Loading

மற்றவர்கள் துருவையும், உத்ராவையும் பார்த்திருக்க, உத்ரா துருவிடம் இருந்து தன் கையை இழுத்துக் கொண்டு, அவனை முறைத்தாள்.

அவன் நக்கலாக இதழ் வளைத்து, மீராவை வர சொல்லி கண்ணைக் காட்டி விட்டு எழுந்து சென்றான்.

அவன் எழுந்திருக்கவும், மீராவும், சஞ்சுவை அர்ஜுனிடம் கொடுத்து விட்டு, அவன் பின்னே செல்லப்  போக, அர்ஜுன் அவள் கையை பிடித்தான்.

“என்னடி நினைச்சிட்டு இருக்கான் அவன்? நீயும் ஏதோ ‘கீ’ குடுத்த பொம்மை மாதிரி அவன் சொன்னதெல்லாம் கேட்டுகிட்டு இருக்க. அவன் பிரஸ் மீட் ஏற்பாடு பண்ணுனது உனக்கு ஏற்கனவே தெரியும் தான?” எனக் கேட்டான் காரமாக.

அவள் பேந்த பேந்த விழித்து விட்டு, “தெரியும்” என்றாள் உத்ராவை தயக்கமாய் பார்த்து.

அர்ஜுன், “அவன் என்ன சொன்னாலும் மண்டைய மண்டைய ஆட்டுவியா? உனக்குன்னு அறிவில்லை? அவனும் அவன் ஆட்டிட்யூடும். சரியான பொறுக்கி. போயும் போயும் இவன் கிட்ட தான் நீ வேலை பார்க்கணுமா? ஆமா தெரியாம தான் கேக்குறேன், அவன் உனக்கு வெறும் பாஸ் மட்டும் தான. இல்ல…” என்று முடிப்பதற்குள் மீரா அவனை அறைந்திருந்தாள்.

“இதுக்கு மேல ஒரு வார்த்தை அவரை பத்தி தப்பா பேசுனீங்க. நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. அவரு தப்பானவராவே இருந்துகிட்டு போகட்டும், ஆனா அவரு மட்டும் இல்லைன்னா கைக்குழந்தையோட, நான் எவ்ளோ கஷ்டப்பட்டுருப்பேன்னு தெரியல.

இதுவரை ஒரு வார்த்தை கூட, அவரு என்கிட்ட அதிகமா பேசுனது இல்ல. ஏன் தங்கச்சி மாதிரின்னு அவரு என்கிட்ட கூட சொன்னது இல்ல.

நீங்கல்லாம் அவரை தப்பா சொல்றீங்க… ஆஸ்திரேலியால கூட அப்டித்தான். மத்தவங்களுக்கு எப்படியோ! ஆனால் நான் அவரை என் சொந்த அண்ணனா தான் பார்க்குறேன். ஒரு தடவை சஞ்சுக்கு ரொம்ப உடம்பு சரி இல்லாமல் என்ன பண்றதுன்னு கூட தெரியாமல் முழிச்சிட்டு இருந்தேன். துருவ் அண்ணா மட்டும் இல்லைன்னா அவன் உயிரோட இருந்துருப்பானானே தெரியாது…” என்று மேலும் பேசபோக,

அர்ஜுன், “நிறுத்துடி” என அறையே அதிரும் அளவுக்கு கத்தினான்.

“யாரு டி உன்னை அப்படி போய் கஷ்டப்பட சொன்னது? உனக்கு என்ன தலை எழுத்தா? என்ன பிரச்சனை என்ன ஏதுன்னு சொல்லாம, வாழ்க்கையை பார்த்து பயந்து ஓடிப்போய்ட்டு அதுவும், ஒரு கைக்குழந்தையோட, ஊர் பேர் தெரியாத நாட்டுக்கு போயிருக்க… கொஞ்சமாவது மூளைன்னு ஒன்னு இருக்கா?

“சரி நீ சொன்ன மாதிரி அவன் உன்கிட்ட நல்லவனாவே நடந்துகிட்டனால சரியா போச்சு. இல்லன்னா? அன்னைக்கு அவனே ஹெல்ப் பண்ணலைன்னா உன்னால சமாளிச்சுருக்க முடியுமா?

இதெல்லாம் யோசிக்காம, என்கிட்டயும் சொல்லாம, எங்கயோ போயிட்டு… பேச வந்துட்டா. உனக்கு எப்பவுமே நான் முக்கியமே இல்லைல.

நீ என்னை லவ் பண்றன்னு நான் தான் முட்டாள்தனமா உன் பின்னாடி சுத்திகிட்டு இருந்துருக்கேன்.

போ, உன் அண்ணன், உன் குழந்தை, உன் வாழ்க்கைன்னு நிம்மதியா இரு… இனிமே உன் முன்னாடி கூட நான் வரமாட்டேன்” என்று ஆக்ரோஷமாய் பேசி வெளியில் செல்ல போனவன்,

சற்று நின்று, அவளிடம் திரும்பி அமைதியான குரலில்,

“அப்பறம், எனக்கு அவனை பத்தி வேணும்னா தெரியாம இருக்கலாம். ஆனால் உன்னை பத்தி எனக்கு நல்லாவே தெரியும்.

உன்னை பத்தி நான் தப்பா சொல்ல வரல. அவன் உனக்கு பாஸ் தான். நீ அவனுக்கு அடிமை இல்லைன்னு தான் நான் சொல்ல வந்தேன்… எல்லாத்துலயும் உனக்கு அவசரமான முடிவு தான் இல்ல?!” என்று அவளை ஏக்கமாய் ஒரு பார்வை பார்த்து விட்டு, சஞ்சுவையும் தூக்கிக் கொண்டு வெளியில் சென்றான்.

இங்கு, உத்ரா, அஜய், சுஜி, விது நால்வரும், அவள் அவனை பளார் என அறையும் போதே தன்னிச்சையாய் இருக்கையை விட்டு எழுந்து ‘என்னடா அடிதடி சண்டை எல்லாம் போடுறீங்க’ என்று முழித்துக் கொண்டு நின்றனர்.

இதில் உத்ரா தான், ‘இந்த துருவ் என்ன பண்ணி வச்சுருக்கானு தெரியாமல் நானே குழம்பி போயிருக்கேன். இதுல இதுங்க வேற…’ என நொந்தாள்.

மீரா அர்ஜுன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து, ‘அவசரப்பட்டு அடித்து விட்டோமே… குழந்தையைத் தூக்கி கொண்டு, நான் அவ்வளவு தூரம் சென்றிருக்க கூடாதோ? அர்ஜுன் சொன்ன மாதிரி , ஏதாவது நடந்துருந்தா’ என்று நினைத்தவளுக்கு உடலெல்லாம் நடுங்கியது.

பின் அவளே ‘சாரி அர்ஜுன், அந்த நேரத்தில நான் இதெல்லாம் யோசிக்கிற மனநிலைல இல்ல. அந்த பிஞ்சு குழந்தையோட உயிரை காப்பாத்தணும்னும், உங்களை விட்டு எவ்ளோ தூரம் போகமுடியுமோ அவ்ளோ தூரம் போகணும்ன்னும் மட்டும் தான் யோசிச்சேன்…

அந்த நேரத்துல நான் எடுத்த இந்த முடிவு மட்டும் தான் சரி அர்ஜுன். உங்களை ரொம்பவே கஷ்டப்படுத்துறேன்ல? நான் உங்களுக்கு வேணாம் அர்ஜுன். என்னால உங்களுக்கு எப்பவுமே கஷ்டம் தான்…”  என்று கண்ணில் நீர் வழிய அவன் சென்ற திசையையே பாரத்துடன் பார்த்து கொண்டிருந்தாள்.

உத்ரா அவள் அறைக்கு சென்று, “டேய் துருப்புடுச்சவனே… உனக்கு லாஸ் பண்ணி விட்டதுக்கு என்னை பழி வாங்குறியா உன்னை” என்று கடுங்கோபத்தில் அவனை கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டிக் கொண்டிருந்தாள்.

அந்த நேரத்தில், அவளுக்கு போன் வர, அதனை எடுத்துப் பார்த்தவளுக்கு அதில் “ரிஷி” என்ற பெயர் வர, அவள் முகம் பாறையாய் இறுகியது.

ரிஷிகேஷ், உத்ராவின் உடன் பிறந்த அண்ணன். ஆனால் அது பெயரளவில் மட்டுமே.

அவளுக்கு முழு முதல் எதிரியும், அவள் அழிவில் ஆனந்தப்படுபவரில் அவனும் ஒருவன். மற்றொரு ஜீவன், அவளின் சித்தி காஞ்சனா. உத்ராவின் அம்மா மயூரியும், அவளின் அப்பா வெங்கடேஷும் மனமொத்த தம்பதிகள் தான்.

உத்ராவின் தாய் மயூரி அதிர்ந்து கூட பேசாத ரகம். புகுந்த வீட்டில் அனைவருடனும் மிகுந்த பாசத்துடன் இருப்பார். அந்த வீட்டில் அனைவரும் ஆண் பிள்ளைகளாய் இருக்க, முதல் பெண் குழந்தையாய் பிறந்தது உத்ரா தான். அப்பொழுது, ரிஷிக்கு 3 வயது இருக்கும்.

அவன் பிறந்ததில் இருந்து, மயூரிக்கு சிறு உடல் நிலை தொய்வு ஏற்பட்டதில், அவன் பாதி நேரம் அவனின் சித்தி காஞ்சனாவிடம் தான் இருப்பான். அவள் மயூரியின் ஒன்று விட்ட தங்கை. ஆனால் குணத்தில் தமக்கைகள் இருவரும் எதிர் துருவம் தான்.

காஞ்சனாவிற்கு ஏற்பட்ட மணவாழ்வும் முறிந்து விட, அதில் அவளுக்கு அவள் முன் சந்தோசமாய் இருக்கும், மயூரியை கண்டால் கோபம் தான் பொங்கி எழும்.

தங்கைக்காக எல்லாமே பார்த்து பார்த்து செய்ய, காஞ்சனாவிற்கோ, மயூரிக்கு அமைந்த நல் வாழ்க்கையைக் கண்டு பொறாமை தான்.

ஒரு கட்டத்தில் அது, அவளிடம் இருந்து அனைத்தையும் பிரிக்க வேண்டும் என்ற எண்ணத்திற்க்கு கொண்டு வந்து விட்டது.

ரிஷியும்  எப்போதும், காஞ்சனாவிடம் இருப்பதால், அவள் சிறு வயதில் இருந்தே, அந்த பிஞ்சு மனதில் நஞ்சை விதைத்திருந்தாள். தங்கையின் குணத்தைப் பற்றி அறியாத மயூரியோ, சித்தி இடம் நன்றாக ஒட்டிக்கொண்டான் என்று பெருமையாக சொல்லிக் கொள்வார்.

கருணாகரனும், வெங்கடேஷும், அவர்களின் குடும்ப தொழில்களைப் பார்த்துக்கொண்டிருக்க, வெங்கடேஷுக்கு வெளிநாட்டில் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என ஆசை வந்தது.

அதற்கான, வேலை எல்லாம் செய்து விட்டு, மனைவி மக்களை அழைத்துக்கொண்டு வரலாம் என்று நினைத்து அவர் ஊருக்கு வர, மயூரி படியில் இருந்து தவறி  விழுந்து இறந்த செய்தியே கிட்டியது.

மேலும் காஞ்சனா “உங்களை நம்பி தான மாமா விட்டுட்டு போனாரு, இப்படி எங்க அக்காவை கொன்னுட்டீங்க எல்லாருமா சேர்ந்து” என்று அவர் காதுப்படவே மொத்த குடும்பத்தையும் குற்றம் சுமத்தி அழுதவர்,

“அம்மா இல்லாமல், இந்த குழந்தைங்க இனிமே எப்படி வளருமோ” என கதறி கதறி அழுதார் விஷமத்துடன்.

அந்த நேரத்தில் அவளின் பேச்சை நம்பியது, வெங்கடேஷின் விதியோ என்னவோ. வெளிநாட்டிற்கு செல்கிறேன் என்று சொன்னதில் இருந்து கருணாகரன், அவர் செய்யும் ஒவ்வொன்றிற்கும் எதேச்சையாய் குற்றம் கண்டு திட்டியதை எல்லாம் நினைவுபடுத்தி, சொத்திற்காக தன் குடும்பம் தனக்கு தவறு இழைத்து விட்டதோ என தவறாக முடிவெடுத்தார்.

அவர்களிடம் சண்டை இட்டு, உத்ராவையும், ரிஷியையும், கூடவே குழந்தைகளை பார்த்துக் கொள்ள, காஞ்சனாவையும் கூட்டிக்கொண்டு லண்டன் சென்றார்.

அப்போது உத்ராவிற்கு 4 வயது தான். மயூரி மாதிரியே குடும்பத்தில் அனைவரிடமும் பாசத்துடன் இருப்பவளுக்கு, தாய் இறந்த வேதனையே மனதை விட்டு மறையும் முன்பு, மொத்த குடும்பத்தையும் இழந்து ஏங்கிப் போய் விட்டாள்.

பின், சிறிது நாளில் வெங்கடேஷ், காஞ்சனாவையே திருமணம் செய்து கொள்ள, அதன் பின், ஆண் வாரிசான ரிஷியை தன் கையில் போட்டு கொண்டு, கருணாகரனிடமும், லக்ஷ்மியிடமும் வெங்கடேஷை ஒட்ட முடியாதவாறு செய்து, ரிஷிக்கு அவனின் குடும்பமே அவனுக்கு எதிரி என்று விதைத்திருந்தாள். இதில் அவளுக்கு சவாலாய் இருந்தது உத்ரா தான்.

தினமும் ‘அத்தையிடமும் பெரியப்பாவிடமும் பேசியே தீருவேன், அங்கேயே போறேன்’  என அடம்பிடித்து அழுவாள்.

சிறு வயதில் இருந்தே, அவளுக்கு திமிர்த்தனமும் சற்று ஜாஸ்தி தான். அவள் அழுகையில் காஞ்சனா அவளை அடிக்க போனால், “என் மேல கையை வச்ச அடிச்சு மண்டையெல்லாம் உடைச்சுடுவேன்” என்று குட்டிக் குரலில் அவளை திமிராய் பார்த்து மிரட்டுவாள்.

பயம் என்ற உணர்வு தன்னில் எழுந்தாலும் முயன்று அதனை மறைத்து, ரிஷி மற்றும் சித்தி செய்யும் அனைத்திற்கும் நிமிர்வுடனே இருப்பாள்.

ஒரு கட்டத்தில் அவர்களை வெறுக்கும் நிலைக்கு சென்று, 10 வயது இருக்கும் போது வேண்டும் என்றே காய்ச்சல் வர வைத்து, உண்ணாமல் இருந்து நான் இந்தியாவிற்கே போகிறேன் என அடம்பிடித்தாள்.

மகளின் உடல் நிலை கெட்டு விடுமோ என்று அஞ்சியவர் வேறு வழி இன்றி அவளை அனுப்பிவைத்தவருக்கு சில நாட்களிலேயே காஞ்சனாவின் சுயரூபம் தெரிய வந்தது.

இவள் பேச்சை நம்பி தன் குடும்பத்தை பகைத்து கொண்டிருக்க கூடாதோ என்று நொந்தவருக்கு மீண்டும் அவர்களை காணும் சக்தி இல்லாது தன் வேலைகளுக்குள்ளேயே அவரை புதைத்துக் கொண்டார்.

பின், மொத்த சொத்தையும் இறக்கும் தருவாயில் உத்ராவிற்கே அவர் எழுதி வைத்து, ரிஷிக்கும், காஞ்சனாவிற்கும் தேவையான பணத்தை மட்டும் கொடுத்து, வெளிநாட்டில் இருக்கும் தொழிலை வேறு ஆள் மூலமாக பார்த்து கொள்ள ஏற்பாடு செய்தார்.

ரிஷிக்கு அங்கு வேலை பார்த்தால் மட்டுமே சம்பளம் என்றும், 5 வருடங்கள் எந்த தப்பு தவறுக்கும் போகாமல், ஒழுங்காக வேலை செய்தால், உத்ராவிற்கு கொடுத்த சொத்தில் ஒரு பங்கு அவனுக்கு வரும் என்றும், இல்லை என்றால் கடைசி வரை வேலையாளாக மட்டும் இருக்கும் படியும் உயில் எழுதி இருந்தார்.

அவர் இப்படி செய்ததற்கு பல காரணங்களும் இருந்தது. ஆனால் அவர் எடுத்த இந்த முடிவு, உத்ராவிற்கு பல காயங்களையும், வேதனைகளையும் தான் கொடுத்தது. அவள் வாழ்வில் இந்த நிலையை அடைய அவள் எவ்வளவோ இழப்புகளையும், துரோகங்களையும் சந்திக்க வேண்டி இருந்தது…

சேரில் கண் மூடி, கண்ணீரை விழியில் இருந்து வெளி வராது, தனக்குள் அடக்கிக் கொண்டு, பழையதை நினைத்தவள், பெருமூச்சு விட்டு, இயல்புக்கு வந்தாள். அதற்குள் அவளின் போன் பல முறை அடித்து அடங்கியது.

மீண்டும் ரிஷிக்கு போன் செய்தவள், என்னவென்று கேட்க, அவன், கோபமாக,

“என் அகௌண்ட்ல இருந்த பணத்தை ஏன் எடுத்த?” என்று கேட்க,

“உன்கிட்ட ஏது இவ்ளோ பணம்… நீ எதுக்கு ஒரு நாலு அடியாளை வச்சுக்கிட்டே சுத்துற…? அவங்களை எதை தேட சொல்லி, நீ பணம் குடுத்த” என்று மறுகேள்வி கேட்டாள்.

“அதெல்லாம் உனக்கு தேவை இல்லாத விஷயம். அதான் சொத்தை எல்லாம் நீயே வாங்கிட்டியே அப்பறம் எதுக்கு நீ என் விஷயத்துல தலை இடற…” என்று கர்ஜித்தவனுக்கு, அதிகமாய் எங்கிருந்து பணம் வருகிறது என்று தான் உத்ராவிற்கு புரியவில்லை.

அவன் வெளியில் தெரியாமல் ஏதோ தவறு செய்கிறானோ என்று ஐயமும் எழுந்தது. ஆனால் அவளுக்கு இப்போது இதை பற்றி யோசிக்கத்தான் நேரமில்லை. எங்கே எதிரில் தான் அவளின் வில்லனான நாயகன் நின்று, பிரஸ் மீட்க்கு வரச்சொல்லிக் கொண்டிருந்தானே.

அவனை கண்டதும், போனை வைத்து விட்டு, “இப்போ எதுக்கு பிரஸ் மீட்?” என உத்ரா கடுப்புடன் கேட்க,

அவனோ “ம்ம் உனக்கும் எனக்கும் கல்யாணம்ன்னு அனௌன்ஸ் பண்ண” என்று சாதாரணமாய் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தாள்.

பின் கோபமாக, “என்ன உளறுற துருவ்… உனக்கும் எனக்கும் கல்யாணமா? உன்னை மாதிரி ஒரு விமனைசர என் லைஃப் பார்ட்னரா நான் நினைச்சு கூட பார்க்க மாட்டேன்…” என்று அவள் தீப்பொறி பறக்கக் கூறியதில், துருவ் கடுங்கோபத்துடன் அவள் கழுத்தைப் பிடித்தான்.

பின், சட்டென்று அவளை விட்டு விலகியவன், அவனின் செயலில் அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவளை  இழுத்து கொண்டு, மீட்டிங் சென்றான்.

அங்கு, அனைவரும், மாறி மாறி உத்ராவிடம் கேள்வி கேட்க உண்மையில் அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று கூட தெரியவில்லை.

துருவ் தான், “ஹாய் லேடிஸ் அண்ட் ஜென்டில்மென்ட்ஸ்… இங்க மேரேஜ் அனௌன்ஸ்மென்ட்காக உங்களை வரச்சொல்லல. உங்களுக்கு தப்பா நியூஸ் வந்துருக்குன்னு நினைக்கிறேன். எங்க ரெண்டு கம்பெனியையும் டை – அப் பண்ணிருக்கோம். அதை பப்ளிஷ் பண்ண தான் வரசொல்லிருக்கோம்” என்று கூற, அவள் மேலும் திகைத்தாள்.

தான் கையெழுத்திடவே இல்லையே என அவன் கையில் வைத்திருந்த தாள்களை வாங்கிப் பார்த்தவளுக்கு, ஏற்கனவே கையெழுத்து வாங்கிய அக்ரீமெண்ட் பேப்பரில், டை – அப் க்கும் சேர்த்து அவளுக்கே தெரியாமல் கையெழுத்து வாங்கி இருந்தான்.

அஜயும் சுஜியும் இது எப்போ நடந்துச்சு என்று அவளைப் பார்க்க, அவள் துருவை தீயாய் முறைத்து கொண்டிருந்தாள்.

அவன் அதனை எல்லாம் கண்டு கொள்ளாமல், பிரஸ் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்க, அதில் ஒருவன், அவனிடம் “திருமணம் எப்போது?” என கேட்க, அவன் அமைதியாய் இருந்தான்.

உத்ரா அவனிடம், “அட என்ன சார் இப்படி கேட்டுடீங்க? துருவ் சார்க்கு கல்யாணம்லாம் ஒரு விஷயமா அவருக்கு இதுல எல்லாம் நம்பிக்கை இல்ல… ஒன்லி லிவிங் டு கெதர் தான் அவருக்கு பிடிக்கும். அதுவும் இல்லாமல், ஆஸ்திரேலியால பல பொண்ணுங்க அவருக்காக வெயிட்டிங்” என்று தேவை இல்லாமல் வாக்கு மூலம் தர, சொல்லவா வேண்டும் மீடியாவிற்கு, துருவை பற்றி அவள் சொன்னதற்கும் மேலே எழுதி கிழித்து தள்ளி விட்டார்கள்.

அவள் பேச பேச, கடினமாய் இறுகியவன், அமைதியாய் அங்கிருந்து சென்றான். அவனின் அமைதியே அவளுக்கு கொஞ்சம் ஓவராதான் போயிட்டோமோ என்று நடுக்கத்தையும் கொடுத்தது.

பின், ஆனானபட்ட, சித்தியைவே சமாளிப்போம், இவனை சமாளிக்க மாட்டோமா என்று நினைத்து விட்டு, அவள் வேலையை தொடர்ந்தாள்.

ஆனால் அவன் அடுத்து எவ்வாறு செக் வைப்பான் என்று தான் அவளுக்கு புரியவில்லை… அவன் வைக்கும் செக்கில், தான் மொத்தமாய் ஆட்டம் கண்டு போவதை அவள் அறியவில்லை.

நாட்கள் இவ்வாறு செல்ல, தீவிரமாக வேளையில் மூழ்கிய சுஜிக்கு போன் வர, அதனை எடுத்து பேசியவள்,

“ஹலோ! ஆமா ஆமா… வாவ்… அப்டியா?? இப்பயாவது உங்களுக்கு இதை பண்ணனும்னு தோணுச்சே… ஓகே ஓகே நாளைக்கு மீட் பண்றேன். டீடைல் அனுப்பி வைங்க.” என்று குதூகலமாய் பேசிவிட்டு போனை வைக்க, உத்ராவும், அஜயும் என்ன என்று பார்த்தனர்.

அவள், “அம்மா தான் பங்கு, மாப்பிள்ளை பார்த்துருக்காங்களாம். நாளைக்கு கேஷுவல் மீட்டிங் மாதிரி காபி ஷாப்ல மீட் பண்ண சொன்னாங்க” என்க,

உத்ரா “அட சூப்பர் பங்கு” என்றாள் விழி விரித்து.

அஜய் “வாவ் அப்போ நாளைக்கு செம்ம என்டர்டைன்மெண்ட் இருக்கா” என்றான் குதூகலமாக.

சுஜியோ “உனக்கு என்ன என்டர்டைன்மெண்ட்?” என்று ஒரு மாதிரியாக கேட்க,

“ஆமா நாளைக்கு உனக்கு மாப்பிள்ளை பார்க்க போறோம்ல” என குஷியாய் அஜய் கூறியதில், அவள் அவனை முறைத்து, “போறோம் இல்லை நான் மட்டும் போறேன்” என்றாள் அழுத்தமாக.

அவன் “அதெல்லாம் முடியாது. நானும் தான் வருவேன்” என்று பிடிவாதமாய் கூற, சுஜி உத்ராவிடம்

“பாரு உதி இவனை… காலேஜ்ல தான் என்னை கமிட் ஆக விட மாட்டேண்டான். இப்பயும் என்னை டார்ச்சர் பன்றான்” என பாவமாய் சொல்ல,

அவள் சிரித்து விட்டு ‘உங்க பஞ்சாயத்துக்கு நான் வரல’ என்று வெளியில் சென்று விட்டாள்.

சுஜியின் மொபைலுக்கு மாப்பிள்ளை பற்றிய தகவலை அவளின் அம்மா அனுப்பி வைக்க, அதனை அவளுக்கு முன் எடுத்த அஜய், அந்த போட்டோவை பார்க்க, சுஜி “டேய் போனை குடுடா” என்று பிடுங்கினாள்.

அவன் அவளிடம் தராமல், அவள் அருகில் அந்த மாப்பிள்ளை போட்டோவை வைத்து விட்டு, “ம்ம் கொஞ்சம் சுமார் தான்” என்று முகத்தை சுருக்கி சொன்னான்.

சுஜி, “மாப்பிள்ளை கொஞ்சம் சுமார்தானாடா?” என்று முகம் சுருக்கி கேட்க,

அவன் “இல்லை பஜ்ஜி, இந்த சுமார் மூஞ்சிக்கு பக்கத்துல உன்னை பார்த்தாவாவது நீ அழகா தெரியுவியான்னு பார்த்தேன்… பட் இப்பயும் நீ சுமாராத்தான் இருக்க” என்றதில், சுஜி உச்ச கட்ட கோபத்திற்கே சென்று அவனை அடிக்கத் துரத்தினாள்.

அர்ஜுன் எப்படியும் வருத்தத்தில் தான் இருப்பான் என நினைத்து, உத்ரா, அஜய், சுஜி, விது நால்வரும் அவனைப் பார்க்க இரவு மருத்துவமனைக்கு செல்ல, அங்கு சீட்டில் சாய்ந்து, தலையில் கை வைத்து அமர்ந்திருந்தான்.

உத்ரா “அர்ஜுன்” என அழைக்க, அதில் விழித்தவன், மூவரையும் பார்த்து “என்ன எல்லாரும் ஒண்ணா வந்துருக்கீங்க”என்று கேட்க,

விது “என்னதான்டா நடக்குது இங்க… ஐயோ எனக்கு ஒரே குழப்பமா இருக்கு” என தலையை பிய்த்து கொண்டான்.

உத்ரா, “அர்ஜுன் ஒருவேள அவ உன்னை லவ் பண்ணவே இல்லையோ… நீ எதுவும் தப்பா புரிஞ்சுகிட்டு,” என்று பேச வர,

அவன் கோபமாக “என்ன உதி ஒரு பொண்ணு என்னை லவ் பண்றாளா இல்லையான்னு கூடவா தெரியாமல் அவள் பின்னாடி சுத்துவேன்.” என்றவன், என்னை இப்படி நினைத்து விட்டாயே என்பது போல முறைத்தான்.

  “சே சே இல்லடா ஒருவேளை நீ எதுவும் மிஸ் அண்டர்ஸ்டாண்ட் பண்ணிருப்பியோன்னு தான்” என்று தயங்கியவள், “சரி அதை விடு, அவள் ஏன் உன்னை விட்டுட்டு போனாள்” என்று கேட்டாள்.

“அதைத்தான் நானும் அவள்கிட்ட கேட்குறேன் சொன்னாதான” என்று அர்ஜுன் எரிச்சலாய் கூற,

சுஜி “யப்பா சாமி நீ முதல்ல உன் ஃப்ளாஷ் பேக் – அ சொல்லு… கொரியன் சீரியல் கூட சப்டைட்டில் போட்டா, அர்த்தம் புரியும். ஆனால் உன் ஸ்டோரிக்க்கு எத்தனை சப்டைட்டில் போட்டாலும் ஒரு எழவும் புரியமாட்டேங்குது” என்றாள் கடுப்பாக.

அதில் அனைவரும் சிரிக்க, அர்ஜுன் பெருமூச்சு விட்டு, “சொல்றேன் வீட்டுக்கு போய் பேசலாம்” என்று கிளம்பினான்.

சுஜி தான் வீட்டிற்கு போன் செய்து, “அம்மா இன்னைக்கு எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. நான் உத்ரா வீட்ல ஸ்டே பண்ணிட்டு வரேன்.” என்று போனில் சொல்ல,

அவளின் அம்மா காயத்ரி, “அப்படி என்ன முக்கியமான வேலை” என்று கேட்க,

“மா சில பல வரலாறுகளை தெரிஞ்சுக்க போறேன்… ” என்றதில் அஜய் தலையில் அடித்துக் கொண்டான்.

அனைவரும் வீட்டிற்கு செல்ல, அஜய், “பங்கு, நம்ம மொட்டை மாடில போய் பேசலாம். நீ மாடிக்கு வந்துடு” என்க,  அர்ஜுன் சரி என்று விட்டு அவன் அறைக்கு சென்றான்.

சிறிது நேரம் கழித்து மொட்டைமாடிக்கு சென்றவன், கடுப்புடன் “அட பக்கிங்களா” என இடுப்பில் கை வைத்து நொந்தான்.

அங்கு அவர்கள் செய்த செட் அப் அப்படி. நான்கு பேருக்கும் மெத்தையை விரித்து, கொசு வலையைக் கட்டி, பால் பழம், நொறுக்குத் தீனி என்று பல வகைகள் படுக்கையை சுற்றி இருக்க, கொசுறாக, பக்கத்தில் கொசுவத்தி சுருள் ஒன்று எரிந்து கொண்டிருந்தது.

அதில் அனைவரையும் முறைத்தவன், அஜயிடம் மெதுவாக, “டேய் இது என்னடா பாலும் பழமும். நம்ம என்ன ஃபர்ஸ்ட் நைட்டாடா வந்துருக்கோம்” என்று பல்லைக் கடிக்க, அவன் “குறும்பு” என அவன் கன்னத்தில் இடித்தான்.

‘இதுங்கள எல்லாம் வச்சுக்கிட்டு நான் பிளாஷ்பேக் சொல்லனுமா’ என புலம்பியபடி , கீழே அமர, அங்கு உத்ராவும் சுஜியும், கையில் ஒரு சிப்ஸ் பாக்கெட்டை வைத்துக் கொண்டு, அவன் ஏதாவது பேசுவான் என்று அவன் முகத்தையே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அர்ஜுன் ‘அடுத்தவன் கதையை கேக்குறதுல எவ்ளோ ஆர்வம்’ என்று பார்த்து விட்டு,

“ஆமா எதுக்கு இவ்வளவு தின்பண்டம்” என்று கேட்க,

உத்ரா “என்னடா நீ? விடிய விடிய பிளாஷ்பேக் சொல்ல போற. எங்களுக்கு பசிக்கும்ல.”

“அது ஒன்னும் அவ்ளோ பெரிய ஃபிளாஷ்பேக்லாம் இல்லை பங்கு.” என்று நெற்றியில் கை வைத்து அமர்ந்தான்.

விது “சரி அதை விடு பங்கு, நீ சொல்லு. ஃபர்ஸ்ட் மீராவை எங்க பார்த்த” என்று கேட்டான்.

அர்ஜுன் சிறு சிரிப்புடன், “அவள் இருந்த ஆஸ்ரமம்ல நாங்க ஒரு மெடிக்கல்  கேம்ப் போட்ருந்தோம். அங்கதான் அவளை முதல் தடவை பார்த்தேன். சாதாரண ஒரு காட்டன் சுடிதார். அங்க இங்க அலைபாஞ்சுகிட்டே இருக்குற, கண்ணு. அங்க இருக்குற குழந்தைங்ககிட்ட அவள் காட்டுன அன்பு. எல்லாமே என்னை பிரமிக்க வைச்சது… என் எதிர்ல”  என்று ரசித்து கூறி கொண்டிருக்க,

சுஜி “கட் கட் கட்”  என்று அவனை நிறுத்தினாள்.

“நான் என்ன நடந்துக்கும்னு  சொல்றேன்” என்றவள்,

“குளு குளுன்னு மாலை நேரக் காற்று, அப்டியே அந்த காத்துல கலந்து வர்ற பூ வாசம்… அவளோட கொலுசு சத்தம்… உன்னை பார்க்கவும், நீதான் டாக்டர்ன்னு உன்னை பார்த்து லேசா சிரிச்ச அந்த சிரிப்பு…” என்று அவள் போக்கிற்கு சொல்ல,

உத்ரா கடுப்புடன் “ஆமா மீரா என்ன அவனோட ஆளா இல்லை ஆவியா? ஹீரோயின் என்ட்ரி சீன் சொல்லுடீன்னா  பேய் வரதுக்கு இருக்குற அறிகுறியை சொல்லிக்கிட்டு இருக்க.” என்று நக்கலடிக்க, அதில் அஜயும் விதுவும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

அர்ஜுன் தலையணையை சுஜியின் மேல் எடுத்து அடித்து,

“கண்ட கண்ட படத்தை பார்த்து கெட்டு குட்டி சுவரா போயிருக்க. அன்னைக்கு குளுகுளுன்னு காத்து லாம் அடிக்கல. உச்சி வெயில் மண்டைய பொளந்துக்கிட்டு இருந்துச்சு.

இதுல, அங்க இருக்குற குழந்தைங்க ஓடி விளையாண்டு தூசி வேற. அதுல அனல் காத்து தான் அடிச்சுச்சு” என்ற எரிச்சலுடன் கூறியவனின் முகம் இப்போது கனிந்தது.

தலையை மேலே சாய்த்து, “ஆனால் அந்த அனல்ளையும் அவளை முதல் முறை பார்க்கும் போது, உள்ளுக்குள்ள சில்லுன்னு சாரல் அடிச்சுது” என்றான் சிலிர்ப்பாக.

உத்ராவோ தலையை சொரிந்து “அப்போ அன்னைக்கு மழையும் பெஞ்சுச்சு. வெயிலும் அடிச்சுச்சா பங்கு?” என்று மிகத் தீவிரமாய் கேட்க,

சுஜி, “அன்னைக்கு அப்போ காக்காவுக்கும் குருவிக்கும் கல்யாணம் நடந்துருக்குமே நீ பார்த்தியா?” என அவள் பங்கிற்கு வினவ, அவன் கொலைவெறியில் இருவரையும் முறைத்து கொண்டிருந்தான்.

உறைதல் தொடரும்…
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
21
+1
63
+1
7
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்