Loading

தலையில் கொட்டிய சிப்ஸையும், அக்ஷிதாவையும் மூக்கு விடைக்க முறைத்திருந்தான் சஜித்.

அவளுக்கோ, அநியாயமாக கையில் வைத்திருந்த ஒரே ஒரு சிப்ஸ் பாக்கெட் கொட்டி விட்டதே என்றே கவலை! அதனோடு, அவனது அலங்கோலம் கண்டு சிரிப்பு பீறிட்டு வந்தது.

அடக்கமாட்டாமல் சிரித்து விட்டவள், “உனக்கு குளிக்கணும்ன்னா, வீட்ல போய் தண்ணில குளி. என் சிப்ஸால குளிச்சுட்டு இருக்க…. என் சிப்ஸு…” என்று நக்கலடித்தாள்.

விழி இடுங்க அவளைப் பார்வையாலேயே எரித்தவன், “திருட்டுத்தனம் பண்றதும் இல்லாம, திமிரா வேற பேசுறியாடி.” என அவள் கையைப் பிடித்து முறுக்கினான்.

“ஆஆ… ஐயோ! டேய் விடுடா. டேய் ஒரு செகண்ட் விடு டா. ஒரே செகண்ட்” என்று அந்த வலியிலும் பேரம் பேச அவனும் கையை விட்டு விட்டு “என்னடி… சாரி கேட்க போறியா?” என்றான் முறைப்பாக.

“அட ச்சே… அதை வேற எதுக்கு அசிங்கமா கேட்டுக்கிட்டு, சோத்தாங்கையை உடைக்கிறியே மனசாட்சி இருக்கா உனக்கு.” என்றவள், இடது கையை நீட்டி, “இந்தா இந்த கையை வேணா உடைச்சுக்க. எனக்கு லெஃப்ட் ஹேண்ட்ல சாப்பிட முடியாது…” என அசட்டையாகக் கூறியதில், அவன் தான் திருதிருவென விழிக்க வேண்டியதாக போயிற்று.

அவளுக்கு இந்த அடிகளெல்லாம் புதிதா என்ன?

அந்நேரம், காதில் மாட்டி இருந்த ப்ளூடூத்தின் வழியே, உத்ஷவி பேசியது கேட்டது.

“டார்ல்ஸ் மாட்டிக்கிட்டேன். நீ கிளம்பிடு” என்னும் போதே, அதனை சஜித் பார்த்து விட்டான்.

ஏதோ திட்டத்தோடு தான் இங்கு வந்திருக்கிறாள் என்று புரிய, “ஏய்… எதுக்குடி இங்க வந்துருக்க. இதுல யாருடி பேசுறா.” என்று ப்ளூடூத்தைப் பிடுங்கினான்.

அதுவோ காதோடு ஒட்டிக்கொண்டு வராமல் அடம்செய்ய, அக்ஷிதா தான், “ஆஆ… காதை அத்துறாதடா காட்ஜில்லா.” என அவனைத் தடுத்தவள், ப்ளூடூத்தைக் கழற்றி அவனிடமே கொடுத்து விட்டு, “உன் வீட்டு அட்ரஸ் சொல்லு. உன் பர்ஸை பார்சல் அனுப்புறேன். ஆளை விடு சாமி… முதல்ல இறங்கு.” என்றவளுக்கு, இன்னும் அந்த பங்களாவின் உரிமையாளன் அவனென்று தெரியவில்லை.

அந்நேரம், உத்ஷவியை ஸ்டோர் ரூமில் பூட்டி விட்டு, வெளியில் வந்த ஸ்வரூப், முகம் கடுகடுக்க, சிசிடிவி ஃபுட்ஏஜை பார்த்தான். அனைத்தும் ஹேக் செய்யப்பட்டுள்ளதை உணர்ந்து, மொட்டை மாடிக்கு சென்றவன், பங்களா வாசலில் ஒரு வேன் நிற்பதையும், தூரத்தில் சஜித்தின் கார் நிற்பதையும் கண்டவன், அவசரமாக போனை எடுத்தான்.

சில நொடிகள் போனை வைப்பதும், லாக் எடுப்பதுமாக இருந்தவன், பெருமூச்சொன்றை வெளியில் விட்டு, வேகமாக சஜித்திற்கு குறுஞ்செய்தி அனுப்பினான்.

“நம்ம வீட்டுக்கு முன்னாடி இருக்குற வேன்ல இருந்து ஒரு பொண்ணு நம்ம வீட்டுக்குள்ள திருட வந்துருக்கா. அந்த வேனை மடக்கி பிடி. யாரு இருந்தாலும் உள்ள கூட்டிட்டு வா.” என்ற கட்டளை இருக்க,

வெகுநாட்கள் கழித்து, தமையனின் ‘வாட்ஸ்சப் சேட்’டை கண்ட சஜித்திற்கு, பழைய நினைவுகள் தூறலாய் மனதை நிறைத்தது.

பின், அதிலுள்ள சாரம்சத்தை உள்வாங்கி அதிர்ந்தவன், “இந்த பங்களாவுக்கு திருட வந்தியாடி” என அக்ஷிதாவைப் பார்த்து கேட்க, ‘இது எப்படி இவனுக்கு தெரிஞ்சுது’ என்ற ரீதியில், அவள் விழித்தாள்.

“இ… இல்லையே. சும்மா… இந்த ஏரியாவை சுத்தி பார்க்க வந்தேன்.” என்றாள் சமாளிப்பாக.

“ஓஹோ… சரி, வா… பங்களாக்குள்ள போய் சுத்தி பார்ப்போம்.” என்றவன், அவளை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றான்.

—–

கண் முன்னே மயங்கிக் கிடந்த பெண்ணவளை எரிச்சலுடனும் குழப்பத்துடனும் பார்த்தான் ஜோஷித்.

“யாரு இவ…” என அரை வெளிச்சத்தில் தெரிந்த அவளது முகத்தை ஏறிட்டு “ஏய் பொண்ணே. எந்திரி…” என்று அவள் கன்னத்தில் அடித்து எழுப்ப, விஹானாவிடம் அசைவே இல்லை.

மேலும் எரிச்சலுற்றவன், அவளைத் தூக்கிக்கொண்டு வரவேற்பறைக்கு வந்தான்.

சரியாக அப்போது, சஜித்தும் அக்ஷிதாவை இழுத்துக் கொண்டு வர, மாடியில் இருந்து ஸ்வரூப்பும் இறங்கினான்.

அங்கோ, அந்த விசாலமான சோஃபாவில், கால் மேல் கால் போட்டு அசட்டையாக அமர்ந்திருந்த உத்ஷவியைக் கண்டு, அவனுக்கு ஆத்திரம் எகிறியது.

“யாரு இவளை ரூம்ல இருந்து திறந்து விட்டது?” என சகோதரர்களை தீப்பார்வை பார்க்க, அவர்களோ, ‘இவளை யாரு முதல்ல லாக் பண்ணுனது?’ என்ற ரீதியில் பேந்த பேந்த விழித்தனர்.

உத்ஷவி தான், “ஆமா, பெரிய இரும்பு கதவா போட்டு வச்சுருக்க. ஸ்மார்ட் டோர ஓபன் பண்ணுன எனக்கு, இந்த கதவை திறக்குறதா கஷ்டம்… என்ன டைனோசர் நீ…!” எனப் பெரியதாக சலித்துக் கொண்டாள்.

ஸ்வரூப், உச்சகட்ட கோபத்தில் நின்றிருக்க, மற்ற இருவரும் தான், அவனை மரியாதை இல்லாமல் பேசியதில், பெண்ணவளை கொலைவெறியுடன் பார்த்தனர்.

சஜித்திற்கும் அதன் பிறகே, தன்னுடன் இருப்பவளும் தன்னை சரமாரியாக பேசியதே உறைத்தது.

அக்ஷிதாவோ, “டேய்… என்னடா பண்ணுனீங்க அவளை…” என ஜோஷித் கையில் வைத்திருந்த விஹானாவைப் பார்த்து கத்த, உத்ஷவியும் அப்போது தான் அவனை கவனித்தாள்.

“இன்னும் எதுவும் பண்ணல…” என முறைப்புடன் கூறியவன், அவளை சோபாவில் கிடத்தினான்.

உத்ஷவி, கோபத்துடன் ஜோஷித்தை தள்ளி விட்டு, “நீ எதுவும் பண்ணாம எப்படிடா அவ மயங்குவா?” எனத் தீப்பிழம்பாய் நிற்க,

அதற்கு ஜோஷித் பதில் கூறும் முன்னே, அவன் மேல் கை வைத்த கோபத்தில், ஸ்வரூப் உத்ஷவியின் கையைப் பற்றி முரட்டுத் தனமாக இழுத்தான்.

“திருட வந்துட்டு, என்னடி ஓவரா பேசுற? வாய கிழுச்சுடுவேன்.” என்றான் சீறலாக.

“எங்க கிழிச்சுடுவியா? கிழிடா பாப்போம்.” என அவனுடன் மல்லுக்கு நின்றவளை அறைய கை பரபரத்தது.

அதற்குள், மெல்ல மயக்கம் கலைந்த விஹானா, “என்ன கிழிக்க போறீங்க?” என சோர்வுடன் கேட்டபடி கண்ணை விழித்து சுற்றும் முற்றும் பார்த்தாள்.

அக்ஷிதா, “மயக்கம் தெளிஞ்சு எந்திரிச்சா, நான் யாரு எங்க இருக்கேன்னு தான டார்ல்ஸ் கேட்கணும்…” என நியாயமாக கேள்வி எழுப்ப, விஹானாவோ இன்னும் முழு மயக்கம் தெளியாமல், மூன்று ஆடவர்களையும் மிரண்டு பார்த்தாள்.

அவளை சினத்துடன் ஏறிட்ட ஜோஷித், “மயக்கம் போட்டு விழுகுற அளவு பயத்தை வச்சுக்கிட்டு எதுக்கு உனக்கு இந்த திருட்டு வேலை?” என்று எகத்தாளமாகக் கேட்டிட, அக்கேள்வியில் தான் அவளுக்கு முழு மயக்கம் தெளிந்தது.

அதில் விருட்டென சோஃபாவில் இருந்து எழுந்தவள், “டேய் பனங்கா மண்டையா!” என ஜோஷித்தை கை நீட்டி அதட்ட, அவன் தான் ஒரு கணம் ஃப்ரீஸ் மோடிற்கு சென்று விட்டான்.

அவளோ மேலும் தொடர்ந்து, “யாரை பார்த்து பயந்து மயங்குனேன்னு சொன்ன… கொய்யால. மனுஷனாடா நீ…” என்று மேலும் திட்டிட, உத்ஷவி அவளை அடக்கினாள்.

விஹானாவோ அதற்கெல்லாம் அடங்காமல், “என்னை விடு டார்லிங். ரூமா வச்சுருக்கா இவன் ரூமு. உள்ள போனா டெட் பாடியா தான் வெளில வரணும் போல. இதுல, மூஞ்சிக்கு நேரா வந்து புகையை விட்டுட்டு இருக்கான். ஏற்கனவே, உள்ள போய் மூச்சு விட முடியாம திணறிட்டு இருந்தேன். இதுல, எக்ஸ்டரா ஸ்மோக்கிங் வரவும் மயங்கி விழுந்துட்டேன்.” என்றாள் மூச்சிரைத்து.

ஜோஷித் தான், கடும் கோபத்துடன் அவளைப் பார்வையால் சுட்டெரித்துக் கொண்டிருந்தான். அதை எல்லாம் அவள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்றுணர்ந்ததில் மேலும் ஆத்திரம் எழுந்தது.

ஸ்வரூப், மூவரையும் அழுத்தமாகப் பார்த்தபடி, “கரெண்ட் கம்பி, புதைகுழி எல்லாம் தாண்டி எப்படி உள்ள வந்தீங்க?” எனக் கூர்மையுடன் வினவ,

அக்ஷிதா வாயைப் பிளந்தாள்.

“அடக்கொடுமையே… ஏண்டி இவ்ளோ ரிஸ்க் எடுத்து உள்ள வந்தீங்க. இதோ இவன்கிட்ட மாட்டி இருந்தா, இவனே நேரா உள்ள கூட்டிட்டு வந்துருப்பான். ஐடியா இல்லாத பசங்க!” என சஜித்தை காட்டி கூற, அவனுக்கோ அடக்கமாட்டாமல் சினம் எழுந்தது.

உத்ஷவி தான் சலித்து, “ம்ம்க்கும்… இவ்ளோ ரிஸ்க் எடுத்து வந்தும் வேஸ்ட் தான். இந்த வெத்து பங்களாவில திருட வந்ததுக்கு, வீட்ல உட்காந்து கொரியன் சீரிஸ் ஆச்சு பார்த்து இருக்கலாம்.” என்றவளுக்கு, இன்னும் ஸ்வரூப் வைத்திருந்த கண்ணாடி கண்ணை உறுத்தியது.

பின், அது கிடைக்காது என்ற கடுப்புடன், “சரி வாங்க போகலாம்” என்று தோழிகளை அழைக்க, ஸ்வரூப் உத்ஷவியைப் சோபாவில் பிடித்து தள்ளி விட்டான்.

டமாலென விழுந்தவள், “ஆ… ஐயோ! டேய் டைனோசர்… ஏன்டா இப்படி பிடிச்சு தள்ளி விடுற…” என்று இடுப்பைப் பிடித்து எழ முயன்றாள்.

அவள் எழாதவாறு, அவளுக்கு வெகு அருகில் தனது காலை அழுத்தத்துடன் பதித்தவன், அவள் புறம் குனிந்து, “இந்த பங்களாவுக்குள்ள திருட வந்த உன்னை, எதை திருட வந்தன்னு தெரிஞ்சுக்காம அவ்ளோ சீக்கிரம் விட்டுடுவேன்னு நினைச்சுட்டியா திருடி.” என்றான் அர்த்தப்பார்வையுடன்.

“இங்க பாரு… திருட வந்தோம். ஆனா, எதுவுமே திருடல. அவ்ளோ தான். வேணும்ன்னா, போலீஸ் கம்பளைண்ட் குடு.” என தோளைக் குலுக்கினாள்.

“எது போலீசா?” என விஹானாவும் அக்ஷிதாவும் திகைக்க, உத்ஷவி அவனைத் திமிராய் ஏறிட்டாள்.

எப்படியும், இப்படி பணக்காரர்களாக இருப்பவர்கள், உடனடியாக காவல்துறையை நாட மாட்டார்கள் என்று அவளுக்கு தெரியும். இருக்கும் கருப்பு பணத்தைப் பற்றிய தகவல்கள் வெளியில் வந்து விடும் என்ற பயம் நிறைய பணக்காரர்களுக்கு இருக்கும். அப்படியே புகார் செய்தாலும் கூட, ஒன்றுமே திருடாததால் தப்பித்து விடலாம் என்றே அசட்டையாக எண்ணினாள்.

அவள் நுழைந்தது, வெறும் பங்களா அல்ல, ஸ்வரூப் அவ்தேஷின் கோட்டை என்று தெரியவில்லை பாவம்!

அவளது எண்ணத்தைப் படித்தவன் போல, நிமிர்ந்து மெல்ல இதழை வளைத்தான் ஸ்வரூப்.

“உன் எண்ணம் நானறிவேன் மிஸ். திருடி! ஆனா, என்னை உன்னால கெஸ் பண்ண முடியாது.” எனப் புருவத்தை உயர்த்தி, அவளைக் கண்டு கேலிநகை புரிந்தான்.

‘என்ன செய்ய போறான்…’ எனப் புரியாமல் பார்த்தவளுக்கு, அவனது பேச்சே வயிற்றில் அமிலத்தைக் கரைத்தது. மூவரும் பெண்பித்தர்களாக இருந்தால்?

நம்ம வேற அழகா இருக்கோமே! என்று நெஞ்சில் கை வைத்துக் கொண்டவள்,

“எங்க மேல கை வைக்கிற வேலை எல்லாம் வச்சுக்காதீங்கடா. அப்பறம், மூணு பேரோட ஆவி தான் இந்த பங்களாவை சுத்தணும்.” என்று விரல் நீட்டி, மூவரையும் எச்சரிக்க, சஜித்தும் ஜோஷித்தும், ‘ம்ம்க்கும்… இது ஒன்னு தான் குறைச்சல்’ என மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டனர்.

ஸ்வரூப் தான், அவனது புன்னகையை பெரியதாக்கி, அவளை அலட்சியத்துடன் பார்த்தான்.

“எங்க டேஸ்ட் அவ்ளோ மோசம் இல்ல திருடி.” என இளக்காரத்துடன் கூறியவன், “எங்களை உங்க அழகை காட்டி மயக்கி, திருடிட்டு போய்டலாம்ன்னு நினைக்காதீங்க. அது என்னைக்குமே நடக்காது” என்றான் கண்ணில் தீவிரத்துடன்.

அத்தனை உணர்வுகளையும் நேர்த்தியாய் வெளிப்படும் காந்த விழிகளை அதிசயமாகப் பார்த்த உத்ஷவி, இப்போது வாய்விட்டு சிரித்தாள்.

“நாங்க மயக்குற அளவு நீங்க ஒர்த்தே இல்ல!” எனத் தெனாவெட்டுடன் உரைக்க, இப்போது சிறு வியப்பு கலந்த ரசனை அவன் விழிகளில்.

“ஏன் திருட வந்த? எதுக்கு திருட வந்தன்னு கேட்பான்னு பார்த்தா… சம்பந்தமே இல்லாம பேசிட்டு இருக்கான்” என்ற ரீதியில் ஜோஷித் சஜித்தைப் பார்க்க, அந்நேரம் அவனும் அவனைத் தான் பார்த்தான்.

பார்த்த நொடியில் இருவரும் முறைத்துக்கொண்டு பார்வையைத் திருப்பிக் கொள்ள, அக்ஷிதாவோ, “இப்படியே பேசிட்டு இருந்தா, எனக்கு பசில மயக்கம் வந்துடும். வாங்களேன்… கிட்சன் பக்கம் நின்னு சாவகாசமா பேசி ஒரு முடிவுக்கு வரலாம்.” என்று தீவிரத்துடன் யோசனை கூற, விஹானா, “எதுக்கு நீ அங்க இருக்கறதை காலி பண்ணவா?” என்றாள் முறைப்பாக.

சஜித் அக்ஷிதாவை கேவலமாக ஒரு பார்வை பார்க்க, ஸ்வரூப் மூன்று பெண்களையும் கடுமையுடன் முறைத்து விட்டு, கீழேயே ஒரு அறையில் அடைத்தான். அதற்கு முன் அவர்களிடம் இருந்த டூல்ஸ் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டது.

“நீ தப்பு பண்ற டைனோசர். ஒன்னு எங்களை வெளில விடு. இல்லன்னா போலீஸ்ல பிடிச்சு குடு. அதை விட்டுட்டு ரூமுக்குள்ள அடைக்கிற.” என்று உத்ஷவி மிரட்டி, கெஞ்சி, என்னன்னவோ செய்தும் ஆண்கள் மூவரும் அசரவே இல்லை.

அவர்களிடம் இருந்த கைக்கடிகாரத்தை முதற்கொண்டு பறித்து விட்டனர்.

“நாங்க திருட வந்தோமா இல்ல எங்ககிட்ட இருந்து நீங்க திருட வந்தீங்களாடா…? “என உத்ஷவி மேலும் கதறிட, அக்ஷிதா, “அட்லீஸ்ட் ஒரு சிப்ஸ் பாக்கெட்டாவது குடுங்கடா. சாப்பிட்டுக்கிட்டே உள்ள உட்கார்ந்து இருக்கேன்” என்றான் பரிதாபமாக.

விஹானாவோ, “இந்த ரூம்ல ஏசி இல்ல” என்று அவ்வறையை சுற்றி முற்றி பார்த்திட, ஜோஷித் தான், “என் ரூம்ல ஏசி இருக்கு, அங்க வேணும்ன்னா வர்றியா?” என்றான் அவனை கிண்டலடித்தக் கடுப்புடன்.

அவளோ மிரண்டு, “ஐயையோ… அங்க வந்து மூச்சடைச்சு நான் சாக விரும்பல” என்று சமத்தாக, அங்கு போடப்பட்டிருந்த நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டாள்.

அக்ஷிதாவோ நகரவே இல்லை. “உன்மேல கொட்டுன சிப்ஸ் பாக்கெட்டையாவது குடுடா. எனக்கு பசிக்குது. ஒழுங்கா அதையாவது சாப்பிட்டு இருந்து இருப்பேன். காட்ஸில்லா மாதிரி, என்னை பயமுறுத்தி, எல்லாத்தையும் வேஸ்ட் பண்ணிட்ட…” என்று கதறிட, “ஒழுங்கு மரியாதையா ரூம்குள்ள போய் உட்காந்துடு. எரிச்சலாக்காத.” என்றான் அவளால் எழுந்த தலைவலியுடன்.

உத்ஷவியும் தன்போக்கில் புலம்பி, அவர்கள் காட்டிய அந்த வெற்று அறைக்குள் நுழையப் போகையில், ஸ்வரூப் அவளது கூந்தலைப் பற்றி வெடுக்கென இழுத்தான்.

“டேய் டைனோசர் என்னடா பண்ற?” என்று கத்தியவளின், கூந்தலில் இருந்த ஹேர்பின், குட்டி குட்டி க்ளிப்புகள் என அனைத்தையும் கழற்றியவன், “என்னடி இது பேன்சி ஸ்டோர் மாதிரி எடுக்க எடுக்க வந்துக்கிட்டே இருக்கு.” என்று மீண்டும் ஒரு முறை அவள் முடியை பிடித்து ஆட்டினான்.

“ஆஆ… முடியை கையோட அத்துறதாடா. விட்டு தொலை. வலிக்குது…” என்று துள்ளினாள்.

ரப்பர் பேண்டை முதற்கொண்டு அவன் எடுத்து விட்டு, அருகில் நின்ற அக்ஷிதாவை கூர்மையாய் காண, அவளோ மிரண்டு, விறுவிறுவென கூந்தலை களைந்தாள்.

“என் தலைல கிளிப்பே இல்ல.” என விஹானாவும் உள்ளே இருந்து தன் தலையில் கை வைத்து விடுவார்களோ என்ற மிரட்சியுடன் கூற,

“உன் தலைல முதல்ல முடியே இல்ல…” என்று ஜோஷித்தும் அவளது தோள்பட்டை வரை மட்டும் இருந்த முடியை பார்த்து நக்கலடித்தான்.

“என்னை விட, அதிகமா முடி வச்சுருக்கேன்ற ஆணவத்துல ஆடாத. கொஞ்ச நாள்ல எப்படியும் வழுக்கை விழுந்துடும் உனக்கு.” என்று சாபமிட்டவளை, வெட்டவா குத்தவா என்ற ரீதியில் முறைத்தான்.

மூன்று பெண்களையும் அறைக்குள் தள்ளிய நொடியில் ஸ்வரூப், “இந்த ரூம்ல கேமரா இருக்கு. நான் உங்களை பாத்துக்கிட்டே தான் இருப்பேன். இடத்தை விட்டு அசைஞ்சீங்க… புதைகுழிக்குள்ள தள்ளி விட்டுட்டு போயிட்டே இருப்பேன். ஜாக்கிரதை…” என சிங்கத்தின் கர்ஜனையுடன் உறுமியவனைக் கண்டு, மூன்று பெண்களும் சில்லிட்ட மனதுடன் திகைத்து நின்றனர்.

முதலும் முடிவும் நீ!
மேகா!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
33
+1
3
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. Indhu Mathy

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 omg 😂😂😂😂 சிரிச்சு முடியல….. திருட வந்துட்டு இவங்க பண்ற அலப்பறை இருக்கே…. 🤗🤗🤗🤗🤗 என்னா கெத்து, தெனாவட்டு… 🥰🥰🥰🥰 காட்ஜில்லா, டைனோசர், பனங்கா மண்டையா 🤭🤭🤭🤭🤭🤭 டேய்… நீங்க தான் அவளுங்க கிட்ட மாட்டி இருக்கிங்க… 🤪🤪🤪🤪🤪