அதை வச்சுக் கிண்டல் செய்திருப்பாங்கலா இருக்கும். அதுதான் மருமக டென்ஷன் ஆகியிருப்பா.அவ புத்திசாலி சமாளிச்சிடுவா” என்று அதிரூபாவை புகழ்ந்துப் பேசினார் சகுந்தலா.

அதில் புன்னகைத்த பிரித்வி, “அப்படியா தான் இருக்கும் அம்மா. டின்னர் சாப்பிட்றப்போ சகஜம் ஆகிடுவா” என்று அவனுமே நினைத்தான்.

ஆனால் இரவு உணவின் போதும் இறுக்கமான மனநிலையில் தான் இருந்தாள் அதிரூபா.

அவ்வப்போது அவளைப் பார்த்துக் கொண்டு இருந்த சகுந்தலாவோ,
“ரூபா! டேஸ்ட் நல்லா இருக்கா பாரு?” என்று  காளான் கிரேவியை அவளது தட்டில் ஊற்றினார்.

உடனே அதை ருசித்தவள், “நல்லா இருக்கு அத்தை” பாராட்டும் வழங்கி விட, அத்தோடு அவளை விரைவில் சகஜமாக்கி விட்டார் சகுந்தலா.

தாய்க்குக் கண்களாலேயே நன்றி சொன்னான் பிரித்வி.

“ஃபர்ஸ்ட் டே ஆஃபீஸ் எப்படி மா இருந்துச்சு?”

மகேஸ்வரன் நிலைமை புரியாமல் கேட்டு விட்டார்.

மனைவி சகுந்தலாவும், மகன் பிரித்வியும் தன்னைப் பார்த்து முறைப்பது ஏன்? என்று குழப்பமாகப் பார்த்தார் மகேஸ்வரன்.

“நல்லா போச்சு மாமா. போனதும் வேலையைப் பார்க்க ஆரம்பிச்சுட்டேன்” என்று அவருக்கு இயல்பானத் தொனியில் பதில் சொன்னாள் மருமகள்.

“இவ்வளவு நாளாகப் போகலைல. அதுதான் பிடிச்ச வேலைன்னு வேற சொன்ன. அதுனால கை தானாகவே வேலையில் ஈடுபட்டு இருக்கும்”

“நீ சீக்கிரம் சாப்பிட்டு ரெஸ்ட் எடு ரூபா” என்று மருமகளை உணவுண்ணச் சொன்ன சகுந்தலா,

கணவனிடம், “நீங்களும் சீக்கிரம் சாப்பிடுங்க” என்று உத்தரவிட்டார்.

ஏதோ ஒன்று இருக்கிறது? என்பதைப் புரிந்து கொண்ட மகேஸ்வரனோ அதற்குப் பின்னர் எதையும் பேசாமல் சாப்பிட்டார்.

மெதுவாக மருமகளைப் பற்றி கணவனிடம் கூறினார் சகுந்தலா.

“ஓஹோ.. இதுதான் விஷயமா? இது தெரியாமல் நான் ஆஃபீஸைப் பற்றி கேட்டுட்டேனே!” என்று மனைவியிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்டார்.

இறுக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டு, படுக்கையில் அமர்ந்திருக்கும் அதிரூபாவின்,கையில் மென் முத்தம் வைத்தான் பிரித்வி.

அதில் திடுக்கிட்டு விழித்த மனைவியிடம்,

“நீயும் இந்த ட்ரீட்மென்ட் தான எனக்குக்  கொடுத்த?” என்று சொல்லி மீண்டும் முத்தம் கொடுத்தான்.

“ஆமா” சிறு இடைவெளி விட்டு,

“சாரி பிரித்வி” என்க,

“என் மேலே தான் உனக்குக் கோபமும் இல்லை, திட்டவும் இல்லை. அப்பறம் ஏன்?” என்று கேட்டான் கணவன்.

“ஈவ்னிங் உங்ககிட்ட பேசினது சரியில்லையோ என்று தோணுச்சு” என்றாள் அதிரூபா.

“சரியாகத் தான் இருந்துச்சு அதி. நீ சொல்லாமல் இருந்திருந்தால் தான் என்னமோ, ஏதோன்னு பயந்திருப்பேன். உன் முகமே வாடி இருந்துச்சு.அதுனால தான் கேட்டேன். நான் எதுவும் ஹர்ட் பண்ணிட்டேனோன்னு நினைச்சேன்”

அவன் அழுத்திக் கொடுத்த நெற்றி முத்தத்தைப் பெற்றுக் கொண்டவள்,
“பரவாயில்லை பிரித்வி. நான் சாரி சொல்லுவேன்” என்று விடாப்பிடியாக மன்னிப்புக் கேட்டவளின் இதழ்களை தனது உதடுகளால் சிறை செய்தான்.

– தொடரும்…

(அடுத்த பதிவு வியாழனன்று பதிவிடப்படும்)

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்