அத்தியாயம் 67
குறிஞ்சியும் மற்றவர்களும் உணவு உண்டு கொண்டிருந்த உணவகத்தின் வாசலில் காரை நிறுத்தச் சொன்ன யுக்தா, விஸ்வயுகாவை மட்டும் விட்டு விட்டு அலுவலகத்திற்கு பறந்தான்.
இருவரும் நொடியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை.
அவர்களும் எதையோ கொறித்து விட்டு வெளியில் வர, மைத்ரேயன் “நீயும் வந்து சாப்பிடு விஸ்வூ” என அழைத்தான்.
அது அவள் காதிலேயே விழவில்லை. யுக்தா சென்ற திசையையே வெறித்துக் கொண்டிருந்தாள்.
“விஸ்வூ” ஷைலேந்தரி நன்றாக உலுக்கியதும் தான் நிகழ்விற்கு வந்தவள், “சாப்ட்டேன்” என பொய்யுரைத்து விட்டு குறிஞ்சியிடம் “அடுத்து என்ன?” எனக் கேட்டாள்.
அந்நேரம் யுக்தா குறிஞ்சிக்கு அழைக்க, “யுக்தா தான் கால் பண்றான் பேசிட்டு வரேன்” என்று தனியே சென்றாள்.
நந்தேஷ் உடனடியாக, “விஸ்வூ உனக்கு ஒரு மேட்டர் தெரியுமா. யுக்தாவும் உன்னை லவ் பண்ணிருக்கான்…” எனப் பரபரப்புடன் கூற, “ஓ! எனக்கு உதித் பத்தின டீடெய்ல் வேணும். நம்மளோட அடுத்த சஸ்பெக்ட் அவன் தான்…” என்றாள் தீவிரமாக.
“அவன் என்ன பேசுறான் நீ என்ன பேசுற. யுக்தாவை நீயும் விரும்பி இருக்க. அவனும் உன்ன” என ஷைலேந்தரி ஆரம்பிக்க, “அதுக்காக என்ன பண்ணலாம். அவன் கால்ல விழுந்து கல்யாணம் பண்ணிக்க சொல்லட்டா?” என சீறினாள் விஸ்வயுகா.
“நம்ம டார்கெட் எதுவோ அதை மட்டும் ஃபோகஸ் பண்ணுங்க. இந்த லவ்வு மண்ணாங்கட்டின்னு இனி என்கிட்ட பினாத்தாதீங்க. தென், நம்ம பாய்சன் வேற யுக்தா கைக்கு போய்டுச்சு. அதை அவன்கிட்ட இருந்து எடுக்கணும்” தோளில் விழுந்த கூந்தலை பின்னால் போட்டபடி வெகு தீவிரமாக உரைத்தவளை செய்வதறியாமல் பார்த்தனர் மூவரும்.
சிவகாமி இப்போது விஸ்வயுகாவிற்கு போன் செய்திட, “இந்த அம்மா வேற…” என எரிச்சலுறும் போதே, குறிஞ்சி வந்தவள் “நான் அவசரமா ஆபிஸ்க்கு போகணும். நீங்க வீட்டுக்குப் போங்க. சைன்டின்ஸ்ட் பாஜியோட பேசுறதுக்கு ஏற்பாடு பண்ணிட்டு இருக்கோம். நெக்ஸ்ட் ஸ்டெப் சொல்றேன்…” என அவளும் கிளம்பி விட, நால்வரும் இரவு நெருங்கும் வரை வெளியில் சுற்றி விட்டுப் பின் விஸ்வயுகாவின் வீட்டிற்கே வந்தனர்.
அவர்கள் உள்ளே வரும்போதே சிவகாமி விஸ்வயுகாவின் மீது பூச்சாடியை விட்டெறிந்தார். சரியாக நந்தேஷ் இடைபுகுந்து தடுத்து விட்டவன், “அம்மா திஸ் இஸ் த லிமிட்” என்றான் கோபமாக.
“அதை தான் நானும் சொல்றேன். திஸ் இஸ் த லிமிட் நந்து. யுக்தாவை அடிக்க நான் அனுப்புன ஆளுங்களை இவள் அடிச்சு அனுப்பி இருக்கா” என்றதும் நந்தேஷ் அவளைப் பார்த்தான்.
கிளினிக்கில் யுக்தா மருந்து போட உள்ளே சென்றதும் தங்களை வெகு நேரமாகத் தொடர்ந்து கொண்டிருந்த காரை நோக்கிச் சென்றவள், அவர்கள் சிவகாமி அனுப்பிய ஆள்கள் என்றதும் அடித்து அனுப்பி இருந்தாள்.
இப்போது எதையும் கண்டுகொள்ளாதது போன்று காலுக்கு முன் கிடந்த பூச்சாடியை எத்தி விட்டு மாடிக்குச் செல்லப்போக, சிவகாமி அவள் கையைப் பிடித்தார்.
“உங்கிட்ட தான பேசிட்டு இருக்கேன்! சுனாமிலயே செத்துப் போக வேண்டியவன்… இப்ப முளைச்சு வந்து என்னை அடிக்கிறான். நீயும் வெட்கமே இல்லாம அவன்கூட உரசிட்டு இருக்க. உடம்புல சூடு சொரணை எல்லாம் செத்துப் போச்சா உனக்கு” எனக் கடிந்ததும்,
“ஆண்ட்டி ரொம்ப ஓவரா பேசுறீங்க. நீங்க மட்டும் அவளோட ஹார்ட் டைம்ல சரியா முடிவு எடுத்துருந்தா இதெல்லாம் அப்பவே சரி ஆகியிருக்கும். எல்லாத்தையும் மறைக்கிறேன்னு, இப்போ அவளோட வருங்காலத்தையும் குழில போட்டு புதைச்சுட்டு இருக்கா. நீங்க செய்ய வேண்டியதை தான் இப்ப யுக்தா செஞ்சுட்டு இருக்கான். கூடவே இருந்து குத்திக்கிட்டே இருக்குறதுக்கு அவளை விட்டுடுங்க அவள் யுக்தா கூடவே போகட்டும்” எனக் கொந்தளித்திருந்தான் மைத்ரேயன்.
“நீ யாருடா என் குடும்ப பிரச்சனைக்குள்ள தலையை விட்டுட்டு இருக்க. உன் அப்பா தேவையில்லாம என் விஷயத்துல தலையிட்டதுனால தான், உன் குடும்பத்தையே இந்த தெருவுல இருந்து துரத்தி விட்டேன் பிசினஸ் லாஸ் ஆக வச்சு. உன் அப்பனுக்கு என்கிட்ட போராட நேரம் இல்லாத அளவு அடுத்து அடுத்து முன்னேற வேண்டிய நிலைமையை உருவாக்கி, இப்பவும் அந்த ஆளு என்கிட்ட வாலாட்டத மாதிரி நறுக்கி வச்சுருக்கேன். நீ என் முன்னாடி எதிர்த்து பேசுறியா?” எனக் கண் சிவக்க பொங்கியதில்
நந்தேஷ் “ம்மா அவன் என் ப்ரெண்ட். இதெல்லாம் நல்லது இல்லை” என்று எச்சரித்தான்.
மைத்ரேயனோ சிவகாமியின் கூற்றில் அதிர்ந்தாலும், பள்ளிக்கூடம் பயிலும் போது திடுதிப்பென இதே தெருவில் பங்களாவில் வசித்துக் கொண்டிருந்தவர்கள் வாடகை வீட்டிற்கு செல்லும் நிலை ஏற்பட்டு, பின் மீண்டும் தொழில் ரீதியாய் முன்னேற்றம் கண்டது நினைவு வந்தது. இப்போது அதற்கான காரணம் புரிந்திட,
“பெத்த பொண்ணு மனசையே உடைக்கிறீங்க. நீங்க என் குடும்பத்தை தீயை வச்சு கொளுத்தி இருந்தாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்ல ஆண்ட்டி. தேள் கூட சகவாசம் வச்சுக்கிட்டா கொட்ட தான செய்யும்” என வார்த்தைகளைக் கடித்துத் துப்ப, சிவகாமி சீறலுடன் அவனை அறைய எத்தனித்தார்.
சட்டென அவர் கையைப் பிடித்தாள் ஷைலேந்தரி.
“ஸ்டாப் திஸ் பெரிம்மா. அவன் என் புருஷன். இந்த வீட்டோட மாப்பிள்ளை. மரியாதையைக் குடுக்க பழகுங்க. மாமியாரா அடக்க ஒடுக்க இருக்க முடிஞ்சா இருங்க. இல்ல… மொத்தமா அடக்கம் பண்ணிட்டு போய்டுவேன். ஜாக்கிரதை!” என விழியில் நெருப்பை உமிழ்ந்தாள்.
‘என் புருஷன்’ என்ற அவளது உரிமைப் பேச்சில் வானத்தில் பறந்து கொண்டிருந்தது மைத்ரேயன் தான்.
அவன் முகமே நடக்கும் சம்பவத்திற்கு மாறாக மலர்ந்து விட, நந்தேஷ் “மூஞ்ச மாப்பிள்ளை முறுக்கோட வைடா வெண்ண” எனப் பல்லைக்கடிக்க, “மச்சி என் பொண்டாட்டி என்னை புருஷன்னு சொல்லிட்டாடா” எனக் குனிந்து வெட்கப்பட்டான்.
“ஹையோ அசிங்கப்படுறது கூட தெரியாத அளவு காதல் கண்ணை மறைக்குதே ஆண்டவா” என நொந்திட,
ஷைலேந்தரியைப் பிடித்து இழுத்தார் அவளது தந்தை அசோக்.
“என்ன வார்த்தை நீளுது ஷைலு. இதான் நான் உனக்கு சொல்லிக்கொடுத்த மரியாதையா?”
“இது தான் உங்க மாமியார் வீட்டுல உங்களுக்கு சொல்லிக்கொடுத்த மரியாதையாப்பா. வீட்டுக்கு வந்த மாப்பிள்ளையை எப்படி நடத்தணும்ன்ற அறிவு வயசு ஏறுன உங்களுக்கு இருக்கனும். அது சரி அறிவுன்னு ஒன்னு தான் இந்த வீட்ல யாருக்கும் இல்லையே” எனும்போது சத்தம் கேட்டு அங்கு வந்தார் சௌந்தர்.
“என்னமா ஆச்சு?”
“ஒன்னும் இல்ல சித்தப்பா. ஒன்னுமே இல்லை. நீங்க போங்க. நீங்க போய் சித்தியோட போட்டோவுக்கு மலர்வளையம் வைங்க. இல்லன்னா அவங்களை மறக்க கதை எழுதுறேன்னு நோட்டுக்குள்ள புதைஞ்சுக்குவீங்களே. போய் புதைங்க போங்க. இங்க என்ன நடந்தா, எங்களுக்கு என்ன நடந்தா தான் உங்களுக்கு என்ன?” ஆதங்கத்தில் குமுறி விட்டாள்.
சௌந்தர் சற்றே அதிர்ந்து, “என்னமா இப்படி பேசுற” என வருந்த, “யப்பா போதும் உங்க சங்காத்தம்…” எனப் பெரிய கும்பிடாகப் போட்டவள், அனைத்துப் பற்களையும் காட்டாதது ஒன்றே குறையாக கன்னத்தில் கை வைத்து மனையாளை சைட் அடித்துக் கொண்டிருந்தவனின் கையைப் பிடித்தாள்.
“வா போகலாம்…” என்று அவனை இழுத்துக்கொண்டு சென்று விட, “உனக்காக காஷ்மீர் எல்லைக்கு கூட வருவேன் ஷைலா” எனக் காதல் போதையில் உளறினான். அவனை அடிக்க வந்ததில் இன்னும் கோபம் அடங்காமல் போனதில்,
“எதுக்கு எதிரி நாட்டு கையால சாகவா? வாய் டேஷை மூடிக்கிட்டு வா…” எனக் குதறினாள்.
என்ன இவள் உண்மையாவே இவ்ளோ கோபப்படுறாளா என்றவனுக்கு ஆச்சர்யமே!
தங்கையின் கோபத்தில் சிறு புன்னகை எழ விஸ்வயுகாவும் நந்தேஷும் கமுக்கமாக ஒருவரை ஒருவர் பார்த்து, ‘பாரேன் இவளுக்கு இருக்குற ரோஷத்தை’ என்பது போல பாவனை செய்துகொண்டனர்.
காயத்ரிக்கு மனமே குளுகுளுவென இருந்தது. தனக்கு பதிலாக மகளே சிவகாமியை எதிர்த்துப் பேசியதில் மகிழ்வை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சோகமே உருவாக முகத்தை வைத்துக் கொண்டார்.
சௌந்தர் தவிப்புடன் இப்போது விஸ்வயுகாவைப் பார்க்க, அவள் யாரையும் கண்டுகொள்ளாதவளாக மாடிக்கு ஏற எத்தனித்தாள்.
சிவகாமி கர்ஜனையுடன், “இன்னும் ஒரு தடவை நான் உன்னை அவன்கூட பார்த்தேன், பொண்ணுன்னு பார்க்க மாட்டேன் அஸ்வினி போன இடத்துக்கே உன்னையும் அனுப்பி வச்சுடுவேன்” என மிரட்ட,
மோகன் பதறி “சிவகாமி என்ன இது… அவள் புருஞ்சுப்பா விடு. விஸ்வாம்மா அம்மா சொல்றதை கேட்டு நடக்குறது தான் உனக்கு எப்பவும் நல்லது” என்றார் மென்மையாக.
அவளோ தந்தையை இடுப்பில் கை வைத்து முறைத்து, “ஏன் அவங்க சொன்னதை கேட்டா தான் யாரா இருந்தாலும் உயிரோட விட்டு வச்சுருப்பாங்களா… முடிஞ்சா கொல்ல சொல்லுங்க. யுக்தா கண்டதுண்டமா வெட்டி அவனே சமைச்சு சாப்புட்டுருவான். வேடிக்கை பாக்குற உங்களையும் சேர்த்து தான்…” என ஏளனத்துடன் உரைத்தவள், தாயை நோக்கி தீப்பார்வை வீசி,
“இந்த மிரட்டலுக்குலாம் பயப்பட நான் சித்தியும் இல்ல. வீட்ல என்ன நடக்குதுன்னு கூட தெரியாத அளவு வேலைல மூழ்கிப் போக என் யுகி, சித்தப்பாவும் இல்லை. உங்க மிரட்டலை எல்லாம் என்கிட்ட வச்சுக்கிட்டீங்க காணாம போயிடுவீங்க…” என பங்களாவே அதிர உறுமியவளை பெரியவர்கள் திகைத்துப் பார்த்தனர்.
“அண்ட், அவனைக் கொலை பண்றேன் கொழுக்கட்டை பண்றேன்னு எப்ப பாரு நாலு பேர எங்க பின்னாடி சுத்த விடாதீங்க. வேஸ்ட் ஆஃப் டைம். எவனோ ஒட்டு மொத்தமா நமக்கு குறி வச்சிருக்கான். பிரச்சனையோட சீரியஸ்னெஸ் தெரியாம குறுக்க மறுக்க ஓடாம ஓரமா இருங்க. மறுபடியும் அவன் பின்னாடி ஆளை அனுப்புனீங்கனு தெரிஞ்சுது. நீங்க சொன்னது தான் உங்களுக்கும்… அம்மான்னுலாம் பார்க்க மாட்டேன். சித்தி போன இடத்துக்கே உங்களையும் பார்சல் பண்ணி அனுப்பிட்டு வீட்ல பெரிய ஃபிரேம்ல உங்க போட்டோவை மாட்டி மாலை போட்டுடுவேன்…” என விரல் நீட்டி எச்சரித்து விட்டே விறுவிறுவென மாடிக்கு ஏறினாள்.
அவசரமாக போனை அணைத்து விட்டு நந்தேஷும் மாடிக்குச் செல்ல சிவகாமியின் முகம் அவமானத்தில் சிவந்தது.
ரோஜா பற்றிய தகவல் ஒன்றை பெறுவதற்காக யுக்தா அந்நேரம் நந்தேஷிற்கு அழைத்திருந்தான். அவன் சரியாக தங்கையின் மனதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காக போனை ஆன் செய்து விட்டு அமைதியாக இருக்க, தன்னவள் பேசியதைக் கேட்ட யுக்தாவிற்கு ஆச்சர்யம் ஒன்றும் தோன்றவில்லை. எப்போதுமே அவன் மீது அவளுக்கு கர்வம் இருக்கும் தான். அதனை ஏற்கனவே உணர்ந்திருந்தவன் வெற்றுப்புன்னகையை மட்டும் உதடுகளில் நிரப்பிக்கொண்டான்.
தன்னறைக்குச் சென்றதும் தான் நந்தேஷ் யுக்தாவிற்கு மீண்டும் அழைத்தான்.
“யுக்தா.. விஸ்வூ” என ஆரம்பிக்கும் முன்னே, “ரோஜா கூட நீ பழகும்போது அவளை யாரும் ஃபாலோ பண்ற ஃபீல் வந்துச்சா?” என எடுத்ததும் கேள்வி கேட்க, அத்துடன் ரோஜாவின் நினைவில் அமைதியாகி விட்டான்.
அத்தியாயம் 68
நந்தேஷ் யுக்தாவின் கேள்வியில் “அப்டி எதுவும் இல்லையே” என்றான் குழப்பமாக.
“சரி, அந்த சம்பவம் நடக்குறதுக்கு முன்னாடி உங்களை யாரும் ஃபாலோ பண்ற மாதிரி இருந்துச்சா?” மீண்டும் யுக்தா கேட்க,
நெற்றியைத் தேய்த்த நந்தேஷ், “எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு. ஆனா அது கரெக்ட்டான்னு எனக்கு தெரியல யுக்தா” என்றான்.
“எதுவா இருந்தாலும் சொல்லு நந்தேஷ்…”
“அது… அந்த சம்பவம் நடக்குறதுக்கு ரொம்ப முன்னாடி இருந்தே யாரோ ஃபாலோ பண்ற ஃபீல் எனக்கு. சில நேரம் யாரோ ஃபோட்டோ எடுக்குற மாறி கூட ஃபீல் ஆகும். என்னை மட்டுமே யாரோ பார்த்துக்கிட்டே இருக்குற உணர்வு. ஒருவேளை சைக்கோ கில்லர் அப்போ இருந்தே ஃபாலோ பண்ணிருப்பானோ… இல்ல சித்தியையும் விஸ்வூவையும் ஹர்ட் பண்ண டைம் பார்த்துட்டு இருந்தவனோட வேலையான்னு தெரியல யுக்தா. ஒரு தடவை நான் ஹோட்டலுக்கு சாப்பிட போயிருந்தேன். ஆல்ரெடி புக் பண்ணிருந்த டேபிள்ல எனக்குன்னு சொல்லி ஒரு பொக்கே கூட வச்சுட்டுப் போயிருக்கான். பர்பிள் கலர் ப்ளவர்ஸ் எல்லாம்…” எனப் பேசிக்கொண்டே வர இங்கு யுக்தா கடினப்பட்டு எழுந்த சிரிப்பை அடக்கினான்.
நந்தேஷ் பேசியதை எல்லாம் கேட்ட குறிஞ்சிக்கு முகத்தில் ஈ ஆடவில்லை.
“அடேய் உன்னை சைட் அடிச்சு நான் பின்னாடி சுத்துனதை சைக்கோ கில்லர் ரேஞ்சுக்கு பேசுறியேடா…” என்று முணுமுணுத்ததில் யுக்தா பக்கென சிரித்தான்.
“ஹலோ யுக்தா” பேச்சை நிறுத்தி விட்டு நந்தேஷ் மீண்டும் அழைக்க, “உன் பொக்கே கதையெல்லாம் நான் கேட்கல. வேற ஏதாவது?” என்றதில், “இல்லையே” என்றான் பரிதாபமாக.
“ஓகே…” என அழைப்பைத் துண்டிக்க போக நந்தேஷ் வேகமாக அழைத்தான்.
“என்ன? எனி க்ளூஸ்?” யுக்தா கேட்டதும், “அட அதெல்லாம் இல்ல. நீ விஸ்வூவை லவ் பண்ணதை பத்தி குறிஞ்சி சொன்னா. சித்தி ஏன் உன் லவ் பத்தி அவள்கிட்ட சொல்லலைன்னு தெரியல. நீ எங்ககிட்டயாவது சொல்லிருக்கலாம்ல. உனக்கு சித்தி மூலமா எங்களை பத்தி தெரிஞ்சுருக்கும் தான…” எனக் கேட்டான் மனதில் தோன்றிய ஆதங்கத்துடன்.
சில நொடி அமைதிக்குப் பிறகு, “அப்போ இருந்த மனநிலைல மறுபடியும் காதலைப் பத்தி என்னால யோசிக்க முடியல. ஆனா இப்போ… காதல் அப்படியே தான் இருக்கு. ஆல்ரெடி ஒருத்தவங்களை தூது அனுப்புனதே போதும்னு தோணிடுச்சு. ஒருவேளை அப்பவோ இப்பவோ என் காதல் கரெக்ட்டா கன்வே ஆகிருந்தா ரெண்டு பேருக்குமே இவ்ளோ வலி இல்லை” என அழைப்பைத் துண்டித்து இருந்தான்.
குறிஞ்சியின் வருத்தப்பார்வையை கண்டுகொள்ளாதவன் போல, மீண்டும் வேலைக்குள் புதைந்தான்.
சில பெண்களின் தகவல்களை வைத்து சோதித்தவனின் விழிகளில் தீவிரம் அரங்கேறியது.
இறந்து போன பெண்கள் வெறும் பணக்கார பெண்களும் இல்லை. ஏழைப் பெண்களும் நடுத்தர வர்க்கப் பெண்களும் அடக்கம். அவன் கவனமாகப் பிரித்து எடுத்தது, அதிகபட்சமாக மேட்ரிமோனியில் எத்தனை ரெஜெக்ஷன் செய்திருக்கிறார்கள் என்பதை தான். அதிலும் குறிப்பிட்டு எதையும் கண்டறிய இயலாது, சில நிமிட அமைதியில் கண்ணை மூடி நெற்றிப்பொட்டில் விரலை அழுத்திப் பிடித்தான்.
இறப்பது பெண்கள். அதிலும் திருமணமாவதற்கு முன்பே. திருமணமாகாத அல்லது திருமணத்தால் பாதிக்கப்பட்ட ஒரு ஆண் இதனை செய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது.
ஆனால் ஏன்? கொல்ல வேண்டுமென்றால் அனைத்துப் பெண்களையும் கொல்ல வேண்டுமல்லவா? அல்லது பணக்காரப்பெண்ணினால் பாதிக்கப்பட்டிருந்தால் பணக்கார பெண்ணை மட்டுமே கொலை செய்ய வேண்டுமல்லவா? இவன் ஏதோ ஒரு பேட்டர்னை வைத்து இவற்றை செய்கிறான் அதனின் மையப்புள்ளியை தெரிந்து கொண்டாலே அவனை நெருங்கி விடலாம் என்ற சிந்தனையில் புதைந்திருந்தான்.
குறிஞ்சி, “மைத்ரேயன் சொன்னது மாதிரி சர்ச் ஹிஸ்டரி எடுத்துடலாமா யுக்தா?” எனக் கேட்டதற்கு அவன் கண்ணைத் திறவாமலேயே, “லீகலா போக, எக்ஸ்பெர்ட் சைபர் டீம் வேணும்னு பெர்மிஷனும் கேட்டிருக்கேன் டிபார்ட்மெண்ட்ல. அதை ரிஜெக்ட் பண்ணிட்டா, மைத்ரேயன் வச்சு இல்லீகலா அந்த ஒர்க் ஸ்டார்ட் பண்ணிடலாம்” என்றவனின் ஒரு பக்க மூளை எதையோ தேடி தீர்த்தது.
பின் சட்டென கண் விழித்தவன், “குறிஞ்சி… இவன் கொல்றது மேட்ரிமோனில ரெஜிஸ்டர் பண்ற பொண்ணுங்களை தான். மேட்ரிமோனி எல்லாம் பேமஸ் ஆகுறதுக்கு முன்னாடி புரோக்கர் மூலமா தெரிஞ்சவங்க மூலமா தான வரன் வரும். இந்த ஞாயிறு போய் அடுத்த ஞாயிறு முகூர்த்த நாள். அன்னைக்குக் கொலை பண்றதுக்காக ஒரு பொண்ணை ஃபிக்ஸ் பண்ணிருப்பான்.
ஒருத்தருக்கொருத்தர் எந்த வித பழக்கமுமில்லாத பொண்ணா தான் இருக்கணும். நமக்கு கிடைச்ச தகவல்படி, ஒவ்வொரு ஸ்டேட்லையும் நாலு நாலு கொலை பண்ணிருக்கான். சோ அவன் கணக்குப்படி அடுத்து தமிழ்நாட்டுல பண்ண போறது நாலாவது கொலை. எந்த வித கனெக்ஷனும் இல்லாத பொண்ணுங்கள்ல இருந்து ஒரு மைனியூட் கனெக்ட் பாய்ண்ட் எடுக்குறான். அது கண்டிப்பா மேட்ரிமோனில ரிஜெக்ட் பண்றதா இருக்காது. இதுவரை கொலையான பொண்ணுங்க மேட்ரிமோனில ரெஜிஸ்டர் பண்றதுக்கு முன்னாடி வேற வழில வரன் பார்த்தாங்களான்னு விசாரிங்க. அதுல கண்டிப்பா ஒரு பிரேக் பாய்ண்ட் கிடைக்கும். குவிக்…” என்றான் அவசரமாக.
அருண் உடனடியாக தகவல்களை சேகரிக்க விரைய, குறிஞ்சி தான் “ஆனா அடுத்த கொலையும் சென்னையில நடக்குற சாத்தியம் அதிகம் யுக்தா. ஏன்னா அவன் ஒரு ஸ்டேட்டை எடுத்துக்கிட்டா அதுல ஒரு ஊரை ஸ்பெசிபிக்கா டார்கெட் பண்ணி தான் கொலை பண்ணிருக்கான். சோ, சென்னைல நடக்கப்போற கல்யாணப் பொண்ணுங்களை மட்டும் டார்கெட் பண்ணுனா போதும்” எனக் கூற, “ம்ம்” எனத் தலையாட்டினான்.
அத்தனை சீக்கிரம் அவனை நெருங்க விட மாட்டான் என்பது மட்டும் அவனுக்கு நன்றாக புரிந்தது. அவன் எதிர்பார்க்கும் முன்பே அவனைப் பிடித்து விட வேண்டுமென்ற பிடிவாதம் யுக்தாவினுள் ஆக்கிரமித்தது.
இதற்கிடையில் உதித் பற்றிய விசாரணையும் நடந்து கொண்டிருந்தது. அவன் இதுவரை வாதாடிய வழக்குகளின் தன்மைகளையும் ஆழ விசாரித்துக் கொண்டான்.
உதித் பற்றிய மேலும் சில தகவல்களைப் பிரட்ட குறிஞ்சியே கிளம்பினாள்.
“சீக்கிரம் வேலையை முடிச்சுட்டு லேட் நைட் ஆகுறதுக்குள்ள வீட்டுக்குப் போ குறிஞ்சி” என்ற யுக்தாவிடம், “யுக்தா…” என இழுத்தாள்.
அவன் என்னவென பார்த்ததும், “எப்படியும் உன் ஆளும் உதித் பத்தி நோண்ட ஆரம்பிச்சு இருப்பா, எப்படியும் என் ஆளும் அதுல இறங்கி அவனைப் பத்தி தெரிஞ்சுக்க ட்ரை பண்ணிட்டு இருப்பான். அதுக்கு நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தே போய் விசாரிச்சா என்ன?” என நெளிந்திட,
“இன்னைக்கு பகல் முழுக்க ஒண்ணா சுத்துனீங்களே ஏதாவது ஒர்க் அவுட் ஆச்சு?” எனக் கேட்டான் நக்கலாக.
“ம்ம்க்கும் எங்க… கூட ரெண்டு எக்ஸ்ட்ரா பீஸ் சுத்துனதுல ஒன்னும் வேலைக்கு ஆகல” என்றாள் சலிப்பாக.
“இல்லைனா மட்டும் நீ கரெக்ட் பண்ணி கிழிச்சுடுவ”
“அவனே லவ் பெயிலியர்ல இருக்கானாம். இருக்குற பிரச்சனைல அவனை எங்க கரெக்ட் பண்றது… சும்மா சைட் அடிச்சுட்டு ஓட்டிடலாம்னு இருக்கேன்” என்றாள் அனைத்து பற்களையும் காட்டி.
“ஒழுங்கா உன் மனசுல இருக்கறதை அவன்கிட்ட சொல்லு குறிஞ்சி” யுக்தா கண்டிப்பாக கூற,
“அட ஒன்ஸ் அபான் அ டைம் ஏதோ வயசுக்கோளாறுல அவன் பின்னாடி சுத்துனேன்டா. இப்பலாம் ஜஸ்ட் சைட்டிங் தான்” எனக் கண்சிமிட்டிட, யுக்தா அழுத்தமாகப் பார்த்தான்.
“உன் நடிப்பை என்கிட்ட காட்டாத” என அதட்டியதில் குறிஞ்சி முகம் மாறாமல் இருக்க வெகுவாய் சிரமப்பட்டாள்.
நந்தேஷ் ஏற்கனவே உதித் பற்றி விசாரிக்கக் கிளம்பிக் கொண்டிருந்தான். மைத்ரேயனுக்கு அழைக்க எத்தனித்தவன் அவனே இப்போது தான் காதல் மழையில் நனைந்திருக்கிறானென்று எண்ணி அவன் மட்டும் சத்தம் வராமல் வீட்டை விட்டு வெளியேற அங்கு காரில் சாய்ந்து அவனது வரவை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள் குறிஞ்சி.
அவளைக் கண்டு இலேசாக அதிர்ந்தவன், “ஹலோ அழகி மேடம். இங்க என்ன பண்றீங்க?” என ஹஸ்கி குரலில் கேட்க,
“குறிஞ்சி” எனத் திருத்தியவள், “நீங்க இந்நேரத்துக்கு எங்க கிளம்புறீங்க?” என்றாள் புருவம் உயர்த்தி.
ஒரு நொடி விழித்தவன், “அது காலைல இருந்து ஒரே அலைச்சல். உடம்பெல்லாம் வலி. அதான் ஒரு மசாஜ் பண்ணிட்டு வரலாம்னு கிளம்புனேன்” என இளித்து வைத்தான்.
“ஓஹோ! நானும் இன்னைக்கு ஃபைட் பண்ணி டயர்டா இருக்குன்னு மசாஜ் சென்டர் தான் போறேன். வாங்களேன் சேர்ந்து போகலாம்” என கேலி மின்ன கேட்க, “நீங்க போறது வேற சென்டர் நான் போறது வேற சென்டர்ங்க மேடம்” என அசடு வழிந்தான்.
“எல்லாம் உதித் போற சென்டர் தானங்க!” அவளும் கிண்டல் தொனியில் அவனை சுற்றி வளைத்திட, அவன் நிதானித்தான்.
“என்னை வேவு பார்க்க வந்தீங்களா?” ஒரு மாதிரியாகக் கேட்க,
“இல்ல உதித்த வேவு பார்க்க… ஷேல் வீ?” என விழி வீச்சை நேராய் அவனிடம் புகுத்திக் கேட்க, ஒரு கணம் அக்கண்களின் தீர்க்கத்தைக் கண்டவன், மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போன்று தலையாட்டினான்.
—
மைத்ரேயனும் ஷைலேந்தரியும் அவர்கள் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். “விடு ஷைலா. ரிலாக்ஸ் ஆகு” என அவள் தோளைத் தொட, “உன்னை அடிக்க வந்தா வேடிக்கை பார்த்துட்டு இருக்க” என சீறினாள்.
“சின்ன வயசுல இருந்து அவங்க பார்த்து வளர்ந்த பையன் நான். சட்டுனு அவங்க அடிக்க வரவும் தடுக்க கூட தோணல எனக்கு. விடுடி…” என்றதும், அவளிடம் பதிலே இல்லை.
“ஷைலா… ஷைலா” இரு முறை அழைத்தும் முறைத்தாளே தவிர வேறெதுவும் பேசவில்லை.
அவள் புறம் சரிந்து கன்னம் தொட வந்தவனை தட்டி விட்டவள், “வீடு வந்துருச்சு இறங்கு” என்றாள் கடுகடுப்பாக.
“இருடி சமாதானம் செஞ்சுட்டு அப்பறம்…” என்றவனை கண்டுகொள்ளாமல் காரை விட்டு இறங்கியவள், ‘அந்த அம்மாவை ஒரு போடு போடுவானா இங்க வந்து சமாதானம் பண்ண இறங்கிட்டான்’ என முணுமுணுத்துக்கொண்டே முன்னே நடந்தவளை ரசித்தபடியே அவள் பின்னே நடந்தான் மைத்ரேயன்.
இதழ்களில் நிரந்தமாகக் குடிகொண்டிருந்த புன்னகை வீட்டினுள் நுழையும் போது மொத்தமாக துடைத்தெறியப்பட்டிருந்தது.
“சிவகாமியை அழிக்க தான் அவள் பொண்ணை மைத்ராவுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சோம். இங்க கூட்டிட்டு வந்து கேஸ் வெடிச்சு செத்துப் போய்ட்டான்னு ஃபிரேம் பண்ண பல திட்டம் போட்டு, அந்தப் பொண்ணு ஏற்கனவே கற்பை இழந்த அசிங்கம்னு தெரிஞ்சும் இதெல்லாம் ஏற்பாடு பண்ணுனது எல்லாம் வேஸ்ட் ஆனது மாதிரி உன் பையன் ஷைலுவைக் கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டான்.
அந்த விஸ்வாவை அழிக்க மைத்ராவுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சாலும் நம்ம பையனை நாமளே பாழுங்கிணத்துல தள்ளுறது பிடிக்காம தான் அவன் கல்யாணம் பண்றப்ப நான் வெளிநாடு போய்ட்டேன். நான் இருந்துருந்தா அந்தக் குடும்பத்தோட சம்பந்தமே வச்சுக்க விட்டுருக்க மாட்டேன். நீயும் அவன் கூட சேர்ந்து சொதப்பிட்ட…” என லிங்கம் அவர்களது பங்களாவே அதிரும் படி அகிலாவிடம் கத்தினார்.
அத்தியாயம் 69
அகிலாவோ, “நான் என்னங்க செய்றது? மைத்ராவும் அவங்க பக்கம் தான் பேசுவான். தனியாளா நான் என்ன செஞ்சுருக்க முடியும். எப்படியும் இவளை கொஞ்ச நாள்ல துரத்தி விட்டுடுற பிளான்ல தான் இருக்கேன். ஆனா அந்த மகராசி தான் வீட்டுல ஒடுங்கி இருக்க மாட்டுறாளே. உங்க பையனும் அவள் வாலை பிடிச்சுட்டு தான் நடக்குறான்” என அங்கலாய்த்தார்.
“ப்ச் இந்த மயக்கம் எல்லாம் எத்தனை நாளைக்கு இருக்கும் அகிலா. அவன் அசந்த நேரத்துல அவளை இங்க இருந்து துரத்தி விடு. சிவகாமியை அடிக்க நான் வேற பிளான் பண்ணிட்டேன்” எனக் கர்வமாகப் புன்னகைத்தார்.
“அவளை சும்மா விடக் கூடாதுங்க. நம்ம காலங்காலமா இருந்த பங்களாவை விட்டுத் துரத்தி விட்டு, பிசினஸ்ல லாஸ் ஆக வச்சு அதெல்லாம் அவள் பண்ணாத மாதிரி நம்மகிட்டவே நடிச்சுக்கிட்டா. இதனால எவ்ளோ அவமானத்தை ஃபேஸ் பண்ணிட்டு மறுபடியும் இந்த நிலைமைக்கு வர பாடு பட்டுருப்போம். இதெல்லாம் மைத்ராகிட்ட அப்பவே சொல்லிருக்கணும். ” என அகிலா கொந்தளித்தார்.
லிங்கமோ “அவளை வேவு பார்க்க ஒரு ஆள் வேணும்ல. உண்மையை சொல்லி அவளை பழிவாங்கணும்னு சொன்னா, ப்ரெண்ட்ஷிப் மண்ணாங்கட்டின்னு அவன் நமக்கே அட்வைஸ் பண்ணிருப்பான். இப்பவும் ஒன்னும் குறைஞ்சு போகல அகிலா. அந்த சிவகாமி வீட்டு வாரிசு ஒன்னு கூட உயிரோட இருக்காத மாதிரி ஆள் செட் பண்ணிட்டேன். ஷைலு செத்ததும் கொஞ்ச நாள் ஃபீல் பண்ணுவான். அதுக்கு அப்பறம் வேற பொண்ணை பார்த்ததும் மனசு மாறிடுவான்” எனப் பேசிக்கொண்டே போக, “அப்பா…” எனக் கர்ஜித்திருந்தான் மைத்ரேயன்.
துரோகத்தின் காரணமாய் அவன் விழிகளே சிவந்திருந்தது.
ஷைலேந்தரி அதிர்வில் இருந்து இன்னும் மீளவில்லை.
மகனைக் கண்டதும் இரு பெரியவர்களும் திகைத்தனர்.
“பெத்த மகனோட வாழ்க்கையைவே அழிக்கப் பாக்குற அளவு ஏன் இந்த பழிவாங்குற வெறி உங்களுக்கு? அதுவும் விஸ்வூவை கொலை பண்ண…” என்றவனுக்கு பேச்சே எழவில்லை.
“சிவகாமி நல்லவங்க இல்லை தான். அவங்களால நம்ம பாதிக்கப்பட்டு இருக்கலாம். ஆனா அதுக்காக ஒரு பொண்ணோட வாழ்க்கையவே அழிக்கப் பாக்குறீங்களே இதெல்லாம் நியாயமா? உங்களுக்கும் அவங்களுக்கும் என்ன வித்தியாசம்?” எனக் கோபம் பெருக்கெடுக்க கத்தினான்.
“போதும் நிறுத்துடா. அதுக்காக அந்த சிவகாமியை மன்னிச்சு விடுற அளவு எனக்குப் பெரிய மனசு இல்ல. அவளை மட்டும் இல்ல அவள் வம்சத்தையே காவு வாங்காம நான் விடமாட்டேன்” என்றார் லிங்கம்.
“அப்பா… இதுல என் வாழ்க்கையும் அடங்கி இருக்குன்னு உங்களுக்குப் புரியலையா? சிவகாமி தப்பு பண்ணுனா அவங்க தண்டனை அனுபவிக்க வேண்டியது தான். அதுக்காக என் ப்ரெண்ட்ஸயும் என் பொண்டாட்டியையும் ஹர்ட் பண்ண நினைச்சா நான் அமைதியா இருக்க மாட்டேன்பா” என சீறினான்.
“மைத்ரா அவள் என்ன செஞ்சான்னு தெரியுமா? அவள் கட்ட நினைச்ச 10 ஸ்டார் ஹோட்டலுக்கு உன் அப்பாவைப் பார்ட்னர் ஆக்குறேன்னு அவரை அதிக அளவு கடன் வாங்க வச்சு கடைசியா பார்ட்னெர்ஷிப்பை க்ளோஸ் பண்ணிட்டா. இதுனால நமக்கு எவ்ளோ லாஸ் தெரியுமா? இப்ப இருக்குறது எல்லாம் கொஞ்ச வருஷமா உன் அப்பா காப்பாத்தி வச்சுருக்குற சொத்து. இது இல்லைன்னா நம்ம நடுத்தெருவுல தான் இருந்துருக்கணும். நம்ம குடும்பத்தையே குலைக்க பார்த்துட்டா!” அகிலா மகனுக்குப் புரிய வைக்க முயன்றார்.
“குடும்பமா? ஓ நம்ம ஒரே குடும்பமா தான் இருந்தோமாமா? எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்தே நீங்களும் அப்பாவும் பிசினஸ் ட்ரிப், பார்ட்டின்னு ஒரு வீக்கெண்ட் கூட என் கூட இருந்தது இல்ல. நானே வற்புறுத்தி இருக்க வச்சா கூட பிசினஸ் பின்னாடி தான ஓடுனீங்க? நம்ம பிசினஸ்ல நொடிச்சு வேற வீட்டுக்குப் போனப்ப எல்லாம் எனக்கு ஹேப்பியா தான் இருந்துச்சு. இனிமேவாவது நீங்க பிஸினஸ்க்கு இம்பார்ட்டன்ஸ் தராம எனக்கு தருவீங்கன்னு நினைச்சேன்.
ஆனா அதுக்கு அப்பறம் உங்க பெர்சனல் லைஃப்ல பிசினஸ் பிசினஸ் பிசினஸ் மட்டும் தான் இருந்துச்சு. நான் எத்தனை நாள் வீட்டுக்கு வந்து தங்கி இருக்கேன்னு கேட்டா கூட உங்களுக்கு தெரியாது” எனக் குமுறியவன்,
“இப்ப கூட உங்களுக்கு மூட்டு வலி வந்ததுனால தான பிசினஸ் ட்ரிப்பை எல்லாம் கொஞ்ச நாளைக்கு கட் பண்ணிருக்கீங்க. என்னமோ என் பொண்டாட்டி மட்டும் தான் பிசினஸ் பின்னாடி போன மாதிரியும் நீங்க என்னைத் தாங்கி தாங்கி பார்த்துக்கிட்ட மாதிரியும் பில்டப் தர்றீங்க! நாங்க இப்ப வேணும்னா பிசினஸ்னு ஓடலாம். ஆனா எங்களுக்குன்னு ஒரு உயிர் வந்துட்டா கண்டிப்பா நீங்க எனக்கு குடுத்த தனிமையை நான் என் குழந்தைக்கு குடுக்க மாட்டேன்…” என்று மூச்சிரைக்கப் பெற்றோரை விலாசி விட்டான்.
லிங்கம் ஆத்திரத்துடன் “நாங்க ஓடுனது எல்லாம் உனக்காக தான மைத்ரா. எங்களுக்கு மட்டும் ஆசை இல்லையா உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணணும்னு…” என்றதும் அதனை மறுத்தவன்,
“நிச்சயமா இல்ல. அப்படி ஆசை இருந்திருந்தா என் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு ஒன்னொன்னும் பார்த்து பார்த்து செஞ்சுருப்பீங்க. விஸ்வூவை கொலை பண்றதுக்காகவே எனக்கு கல்யாணம் பண்ணி வச்சு, என்னை வாழ்நாள் முழுக்க குற்ற உணர்ச்சியோட வாழ விட நினைச்சுருக்க மாட்டீங்க… சிவகாமி ஆபத்தானவங்க… அவங்களோட இருக்குறவங்களை கூட பழிவாங்குற ரகம்னு தெரிஞ்சும் என்னை வேவு பார்க்கவே அங்க அனுப்பி வச்சுருக்கீங்களே… உங்க மேல இருந்த ஏதோ ஒரு கோபத்துல என்னைக் கொன்னுருந்தா என்ன பண்ணிருப்பீங்க?” என உறுமியவனின் கேள்விக்கு பதில் தெரியாமல் நின்றிருந்தனர் இருவரும்.
“இதுல அல்டிமேட், என் பொண்டாட்டியையும் போட்டு தள்ளுவீங்களா? ரொம்ப நல்ல குடும்பம். இவ்ளோ நாளா ஏதோ பிசினஸ் மைண்டடா இருக்குறனால தான் நமக்குள்ள அட்டாச்மெண்ட்டே இல்லைனு நினைச்சேன். ஆனா நீங்க உங்ககூட என்னை அட்டாச் ஆகவே விடலைன்னு இப்ப புரியுதுப்பா” என்றவனுக்கு குரல் கமறியது.
—-
தன்னறைக்கு வந்து விட்ட விஸ்வயுகாவின் அலைபேசி குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலியுடன் சிணுங்கியது.
அதில், நந்தேஷைத் தாக்க வந்த தடியர்களின் புகைப்படத்தை அனுப்பி வைத்திருந்தான் யுக்தா சாகித்யன்.
சில நிமிடங்கள் ஒவ்வொரு புகைப்படத்தையும் ஸூம் செய்து பார்த்தவளுக்கு எதுவோ தோன்ற யுக்தாவிற்கு அழைத்தாள்.
கேஸ் ஃபைலை இன்னும் நுணுக்கமாக அலசி ஆராய்ந்து கொண்டிருந்தவன், அவளது பெயரை பாராமல் போனை எடுத்து காதில் வைத்து, “ஹலோ யுக்தா ஹியர்!” எனக் கம்பீரமாய் கூற,
“நம்பரை பார்க்கலையோ?” என்றாள் அவள்.
அக்குரலிலேயே தன்னவளை அடையாளம் கண்டுகொண்டவன், “சொல்லு” என்றான்.
அவனது பாராமுகம் அவளை என்னவோ செய்தது தான். ஆனால் அவளும் இதைத்தானே ஆசைப்பட்டாள்!
“நீ அனுப்பி இருக்குற போட்டோல ஒருத்தனை நான் எங்கயோ பார்த்துருக்கேன். டக்குனு ஸ்ட்ரைக் ஆக மாட்டேங்குது…” என நகத்தைக் கடித்தாள்.
“மைத்ரேயனோட அப்பா ஆபிஸ்ல பார்த்து இருப்பியோ” சற்றே ஏற்ற இறக்கத்துடன் வந்த அவனது பதிலில் திடுக்கிட்டவள், “காட்! ஆமா யுக்தா கரெக்ட். லிங்கம் அங்கிள் ஆபிஸ்ல தான் ஒருத்தன் பியூனா இருக்கான். இவன் எதுக்கு நந்துவை?” எனப் புரியாது குழம்பினாள்.
“அதுக்கு லிங்கம் தான் பதில் சொல்லணும். நான் விசாரிச்சவரை, உன் அம்மா லிங்கத்தையும் விட்டு வைக்கல. அவரோட பிஸினஸ்ல லாஸ் ஆக வச்சுருக்காங்க. சோ பழி வாங்க நினைச்சு இருக்கலாம்.”
“ஆனா அவர் நல்ல டைப் ஆச்சே யுக்தா. பழி வாங்க நினைக்கிறவரு என்னை அவர் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சு இருக்க மாட்டாரு தான?” எனக் கேட்டதும், சில நொடிகள் அமைதி காத்தவன், “கல்யாணம் பண்ண நினைச்சது கருமாரி பண்றதுக்காக கூட இருக்கலாம். ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல், அவர் கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சதுக்கே அந்த ஆளு மூளையை உருக வைக்கப் போறேன். அதுக்கு மேல் அவர் பிளான் என்ன இருந்துச்சுன்னு ஒரு கெஸ் இருக்கு. பாக்கலாம்…” என அழைப்பை சட்டென துண்டித்து விட்டான்.
‘என்ன இது தோண்ட தோண்ட சாக்கடையா வருது! இன்னும் எத்தனை பேரோட உண்மையான முகம் வெளில வரப்போகுதுன்னு தெரியல…’ எனத் தளர்ந்து கட்டிலில் அமர்ந்தாள் விஸ்வயுகா.
—-
“அழகி மேடம்…: உதித் வீட்டு வாசலில் நின்று மெல்லமாக அழைத்தவனைத் திரும்பி முறைத்தாள் குறிஞ்சி.
“ஓகே ஓகே குறிஞ்சி மேடம்…” என ஆரம்பிக்க, மீண்டும் முறைத்தவள் “கால் மீ குறிஞ்சி” என்றாள்.
“சரி குறிஞ்சி, உதித் இப்ப வரை வீட்டுக்கு வரலை போலயே. என்ன பண்ணலாம்?” எனக் கேட்டான்.
“வர்ற வரை வெய்ட் பண்ணி பார்க்கலாம். இப்ப அவன் எடுத்து நடத்துற கேஸ் என்ன தெரியுமா? ஆட்டோமொபைல் கம்பெனி வச்சுருக்குற பிசினஸ் மேனோட பையன் ஒரு மைனர் பொண்ணை ரேப் பண்ணிட்டான். அவன் ரேப் பண்ணலைன்னு ப்ரூவ் பண்ண ஆதாரம் தேடிட்டு இருக்கான். இந்த கேஸ் ஒரு வருஷமா இழுத்துட்டு இருக்கு. அந்த மைனர் பொண்ணு மேஜர் ஆகிட்டா. ஆனா இவன் இன்னும் கேஸை முடிக்க விடாம தண்ணி காட்டிட்டு இருக்கான்.”
“இப்படியும் இருக்கானுங்க பாரு…” என நந்தேஷ் எரிச்சலுற, “இதெல்லாம் கம்மி நந்து. இவனை விட பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் சத்தமில்லாம எவ்ளோவோ குற்றம் பண்ணிட்டு இருக்கானுங்க. இவன் தெரிஞ்சு செய்றான் அவ்ளோ தான் வித்தியாசம்” எனப் பெருமூச்சு விட்டாள்.
“என் தங்கச்சியோட வலிக்கு காரணமானவன் இவன் தான்னு கன்ஃபார்ம் மட்டும் ஆகட்டும், அந்தப் பொண்ணுக்கும் சேர்த்து அவனுக்கு விஷத்தை கலந்துட வேண்டியது தான்…” எனக் கோபத்துடன் உரைக்க, குறிஞ்சி முறைத்தாள்.
“எனக்கு வந்த கோபத்துக்கு அவனுங்களை இவ்ளோ சிம்பிளா கொல்லலாம் பிடிக்கல. ஆனா விஸ்வூவுக்கு டெத் பார்த்தா பயம்னு தான் இந்த வழிமுறையவே தொடர்ந்துட்டு இருக்கோம். இனி கிடைக்கிற ரெண்டு பேரையாச்சு உயிர் போற வரை அடிச்சே சாவடிக்கணும்” எனும்போதே உள்ளுக்குள் அழுத்திக் கொண்டிருந்த வலி கண்ணீராக குபுக்கென கண்ணில் படர்ந்தது.
அவனது வலி புரிந்தாலும், அவன் கையைப் பற்றி அழுத்தியவள், “அப்படி எதுவும் நீ பண்ணிட கூடாதுன்னு தான் நான் வந்தேன். நம்ம இந்த விஷயத்துல லீகலா போகணும் நந்து” என்றதில் இம்முறை அவன் முறைத்தான்.
“என் தங்கச்சி பேரை கொட்ட எழுத்துல நியூஸ்ல படிக்கவா இவ்ளோ பண்ணுனேன். இதெல்லாம் முடிஞ்சதும் எங்க நாலு பேர் மேல நீங்க கேஸ் போட்டாலும் நானே இதெல்லாம் பண்ணுனேன்னு தான் சரண்டர் ஆகுவேன். அப்பவும், என் தங்கச்சி பேரை வெளில சொல்ல எனக்குப் பிடிக்கல.”
அவனை அமைதியாக ஏறிட்டவள், “உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் ஆனா இப்ப எமோஷனலா இருக்க. சொல்லி உன் எமோஷனல கட் பண்ண வேணாம்னு பாக்குறேன்” என்றவளின் கூற்று புரியும்முன்னே உதித் காரில் வந்திறங்கினான். அவனுடன் 18 வயதுடைய பெண்ணும்!
அத்தியாயம் 70
ஷைலேந்தரி நிகழ்வுணர்ந்து மைத்ரேயனின் தோளைத் தொட, கலங்கிய கண்ணை அவளறியாமல் துடைத்துக் கொண்டவன், “இப்ப கூட உங்க எண்ணம் தெரியலைன்னா என் பொண்டாட்டியை காவு வாங்கிருப்பீங்கள்ல?” எனக் குற்றம் சுமத்தும் பார்வையுடன் கேட்டான்.
“போதும் நிறுத்துடா என்னடா பொண்டாட்டி பொண்டாட்டின்னு ஓவரா பினாத்திட்டு இருக்க?” என லிங்கம் எகிறினார்.
“இவள் அக்காவே கண்டமேனிக்கு திரிஞ்சுட்டு வந்தவ தான. என்னமோ ஒழுக்கமான ப்ரெண்ட்ஸை வச்சுருக்குற மாதிரி ஓவரா பேசுற. இருட்டுனதுக்கு அப்பறம் ஆள் நடமாட்டம் இல்லாத ரோட்டுல அவுத்துப் போட்டுட்டு திரிஞ்சா கண்டவன் பாய தான் செய்வான். என்னவோ அதுக்கு சிவகாமி குடுத்த பில்டப்பும், என்னமோ ஊர்ல இல்லாத பிரெண்டை வச்சுருக்குற மாறி நீ குடுக்குற சோகமும்… அவள் ஊர் மேஞ்சதாவது உன் மூலமா எங்களுக்கு தெரிஞ்சுது, இவள் ஊர் மேயுறது உனக்கே தெரியுமோ தெரியாதோ” என சொல்லி முடிக்கும் மைத்ரேயன் தந்தையை அறைந்தே இருந்தான்.
விஸ்வயுகாவின் மானத்தை கடைபரப்பும்போதே கொழுந்து விட்டு எரிந்த கோபம் தன்னவளைத் தொட்டு விட்டதும் அணையை மீறி வெடித்து விட்டது.
“மைத்ரா” அகிலா மகனை அடிக்கப் போக, ஷைலேந்தரி தடுத்து விட்டாள்.
லிங்கத்திற்கு அவமானத்தில் முகம் சிவந்தது.
மைத்ரேயனின் சட்டையைப் பிடித்தவர், “என்னையவே அடிக்கிற அளவுக்கு உனக்கு எப்ப இவ்ளோ தைரியம் வந்துச்சோ. இனி இந்த வீட்ல உன் கால் படவே கூடாது” எனத் தரதரவென அவனை இழுத்து வாசலில் தள்ளினார்.
“அங்கிள்…” ஷைலேந்தரி குரலை உயர்த்த,
“ஏய் போடி வெளில” என அவளையும் தள்ளி விட்டவர்,
“என் காசுலயே உக்காந்து சாப்பிட்டுட்டு என்னையவே கை நீட்டுறியா? நீ பண்றியே ஒரு பிசினஸ் அதுல இருந்து உனக்கு ஒரு துரும்பு கூட வராது. நான் சம்பாரிச்ச காசுல துளியும் உனக்கு கிடைக்காது. போய் புருஷனும் பொண்டாட்டியுமா பிச்சை எடுங்க. உன் பொண்டாட்டி பெரிய பணக்காரின்னு நினைச்சுட்டு இருந்துடாதடா… பங்குன்னு அவள் வீட்டுக்குப் போனா சிவகாமியே உன்னை முடிச்சு விட்டுடுவா…” என எகத்தாளமாகக் கறுவியவர், உடனடியாக அவனது அனைத்து கார்டுகளையும் பிளாக் செய்து இருந்தார்.
அவருக்குத் தெரியாதது, வியாபாரம் உச்சத்தில் இருந்த போதே, அவனுக்கு வேண்டிய அனைத்தையும் விஸ்வயுகா செய்து வைத்திருப்பதே!
தந்தையை அறைந்தது அவனுள் குற்ற உணர்வைக் கொடுத்திருந்ததால், அவர் பேசியதை இறுகிய முகத்துடன் பார்த்து விட்டு மௌனமாக அவளைக் கைப்பிடித்து வெளியில் அழைத்து வந்து விட்டான். அந்த மௌனத்தில் புதைந்திருந்த ஆழமான வலியை அவளும் உணராமல் இல்லை.
“மைதா… விடுடா!” வேறு என்ன சொல்ல முடியும் அவளால். அவனது பெற்றோரின் மீது அளவுக்கதிகமான கோபம் பெருக்கெடுத்து ஓடியது.
வயதிற்கு மரியாதை கொடுத்தே அவனை அடிக்க வந்த சிவகாமியை அடிக்க விட எத்தனித்தவன், இப்போது தன்னையும் தமக்கையையும் பற்றி பேசியதை பொறுக்க இயலாமல் அடித்தே விட்டதிலேயே தங்களின் மீது அவனுக்கு இருக்கும் அன்பு தெளிவாகவே புரிந்தது. எப்போதும் இருப்பது தான். இன்று இன்னும் ஆழமாக!
இந்த இரவு நேரத்தில் பர்ஸில் ஒற்றை ரூபாய் கூட இல்லாமல் இவளை எங்கு அழைத்துச் செல்வது? முதலில் அவனுக்கு தோன்றிய கேள்வியே அது தான்.
ஷைலேந்தரி, “நம்ம வீட்டுக்குப் போலாமாடா?” எனக் கேட்டு விட்டு அவன் முகம் பார்க்க, அதே கலங்கிய விழிகளுடன் ஏமாற்றமாகப் பார்த்தான்.
சட்டென “இல்ல வேணாம். அங்க போறதுக்கு சும்மாவே இருக்கலாம்” எனக் கண்ணை சிமிட்டிக் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவள்,
“நம்ம வேணா ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலா பார்த்து ரூம் போட்டு யோசிக்கலாம்டா அடுத்து என்ன பண்ணலாம்னு. என்னவோ உன் அப்பா பெரிய பாலஸை கட்டி வச்சுருக்குற மாறி சீன போடுறாரு…” என எப்போதும் போல இயல்பாகப் பேசி அவனை இயல்பிற்கு கொண்டு வர முயன்றாள்.
அவனோ துளி நீர் கண்ணில் உருண்டோட இன்னும் அவளை பாவமாக பார்க்க, “அந்த ஆளு உன் கார்டை தான் பிளாக் பண்ண முடியும். என் கார்டு அவைலபிளா தான் இருக்கு. ஏன் என்னோடதை யூஸ் பண்ணுனா உனக்கு கவுரவக் குறைச்சலா இருக்குமா?” கண்ணில் நீர் மின்ன போலிக்கோபத்துடன் கேட்டவளை இழுத்து அணைத்துக் கொண்டவன், “இட்ஸ் பெய்னிங்டி…” என்றான் தேம்பலாக.
லிங்கத்தின் வார்த்தைகள் அவளையும் குத்திக் கிழித்தது உண்மை தான். அவனுக்காக பொறுத்துக்கொண்டவளுக்கு அவனே உடைந்து அழுவதைக் கண்டதும் அதிகமாக வலித்தது.
“மைத்ரா… வேணாம்டா. நான் இருக்கேன்ல” என அவன் முதுகை நீவி விட்டு, இன்னும் இறுக்கிக் கொண்டாள்.
சில நொடி அணைப்பிற்கு பிறகு ஆள் அரவமற்ற சாலையிலேயே நிற்பது நல்லதல்ல என்று உணர, அவனது சட்டையின் கைப்பகுதியில் கண்ணைத் துடைத்துக்கொண்டவன், “போலாம் ஷைலா. இங்க நிக்க வேணாம்” என்றதும் அவளது காரும் உள்ளே தான் இருக்கிறது என்பதை கூட மறந்து விட்டாள்.
அங்கு நிற்கவே அவளுக்கும் ஒப்பவில்லை.
அந்நேரம் அவர்கள் முன்னே சரட்டென கார் ஒன்று வந்து நிற்க, இருவரும் திரும்பிப் பார்த்தனர்.
ஜன்னல் கீழே இறங்க சாட்சாத் யுக்தா சாகித்யனே அவர்களை வழிமறித்து இருந்தான்.
“இந்த நேரத்துல வீட்டு வாசல்ல நின்னு என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” புருவம் இடுங்க கேட்டான். லிங்கத்தை விசாரிக்க வந்தவன், இவர்களைக் கண்டதும் நேராக அவர்கள் முன்னே காரை நிறுத்தி இருந்தான்.
அதன்பிறகே தெருவிளக்கு வெளிச்சத்தில் இருவரின் முகத்தையும் உற்றுப் பார்த்தவன், “என்ன பிரச்சனை மைத்ரேயன்?” எனக் கேட்டான்.
“ஒன்னும் இல்ல” அவன் முகத்தைக் காட்டாமல் தலையைக் குனிந்து கொள்ள, எப்போதும் தன்னைப் பார்த்ததும் கண்களில் ஆர்வத்தைப் பொழியும் ஷைலேந்தரியும் அமைதியாக இருந்ததில், “என்ன மச்சினிச்சி என்ன ப்ராப்ளம்? ஆர் யூ கைஸ் ஆல்ரைட்?” மீண்டும் அவளிடம் கேட்டதில், முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை மறைக்க அவளும் தலையைக் குனிந்து கொண்டாள்.
இருவரையும் ஒரு நொடி அழுத்தமாகப் பார்த்தவன், “கெட் இன்” என்று காரை அன்லாக் செய்ய, “இல்ல அத்தான்… நாங்க சும்மா தான் பேசிட்டு இருந்தோம்” என வேகமாக மறுக்க வந்த ஷைலேந்தரியை கண்ணைச் சுருக்கி ஏறிட்டான்.
“அப்போ அத்தான் பொத்தான்லாம் சும்மா வாய் வார்த்தைக்கு தான்…” அவன் குரலில் மெல்லிய ஏமாற்றத்தை உணர்ந்தாளோ என்னவோ செய்வதறியாமல் நிமிர்ந்து மைத்ரேயனைப் பார்த்தாள்.
“ஓ உன் புருஷன் உத்தரவு குடுக்கணுமோ?” எனத் தாடையை நீவிக்கொண்டதில், மைத்ரேயனுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.
“இல்ல யுக்தா பிரச்சனை எதுவும் இல்ல” அவன் சமாளிக்கப் பார்க்க,
“அதான் தெரியுதே உங்க முகத்துலயே… உன் அப்பாகிட்ட சண்டை போட்டியா?” என்றான் நேரடியாக.
அதில் திகைத்து நிமிர்ந்தவனுக்கு மீண்டும் கேவல் வர, கண்ணீரை அவனுக்கு காட்ட ஈகோ ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் தன்னை அடக்கிக்கொண்டான்.
நொடியில் நிலையை கிரகித்துக் கொண்டவன், “சோ உங்களை வெளிநடப்பு செய்ய சொல்லிட்டாங்க அப்படி தான?” என்றதும் இருவரிடமும் பலத்த அமைதி.
காரை விட்டு இறங்கியவன், “சரி இப்ப எங்க போறீங்க?” என பேனட்டில் சாய்ந்து கையைக் கட்டிக்கொண்டு ஸ்டைலாக நின்றான்.
அதற்கும் இருவரும் திருதிருவென விழித்தனர்.
“ஏழு கழுத வயசாகுது. தனியா லைஃபை லீட் பண்ணிக்க முடியாதா உங்களால… நடுரோட்டுல நின்னு கண்ணை கசக்கிட்டு இருக்கீங்க” என்று அதட்டினான்.
ஷைலேந்தரி வெடுக்கென “அதெல்லாம் பண்ணிப்போம். சடன் ஷாக் அவனுக்கு அவ்ளோ தான்” எனக் கணவனை விட்டுக் கொடுக்க இயலாமல் பேசிட, மெல்ல புன்னகைத்த யுக்தா, “அப்போ உண்மையாவே வீட்டை விட்டு தான் துரத்திட்டானா உன் மாமனாரு!” எனக் கேட்டதில், ‘போட்டு வாங்கி இருக்கிறான்’ என்பதே அப்போது தான் உறைக்க ஷைலேந்தரி இன்னுமாக விழித்தாள்.
அதில் நன்றாக சிரித்து விட்டவன் “இப்ப என்ன அப்படியே பொடி நடையா நடந்து பழனிக்கு பால்காவடி எடுக்கப் போறீங்களா?” கேலியுடன் கேட்டு விட்டு, “கார்ல ஏறு ஷைலு…” என்றான் உத்தரவாக.
அவளோ கையைப் பிசைந்தபடி நிற்க, அசையாமல் நின்று கொண்டிருந்த மைத்ரேயனை வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்து காரினுள் அமர வைத்தான்.
“இல்ல யுக்தா…” என அவன் மறுக்கும் போதே, “சப்புன்னு அறைஞ்சுடுவேன். எதுவா இருந்தா காலைல பேசிக்கலாம். மூடிட்டு உக்காரு” என்று அதட்டிவிட்டு திரும்பி ஷைலேந்தரியைப் பார்க்க அவள் அரண்டு அவசரமாக ஏறிக்கொண்டாள்.
இருவரையும் அவனது அபார்ட்மெண்ட்டிற்கு தான் அழைத்துச் சென்றான். அங்கு செல்லும் வரையிலும் இருவரிடமும் பேச்சு மூச்சே இல்லை.
அதே நேரம் இருவரும் பிடித்திருந்த கையை நொடிநேரமும் விடவும் இல்லை. யுக்தாவும் எதையும் கேட்டுக்கொள்ளவில்லை.
வீட்டினுள் நுழைந்ததும், வீட்டு சாவியை ஷைலேந்தரியிடம் கொடுத்தவன் “உள்ள லாக் பண்ணிக்கோ” எனக் கேட்டு விட்டு “சாப்டீங்களா?” எனக் கேட்டான்.
அவர்கள் பதில் சொல்லும் முன் “சரி போய் ஃப்ரெஷ் ஆகுங்க. ரூம் அங்க” என கை காட்டி விட்டு ஹாலுக்கு அருகிலேயே குட்டியாக இருந்த அடுக்களைக்குள் புகுந்தான்.
மைத்ரேயனோ தயக்கத்துடன் அவனிடம் வந்து “யுக்தா நாங்க ஏதாச்சு ஹோட்டல்ல ஸ்டே பண்ணிக்கிறோமே” எனக் கூற,
“நீங்க போற ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் அளவு இது இருக்காது தான்!” என யுக்தா முறைத்ததும், “ஐயோ அதுக்கு இல்ல” என வேகமாக மறுத்தான்.
“உனக்கு எதுக்கு சிரமம்னு தான்…”
“என்கிட்ட ஈகோ இருக்கலாம். அதுக்காக அவளைக் கூட்டிட்டு இந்த நைட் டைம்ல எங்கயும் அலையாத. ரெண்டு பேருக்கும் சேஃப்டி இல்ல. சோ உன் ஈகோவை தூக்கிப் போட்டுட்டு போ!” என்றான் கண்டிப்பா.
“ஈகோ எல்லாம் இல்ல யுக்தா” சொல்லும்போதே ஒரு சொட்டு கண்ணீர் தரையை நனைக்க முகத்தை மூடிக் கொண்டு தேம்பினான்.
சில நொடிகள் பொறுத்த யுக்தா, பின் தன்னுடைய ஈகோவையும் தூக்கிப் போட்டு விட்டு, அவன் தோள் மீது கைப்போட்டு அழுத்தினான்.
“நீ அழுகுற அளவு உன் கண்ணீருக்கு காரணமானவங்க ஒர்த் கிடையாது மைத்ரா. லீவ் இட். என் மச்சினிச்சி தான் ஃபார்ம் அவுட் ஆகி இருக்கா. அவளைப் போய் பாரு…” என இறுதியில் கேலியுடன் முடிக்க, அவனுக்கும் அழுது தீர்த்ததால் ஏற்பட்ட தெளிவோ அல்லது உடன் அரவணைக்க ஆள் இருந்ததால் ஏற்பட்ட தைரியமோ, எதுவோ ஒன்று சற்று தெம்பைக் கொடுத்தது.
அதில் தலையை ஆட்டிய மைத்ரேயன் இரண்டடி வெளியில் சென்று விட்டு பின் மீண்டும் யுக்தாவை அணைத்துக் கொண்டவன், “தேங்க்ஸ் டா…” என்று விட்டு அவனது பதிலை எதிர்பாராமல் அறைக்குச் சென்று விட, தலையை ஆட்டி புன்னகைத்துக்கொண்ட யுக்தா, சில நிமிடங்கள் செலவழித்து பிரெட் சாண்டவிச் செய்தான்.
அவர்களை உண்ண சொல்லிவிட்டு தானும் ஒரே ப்ரெட்டை எடுத்துக்கொண்டு கிளம்பிட, இங்கோ விஸ்வயுகா பால்கனி கதவில் தலையைச் சாய்த்து தேய்ந்த நிலவதுவை வெறித்திருந்தாள்.
இன்று வரமாட்டானோ? எப்படி வருவான்… ஒருவேளை அவனுக்கு கொடுத்த இதழ் முத்தம் அருவருப்பைக் கொடுத்து விட்டதோ… அமைதியாய் இருந்த மனது என்னன்னவோ சிந்தித்தது.
இது தேவையற்ற சிந்தனை… அவனை விலக்க எண்ணி அதனை செய்தும் முடித்தாகிற்று.
ஆழ்ந்த மூச்சொன்றை இழுத்து விட்டவள், வலுக்கட்டாயமாக மெத்தையில் படுத்து கண்ணை இறுக்கி மூடி உறங்க முற்பட, சில நிமிடங்களில் அவளது முதுகுப்புறம் இருந்து இடையை சுற்றி வளைத்தது ஆடவனின் இரும்புக் கரம்.
அந்த தீண்டல் தந்த பரவசமே சொல்லியது அது தன்னவனின் ஸ்பரிசமென்று.
திரும்பிப் பாராமலேயே ஏதோ பேச வந்தவளின் இதழ்களை ஒற்றை விரல் கொண்டு மூடிய யுக்தா, “மார்னிங் இயர்லியா ஆபிஸ்க்கு போகணும்டி. சோ தூங்கலாம்” என அவளின் பின்னங்கழுத்தில் முகத்தைப் புதைத்து பாவையின் வாசத்தை சுவாசித்தபடி உறங்கிப்போனான் அவன்.
அந்த மூச்சுக்காற்று வெப்பத்தில் புழுங்கிய மனதும் குளிர் காய்ந்து துயிலைக் கொடுத்து அவளுக்கு.
மோகம் வலுக்கும்
மேகா