” ம்ம்ம்ம்!” என்றவளின் மறுப்பை அவன் உணரவே இல்லை.
அவனது இதயத்துடிப்பு தான் அதிகபட்சமாக ஒலித்துக் கொண்டிருந்ததே. அவளைக் காணாத நிமிடங்கள் கண்முன் தோன்றி பயமுறுத்தி விட்டுச் சென்றது.
இதில் எங்கிருந்து அவளது முனகல் சத்தம் தெரியப்போகிறது.
தடுத்த அவளது கையை ஒரு கையால் பற்றியவன் இதயத்துடிப்பு சீராகும் வரை அழுத்தமாகப் பற்றிட, அவன் கொடுத்த அழுத்தத்தில் ஷவர்மா தூள் தூளாக கீழே சிதறியது.
சுவைத்த இதழ்களின் ஈரத்திலேயே சுயத்தையும் இழந்து விட்டான்.
சில நொடிகளில் அவளது எதிர்ப்பும் அடங்கிப் போனது.
அதில் இன்னும் ஆழப்புதைந்தவன், பெண்ணின் கீழுதடு மொத்தத்தையும் முழுதாய் தனதாக்கி கொண்டான்.
மூச்சு விடும் இடைவெளிக்காக ஒரே ஒரு நொடி விடுவித்தவன் மீண்டும் பாவையின் மேலுதட்டை தனதாக்கிக் கொள்ள, கண்ணை இறுக்கி மூடி தேகத்தையும் இறுக்கிக் கொண்டாள் அவனின் மனையாள்.
விலக்கும் எண்ணமே இல்லையென்றாலும் முடிவு கொடுத்தே ஆக வேண்டுமென்ற கட்டாயத்தின் பேரில் சுயநினைவுக்கு வந்தபிறகே அவளது மேனியின் மாற்றம் கண்டு விலகினான்.
கன்னங்களில் சிவப்பு வண்ணங்களும் இல்லை. உணர்வுப் பேரலைகளின் நடுக்கங்களும் இல்லை.
மாறாக, முகமே கருத்து வாடி இருந்தது அவளுக்கு. கையை இறுக்கி மூடி தன்னை அடக்க முயன்றாள்.
திறந்த விழிகளில் சிறிதளவும் காதலில்லை. எப்போதும் தென்படும் கோபமும் இல்லை. அதுவே அவனை உறுத்த, ‘கொஞ்சம் ஓவரா போயிட்டோமோ?’ என்ற பதற்றத்தில் “ஆர் யூ ஓகே ஏஞ்சல்?” எனக் கேட்டான்.
அவள் பதிலற்று காரைக் கிளப்ப, அவளை நிறுத்தியவன் “லிப்ஸ் வலிக்குதாடி… உன்… உன்ன காணோம்னு டென்சன் ஆகிட்டேன்… ஏஞ்சல்… எண்னைப் பாரு” என்றதும் அவனை ஒரு கணம் உணர்வற்று பார்த்தவள் “என்ன?” எனக் கேட்டதில் அவனது மோக உணர்வு மொத்தமும் வடிந்து விட்டது.
ஏதோ குற்றம் செய்தது போல குறுகுறுத்தும் விட்டது.
வீங்கி தடித்த இதழ்களை அவள் ஒரு முறை அழுத்தமாகத் துடைத்து விட்டு “அடுத்த வேலையைப் பார்க்க போகலாமா இல்ல இப்படியே நடுரோட்டுல இருக்கறதா உத்தேசமா?” என்றதும்,
“ஏஞ்சல்… ஹர்ட் பண்ணிட்டேனா?” எனப் பரபரத்தவனுக்கு என்னவோ போல இருந்தது.
அவள் மீண்டும் காரை கிளப்ப போக, இப்போதும் தடுத்தவன் “ப்ளீஸ்டி ஏதாவது சொல்லு” என்றான் தவிப்பாக.
“என்ன சொல்ல? பிடிக்கலன்னு சொன்னப்பறமும் இப்படி அபியூஸ்…” என சொல்ல வந்தவள் சட்டென நிறுத்தி விட்டு, “இப்படி பண்ணுனா உங்கிட்ட என்ன பேச சொல்ற?” என்றாள் கோபமாக.
“கம் அகைன்!” விழி இடுங்க அவன் கேட்க,
அவள் வலுக்கட்டாயமாக முகத்தை ஜன்னல் புறம் திருப்பிக் கொண்டாள்.
நெஞ்சம் முழுக்க காதல் மட்டுமே நிறைந்திருந்தாலும் அதனை வெளிக்காட்டும் வழிமுறையை ‘அபியூஸ்’ என்பவளிடம் என்ன சொல்லி அவனது காதலின் ஆழத்தைப் புரிய வைப்பது?
புரியாதவர்களுக்கு புரிய வைத்து விடலாம். ஆனால் புரிந்து கொள்ள மறுப்பவர்களுக்கு?
தீக்காயம் படர்ந்த கையைப் பிசைந்து அழுத்தி மூடி தனக்குள் எழுந்த ஆற்றாமை தீயை அடக்க முயன்றான்.
அவன் செயலில் சட்டென அவனது மற்றொரு கையைப் பிடித்தவள், “காயத்தை ஆறவே விட மாட்டியாடா?” எனத் திகைத்து கேட்க,
“ஆற விட்டா கூட தோண்டி தோண்டி புண் ஆக்கிக்கிறது தான் உனக்கும் பிடிக்குது எனக்கும் பிடிக்குது…” கணீரென வந்த அவனது பதிலில் அதிர்ந்து அவன் மீதிருந்து கையை எடுத்தாள்.
காரை கிளப்பியவளை இம்முறை அவன் தடுக்கவில்லை.
ஆனால் சிறிது தூரத்திலேயே யோசனையுடன் காரை ஓரம் கட்டி விட்டவளை சுருங்கிய புருவத்துடன் பார்த்தான் யுக்தா.
ஸ்டியரிங்கில் விரல்களால் தட்டிக்கொண்டே இன்னும் சிந்தனையில் இருந்தவளை அவன் அழைக்கவும் இல்லை. தடுக்கவும் இல்லை.
அவனது எதிர்வினையை உணராது, “எனக்கு… எனக்கு இப்ப தான் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது யுக்தா” எனத் தீவிரத்துடன் உரைத்தாள்.
அப்போதும் அவனிடம் அதே புருவ சுருக்கம் தான்.
“அன்னைக்கு நைட்டு நீ சித்திக்கு போன் பண்ணுன தான… அப்போ நான் காரை விட்டு கொஞ்சம் தள்ளி நடந்து போனேன். அந்த நேரத்துல எனக்கு எதிர்ல இருந்து ஒரு பர்மா அத்தோ வண்டில… எஸ் பர்மா அத்தோ தான்… அந்த வண்டி ஆப்போசிட்ல இருக்குற தெருவுக்குப் போச்சு. அது போய் சில செகண்ட்ஸ்ல தான் அந்த வேன் வந்துச்சு. எனக்கு சியூரா தெரியும்… அந்த அத்தோ கடைல அவனுங்க அத்தோ சாப்பிட்டு இருக்கணும்” என்றதில் அவன் குழப்பமாகப் பார்த்தான்.
“நான் கன்பியூஸ் பண்றேனோ? ஓகே நான் ஏன் ஸ்பெசிபிக்கா சொல்றேன்னா, மைதாவுக்கு அத்தோ ரொம்ப பிடிக்கும். பட் எனக்குப் பிடிக்காது. அந்த சம்பவம் நடக்குறதுக்கு ஒரு ரெண்டு நாளைக்கு முன்னாடி நாங்க நாலு பேரும் வெளில போயிருந்தோம். அப்போ மைதா அத்தோ கேட்டு அடம்பிடிச்சான். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அத்தோ கடையெல்லாம் இப்ப இருக்குற மாதிரி தெருவுக்கு தெருவெல்லாம் இல்ல. ஒரு குறிப்பிட்ட ஏரியால தான் அதிகமா இருக்கும். அன்னைக்கு பார்த்து பேமஸான கடையெதுவும் திறக்கல.
ஆனா பாரிஸ் கார்னர்ல புதுசா வண்டிக்கடை போட்டிருந்தாங்க” என்றவள் அந்நாளை நினைவு கூர்ந்தாள்.
—
“டேய் அத்தோ சாப்ட இவ்ளோ தூரமா வரணுமா?” விஸ்வயுகா இடுப்பில் கை வைத்துக் கேட்க,
“ஒரு நல்ல டிஷ் சாப்பிட நாலு கிலோ மீட்டர் நடக்கலாம் விஸ்வூ தப்பில்ல”” என்றவனை ஷைலேந்தரி முதுகிலேயே அடித்தாள்.
“பிசாசே… அதுக்குன்னு காரை எங்கயோ நிறுத்திட்டு இந்தக் கூட்டத்துக்குள்ள நடக்க விட்டு வேடிக்கை பாக்குற” என மூச்சிரைக்க,
“உனக்கு முட்டை மசால் வேணுமா வேணாமா?” எனக் கண்ணை உருட்டினான்.
“இப்டி கேட்டு கேட்டு எனக்குப் பசி வந்தது தான் மிச்சம். நீ மட்டும் முட்டை மசால் வாங்கித் தரல… மவனே உன்னை மசாலால பிரட்டி சாப்புட்டுருவேன்” என மூக்கு நுனி சிவந்தவளை ரகசியமாய் ரசித்தவன், “அடி வாடி… வந்துட்டா சாபம் விட” என அவள் கையைப் பிடித்து முன்னே நடக்க, அவர்களுக்கு நான்கடி முன்னே நடந்து கொண்டிருந்த நந்தேஷ் நின்று விட்டான்.
“மச்சான்… உன் நேரத்துக்கு ஒரு அத்தோ கடை இருக்கு டா” என்றவனுக்கு ‘ஷப்பாடா இனிமே நம்மளை நடக்க வைக்காதுங்க’ என்ற நிம்மதி பரவியது.
“வெற்றி!” என மைத்ரேயன் அந்தக் கடையை நோக்கிச் செல்ல,
விஸ்வயுகாவோ “டேய் டேய் டேய் கண்டிப்பா இந்தக் கடையில தான் சாப்பிடணுமா?” என மூவரையும் கலவரத்துடன் பார்த்தாள்.
“ஏன்டி?” ஷைலேந்தரி கேட்டதும்,
“கடைப் பேரை பாருடி. பர்மா அத்தோ கடைக்கு பார்மா அத்தோ கடைன்னு எழுதி வச்சுருக்கானுங்க. இவனுங்களை நம்பி இங்க சாப்ட்டா வயித்துக்கு உத்தரவாதம் இல்லடி…” என்றதில் மற்ற மூவருமே அதனை கவனித்து நமுட்டு நகை புரிந்தனர்.
“நம்ம வடக்கு பாய்ஸ்க்கு தெரிஞ்ச தமிழ் அவ்ளோ தான் விஸ்வூ. நீ என்ன தமிழ் எக்ஸ்சாமா நடத்துற ஸ்பெல்லிங் மிஸ்டேக் கரெக்ட் பண்றதுக்கு… அதெல்லாம் நல்லா தான் இருக்கும் வா” என மைத்ரேயன் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றான்.
விஸ்வயுகா தவிர்த்து மற்ற மூவரும் அத்தோ வாங்கிட, நந்தேஷ் “நீயும் பசில தான் இருப்ப. ஒரு வாய் சாப்பிடு” என்றுதங்கைக்கு ஸ்பூனில் ஊட்டி விட, அதனை உண்டவளுக்கு குடலைப் பிரட்டியது.
“ச்சை இது என்ன இவ்ளோ கன்றாவியா இருக்கு. இதை எப்படி சாப்புடுறீங்க?” என முகத்தைச் சுளித்தவளுக்கு அந்த சிறிய அளவான அத்தோவே தொண்டைக்குள் நின்று வருத்தியது. என்னவோ அந்த வாசமும் அவளுக்கு முற்றிலும் பிடிக்கவில்லை.
“ஹே அவ்ளோ ஒன்னும் மோசமா இருக்காது டேஸ்ட் நல்லா தான் இருக்கும்” என்றபடி மைத்ரேயன் ஒரு ஸ்பூனை வாயில் வைத்து அவனும் முகத்தைச் சுளித்தான்.
“இட்ஸ் இன்சேன்… என்ன கன்றாவில பண்ணிருக்கானுங்க இதை… விஸ்வூ இது அத்தோ டேஸ்ட்டே இல்ல. சிக்கன் கூட கெட்டுப் போன மாதிரி இருக்கு. இவனை…” எனக் கோபப்பட்டு உணவு தயாரித்தவனிடம் சண்டைக்குச் செல்ல,
‘இவனுங்களுக்கு மத்தில ஒரு வாய் சாப்புடுறதுக்குள்ள எவ்ளோ கலவரம்’ என நொந்த நந்தேஷும் தன்பங்கிற்கு சண்டைக்குச் சென்றான்.
விஸ்வயுகாவிற்கு அங்கு நிற்கவே ஒப்பவில்லை. ஷைலேந்தரியும் அதன்பிறகே அங்கு வந்த கெட்ட வாடையே உணர்ந்து, “மைதா நந்து… போதும்டா வாங்க இங்க இருந்து போலாம்… இனிமே வாழ்க்கைல அத்தோவே சாப்பிட மாட்டேன்டா” எனக் கையெடுத்துக் கும்பிட்டவள் அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றாள்.
அதன்பிறகு பல்பு வாங்கியதை நினைத்து சிரித்துப் பேசியது வேறு கதை.
—-
“எனக்கு நல்லா தெரியும் யுக்தா. அன்னைக்கு நைட்டு அதே வண்டி தான் அங்க வந்துச்சு. பர்மாவுக்குப் பதிலா பார்மான்னு போட்டுருந்த ஞாபகம் தான். நல்ல மனநிலைல இருந்திருந்தா மே பி நான் கவனிச்சு இருப்பேன்… ப்ச் இல்ல இப்ப யோசிச்சுப் பார்த்தா அதே வண்டின்னு தான் தோணுது. அங்க கண்டிப்பா அந்தப் பசங்க அத்தோ வாங்கிருக்கானுங்க.”
அவள் ஏன் நல்லமனநிலையில் இல்லை என்ற கேள்வி எழுந்தாலும் அதனை உள்ளுக்குள் அடக்கிக்கொண்டவன், மறுகேள்வி கேட்கும்முன், “அந்த வண்டி எந்த எந்த ஏரியாக்கு போச்சுன்ற ஃபுட் ஏஜ் கிடைக்குமா? இல்லைன்னா அந்த வண்டிக்கடையை இப்ப வரை மெயின்டெய்ன் பண்றானுங்களான்னு தெரிஞ்சா ஏதாவது ஒரு க்ளூ கிடைக்கும்ல?” என வெகு தீவிரத்துடன் உரைத்து விட்டு,
“ஆனா அவனை பிடிக்கிறது எப்படி பாசிபிள்னு தெரியல… உடனே பிடிச்சுருந்தா கூட வாய்ப்பு இருக்கு. இதை எப்படி நான் மறந்து போனேன்” என தன் நெற்றியை தானே தட்டிக்கொண்டாள்.
“திடீர்னு எப்படி ஞாபகம் வந்துச்சு? அங்க கண்டிப்பா சாப்பிட்டு இருக்கணும்னு எப்படி சொல்ற?” தாடையைத் தேய்த்தபடி யுக்தா வினவ, அவளிடம் பலத்த அமைதி.
“விஸ்வா… உன்னை தான் கேக்குறேன். நீ குடுக்குற டீடெய்ல் ஒண்ணொண்ணுமே பெரிய யூஸ்ஃபுல்லா இருக்கும்.”
அவனது ஃபார்மலானப் பேச்சில் அவளை மீறியும் உள்ளுக்குள் ஒரு வித ஏமாற்றம்.
“கண்டிப்பா சொல்லனுமா?” அவனைப் பாராமல் அவள் கேட்க,
அப்போதும் அவனுக்குப் புரியவில்லை. அல்லது அதைப் பற்றி யோசிக்கவே பயந்தானோ என்னவோ தலையை மட்டும் ஆட்டினான்.
கீழுதட்டை அழுந்தக் கடித்தவளுக்கு அழுத்தத்தில் சின்னத் துளியளவு குருதி எட்டிப் பார்க்க, தலையை நிமிர்த்தாதவளாக “ஒருத்தன் என் லிப்ஸ்ஸை கடிச்சுக் குதறுனான். தலைல அடிபட்டதுனால கொஞ்சம் அரை மயக்கத்துல தான் இருந்தேன். ஆனா அந்த பேட் ஸ்மெல்ல பீல் பண்ணேன்…” எனும்போதே கைகள் உதற கார் கதவை சடாரென திறந்து வெளியில் இறங்கி விட்ட யுக்தாவிற்கு மூச்சு பலமாக வாங்கியது.
கோபமா, இயலாமையா, நடுக்கமா, வலியா எந்த உணர்வையும் சொல்லில் வடிக்க இயலாதவாறு பெரும் அழுத்தமொன்று அவன் நெஞ்சை அழுத்தி உச்சந்தலையில் நறுக் நறுக்கென்ற வலியைக் கொடுத்தது.
கலங்கிய கண்களதை எத்தனை நிமிடங்கள் அடக்க இயலும்?
பல்லைக்கடித்து தன்னை அடக்கிப் பார்த்தவனுக்கு முடியவில்லை. தொண்டை கிழிய நெடுஞ்சாலையில் ஆஆஆ எனக் கத்தித் தீர்த்தான்.
அவன் கத்தியதில், காரினுள் தலையைப் பிடித்தபடி அமர்ந்திருந்த விஸ்வயுகாவிற்கு ஒரு சொட்டு கண்ணீர் மடியை நிறைக்க,
க்ளூவைக் கண்டுபிடிக்கிறேன் பேர்வழியென அவனைக் குத்திக் கிழிப்பது உணர்ந்து அவளுக்கும் செய்வதறியாத நிலை.
தான் ஆழ்ந்து வலிக்கும் படியாக கொடுத்த முத்தம் அவளுக்கு எதை நினைவுபடுத்தி இருக்கிறதென்று உணர்ந்தவனுக்கும் கையறுந்த நிலை.
இருவரும் இருவேறு புள்ளிகளாக கடந்த நிலைகளைக் கடக்க இயலாது நிலைகுலைந்திருக்க, அருணிடம் இருந்து அழைப்பு வந்தது.
“சார் நீங்க சொன்னமாதிரி எந்த வித கனெக்ஷனும் இல்லாத பொண்ணுங்க டீடெய்ல தனியா பிரிச்சு வச்சுருக்கேன். அண்ட் சார் உங்க கெஸ் கரெக்ட். ஆந்திரா, கர்நாடகா, கேரளான்னு கிட்டத்தட்ட 6 ஸ்டேட்ல இதே மாதிரி கொலை நடந்துருக்கு. அதை எல்லாம் சூசைட் கேஸா க்ளோஸ் பண்ணிருக்காங்க சார்” எனக் குரலைத் தாழ்த்திக் கூற,
இதனை எதிர்பார்த்தவனாக “அந்த கேஸ் டீடெய்ல்ஸ் வேணும் அருண். கேஸை ஹேண்டில் பண்ணுன போலீஸ் ஆபிசர் எல்லார்கிட்டயும் நான் பேசணும். இமீடியட்டா அரேஞ்சு பண்ணு” என்று உத்தரவிட்டவனின் விழிகளில் சிவப்பு படலம் தங்கி விட்டது.
மோகம் வலுக்கும்
மேகா