மறுநாள் உறக்கம் கலைந்து எழுந்த பிரஷாந்த் தன்னருகில் உடலைக் குறுக்கி உறங்கி கொண்டிருந்த இரு பெண்களையும் சின்ன சிரிப்புடன் பார்த்திருந்தான்.
மகிழினியின் நெற்றியில் முத்தமிட்டு, “குட் மார்னிங் பேபி…” என்றவன், மைதிலிக்கும் அம்முத்தத்தை கொடுக்க முனைய, அவனது மனசாட்சி ‘செருப்படி வாங்குவ’ என்று குரல் கொடுத்ததில், அசடு வழிந்தபடி கட்டிலை விட்டு இறங்கினான்.
ஆனாலும் ஆசையை அடக்க இயலாமல், விரல்களை அவளது முகத்திற்கு நேராக குவித்து காற்றிலேயே அவளை அள்ளி அவன் விரல்களுக்கே முத்தமிட்டுக் கொண்டான்.
கண்ணை மூடி முத்தத்தில் அவன் சிலாகித்த நொடியில், மைதிலி கண் விழித்து இருக்க, பிரஷாந்த் பேந்த பேந்த விழித்தவாறு நின்றான்.
“என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” மைதிலி முறைப்புடன் கேட்க,
மறுநொடியே குறும்பு தலை தூக்க, “உனக்கு ஒரு குட் மார்னிங் கிஸ் குடுக்கணும் போல இருந்துச்சு. அதான் குடுத்துட்டு இருந்தேன் மைலி” என்று மீண்டுமொரு முறை தூரத்திலேயே அவள் முகத்தை அளந்து முத்தமிட்டவன், அவள் சுதாரிக்கும் முன்னே வெளியில் ஓடி விட்டான்.
‘இவனுக்கு ரொம்ப திமிரு அதிகம் ஆகிடுச்சு’ பாவையவளின் கோப மூச்சுக்கள் அறையை நிறைத்தது.
பின் காலை வேலைகள் சுறுசுறுப்பாக நடக்க, அன்று அவனே சமைத்தான்.
மைதிலி குளித்து வெளியில் வரும் நேரம் இட்லியும் சாம்பாரும் மணத்தது. தலையில் ஈரத்துண்டுடன் வந்த மைதிலியின் கொள்ளை அழகை கண்ணில் நிரப்பியவன், “மைலி… டிபன் முடிஞ்சுடுச்சு. ரைஸ் குக்கர்ல இருக்கு. நீ டிபன் சாப்புடுறதுக்குள்ள ரெடி ஆகிடும். நான் போய் மகியை ரெடி பண்ணி கூட்டிட்டு வரேன்” என்று மடமடவென உத்தரவுகளைக் கொடுத்தவன் அவளது பதிலை எதிர்பாராமல் அறைக்குச் சென்றான்.
‘இவனுக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை…’ என்று கடுப்பானாலும், அடுக்களைக்குச் சென்றவள் அங்கு மதியத்திற்கு தேவையான காயும் தயார் செய்திருப்பதைக் கண்டு பாத்திரத்தைத் துலக்கப் போனாள்.
அந்நேரம் உள்ளே இருந்து பிரஷாந்தின் குரல் கேட்டது.
“மைலி… நான் உன்னை டிராப் பண்ணிட்டு வந்து கழுவிக்கிறேன். நீ சாப்பிட்டு ரெடி ஆகு!” என சத்தம் கொடுத்தவன், சிறிது நேரத்தில் மகளையும் தயார் செய்து வெளியில் வந்தான்.
டைனிங் டேபிளில் தலையைப் பிடித்தபடி அமர்ந்திருந்த மைதிலியைக் கண்டதும், “மைலி? வாட் ஹேப்பண்ட்? தலை எதுவும் வலிக்குதா?” என்று அவள் தலையைத் தொடப் போக அதனை வெடுக்கென தட்டி விட்டாள்.
“மகி நீ அங்கிளோட ஸ்கூலுக்குப் போய்டு…” என்று கிளம்ப முற்பட, “நேத்து மாதிரி ஈவ்னிங் வருவீங்களாம்மா?” எனக் கேட்டாள் அவள்.
அதற்கும் பிரஷாந்தை தான் முறைத்தாள். “என்னை அப்பறம் முறைக்கலாம் முதல்ல சாப்பிடு” என்று அவள் தட்டில் இட்லியை வைக்க, அதனை அலட்சியம் செய்து விட்டு கிளம்பியே விட்டாள்.
“ஊஃப்! உன் அம்மாவை தினம் தினம் மலை இறக்குறதே என் வேலையா இருக்கு பேபி” என்று செல்லமாக சலித்துக் கொண்டவன், அவளையும் பள்ளியில் விட்டு விட்டு வந்தான்.
அலுவலகத்திற்கு சென்ற மைதிலிக்கு உள்ளுக்குள் கோபம் கொழுந்து விட்டு எரிந்தது. அதை எங்கு காட்டுவது, எதன் மீது காட்டுவது எனப் புரியவில்லை. முதலில் அந்த கோபம் ஏன் வருகிறதென்றே புரியவில்லையே!
அவன் செய்வதெல்லாம் பிடிக்காததால் வந்த கோபமா? அல்லது பிடித்ததால் வந்த கோபமா?
உடம்புக்குள் சரேலென மின்னல் அடித்தது. இது என்ன பைத்தியக்காரத்தனம்? எனத் தன்னையே நிந்தித்துக் கொண்டவள் வேலையில் கவனம் செலுத்த முயல, அப்போது தான் பசியில் வயிறு கூவியது.
“ப்ச்…” எனச் சோர்ந்தவளின் அறைக்கதவை யாரோ தட்டியதில் நிமிர்ந்தவள், “மேம் ஸ்விக்கி ஆர்டர். மைதிலி நீங்க தான?” என ஒருவன் கேட்க, குழப்பத்துடன் தலையாட்டியவள், “உங்க ஆர்டர் மேம்” என்று கொடுத்து விட்டுச் சென்றான்.
‘நான் எதுவும் ஆர்டர் பண்ணலையே’ எனக் குழம்பினாலும், பார்சலுக்குள் இருந்த இட்லியும் சாம்பாரும் பசியை இன்னும் கொஞ்சம் கிளறியது.
அந்நேரம் அலைபேசியில் விளக்கு ஒளிர, அதில் பிரஷாந்தின் குறுஞ்செய்தி தான்.
“நான் செஞ்ச சாப்பாடை தான் சாப்பிட மாட்டியே. அதான் உனக்கு ஃபுட் ஆர்டர் பண்ணேன். சாப்பிட்டுட்டு வேலையைப் பாரு மைலி…” என்று அனுப்பி இருந்தவன், கூடுதலாக ஒரு முத்த ஸ்மைலியையும் அனுப்பி இருந்தான்.
‘இவன் போக்கே சரி இல்லை. முதல்ல இவனுக்கு மந்திரிச்சு விடணும்’ என்று தனக்குள் முடிவெடுத்துக் கொண்டவள், இட்லி சாம்பாரை உண்டு முடித்து விட்டு, பிரஷாந்திற்கு குறுஞ்செய்தி அனுப்பினாள். “மாவுல உப்பே இல்லை” என்று!
அப்போது தான் பாத்திரத்தைக் கழுவி விட்டு சோபாவில் சரிந்தவன் அந்த குறுஞ்செய்தியைக் கண்டு ஒற்றைக் கண்ணை மூடித் திறந்தான்.
இதழ்கள் புன்னகையில் விரிந்தது.
“ஹி ஹி மறந்துட்டேன். ஆமா அது நான் செஞ்சதுன்னு எப்படி கண்டுபிடிச்ச?” என்றான் கன்னத்தில் கை வைத்து.
அவளுக்கு உணவை கொடுக்க, அலுவலகம் வரை வந்து விட்டவன், பின் அங்கு ஸ்விக்கி டெலிவரி பாய் ஒருவரைப் பிடித்து, ப்ரவுன் கவரில் பேக் செய்து கொடுத்து விட்டிருந்தான்.
“பேக் பண்ணது ஓகே. ஆனா உள்ள இருந்தது என் டிபன் பாக்ஸ்…” மீண்டும் மைதிலி நக்கலாக பதில் அளித்ததில், அசடு வழிந்தவன், “சரி சரி மதியமும் ஸ்விக்கில ஆர்டர் பண்றேன். சமத்தா சாப்ட்டுடனும் ஓகே வா” என்றவனின் குறுஞ்செய்தியைக் கண்டு அமைதியானாள்.
மறுநாள் அவளே எழுந்து சமையலை முடித்து, மகளையும் கிளப்பினாள். உதவிக்கு வந்த பிரஷாந்தினை துளியும் கருத்தில் கொள்ளவில்லை.
‘ஓஹோ என்னை அவாய்ட் பண்றீங்களா மேடம்! இருடி உன்னைப் பார்த்துக்குறேன்’ என மனதினுள் கறுவியவன், குளியலறையில் இருந்து கொண்டு, “மைலி மைலி…” எனக் கத்தினான்.
அவன் கத்தியது தெரு வரை கேட்டதில் பதறியவள் “என்ன?” எனக் கேட்டபடி அறைக்குள் புக, “டவல் மறந்துட்டேன் எடுத்துக்குடேன்” என்றான் தலையை மட்டும் வெளியில் நீட்டி.
“நான் என்ன உங்களுக்கு வச்ச ஆளா?” மைதிலி கடுப்பாகக் கேட்டதில்,
“ஆமா என் ஆளு தான நீ.” என்றான் கூலாக.
மறுபுறம் மகிழினி வேறு, “அம்மா என் டைரி எங்கன்னு பார்த்தீங்களா?” எனக் கத்த, அவசரமாகத் துவாலையை எடுத்து அவனிடம் வீசியவள் வெளியில் சென்றாள்.
இங்கு மகிழினிக்கு டைரியை எடுத்துக் கொடுக்கும் போதே, “மைலி மைலி…” என்று மீண்டும் கத்தினான் பிரஷாந்த்.
ஏற்கனவே சமையல் செய்ய தாமதமானதால் பதற்றத்தில் இருந்தவளுக்கு, பத்து மணிக்கு முக்கிய மீட்டிங் ஒன்று இருந்தது.
“இப்ப என்ன வேணும்?” எனக் கேட்டபடி வெங்காயத்தை சட்டியில் போட்டு அடுப்பை குறைத்து விட்டு அறைக்குச் செல்ல, “என் பிளாக் கலர் சாக்ஸைக் காணோம். மகியோட சாக்ஸ் கூட மிக்ஸ் ஆகிடுச்சுன்னு நினைக்கிறேன் தேடித் தர்றியா” என சாவகாசமாகக் கேட்க, “வாட் ?” என்று திகைத்தாள்.
“ஆர் யூ ஜோக்கிங். இப்ப சாக்ஸ் போட்டுட்டு நீங்க சர்க்கஸா காட்ட போறீங்க. ஸ்நாக்ஸ் சாப்பிட்டுட்டு வீட்ல தான இருக்கப் போறீங்க. ஒழுங்கா என்னைக் கிளம்ப விடுங்க” என்று அதட்டி விட்டு அடுக்களைக்கு வந்தாள்.
நமுட்டு நகை புரிந்தவன் அவளைத் தொந்தரவு செய்வதை மட்டும் நிறுத்தவில்லை.
“மைலி…” இம்முறை அவள் நிமிரவே இல்லை.
“மைலிய்ய்… மைலிய்.” என மறுபடியும் அடுக்களைக்கு வந்து மைதிலியின் பெயரை ஏலம் விட்டுக் கொண்டிருந்தான் பிரஷாந்த்.
கோபத்துடன் தக்காளியை நறுக்கிக் கொண்டிருந்தவள், தீப்பார்வையுடன் நிமிர்ந்து “பக்கத்துல தான இருக்கேன் எதுக்கு இப்படி கத்துறீங்க?” என்றாள் கடுப்பாக.
“ஒருத்தன் உன் பேரை எவ்ளோ அழகா கூப்பிடுறேன் ரெஸ்பான்ஸ் பண்றியா கொஞ்சமாவது” என அவன் சிலிர்த்து எழ,
“என் பேரே மூனு எழுத்து தான் அதையும் சுருக்கி கேட்க சகிக்கல.” என அவள் எரிச்சல் பட்டதில்,
“உனக்கு கொஞ்சம் கூட ரசனையே இல்ல மைலி. ஒரு காதல் புருஷன் காதல் பொண்டாட்டியைச் செல்லமா கூப்பிட்டா தான் அவங்களுக்குள்ள பாண்ட் இன்னும் நெருக்கமாகுமாம்” என்றபடி அவளை நெருங்கி நின்றான்.
“இன்னொரு வாட்டி மைலி கைலின்னு உளறிட்டு இருந்தீங்க கையில இருக்குற கத்தி தான் பேசும்” என்று விழியால் கத்தியைக் காட்ட,
அதற்கெல்லாம் அசருபவனா அவன்…
“கத்தி மாதிரி இருக்குற உன் கண்ணே பேசட்டும். கூடவே அந்த சாஃப்ட் லிப்ஸ்ஸும் பேசுனா ரொமான்டிக்கா இருக்கும்” என்றவனின் விழிகளில் ரசனை வழிந்தது.
கோபத்தையும் மீறி, தேகம் சிலிர்த்து சிவப்பதை உணர்ந்தவளுக்கு, அவ்வுணர்வை அனுபவிக்கப் பிடிக்கவில்லை.
“அத்து மீறி பேசாதீங்க பிரஷாந்த்” மைதிலி கண்டிக்க,
அவனோ புருவம் சுருக்கினான்.
“நான் என்ன ரோட்டுல போற எவகிட்டயோவா பேசுறேன். நான் ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்ட என் பொண்டாட்டிக்கிட்ட தான பேசுறேன்” எனத் தோள்களைக் குலுக்கிக் கொண்டவனிடம்,
“நீங்க மட்டும் ஆசைப்பட்டா போதாது பிரஷாந்த். நமக்குள்ள எந்த பாண்டும் இருக்காது, எந்த ரிலேஷன்ஷிப்பும் இருக்க கூடாதுன்னு சொல்லி தான கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டேன். நீங்க அதை அக்செப்ட் பண்ணீங்க தான. ஆனா கல்யாணம் ஆகி இந்த ரெண்டு நாளா நீங்க நடந்துக்குறது கொஞ்சம் கூடப் பிடிக்கல. உங்க பேச்சும் சரி இல்லை. பார்வையும் சரி இல்லை” என்றவள் ஆத்திரத்துடன் ஆரம்பித்து இறுதி வரியை தேய்வுடன் முடித்தாள்.
அவளைக் கண்டு நிதானமாகப் புன்னகைத்தவன், “நான் உன் கழுத்தைத் தாண்டி எங்கயாவது பார்த்தேனா?” எனக் கேட்க,
சற்றே தடுமாறியவள் மறுப்பாகத் தலையசைத்தாள்.
“இப்போ வரை என் சுண்டு விரல் உன் மேல பட்டுச்சா?” எனக் கேட்டபடி இன்னும் நெருங்கினான். அப்போதும் அவனது மூச்சுக்காற்றைத் தவிர வேறேதும் அவளைத் தீண்டவில்லை.
பின்னால் நகரக்கூட மூளை ஒத்துழைக்காமல் அதற்கும் இடவலமாகத் தலையசைத்தவள் விழிகளைத் தாழ்த்திக் கொள்ள, அவளை ரசனையுடன் ஏறிட்டான்.
“நீ நமக்குள்ள ரிலேஷன்ஷிப் இருக்கக்கூடாதுன்னு கண்டிஷன் போட்ட மாதிரி நானும் ஒரு கண்டிஷன் போட்டேன் அது ஞாபகம் இருக்குல்ல மைதிலி?” எனத் தீவிரத்துடன் கேட்க, அவள் குழப்பத்துடன் பார்த்தாள்.
“இது என்னோட காதல். இதை நான் எக்ஸ்போஸ் பண்றதுக்கோ, உன்னைக் காதலிக்க கூடாதுன்னு தடை போடுறதுக்கோ உனக்கு எந்த உரிமையும் இல்லை. என் காதலை நீ தடுக்கக்கூடாதுன்னு நான் சொன்னேனே!” எனக் கூர்மையாய் வினவ, அவளோ அதிர்ந்தாள்.
சொன்னான் தான். தானும் அதனை ஒப்புக்கொண்டது உண்மை தான். ஆனால், இப்படி காதலைக் கொட்டுவது அவளைத் திணறடிப்பது போலல்லவா இருக்கிறது.
அவனிடம் இருந்து இப்படி ஒரு பிம்பத்தை எதிர்பாராமல் ஒப்புக்கொண்டது தவறோ? என்ற நிதர்சனம் அப்போது தான் அவளுக்கு உறைத்தது.
உதட்டைக் கடித்து சிரிப்பை அடக்கிக்கொண்ட பிரஷாந்த், “நீ தான் முற்றும் துறந்த துறவியாச்சே. நான் பாட்டுக்கு ஒரு பக்கம் லவ் பண்ணிட்டு உன் பாஷைல சொல்லணும்ன்னா உளறிட்டு போயிட்டு போறேன். நீ ஏன் அதை பெருசா எடுத்துக்குற மைலி. நீயும் வேணும்ன்னா எனக்குச் செல்லப் பேர் வச்சு என்னை லவ் டார்ச்சர் பண்ணு. நான் பொறுத்துக்குறேன்” என்று பாவம் போல கூறிட, மைதிலி பரிதாப நிலையில் அவனை திகைத்துப் பார்த்தாள்.
“செல்லப் பேர் வைப்பாங்களாம் செல்லப் பேர். தார்னி டெவில்னு தான் வச்சுருக்கேன்” என்று பல்லைக்கடித்தவளை வியப்புடன் பார்த்தான்.
“வாவ்! அப்போ நீயும் எனக்கு செல்லப் பேர் வச்சு இருக்கியா?” எனத் துள்ளிட, அவள் மொழி மறந்து நின்றாள்.
“நான் எங்க செல்லப் பேர் வச்சேன். திட்ட தான செஞ்சேன்” ஒன்றும் புரியாமல் அவள் வினவ,
“அதான் இப்ப சொன்னியே. தார்னி டெவில். அதுவே செல்லப் பேர் தான் மைலி. எனக்காக யோசிச்சு இருக்கியே. இனிமே நீ என்னை அப்படி தான் கூப்பிடனும் ஓகே வா.” என்றவனை ‘பைத்தியமா இவன்’ என்ற ரீதியில் வெறித்தாள்.
அடுத்த இரு நாட்களில் அவனது காரும் கைக்கு வந்து விட்டது. அன்று ஞாயிற்றுக் கிழமையாதலால் மகளையும், வரவில்லை என அடம்பிடித்த மனையாளையும் கையுடன் கூட்டிக் கொண்டு சென்றான்.
காரின் நிறம் அடர் நீல நிறத்தில் மினுக்க, மகிழினி தான் “வாவ் அம்மாவோட ஃபேவரைட் கலர் அங்கிள். இது நம்ம காரா? இதுல தான் என்னை ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போக போறீங்களா?” என்று வியப்பைக் காட்ட, மைதிலியை ஒரு முறை பார்வையால் வருடியவன் மகிழினியின் கேள்விகளுக்கு பதில் அளிக்கத் தொடங்கினான்.
மைதிலியோ, “மகி இந்த கார்ல ரெண்டு கலர் ஆப்ஷன் தான் இருக்கும். ரெட் அண்ட் ப்ளூ. அதுல ரெட் ஸ்டாக் இல்லைன்னா ப்ளூ தான் வாங்கணும்” என்று விளக்கம் கொடுத்தாள். அதாவது அவளுக்குப் பிடித்ததால் அவன் வாங்கவில்லை என்பதை மகளுக்கு உறுதிப்படுத்த.
அவர்களின் அருகில் நின்றிருந்த சேல்ஸ் மேனேஜர், “ரெட் கலர் ஆப்ஷன் இமீடியட்டா கிடைக்கிற மாதிரி இருந்துச்சு மேம். ஆனா சார் தான் ப்ளூ வேணும்னு வெய்ட் பண்ணுனாங்க” என்று கூடுதல் தகவல் தர அவள் தோளைக் குலுக்கிக் கொண்டாள்.
மகிழினி “அம்மா இங்க பாருங்க பின்னாடி என் பேர் இருக்கே… எம். ஏ. ஜி. ஐ” என்று பின் பக்க கண்ணாடியில் பொறித்திருந்த தன் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்ததில்,
மைதிலியும் பின் பக்கம் பார்க்க, அங்கு இதய வடிவில் மேல் பக்க ஓரத்தில் மைலி என்றும், கீழ் பக்க ஓரத்தில் மகி என்றும் எழுதி இருந்ததைக் கண்டு மெல்ல அதிர்ந்தாள்.
அடிக்குரலில் “எங்க பேர் எதுக்கு போட்டீங்க” என்று கேட்டு கடினமாகக் கேட்டாலும் அது தடுமாற்றமாகவே வெளிவந்தது.
“இது என்ன கேள்வி. என் பொண்டாட்டி பொண்ணோட பேரை போடாம, பக்கத்து வீட்டுக்காரங்க பேரையா போட முடியும்…” என்று குறும்பாய் சிரித்தான்.
அவனை முறைத்தவாறே, “இன்னும் வேலைக்கு சேரவே இல்லைல. அப்பறம் எதுக்கு கார்? வில்லா வேற வாங்கி இருக்கீங்களே… பணம் பத்துச்சா?” கேட்ட பிறகே இது தனக்கு தேவையில்லாத அதிகப்பிரசங்கித்தன கேள்வி என்றே உறைத்தது அவளுக்கு.
‘அடடா…’ என உள்ளுக்குள் குத்துப் பாட்டு ஓட விட்டாலும், வெளியில் சமத்தாக பதில் அளித்தான்.
“நான் காலேஜ் படிக்கும் போதே கனடா போய்ட்டேன் மைலி. அங்க பார்ட் டைம் வொர்க் பார்த்தேன் அப்போ இருந்தே. அப்பறமும் அங்க இருந்த கம்பெனி துபாய்ல பிரான்ச் ஓபன் பண்றதா சொன்னதும், என்னை அங்க சஜஸ்ட் பண்ணாங்க வித் இன்க்ரிமெண்ட்டோட. என்னோட சம்பளம் எல்லாம் என் சேவிங்ஸ்ல தான் இருந்துச்சு. என் சேவிங்க்ஸை மியூச்சுவல் பண்ட்லயும் இன்வெஸ்ட் பண்ணிருந்தேன். அதுல பிராஃபிட்டும் வந்துச்சு. அதுல இருந்த பணத்துல தான் வில்லா பிளாட்டும் வாங்குனேன். அப்பறம் தான், மத்த ரெண்டு வீட்டுக்குமான அமவுண்ட்டை உன் ஆருயிர் நண்பன் எனக்கு குடுத்துட்டானே. என் ப்ரெண்ட்ஸ்க்காக வாங்குனேன். ஆனா அதை அவன் ஒத்துக்கல. அதுவும் கரெக்ட் தான். கோபம் வந்தா நான் பழைய மாதிரி ப்ரெண்ட்ஸை எதிரியா பார்க்க ஸ்டார்ட் பண்ணிடுவேன்னு நினைச்சுருக்கலாம்” என்னும் போதே உள்ளுக்குள் சிறு வலி.
சட்டென அதனை உதறிவிட்டவன், “அப்பறம் இங்க வந்து செட்டில் ஆகும் போது அப்பா, அம்மாவையும் கூட்டிட்டு வந்துடலாம்னு நினைச்சேன். அதான் எல்லாம் மாறிடுச்சே. இப்போதைக்கு பிராப்ளம் இல்ல. அடுத்த வாரத்துல இருந்து வொர்க் போக ஸ்டார்ட் பண்ணிடுவேன். சோ, மேனேஜ் ஆகிடும். அப்டி ஆகலைன்னா நீ எனக்கு பீசா வாங்கி குடுத்து காப்பாத்த மாட்டியா என்ன?” தீவிரத்துடன் ஆரம்பித்தவன் இறுதியில் எப்போதும் போல கேலியில் முடித்திருந்தான்.
ஒரு கணம் பேச்சற்று அவனையே பார்த்திருந்தவள், “இங்க யாரும் பெர்பக்ட் இல்ல பிரஷாந்த்… அமர் இன்னும் பழசை ஞாபகம் வச்சுருக்க மாட்டான். அப்படி வச்சுக்கிட்டாலும் ஒவ்வொரு தடவையும் ப்ரூவ் பண்ணனும்னு அவசியம் இல்ல” அவளை மீறி வெளிவந்த வார்த்தைகளில் அவன் மீதான அக்கறை தெறித்ததில் சன்ன சிரிப்புடன் ஒப்புக்கொண்டான்.
இந்த மிதமான மனநிலை ஒரு வாரம் வரை மௌனமாகவே நீடித்தது. ரகுவீரின் நினைவு நாள் இடைபுகுந்து மீண்டுமொரு ஆழியில் இருவரையும் சுழல விட்டதில் யார் மீது பிழையோ!
உயிர் வளரும்
மேகா