1,361 views

விழுந்த வேகத்தில் அக்னி சந்திரனின் இடுப்பு சுளுக்கு பிடித்துக் கொண்டது. கூடவே பொதி சுமையாக அன்பினி சித்திரையும் விழுந்துவிட இரும்பு பலகையில் லேசான அதிர்வு  உருவாகி, அது அவன் சட்டையும் தாண்டி முதுகில் ஊர்ந்தது.

கீழ் படுத்திருந்தவன் இவ்வளவு இம்சைகளை எதிர்கொண்டிருக்க, மேலிருந்த அன்பினுக்கோ எந்த தொந்தரவும் ஏற்படவில்லை. சோபாவில் குப்புற படுப்பது போல் கண் மூடி படுத்திருந்தாள். விழுந்து ஐந்து நிமிடங்களுக்கு மேலாகியும் எழாமல் அதே நிலையில் இருந்த அக்னி,

“மேடம் இதுக்கு மேலயும் இப்படியே இருந்தீங்கன்னா நான் ஜி ஹெச்க்கு தான் போகணும்.”என்றிட, கண் திறந்து அண்ணாந்து பார்த்தாள் அவனை.

“ஓவர் வெயிட் மேடம் முடியல.” என மூச்சு விட சிரமப்பட்டு அவன் பேச, முறைத்துக் கொண்டு எழ முயற்சித்தாள். அவள் தரையில் கால் வைக்க முற்பட  செருப்பில் குத்தி இருந்த ஆணி லேசாக பாதத்தை உரச ஆரம்பித்தது. அதற்கே,

“அம்மா!”என்ற கூச்சலோடு அவன் மீது சரிந்து விட்டாள்.

“என்ன ஆச்சு?”

“கால்ல ஆணி குத்தி இருக்கு அக்னி வலிக்குது‌.” என்றாள் பாவமாக.

பாவம் பார்த்து அன்பினியை வலது புறமாக படுக்க வைத்தான். எழுந்து கொண்டவன் கூச்சப்படாமல் அவள் கால்களை ஆராய, “என்ன பண்ற” என அவன் கைகளை தடுத்தாள்.

“கொஞ்ச நேரம் சும்மா இருங்க மேடம்.” என்றவன் ஆணி குத்திருக்கும் செருப்பை மெல்ல அவள் காலில் இருந்து கழட்ட, “அய்யோ வலிக்கும் வேணாடா” என்று கத்தினாள் அன்பினி சித்திரை.

ஆறுதல் சொல்லியவன் ஷூவை மெதுவாக அவள் பாதத்தில் இருந்து கழட்ட, அவளோ கண்களை மூடிக்கொண்டாள் இறுக்கமாக. வெகு நேரம் ஆகியும் எந்த வலியையும் உணராதவள் கண் விழித்து பார்க்க, கொடுரமாக முறைத்துக் கொண்டு இருந்தான் அக்னிசந்திரன்.

எதற்காக இந்த முறைப்பு என்பதை புரிந்து கொள்ள முடியாதவள், “எதுக்கு முறைக்கிற.” என கேட்க,

“ஒரு கீறல் கூட விழல. என்னமோ ஆணிக்குத்தி காலு இரண்டா போன மாதிரி இவ்ளோ நேரம் சீன் போட்டுட்டு இருந்திருக்க.” என்றதும் தன் பாதங்களை ஆராய்ந்தாள்.

எந்த சேதாரமும் அந்த வெண்ணை பாதங்களுக்கு நேராமல் இருக்க, “அப்பாடா! நான் கூட ரொம்ப பயந்துட்டேன்.” என எழுந்து நின்று  தப்பித்த நிம்மதியில் கால்களை உதறினாள்.

முன்பை விட இப்போது தான் அக்னியின் முறைப்பு அதிகமானது. நோகாமல் வளர்ந்த உடம்பு என்பதால் ஆணி உரசிதை கூட தாங்கிக் கொள்ளாத அவள் மேனி பயத்தை உருவாக்கி இருக்க, அக்னி சந்திரனுக்கு அவளின் பயம் ஓவர் நடிப்பாக தெரிந்தது.

“என்ன லுக்கு!” என்ற அன்பினி சித்திரை, “உன்ன மாதிரி காட்டானுக்கு கடப்பாறியே விழுந்தாலும் பிரச்சனை இல்லை நான் அப்படியா. பிறக்கும்போதே கோல்டன் ஸ்பூன்.”என்று பெருமை பித்தியவள் அப்போது தான் ஞாபகம் வந்தவளாய்,

“டேய்! யாரைக் கேட்டு என்னை கட்டிப்பிடிச்ச.” என இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தாள்.

“அதெல்லாம் மேல வந்து விழுறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும். நல்லா எருமை மாடு மாதிரி மேல வந்து பாஞ்சிட்டு கேள்வி வேற.” என அவனும் விட்டுக் கொடுக்காமல் உடனே பதில் தர,

“யாருடா எருமை மாடுன்னு சொன்ன.” அருகில் சென்றவள் அவன் சட்டையை பிடித்து கேட்க,

“மேலே விழுந்தது யாரு?” பதில் கேள்வி கேட்டான் அக்னிசந்திரன்.

“மைண்ட் யுவர் வேர்ட்ஸ். நான் உனக்கு எருமை மாடு மாதிரியா தெரியிறேன். எந்த எருமை மாடு இவ்ளோ அழகா ஸ்லிம்மா இருக்கு.” என தள்ளி நின்று தன்னைத்தானே கைகாட்டி கொண்டவளுக்கு சிரிப்பை அக்னி பதிலாக கொடுக்க, இன்னும் முறைத்தாள்.

“மேல விழுந்த வேகத்துல இதயம் எத்தனை துண்டா உடைஞ்சு போச்சுன்னு தெரியாம நானே பதறிட்டு இருக்கேன் இதுல ஸ்லிம்மா ஸ்லிம்.” பேசிக்கொண்டே இரும்பு பலகைகளில் இருந்து இறங்கியவன் நடக்க,

“வேணா அக்னி டென்ஷன் ஆகிடுவேன்.” அவன் பின்னால் சென்று கொண்டு கோபம் வரும் குறிப்பை கொடுத்தாள் அன்பினி சித்திரை.

“என்ன வேணா ஆகுங்க ஆனா தயவு செஞ்சு இன்னொரு தடவை மேல மட்டும் விழாதீங்க எங்க அம்மாக்கு நான் ஒரே பையன்.” என்ற அக்னியின் கழுத்தை பின் நின்றபடி இறுக்கினான்.

அவனைவிட உயரம் குறைந்தவள் எக்கி பிடிக்க, பலமான தேகம் கொண்ட அக்னிசந்திரன் பின்னால் கை கொடுத்து அவள் இடுப்பை பிடித்து முதுகில் ஏற்றிக் கொண்டான்.

“பொறுக்கி என்னடா பண்ற விடு.” என்று துள்ளி குதிக்க,

“நீங்க தான மேடம் ஆசையா கழுத்த பிடிச்சிங்க‌.”என்று மெதுவாக இறக்கி விட்டான்.

பெண்ணவளின் பற்கள் கடிப்படும் சத்தம் நன்றாக கேட்டது அக்னி சந்திரனுக்கு. உள்ளுக்குள் அதை ரசித்து சிரித்துக் கொண்டவன் அமைதியாக நின்றிருக்க,

“எல்லாம் எங்க அப்பா கொடுக்கிற இடம். உன்னை வைக்க வேண்டிய இடத்துல வச்சிருந்தா முதலாளி பொண்ண தொடுற அளவுக்கு தைரியம் வந்திருக்காது. உன்ன மாதிரி சீப் கிளாஸ் பையனுக்கு என்னை மாதிரி பொண்ணு எல்லாம் கனவுல கூட கிடைக்காது. அதன் பக்கத்துல பார்த்ததும் கரெக்ட் பண்ண பார்க்கிற.” என பேசிக்கொண்டே படி இறங்கினாள் அன்பினி சித்திரை.

அவள் பின் இறங்கிக் கொண்டு வந்தவனுக்கு இப்பேச்சுக்கள் கோபத்தை கொடுக்க, இறக்கம் பார்க்காமல் கால்களை இடறி விட்டான். கால் தடுக்கி படிக்கட்டில் உருள ஆரம்பித்தாள் அன்பினிசித்திரை. விழுந்தவளை பிடிக்காமல் பேன்ட் பாக்கெட்டுக்குள் கை நுழைத்த அக்னி திமிரோடு கால்களை அழுத்தமாக வைத்து இறங்கினான்.

உருண்டு கொண்டிருந்தவள் கடைசி படிக்கட்டை தாண்டி தரையில் விழுந்தாள். பாதி முடித்த கட்டிடம் என்பதால் ஆங்காங்கே இன்னும் ஆணிகள் நிறைய இருந்தது. முன்பு காலை பதம் பார்க்காத ஆணி இந்த முறை எப்படி செயல்பட்டதோ புருவத்தின் மேல் ஆழமாக கீறி விட்டது.

புருவத்தின் மேல் வலி சுருக்கென்று குத்தியது. அக்னி தான் தள்ளி விட்டான் என்பதை அழுத்தமாக அவள் மூளை பதிவு செய்திருக்க, விழுந்ததும் எழாமல் தன்னை பார்த்து இறங்கிக் கொண்டிருக்கும் அக்னிசந்திரனை அண்ணாந்து பார்த்தாள்.

தலையை மேலே நிமிர்த்தியதும் புருவத்தில் ரத்தம் கொப்பளித்தது. அவை புருவத்தை தாண்டி இமையின் வழியாக அவள் கன்னத்தில் பட, அந்த காட்சியை கண்டதும் அக்னியின் இதழ்கள் ஏளனம் சிந்தியது அவளைப் பார்த்து.

ரத்தத்தை உணர்ந்தவள் துடைக்க மறந்து அந்த சிரிப்பில் கலக்க தொடங்க, “எவ்ளோ பெரிய உலக அழகியா இருந்தாலும் தோல் நல்லா இருக்குற வரைக்கும் தான். உள்ளுக்குள்ள எல்லாருக்கும் ஒரே ரத்தமும், சதையும் தான் கடவுள் படைத்திருக்கான். சீப் கிளாஸ் பையனா இருக்கிறதால தான் மேல விழுந்தும் நீ நீயா இருக்க. வெளிய இருக்கான் பாரு அவன் மேல விழுந்து பாரு அப்ப தெரியும் ஹை கிளாஸ் பையன் மவுசு என்னன்னு.” அடிபட்டவளை தூக்க கூட முயலாமல்  கடந்து சென்றான்.

“யார் நீ?” என்ற அன்பினி கேள்விக்கு அவளைத் தாண்டி படி இறங்கியவன் திரும்பிப் பார்க்க,

“உனக்குள்ள பெரிய திட்டம் ஏதோ ஒன்னு இருக்கு. எங்க அப்பா கிட்ட காட்டுற முகம் உண்மையானது இல்லை. இதோ தெரியுதே இதான் அக்னிசந்திரன். சொல்லு என்ன திட்டத்தோட இதெல்லாம் பண்ணிட்டு இருக்க.” தன் மனதில் தோன்றிய சந்தேகங்களை அவன் புறம் வைத்தாள்.

“ஹா!ஹா!” என்று சத்தமிட்டு சிரித்தியவன் அவளைக் கடந்து சென்ற நான்கு படிகளை மீண்டும் ஏறி அன்பினி அருகில் அமர்ந்தான். ரத்தம் நான்கைந்து சொட்டுக்களாக அவள் கன்னத்தில் நிறைந்து ஆடையில் பட்டு தெறிக்க, அதை தன் கைகளால் தொட்டு மூக்கின் அருகில் கொண்டு சென்று நுகர்ந்தான் .

ஆழ்ந்த மூச்சை வெளியிட்டவன், “உழைப்பாளிங்க வேர்வைய  நல்லா குடிச்சிருக்கீங்க.”என்றான்.

அக்னியின் செயலில் அருவருப்பை உணர்ந்தவள் முகத்தை திருப்பிக் கொள்ள முயல, அதற்குள் கையில் இருந்த ரத்தத்தை அவள் முகத்தில் மீசை போல் வரைந்தான். அன்பினி அவனை அதிரவோடு பார்த்துக் கொண்டிருக்க, கன்னத்தில் சிதறிய மற்றொரு ரத்தத் துளியை  கையில் எடுத்தவன் உதட்டிற்கு கீழ் ஒரு கோடு போட்டு விட்டு,

“எனக்குள்ள என்ன திட்டம் இருக்குன்னு கண்டுபிடிக்கறதுக்குள்ள எனக்கு வேண்டியது நான் எடுத்து இருப்பேன்.” என்றான்.

இவ்வார்த்தைகளை உதிர்த்த குரலில் ஏதோ ஒரு முரட்டு தன்மை தென்பட்டது அன்பினிக்கு. கண்களைத் தவிர முகத்தில் உள்ள வேறு எந்த உறுப்புகளும் உணர்வுகளை பிரதிபலிக்காமல் நிர்மலாக இருந்தது. இமைகளை அசையாமல் அவளை பார்த்துக் கொண்டிருந்தவன்,

“எழுந்திடு.” என எழுந்து நின்று அவள் எழ கைக் கொடுத்தான்.
அவனின் உதவியை நிராகரித்தவள் அப்படியே அமர்ந்திருக்க, எதுவும் பேசாமல் நடையை கட்டினான்.

வெகு நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்த அன்பினி சித்திரை சிந்தி கொண்டிருக்கும் ரத்தத்தை துடைத்துக் கொண்டு கீழ் இறங்கினாள். காரின் அருகில் வந்ததும் கண்கள் அக்னிசந்திரனை தேட, “சித்! என்ன இது இப்படி ரத்தம் வருது.” என பதறிய மகேஷ் காரில் இருந்து கீழ் இறங்கி ரத்தத்தை துடைக்க சென்றான்.

ஒரு அடி தள்ளி நின்றவள், “அதெல்லாம் ஒன்னும் இல்ல மகேஷ் சின்ன அடி தான்.” என்று விட்டு மீண்டும் அக்னியை தேடினாள்.

“இவ்ளோ ரத்தம் போகுது சின்ன அடியா உனக்கு. வா! ஹாஸ்பிடல் போகலாம்.” என்று மகேஷ் அவசரப்படுத்த,

“அக்னி எங்க?” கேட்டாள் அன்பினி சித்திரை.

உள்ளுக்குள் எழுந்த எரிச்சலை தனக்குள் அடக்கிக் கொண்ட மகேஷ், “அவன் கார் புக் பண்ணி போயிட்டான்.” என்றான்.

வலிகளை மறந்து அவனைப் பற்றிய சிந்தனைகளில் சுழன்றவளை சமாதானப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான் மகேஷ். புருவத்திற்கு மேல் காயம் என்பதால் பஞ்சு வைத்து டேப் போட்டிருந்தார்கள். மகேஷ் தன் போக்கில் அவளிடம் பேசிக் கொண்டிருக்க, சிந்தனைகள் அனைத்தும் காயத்தை கொடுத்தவன் மீது இருந்தது.

***

“அம்மா எனக்கு இந்த பொண்ணு புடிச்சிருக்கு இவங்களே என் அண்ணியா வந்தா நல்லா இருக்கும்.” அண்ணனின் திருமணத்திற்கு வரன் பார்க்க தொடங்கியதில் இருந்து தினமும் யாராவது ஒரு பெண்ணின் புகைப்படம் திவ்யாவின் வாட்ஸ்அப் எண்ணிற்கு வந்துவிடும்.

வந்த புகைப்படத்தில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து அவர்களின் பின்னணியை முழுதாக விசாரித்து தாயிடம் சொல்வாள்.  இரண்டு நாட்களாக அவள் தேர்வு செய்த எந்த பெண்ணுடைய ஜாதகமும் அக்னியின் ஜாதகத்தோடு பொருந்தவில்லை. இன்று மூன்றாவது நாள் ஒரு பெண்ணை அதே போல் தேர்வு செய்ய,

“சரிடா நானும் அப்பாவும் போயிட்டு ஜாதகம் பார்த்துட்டு வரோம்.”என்றார் பரமேஸ்வரி.

“எனக்கு என்னமோ இந்த பொண்ணு செட் ஆவாங்கன்னு தோணுது ம்மா.” என போனை பார்த்துக்கொண்டு திவ்யா பேச, சரியாக உள் நுழைந்தான் அக்னிசந்திரன்.

“அப்படியா ஜோசியக்காரி குண்டம்மா.”என வந்ததும் வராததுமாக தங்கையை வம்பு இழுக்க,

“அம்மா  இவன் கிட்ட சொல்லி வைங்க. இதே மாதிரி பேசிட்டு இருந்தான்னா  வர அண்ணி முன்னாடி அசிங்கப்படுத்திடுவேன்.” என்றாள்.

“திவ்யா அண்ணன என்ன அவன் இவன்னு பேசிட்டு இருக்க.” என மகளை பரமேஸ்வரி கண்டிக்க,

“அவன் மட்டும் என்னை குண்டம்மான்னு சொல்லலாமா.” எதிர்வாதம் புரிந்தாள்.

“பார்க்க எப்படி இருக்கியோ அப்படித்தான கூப்பிட முடியும் குண்டம்மா.” என்றவனை அடிக்கச் செல்ல, அவனோ அவள் கைக்கு சிக்காமல் ஓட்டம் பிடித்தான்.

பிள்ளைகள் இருவரையும் சமாதானப்படுத்திய பரமேஸ்வரி, ” அக்னி ஒரு பொண்ணு போட்டோ வந்திருக்கு பார்த்து பிடிச்சிருக்கான்னு சொல்லு.” என்றார்.

“அம்மா இதை நீங்க இவன் கிட்ட கேட்க கூடாது. பாவம் அந்த பொண்ணு கிட்ட தான் கேட்கணும்.” என்ற திவ்யாவின் தலையில் கொட்டியவன்,

“நான் எதுக்கு ம்மா பார்த்துட்டு நீங்க பார்த்து பண்ணிடுங்க.” தாய் சொல்லை தட்டாத பிள்ளையாக கூறினான்.

“பார்த்தியாடி என் பையன.” என பரமேஸ்வரி தன் வளர்ப்பை நினைத்து பெருமைப்பட,

“இவனை நம்பாதீங்க ம்மா கடைசி நேரத்துல வேற ஒரு பொண்ண காதலிக்கறேன்னு வந்து நிப்பான் பாருங்க.” என்ற திவ்யாவை இந்த முறை பரமேஸ்வரியும் சேர்ந்து அடித்தார்.

குடும்பமாக இரவு உணவை உண்டு முடித்தவர்கள் நேரமாவதை உணர்ந்து தூங்கச் சென்றார்கள். இரவு பதினொன்று மணி இருக்கும் புத்தகம் படித்துக் கொண்டிருந்த அக்னிக்கு தூக்கம் கண்ணை கட்டியது. கொட்டாவி விட்டவன் புத்தகத்தை மூடி வைத்து தூங்கச் சென்றான்.

கண்மூடி ஐந்து நிமிடங்கள் கூட கடந்து இருக்காது ஃபோன் அடித்தது. இந்த நேரத்தில் யார் என்று பார்க்க, நந்தினி அழைத்திருந்தார்.

“சொல்லுங்க மேடம் என்ன இந்த நேரத்துல.” நள்ளிரவு நேரம் என்பதால் அவன் பதட்டத்தோடு கேட்க,

“அக்னி ஒரு ஹெல்ப்.” என்றார்.

“என்ன பண்ணனும்னு சொல்லுங்க மேடம்.” என்றவனிடம்,

“அன்பினி இன்னும் வீட்டுக்கு வரல. நீ கொஞ்சம் எங்க இருக்கான்னு கண்டு பிடிச்சி கூட்டிட்டு வரியா.” என கெஞ்சினார்.

“அவங்க என்ன குழந்தையா மேடம் எங்கயாது பார்ட்டிக்கு போய் இருப்பாங்க வந்துடுவாங்க.”

“அது இல்ல அக்னி. இங்க இருந்தா பத்து மணிக்கு எல்லாம் வீட்டுக்கு வந்துடுவா. வெளிய தங்கி இருந்தாலும் அப்படித்தான் சரியா  பத்து மணிக்கு ஃபோன் பண்ணி தூங்க போறேன்னு சொல்லிடுவா. இன்னும் வரலையேன்னு போன் பண்ணா அந்த மகேஷ் எடுகிறான்.  நல்ல போதையில இருக்கான் போல என்னவோ உளறுறான். உங்க சாருக்கு தெரிஞ்சா அவ்ளோ தான். விக்ரமுக்கு ஃபோன் பண்ணேன் அவனும் எடுக்கல. ப்ளீஸ் அக்னி என் பொண்ண எப்படியாது வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடு.” ஒரு தாயாக இந்நேரம் வரை பிள்ளை வீடு வந்து சேராததால் பயத்தோடு கேட்க,

“பயப்படாதீங்க மேடம் நான் கூட்டிட்டு வரேன்.” என்று நம்பிக்கை அளித்தவன் கிளம்பினான்.

***

அன்பினி நம்பருக்கு அழைக்க, அந்த   அழைப்பையும் மகேஷ் தான் எடுத்தான். “மேடம் எங்க இருக்காங்க.” என அக்னி விசாரிக்க,

நல்ல போதையில் இருந்த மகேஷ் பேசுவது அக்னி தான் என்று அறியாமல், “என் டார்லிங்க கேக்குறியா. அவ நல்லா போதையில டான்ஸ் ஆடிட்டு இருக்கா.” என்றான்.

“எங்க இருக்கீங்க இப்போ.”

“பப் ல ” என்ற மகேஷ் போதையில் தலை கவிழ்ந்தான். 

“எந்த பப்ல” என்ற கேள்விக்கு பதில் சொல்லும் நிலையில் அவன் இல்லாமல் போக அக்னி மட்டும் கத்திக் கொண்டிருந்தான் ஃபோனில்.

பதில் பேசாமல் அழைப்பு தொடர்பில் இருப்பதை அறிந்த அக்னி துண்டித்து விட்டு மீண்டும் அழைத்தான். எடுக்கவில்லை மகேஷ்.  அக்னி பதட்டத்தோடு விடாமல் அழைத்துக் கொண்டிருக்க, ரெஸ்டாரன்ட் ஊழியர் எடுத்தார்.

“டேய்! எங்க இருக்கன்னு சொல்லு இல்லனா சாவடிச்சிடுவேன்.” என்று கத்தினான் அக்னி.

“சார் நீங்க ஃபோன் பண்ண ஆள் நல்ல போதையில இருக்காரு.” என்றவரிடம்  இருக்கும் இடத்தை விசாரித்தான். பதினைந்து நிமிடத்தில் அங்கு சென்றவன் அன்பினியை தேடினான்.

தடுமாறி நடந்த படி ஆடைகளின் மேல் சிந்திய மதுவை தட்டிக்கொண்டு நின்றிருந்தாள் அன்பினி சித்திரை. அவளை அந்தக் கோலத்தில் பார்த்ததும் வெறி ஆகிவிட்டான் அக்னிசந்திரன். கோபத்தோடு நெருங்கியவன் அவள் கன்னத்தில் ஓங்கி அடித்து,

“குடிக்காரி குடும்ப பொண்ணு மாதிரியா நடந்துக்கிற. குடிச்சு சாவறதா இருந்தா சொல்லிட்டு போய் கூத்தடிக்க வேண்டியது தான. உன்ன மாதிரி ஒரு பொண்ண பெத்துட்டு உங்க அம்மா அங்க பயந்துட்டு இருக்காங்க.” என்ற கத்தலில் அந்த பப்பே திரும்பிப் பார்த்தது அவர்களை.

அவன் அடித்ததில் கன்னம் எறிந்தது. ஏற்கனவே இடது கண் புருவத்தின் மேல்  தையல் போடப்பட்டிருக்க, இந்த அடி சொல்ல முடியாது வலியை கொடுத்தது. அதில் நொந்தவள், “எதுக்குடா இப்ப அடிச்ச.” என்று கேட்டுக் கொண்டு நெருங்கி வர மதுவாடை அவன் நாசியை ஊடுருவியது.

முகம் சுழித்து திரும்பியவன் தன் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் மீண்டும் அடித்தான். இரண்டாவது முறையாக அடி வாங்கிய கோபத்தில் அவள் திருப்பி அடிக்க வர, கைகளைப் பற்றி வெளியில் இழுத்துச் சென்றான்.

“விடுடா என்னை” என அன்பினி அவனிடமிருந்து போராட, “பேசாம வா அடி வாங்கியே செத்திடுவ.” என மிரட்டி அழைத்து வந்தான்.

வெளியில் வந்தவன் “கார் சாவி எங்க” என்று அவளிடம் விசாரிக்க,

“எனக்கு தெரியாது மகேஷ் தான் ஓட்டிட்டு வந்தான்.” என அலட்சியமாக பதில் சொன்னாள் அன்பினி.

கோபம் எல்லையை கடக்க, தன்னை கட்டுப்படுத்தியவன், “இங்கயே நில்லு நான் வர வரைக்கும்.”என்று விட்டு மகேஷை தேடிச் சென்றான்.

நடந்த கலபரங்களுக்கு நடுவில் அவன் போதையில் தன்னை மறந்து படுத்திருந்தான். அவனை கண்டுபிடித்த அக்னி அருகில் சென்று எழுப்ப முயற்சிக்க, பலன் இல்லை. முயற்சித்துப் பார்த்தவன் கடுப்போடு வெளியில் வந்து விட்டான்.

“குடிகாரி உன்னல்லாம் அப்படியே கழுத்தை நெறித்து கொல்லனும்.” மகேஷ் எழாத கோபத்தையும் சேர்த்து நின்றிருந்த அன்பினி சித்திரையிடம் காட்டினான்.

எதற்காக இவன் இவ்வளவு கோபப்படுகிறான் என்ற சிந்தனையில் அன்பினி  நின்றிருக்க, “வந்து தொல.” என்று மூர்க்கத்தனமாக அவள் கை பிடித்து பைக்கில் அமர வைத்தான்.

போகும் வழியெல்லாம் தன் கோபத்தை ஒளிவு மறைவில்லாமல் வார்த்தைகளால் காட்டிக் கொண்டே வந்தான் அக்னிசந்திரன். இன்னமும் புரியாத பாவனையில் அவனோடு பயணப்பட்ட அன்பினி,

“அடிமை இப்ப எதுக்கு இவ்ளோ சீன் போட்டுட்டு வர.” என்றாள்.

திரும்பி அவளை முறைத்து, “குடிகாரி ஏதாச்சும் பேசுன அப்படியே கீழ தள்ளி மண்டையை உடைத்துடுவேன்.” என்றவனை முறைக்க மட்டுமே முடிந்தது அவளால்.

வீட்டு வாசலில் நின்றவன் நந்தினிக்கு அழைத்தான். அவனுக்காகவே காத்திருந்தவர் வேகமாக எடுக்க, “மேடம் டோர் ஓப்பன் பண்ணுங்க.” என்றான்.

கதவைத் திறந்ததும் அன்பினி சித்திரையை வேகமாக உள்ளே தள்ளினான். மகளை நந்தினி பிடித்துக் கொள்ள, எதுவும் பேசாமல் சென்று விட்டான் அக்னிசந்திரன்.

அக்னியின் செயலில் திடுக்கிட்டவர் அப்போது தான் உணர்ந்தார் மகளின் மீது இருந்து வரும் மது வாடையை. முகம் சுளித்தவர், “அன்பினி என்ன இது புது பழக்கம்.” என்றார் கோபத்தோடு.

ஓயாமல் தன்னை திட்டிக் கொண்டு வந்த அக்னிசந்திரனின் மீது இருந்த கோபத்தில், “பேசாம போய்டுங்க”  என்று விட்டு சென்று விட்டாள் தன் அறைக்கு.

அம்மு இளையாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
18
+1
23
+1
3
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *