Loading

பெண்ணவளின் பட்டுக் கரங்கள் பட்டு, தன் கரங்கள் இளகியதோ என்ற புதிர் புரியாதவனாய், நிதானமாகவே அவளின் கரங்களுக்கு விடுதலை அளித்தவன், “சரி சரி… மலை ஏறாத ஆத்தா உக்காரு.” என அவனருகிலேயே அமர வைத்தான்.

குமரனோ, “என்னமோ இந்த அம்மா நம்மள டெத் பாய்ண்ட்ல காப்பாத்துன மாதிரி பேசுது மாப்ள…” என நக்கலடிக்க,

“டேய்… உன்ன கொன்னுடுவேன். வீட்ல செஞ்சு வச்சுருக்குற கறி சோற விட தர்மந்தான் முக்கியம்ன்னு, ஆட்டோக்கு அம்பது ரூபா செலவு பண்ணி போலீஸ் ஸ்டேஷன் வந்து, நாக்கு தள்ள பேசுனா, அதுக்கு ஒரு தேங்க்ஸ் கூட சொல்லல ரெண்டு பேரும். இதுல கிண்டல் பண்றீங்களா… இருங்கடா நானே உங்களை அந்த போலீஸ்ட்ட மாட்டி விடுறேன்” என கோப மூச்சுக்கள் வாங்க பேசியதில் இருவரும் சத்தமாக சிரித்து விட்டனர்.

“சிரிப்ப நிறுத்துடா…” என ஜிஷ்ணுவை அவள் வெட்டவா குத்தவா ரீதியில் முறைக்க, அவன் வாய்க்குள் சிரிப்பை அடக்க முயன்று தோற்று மீண்டும் பீறிட்டு சிரித்தான்.

குமரன் கூட ஒரு கட்டத்தில் நிறுத்தி விட, ஜிஷ்ணு நிறுத்தவே இல்லை. அதில் வெறியான பெண்ணவள், “எதுக்கு சிரிக்கிறன்னு சொல்லிட்டாவது சிரிடா பட்டர்…” என்றாள் அவனை அடித்து.

மூச்சு வாங்க நெஞ்சை தேய்த்து விட்டு, “சிரிக்காம என்னடி பண்ண சொல்ற… ஏற்கனவே அந்த ஆளுக்கும் எங்களுக்கும் வாய்க்கா தகராறு. நீ வராம இருந்துருந்தா என் அப்பாவே கட்சி ஆளுங்கள விட்டு பேசி விட சொல்லி இருப்பாரு. நீ என்னன்னா போய் கறி சோற சாப்டாம, தர்மம் முக்கியம்ன்னு வந்து அந்த ஆளை ஏத்தி விட்டுட்ட. அவன் சும்மாவே என் படிப்ப எப்படி கெடுக்கலாம்ன்னு பாத்துட்டு இருக்கான். இதுல கூட கொஞ்சம் வெறி ஆகி இருப்பான். இதுல இவளுக்கு தேங்க்ஸ் வேற சொல்லணுமாம்… மொகர கட்டைய பாரு…” என கையை அவள் முகத்திற்கு நேராக நீட்டி அதட்டிட கூடவே இன்னும் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.

அவள் தான் ‘பே’ வென விழித்தாள். ‘இவனுக்காக ரிஸ்க் எடுத்து ஹெல்ப் பண்ணுனா, நம் வாதங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே…’ என நொந்தவள், “அடப்பாவி…! இந்நேரம் நான் பேசுன டயலாக்ஸ கோர்ட்ல பேசி இருந்தா, வக்கீல் ஃபீஸ் ஆவது கிடைச்சு இருக்கும்.” என இதழ் சுளிக்க, மேலும் அங்கு சிரிப்பலை பரவியது.

பின், வகுப்பிற்கு தாமதமானதில் அங்கு சென்று குமரன் மீண்டும் அவன் உறக்கத்தை தொடர, ஜிஷ்ணு, வசுந்தராவின் இதழ்கள் ஏனோ புன்னகையின் உறைவிடமாக திகழ்ந்தது.

வகுப்பு முடிந்ததும், வசுந்தரா தன் பையை எடுத்துக்கொண்டு கிளம்ப, ஜிஷ்ணு “வசு” என அவளை அழைத்தான்.

அதில் நின்று  திரும்பியவள், என்னவென பார்க்க, மந்தகாச புன்னகை ஒன்றை வீசியவன், “தேங்க்ஸ்…” என்றான் மென்மையாக.

“இப்பவாவது கேட்கணும்ன்னு தோணுச்சே. யூ ஆர் வெல்கம்…” என்றாள் பிகு செய்தபடி.

குமரன் தான், “அதெல்லாம் விடு. நீ ஏன் இவ்ளோ  வருஷம் சென்னைல படிச்ச? அதுக்கு பதிலே சொல்லல?” என ஆரம்பிக்க, “தூங்கி எந்திரிச்சு விட்ட இடத்துல இருந்து ஆரம்பிக்கிறான் வசு இவன்…” என்று ஜிஷ்ணு கிண்டலடித்ததில், லேசாக சிரித்தவள் பதில் பேசாமல், வகுப்பைத் தாண்டி நடந்தாள்.

அவள் பின்னே அவர்களும் வர, “என் சித்தப்பா சித்திக்கு குழந்தை இல்ல. எனக்கு மூணு வயசா இருக்கும் போது, என் அண்ணனுக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்லாம போய்டுச்சு. அம்மாவால என்னையும் அவனையும் ஒரே நேரத்துல பாக்க முடியல. அப்போ தான் என் டாடி, அதான் என் சித்தப்பா என்னை அவரே வளக்குறதா அப்பாட்ட கேட்க, தம்பி மேல ரொம்ப பாசம் வைச்சுருக்குறனால அப்பாவும் சரின்னு சொல்லிட்டாரு.

அதுக்கு அப்பறம், மம்மியும் டேடியும் என்னை கூட்டிட்டு சென்னை போய்ட்டாங்க.” என கூறி முடித்திட, “இருந்தாலும், இப்படி ஒரு ஜீவன் இந்த ஊருன்றதை நம்ப முடியாத மாதிரி இருக்கியே… திருவிழாக்கு கூட நீ வந்தது இல்லையா?” எனக் கேட்டான் குமரன்.

அவளோ குமரனை முறைத்து, “லூசாடா நீ. அப்படி நான் வந்துருந்தா உங்களை தான் பாத்துருப்பேனே. சின்ன வயசுல லீவ் நாள்ல ஒரு நாலஞ்சு நாள் வந்துட்டு போவேன். அப்பறம், ஸ்கூல், படிப்புன்னு போய்டுச்சு. ஆனா, காலேஜ் சேர்ந்ததும் கண்டிப்பா ஒரு மாசமாச்சு நம்ம ஊர்ல இருந்து, நானும் இந்த ஊரு தான்னு ரெஜிஸ்டர் பண்ணலாம்ன்னு பிளான் பண்ணேன்…” என்றவளின் குரல் சட்டென தாழ்ந்திட,

“அந்த நேரத்துல அதான், மம்மிக்கு கேன்சர்ன்னு தெரிஞ்சுது. அடுத்த மூணு வருஷம் ட்ரீட்மெண்ட், ஹாஸ்பிடல்ன்னு போயிடுச்சு. சோ நான் ஊருக்கு வரவே இல்ல. அப்பாவும் அம்மாவும் தான் என்னை வந்து பார்த்துட்டு போவாங்க. மூணு மாசம் முன்னாடி, மம்மி இறந்துட்டாங்க. டேடிக்கு அவங்க இழப்ப டாலரேட் பண்ணவே முடியல. அதான், அவங்களை மனசு மாற, எங்கயாவது ட்ரிப் போயிட்டு வர சொன்னேன். அவர்க்கும் வேலை விசயமா பெங்களூர் போக வேண்டியது இருந்துச்சு. எப்பவும் அப்படி போகும் போது நானும் மம்மியும் வீட்ல இருப்போம். அதான் டாடி என்னை தனியா விட்டுட்டு போக யோசிச்சாங்க.   
அப்பறம் அப்பாவும், அம்மாவும் இனிமே அங்க இருக்க வேணாம்ன்னு வற்புறுத்தி இங்கயே வர வைச்சுட்டாங்க.” என நீண்ட பெருமூச்சு விட்டாள்.

அவள் கண்களில் மிதந்த சோகம், ஜிஷ்ணுவையும் சிறிது தாக்க, குமரனோ “சாரிப்பா. தேவை இல்லாம பழசை கிளறிட்டேனா?” என வருத்தம் கொள்ள,

“ப்ச்…” என கண் சிமிட்டியவள், “ஸ்ஸ்ஸ்… ராதி வெய்ட் பண்ணிட்டு இருப்பா குமரா. நான் கிளம்புறேன் பை” என நினைவு வந்தவளாக வேகமாக கல்லூரி வாசலை நோக்கி சென்றாள்.

அதன் பிறகு, வந்த நாட்களில் மூவரின் நட்பும் ஒன்றாக உணவு உண்பதும், ஒருவரை ஒருவர் வாரிக்கொள்வதும் என நன்றாகவே சென்றது.

கல்லூரி ஊரை விட்டு தள்ளி இருப்பதால், இரு பெண்களையும் பேருந்தில் ஏற்றி விட்டு தான் கிளம்புவர் ஆடவர்கள். அன்று ஜிஷ்ணு சற்று தள்ளி அலைபேசியில் யாருடனோ தீவிர உரையாடலில் இருக்க, வசுந்தரா அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு, குமரனிடம் “நீங்க ஏண்டா எங்க கூட பாடிகார்டா வர்றீங்க?” என சலிக்க,

“என்ன இருந்தாலும் எங்க க்ளாஸ்ல படிக்கிற ஒத்த பொம்பள புள்ள நீ. உன்ன கண்ணும் கருத்துமா பார்த்துக்கணும்ல…” என வராத கண்ணீரை  துடைத்துக்கொள்ள,

“ப்பா… சிலிர்க்குது!” என சிலாகித்துக்கொண்ட வசுந்தரா, “ஓவர் பெர்ஃபார்மன்ஸ் உடம்புக்கு ஆகாது கும்பகர்ணா” என நமுட்டு சிரிப்பு சிரித்து அவன் முறைப்பை பரிசாக பெற்றுக்கொண்டாள்.

“அதென்ன தாரா, கும்பகர்ணா?” ராதிகா புரியாமல் கேட்க,

குமரனோ, “சப்ஜெக்ட்ல சந்தேகம்லாம் உடனே கேட்காதீங்க. இதுக்கு மட்டும் வரிஞ்சு கட்டிட்டு வந்துடுங்க.” என்றதில், ராதிகா, “நான் படிக்கிறது பயாலஜி குமரா. அதுக்கு எப்படி உங்ககிட்ட டவுட்டு கேட்க…?” என கெக்க பெக்க வென சிரிக்க,

வசுந்தரா, “இந்த அவமானம் வருங்கால வக்கீலுக்கு தேவையாடா?” என்றாள் சிரிப்புடன்.

அவன் தான் அதனை தூசியாக தள்ளி விட்டு, “இப்ப எனக்கு ஒரு சந்தேகம்…” என நிறுத்த, இரு பெண்களும் என்னவென பார்த்தனர்.

“உன் பேரு வசுந்தரா தான. அதென்ன, தாரான்னு கூப்புடுறாங்க?” என்றதில், “அதுவா, என் பாட்டி பேரு வசுந்தரா. அதை எனக்கு வைச்சதும் மாமியார் பேரை எப்படி கூப்பிடன்னு அம்மா ஃபீல் பண்ண, அம்மா பேரை எப்படி கூப்பிடன்னு அப்பா தடுமாற அதனால வசுன்னு கூப்டாம தாரான்னு கூப்பிடுவாங்க” என்ற விளக்கத்தை கேட்டபடியே அவளருகில் வந்த ஜிஷ்ணு,

“இவகிட்ட ஏன் மாப்ள சந்தேகம்லாம் கேக்குற. ஒவ்வொன்னுக்கும் ஒவ்வொரு பிளாஷ்பேக் வைச்சுருப்பா…” என குமரனை கடிவது போல, அவளை கேலி செய்ய, அவள் வெறியாகி விட்டாள்.

குமரனும், ராதிகாவும் வெடித்து சிரிக்க, கோப மூச்சுக்கள் விட்டபடி, ஜிஷ்ணுவை படபடவென அடித்தாள்.

“எப்ப பாரு… கை நீட்டிட்டே இருக்காதடி ராட்சசி.” என அவள் கையை பிடித்து அவன் அதட்ட,

“அதை நீ சொல்றியாடா ரௌடி. நேத்து பஸ்ல போகும் போது பார்த்தேன் நீ எவனையோ கும்முனத, யாருடா அவன்…?” என இரு புருவத்தையும் உயர்த்தி கேட்க,

“அவன விடு… வேற ஏதாவது பிளாஸ்பேக் இருந்தா சொல்லு கேட்போம்…” என்று கதை கேட்கத் தயாராவது போல பேருந்து நிலைய திண்டின் மீது ஏறி அமர்ந்தான் வாகாக.

“அடேய்…!” என அவள் இடுப்பில் கை வைத்து முறைக்க, அவளின் சண்டையை தடை செய்யும் விதமாக பேருந்தும் வந்தது.

“பஸ் வந்துருச்சு… கிளம்பு முதல்ல” என்று அவன் அவளை விரட்ட, அவனுக்கு அழகு காட்டியவள், “ஆமா, நீங்க ரெண்டு பேரும் வரல. எப்படா வீட்டுக்கு போவீங்க?” என்றாள் யோசனையாக.

குமரனோ, “இந்த பஸ் கன்னிமனூர் போகாதுப்பா. 6.30க்கு தான் வரும். அதுவும் ஒரே பஸ். விட்டா, பொடி நட தான்” என்றதில், அவள் திகைத்து, “என்னடா சொல்ற?” என வினவி விட்டு, பின் “ஹே… நீங்க கன்னிமனூரா?” என்றாள் விழி விரித்து.

ராதிகா தான், “அடிப்பாவி. அதுவே உனக்கு தெரியாதா?” என்று தலையில் அடிக்க, “இவன் என்கிட்ட சொல்லவே இல்ல…” என்றாள் ஜிஷ்ணுவை முறைத்து.

அவள் முறைப்பில் அவனும் முறைத்து, “நீ கேட்கவே இல்லையே” என்றான் தோளை குலுக்கி.

“மூஞ்ச பாரு…!” என்று அவனை திட்டியவள், ஆர்வத்துடன், “டேய் டேய்… நான் கன்னிமனூர் பத்தி சின்ன வயசுல நிறைய கேள்வி பட்டு இருக்கேன். அங்க சீனரீஸ் எல்லாம் சூப்பரா இருக்குமாம்ல. நான் இதுவரை போனதே இல்ல. என்னை கூட்டிட்டு போடா” என்று பல்லைக்காட்டி கேட்டாள்.

அவனோ அவளை ஒரு மாதிரியாக பார்த்து, “கன்னிமனூர் என்ன கன்னிமரா லைப்ரரியாடி சுத்தி பார்க்க? நீ எதிர்பார்க்கிற அளவுலாம் அங்க ஒண்ணும் இல்ல. விவசாய நிலம் நெறய இருக்கும். மலை அடிவாரம் அம்புட்டு தான்…” என்றான் அசட்டையாக.

“ப்ச்… நீ அங்கேயே இருக்குறனால உனக்கு அது பெருசா தெரியல. நான் ஊரை சுத்தி பார்க்கணும். என்னை கூட்டிட்டு போவியா மாட்டியா?” என்று கிட்டத்தட்ட மிரட்டிட,

“கூட்டிட்டு போவ முடியாது போடி…” என்று விட்டு, அவன் சாவகாசமாக வேடிக்கை பார்க்க,

“சரி… நானே வந்துக்குறேன்! கன்னிமனூர் என்ன உன் அப்பா வீட்டு சொத்தா… உன் பெர்மிஷனோட வர்றதுக்கு.” என ஏளனம் புரிந்ததில், அவன் முறைத்தான்.

அதனை கண்டுகொள்ளாது, அவள் அடுத்து வந்த பேருந்தில் ஏறிட, தலையை அழுந்தக் கோதிக்கொண்ட ஜிஷ்ணு தான், ‘இம்சை புடிச்சவ…’ என வாய்க்குள் அவளை திட்டிக்கொண்டு,

“ஏய்… உன் வீட்ல சொல்லிட்டு பஸ் ஸ்டாண்ட் வா. நானே வந்து கூட்டிட்டு போறேன். நீயா வழி தெரியாம எங்கயும் போய் தொலைஞ்சுடாத.” என்று அழுத்தமாக எச்சரித்ததில், “போடா என் டொமேட்டோ…” என்று எகத்தாளமாக கூறி விட்டு, ஜன்னல் பக்கத்தில் அமர்ந்தவள், ஜிஷ்ணுவின் தீப்பார்வை கண்டு,

“இந்த முறைப்ப எல்லாம் வேற எவட்டயாவது வச்சுக்கோ…. கண்ண நோண்டிடுவேன்!” என விரல்களை கண்களை குத்துவது போன்ற அபிநயத்துடன் கூறியவள், “நாளைக்கு காலைல பத்து மணிக்கு பஸ் ஸ்டாண்ட்ல மீட் பண்ணலாம்.” என்ற உத்தரவுடன் பேருந்தும் கிளம்பியது.

குமரன் தான் நமுட்டு சிரிப்புடன், “இவள் என்ன டிசைன்னே தெரியல மாப்ள” என்றிட, அவனும் அப்பேருந்து சென்ற திசையிலேயே விழியை பதித்து, அவள் பேசி சென்ற தோரணையில் அழகாய் புன்னகை பூத்தான். ‘திமிரெடுத்தவ… என் உசுர வாங்குறா’ என்று வஞ்சித்தாலும், அதையே ரசித்தும் தொலைத்தது மனது.

ராதிகா தான், “நீ என்ன புள்ள, அவனை இந்த பேச்சு பேசுற. அவன் வீட்ல கூட அவனை ரொம்ப மரியாதையா தான் பேசுவாக. அமைச்சரு கூடவே தான் இருப்பான் இவன். அதனால, இவனுக்கு ஊர்ல எல்லாரும் கொஞ்சம் பயப்படுவாக. அது மட்டும் இல்ல, யாரா இருந்தாலும் சட்டுன்னு அடிச்சுப்புடுவான். ஒவ்வொரு திருவிழாக்கும், அடிதடி சண்டை தான் நடக்கும். இவனுக்கு பயந்துகிட்டு, உள்ளூருல எவனும், இவன்கிட்ட வம்பு வளர்க்க மாட்டான். வெளியூர்க்காரன் சிக்குனா தான் உண்டு. அதுலயும், கட்சிக்காக எவனையாவது அடிக்கணும்ன்னா, அமைச்சர் இவன தான் கூப்பிடுவாராம். என் அப்பா சொல்லி கேட்டுருக்கேன்.” என்று கூறிட,

அதனை அசுவாரஸ்யத்துடன் கேட்டுக்கொண்டவள், “பார்ட் டைம் அடியாள்ன்னு சொல்லு…!” என்று கேலி செய்து ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்க,

ராதிகாவோ, “நீ பாட்டுக்கு ஊருக்கு வரேன்னு சொல்லிட்டு இருக்க. மொதோ மாமா உன்ன விடுவாரா தாரா? ஏற்கனவே, ரெண்டு ஊருக்கும் கொஞ்சம் சரி இல்ல” என்றாள் தயங்கியபடி.

அதில் திரும்பிய வசுந்தரா “என்ன சரி இல்ல” என்றாள் புரியாமல்.

“அதுவா… எல்லாம் இந்த காதல் பிரச்சனை தான் புள்ள. நம்மூரு பொண்ணு, அவன் ஊரு பையனை விரும்பி இருக்கா. இது வீட்டுக்கு தெரிஞ்சு, அந்த புள்ள அவனோட ஓட போறேன்னு கடுதாசி எழுதி வைச்சுட்டு போயிடுச்சு. ஆனா, அந்த பையன் ‘எனக்கு தெரியாது. அவள் என்கூடவே வரல’ன்னு சொல்ல… இந்த பிரச்சனை பெருசாகி, கொஞ்சம் ஜாதி கலவரத்தையும் தூண்டிடுச்சு. அதுலருந்து, நம்மூரு பொண்ணுங்கள, கன்னிமனூர் பசங்களோட பேசுறதை கூட தப்பா பேச ஆரம்புச்சுட்டாக. அதான் தர்மாவும் உன்ன வரவேணாம்ன்னு சொல்றான் போல.” என்று பேசி முடிக்க,

வசுந்தராவிடம் இருந்து “ஓ” என்ற ஓசையை தவிர வேறு எதுவும் வரவில்லை.

“நீ மட்டும் அவனுங்களோட நல்லா தான பேசுற?” அவள் கேள்வியாய் பார்க்க,

“இந்தாரு புள்ள, ஏதோ நீ பேசுறனால நானும் பேசுறேன். எனக்கும் எல்லாரு கூடவும் பேசணும்ன்னு ஆச தான். மத்த விசயத்துல தர்மா தப்பானவனாவே இருந்தாலும், பொண்ணுங்க விசயத்துல இதுவரை அவனை ஒரு தப்பு கூட சொல்ல முடியாது. குமரனும் அப்படி தான். அதுனால தான், நீ பேசுறப்ப நான் ஒண்ணும் சொல்லல. ஆனா, கொஞ்சம் கவனமாவே இரு தாரா.” என்று எச்சரிக்கையும் செய்தாள்.

அனைத்தையும் அசை போட்ட வசுந்தரா, நேராக ராஜசேகரின் முன் நின்றாள்.

“அப்பா… நீங்க ஜாதி தலைவருன்னு எனக்கு எந்த பெருமையும் கிடையாது. ஆனா, நான் ஒவ்வொரு தடவ கேட்கும் போதும், ‘ஜாதி வைச்சு நமக்குள்ள எந்த பிரிவினையும் இருக்காது, எல்லாருக்கும் நல்லது தான் செய்றேன். கன்னிமனூர்க்கு உட்பட’ன்னு சொல்லி இருக்கீங்க? ஆனா, நடக்குறத பார்த்தா அப்படி தெரியலயேப்பா.” என்று இடுப்பில் கை வைத்து கேட்க,

அவரோ முதலில் விழித்து, பின் சிரித்தார். “இப்ப எதுக்கும்மா உனக்கு இப்படியொரு சந்தேகம்?” எனக் கேட்க,

“எனக்கு பதில் வேணும். ரெண்டு ஊருக்கும் என்ன பிரச்சனை? காதல் தான் பிரச்சனைன்னா, அதை காதலாவே முடிக்காம அதுல ஏன் ஜாதிய கொண்டு வந்தீங்க…” என்றாள் முறைப்பாக.

அவரோ, “நான் இப்பவும் சொல்றேன் தாராம்மா. நாங்க எங்களால முடிஞ்ச அளவு, இந்த சுற்றுவட்டாரத்துல இருக்குற எல்லாருக்கும், ஏன் கன்னிமனூர்க்கும் சேர்த்து எல்லா உதவியும் பண்ணிட்டு தான் இருக்கோம். விவசாயத்துக்கு தண்ணி விடுறது இருந்து, கரெண்ட்க்கு கவர்மெண்ட்கிட்ட மனு குடுக்குற வரை, எல்லாருக்கும் ஒரே மாதிரி தான் செய்றோம். ஆனா, ஊர் வாய நம்மளால மூட முடியாதும்மா. பல காலமா சாதில ஊறிப்போன மனுசங்க. என்னதான் திடீர்னு சாதி முக்கியம் இல்லன்னு மாறினாலும், குரங்கு புத்தி சின்ன பிரச்சனைக்கும் அந்த சாதியை தான் கையில எடுக்கும்.

அந்த மாதிரி பிரச்சன தான், இங்கயும். யாரோ ஏதோ பேச போக, அது கடைசில சாதி தலைவர் நீங்க தான. உங்களால தான் பிரச்சனைன்னு வந்து முடிஞ்சுருச்சு. காணாம போன பொண்ணையும் இன்னைக்கு வரைக்கும் காணோம்மா. பொண்ணை பறிகொடுத்த பெத்தவங்ககிட்ட போய் நான் என்னன்னு சொல்ல சொல்லு…? இது புரியாம, அந்த ஊரு பசங்க தான் தேவை இல்லாம, இங்க வந்து வம்பு வளர்க்குறதும், முறைக்குறதுமா இருக்கானுங்க.” என்றவர் சலித்துக் கொண்டார்.

“அவனுங்க மட்டுமா முறைக்கிறானுங்க. நீங்களும் அன்னைக்கு ஜிஷ்ணுவ முறைச்சீங்க தான? அவன் என்ன பண்ணான்?” எனப் பார்க்க,

“அவன் என்ன தான் பண்ணல. கட்சி ஆளுங்க கூட சேர்ந்துக்குட்டு அவன் பண்ற அராஜகம் தாங்க முடியல. எப்ப பாரு அடிதடி சண்டைன்னு… அவனுக்கு எப்பவும் அரசியல் மேல ஆச. அதான், அடுத்த எலக்ஷன்ல எம். எல். ஏ வா நிக்க போறதுக்கு இப்ப இருந்தே எல்லாரையும் கை குள்ள போடுறான். உங்கிட்ட அவன் பேசுறது கூட உன் ஓட்டுக்கு தான். நீ தான் அத புருஞ்சுக்காம அந்த பயலுக கூட சகவாசம் வச்சுருக்க. ஆனா, வார்டு கவுன்சிலர் பதவி கூட அவனுங்க குடுக்க மாட்டானுங்கன்னு அவனுக்கு தெரியல. நாயடி பட்டுட்டு வருவான்ல அப்ப தெரியும்” என போகிற போக்கில் சாபமிட,

அவள் அதனை தவிர்த்து, “ப்ச், அதை விடுங்க. இனிமே ஜாதின்னு பிரச்சனை வராம, பார்த்துக்க வேண்டியது உங்க பொறுப்புப்பா. அப்போ தான் நீங்க இருக்குற பதவியை நினைச்சு நான் பெருமைப்படுவேன். முதல்ல, அந்த ஊரு பசங்களை பிரிச்சு பார்க்காம சாதாரணமா இருங்க. அந்த ஊருக்கு நம்ம ஊரு பொண்ணுங்க போனா கூட, கண்டதை பேசாம இருந்தாலே போதும்” என்றதில்,

ராஜசேகர், “யாரு சொன்னது இதெல்லாம். அப்படியெல்லாம் இல்லையேம்மா” என்று வேகமாக கூற,

“ஓ… அப்போ அந்த ஊருக்கு போனா எந்த பிரச்சனையும் இல்ல அப்படி தான?” அவள் விழி உயர்த்தி கேட்க, “இல்லைம்மா. அப்படி எல்லாம் நான் பிரிச்சு பார்த்தா, அந்த தர்மா பய கூட நீ பேசுற அன்னைக்கே உன்ன கண்டிச்சு இருப்பேனே.” என்றார்.

“அப்ப சரிப்பா. நாளைக்கு, நான் கன்னிமனூர் போக போறேன். ஜிஷ்ணு தான் கூட்டிட்டு போறேன்னு சொல்லிருக்கான். போயிட்டு வந்துடுறேன்.” என்று போகிற போக்கில் கூறிட அவர் விழித்தார்.

“என்னப்பா முழிக்கிறீங்க? இப்ப தான எந்த பிரச்னையும் இல்லைன்னு சொன்னீங்க” என்று அவரை மடக்க, எச்சிலை விழுங்கியவர், “இல்ல தான். ஆனா, நீ ஏன்மா அங்க போகணும். நானே உன்ன கூட்டிட்டு போறேன்” என்று அவர் சரணடைய, “பரவாயில்லப்பா. நான் ஜிஷ்ணு கூட பத்திரமா போயிட்டு பத்திரமா வந்துடுவேன்.”       
என நல்ல பிள்ளையாக கூறியதில், அவரால் தான் அவளை அதட்டவும் இயலவில்லை.

பின்னே, பலவருடங்கள் கழித்து ஊருக்கு வந்தவளை, அதிலும் எப்போதும் நியாயமாக பேசுபவளை அவரால் எதுவும் சொல்ல இயலாது போயிற்று.

மறுநாள், மரகதத்தின் அதட்டலைப் பொருட்படுத்தாமல், பேருந்து நிலையத்திற்கு சென்றவள், அவளுக்கு முன்பு ஜிஷ்ணு நின்றிருந்ததைக் கண்டு விட்டு, “என்ன அரசியல்வாதி அடியாளே… சீக்கிரமே வந்துட்டீங்க போல” என்றாள் ஒற்றைப் புருவம் உயர்த்தி.

அவனோ, கண்ணை சுருக்கி ஒரு பார்வை பார்த்து விட்டு, “என்னை பத்தி பயங்கரமா விசாரிச்சுருப்ப போல?” என்றான் தீர்க்கமான விழிகளுடன்.

“நான் ஏண்டா விசாரிக்கணும். உன் பேர சொன்னாலே, எல்லாரும் பத்து பக்கத்துக்கு குற்ற பத்திரிக்கை வாசிக்கிறாங்களே.” என நக்கல் நகையுடன் கூறியவளை, அவனும் சிரிப்புடன் ஏறிட்டு, “அதெல்லாம் கேட்டுமா, ஊருக்கு வரேன்னு அடம்பிடிக்கிற…?” என்றான் அவளை அளந்தபடி.

“என்ன பண்றது ஃப்ரெண்டா போய்ட்ட.” என அவள் கூறும் போதே, ஜீப் ஒன்று, பின்னாலேயே அதி வேகத்தில் அவளை இடிப்பது போல வர, அதனை நொடியில் கண்டுகொண்ட ஜிஷ்ணு சரட்டென அவளை இழுத்து தன்னுடன் இருத்திக்கொண்டான்.

அவனின் அணைப்பில் சற்று திகைத்தவள், கோபத்துடன் நிமிர, அதன் பிறகே, ஜீப்பையும் அதில் வஞ்ச முகத்துடன் அமர்ந்திருந்த சங்கரையும் கண்டு நிலை உணர்ந்தவள், ஜிஷ்ணுவை இறுக்கி பிடித்துக்கொள்ள, அதை விட அவன் பிடி இன்னும் இறுகியது.

ஆத்திரத்தில் நரம்பு புடைக்க, அவளை விட்டு விட்டு, சங்கரை நோக்கி செல்ல போக, வசுந்தரா அவனைத் தடுத்தாள். “வேணா ஜிஷ்ணு விடு.” என்றிட, அவன் கையை உதறிவிட்டு மேலும் முன்னேற, “ப்ச், ஜிஷு சொன்னா கேளு. வேணாம் வா. பஸ் வந்துடுச்சு. வாடா.” என அவனை இழுக்க இயலாமல் இழுத்துக்கொண்டு பேருந்தில் ஏற்ற, சங்கர் நக்கல் சிரிப்புடன் அவனை பார்த்தார்.

ஜிஷ்ணுவுக்கு கோபம் அடங்காமல், “அவனை ஏண்டி விட சொன்ன? இன்னைக்கு அவனை பிரிச்சு மேஞ்சு சாவடிச்சுருப்பேன். உன் மேலயே ஜீப்பை ஏத்த வர்றான். வேடிக்கை டாஷ் பார்க்க சொல்றியா?” கிட்டத்தட்ட கர்ஜித்தவனின் நிஜ கோபத்தை அப்போது தான் கண்டாள் பெண்ணவள்.

சினத்தில், எதிரில் இருந்த பேருந்து சீட்டை காலால் எத்த, அதில் நட்டு கழன்று சீட்டும் ஆடியது. நல்லவேளையாக பேருந்தில் யாரும் இல்லாததோடு, நடத்துனருக்கும் அவனை தெரியும் என்றதால், நாசுக்காக முன்னால் சென்று விட,

“டேய்… சீட்டை உடைச்சுடாதடா. கவர்மெண்ட் ப்ராப்பர்டி.” என்று அந்நிலையிலும் நக்கலடித்தவளை பார்வையால் ஏரித்தான்.

அவன் கோபத்தை உணர்ந்தவள், “கூல் ஜிஷு. அவன் போலீஸ் யூனிஃபார்ம்ல இருக்கான். வேணும்ன்னே உங்கிட்ட பிரச்சனை பண்ணி, உன்ன உள்ள தூக்கி போட பாக்குறான். நீ தான சொன்ன உன் படிப்பை அவன் கெடுக்க பாக்குறான்னு. இப்ப வெட்டி கோபத்துனால, அதை நீயே அழிச்சுக்க போறியா?” நேராய் நிமிர்வுடன் அவள் கேட்ட கேள்வி, அவன் கோபத்தை சற்று தணித்தது.

“இங்க பாரு… உனக்கு அரசியல்வாதி ஆகணும்ன்னா ஆகிக்கோ. அதுக்கு படிப்பு தேவை இல்ல தான். ஆனா, படிச்சவன் அரசியலுக்கு வந்தா, என்னலாம் மாறும்ன்னு உன்னால நிரூபிக்க முடியும். அதுக்கு நீ படிக்கணும்.

அதுவும் கருப்பு கோர்ட்டு போட்டவன், அரசியல்லயும் இருந்தா, சட்டத்துல இருக்குற ஓட்டையை கண்டுபிடிச்சு அத அழிக்கவும் முடியும். அதுக்கு உன் படிப்பு ரொம்ப ரொம்ப முக்கியம். நீ எதுக்காக லா படிக்க வந்தன்னு எனக்கு தெரியாது. அமைச்சருக்கு அடியாளு வேலை பார்க்க சட்டம் படிக்கணும்ன்னு அவசியமும் கிடையாது. பட் யூ ஹேவ் யுவர் ஓன் பிளான். அதை நான் மதிக்கிறேன். ஆனா, கருப்பு கோர்ட்டு முக்கியம் அடியாளே. முக்கியமா எனக்கு ப்ரெண்டா இருக்கணும்ன்னா… அது ரொம்ப ரொம்ப முக்கியம்… ” என்று அவனை ஊக்குவிப்பதோடு ஆரம்பித்து, படிப்பை நிறுத்தினால், என்னுடனான உறவையும் துண்டித்து கொள்ள வேண்டியது இருக்கும் என்று மறைமுகமாக எச்சரிக்கையும் விடுத்தாள்.

ஜிஷ்ணு தர்மனின் கோபம் மின்னும் முகம், இப்போது ரசனையை தத்தெடுத்து இருக்க, அவள் பேசியதில் வியப்புடன் விழி விரித்தவன், இறுதி வாக்கியத்தில் கேலி நகை புரிந்தான்.

“என்னடி மிரட்டுறியா?” கீழ்க்கண்ணால் அவள் விழிகளுக்குள் செல்ல முயல,

“ஆமா, மிரட்டுறேன். ஏன் அடியாளுங்க மட்டும் தான் இதெல்லாம் பண்ணனுமா? நாங்களும் பண்ணுவோம்.” என்றவள், “இருந்தாலும் என்னையவே ஜீப் வச்சு ஏத்த வந்தான்ல அவனை ஏதாச்சு பண்ணனும்.” என்றாள் தீவிர சிந்தனையுடன்.

“ம்ம்க்கும். நாலு மிதி மிதிச்சுருப்பேன். இழுத்துட்டு வந்துட்டு, இப்ப பேசுறா பேச்சு…” அவன் எரிச்சலாக கூற,

நன்றாக அவன் புறம் திரும்பி அமர்ந்து, “போலீஸ் யூனிபார்ம்ல இருக்கும் போது தான் அவனை ஒண்ணும் பண்ணவேணாம்ன்னு சொன்னேன். வீட்டுல அவன் மஃப்டில தான இருப்பான். நைட்டு தூங்கிட்டு இருக்கும் போது மூஞ்சில போர்வையை வச்சு மூடி, கட்டையாலயே நாலு சாத்து சாத்தணும்.” என பல்லைக்கடித்து கோபத்துடன் கூறியவளைக் கண்டு வாய் விட்டு சிரித்து விட்டான்.

“அதுக்கென்ன, சிறப்பா செஞ்சுடலாம் பேப்” என அவன் கண்சிமிட்ட, அவ்வழைப்பிலும், அவன் பார்வையிலும் லேசாக தடுமாறியவள், மறுபுறம் திரும்பிக்கொண்டாள் படபடத்த மனதுடன்.

கன்னிமனூரினுள் நுழைந்து, சுற்றிலும் பசுமை போர்த்திய நிலங்களை ரசித்துப் பார்த்தவள், தூரத்தில் தெரிந்த மலைகளையும் ரசிக்க, “ஜிஷு ஜிஷு அந்த மலைக்கு போலாம்டா” என்றதில்,

“அந்த மலைல உன்னால ஏற முடியாது வசு. அப்படி போகணும்ன்னா, காலங்காத்தால விடிஞ்சதும் ஏறணும், மேல ஒரு சின்ன கோவில் கூட இருக்கு.” என்றவனுக்கு அங்கு அவளையும் அழைத்து செல்ல பேராவல் எழுந்தது.

“ப்ச், அப்போ என்னை காலைலயே கூட்டிட்டு வந்துருக்கலாம்ல?” என சிணுங்கியவள் உதட்டைப் பிதுக்கிட, “அம்மா உனக்காக சமைச்சு வச்சுருக்காங்க வசு. இன்னொரு நாள் கண்டிப்பா உன்ன கூட்டிட்டு போறேன் சரியா?” என தலையை ஆட்டி அவளை சமாதானம் செய்ததில்,

“ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்… இப்ப போலாம் ஜிஷு…! அட்லீஸ்ட் கொஞ்ச தூரம் போயிட்டு திரும்பி வந்துடலாம்.” என அவன் கையை பிடித்துத் தொங்கிட, “உன்ன வச்சுட்டு சமாளிக்க முடியலடி…” என்றான் தலையில் அடித்து.

நாக்கை துருக்கியவள், “இதுக்கேவா? இன்னும் ரெண்டு வருஷம் தாக்கு பிடிக்கணுமே…?” என அவள் நாடியை தடவி யோசனையாகக் கேட்க, ஜிஷ்ணு தான், மேலே பார்த்து “அந்த கடவுள் தான் என்மேல கருணை காட்டணும்” என்றான் பாவமாக.

அதில் அவள் அவனை அடிக்க வர, அவன் அவளிடம் சிக்காமல் ஓடினான் அந்த மலையை நோக்கி.

அவளிடம் சில அடிகளை வாங்கியவன், “ஒரு மணி நேரம் தான். அதுக்குள்ளே கொஞ்ச தூரம் நடந்துட்டு திரும்பி வந்துடணும்” என்ற கட்டளையுடன் அவளை அழைத்து செல்ல,

குஷியுடன் நடந்தபடி, “நீ ரொம்ப நல்ல பையன்டா. உன்னை போய் இந்த ஊரு ரௌடி, அடியாளு, தடிமாடு, பொறுக்கின்னு சொல்லுது பாரேன்” என்று தீவிரமாக ஃபீல் செய்தவளைக் கண்டு, மூச்சு வாங்க முறைத்தவன், “இதெல்லாம் ஊர் சொல்லுதா? இல்ல நீ சொல்றியாடி?” என்றதில், திருதிருவென விழித்தாள் வசுந்தரா.

“நான் உன்ன அப்படி சொல்லுவேனா ஜிஷு! யூ ஆர் மை ஸ்வீட் ஃபிரெண்ட்…” என விரல்களை குவித்து கொஞ்சலாகக் கூற, அவ்விரல்களை பிடித்து, அவனுக்கு பின்னால் வளைத்தவன், “நீயும் என் கியூட் பேப்” என கரகரத்த குரலில் கூறினான், அவளின் நெற்றியில் முட்டி.

வெடுக்கென அவனை விட்டு நகர்ந்தவளின், கன்னங்கள் காரணமின்றி சிவந்திருக்க, ஆனால், கண்ணில் திமிருடன் “போ!” என முன்னால் கண் காட்டினாள்.

பின்னங்கழுத்தை அழுந்தக் கோதி, குனிந்து சிரிப்பை அடக்கியபடி ஜிஷ்ணு நடக்க, அவன் நெருங்கியதால், சிலிர்த்து புல்லரித்தக் கரங்களை தடவி விட்டவளுக்கு, மீண்டும் சிலிர்த்து அடங்கியது அவனின் உரசலில்.

தீயோ தென்றலோ அவள்(ன்)
மேகா    

அடுத்த பதிவு சனிக்கிழமை ப்ரெண்ட்ஸ். Share your comments… 💕💕💕💕💕 And thank you soooo much all for ur stickers, ratings, CMnts 💕💕💕🤩🤩🥰🥰

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
20
+1
86
+1
6
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்