617 views

தேவன் 6

 

 

நான்கு ஐந்து முறை பரிமளம் எட்டி பார்த்ததை கூட உணரவில்லை மாமன் கொடுத்த அன்பு பரிசில். போட்ட சபதத்தை மறந்து வகை வகையான போட்டோக்களை எடுத்து அனுப்பினாள் அவனின் புலனம்(வாட்ஸ் அப்) எண்ணிற்கு.  அனுப்பியவள் கவனம் இனிப்பு மீது செல்ல, ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

 

யாழினி அழைப்பாள் என்று தேவநந்தன் வெகு நேரமாக போனை கையில் வைத்திருக்க, வந்த புகைப்படத்தை பார்த்து ரசித்தான். அந்த ரசிப்பு அடங்குவதற்குள் பாதி சாப்பிட்ட போளியை அனுப்பி வைத்து, “மாமா நீ கொஞ்சம் சாப்பிடு.” என்றாள்.

 

 

உள்ளம் மகிழ்ந்து அவள் செயலில் சிரித்தவன் உடனே அழைத்தான். யாழினியும் உடனே எடுத்து, “என் அழகு மாமா. என் செல்ல மாமா. நீ மட்டும் ஏன் மாமா இப்படி இருக்க.”  மகிழ்வில் அவள் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க,

 

“எப்படி இருக்கேன் பாப்பா.” அவள் சொல்லிய வார்த்தையின் பொருளை அறிந்து கொள்ள கேட்டான்.

 

 

“என்ன மாமா! எப்படி இருக்கேன்னு கேட்டுட்ட… நீதான் மாமா அழகோ அழகு.” சொல்லியதோடு நிறுத்தாமல் சிரிப்பு சத்தத்தை அவன் காதில் நிறைக்க, உடல் முழுவதும் நிறைந்தது தேவநந்தனுக்கு.

 

இருவரும் பேசிக் கொண்டிருக்கும் நேரம் அன்னத்தின் சத்தத்தை கேட்டவள், “மாமா வீடியோ கால் வா சீக்கிரம்.” என்று அவசரமாக அழைப்பை துண்டித்து, வீடியோ கால் செய்தாள்.

 

அரை நொடிக்கு குறைவாக அவள் வேகம் எடுக்க, மேல்சட்டை இல்லாமல் இருந்தவன் அழைப்பை எடுத்த கையோடு அருகில் இருந்த துண்டை எடுத்து போர்த்தினான் நெஞ்சில். 

 

“ஐயோடா! நாங்க பார்த்திட மாட்டோம்.” என்று சிலுப்பி கொண்டவள் அத்தையிடம் கொடுக்கச் சொன்னாள்.

 

 

“இங்க பார்த்தீங்களா நான் நாலு வார்த்தை கோபமா பேசுனதுக்கே என் மாமா என்னை சமாதானப்படுத்த இதெல்லாம் பண்ணி இருக்காங்க.” என்றவள் தலையை திருப்பி காட்ட, அதிர்ந்து விட்டார் அன்னம்.

 

 

“ஏண்டி  இது என்ன கூத்து!. அவன் தான் கூறுகெட்ட தனமா இவ்ளோ பூவ வாங்கி கொடுத்து இருக்கான்னா நீயும் அப்படியே தூக்கி தலையில வைப்பியா. நல்லா கரகாட்டக்காரி மாதிரி இருக்க.” என்று  தலை முழுக்க இருக்கும் மல்லிகை பூவை பார்த்து கேலி செய்தவரை நறுக்கென்று நான்கு வார்த்தை பேசி விட்டாள்.

 

“உங்களுக்கு பொறாமை அத்தை. என் மாமா இதெல்லாம் உங்களுக்கு வாங்கி தரலைன்னு.” என்றவள் அடுத்ததாக இனிப்பையும் அவரிடம் காட்ட, மகனை முறைத்தே பஸ்பம் ஆக்கிவிட்டார் அன்னம்.

 

“பாப்பாக்கு ரொம்ப புடிக்கும் ம்மா.” என்ற மகனின் பேச்சை கேட்டவர் இன்னும் அதிகமாக முறைத்து,

 

“எங்களுக்கெல்லாம் அது பிடிக்காதாக்கும்.  மாமன் பொண்ணுக்கு மட்டும் அப்படி என்ன?” சிலுப்பிக் கொண்டார் மகனிடம்.

 

 

செல்போனை வாங்கியவன், “பாப்பா நல்லா செஞ்சுட்ட.” என்றதும் கலகலவென்று சிரித்தவள்,

 

“பின்ன என்ன மாமா என் நாக்குல சூடு வைப்பாங்களாம், அதுவும் உங்க முன்னாடி. அது கூட பரவால்ல என் மாமன்னு சொல்லக் கூடாதாம்‌ எனக்கு எப்படி இருக்கும்.” என்றாள் இன்னும் குறையாத பொறாமையோடு.

 

“அடியே! இப்பவும் அதாண்டி சொல்லுறேன். என் மகனை மாமான்னு சொல்லு அது என்ன என் மாமா” குறுக்கே வந்து மருமகளை உசுப்பி விட,

 

“மாமா! அத்தைய பாருங்க…” தைய தக்கா என்று குதித்தவள்,

 

“நீ சொல்லு மாமா நான் அப்படி சொல்ல கூடாதா.” பதிலை மாமனிடம் எதிர்பார்த்து அவள் பாவமாக முகத்தை வைத்தாள்.

 

அன்னையை ஒரு முறை பார்த்தவன் திட்டு வாங்குவதற்கு முன் நன்றாக மூச்சை இழுத்து விட்டு, “உனக்கு தான் பாப்பா எல்லா உரிமையும் இருக்கு.” என்றான் முதுகில் ஒரு அடியை வாங்கிக் கொண்டு.

 

“என் மாமன் மேல கை வச்சிங்க நான் சும்மா இருக்க மாட்டேன், பார்த்துக்கோங்க!” விரல் நீட்டி மிரட்டினாள்.

 

“அடியே என் கொடுக்கு தேளு! வாடி வா என் மகனை நான் அடிச்சா சண்டைக்கு பாய்வியோ. உனக்கு மட்டும் தைரியம் இருந்தா இப்பவே  கிளம்பி வா. யாரு யார என்ன பண்ணிடுறாங்கன்னு  இன்னைக்கு பார்த்துடலாம்.”  என்று வசனம் பேசும் பொழுது தேவநந்தனின் கைபேசி முழுவதும் அவர் கைக்குள் சென்று விட்டது.

 

 

“நீங்க இன்னொரு தடவை என் மாமா மேல கைய வச்சு பாருங்க அப்ப தெரியும் நான் எப்படி வரன்னு.” என்றவள் சொல்லி முடிக்கும் முன்னே மீண்டும் மகனின் முதுகில் தோசை சுட்டார். 

 

 

“அத்த்த்தததத…” என்று அவள் கத்தியதில் சண்முகம் வெளியில் வந்து விட்டார்.

 

 

மகளின் அறை கதவை தட்டியவர், “யார் கிட்ட பேசிட்டு இருக்க.” என்று அதட்ட,

 

“வள்ளி அத்தை கிட்ட ப்பா. பாண்டியன் மாமா பூ வாங்கி கொடுத்து விட்டாங்க அதை தலையில வச்சு காட்டுறேன் கேலி பண்றாங்க. நான் இப்பவே அத்தை வீட்டுக்கு போறேன்.” என்றவள் தந்தையின் பேச்சை கூட கேட்காமல் இதுதான் சாக்கு என்று சிட்டாக பறந்தாள்.

 

அவரோ சின்ன தங்கை வீட்டிற்கு தான் மகள் செல்கிறாள் என நம்பி அமைதியாக இருந்து கொள்ள, கணவன் ஏமாற்றத்தை எண்ணி சிரித்தார் பரிமளம்.

 

 

செல்போனை மறைத்துக் கொண்டு தந்தையிடம் பேசிய அனைத்தும் கேட்டார்கள் தாயும், மகனும். அவள் வருகைக்காக இருவரும் வாசலில் காத்துக் கொண்டிருக்க,

 

“யாரைக் கேட்டு என் மாமா மேல கைய வச்சீங்க. இன்னொரு தடவை அடிச்சீங்கன்னா அத்தைன்னு கூட பார்க்க மாட்டேன்.” என்று உள்ளே நுழைந்தாள்.

 

“என்னடி பண்ணுவ”

 

“சமைக்கிறதுக்கு கை இல்லாம பண்ணிடுவேன்.” என்று மூச்சு வாங்க அவர் முன்பு நின்றாள்.

 

“பாப்பா… அம்மா சும்மா விளையாட்டுக்கு அடிச்சாங்க விடு.”  அவளை சமாதானப்படுத்த தேவநந்தன் பேச,

 

“விளையாட்டுக்கு கூட எப்படி அடிக்கலாம் என் மாமன.” துள்ளி பாய்ந்தாள் அவனிடமும்.

 

 

“இப்படி தாண்டி அடிக்கலாம்.” என்றவர் மருமகளை வெறுப்பேற்ற இன்னும் இரண்டு அடிகளை அடித்துக் காட்ட, பத்திரகாளியாக குதிக்கத் தொடங்கினாள் அந்த வீட்டில்.

 

ஒருவழியாக இருவரையும் சமாதானப்படுத்திய தேவநந்தன், “பாப்பா ராத்திரி நேரம் வீட்டுக்கு கிளம்பு.” என்று அக்கறையாக கூற, விட்ட கோபம் தொற்றிக் கொண்டது.

 

“நீ என்ன மாமா நான் எப்ப வீட்டுக்கு வந்தாலும் போன்னு சொல்ற. நான் இங்க இருக்க கூடாதா?. அத்தை சொன்ன மாதிரி தான கடைசில நீயும் பேசுற.” என்று முதலில் இருந்து ஆரம்பித்தாள்.

 

“யப்பா! ஆள விடுங்க சாமி.” என்று அன்னம் தெறித்து ஓட, மாமன் மகளை அழைத்துச் சென்றான் பின்புறம்.

 

 

கட்டிய ஊஞ்சல் அப்படியே இருக்க, அதில் அமர்த்தியவன், “பொசுக்கு பொசுக்குன்னு கோவம் வருது பாப்பா உனக்கு. போற வீட்டுல இப்படி இருந்தா என்ன பொண்ணு வளர்த்து வச்சிருக்கிங்கன்னு எங்க மேல தான் பாய்வாங்க.” என்றான் ஊஞ்சலை ஆட்டிக்கொண்டு.

 

“யாராவது உன்னை அப்படி வந்து கேட்ருவாங்களா மாமா.” ஆடிக் கொண்டிருந்த ஊஞ்சலை நிறுத்தியவள், கேட்டாள்.

 

“இப்படி பேசுனா கண்டிப்பா கேட்பாங்க பாப்பா.” என்றான் சிரித்துக் கொண்டு.

 

“அதெல்லாம் உன்ன ஒண்ணும் கேட்க மாட்டாங்க.  நான் என்ன இந்த ஊரு சனங்க மாதிரி ஒரு காட்டன் குடும்பத்துலயா வாழப் போறேன். நல்ல படிச்ச குடும்பமா, நாகரிகமா பேச தெரிஞ்சவங்க வீட்டுக்கு தான போக  போறேன். இதுங்களை மாதிரி சாதி, கோவில், மானம், மரியாதைன்னு வாழ எனக்கு விருப்பம் இல்லை.” என்ற யாழினி பேச்சை  அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான் தேவநந்தன்.

 

“என்ன மாமா ஒண்ணும் பேச மாட்ற.” 

 

“என்ன பேச சொல்ற பாப்பா? உன்னோட ஆசை நடக்கணும்னு மனசார வேண்டிகிறேன். அவ்ளோ தான்.” என்றவனை திரும்பிப் பார்த்தவள், 

 

“உனக்கு அந்த மாதிரி ஏதாச்சும் ஆசை இருக்கா மாமா.” என்றாள் பார்வையை உன்னிப்பாக்கி.

 

மெலிதாக மீசை நெளியும் அளவிற்கு சிரித்தவன், “அந்த மாதிரி எனக்கு எந்த ஆசையும் இல்ல பாப்பா. எங்க அம்மா சாகுற வரைக்கும் அவங்களை சந்தோஷமா என் கை கோர்த்து பார்த்துக்குற பொண்ணு வந்தா போதும்.” என்றான் அன்னத்தை மனதில் வைத்து.

 

“நினைச்சேன் மாமா நீ இதைத்தான் சொல்லுவேன்னு. ஆனா நான் உனக்கு எப்படிப்பட்ட பொண்ணு வரணும்னு ஆசை வச்சிருக்கேன் தெரியுமா!” என்றாள் அவன் முன்பு குதுகலத்தோடு.

 

 

தேவநந்தன் புருவம் உயர்த்தி விசாரிக்க, “என் மாமாவ எப்பவும் சந்தோஷமா பார்த்துக்கணும். நேரத்துக்கு சாப்பிட மாட்றிங்கன்னு அத்தை நிறைய நாள் புலம்பி இருக்காங்க. சோ குச்சியால அடிச்சாது உங்களை சாப்பிட வைக்கணும். 

எப்ப பாரு  சோகமா இருக்க இந்த மூஞ்சிய சிரிக்க வைக்கணும். தனியா இருக்க என் மாமன ஒரு குடும்பத்தோட சேர்த்து ஆலமரம் மாதிரி நிக்க வைக்கிற பொண்ணா இருக்கனும்.” என்றாள் தன்னால் முடிந்த அளவு இரு கைகளையும் விரித்து காட்டி.

 

“நான் எங்க பாப்பா தனியா இருக்கேன். அம்மா இருக்காங்க, நீ இருக்க, சித்தப்பா சித்தி, ஆராதனா அப்படின்னு என்னை சுத்தி நிறைய பேர் இருக்கீங்களே!.” என்றவன் உள்ளத்தில் அவள் சொன்ன தனிமை மட்டுமே குடியிருந்தது.

 

 

“அதெல்லாம் பேச்சுக்கு மாமா. உண்மையா உன் முகத்துல சந்தோஷம் வரணும்னா உனக்காக ஒரு குடும்பம் இருக்கணும். அந்த மாதிரி பொண்ணா பார்த்து தான் உனக்கு நான் கல்யாணம் பண்ணி வைப்பேன்.” 

 

“முதல்ல நீ ஒரு கல்யாணம் பண்ணு. அதுக்கப்புறம் என் கல்யாணத்தை பத்தி பேசிக்கலாம்.”

 

“என் கல்யாணத்துக்கு முன்னாடி உன்னோட கல்யாணத்தை நடத்தணும்னு ஆசை மாமா எனக்கு. ஒருவேளை உனக்கு முன்னாடி எனக்கு கல்யாணம் ஆகிட்டா இந்த ஊர் பக்கம் வர முடியுமோ என்னவோ. அதுக்குள்ள உனக்கு ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணத்தை முடிச்சுடனும்.”  

 

இன்னும் ஏதேதோ இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். வேலைகளை முடித்து விட்டு வெளியில் வந்த அன்னம் கதை எழுந்து கொண்டிருக்கும் இருவரையும் சாப்பிட அழைத்தார். 

 

அப்போது தான் தந்தையின் ஞாபகம் வர, “வேணா அத்தை வீட்டுக்கு போய் சாப்பிடுறேன் இல்லனா அப்பாக்கு சந்தேகம் வரும்.” என்றாள்.

 

“அதெல்லாம் ஒண்ணும் வராது. வள்ளி வீட்டுல சாப்பிட்டதா நினைப்பாரு. நான் அப்புறமா வள்ளி கிட்ட ஒரு வார்த்தையும் சொல்லி வைக்கிறேன். பயப்படாம சாப்பிட்டுட்டு போ யாழு” என்று சமாதானப்படுத்திய அன்னம் அவள் வயிற்றை நிரப்பினார். வழியனுப்ப கூடவே சென்றான் தேவநந்தன்.

 

யாரும் கவனிக்கா வண்ணம் அவளை வீட்டு பக்கத்தில் விட்டவன் நினைவும், மாட்டி விடாமல் வீட்டிற்கு செல்ல நினைத்த யாழினி நினைவும் ஒன்று போல் சிந்தித்துக் கொண்டிருந்தது. விதி அவர்களுக்காக ஒரு மூன்று முடிச்சு நாடகத்தை நடத்த இருப்பது தெரியாமல். 

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
30
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *