நிகழ்ந்த திடீர் திருமணத்தில் இருந்தே சத்யரூபா இன்னும் வெளியில் வராமல் இருக்க, முதலிரவைப் பற்றியெல்லாம் சிந்திக்கக் கூட இயலவில்லை. நெஞ்சம் எல்லாம் படபடவெனத் துடித்தாலும், எழுந்த சிறு அச்சத்தை வெளியில் காட்டாமல், அவனை முறைத்து விட்டு அமைதியானாள்.
“சத்யா, பூஜை ரூம்ல போய் விளக்கேத்து.” என பானுரேகா சொன்னதும், ஒரு நொடி தயக்கம் மேலிட, “நான் வீட்டுக்கு தூரம் அத்தை…” என்றாள்.
அதனைக் கேட்ட சொந்தங்கள் தான், “என்னவோ, இதை கூட ஒழுங்கா விசாரிக்காம அவசர அவசரமா கல்யாணத்தை பண்ணி வச்சுட்டீங்க… சொந்தத்துல இல்லாத பொண்ணுங்களா…” என முகத்தை சுளித்துக் கொள்ள, பானுரேகா அதனை கண்டுகொள்ளாமல், “நீ என் ரூம்க்கு போ!” என்றவர், இந்திரஜித்திடம் கண்ணைக் காட்டினார்.
அவனும் சட்டென எழுந்து கொள்ள, அதற்குள் இந்திரஜித்தின் சித்தி முறையான கௌசல்யா, “ஏன்மா… இப்படி தீட்ட வச்சுட்டா, பூஜை சாமான் கூட நீயே வாங்குன. இந்த காலத்துக்கு பிள்ளைகளுக்கு சாஸ்திரமெல்லாம் தெரியவே மாட்டேங்குது.” என அங்கலாய்த்து விட்டு, “இப்படி தீட்டானதுனால தான், ஏற்பாடான கல்யாணம் நின்னு போச்சு போல.” என்றார் வாய் கூசாமல்.
எழுந்த கோபத்தை அடக்க முயன்று தோற்ற சத்யரூபா, பேச வாய் எடுக்கும் முன், “ஆமா ஆமா… கரெக்ட் தான் சித்தி. பட், காட் இஸ் கிரேட்ல. தீட்டாகி அவள் தொட்ட பூஜை ஜாமனை வச்சு அவள் கல்யாணத்தையே நடத்திட்டாரு. நீங்க வேணும்ன்னா இதே பார்முலாவை ட்ரை பண்ணுங்க சித்தி. உங்களுக்கும் சித்தப்பாவை விட பெட்டரா ஒரு பிகர் கிடைக்கலாம்” என்று குட்டவும் செய்து, குறும்புடன் முடிக்க, அவரோ “போ இந்தர். உனக்கு எப்பவும் விளையாட்டு தான்” என அசடு வழிந்தார்.
“விளையாட்டு விபரீதம் ஆகாம இருந்தா சரி…” கண் சிமிட்டி கண்டித்து விட்டே, அவளை அழைத்துக்கொண்டு செல்ல, சத்யரூபாவிற்கு ஏனோ இன்னும் ஆத்திரம் அடங்கவில்லை.
‘நான் பார்க்காம, இவங்க வந்து கல்யாண வேலையை பாப்பாங்களாமா?’ எனக் கடுப்பை தனக்குள் அடக்கியவளுக்கு, இந்திரஜித் கொடுத்த பதிலே போதும் என்று தான் தோன்றியது. தான் பேசி இருந்தால், நிச்சயம் அங்கு ஒரு கலவரமே வெடித்து இருக்கும். அவள் உபயோகிக்கும் வார்த்தைகள் அப்படி. வரும் கோபம் நியாயமாக இருந்தாலும், வீசும் வார்த்தைகள் அமிலமாக இருக்கும். இவனைப் போல கோபத்தை சிரித்தபடி காட்டத் தெரியாதே!
தனக்குள் சிந்தித்தபடியே அவனுடன் அறைக்குள் சென்றவளை, “ஏய்! ரூப்ஸ்.” என்று உலுக்கினான் இந்திரஜித்.
“ஹான்…” அப்போது தான் அவன் அழைத்தது கேட்க, “என்ன…?” என்றதில்,
“எத்தனை தடவை கூப்புடுறேன். காதுல விழுகலயா? ஒருவேளை நம்ம பர்ஸ்ட் நைட் பத்தின ட்ரீமோ” என உதட்டை மடித்து அவளை வார, “எதே… இல்ல இல்ல அதெல்லாம் இல்ல…” அவசரமாக மறுத்தாள்.
“அப்போ இல்லையா? சரி விடு. உனக்கும் சேர்த்து நான் பிளான் பண்ணிக்கிறேன்.” என்றிட,
“என்ன பிளான் பண்ண போறீங்க?” என்றாள் புருவம் சுருக்கி.
“பர்ஸ்ட் நைட்ட எப்படி செலெப்ரெட் பண்ணலாம்ன்ற பிளான் தான்…” சிரிப்பை உதட்டுக்குள் மறைத்தபடி கூறியவனை, கொலைவெறியுடன் பார்த்தாள்.
🩷🩷🩷🩷🩷🩷🩷
சென்னையில் இருந்து அதியூருக்கு பயணம் செய்தனர் எழிலழகன் – வைஷாலி தம்பதியர்.
அவர்களுடன், ஆனந்தியும் ஐயப்பனும் காரில் பயணிக்க, தாமரையும் சாவித்ரியும் வைஷாலி இருந்த வீட்டிலேயே அன்று ஓய்வெடுத்து விட்டு, மறுநாள், இந்திரஜித் சத்யரூபாவை மறுவீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்ற எண்ணத்தில் இருந்தனர்.
அது தானே, முந்தைய திட்டம்.
இங்கோ, எழிலழகனின் வீட்டில் மருமகளாக காலடி எடுத்து வைத்தாள் வைஷாலி. அதில், நெஞ்சம் பொறுமியது ஆனந்திக்கு.
ஒரு பொட்டு வரதட்சணை இன்றி மகனை வளைத்துப் போட்டு விட்டாளே என்ற ஆத்திரம் அடங்கவே இல்லை.
ஐயப்பன் தான், “அமைதியா இரு. ஆனந்தி. இப்பவே கோபத்தை காட்டுனா எழில் பொண்டாட்டிக்கு வக்காலத்து வாங்குவான்” என்று சமன்படுத்தினார்.
சொந்த அத்தை வீடு தான் என்றாலும், அவள் அடிக்கடி அங்கு வந்ததில்லை. எழிலழகனிடம் பேசிய வார்த்தைகளை கூட விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படி இருந்தும், அவளுள் எப்படி அவன் மீது காதல் நுழைந்ததென்று இப்போதும் தெரியவில்லை அவளுக்கு. அதில் சிறு முறுவல் பூத்தது என்றாலும், மனதினுள் ஒரு வித குற்ற உணர்ச்சி அலைக்கழித்தது.
ஏதோ ஒரு வேகத்தில், எழிலழகனை திருமணம் செய்து விட்டாலும், இதனால் தாயையும் தங்கையும் வேதனைப்படுத்தி விட்டோம் என்ற நினைவே அவளை வருந்த வைத்தது.
புகுந்த வீட்டில் விளக்கேற்றி, சம்பிரதாயங்களை செய்ய, இதில் எதிலும் எழிலழகன் தான் கலந்து கொள்ளவில்லை. ஊருக்கு சென்றதும் தனதறைக்குள் அடைந்தவன் தான். உடன் வந்தவளை ஏறிட்டும் பார்க்கவில்லை.
பயண அசதி என அவள் அதனை இயல்பாக எடுத்துக்கொள்ள, ஆனந்தி தான், “இங்க பாரு வைஷு. அத்தை வீடு தான்னு, இங்க எந்த சலுகையும் எதிர்பார்க்காத. மருமகளா பொறுப்பை ஒழுங்கா பண்ணு. கல்யாணத்தை தான் முறையா நடத்தல. வெறும் கழுத்தோட வர்ற மருமகளை நானா கண்டு ஏத்துக்குட்டேன்.” என்று சலித்துக் கொள்ள, ஒரு நொடி அவளுக்கு முகம் இருண்டாலும், தலையை ஆட்டிக்கொண்டாள்.
இரு பெண்களுக்கும், வீட்டு வேலையில் இருந்து, அனைத்து பொறுப்புகளையும் சொல்லிக்கொடுத்தே வளர்த்திருந்தார் தாமரை. அதனால், அவளுக்கொன்றும் வீட்டை நிர்வகிப்பதில் சிரமம் இல்லை. ஆனால், மாமியார் கூறிய நிபந்தனை தான் அவளை சோர்வாக்கியது.
ஒன்று அவள் வேலையை விட வேண்டும். மற்றொன்று, அடுத்து நல்ல நாள் பார்த்து அவர்களுக்கு ரிசப்ஷன் வைப்பது வரை, தஞ்சாவூருக்கு எழில் மட்டும் செல்வது.
இரண்டுமே அவளுக்கு கடினம் தானே. இருந்தும், அமைதியாய் தலையாட்டியவள், “ஒர்க் ப்ரம் ஹோம் கேட்டு, வீட்டுல இருந்தே வேலை பார்க்கலாம் அத்தை. ஒரு லட்சம் சம்பளம் திடீர்ன்னு நின்னா…” என்று மென்று விழுங்க,
“ஏற்கனவே நீங்க கல்யாணம் பண்ணிட்டு வந்த லட்சணத்துல மானம் போகுது, இதுல வந்த மருமகளை, வேலை பார்க்க வச்சா, ஊர் உலகம் என்னன்னவோ பேசும். எங்க கிட்ட இல்லாத பணமா? நீ வந்து இங்க கொட்டணும்ன்னு அவசியம் இல்லை.” என்று முதல் வேலையாக அவளிடம் இருந்த வேலையை தான் பறித்தார்.
கடந்த ஆறு மாதங்களாக தான், பெரிய கம்பெனியில் சேர்ந்து லட்ச ரூபாய் சம்பளம் வாங்குகிறாள். அதன் மூலமே, திருமணத்திற்கான நகைகளையும் சேர்த்து, கல்யாண செலவையும் திட்டமிட்டனர்.
அடுத்து வரப் போகும் சம்பளத்தில் தங்கையின் திருமணத்திற்கு நகைகளை சேர்க்க வேண்டும் என்றி்ருந்தவளுக்கு, அவளுக்கும் திருமணம் ஆனது மகிழ்ச்சியே. ஆனாலும், அவளுக்கான முறைகளை தமக்கையாய் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அடி விழுந்தது.
எழிலிடம் பேசலாம் என்றால், அவன் என்னவோ அவளை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. முன்பும் அப்படி தான். திடீரென சில மாதங்களுக்கு முன்பு வந்து, அவளைக் காதலிப்பதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ளக்கூறியும் கேட்டவனை அதிர்வுடன் பார்த்தாள் வைஷாலி.
அப்போதும், அவள் முகத்தை பார்க்கவில்லை அவன். அவனுடன் அந்த அளவு பேசி பழக்கம் இல்லாததால், அவனது குணமே அது தான் என்று எண்ணிக்கொண்டவளுக்கு, சிறு வயதில் இருந்தே எழிலின் மீது ஒரு ஈர்ப்பு. சில நேரம், சத்யரூபாவை பள்ளியில் விடுவதற்காக வீட்டிற்கு வருவான், அப்போதெல்லாம் அவனை ஓரக்கண்ணில் பார்த்து வைப்பவளுக்கு, உள்ளுக்குள் பல லட்ச பட்டாம்பூச்சிகள் அங்கும் இங்கும் ஓடும்.
இப்போது வரையிலும் கூட, அவன் அருகில் இருந்தால் கூட அதே உணர்வு தான். நிமிரவே இயலாதவாறு ஒருவித வெட்கம் அவளுள் அலைபாயும். அதுவே அவனை சரியாகக் கணிக்க இயலாது போயிற்று.
இது எதையும் கண்டுகொள்ளாமல், மறுநாளே தனியாக தஞ்சாவூர் கிளம்பி சென்று விட்டான் எழிலழகன். போகும் போதாவது ஒரு பார்வை பார்ப்பான் எனக் காத்திருந்த வைஷாலிக்கு ஏமாற்றமே. ஏனோ மனமே பாரமாக இருந்தது. ஏதோ ஒரு சுழலில் சிக்கிக்கொண்டது போலொரு உணர்வு.
மறுநாள், காலையிலேயே பானுரேகாவின் வீட்டிற்கு வந்த தாமரையும் சாவித்ரியும் மகளின் நலனை விசாரிக்க, அவள் மையமாக தலையாட்டி வைத்தாள்.
இரவு பானுரேகாவுடன் தான் உறங்கினாள். அதற்கு சலித்து விட்டு போன இந்திரஜித்தின் முகம் வேறு ஒரு நொடி நினைவு வர, இன்னும் அவன் பள்ளி எழுச்சி முடிந்து கீழே வரவில்லை.
பானுரேகா தான், “காபி போட்டு குடு சத்யா.” என்று மாமியாராய் உத்தரவிட, அவளும் அடுக்களைக்கு சென்று இருவருக்கும் காபியுடன் வந்தாள்.
அப்போது தான், தாமரை அவர்களை மறுவீட்டுக்கு அழைத்து செல்வதை பற்றி பேச, “இன்னும் அவள் இங்க விளக்கேத்தவே இல்ல சம்பந்தி. முதல்ல, இங்க முறையா எல்லாம் நடக்கட்டும். அவ தலைக்கு ஊத்துன மறுநாள் மறுவீட்டுக்கு அனுப்பி விடுறேன்.” என்று திட்டவட்டமாகக் கூறிட, தாமரை தயங்கினார்.
வைஷாலியையும் போய் பார்க்க வேண்டுமே…! அவளுக்கும் செய்ய வேண்டிய முறைகளை செய்வது பற்றி கவலை அவருக்கு. ஆனந்தியின் பேச்சுக்களை சாதாரண நாட்களிலேயே கேட்க இயலாது. இப்போது, இப்படி ஒரு சங்கடத்தில் என்னவெல்லாம் பேசுவாரோ என்ற பயம் வேறு இருக்க, இரு சம்பந்திகளிடமும் சிக்கி தவித்தார் தாமரை.
இன்னும் சத்யரூபாவிற்கு மாதவிலக்கு முடியவே மூன்று நாட்கள் இருக்கிறதே. அத்தனை நாட்கள் கழித்து, வைஷாலியை காண சென்றால் நன்றாகவும் இராது… என பானுரேகாவிடம் கூறியதில், “நீங்க ஊருக்கு போங்க சம்பந்தி. இந்தரும் சத்யாவும் வருவாங்க” என்றார்.
அவரோ மேலும் தயக்கத்துடன், “நாங்க கூட்டிட்டு போறது தான முறை…” என வாயை விட்டிட, பொறுமையாய் பேசிக்கொண்டிருந்த பானுரேகாவிற்கு சிறிதே கோபம் எட்டிப்பார்த்தது.
“அதுவும் சரி தான். அப்போ மூணு நாலு நாள் இருந்து கூட்டிட்டு போங்க” என்று விட, சத்யா தாயை முறைத்தாள்.
“நீங்க கிளம்புங்கமா. நாங்க வந்துக்குறோம். அதான் அத்தை அனுப்புறேன்னு சொல்றாங்கள்ல…” என்று கண்டிப்பது போல கூற, அதற்குமேல் வாயைத் திறக்கவில்லை அவர்.
கொட்டாவி விட்டபடி, கீழே வந்த இந்திரஜித், “குட் மார்னிங் அத்தை, குட் மார்னிங் பாட்டி” என்று இருவருக்கும் காலை வணக்கம் கூற, இருவருமோ பதில் கூற தெரியாமல் விழித்தனர்.
பானுரேகா தான், அவனை முறைத்து, “குளிக்காம கீழ வராதன்னு எத்தனை சொல்றது உனக்கு.” என்று பல்லைக்கடித்தார்.
எப்போதும் போல அதனை காதில் வாங்காமல், “புது மாப்பிள்ளைக்கு கூட ரூல்ஸ் போடாதீங்கம்மா.” என்றவாறு டீவி ரிமோட்டை எடுத்தவனின் கையில் நியூஸ் பேப்பரை சுருட்டி ஒரு அடி வைத்தவர், “விடிஞ்சதும் டீவி முன்னாடி தான் உட்காரணுமா. கல்யாணம் ஆகிடுச்சு இனிமேவாவது பொறுப்பா இரு இந்தர். முதல்ல போய் குளி. போ” என்று அதட்டினார்.
“ப்ச்…” என தாயை முறைத்தவர், தாமரையிடம் திரும்பி, “என்னை எப்போ அத்தை மறுவீட்டுக்கு கூட்டிட்டு போவீங்க. எனக்கு அங்க காலைல பெட் காபி தான் தரணும். டீலா?” என்றதில், அவருக்கு தான் இயல்பாக பேச இயலவில்லை.
வீட்டுக்கு வந்த மாப்பிள்ளையின் முன், அமர்ந்திருப்பதே அவருக்கு சங்கடமாக இருக்க, அவனோ உரிமையாய் பேசுவது இதமாகவும் அதே நேரம் சங்கடமாகவும் இருந்தது.
“தருவாங்க தருவாங்க.” என்ற பானுரேகா, “சத்யா இவன் மட்டும் அங்க போய் ப்ரஷ் பண்ணாம காபி கேட்டா, எனக்கு போன் பண்ணு. பாத்துக்குறேன்” என்று மகனை முறைத்திட, அவளும் சிரிப்பை அடக்கிக்கொண்டு “சரிங்க அத்தை” என்று வேகமாக தலையாட்டினாள்.
‘தலையைவா ஆட்டுற… உன்னை பாத்துக்குறேன் இரு.’ என மனதினுள் குமுறியவன், “இந்த வீட்ல நிம்மதியா காபி குடிக்க முடியுதா?” என புலம்பியபடி மீண்டும் அறைக்கே சென்றான்.
இது காபிக்கு மட்டும் இல்லை. டிவி பார்ப்பது, சாப்பிடுவது என அனைத்திற்கும் அங்கு ஒரு அட்டவணையே இருக்கும். தன் அறையில் தனியாக தொலைக்காட்சிபெட்டி வைத்துக்கொள்வதாக இந்திரஜித்தும் எவ்வளவோ மன்றாடினான். பானுரேகாவோ அழுத்தமாக மறுத்து விட்டார்.
“தனி தனியா டீவி எதுக்கு. உனக்கு என்ன பாக்கணும்ன்னாலும் ஹால்ல வந்து தான் பார்க்கணும்.” என்பவர், உணவு அருந்துவது கூட அனைவரும் வந்த பின்தான். தாமதமாக எழுந்தால், காபி கூட கிடைக்காது. டிபன் மட்டுமே. காலை உணவு நேரம் தாண்டி எழுந்தால், அதுவும் கிடையாது.
விடுமுறை நாட்களில் மட்டுமே, 8 மணி வரை உறங்கினால் சலுகைகள் கிடைக்கும். மற்ற நாட்களில் 7 மணிக்குள் வந்தால், மட்டுமே காபி. இப்படி அனைத்திற்கும் விதிகள் உண்டு அவ்வீட்டில்.
“சரியான சர்வாதிகாரி…” சில நேரம் பானுரேகாவிடம் இந்திரஜித் சண்டை பிடிப்பதும் உண்டு. ஆனால், மற்ற இருவருமோ அவர் பேச்சைத் தவறாமல் கடைபிடித்து விடுவர்.
அப்படியும் சில விஷயங்களில், பானுரேகாவிடம் சண்டையிட்டாவது தன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்வான். அது தான் அவனது வேலை.
சி. ஏ படித்து, நல்ல மதிப்பெண்களை பெற்று தேர்வானவன், தற்போது பிரைவேட் கன்சல்டன்சி ஒன்றில் வேலை செய்கிறான். அதுவும் அனுபவத்திற்காக தான். சொந்தமாக கன்சல்டன்சி ஆரம்பிக்க வேண்டும் என்பது கனவு. முதலிலேயே, தொழில் ஆரம்பிக்க இருந்தவனுக்கு, “ஒத்த பைசா கூட தரமுடியாது” என்று மறுத்து விட்டார் பானுரேகா.
“சர்வாதிகாரி…” அதற்கும் தாயை திட்டி வைத்தவன், தானே சம்பாதித்து பணம் சேர்த்துக் கொள்வதாகக் கூறி, வேலைக்கு சென்று கொண்டிருக்கிறான்.
இத்தனைக்கும், அவர்களுக்கு சொந்தமாக கார்மெண்ட்ஸ் அண்ட் டெக்ஸ்டைல்ஸ் இருக்கிறது. அதனை பானுரேகாவும் பாலகிருஷ்னனும் தான் நிர்வகிக்கின்றனர். படித்து முடித்து தற்போது சிரஞ்சீவி அதனை நடத்திக் கொண்டிருக்கிறான். பேஷன் டிசைனிங் படித்தவனுக்கு, ஆடைகளுக்கு மத்தியில் வேலையும் பிடித்தது போல அமைந்து விட, காதலில் விழுந்ததே அவனுக்கு தாயிடம் பெரும் அவஸ்தையாகி போனது.
🩷🩷🩷🩷🩷🩷🩷
அதே அவஸ்தையுடன் நீரஜாவின் முன் நின்று கொண்டிருந்தான் சிரஞ்சீவி. அவளோ அவனை பொருட்டாகவே மதியாமல், கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தாள்.
கையில் வைத்திருந்த ஸ்டிக்கை உபயோகப்படுத்தி, தாங்கி தாங்கி நடந்து சென்றாள். சிறு வயதில் ஏற்பட்ட போலியோ அட்டாக்கினால் ஒரு கால் பாரலைஸ் ஆகி இருந்தது. ஒரு சுற்று சுற்றி முடிக்கும் வரை காத்திருந்த சிரஞ்சீவி, மீண்டும் அவள் முன் நின்றான்.
நீரஜா அவனை விட்டு விலக எத்தனிக்க, “வாட்டர்… ப்ளீஸ்டி! நான் சொல்றதை கேளேன்.” சிரஞ்சீவி கெஞ்சலாகக் கேட்க,
“நான் எதையும் கேட்க தயாரா இல்ல ரஞ்சி. என்னை விட்டுடுங்க.” என்றவளுக்கு குரல் கரகரத்தது.
“உன்னை விட முடியாம தான வாட்டர், கல்யாணத்துல இருந்து ஓடி வந்தேன். உன்னை விட முடியாதுடி.” என அழுத்தமாக உரைத்தவனை, முறைத்தவள்,
“ஓடி மட்டுமா வந்தீங்க. என்ன காரியம் செஞ்சு வச்சிருக்கீங்க?” என்று கோபத்துடன் குனிந்து பார்க்க, கழுத்தில் அவன் கட்டிய மஞ்சள் கயிறு தொங்கிக் கொண்டிருந்தது.
“நீயும் நானும் விரும்புறோம் நீரு. என்னை விரும்புன பொண்ணு கழுத்துல தான் தாலி காட்டுனேன். இதுல தப்பு எதுவும் இல்லை.” என்றான் வேகமாக.
“ஓஹோ… இதை உங்க அம்மா முன்னாடி அச்சு பிசகாம சொல்ல முடியுமா?” அவள் ஏகத்துக்கும் கேலியை குண்டு விழிகளில் ஏற்றிக் கேட்க, சிரஞ்சீவிக்கு தாயைப் பற்றி பேசியதுமே, அனைத்தும் மறந்து போனது.
அலைபாயும்…!
மேகா