Loading

 

வெகு நேரம் திகைத்தவாறே அமர்ந்திருந்தாள் வான்மதி. ஆரவ் பேசி சென்ற வார்த்தைகள் அவளுள் பல்வேறு உணர்வதிர்வுகளை உருவாக்கிச் சென்றிருந்தது.

ஏன் அவனுக்குள் தன் மேல் இத்தனை புரிதல்? இது புரிதலா? அல்லது எதேச்சையாக உதிர்த்த வார்த்தைகளா? என்றே புரியாது ஒருவித அலைப்புறுதலில் தவித்தாள்.

அதன் பிறகே, மடியில் அமர்ந்து தன்னைப் பார்த்தே ஏதோ பேச முயன்ற இஷாந்தின் குரலில் மீண்டவள், முயன்று அனைத்தையும் ஒதுக்கி வைத்து அவனுடன் ஒன்றினாள்.

ஆரவ், வான்மதி அறையில் இருந்து மீண்டும் மூன்றாவது மாடிக்கு செல்லும் வரை, மூவரும் அதிர்வு நிலையில் தான் இருந்தனர்.

அவர்களை அடக்கப்பட்ட புன்னகையுடன் ஏறிட்டவன், “இப்படியே என் முகத்தையே பார்த்துட்டு இருந்தா எப்படி? சீக்கிரம் ட்ரெஸ் செலக்ட் பண்ணுங்க. லஞ்ச் டைம் ஆக போகுது” என்றான் கைக்கடிகாரத்தை அளந்தபடி.

கவின், “எனக்கு இங்க ட்ரெஸ் எதுவும் பிடிக்கல” என முணுமுணுக்க, அதற்கு ஆரவ் பதில் கூறும் முன், அக்கடையின் மேலாளர் சுதாகர், அவர்களை நெருங்கி இருந்தான்.

“சார். வாங்க சார். உங்களுக்கு கலெக்ஷன்ஸ் எல்லாம் காட்டுறேன். வான்மதி மேடம் சொன்னாங்க. நீங்க அவங்க ப்ரெண்ட்ஸ்ன்னு. ப்ளீஸ் கம்.” என்று பவ்யத்துடன் அழைக்க, ஹேமா தன்விக் காதை கடித்தாள்.

“தன்வி, நான் நம்ம கம்பெனில இருந்து ரிசைன் பண்ணிட்டு, வான்மதிட்டயே வேலை பாக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்…” என்று கிசுகிசுத்தவள்,

அவன் ஒரு மாதிரியாக பார்த்ததில், “ஐடி கம்பெனியை விட, இங்க ஒர்க்கர்ஸ் அழகா இருக்காங்கடா. அநேகமா இங்க இருந்தா நான் கமிட் ஆகிடுவேன்னு தோணுது.” என்றாள் சுதாகரை ஜொள்ளு விட்டபடி.

தன்விக்கோ, “நானும் அதே தான் யோசிக்கிறேன் ஹேமா. அங்க பண்ற குறளி வித்தையை இங்க செஞ்சா, சேல்ஸ் கேர்ள்ஸ் முன்னாடி, நானும் ஹீரோ மாதிரி தெரியுவேன்.” என்றான் காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு.

இவர்களின் உரையாடலை காதில் வாங்கியபடியே ஆரவ், “நோ மோர் ஃபார்மாலிட்டீஸ் மிஸ்டர்.” என்று மறுத்திட, சுதாகர் “நோ நோ சார். எங்க மேடமோட கெஸ்ட் நீங்க. ப்ளீஸ்…” என்க, அதற்கு மேல் அவன் வாதாடவில்லை.

கவின் தான், “இப்ப நம்ம வெளிய போறோமா இல்லையா?” என கடுப்புடன் ஆரவை முறைக்க,

அவனோ நக்கல் நகையுடன், “இவ்ளோ தூரம் வந்தாச்சு. ஒரு கர்சீஃப் கூட வாங்கலைன்னா, அது உனக்கு தான் அசிங்கம் மச்சான். நாளைக்கு அவள ஆபிஸ்ல பார்த்து, அவள் உன்ன கேவலமா லுக் விட்டு… தேவையா?” என வார,
அப்படியும் ஒண்ணு இருக்கோ என்று நொந்தான்.

இத்தனை நாட்கள் அவளை திட்டி விட்டு, அவளின் கடையிலேயே நிற்பது அவனுக்கு ஒரு மாதிரியாகத் தான் இருந்தது. கோபம் என்பதை விட சங்கடமாக இருந்ததினாலே தான் வெளியில் செல்ல அவசரப்படுத்தினான்.

ஆனால், ஆரவ் அங்கிருந்து நகன்றபாடில்லை என உணர்ந்ததும், வேறு வழியற்று அவர்களுடன் ஐக்கியமானான்.

சுதாகர், கடையின் அருமை பெருமைகளை பற்றியும், அங்கிருந்த உடைகளை பற்றியும் ஒரு வகுப்பே எடுத்து விட, ஹேமா “அடடா! எப்படி எக்ஸ்ப்ளெய்ன் பண்றான் பாருடா…!” என்று சிலாகித்தாள்.

“ஒருவேளை, இதுக்கு முன்னாடி லேகியம் வித்துட்டு இருந்துருப்பானோ” தன்விக் கேலியாக கூற, ஹேமா அவனை முறைத்தாள்.

கவின் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, “இப்படியே நீங்க பேசிட்டு இருந்தா, நாங்க எப்ப ட்ரெஸ் வாங்குறது” என கேட்டே விட, சுதாகர் ஒரு நொடி விழித்து பின் அசடு வழிந்து,

“நீங்க பாருங்க சார். ஏதாவது டவுட்ன்னா கூப்பிடுங்க.” என்று சற்று தள்ளி நின்று கொண்டான்.

ஹேமாவோ, “ஒரு நல்ல பிகரு பக்கத்துல நின்னு பேசுனா உனக்கு பொறுக்காதே. ஏன் அவன் பேசுனதுல என்ன கடுப்பு வந்துடுச்சு உனக்கு.” என்று எகிறியவள், ஆரவைக் கை காட்டி,

“இதோ இவன் பச்சை பச்சையா பேசுறப்ப மட்டும் நல்லா காதை குடுத்து கேட்பீல. என் செல்லம் எவ்ளோ அழகா மூச்சு முட்ட பேசுது. அதை போய் அசிங்கப்படுத்துற?” என்று சண்டைக்கு வந்தாள்.

ஆனால், நகர முடியாதவாறு, அவளின் முடிக்கற்றைகள் பின்னால் நின்றிருந்த ஆரவின் பிடியில் சிக்கி இருக்க,

“ஆரவ்! ஆரவ்! ப்ளீஸ் டா விடுடா. என் சைட்டு முன்னாடி என் மானத்த வாங்காதடா.” என கெஞ்ச,

கவின், “விடாத மச்சான் அவள. நல்லா தலையில நறுக்குன்னு நாலு போடு!” என்று ஆரவை ஏற்றி விட்டான்.

ஆரவும், அவள் தலையிலேயே ‘நறுக்! நறுக்!” என கொட்டினான்.

“ஆபிஸ்ல வேலையை ரிசைன் பண்ணிட்டு, இங்க சேர்ந்துடுவியா? அதுக்கு நீ உயிரோட இருந்தா தான?” என முடியை பிடித்து அங்கும் இங்கும் ஆட்ட,

தன்விக் ‘நம்ம கண்டுக்காத மாதிரி நகன்றுவோம்’ என்று நகரப்போக, ஆரவ் ஒரு கையால் அவனின் தலை முடியையும் பற்றி கதற விட்டான்.

“உனக்கு இங்க இருக்குற சேல்ஸ் கேர்ள்ஸ் முன்னாடி ஹீரோ ஆகணுமா?” என்று கேட்டபடி காலால் அவனை எத்த,

அவனோ “ஆ! டேய் தெரியாம சொல்லிட்டேன் விட்டுருடா” என்று கத்தியதில், உண்மையில் அங்கு இருந்த சேல்ஸ் கேர்ள்ஸ் அவனை பார்த்துச் சிரித்து விட்டு சென்றனர்.

கவினுக்கு தான் இருவரும் அடி வாங்குவதை பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இறுதியில், உறங்கி கொண்டிருந்த இஷாந்தை தோளில் போட்டபடி வந்த வான்மதியைக் கண்டதும் தான் இருவரையும் விட்டான் ஆரவ்.

அவன் விட்டதும் தான் தாமதம். ஹேமாவும் தன்விக்கும் கவினின் மீது பாய்ந்து அடிக்கத் தொடங்க, அவனோ அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடினான்.

அவர்களை விசித்திரமாக பார்த்த வான்மதி, “பேபி தூங்கிட்டான்” என்று இஷாந்தை ஆரவிடம் கொடுக்க, நண்பர்களின் சேட்டையில் ஏற்கனவே புன்னகை முகமாக காட்சியளித்தவன், இப்போதும் அதே புன்னகையுடன் வாங்கிக்கொண்டான்.

ஒரு நொடி அவனின் முகத்திலிருந்து கண்ணை எடுக்காமல் பார்த்தவள், அவன் அவளை பார்ப்பதைக் கண்டு சட்டென விழிகளை திருப்பிக்கொள்ள, “என்னங்க மேடம்? ஏதாவது சொல்லணுமா?” எனக் கேட்டான் குறுநகையுடன்.

அதில் தயங்கியவள், “உங்களுக்கு எப்படி என்னை பத்தி தெரியும்?” என கேட்டிட, அவனின் இதழ்கள் அப்போதும் சிறு புன்னகையை தாங்கியபடியே இருந்தது.

அவளோ, “என்னை பத்தி வெளில விசாரிச்சீங்களா?” என சந்தேகமாகக் கேட்க, “எனக்கு வேற வேலை இல்லையா?” என்றான் இப்போது லேசாக முறைத்தபடி.

“அப்போ எப்படி? என் அப்பாவை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா?” விழி உயர்த்தி அவள் கேள்வியை தொடர,

“உன் அப்பாவை நேர்ல நான் பார்த்தது கூட இல்ல.” என்றான் அமர்த்தலாக.

அவன் பதில்களில் அவள் தான் குழம்பி விட்டாள்.

பின் அவனே, “ரொம்ப யோசிக்காதீங்க மேடம். ஒரு குட்டி லாஜிக் தான். அது என்னன்னு உனக்கே தெரியும்.” என்றதில், அவளுக்கு பைத்தியம் பிடிக்காத குறை தான்.

ஏதேதோ யோசித்தும் ஒன்றும் விளங்காமல் போக, “இல்ல ஆரவ். எனக்கு தெரியல. நீங்களே சொல்லிடுங்க” என்றவளுக்கு ஆர்வம் தாங்க இயலவில்லை.

ஆனால், கேட்டதும் பதிலளித்தால் அது ஆரவ் அல்லவே. “நோ ப்ராபளம். பொறுமையா யோசி. நீயே கண்டுபிடிச்சு இப்படி தானான்னு கேளு. நான் ஆமான்னு சொல்றேன்!” என்று மந்தகாச புன்னகையை வீசி விட்டு நகர, வான்மதிக்கு குழப்பமும் ஆர்வமும் தாளவில்லை.

இருக்கும் மனநிலையில் சரியாக அவளால் சிந்திக்கவும் இயலாது போக, அதனை அப்படியே விட்டு விட்டாள்.

அதன் பிறகான நாட்கள், எப்போதும் போல நகர, தினமும் இஷாந்தை வைத்துக்கொள்ளும் ஒரு மணி நேரத்திற்காகவே அலுவலகம் செல்ல ஆர்வம் மேலோங்கியது வான்மதிக்கு.

அன்று, காலையில் இருந்தே ஆரவ் அலுவலகத்திற்கு வராமல் போக, ‘லேட்டா வருவாரா இருக்கும்’ என எண்ணிக்கொண்டவளை ஏமாற்றும் விதமாக, மாலை வரைக்கும் அவன் வராமல் போக, அவளுக்கோ இஷாந்தை காணாமல் ஏதோ போல் இருந்தது.

அவனின் நண்பர்கள் அலுவலகத்தில் இருந்தாலும், அவர்களிடம் சென்று கேட்க தயங்கியவளாக, ஆரவிற்கே போன் செய்தாள்.

சிறிது நேரம் கழித்தே எடுத்தவன், “ம்ம்” என்க,

“இஷுக்கு உடம்பு நல்லா தான சார் இருக்கு.” என்றாள் எடுத்ததுமே.

அவனோ சோர்வாக, “பெட்ல இருந்து கீழ விழுந்து…” என ஆரம்பிக்கும் போதே பெண்ணவள் பதறி விட்டாள்.

“என்ன ஆரவ் சொல்றீங்க. பெட்ல இருந்து விழுந்துட்டானா? அவன் விழுகுற வரை நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க? எங்க அடி பட்டுச்சு பேபிக்கு. இப்ப எப்படி இருக்கான். ஹாஸ்பிடல்லயா இருக்கீங்க. எங்கன்னு சொல்லுங்க நான் வரேன்.” என்று சிறிது கோபத்துடன் பேசியவள், அவன் பேசவே இடம் கொடுக்கவில்லை.

முதலில் வேண்டாம் என தான் சொல்ல நினைத்தவன், அவள் பேசிய பேச்சில் சற்றே கடியாகி அவனின் அப்பார்ட்மெண்ட் முகவரியை குறுஞ்செய்தி அனுப்பி விட்டான்.

ஒரு கணம், வீட்டு முகவரியைக் கண்டு அவளும் துணுக்குற தான் செய்தாள். எப்படி வீட்டிற்கு செல்வது என்ற தயக்கம் இருந்தாலும், எண்ணம் முழுதும் இஷாந்த் மட்டுமே இருக்க, மேலும் யோசியாமல் அவன் வீட்டை நோக்கி சென்றாள்.

ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் எல்லாம் தோற்றுப்போகும் அளவிற்கு பிரம்மாண்டமாக இருந்தது அந்த அப்பார்ட்மெண்ட். குழந்தைகள் விளையாடும் இடம், பார்க், ஜிம், சூப்பர் மார்க்கெட், நீச்சல் குளம் என அனைத்து வசதிகளையும் ஒருங்கே பெற்றிருந்தது.

கையைப் பிசைந்தபடியே, ஆரவின் ஃபிளாட் அமைந்திருக்கும் ஐந்தாம் மாடிக்கு சென்று காலிங் பெல்லை அழுத்தியவள், அவன் கதவை திறந்ததும், இஷாந்தை தான் தேடினாள்.

அவளையே ஊடுருவும் பார்வை பார்த்த ஆரவ், “உள்ள வா!” என அழைக்க, அவளும் தயக்கத்துடன் உள்ளே சென்று வீட்டை பார்வையிட, அதுவோ நேர்த்தியாக இருந்தது.

மூன்று படுக்கையறை கொண்ட, ‘லக்ஸரி ஃபிளாட்’ தான். ஆனால், அழகாக நளினமாக பொருட்கள் எல்லாம் அடுக்கப்பட்டிருந்தது.

“வீட்டை வேடிக்க பார்த்து முடிச்சுட்டியா? இஷாந்த் அந்த ரூம்ல தான் தூங்குறான். போய் பாரு” என்றான் நக்கலுடன்.

ஆனால், அவளுக்குத் தான் அறைக்கு செல்ல லேசாக பயம் முளைக்க, “இ… இல்ல. பரவாயில்ல. இப்ப எப்படி இருக்கான். எங்க அடி பட்டுச்சு?” என அவனைப் பாராமல் வினவ,

“எங்க அடி பட்டுச்சுன்னு நீயே போய் பார்த்துக்க.” என்றவன், சோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

அதற்கு மேல் எப்படி அங்கேயே நிற்பது என புரியாதவளாய், நடுங்கிய கைகளை மறைத்தபடி, அறைக்கு சென்று விழிகளால் துழாவ, அங்கு தொட்டிலில் இதழில் உறைந்த புன்னகையுடன் இஷாந்த் உறங்குவதைக் கண்டு அவளுக்கும் சிறு புன்னகை பூத்தது.

அவன் உடலில் அடி எதுவும் படவில்லை என்று நிம்மதி ஆனவள், லேசாக காய்ச்சல் அடித்ததில் சற்றே வருத்தத்துடன் பார்த்து விட்டு, மெல்ல வெளியில் வந்தாள்.

அப்போதும், அதே திமிர் தொனியில் தான் ஆரவ் அமர்ந்திருக்க, “பேபி பெட்ல இருந்து விழுந்துட்டான்னு சொன்னீங்க. நல்லவேளை அடி படல. ஆனா, லேசா உடம்பு சுடுது.” என்றாள் குறைபட.

அவளை அழுத்தமாக முறைத்த ஆரவ் தான், “நான் அவன் விழுந்தான்னு சொன்னேனா?” என எகத்தாளமாகக் கேட்க, அவளோ பேந்த பேந்த விழித்தாள்.

“நீங்க… போன்ல… பெட்ல இருந்து விழுந்துன்னு சொன்னீங்க தான.” என எச்சிலை விழுங்கியவளை, இன்னுமாக சுட்டெரித்தவன்,

“என்னை முழுசா சொல்ல விடாம நீயா முடிவெடுத்தா என்ன அர்த்தம் வான்மதி?” என கிட்டத்தட்ட கடிந்தான்.

அவள் தான், அவனின் முறைப்பில் வெளியில் வரத்துடித்த இதயத்தை அடக்கி, “என்… என்ன ஆச்சு?” என்றாள் திக்கி திணறி.

“இப்பவாவது கேட்டியே? இதுல என் பையனை நான் சரியா பாத்துக்கலைன்னு என்னையவே திட்டுற இல்ல?” என்று விழி இடுங்க கர்ஜிக்க, அவளுக்கோ அப்படியே ஓடி விடுவோமா என்று தான் இருந்தது.

‘தேவை இல்லாம, அட்வான்டேஜ் எடுத்துட்டோமோ.’ என்ற எண்ணமும் ஒரு புறம் ஓட, ஆரவ் அவளின் வெளிறிய முகம் கண்டு ஆரவ் சற்று தணிந்தான்.

“காலைல ஆபிஸ் கிளம்பிட்டு இருக்கும் போது, கட்டில்ல உட்கார வைச்சு இருந்தேன். அவன் சட்டுன்னு, உருண்டு கீழ விழுக போய்ட்டான். நல்லவேளை நான் போய் பிடிச்சுட்டேன். அதுல கொஞ்சம் பயந்ததுல தான் லேசா ஃபீவர். விளக்கம் போதுமா?” என்றவனைக் கண்டு அசடு வழிந்தாள்.

“சாரி ஆரவ். கீழ விழுந்துட்டான்னு சொன்னதும், கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்.” என்று விழி தாழ்த்திக் கூற,

“அவ்ளோ அக்கறை இருந்தா, நீயே அவனை பார்த்துக்க வேண்டியது தான. என்னை கல்யாணம் பண்ணிட்டு…” என்று குத்த, அதில் சட்டென நிமிர்ந்தவள், “எனக்கு விருப்பம் இல்ல ஆரவ். இனிமே இதை பத்தி பேசாதீங்க ப்ளீஸ்.” என்றாள் கெஞ்சலாக.

“எனக்கும் விருப்பம் இல்ல வான்மதி. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, இந்த கல்யாணம் இஷுக்காக மட்டும் தான்.” என அழுத்தமாகக் கூறியதில்,

“யாருக்காக பண்ணாலும் கல்யாணம், கல்யாணம் தான. இஷுக்காகன்னாலும் கல்யாணத்துக்கு அப்பறம் நீங்க என்கிட்ட என்ன எதிர்பார்ப்பீங்கன்னு தெரியாத அளவு நான் முட்டாள் இல்ல ஆரவ்” அவளும் அழுத்தத்துடனே பதிலளித்தாள்.

ஒரு கணம் அவன் பலத்த அமைதியுடன், அவள் முகத்தையே விழி சுருங்க ஆராய்ந்தான்.

அம்முகம் காட்டிய, உணர்வுகளற்ற தன்மையை குறித்துக் கொண்டவன், “இது உனக்கு மட்டும் இல்ல. எனக்கும் செகண்ட் மேரேஜ் தான் வான்மதி. ஒரு பொண்ணா உனக்கு என்ன உணர்வு இருக்கோ. வலி இருக்கோ. எதை பத்தின அருவருப்பு இருக்கோ.

அதே உணர்வும், வலியும், அருவருப்பும் துளியும் மாறாம எனக்கும் இருக்கும். அதையும் மீறி உங்கிட்ட கல்யாணம் பண்ணிக்க கேட்குறேன்னா அது இஷுக்காக மட்டும் தான்.” என்றவனின் வார்த்தைகளில் எந்த அளவு அழுத்தம் மிகுந்ததோ அதே அளவு வலியும் மிகுந்தே இருந்தது.

அவளுக்குத் தான் பேச்சற்ற நிலை. அது, அவனின் அழுத்தம் கண்டா? இறுகிய பாவனை கண்டா? அல்லது, மெலிதாய் தன்னை ஊடுருவும் அவனின் வலி கண்டா? என பிரித்தறிய இயலாமல் நின்றாள்.

“இப்பவும் நான் உன்ன வற்புறுத்தல. ஜஸ்ட் சாய்ஸ் தான் கேட்டேன். உன் இஷ்டம்!” என தோளைக் குலுக்கிக் கொண்டவனை, புருவம் சுருங்க ஏறிட்டாள் வான்மதி.

“இஷாந்த் தவிர, நமக்குள்ள எந்தவொரு ரிலேஷன்ஷிப்பும் இருக்காதுன்னு சொல்றீங்களா?” அவள் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளக் கேட்க, அவனுக்கு தான் அவளின் கேள்வியே சிரிப்பைக் கொடுத்தது.
கூடவே ஒரு வித வலியையும்.

“ம்ம்…!” என்றதை தவிர, அவன் வேறு விளக்கம் கொடுக்காமல் போக, அவளுக்கு அந்த ‘ம்ம்’ என்ற வார்த்தை திருப்தியளிக்கவில்லை.

அதே நேரம், ‘அப்போ, கல்யாணம் பண்ணிக்க போறியா என்ன?’ என அவளின் மனமே அதிர, அவள் தான் குழம்பி, “எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க. யோசிச்சு சொல்றேன்.” என்றாள் மெதுவாக.

அதற்கும் அவனிடம் விழியசைவை தவிர வேறு பதில் இல்லை.

அங்கு நிற்கவே ஒரு மாதிரியாக இருக்க, கிளம்ப எத்தனித்தவளை சொடுக்கிட்டு நிறுத்தினான்.

“இவ்ளோ தூரம் வந்து இருக்கியே, அடிபட்டவன பார்க்க ஒரு ஆரஞ்சு பழம் கூட வாங்கிட்டு வரமாட்டியா?” எனக் கேட்டான் கேலியாக.

வான்மதி புரியாமல், “பேபிக்கு அடி எதுவும் படலையே ஆரவ்?” என்க,

“அவனுக்கு இல்ல. எனக்கு…” என்றவன், கை முட்டியை தூக்கி காட்ட, அங்கு பெரிய அளவில் கட்டிடப்பட்டிருந்தது.

அதில் திகைத்தவள், “உங்களுக்கு என்ன ஆச்சு?” என பதற்றத்தை அடக்கிக்கொண்டு வினவ,

“ம்ம். உன் பேபியை அடி படாம பிடிக்கப்போய், என் கை டேபிள் முனைல குத்தி கீறி ரத்தம் வந்து…” என்றதில் “ஸ்ஸ்ஸ்! சொல்லாதீங்க. ஒரு மாதிரி இருக்கு.” என கன்னத்தில் கை வைத்து முகத்தை சுருக்கியவள், “அதான் ஆபிஸ் வரலையா?” எனக் கேட்டாள் பாவமாக. கூடவே, அவன் கூறிய ‘உன் பேபி’ என்ற வாசகம் அவளுள் தித்திப்பைக் கொடுத்தது.

அவனோ “அடி பட்டு ரத்தம் வந்தது கூட ஓகே. ஆனா, நீ பேசுன பேச்சு இருக்கே… நேர்ல இருந்துருந்தேன், மூஞ்சிலயே குத்திருப்பேன்.” என்றான் சிரிப்பை அடக்கிக்கொண்டு.

“நல்லவேளை போன்ல பேசுனேன். இல்லன்னா… இந்த வாரம் என் கடைக்கு நான் முகம் வீங்கி தான் போயிருக்கணும்.” என அவளும் உதட்டை மடித்து சிரிப்பை அடக்கினாள்.

அதில், போலி முறைப்பை வீசியவன், “எதுல வந்த?” எனக் கேட்க,

“கேப் புக் பண்ணி தான் வந்தேன். கீழ போய் திரும்ப புக் பண்ணிக்கிறேன்.” என்றாள்.

“அது சரி… இவ்ளோ பெரிய கடை ஓனர்கிட்ட ஒரு கார், ஒரு வண்டி கூட இல்லையா?” அவளை அளந்தபடி ஆழம் பார்த்தான்.

சற்றே மௌனம் காத்தவள், “ஹாஸ்டல்ல இருந்து கடை நடந்து போற தூரம் தான். அதே மாதிரி ஹாஸ்டல்ல இருந்து ஆபிஸ்க்கு ஒரே பஸ் இருக்கு. அதுக்கு மேல நான் எங்க போக போறேன்னு, வாங்கல. எனக்கும் ட்ரைவ் பண்ண தெரியாது. அதுக்கு ஒரு ட்ரைவர் போடணும். அதான்…” என்றவளிடம்,

“பார்த்து மேடம்… உன்னை பத்தி தெரிஞ்சு யாராவது உன்ன கடத்திட்டு போய்ட போறாங்க.” என கேலி குரலில் கேட்டாலும், ‘ஜாக்கிரதையா இரு’ என்ற எச்சரிக்கையும் ஒலித்தது.

அவன் கூற்றில் நன்றாகவே புன்னகைத்து விட்டவள், “என்ன கடத்திட்டு போய் காசு கேட்டா, என் அப்பா ஒத்த பைசா தர மாட்டாரு. அத கடத்துறவன்கிட்ட தெளிவா சொல்லிடுவேன். அதுக்கு மேல அவன் அடம்பிடிச்சா, கடையை அவன் பேர்ல எழுதி குடுத்துட்டு வந்துட வேண்டியது தான். உயிர் முக்கியம் பிகிலு.” என வலியுடன் நகைத்ததில், அவனுக்கும் ஏதோ போல் ஆகி விட்டது போலும்.

‘ஏன், இவள் தனியா இருக்கா?’ என்ற கேள்வி மொய்த்தாலும், அதனைக் கேளாமல், அவளை சரி செய்யும் பொருட்டு, “அப்போ உன்னை நானே கடத்தலாம் போலயே?” என்றான் தாடையை தடவி யோசனையுடன்.

அதில் அவளுக்கும் புன்னகை பூக்க, “யாருக்கோ எழுதி தர கடையை உங்களுக்கு எழுதி தர மாட்டேனா?” என்றதில், இருவரும் அப்போதைய நிலை மறைந்து, கடந்து வந்த பாதை மறந்து மனம் விட்டு சிரித்து விட்டனர்.

நேரம் செல்வதை உணர்ந்தவள், “லேட் ஆச்சு. கிளம்புறேன் ஆரவ்.” என்றவளுக்கு அங்கிருந்து கிளம்ப தான் கால்கள் ஒத்துழைக்க மறுத்தது.

அவனை விட்டு வர இயலாமல், அவனுடனே பேசிக்கொண்டே இருக்க வேண்டும் போல மனம் மண்டியிடவெல்லாம் இல்லை தான். ஆனால் இந்நிலை, இந்த இயல்பான உரையாடல் அவளை அவளுக்கே மீண்டும் திருப்பித் தந்தது.

அவனுக்கும் தான்! அவள் கிளம்புகிறேன் என்றதுமே, சற்று வாடியவன் பின், “ம்ம். என் கார்ல போ. ட்ரைவர டிராப் பண்ண சொல்றேன்.” என்றவன், பார்க்கிங் வந்து அவளை காரில் ஏற்றி விட்டு தான் வீட்டிற்கு வந்தான்.

காரில் பயணம் செய்தவளுக்கு, எண்ணங்களும் ஆரவுடனே பயணம் செய்தது.

‘யாரிவன்? எதற்காக திடீரென முளைத்தான்? வாழ்வில் அனைத்தும் இழந்த பின்னும், இதென்ன புது பயணம், புது உரையாடல்.

ஒரு திருமணத்தினால் பட்டது போதாதென்று, இன்னொன்று வேறா. ஆனா இஷு பேபியை பார்த்தா, எனக்கு ஹேப்பியா இருக்கே. அதுக்காக, இன்னொருத்தன் குழந்தையை நான் எப்படி உரிமை கொண்டாட முடியும். நாளைக்கே அவரு, அவரோட வைஃப் கூட சேர்ந்துட்டா… இல்ல அவள் வந்து பேபியை கேட்டா…! கல்யாணத்தை முறிக்கிற தைரியம் எனக்கு இருக்கு தான். ஆனா, பேபியை பிரியற தைரியம் எனக்கு இருக்கா?

முதல்ல, இவரை நம்பி எப்படி கல்யாணம் பண்றது? நாளைக்கு பேச்சு மாறி, என்னை அவரோட இஷ்டத்துக்கு ஆட்டுவிச்சா?’ என ஏதேதோ சிந்தனைகள் தோன்றி மறைந்தாலும்,

‘ஆனா, அவரை பார்த்தா அப்படி தெரியல. ஏன் என்னால அவரை தப்பா கூட நினைக்க முடியல தான்… பட், இந்த பயணம் எத்தனை நாளைக்கு. லைஃப் லாங் ஆ? இல்ல. லைஃப் லாங் அவரோட டிராவல் பண்ண தான் என்னால முடியுமா? இஷுக்காக வாழ்க்கை முழுக்க, அவரால தான் வெறும் ஒரு அண்டர்ஸ்டாண்டிங்ல என்கிட்ட எதுவுமே எதிர்பார்க்காம வாழ்ந்திட முடியுமா?’ யோசிக்க யோசிக்க தலை வலித்தது அவளுக்கு.

விடுதியில் சென்று இறங்கியதுமே, அவளின் கரங்கள் தானாக ஆரவிற்கு அழைத்திருந்தது.

அவனும் போனை எதிர்பார்த்திருப்பான் போலும். ஒரே ரிங்கில் எடுத்திருந்தான்.

“இப்ப தான் ஹாஸ்டல் போனியா வான்மதி? ஏன் இவ்ளோ நேரம்?” எனக் கேட்க, அவளுக்கு எவ்வளவு நேரம் வந்தோம் என்று கூட தெரியவில்லையே.

திருதிருவென விழித்தவள், “அது… தெரியலையே. டிராபிக் – ஆ இருந்துருக்கும்ன்னு நினைக்கிறேன்” என்றாள் தட்டு தடுமாறி.

“ஏன் என் ட்ரைவர் உன்னை கண்ண கட்டி கூட்டிட்டு போனானா?” அதீத நக்கலும் அதட்டலும் வழிய அவன் கேட்டிட, அவள் தான் அமைதியானாள்.

“அறிவிருக்கா வான்மதி? இங்க இருந்து உன் ஹாஸ்டல்க்கு போக 20 மினிட்ஸ் தான் ஆகும். முக்கால் மணி நேரம் ஆச்சு. இப்ப நீ கால் பண்ணலைன்னா நானே பண்ணிருப்பேன். அப்படி என்ன சுத்தி நடக்குறது கூட தெரியாத அளவு யோசனை உனக்கு? ஸ்டுப்பிட்.” என்று கடிந்தான் கோபத்துடன்.

“உங்களை பத்தி தான் யோசிச்சுட்டு இருந்தேன்” அவள் மறைக்காமல் மென்குரலில் கூறிட, எதிர்முனையிலும் சிறு அமைதி.

“என்னை பத்தியா? இஷு பத்தியா?” ஆழ்ந்த குரலில் அவன் வினா தொடுக்க, அவளுக்கு தான் வியப்பில் விழி விரிந்தது.

“ரெண்டு பேரையும் பத்தி தான்.”

“ரெண்டு பேருக்கும் வாழ்க்கை குடுப்போமா வேணாமான்னு யோசிச்சுட்டு இருந்தியோ?” சிறு நகை இதழில் இழையோட ஆரவ் கேட்டிட, ‘இதென்ன கேள்வி?’ என்று தோன்றினாலும், அவளால் புன்னகைக்காமல் இருக்க இயலவில்லை தான்.

“அதில்ல ஆரவ்… அது… நாளைக்கே இஷு பேபி அம்மா வந்து…” என பேச வந்து விட்டவள், மேலும் என்ன கேட்கவென்று தெரியாமல் திணற, அவனுக்கோ அவள் கேட்க வந்த கேள்வி தெள்ளத்தெளிவாக புரிந்தது.

“இஷு என் பையன். அவன் மேல அவனை பெத்தவளுக்கு கூட உரிமை இல்ல. உரிமை கேட்டு அவளும் வரமாட்டா. அவன் சொந்தம் நான் மட்டும் தான். என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா, நீயும் அவனுக்கு அம்மான்ற சொந்தம். இல்லன்னா, அவனுக்கு அப்பாவா நான் மட்டும் போதும்.” திட்டவட்டமாக அவன் உரைக்க, அவளுக்கோ திகைப்பு தான்.

பெத்தவளுக்கே கொடுக்காத உரிமை எனக்கு மட்டும் எதுக்கு? என்ற புதிர் புரியாதவளாய் அவள் பேச்சிழந்திருக்க, அவளின் அடுத்த கேள்வி இது தான் என்று கணித்தவனோ, அதற்கு விளக்கம் அளிக்காமல் மௌனம் காத்தான்.

பின் அவளே தொண்டையை செருமிக் கொண்டு, “ஆனா, இந்த கல்யாணம் எத்தனை நாளைக்கு ஆரவ். வாழ்க்கை ஃபுல்லா… எப்படி…” என மீண்டும் மனதில் நினைத்ததை வார்த்தையாக வெளிக்கொணர முயன்று தோற்றாள்.

“வாழ்க்கை முழுக்க முடிவெடுத்து கல்யாணம் பண்ண, நம்ம என்ன லவ் மேரேஜ் – ஆ பண்றோம். அப்படி காதலிச்சு கல்யாணம் பண்ணா கூட, அடுத்த நாள் என்ன ஆகும்ன்னு தெரியாத வாழ்க்கை தான் இது வான்மதி.

அப்படி இருக்கும் போது, இதையும் வாழ்க்கை முழுக்க திட்டம் போட்டு, இப்படி தான் வாழணும்னு முடிவெடுத்து செய்ய முடியாது. இப்போதைக்கு, உனக்கு இஷு வேணும். எனக்கு அவன் அழுகாம இருக்கணும். அவ்ளோ தான். அதுக்கு அப்பறம் இருக்குற லைஃபை அப்பறம் பார்க்கலாம்.” என்றவன் மறந்தும் கூட, ‘இறுதி வரை நமக்குள் எந்த உறவும் இருக்காது’ என்ற வார்த்தையை உதிக்கவில்லை.

அவ்வார்த்தையை எதிர்பார்த்திருந்தவளோ, ‘இன்னும் எப்படி இவனிடம் அழுத்தமாகக் கேட்பது…’ எனப் புரியாமல் தவித்து,

பின், “இல்ல ஆரவ். இஷுக்காக தான் இந்த கல்யாணம். இப்ப மட்டும் இல்ல எப்பவுமே. அவன் கொஞ்சம் வளர்ந்ததும், நான் என் வழியை பார்த்துட்டு போய்டுவேன். அதுக்கு ஓகேன்னா எனக்கும் இந்த கல்யாணத்துக்கு ஓகே.” என்றவள், அவனை ஆழம் பார்க்க,

“உன் இஷ்டம். உன்னால அவனை விட்டு போக முடிஞ்சா போய்க்கோ!” என தோளைக் குலுக்கினான் அசட்டையாக.

“ஏன்? ஏன்? என்னால முடியாது?” அவள் சற்றே சினத்துடன் வினவ,

“இன்னைக்கு ஒரு நாள் அவன் வராததுக்கே, எதை பத்தியும் யோசிக்காம வீடு வரைக்கும் வந்துட்ட. இப்ப சொல்லு, நான் அன்னைக்கு சொன்ன மாதிரி அவன்கூட ரொம்ப ஒட்டுனா உனக்கு நல்லது இல்லைன்னு சொன்னது கரெக்ட் தான?” என அர்த்தத்துடன் வினவ, அவளோ உறைந்து விட்டாள். அன்று அவன் கூறியதற்காக அர்த்தம் இப்போது புரிந்தது.

இதில், கட்டாய கல்யாணம் செய்து கொள்வானோ என எண்ணி பயந்தது வேறு அவளை மானசீகமாக தலையில் அடிக்க வைத்தது.
 
சில நிமிடம் கழிய, “நான் உங்க வீட்டுக்கு வந்ததுனால என்னை தப்பா நினைக்கிறீங்களா ஆரவ்?” மென்குரலில் வான்மதி வினவ,

“உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேக்குறனால, என்னை பொறுக்கின்னு நினைக்கிறியா வான்மதி?” என அவனும் அசராமல் கேள்வியை அவளிடம் திருப்பி இருந்தான்.

இரு கேள்விக்கும் இருவரும் விடையளிக்கத் தோன்றாமல், அலைபேசியை அணைத்து விட்டு, பால்கனி வழியே சில்லென்று உடலை ஊடுருவும் சிறு தூறலையே, மென்னகையுடன் நோக்கி இருந்தனர். 

தேன் தூவும்!
மேகா!

அடுத்த பதிவு சனிக்கிழமை என்று கூறிக்கொண்டு🏃🏃🏃🏃 thank you sooooo much drs 🤩🤩🤩🤩💖💖💖💖💖💖

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
53
+1
235
+1
9
+1
8

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான காதல் கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.

    2. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.