Loading

 

மறுநாள், உறக்கம் கலைந்து எழுந்த கயல், அவசரமாக எழுந்து, சுற்றி முற்றி பார்க்க, அங்கு ஜீவா இல்லை என்றதும் ஆசுவாசமாகி மணியைப் பார்க்க, அது ஆறு என்று காட்டியது.

அய்யயோ என்று பதறி, வேகமாக தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு, கீழே செல்ல, அங்கு தோட்டம் சுத்தம் செய்ய, வீடு சுத்தம் செய்ய, சமைக்க என தனி தனி வேலையாட்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்க கயலுக்குத்தான் யார் இவர்கள் என்று ஒன்றும் புரியவில்லை..

 சமையலறையில் இருந்து வந்த ஒரு பெண் அடக்கமாக, “மேம்… உங்களுக்கு டீயா காபியா மேம்” என்று கேட்க, அவள் தான் பதில் சொல்லாமல் பே வென முழித்தாள்.

“காபி எடுத்துட்டு வா” என்று கயலுக்கு பின்னிருந்து ஒரு குரல் கட்டளை விதிக்க, அவள் அடுத்த நொடி அப்பணி பெண் அடுக்களையில் இருந்தாள்.

கயல் புரியாமல் திரும்பி பார்க்க, அங்கு ஜீவா நிற்பதை கண்டதும், யார் இவங்க எல்லாம் என்பது போல் பார்த்தாள்.

அவன் அதற்கு பதில் சொல்லாமல், “ரூம் கப் போர்ட்ல ட்ரெஸ் வச்சுருக்கேன். பக்கத்துலயே ஜுவெல்ஸ்சும் இருக்கு. அதை மாத்திட்டு ரெடி ஆகு” என்று மட்டும் சொல்லிவிட்டு அவன் உள்ளே சென்று விட, அவன் எங்கே ரெடி ஆக சொல்கிறான். என்ன செய்யப்போகிறான் என்று அவளுக்கு நடுக்கம் பிறந்தது.

அந்த வேலைக்காரர்கள், அங்கு எப்பொழுதும் வேலை பார்ப்பவர்கள் தான். கயலுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என நினைத்து தான் அவர்களை வரவேண்டாம் என்று சொல்லி இருந்தான். இப்பொழுது உண்மை தெரிந்ததும், இரவே அனைவரையும் வேலைக்கு வர சொல்லிவிட்டான்.

அறைக்கு சென்ற கயல், குளித்து விட்டு வந்து பார்க்க, அங்கு ஒரு பட்டு சேலையும் நகைகளும் இருப்பதை கண்டு, விழித்து விட்டு அதனை விடுத்து சாதாரணமாக இருக்கும் ஒரு புடவையைக் கட்டி கொண்டு, வெளியில் வந்து, அவள் பாட்டிற்கு அடுக்களைக்கு சென்று, வேலை பார்க்கத தொடங்கினாள்.

அங்கிருந்த பெண் “மேடம்… இது என் வேலை மேடம்… நீங்க போங்க. சார் பார்த்தா என்னை திட்டுவாரு” என்று மறுக,

அவள் “நீங்க வெளிய ஏதாவது வேலை இருந்தா பாருங்க” என்று அனுப்ப, அவள் இவளை பாவமாக பார்த்துக் கொண்டு வெளியில் சென்றாள்.

ஜீவா, அறைக்கு வந்து கயலை தேடி விட்டு, எங்க போனா இவள் என்று அடுக்களைக்கு வந்து பார்க்க, அங்கு அவள் வேலை பார்ப்பதை பார்த்து கடுமையாக கோபம் வந்தது அவனுக்கு.

அதிலும், அவன் சொன்ன உடையை உடுத்தாமல், வேறு உடையை அணிந்திருப்பதை கண்டு மேலும் கோபமாக, வேகமாக அவள் அருகில் சென்று அவளை இழுத்து,

“உன்னை என்ன சொன்னேன் நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க…” என்று அடிக்குரலில் அதட்ட,

அதில் பயந்தவள், “எனக்கு அந்த ட்ரெஸ் வேணாம்… இதையே போட்டுக்குறேன்.” என்றவள் அவனை பார்த்து நடுங்கிக் கொண்டு, சட்டியில் எதையோ வதக்கி கொண்டிருந்தாள்.

கோபமாக அடுப்பை அணைத்த ஜீவா, “உங்கிட்ட நான் இதை போடுறியா இல்லையான்னு ஒபினியன் கேட்கலை. இதான் போடணும்னு ஆர்டர் பண்ணுனேன். போ ரூம்க்கு” என்று கட்டளையாய் சொல்ல, அவள் வேணாம் என்று தலையாட்டினாள்.

போதாக்குறைக்கு கண்ணில் இருந்து நீர் வேறு ஊற்றியது. அவளின் கண்ணீரைக் கண்டவன், தலையை அழுந்த கோதி கொண்டு, “இப்போ நீ வரப்போறியா இல்லையா?” என்று கத்த,

அதில் மேலும் மிரண்டவள், நடுங்கிய குரலில், “நான் இங்க வேலைக்காரி மட்டும் தான். நான் அப்படியே இருந்துக்குறேன். ப்ளீஸ் என்னை விட்ருங்க” என்று சொல்ல, அதில் வெகுவாய் அதிர்ந்தவன், என்ன சொல்வது என்று புரியாமல்,

பின் மெதுவாக, “உன் அப்பா அம்மா வர்றாங்க. அவங்க முன்னாடி நீ இப்படி இருந்தா நீ நல்லா இல்லையோன்னு நினைச்சு வருத்தப்படுவாங்க. அது உனக்கு ஓகேன்னா நீ தாராளமா இப்படியே இருந்துக்கோ” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென சென்று விட்டான்.

அப்பொழுது தான் ஒரு வாரமாய் வீட்டினரிடம் கூட பேச வில்லை என்றே அவளுக்கு உறைத்தது.

தன்னைக் குனிந்து பார்த்தவள், கண்டிப்பாக இப்படி பார்த்தால், என்னம்மோ ஏதோ என்று நினைத்து வருத்தப்படுவார்கள் என்று நினைத்து, மீண்டும் அறைக்கு சென்று, அவன் கொடுத்த சேலையை விடுத்து, வேறு நல்ல உடை அணிந்து, தேவையான நகையை மட்டும் அணிந்து கொண்டு, முகத்தை சிரித்த மாதிரி வைத்து கொண்டாள்.

ஆனால் கூடவே கண் கலங்கவும் செய்தது. இந்த உறவே பொய்யான பிறகு, இத்தனை பொய்கள் அவசியமா என்று. ஆனால் அப்பாவின் உடல்நிலையை நினைவில் கொண்டு, முயன்று முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டாள்.

அவன் சொன்னது போல் அடுத்த ஒரு மணி நேரத்தில் அவளின் அப்பாவும் அம்மாவும் அங்கு வர, அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றவளுக்கு ஒரு வாரமாய் ஏன் பேசவில்லை என்று கேட்டால் என்ன சொல்வது என்று புரியாமல் தவித்தாள்.

ஆனால் அவர்கள் எதுவும் கேட்கவே இல்லை. மாறாக, கலை “காலைல தான் மாப்பிள்ளை சொன்னாரு. இங்க ஏதோ டவர் பிரச்சனையா இருந்துச்சாமே. அதனை போன் பண்ண முடியலைன்னு… நீ நல்லாருக்கியா கயலு” என்று அவள் முகத்தை ஆராய,

கயல் தான், ‘சரியான வில்லன்… எந்த கேள்வியும் கேட்கமுடியாத அளவுக்கு எப்படித்தான் சமாளிக்கிறானோ’ என்று மனதினுள் நினைத்துக் கொண்டு, அவர்களுடன்  பேச, சிவமூர்த்தி, “மாப்பிள்ளை எங்கம்மா” என்று கேட்டார்.

அவளுக்கு தான், அவன் வீட்டில் இருக்கிறானா இல்லையா என்று கூட தெரியவில்லை. என்ன சொல்வது என்று தெரியாமல் பேந்த பேந்த முழிக்க, “நான் இங்க தான் மாமா இருக்கேன்…” என்று ஜீவா வந்து அவர் அருகில் அமர்ந்தான்.

“போன் பேசிகிட்டு இருந்தேன் மாமா” என்று அவருடன் அவன் சாதாரணமாய் பேசிக்கொண்டிருக்க, அப்பொழுது அவனுக்கு காவல் நிலையத்தில் இருந்து உடனே வரும்படி போன் வர, அவர்களிடம் சொல்லி விட்டு வேகமாக அங்கு விரைந்தான்.

அங்கு இன்ஸ்பெக்டர் ஒரு பையனை பிடித்து வைத்து, “மிஸ்டர் வாசு. நீங்க சொன்ன தகவல் படி, நாங்க விசாரிச்சதுல, அந்த நேரத்துல இவன் அங்க தான் இருந்துருக்கான். அந்த மலைக்கு பக்கத்துல தான் இவன் இருந்துருக்கான். அங்க இருந்த cctv ஃபுட் ஏஜ்ல இவன் அவசரமா ஓடுற வீடியோ கிடைச்சுச்சு…” என்று சொல்ல, வாசு கண்ணில் கடுங்கோபத்துடன், அந்த பையனை பிடித்து அடித்து, “சொல்லுடா என்னடா நடந்துச்சு அங்க… சொல்லு.” என்று கேட்க,

அந்த இன்ஸ்பெக்டர், “ஹ்ம்ம்… நாங்களும் காலைல இருந்து விசாரிக்கிறோம். ஆனா, இவன் நான் எதுவும் பார்க்கல, பார்க்கலயை தவிர வேற எதுவும் சொல்ல மாட்டேங்குறான்…” என்று சலிக்க,

வாசு, “இவனை நான் வெளிய எடுக்குறேன் இன்ஸ்பெக்டர், நான் குடுக்குற ட்ரீட்மெண்ட்ல இவன் அவனே உண்மைய சொல்லுவான்” என்று அவனை உறுத்து விழிக்க, வாசுவை பற்றி நன்கு அறிந்த அவனோ, “வேணாம் சார் என்னை ஒண்ணும் பண்ணிடாதீங்க நான் சொல்றேன்…” என்று சொல்ல, இப்போது, வாசு கூர்மையாக “சொல்லு… கார்த்திக்கு என்ன ஆச்சு..” என்று கேட்டான்.

அவன், “சார், நான் சிகரெட் குடிக்கலாம்னு அந்த மலைக்கிட்ட போனேன் சார். அப்போ உங்க தம்பி மலைல இருந்து கத்திகிட்டே விழுகிற சத்தம் கேட்டுச்சு. நான் என்ன ஆச்சுன்னு போய் பார்க்கும் போது, அங்க தொப்பி போட்டு, யாரோ ஒருத்தன், கைல போன் வச்சுகிட்டு, ஏதோ பண்ணுனான் அப்பறம் அந்த போனையும் தூக்கி, மலைல இருந்து எறிஞ்சுட்டு  எங்கயோ போய்ட்டான். எனக்கு அதை பார்த்ததும் பயமா இருந்துச்சு அதான்… அங்க இருந்து ஓடிட்டேன்.” என்று பயந்து கொண்டே சொல்ல,

ஜீவாதான் இதனைக் கேட்டதும் ‘யாரோ பிளான் பண்ணி, டிராப் பண்ணி கார்த்தியை கொலை பண்ணிருக்கான். யாருடா நீ… எங்கடா இருக்க. அதே மலைல இருந்து உன்னை நான் தள்ளி, உன் எலும்பை அங்க இருக்குற மிருகத்துக்கு சாப்பாடா போடலை நான் வாசு இல்லைடா…’ என நெருப்பாய் கனன்றான்.

ஒரு இரண்டு நிமிடம் முன்னால் சென்றிருந்தால் தன் தம்பியை காப்பாற்றி இருக்கலாமே என்று மனதில் வெந்து கொண்டிருந்தான்.

பின், ஜீவா “அவனை பார்த்தியா?” என்று கேட்க,

“இல்லை சார்… நான் அவனை பார்க்கலை. அவன் ஃபுல்லா கவர் பண்ணிருந்தான். தொப்பிலாம் போட்ருந்தான் அதனால எனக்கு அவன் முகம் தெரியல.” என்று சொன்னவனிடம், இன்ஸ்பெக்டரும் எதாவது அடையாளம் சொல்லு என்று கேட்க, அவனும் யோசித்து விட்டு ஒன்றுமே தெரியவில்லை என்று விட்டான்.

ஜீவா, “எனக்கு அவன் உடனே வேணும். என்ன ஆக்ஷ்ன் வேணும்னாலும் எடுங்க… பட் ஐ நீட் ஹிம்…” என்று கொந்தளித்து விட்டு, வீட்டிற்கு சென்றான்.

அவனையே வீடு வரை பின் தொடர்ந்து வந்த அந்த உருவம், இளக்காரமாக சிரித்துக் கொண்டு, உன்னிடம் நான் மாட்டுவேனா… இல்லை என்னிடம் நீ மாட்டுவாயா என்று பாப்போம் வாசுதேவா… என்று எக்களித்து விட்டு, அந்த வீட்டைத் தாண்டி சென்றது.  

ஜீவாவிற்கு யார் இதை செய்திருப்பார்கள் என்று ஒன்றுமே புரியவில்லை. தன் மேல் தொழில் ரீதியாக பலருக்கு கோபம் இருக்கிறது தான். ஆனால், அதற்காக தம்பியை கொலை செய்யும் அளவுக்கு, எதற்காக செல்ல வேண்டும், இதனால் அவனுக்கு என்ன லாபம் என்று பலவாறாக யோசித்தவன், வீட்டினுள் வர, அங்கு ஊருக்கு கிளம்ப தயாராக இருந்த சிவமூர்த்தி கலையை பார்த்து விட்டு, இங்கயே இருக்க சொன்னான்.

ஆனால் அவர்கள், இருவரையும் விருந்துக்கு வர சொல்லிவிட்டு ஊருக்கு கிளம்பினர். அவர்களை வரவைத்தது, ஜீவாவின் வேலை தான். அவர்களை பார்த்தால் கயல் சற்று இலகுவாக இருப்பாள் என்று நினைத்தே வரவைத்தான்.

ஆனால் அவர்கள் சென்றதும், மீண்டும், அவள் அடுக்களைக்குள் புகுந்து கொண்டாள்.

இவளை என்ன தான் செய்வது என்று நொந்தவன், சிறிது நேரம் யோசித்து விட்டு. அவளிடம் வந்தவன்.

“உன் போன் குடு” என்று கேட்க, கயல் எதற்கு என்று பார்த்தாள்.

“கார்த்தி உன்கூட பேசுனதை பார்க்கணும்” என்று சொல்ல, கயலுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

‘இன்னும் நீங்க என்னை நம்பவே இல்லைல’ என்ற ரீதியில் அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு, போனை எடுத்துக் கொடுக்க,

அவன், வாங்காமல், “சத்தியமா உன்னை சந்தேகப்பட்டு நான் இதை கேட்கல. நான் கார்த்தி கூட சரியா பேசுனது கூட இல்ல. அவன் கூட போன் பேசி, சாட் பண்ற அளவுக்கு எனக்கு டைமும் இருந்ததில்லை. அட்லீஸ்ட் அவன் பேசுனதையாவது பார்க்கலாம்னு தான் கேட்டேன். நான் உன்னை சந்தேகப்படறேனோன்னு நினைச்சா நீ தரவேணாம்.” என்று அவன் அறைக்கு சென்று விட, கயலுக்கு தான் அவனை பார்க்க பாவமாக இருந்தது.

கார்த்தி சொல்லி இருக்கானே, அவனுக்கு அன்பை வெளிப்படுத்த தான் தெரியாது. மற்றபடி, தான் இல்லை என்றால் வாசு அண்ணா, துடித்து விடுவார் என்று. அவன் இறந்த போது எவ்வளவு வேதனைப் பட்டிருப்பான் என்று நினைத்தவளுக்கு, அவன் பழிவாங்க செய்த காரியம் ஏற்றுக்கொள்ள முடியாததாய் இருந்தாலும், தன்னை மீறி, போனுடன் அவன் அறைக்குச் சென்றாள்.

கட்டிலில் சாய்ந்து, தலையில் கை வைத்து அவன் அமர்ந்திருக்க, அவள் தொண்டையை கணைத்ததும் அவன் விழித்து என்ன என்று பார்த்தான்.

கயல் போனை அவனிடம் கொடுத்து விட்டு திரும்பியவள் ஏதோ தோன்ற, மீண்டும் ஜீவாவிடம் திரும்பி, திக்கித் திணறி, “நீ நீங்க என்னை உண்மையிலேயே சந்தேகப்படலை தான” என்று கேட்க, அவனுக்கு தான் நெருப்பாய் எரிந்தது..

வேதனையுடன் “சத்தியமா இல்லை” என்று உறுதியாய் சொல்ல, கயல் தயங்கி கொண்டு

“அப்போ, நான் எடுத்து குடுக்குறதை மட்டும் தான் படிக்கணும்…” என்று சொல்ல, ஜீவா, அவளை அமைதியாய் பார்க்க,

கயல், “அதுல பெருசா எந்த விஷயமும் இல்லை அதான்…” என்று சொன்னதும், ஜீவா போனைக் கொடுத்து “நீயே எடுத்து குடு அதை மட்டும் படிக்கிறேன்” என்று சொல்ல, அவள் வாங்கி, ஒரு குறிப்பிட்ட தேதி உரையாடல்களை மட்டும் கொடுத்து படிக்க சொன்னாள்.

அதனை வாங்கி படித்தவனுக்கு அப்படி என்ன என்னிடம் காட்ட முடியாத அளவுக்கு பேசி இருப்பாள்.. என்றவனுக்கு நிச்சயமாய் சந்தேகம் இல்லை. ஒரு கியூரியாசிட்டி தான் இருந்தது.

அவள் சென்றதும், வேகமாக வேற தேதியில் சென்று படித்ததில், இதான் விஷயமா என்று சிறு சிரிப்புடன் இதழ் விரித்தவனுக்கு கார்த்தியின் அன்பில் கண்களும் கலங்கியது.

அதில் இருந்த உரையாடல் இதுதான்.

கயல்: என்னடா பண்ற?
கார்த்தி: சும்மா தான் இருக்கேன். நீ என்ன பண்ற
கயல்: நானும் அதே தான் என்று சொன்னவளுக்கு சில நிமிடம் அவன் ரிப்ளை செய்யாமல் இருக்க, “என்னடா ஆச்சு” என்று கேட்டு அனுப்பி இருந்தாள்.

சில நிமிடங்களுக்கு பிறகு,

கார்த்தி : கயலு, இன்னைக்கு வாசு அண்ணா, என்கிட்ட காலேஜ் பத்தி லாம் பேசுனாரு. என்னை பார்த்து சிரிச்சாரு 😍

கயல் : ம்ஹும் ,விட்டா உன் அண்ணா சிரிச்சதை எல்லாம் ஃபிளாஷ் நியூஸ்ல போடுவ போல 🤭

கார்த்தி: நான் போடுவேன். ஏன்னா வாசு அண்ணா சிரிக்கறதே அபூர்வம்.

கயல் : ஏன் அப்படி?🤔

கார்த்தி: கயலு உன்கிட்ட நான் இதுவரை ஒண்ணு சொன்னதே இல்லை. இப்போ சொல்லவா?

கயல்: சொல்லு

கார்த்தி:  வாசு அண்ணா என் கூட பிறந்த அண்ணா இல்ல☹️

கயல்: வாட்?🙄

கார்த்தி: ஆமா கயலு, நான் வாசு அண்ணா அப்பாவோட ரெண்டாவது மனைவியோட பையன் தான்.வாசு அண்ணாவோட, அம்மாவுக்கும் அப்பாவுக்கும் டைவர்ஸ் ஆகி, அவங்க அம்மா வேற கல்யாணம் பண்ணிகிட்டாங்க. ஆனால் வாசு அண்ணாவை கூட கூட்டிகிட்டு போகமாட்டேன்னு சொல்லிட்டாங்க.

அப்பறம் தான் எங்க அம்மாவை கல்யாணம் பண்ணி நான் பிறந்தேன். ஆனால் எனக்கு அஞ்சு வயசா இருக்கும் போது, என் அம்மா உடம்பு சரி இல்லாம இறந்துட்டாங்க. அன்னைல இருந்து வாசு அண்ணா தான் என்னை நல்லா பார்த்துப்பாங்க. எனக்கு ட்ரெஸ் போட்டு விட,  ஸ்கூலுக்கு அனுப்ப, தலை சீவி விட, எனக்கு பாடம் சொல்லிகுடுக்கன்னு எல்லாமே அண்ணாதான் பண்ணுவாரு.

ஆனால் சிரிக்க மட்டும் மாட்டாரு. பேசவும் மாட்டாரு. கொஞ்ச வருஷத்துல அப்பா ஹார்ட் அட்டாக்ல இறந்து போகவும், அப்போ  இருந்தே, படிக்கவும் செஞ்சுட்டு,  வேலையும் பார்ப்பாரு. அப்பாவோட தொழில் ரொம்ப டௌன்ல இருந்துச்சு, எஸ்டேட்ல சின்ன வயசுல இருந்து வேலை பார்த்து வேலை பார்த்து, அவருதான் ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தாரு.

சரியா ஸ்கூல் காலேஜ்க்குலாம் போகாம, வேலை பார்த்து, என்னை படிக்க வச்சாரு.

ஆனால் அண்ணாவும் நல்லா தான் படிப்பாங்க. அவங்களை வெளிநாட்டுல எல்லாம் கூப்பிட்டாங்க படிக்க…

நான் அப்போ ஸ்கூல் தான் படிச்சுட்டு இருந்தேனா, அண்ணா தான் என்னை தனியா விட்டுட்டு போக முடியாதுன்னு இங்கயே இருந்துட்டாங்க. கோயம்பத்தூர்ல நான் படிக்கிறது கூட நான் ஆசைப்பட்டு கேட்டேன்றானால தான்.🥺

கயல்: உன் அண்ணா கிரேட் இல்ல👏

கார்த்தி : ம்ம் மை அண்ணா இஸ் ஆல்வேஸ் கிரேட் தான்…🤗 அதான் சொல்றேன். நீ என் அண்ணாவை கல்யாணம் பண்ணிக்கோன்னு🙃”
என்று சொல்ல, இவ்வளவு நேரம் அவனின் பேச்சில் உருகி போயிருந்த ஜீவா, இப்போது கண்கள் மின்ன, கயலின் பதிலை ஆர்வமாக பார்த்தான்.

கயல் உனக்கு எத்தனை தடவை டா சொல்றது? இதெல்லாம் செட் ஆகாது. இனிமே இப்படி பேசாத… 😠😠😠😠

கார்த்தி : போ கயலு. அண்ணாவை இதுவரை யாரும் பார்த்துக்கிட்டது கிடையாது. அவருக்கு உடம்பு சரி இல்லைன்னா கூட அவரே தான் பார்த்துப்பாரு. ஆனால் நீ எனக்கே இவ்ளோ பார்த்து பார்த்து எல்லாம் செய்றன்னா, என் அண்ணாவை எப்படி பார்த்துப்ப… அதுக்கு தான் சொல்றேன். நீ தான் கோச்சுக்குற. ☹️☹️☹️☹️

கயல் : சரி சரி மூஞ்சியை அப்படி வைக்காத சகிக்கல. உங்க அண்ணாவுக்கு என்னை விட நல்ல பொண்ணு கிடைப்பா என்று சொல்லி அப்படியே பேச்சை மாற்றி விட்டிருந்தாள்.

ஜீவாவுக்கு தான் ஆச்சர்யமாய் இருந்தது. அவள் கார்த்தியின் மேல் காட்டி இருந்த அக்கறையும், அன்பும் அவனை சிலிர்க்க வைத்தது.

மேலும், கார்த்தி அவள் தான் அண்ணியாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டிருப்பதைக் கண்டவன், அதனை அறியாமலேயே அவனின் ஆசையை நிறைவேற்றியதை கண்டு, இனிமேல் அவள் மட்டுமே உன் அண்ணி என்று நினைத்தவன், உன் ஆசைப்படி உன் அண்ணி இங்க இருக்காடா… ஆனால் நீ நீ… என்று குமுறினான்.

பின், தாய்க்கு நிகராய் இருந்த உறவை, காதல் என்று தாமே கொச்சைப்படுத்தி விட்டோமே, அவள் எவ்வளவு துடித்திருப்பாள்… என்று தன் மேலேயே கோபம் கொண்டவனுக்கு கயலை எப்படி சரி செய்வது என்று ஒன்றும் புரியவில்லை.

பின் முதலில் கார்த்தியை கொலை செய்தவனை கண்டுபிடித்து உண்டு இல்லை என்று ஆக்குவதே முக்கியம் என்று முடிவெடுத்து விட்டு, போனை எடுத்துக் கொண்டு அவள் அறைக்கு சென்றான்.

கயல், இந்த அறைக்கு வரவில்லை என்றால், முந்தைய நாள் போல் தூக்கிக்கொண்டு வந்தாலும் வந்து விடுவான் என்று நினைத்து அவளே இந்த அறைக்கு வந்து விட்டாள்.

அவனைக் கண்டதும் வேகமாக கட்டிலில் இருந்து எழுந்தவளை கண்டவன், போனை அவளிடம் கொடுத்து விட்டு அவளையே ஆழமாய் பார்க்க,

கயல், சந்தேகமாக “நான் எடுத்து கொடுத்ததை மட்டும் தான படிச்சீங்க” என்று கேட்க, ஜீவா, குறும்புடன், “ஆமா ஏன் வேற எதாவது என்னை பத்தி ரகசியம் பேசினீங்களா ரெண்டு பேரும்…” என்று போட்டு வாங்கினான்.

அதில் பதறிய கயல், “இல்லையே இல்ல… அப்படிலாம் இல்ல.” என்று சொன்னதும்,

ஜீவா, “இல்லையா… பட் ஒரு தடவை கார்த்தி என்கிட்ட ஒன்னு சொன்னானே” என்று அவளருகில் வர,

அதில் மிரண்டவள், “எ எ என்ன சொன்னான்…” என்று பின்னே நகர்ந்து கொண்டே கேட்க,

“என் காலேஜ்ல ஒரு பொண்ணு படிக்கிறா. அவளையே கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு சொன்னான்…” என்று சிரிப்பை அடக்கி கொண்டு கூற கயல் அதிர்ந்து அவனைப் பார்த்தாள்.

ஜீவா யோசனையுடன், “அது யாருன்னு எனக்கு தெரியல உனக்கு தெரியுமா கயல்…” என்று ஆழமாய் பார்த்துக் கொண்டு கேட்க,

கயல், அவனைப் பாராமல், “அது அதெல்லாம் எனக்கு தெரியாது. அவன் உங்ககிட்ட சொன்னது எனக்கு எப்படி தெரியும்…” என்று சமாளிக்க,

ஜீவா, “நிஜமா தெரியாதா. சரி முதல்ல, அந்த பொண்ணு யாருன்னு கண்டுபிடிப்போம்” என்று மேலும் நெருங்கி வர, அதில் சுவற்றோடு ஒன்றியவள் “க க கண்டுபிடிச்சு எ எ என்ன பண்ண போறீங்க” என்று பதட்டமாய் கேட்க,

ஜீவா அவளைப் போன்றே “க க கண்டுபிடிச்சு, க க கல்யாணம் பண்ண போறேன்” என்று சொன்னதும், அவளுக்கு அதை கேட்டு அழுகையே வந்து விட்டது.

அவன் அவளை ஏமாற்றி இருந்தாலும், அவனை இவள் காதலித்தது உண்மைதானே.

ஆனால் தன்னை சிறிதும் காதலிக்காமல் திருமணம் செய்து கொண்டது, அவளுக்கு பெரும் வலியை கொடுத்தது.

இதில் இப்பொழுதும், வேறு எவளையோ திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்கிறானே என நினைத்து கோபமும் வர, அதில் அவளுக்கு அந்த பெண்ணே அவள்தானே என்ற எண்ணம் முற்றிலும் மறந்து போனது.

கோபமாக, “அவள் யாருன்னு நான் கண்டுபிடிச்சு தரேன். நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க.” என்று சொல்ல,

ஜீவா, ‘ஹப்பா இப்போவாவது என்ற அம்மணிக்கு  கோபம் வந்துச்சே…’ என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன், “ஓகே கயல்… நீ உன் ஃபிரெண்ட்ஸ்கிட்ட விசாரி யார் அந்த பொண்ணுன்னு சரியா. இப்போ போய் தூங்கு குட் நைட் ஸ்வீட் ஹார்ட்” என்று சொல்ல,

கயல் தான் ‘ஸ்வீட் ஹார்ட்டாம் ஸ்வீட் ஹார்ட்… பிராடு, என்னை ஏமாத்தி கல்யாணம்  பண்ணிட்டு, இப்போ என்கிட்டயே வேற ஒருத்திய கல்யாணம் பண்றேன்னு சொல்றான்’ என்று முணுமுணுத்தவளிடம்,

“குட் நைட் சத்தமா சொல்லணும் ஸ்வீட் ஹார்ட். இப்படி வாய்க்குள்ளேயே சொல்ல கூடாது..” என்று விட்டு, குறும்பு நகையுடன் வெளியில் சென்றான்.

கயல் தான் அதனை எல்லாம் கவனிக்கவே இல்லை. அவளுக்கு கோபம் ஒரு புறமும், அவன் மேல் வைத்த காதலை அவன் உதாசீனப்படுத்தி செய்த அவமானம் ஒரு புறமும் வாட்ட, கண்ணீருடன் உறங்கி விட்டாள்.

அறைக்குச் சென்ற, ஜீவாவிற்கு தான் உறக்கமே வரவில்லை.

புரண்டு புரண்டு படுத்தவன், “சே, என்ன இது… இப்படி படுத்துறா இந்த பொண்ணு.” என்று கடுப்பானவன் அவள் அறைக்கு செல்ல, அங்கு அவள் நன்றாக தூங்குவதை உறுதிபடுத்திக் கொண்டு,

அவளருகில் சென்று,” ஹ்ம்ம்… ஸ்வீட் ஹார்ட்… என் கண்ணு உன் லிப்ஸ டேஸ்ட் பண்ணா தான் தூங்குவேன்னு அடம் பிடிக்கிது… இப்போ நான் என்ன பண்ண ஹ்ம்ம்…?” என்று கேள்வியாய் சிணுங்கி,

“ஷால் ஐ?” என்று அனுமதி கேட்டான். 

அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, ஜீவா சிரிப்புடன், “நீ முழிச்சுருக்குறப்ப கேட்டா, இங்க இருந்து ஓடியே போய்டுவியே. அதான் தூங்கும் போது கேக்குறேன்” என்றபடி, மெல்ல அவள் இதழை ஆக்கிரமித்து விட்டு,  நெற்றியில் குட் நைட் முத்தம் ஒன்றை பதித்து விட்டு உறங்கச் சென்றான்.

மறுநாள், எழுந்த கயலுக்கு தான், உதட்டில் ஏதோ முனுமுனுவென இருந்தது. மேலும் நன்றாக சிவந்து இருந்ததை பார்த்தவள்,

‘ஏன் இப்படி உதடு சிவந்து போயிருக்கு.’ என்று கண்ணாடியில் பார்த்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க, ஜீவா எதேச்சையாய் அங்கே வந்தவன், இவள் செய்வதை சுவாரசியமாய் பார்த்து, அங்கேயே நின்று விட்டான்.

நேசம் தொடரும்..
-மேகா..

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
17
+1
103
+1
6
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்