தன்னை முறைத்த மாதவைக் கண்டு அசடு வழிந்த தஷ்வந்த், “அப்போ நீயும் பேக் பண்ணிடு பாஸ்” என்றான் நக்கலாக.
மாதவோ, “டேய்ய்… உனக்கு நான் என்னடா துரோகம் பண்ணுனேன். கிளாசுக்கு வழி கேட்டு உன்கிட்ட பேச ஆரம்பிச்சவனை, கல்லறைக்கு வழி சொல்லி அனுப்பிட்டு இருக்கியே. இதெல்லாம் நியாயமாடா.” என்று அங்கலாய்த்தான்.
சிரிப்பை அடக்கியவன், “எனக்கு அவள் கூட தனியா போக பயமா இருக்கு பாஸ். இந்த ஊர்ல எனக்கு உன்ன விட்டா யாரு இருக்கா சொல்லு.” என்று சென்டிமென்டை கடலளவு பிழிய, மாதவிற்கு தான் சத்திய சோதனையாக இருந்தது.
இவற்றை கேட்ட மந்த்ராவிற்கு முகத்தில் ஈ ஆடவில்லை.
“என்னடா சொல்லிட்டு இருக்கீங்க? அப்போ அபார்ட்மெண்ட் போக தான் போறீங்களா?” என்று திகைக்க,
“வேற ஏதாவது வழி இருந்தா நீயே சொல்லு” என்று முறைத்தான் தஷ்வந்த்.
அவனை பாவமாக பார்த்தவள், “அவளுக்கு பைத்தியம் பிடிச்சு இருக்கு தஷு. நம்மளை யாரு கேள்வி கேட்க போறான்ற ஆணவம். அவள் எவன் கூட வேணும்னாலும் எப்படி வேணாலும் இருந்துட்டு போகட்டும்… அதுக்காக பிடிக்காத உன்னை கம்பெல் பண்றது சுத்த மடத்தனம்.” என கோபத்தில் வார்த்தைகளை விட,
“மந்த்ரா! ஸ்டாப் திஸ்.” தஷ்வந்த் சற்றே அழுத்தத்துடன் அவளை நிறுத்தினான்.
முகத்தில் சிறியதொரு சினம் தாண்டவமாட, “இதை நான் ஹேண்டில் பண்ணிக்கிறேன். இனிமே நம்ம இதை பத்தி பேச வேணாம்.” என்று இறுகிய குரலில் கூறி விட்டு சென்றவனை இருவருமே வியப்பாக தான் பார்த்தனர்.
அவன் இதுவரை விளையாட்டிற்கு கூட கோபப்பட்டு அவர்கள் பார்த்ததில்லை. அவளைப் பற்றி பேசியதற்கு ஏன், இத்தனை கோபம் என்ற விடை புரியாமல், மந்த்ரா மாதவை பார்க்க, அங்கு தஷ்வந்த் கூட அதே நிலையில் தான் இருந்தான்.
ஏனோ, அவளைப் பற்றி தவறாக பேசுவதை அவனால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. அவள் செய்வது தவறு தான்… தன்னை அவள் விருப்பத்திற்கு ஆட்டுவிக்கிறாள் தான்… ஆனால், தன்னிடம் மட்டுமே நெருங்குகிறாள் என்பது அவனுக்கு உறுதி. அதற்காக அவளது குணத்தை கொச்சைப்படுத்த அவனுக்கு விருப்பமிருக்கவில்லை. அதிலும் முந்தைய நாள், அவளுடன் வெளியில் சென்று விட்டு வந்த பின்னர், முற்றும் குழம்பிய மனநிலைக்கு தள்ளப்பட்டிருந்தான். அதுவே, அவளை நிதானமாக கையாள வைத்தது.
‘எப்படியோ, என்மேல இருக்குற ஈர்ப்பை தப்புன்னு புரிய வச்சுட்டா போதும். ஷீ கேன் அண்டர்ஸ்டாண்ட். அதுக்கு, அவள் வழில தான் போகணும்…’ என இவ்விஷயத்தை கவனமாக சரி செய்ய முயன்றவனின் பொறுமையை வெகுவாய் சோதிக்க போகிறாள் என்றறியாது போனான்.
மீண்டும் நண்பர்களுடன் இணைந்தவன், முந்தைய உரையாடல் நிகழ்பெறவே இல்லையென்ற ரீதியில் சாதாரணமாக பேச, மந்த்ராவும் அளவாக பேசி முடித்து விட்டாள்.
மாலை நேரம் ஆக ஆக, தஷ்வந்திற்கு நெஞ்சம் படபடவென துடிக்கத் தொடங்கியது. அவனை விட மாதவ், நெஞ்சை பிடித்தபடி வெளிறி அமர்ந்திருக்க, இருவரையும் பார்த்த மந்த்ரா எதுவும் சொல்லவில்லை. சாவகாசமாக போனை உபயோகப்படுத்திக் கொண்டிருக்க,
“அடிப்பாவி… இங்க ஒருத்தான் உயிர் பயத்துல இருக்கானேன்ற அக்கறை இருக்கா உனக்கு.” என்று அவளை சாடிய மாதவை நிமிர்ந்து முறைத்தவள், “இது உங்க பிரச்சனை மாதவ். இதுல நான் ஏன் தலையிடணும். இதை பத்தி பேச எனக்கு ரைட்ஸ் இல்ல…” என்றதில், தஷ்வந்த் அப்போது தான், அவள் காலையில் இருந்து சரியாக பேசாததையே உணர்ந்தான்.
சிறு புன்னகையுடன், எழுந்து அவளருகில் வந்து அமர்ந்தவனுக்கு, முகம் காட்டாமல் அவள் மறுபுறம் திரும்பிக் கொள்ள, “என்மேல கோபமா மந்த்ரா?” எனக் கேட்டான் மென்மையாக.
அவள் பதில் பேசாமல் அமைதியுடன் இருக்க, அவள் கையை பிடித்துக் கொண்டவன், “சாரி மந்த்ரா. உனக்கு ரைட்ஸ் இல்லைன்னு நான் ‘மீன்’ பண்ணல. ஒரு மாதிரி குழப்பத்துல இருந்தேன். அதான்… ஒன்ஸ் அகைன் சாரிப்பா” என்றான் வருந்தும் குரலில்.
அவனை அப்படி கெஞ்ச வைக்க பிடிக்காமல், “எனக்கு புரியுது தஷு. ஆனா அவளுக்காக நீ ஏன் டென்ஷன் ஆகிக்கணும்.” என்றதில், தஷ்வந்த் பதில் பேசாமல் இருக்க,
மாதவ் தான், “அட விடு மந்த்ரா. அவன் யாரையுமே ஹர்ட் பண்ணனும்னு நினைக்க மாட்டான். அப்படிப்பட்டவன்கிட்ட ஒருத்தியை தப்பா பேசுனா அவனால அக்செப்ட் பண்ணிக்க முடியல. அவ்ளோ தான். உனக்கு தான் தெரியும்ல.” என்றதில் அவளும் ஆமோதித்தாள்.
“ஆமா மாதவ். அவன் இருக்குற டென்ஷன்ல நான் வேற தேவையில்லாம டென்ஷன் பண்றேன்” என்றவள், தஷ்வந்திடம் திரும்பி, “சாரிடா” என்க, “ஹே… அதெல்லாம் ஒன்னும் இல்ல. இப்ப ஓகே ஆகிட்ட தான. இனிமே ரைட்ஸ் அது இதுன்னு பேசாத சரியா?” என்றான் போலி முறைப்புடன்.
அதில் புன்னகைத்தவள், “டீல்” என்று கட்டை விரலை தூக்கி காட்ட, அவளது கரம் இன்னும் அவன் கைக்குள் தான் இருந்தது. அவளை சமாதானம் செய்வதற்காக கையை பிடித்தவனுக்கு பெரியதாக ஒன்றும் தெரியவில்லை.
ஆனால், அவனைப் பார்க்கும் பொருட்டு, அங்கு வந்த மஹாபத்ரா விழிகளில் நெருப்பை ஏற்றி சுட்டெரிக்க, அதன் பிறகே மந்த்ராவும் பட்டென கையை எடுத்துக் கொண்டாள்.
ஏற்கனவே சேதப்படுத்திய கரமே இப்போது தான் சரியாகி இருக்கிறது என்ற பயம் அவளுக்கு.
தஷ்வந்த் தான், ஏகத்துக்கும் விழித்து, அவளை எதுவும் செய்து விடுவாளோ என அரண்டு, “நீ போ மந்த்ரா” என்றவன், உடனேயே அவளை அனுப்பி விட்டு, “நான் கிளம்பிட்டேன் பத்ரா” என்றான் வேகமாக.
இன்னும் முறைப்பை மாற்றாமல் இருந்தவளிடம், “அது… சும்மா ஒரு சின்ன சண்டை. அதான் அவளை சமாதானம் பண்ணிட்டு…” என தானாக ஆஜராக, விழி இடுங்க நோக்கியவள்,
“கையை பிடிச்சு தான் சமாதானம் பண்ணுவியா? இப்ப நானும் கோபமா இருக்கேன். சமாதானம் பண்ணு” என்றாள் கையைக் கட்டிக் கொண்டு.
“சிறப்பு… பாஸ் நீ சமாதானம் பண்ணிட்டு இரு. நான் ஹாஸ்டல்ல திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு வரேன்.” என்ற மாதவ் விட்டால் போதும் என ஓடி விட, தஷ்வந்த் தான், தலையை சொரிந்தான்.
“என்னடா பாத்துட்டு இருக்க. நான் செம்ம கோபத்துல இருக்கேன். சமாதானம் பண்ணு. ஃபாஸ்ட்” என்றவளை வேற்றுக்கிரகவாசி போல பார்த்து வைத்தவன்,
“இப்ப எதுக்கு கோபமா இருக்க?” என்றான் புரியாமல்.
“அதெப்படி நீ இன்னொருத்தி கையை பிடிக்கலாம்.” என்ற கேள்வியில் தன்னை நொந்தவன்,
“நான் தப்பான எண்ணத்துல பிடிக்கல பத்ரா. அவள் என் ஃப்ரண்ட். அந்த உரிமை எனக்கு அவள் மேல நிறையவே இருக்கு.” என்றான் பட்டென.
பேசியதும் தான், சற்றே கலவரம் ஆனவன், “ப… பத்ரா… அவளை எதுவும் பண்ணிடாத. நாங்க வெறும் ஃப்ரெண்ட்ஸ் தான்.” என்று பதறியபடி கூறிட,
லேசாக சலித்தவள், “நான் அவளை எதுவும் பண்ண போறது இல்ல. பண்ணவும் முடியாது.” என்றாள்.
அதில் நிம்மதியானவன், “ஏன்” எனக் கேட்க,
‘அமிஷ் விரும்பும் பெண்ணை நிச்சயம் காயப்படுத்த மாட்டேன்’ எனக் கூற வந்தவள், பின் அதனை தவிர்த்து,
“இப்ப இது ரொம்ப முக்கியமா? முதல்ல என்னை சமாதானம் பண்ணு.” என்றாள் சிலுப்பிக் கொண்டு.
அவனோ “அதான் நான் விளக்கம் சொல்லிட்டேன்ல” என பாவமாக பார்க்க, “அவளுக்கு மட்டும் தள்ளி நின்னா விளக்கம் சொன்ன” என பல்லைக் கடித்தாள்.
‘இதேதுடா வம்பா போச்சு’ என்ற ரீதியில், அவளது கையைப் பார்க்க, அவள் வயிற்றோடு கையைக் கட்டி இருந்தாள்.
இரு விரல் கொண்டு, மெல்ல அதனை எடுத்து விட்டவன், அவளது வலக்கரத்தை தயக்கத்துடன் பிடித்து, “சரி சாரி” என்றான். எதற்கு ‘சாரி’ கேட்கிறோம் என தெரியாமலேயே.
எதுக்கும் கேட்டு வைப்போம் என அவள் முகம் பார்க்க, அதுவோ இத்தனை நேரம் இருந்த இறுக்கம் மாறி, புன்னகைத்திருந்தது.
“இவளோ தள்ளி நின்னு தான் கையை பிடிப்பியா அமுல் பேபி…” என்றவளைக் கண்டு விழித்தவனின், பாவனையை ஒரு நொடி ரசித்து விட்டு, “சரி வா கிளம்பலாம்” என்றதில் தான் அவனுக்கு மூச்சு விடவே முடிந்தது.
பொங்கிய சிரிப்பை அவனுக்கு காட்டாமல், காரினுள் அமர்ந்தவள், பக்கென சிரித்து விட்டாள். “யூ சோ ஸ்வீட் அமுலு.” எனக் கொஞ்சிக் கொண்டவள், அவன் உள்ளே வருவதைக் கண்டு முகத்தை மாற்றிக் கொண்டாள்.
அவளும் சிறிதும் தூரம் சென்றிட, அதன் பிறகே நினைவு வந்தவனாக, “அய்யயோ… நான் என் லக்கேஜையே எடுக்கல. மாதவை வேற விட்டுட்டு வந்துட்டோம்” என்றான் பதறி.
“இவ்ளோ நேரம் கனவு கண்டுட்டு இருந்தியா அமுல் பேபி.” கேலியாக கேட்டவளிடம், “விளையாடாத பத்ரா. எனக்கு மாதவ் வேணும்” என்றான், எங்கே அவனை கழட்டி விட்டு விடுவாளோ என்ற கலவரத்தில்.
“ச்சீ… மாதவ் என்ன உன் கேர்ள் பிரெண்டாடா. அதான் நான் வரேனே. என்னை விட உனக்கு அவன் வேணுமா?” என்று விளையாட்டாக ஆரம்பித்தவள், முறைப்புடன் முடித்தாள்.
அடுத்ததாக கை பிடித்து மன்னிப்பு தயாராக இல்லாதவன், வாயை மூடிக் கொண்டு சாலையைப் பார்த்தான், மாதவ் என்ன ஆனானோ என்ற தவிப்புடன்.
முகத்தை உர்ரென வைத்திருந்தவனின் அமைதியை சிறிது நேரம் தாக்கு பிடிக்க இயலாதவள், “மாதவை அமி பிக் அப் பண்ணிக்குவான் தஷ்வா. உன் லக்கேஜும் வந்துடும்.” என கியரை மாற்றியபடி கூறியதில், சற்றே நிம்மதியானான்.
“அதான்… அவன் வந்துடுவான்னு சொல்லிட்டேன்ல. அப்பறமும் ஏன் முகத்தை ஜிஞ்சர் மங்கீ மாதிரி வச்சுருக்க…” என கடுகடுப்புடன் கேட்டவளை முறைத்தவன், ‘அதை இந்த ஜிஞ்சர் மங்கீ சொல்லுது’ என்பது போல பார்த்தான்.
பின்னே, அவனாவது சாந்த சொரூபியாக சிறு புன்னகையுடன் யாரையும் கடந்து செல்வான். ஆனால், அவளோ முகத்தை நிச்சலனமாக, தன்னை யாருமே படிக்க இயலாதவாறு அழுத்தமாக வைத்திருப்பாள். அதில் புன்னகை கூட அளவாகவே வரும். அதுவும் நண்பர்களிடம் மட்டுமே. கேலியாக பேசினால் கூட, முகம் என்னவோ கண்டிப்புடன் தான் இருக்கும். இவை அனைத்தும் இந்த இரு நாட்களில் அவளிடம் தெரிந்து கொண்டது.
அவளோ, “என்னை ஜிஞ்சர் மங்கீன்னு சொல்றியாடா?” என்று ஓரக்கண்ணால் பார்க்க, அவன் தான் திகைத்தான்.
“உனக்கு எப்படி தெரியும்?” என வாய் விட்டே கேட்டு விட, இதழ்களை கடித்து புன்னகையை அடக்கியவள், “அகத்தின் அழகு முகத்துல தெரியுது அமுல் பேபி…” என்றாள் அவனை ரசனையாக பார்த்தபடி.
“அவ்ளோ அப்பட்டமாவா தெரியுது…” என்பது போல முகத்தை சீராக்கிக் கொண்டவனை, “ரொம்ப ட்ரை பண்ணாத. உன்னால, உன் ஃபீலிங்ஸை ஃபேஸ்ல காட்டாம இருக்க முடியாது. அதான் எனக்கும் பிடிச்சு இருக்கு…” என்று கண்ணடித்தாள்.
‘ஆனா ஊனா, கண்ணடிச்சு கடுப்பேத்துறா…’ என தனக்குள் திட்டிக் கொண்டவன், முகத்தை அவளிடம் காட்டவே இல்லையே.
அந்நேரம், அவர்கள் தங்கப் போகும் அபார்ட்மெண்ட்டும் வந்து விட, தஷ்வந்த் தான் விழிகளில் தெறிக்கும் திகைப்புடன் பார்த்தான்.
ஏதோ, சிறியதொரு அபார்ட்மெண்ட் என்று அவன் நினைத்திருக்க, அவனை அப்படிபட்ட இடத்தில் இருக்க விடுவாளா அவள்!
‘லக்ஸூரியஸ்…’ என்ற வார்த்தையை கேள்விப்பட்டு இருக்கிறான் தான். ஆனால், அப்படியான அபார்ட்மெண்டை இப்போது தான் நேரில் பார்க்கிறான்.
பார்க், ஜிம், ஸ்விம்மிங் பூல், தியேட்டர், கிளப் என அனைத்தும் ஹை-ஃபை யாக இருக்க, வீடோ சொல்லவே தேவை இல்லை.
இரு படுக்கையறை கொண்ட ஃபிளாட்டின், உள் வடிவமைப்புகளும் விளக்குகளும் செவன் ஸ்டார் ஹோட்டலை தோற்கடித்திருந்தது. யாரும் அவன் அனுமதி இன்றி வீட்டினுள் நுழைய கூட இயலாதவாறு, வாயிற் கதவில் செக்கியூரிட்டி சென்சாரும், அவன் அறைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட உள் வடிவமைப்புகள் வியக்கவே வைத்தது.
படுத்ததும் தன்னை உள்ளே இழுத்துக் கொள்ளும், உயர் ரக, கட்டில் மெத்தையும், அவன் படிப்பதற்கென தனி டேபிளும் சிறிய விளக்குடன் அறையை அலங்கரிக்க, உள்ளேயே 45 இன்ச் தொலைக்காட்சிப்பெட்டியும், குளிர்சாதன பெட்டியும் இருக்க, கண்ணாடி கதவு கொண்ட பால்கனியை மறைத்திருந்த உயர் ரக ஸ்க்ரீனை எடுத்து விட்டால், அங்கிருந்து நீச்சல் குளமும் கண்ணை கவரும் தோட்டமும் அழகாய் காட்சியளித்தது.
அதற்கு மேல் குளியலறையோ நவீனத்தில் உச்சமாக, தனி கண்ணாடி தடுப்பில் ஷவரும், பாத் டப்புமாக கலங்கடிக்க, உண்மையில் இவற்றையெல்லாம் கண்டதும் தஷ்வந்திற்கு வயிற்றை கலக்கியது.
‘நம்ம வந்துருக்கவே கூடாதோ…’ என இத்தோடு பல முறை எண்ணி விட்டவன், தயக்கமாக, “எதுக்கு இவ்ளோ காஸ்டலியான வீடு பத்ரா. நான் ஹாஸ்டல்லேயே தங்கிக்கிறேன். இதை பாத்தாலே பயமா இருக்கு…” விட்டால் ஓடி விடுவேன் என்ற ரீதியில் பேசியவனை கண்டுகொள்ளாமல், அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
“பத்ரா” என அவன் மீண்டும் அழைக்க,
அவளோ, “நான்சென்ஸ். நான் என்ன சொன்னேன். இங்க என்ன செஞ்சு வச்சுருக்காங்க. நான் ஸ்கை ப்ளூ கலர் கர்டைன் தான போட சொன்னேன். அந்த இடியட் பிங்க் கலர் போட்டு வச்சிருக்கான். ரூம் அட்மாஸ்பியர்க்கு சுத்தமா செட் ஆகல. சகௌண்ட்ரல்… இருக்கட்டும்… அடுத்து இன்டீரியர் பண்ண கை இருந்தா தான…” ஆத்திரத்துடன் அவள் பேசியதில் அவனுக்கு தொண்டை அடைத்தது.
“பி… பிங்க் கலர் கர்டைன் நல்லா தான் இருக்கு பத்ரா. இதுக்கு போய் ஏன் இவ்ளோ வயலண்டா யோசிக்கிற…” என திக்கி திணறி கேட்டவனிடம்,
“சியூர்? இது நல்லா இருக்கா?” முகத்தை அஷ்டகோணலாக்கி அவள் கேட்டிட, அவனுக்கு நுண்ணிய வடிவமைப்பிலெல்லாம் கவனிமன்றி போனதில், “இதுவே நல்லா இருக்கு பத்ரா. சொல்ல போனா இதான் சூட் ஆகாது. இதை இப்படியே விட்டுடு.” என அவன் கையையே உடைக்க போகும் ரீதியில் அவன் கெஞ்சிட, “நீ சொன்னா சரி தான்…” என்று சாந்தமானாள்.
இதனிடையில் அவன் சொல்ல வந்தது உள்ளுக்குள்ளேயே அமிழ்ந்து போக, அதே நேரம் அமிஷும் மாதவை அழைத்துக் கொண்டு வந்து விட்டான்.
‘இவனுங்களுக்கு எல்லாம் லக்கேஜ் தூக்குற வேலை பாக்க விட்டுட்டாளே’ என்ற கடுப்பு எழுந்தாலும், அதனை சிறிதும் வெளியில் காட்டாத அமிஷ், சொன்ன வேலையை செய்து முடிக்க, அவனிடமும் கர்டைன் வண்ணத்தின் கோபத்தை காட்டி, “இதை கவனிக்க மாட்டியா நீ…” என திட்டிட, அவனோ திரு திருவென விழித்தான்.
“நாளைக்குள்ள இதை சேன்ஜ் பண்ண சொல்றேன் மஹூ…” உடனடியாக அவன் கூறிட, “விடு. அவன் அடுத்து இதே தப்பு பண்ணுனான். அவனும் இருக்க மாட்டான். அவன் ப்ரொஃபஷனும் இருக்காது. சொல்லி வை அந்த கான்டராக்டர்ட்ட…” என்று நெருப்பை உமிழ்ந்தவளிடம் தலையை உருட்டினான். இருப்பினும், தஷ்வந்தை காரப்பார்வை ஒன்றை வீசி விட்டு அவன் கிளம்பிட,
மாதவ் தான் பேச்சு மூச்சற்று வீட்டையே சுற்றிக் கொண்டிருந்தான்.
‘வீடா, ஹோட்டலா’ என்ற குழப்பத்தில் இருந்தே அவன் இன்னும் வெளிவராதிருக்க, “ஹாஸ்டல்ல இருந்து காலேஜ் கிளம்பவே அவ்ளோ சோம்பேறித்தனமா இருக்கும். இதுல இவ்ளோ அழகான வீட்டை விட்டுட்டு காலேஜ் போறதுக்குள்ள மனசை ரொம்ப திடப்படுத்தணும் போல பாஸ்” என தஷ்வந்த் காதில் முணுமுணுக்க, அவனோ வெறியாய் முறைத்தான்.
‘இவன் ஒருத்தன், இவனும் என்ஜாய் பண்ண மாட்டான். சான்ஸ் கிடைச்சு என்ஜாய் பண்ற என்னையும் பண்ண விட மாட்டான்… இங்கயாவது ஆலியா பட் போட்டோவை பெரிய பிரேம்ல சுவத்துல மாட்டி, சைட் அடிச்சுக்கிட்டே இருக்கணும்…’ என தீர்மானித்துக் கொண்டவன், “அக்கா…” என பத்ராவை அழைத்தான்.
‘இவன் வேற அக்கா நொக்கான்னுட்டு…’ எனக் கடுப்பானவள், “என்னடா?” என்றிட,
“இல்ல… இங்க இருந்து காலேஜும் நாங்க போஸ்டிங் போற ஹாஸ்பிடலும் ரொம்ப தூரம் இருக்கும் போல. பேசாம காலேஜை பேத்து எடுத்து இங்க பக்கத்துல வச்சுடுக்கா. உன்னால முடியாததா…” என சிலாகித்தான்.
“என்னடா கலாய்க்கிறியா?” கண்ணை சுருக்கி கேட்ட விதத்தில் அரண்டவன், “அயோ அக்கா… நான் சீரியஸா தான் சொன்னேன். நீ நினைச்சா நடக்காதது ஏதாவது இருக்குமா” என ஒரு வண்டி ஐஸை அவள் தலை மீது வைத்தான் இளித்தபடி.
அவனை நக்கலாக பார்த்தவள், “நீ பொழைச்சுக்குவ டா. நல்லா ஐஸ் வைக்கிற. ஆனா இதுக்குலாம் நான் உருக மாட்டேன். மவனே ஓவரா பேசுன குடல உருவிடுவேன். இன்னொரு தடவை அக்கான்னு சொல்லு, பல்லு பேந்து கைல வந்துடும்.” என்று விரல் நீட்டி எச்சரித்ததில், வாயை பொத்திக் கொண்டவன், அப்போதும் விடாமல், “அப்ப நானும் பத்ரான்னு கூப்பிடவாக்கா…” என்றான் வேகமாக.
“செருப்பு பிஞ்சுரும்…!” அடுத்த நொடி அவள் மறுத்திட, “அப்போ அவன் மட்டும் கூப்புடுறான்… உன் தம்பி நான் கூப்பிட கூடாதா?” என அக்கா தம்பி உறவை நிலைநாட்டிக் கொண்டிருந்தவனை, ஏகத்துக்கும் முறைத்து வைத்தவள், “அநேகமா இவன் ரொம்ப நாள் உன் ஃப்ரெண்டா, உயிரோட இருக்க மாட்டான்னு நினைக்கிறன் தஷ்வா…” என எதிலும் ஒட்டாமல் நின்றிருந்த தஷ்வந்திடம் கடிந்தாள்.
“சும்மா இரேண்டா” என மாதவை திட்டியவன், “பத்ரா. இங்க இருக்கவே எனக்கு ஆக்வர்டா இருக்கு. நான் இவ்ளோ எதிர்பார்க்கல. ஹாஸ்டல்லயே இருந்துக்குறேன் ப்ளீஸ்…” என்றவனை கண்டுகொள்ளாது,
“உனக்கு இங்க வேற ஏதாவது சேஞ்சஸ் பண்ணணும்ன்னா சொல்லு அமுல் பேபி. இமீடியட்டா பண்ண சொல்றேன்.” என சம்பந்தம் இல்லாமல் பேசிட, அவனுக்கு எங்காவது முட்டிக்கொள்ளலாமா என்றிருந்தது.
“பத்ரா எனக்கு பிடிக்கல…” என்னும் போதே, “உனக்கு பிடிச்சிருக்கா பிடிக்கலையான்னு நான் கேட்கல. நீ இங்க தான் இருக்க போற. தட்ஸ் இட்.” என்று அழுத்தத்துடன் கூறியவள், “வெல். உனக்கு ரெண்டு பேரை இன்ட்ரோ குடுக்கணும்…” என்று, போனில் யாரையோ அழைத்தாள்.
அவள் அழைத்த இரு ஆடவர்களும் அடுத்த ஐந்து நிமிடத்தில் அவர்கள் முன் நின்றனர். இருவருமே இளைஞர்கள் தான். ஹர்மேந்திரனிடம் அடியாட்களாக வேலை பார்ப்பவர்கள். ஆகினும், மஹா ஒரு விஷயம் சொன்னால், அதனை கச்சிதமாக முடித்து, அவளுக்காகவே உயிரையும் கொடுக்கத் துணிபவர்கள்.
“தஷ்வா, இவன் மதன், இவன் திரு… ரெண்டு பேருக்கும் தமிழ் தெரியும்.” என்று அறிமுகப்படுத்த இருவரும், தஷ்வாவிற்கு வணக்கம் வைத்தனர். அவனோ ஒன்றும் புரியாமல் அவர்களை பார்க்க, மஹாவே தொடர்ந்தாள்.
“மதனும் திருவும், மாறி மாறி 24 ஹவர்ஸ் இங்க தான் இருப்பாங்க. மேக்சிமம் நீ என் கூட தான் வெளில வருவ. பட், நான் இல்லாதப்போவும், நீ இவங்க கூட தான் கார்ல போகணும். எங்க போறதா இருந்தாலும்… நீங்க ரெண்டு பேரும் காலேஜ்க்கு போறது இவங்களோட தான். ரெண்டு பேரோட நம்பரையும் நோட் பண்ணிக்கோ. உனக்கு வேற ஹெல்ப் வேணும்ன்னாலும் இவங்க கிட்ட கேளு. எள்ளுன்னா எண்ணெயா நிப்பாங்க.” என கேலி நகையுடன் முடித்ததில், மதனும் திருவும் “சும்மா இரு மஹா…” என்று சிரித்துக் கொண்டனர்.
“மதன், மெய்டுக்கு சொல்லிருந்தேனே என்ன ஆச்சு?” என மஹா தீவிரத்துடன் வினவ,
“சொல்லிருக்கேன் மஹா. நாளைக்கு வந்துடுவாங்க.” என்றவனிடம், “நோ டைரெக்ட்டா வேலைக்கு வரவேணாம். நான் ஃபுட் டேஸ்ட் பண்ணி பார்த்து ஓகேன்னா தான் அப்பாய்ண்ட் பண்ணனும். மார்னிங் வீட்டுக்கு கூட்டிட்டு வா.” என்றதில், “சரி…” என தலையசைத்து விட்டு, “இப்போ திரு தான் இங்க இருப்பான் மஹா. நான் காலைல வந்துடுறேன்.” என்று விடை பெற,
திருவும், “நான் பார்க்கிங்கில் கார்லயே தான் இருப்பேன் சார். எப்பனாலும் என்னை கூப்பிடுங்க. என் நம்பரை நோட் பண்ணிக்கிறீங்களா?” எனக் கேட்க, அவனுக்கு தலையே சுற்றியது.
மாதவோ, ராஜ மரியாதை எல்லாம் படத்தில் தான் பார்த்து இருக்கிறான்… இப்போதோ வாய் பிளந்து நிற்க, தஷ்வந்த்தை ஒரு பார்வை பார்த்தவள், “நான் உங்க ரெண்டு பேரோட நம்பரையும் கொடுக்குறேன் திரு. நான் சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்குல்ல…” என கண்டிப்புடன் கேட்க, “நான் பாத்துக்குறேன் மஹா. நீ ஃப்ரீயா விடு.” என்றதில் அவளும் இலகுவானாள்.
அவனும் சென்று விட்டதில், மஹாபத்ரா தவிப்புடன் நின்றிருந்த தஷ்வந்தையே பார்வையால் ரசித்திருக்க, ‘நம்ம நந்தி மாதிரி நிக்கிறோமோ…’ என்றுணர்ந்த மாதவ் தான், “நான் ரூமுக்கு போகட்டாக்கா…” என்றான் அடக்கமாக.
“இன்னும் இங்கயே நிக்கிறியே வெட்கமா இல்ல உனக்கு. போய் தொலை முதல்ல.” என்று சிடுசிடுத்தாள்.
அவள் ஏதோ அவார்டு கொடுத்த ரீதியில், “ஹி ஹி… யூ கன்டின்யூக்கா…” என்று தஷுவை கண் காட்டியதில் சிறு இளநகை தோன்றிட, “நீ அடங்கவே மாட்டல்ல” என்றவளின் குரலில் இப்போது கேலியே இழையோடியது.
“நீ என்னை உன் தம்பியா தத்து எடுக்குற வரை நான் அடங்கவே மாட்டேன்…” என்று வீர வசனம் போல பேசியவன், அவளது முறைப்பில் வெளியில் சென்று விட்டான்.
இத்தனைக்கும் தஷ்வந்திடம் அசைவே இல்லை. அவனோ தீவிர சிந்தனையில் இருக்க, அவள் அவனது சட்டை காலரை பற்றி அருகில் இழுத்ததும் தான் சுயம் பெற்று பேந்த பேந்த விழித்தவன், அருகில் மாதவை தேட அவனும் இல்லாததில் திகைத்தான்.
“மாதவ் எங்க போனான்…” என்றவன் அவளது பிடியில் இருந்து நகர முயல, “நீ எனக்கு பாய் ஃப்ரெண்டா அவனுக்கு பாய் ஃப்ரெண்டாடா. எப்ப பார்த்தாலும் அவன் பின்னாடியே சுத்துற…” என போலியாய் கோபம் கொண்டவள், இன்னும் அவனை நெருங்கி இருக்க, அவனோ பின்னால் நகர்ந்து கொண்டே சென்றான்.
“பத்ரா… நம்ம ரெண்டு பேரும் ப்ரெண்ட்ஸ் மட்டும் தான்!” என நினைவு படுத்தியவனை மென்புன்னகையுடன் பார்த்தவள், “நானும் மறுக்கலையே…” என தோளைக் குலுக்கியவள், அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு நகர, அவனுக்கு தான் அவஸ்தையாகி போனது.
காயம் ஆறும்!
மேகா